அப்படி அனைவரும் போற்றும் வண்ணம் பொற்கால ஆட்சி புரிந்தவர்களுள் ஒருவர் தான் மராட்டியம் கண்ட மாவீரன் சத்ரபதி சிவாஜி. இன்று அவரது பிறந்த நாள். (பிப்ரவரி 19, 1627).
சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை பற்றி நீங்கள் பல்வேறு செய்திகளை படித்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள்.
சிவாஜி என்றுமே தர்மத்தின் பாதையிலேயே சென்றார். ஒரு அரசனுக்குரிய போகங்கள் எதையுமே அவர் துய்த்ததில்லை. காமத்தில் சிக்குண்டு பெண்ணாசை கொண்டதில்லை. மது அருந்தியதில்லை.
பரதன் எப்படி ராமபிரானின் பாதுகையை சிம்மாசனத்தில் அமர்த்தி அதன் பிரதிநிதியாக நாட்டை ஆண்டானோ அதே போல சிவாஜியும் தன்னுடைய ராஜ்ஜியத்தை சமர்த்த ராமதாசர் என்கிற மகானிடம் ஒப்படைத்துவிட்டு அவருடைய பிரதிநிதியாகவே ஆண்டு வந்தார். (சாஸ்திரங்கள் வலியுறுத்தும் ஆட்சி முறை இது தான். இப்படி ஆட்சி செய்தால் தான் அந்த ஆட்சி சிறப்பாக இருக்கும், மக்களும் சுபிக்ஷமாக வாழ்வர். இது பற்றி ஒரு கதை இருக்கிறது. அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறோம். விரைந்து வேண்டும் என்றால் வாசக அன்பர்களின் டிமாண்டை பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளலாம். ஓ.கே.?)
இன்றைய ஆட்சியாளர்கள் போலல்லாமல் மக்கள் மீது அனாவசிய வரியை என்றுமே சிவாஜி சுமத்தியதில்லை. தன்னுடைய முடி சூட்டு விழாவை கூட தன் சொந்த செலவில் தான் நடத்திக்கொண்டார்.
அது மட்டுமல்ல… பொறைகளில் மிக உயர்ந்ததான சமயப் பொறை அவரிடம் இருந்தது. அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட நாட்டில், பிறமதத்தவர் சிறுபான்மையினராக இருந்த போதும் அவர்களை சரிசமமாக நடத்தினார். இத்துணைக்கும் அக்கம்பக்கத்து ராஜ்ஜியங்களை ஆண்டு வந்த முகலாய சக்கரவர்த்திகள் அவர்கள் நாட்டில் வசித்த இந்துக்களை துன்புறுத்தி கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கினர். இந்துக்களின் கோவில்களை இடித்து தரை மட்டமாக்கினர். ஆனால் சிவாஜி தனது நாட்டில் வசித்த மாற்று மதத்தினரை கண்ணியமாக நடத்தினர்.
சிவாஜியின் நல்லாட்சிக்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களை கூறலாம். ராய் கத்தில் அவருடைய கோட்டை இருந்தபோது நடைபெற்ற சம்பவம் இது.
பலத்த காவலை மீறி சிவாஜியின் கோட்டையில் இருந்து தப்பிய பெண்!
பூனாவில் இருக்கும் இந்த ராய் கத் கோட்டை பலத்த பாதுகாப்பு கொண்டது. சாயாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த கோட்டை சிவாஜியின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகித்தது. எதிரி நாட்டு படையெடுப்புகளில் இருந்து சிவாஜியை காத்தது இந்த கோட்டை தான். மலையுச்சியில் அமைந்துள்ள இந்த கோட்டையின் வாயில் மிகப் பெரிய கதவை கொண்டிருந்தது. இதை தாண்டி உள்ளே நுழைவது என்பது அத்தனை சுலபமல்ல.
மலையின் மீது இருந்தபடியால், இந்த கோட்டைக்கு மதில்சுவர் இருக்கவில்லை. கண்காணிப்பு கோபுரத்தின் மீது எப்போது காவலர்கள் காவல் காத்தபடி இருப்பார்கள். சுற்றிலும் ஆழ்ந்த பள்ளத் தாக்குகள் அமைந்த இந்த கோட்டையின் பிரதான வாயிலை தவிர வேறு வழியாக கோட்டைக்குள் நுழையவோ வெளியேறவோ எவராலும் முடியாது.
கோட்டையின் பாதுகாப்பு என்பது எந்த நாட்டிற்கும் மிக மிக முக்கியம். எனவே ராய் கத் கோட்டையின் நுழைவாயில் எப்போதும் மிக பலத்த காவலுடன் இருக்கும். எண்ணற்ற வீரர்கள் அதற்கு காவல் இருப்பார். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தான் கோட்டையின் கதவு திறந்திருக்கும். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எவரையும் கோட்டைக்கு உள்ளேயே வெளியேயோ அனுமதிக்கக் கூடாது என்பது ராஜ விதி.
கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் ஹிரா கணி என்கிற பெண்மணி ஒருவர் வசித்து வந்தாள். இவள் ஒரு ஏழை பால் விற்கும் பெண். சிவாஜியின் அரண்மனை மற்றும் அதை சுற்றியுள்ள சில மாளிகைகளுக்கு இவள் தான் பால் கொண்டு வருவாள். இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் ராய் கத் கோட்டைக்குள் இவள் சென்று வருவாள்.
இவள் ஒரு நாள் அப்படி பால் கொண்டு சென்றுவிட்டு திரும்பும்போது ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்துவிட, ஹிரா கணி அவளுக்கு பிரசவத்தில் உதவிவிட்டு வருகிறாள். அதற்குள் இரவு மணி எட்டை தாண்டிவிட கோட்டையின் கதவு அடைக்கப்பட்டு விடுகிறது.
வாயிற்காப்போர்களிடம் கெஞ்சினாள். “வீட்டில் என் குழந்தை தனியாக இருக்கிறது. அதற்கு பால் கொடுக்கும் நேரம் இது. தயவு செய்து என்னை மட்டும் வெளியே செல்ல அனுமதியுங்கள்” என்று.
வீரர்களுக்கு இவள் மேல் இரக்கம் ஏற்பட்டாலும் அரச கட்டளையை மீறி கோட்டையின் கதவை திறந்து இவளை எப்படி வெளியே அனுப்புவது என்று யோசித்தனர்.
“அம்மா… உன் ஒருத்திக்காக மட்டும் கோட்டை கதவை திறக்க முடியாது. நாம முகலாயர்களின் போர் அபாயத்துல இருக்கிறதால எந்த காரணத்தை கொண்டும் எட்டு மணிக்கு மேலே கோட்டை கதவை திறக்கக்கூடாதுன்னு சிவாஜி மஹாராஜா உத்தரவு போட்டிருக்காரு. அவர் உத்தரவை நாங்க எப்படி மீறமுடியும்… வீட்டுல்ல தான் உன் புருஷன் இருப்பாருல்ல… அவர் குழந்தையை பார்த்துக்குவாரு. நீ போய் அந்த பிரசவம் பார்த்த பொண்ணோட வீட்டுலேயே இன்னைக்கு இரவு தங்கிக்கோ. காலைல கோட்டை கதவு திறந்ததும் போகலாம்!”
ஹிரா கணி எவ்வளவோ மன்றாடி கேட்டும் வீரர்கள் கதவை திறக்க மறுத்துவிட்டனர்.
மறுநாள் பொழுது விடிந்ததும், ஹிரா கணியை வீரர்கள் தேட, அவர் எங்கும் அகப்படவில்லை.
அவர் தான் இரவோடிரவாக வெளியே தப்பித்து சென்று விட்டார் என்று தெரிந்துகொண்டனர்.
நடந்தது இது தான்.
வாயிற்காவலர்கள் கதவை திறக்க மறுத்துவிட, தவிக்கும் ஹிரா கணி அங்கும் இங்கும் சுற்றுகிறாள். தனது குழந்தையின் நினைவாகவே இருந்த அவள் எப்படியோ மலையில் இருந்து வெளியேற ஒரு வழியை கண்டுபிடித்து மலைச் சரிவில் உயிரை பணயம் வைத்து இறங்கி, தனது கிராமத்திற்கு சென்றுவிடுகிறாள். மலையில் இருந்து இறங்கும் அந்த முயற்சியில் செடி கொடிகள் குத்தி அவளது ஆடைகள் கிழிந்து உடலில் காயமும் வேறு ஏற்பட்டது.
ஹீரா காணி தப்பிச் சென்ற விஷயம் வீரர்களுக்கு தெரிந்ததும் அவர்கள் அச்சத்திலும் ஆச்சர்யத்திலும் உறைந்து போயினர். ஏனெனில், அந்த கோட்டையில் இருந்து தப்பிச் செல்வது என்பது அத்தனை சுலபமல்ல. உலகின் தலை சிறந்த போர்வீரர்களால் கூட அது முடியாத ஒன்று.
நிச்சயம் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது என்பதை யூகித்த வீரர்கள், உடனடியாக சிவாஜியிடம் ஓடிச்சென்று சந்தித்து நடந்ததை விவரித்தனர்.
கோட்டை வாயிலுக்கு விரைந்து வந்த சிவாஜி, என்ன நடந்தது என்று விசாரணை செய்தார். இத்தனை கட்டுக்காவலையும் மீறி ஒரு பெண் எப்படி தப்பிச் சென்றாள் என்று அனைவரும் வியந்து கொண்டிருந்த வேளையில் ஹிரா கணி வழக்கம் போல காலை கொண்டு வரும் பாலை கொண்டு வந்தாள்.
காவலர்கள் அவளை சிவாஜி முன்னர் நிறுத்த, அவள் “என்னை மன்னித்துவிடுங்கள் மகாராஜா. வீட்டில் உள்ள என் குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டியே கோட்டையில் இருந்து தப்பிச் சென்றேன். மற்றபடி வேறு நோக்கம் எதுவும் இல்லை!” என்று முன்தினம் இரவு நடந்த அனைத்தையும் விவரித்தாள். மேலும் மன்னர் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தாள்.
மேலும் கோட்டையை கடக்கும் ஆற்றலும் துணிவும் தமக்கு அந்த நேரத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினாள்.
சிவாஜி உடனே அனைவர் முன்னிலையிலும் அவள் கால்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்தார். “அம்மா… உன் தாயன்பை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. உங்களை வெளியே அனுப்ப இயலாமல் போனதற்கு என்னை மன்னிக்கவேண்டும். ஒரு தாயின் அன்புக்கு முன்னர் எந்த சட்டமும் பெரிதல்ல. மேலும் உங்கள் செயல் எனக்கு ஒரு பெரிய பாடத்தை போதித்துள்ளது. இந்த கோட்டையை சுற்றிலும் உடனடியாக மதில் சுவர் கட்டப்படும். மேலும் உங்கள் தாயன்பையும் வீர தீரத்தையும் போற்றும் விதமாக இந்த கோட்டையின் கோபுரம் இனி ‘ஹிரா கணி கோபுரம்’ உங்கள் பெயரிலேயே வழங்கப்படும்!” என்றார்.
அன்று முதல் அந்த ராய் கத் கோட்டையில் அந்த கோபுரம் ‘ஹிரா கணி கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.
பூனாவில் பசுமை போர்த்திய மலைத் தொடரில் அமைந்திருக்கும் ராய் கத் கோட்டை அதன் பழமை சிறிதும் மாறாமல் அனைவரையும் ஈர்க்கும் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
கோட்டையின் மேலே சிவாஜியின் கம்பீர சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உணர்த்தும் நீதி ஒன்றல்ல இரண்டல்ல…
* ஒரு பெண்ணுக்கு அதுவும் தாய்மார்களுக்கு ஆட்சியாளர்கள் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
* தான் இருந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் பிரசவத்துக்கு உதவிவிட்டு வந்த ஹிரா கணியின் ஈர உள்ளத்தை இங்கு நினைத்துப் பார்க்கவேண்டும்.
* அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு பலத்த காவல் இருந்த ஒரு கோட்டையையே இங்கு ஹிரா கணியை தாண்ட வைத்த ஒரு தாயன்பையும் கவனிக்கவேண்டும்.
* ராஜ தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டியது நாட்டின் காவலர்களின் கடமை. சிவாஜியின் வீரர்கள் அதை செய்வதினின்று தவறாமல் உறுதியோடு இருந்ததையும் பார்க்கவேண்டும்.
இப்படி இந்த சம்பவத்திற்குள் புதைந்து கிடக்கும் நீதியை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
வாழ்க சத்ரபதி சிவாஜி ! வளர்க அவரது புகழ்!! ஜெய் ஹிந்த்!!!
=======================================================
Also check :
சிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன?
=======================================================
[END]
Dear sundarji
Wonderful article about sivaji
Very nice article. சாஸ்திர முறை படி ஆட்சி செய்வது பற்றியும், தங்கம்,பால், தயிர், தானம் அளித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், மற்றும் முக்கியமாக வடலூர் ORPHANAGE HOME இல் செய்யவிருக்கும் நல திட்டங்கள் பற்றியும் விரைவில் பதிவளித்தால் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி
தி பாஸ்.[ சத்ரபதி….] ஒன்லி. இவண்/ விரைந்து படிக்கும் வாசகர் சங்கம்.
டியர் சுந்தர்ஜி
பதிவு மிக அருமை/ தெரியாத கதையை தாங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்/
நன்றி
உமா
உலகில் பெண்ணகளை தெய்வமாகவும் தாயாகவும் கொண்டாடுவது நம் சனாதன தர்மம். அதன் தாத்பரியம் சத்ரபதி சிவாஜியின் செயலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.