1. நிலத்தைக் காட்டிலும் பெரியது எது?
2. கடலைக் காட்டிலும் பெரியது எது?
3. வானத்தைக் காட்டிலும் பெரியது எது?
சோழனின் வினாக்களுக்கு திருக்குறளி லிருந்தே சேக்கிழார் விடைகள் அளிக்க, அபார இலக்கியப்பற்று மிக்க சோழன் அவரையே தம் முதலமைச்சராக்கிக் கொண்டார். சேக்கிழார் விடைகளாகக் கூறிய குறள்கள்:
1. காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது.
2. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.
3. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
(சேக்கிழார் வையகம் காக்கும் கடமையைச் செவ்வனே செய்தமையால், சோழன் இவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் அளித்தான். சேக்கிழார், சோழ நாட்டில் உள்ள திருநாகேச்சுரம் என்னும் திருப்பதியில் திருவீற்றிருக்கும் அருள்மிகு நாகநாத சுவாமிகள் பால் பெரும் பற்றுற்றதால், அதேபோன்றதொரு கோயிலைத் தனது ஊராகிய குன்றத்தூரிலும் எடுப்பித்து, அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயரும் சூட்டி அதன் வழிபாட்டிற்குப் பொருளும் அளித்து வந்தார்.)
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மூன்றுக்குமே ஒரே அதிகாரத்தில் விடையை அடுத்தடுத்து வள்ளுவர் வைத்திருக்கிறார் என்பது தான். ஒருவர் செய்த உதவிக்கு நன்றி மறக்காமல் இருப்பது இந்த பூமி, வானம், கடல் ஆகியவற்றை விட பெரியது என்று கூறும் அதே நேரம், இறுதியில் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்று நன்றி மறத்தலை பற்றி கூறி, நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று எச்சரித்திருக்கிறார்.
எனவே, எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நன்றி மறக்கக்கூடாது.
* நமக்கு கிடைக்கும் நன்மைகளுக்கும் சௌகரியங்களுக்கும் இறைவனிடம் நாம் நன்றியுடன் இருக்கிறோமா?
* நமக்கு உதவும் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் நண்பர்களிடம் நன்றியுடன் இருக்கிறோமா?
* சுவாசிக்கும் காற்றைத் தவிர மீதி அனைத்தும் வணிகமாகிவிட்ட இந்த அவசர உலகில், தன்னலமின்றி நமக்கு உதவி செய்பவர்களிடம் நாம் நன்றியுடன் இருக்கிறோமா?
* நமக்கு ஏதாவது ஒன்று என்றால் ஓடிவரும் உறவுகளிடம் நாம் நன்றியுடன் இருக்கிறோமா?
நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள் இவை!!
===================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது யார் தெரியுமா? திருச்சியை சேர்ந்த THRIVE EDUCATIONAL SOCIETY எஸ்.ரகுராமன் & பி.பிரகாஷ்.
விவேகானந்தர் கனவு கண்ட 100 இளைஞர்களுக்குள் நிச்சயம் இவர்கள் இருவரும் அடக்கம். நாட்டுக்கும் வீட்டுக்கும் தொண்டாற்ற வேண்டிய நம் இளைய தலைமுறையினர் என்ன செய்து வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். யாருக்கும் எந்த விதத்திலும் பயனற்ற விஷயங்களில் நம் இளைஞர்களின் ஆற்றல் வீணாகிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் இவர்கள் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்கள்.
பொறியியல் பட்டதாரியான இவர்கள் திருச்சியில் ஒரு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். உரிய தகுதியும் திறமையும் இருந்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாமல் சிரமப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்கள் கல்வியை தொடர தங்கள் THRIVE EDUCATIONAL CHARITABLE TRUST சார்பாக இவர்கள் உதவி வருகிறார்கள். தவிர தன்னார்வலர்களின் துணையோடு மரக்கன்றுகள் நடுவது, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் பொருட்டு இலவச மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்வது என்று பாரதி வழி சமூக தொண்டாற்றி வருகிறார்கள்.
இவர்களது கல்விப் பணியை பாராட்டி டிசம்பர் 8 அன்று நடைபெற்ற நமது 2 ஆம் ஆண்டு பாரதி விழாவில் இவர்கள் விருதளித்து கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர்கள் செய்துள்ள அருந்தொண்டு ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து, உரிய பயிற்சியாளர்களை கொண்டு அவர்களுக்கு அக்கவுண்டிங் சாஃப்ட்வேரான TALLY சொல்லிக்கொடுத்துவருவது. இது நிச்சயம் அம்மாணவர்கள் படித்துமுடித்து சொந்தகாலில் நிற்க உதவும் என்பதில் ஐயமில்லை.
நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள். தவிர மாணவர்களை கொண்டு அவர்கள் மத்தியில் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நம் நன்றி.
===================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு வந்திருக்கும் கோரிக்கைகள் இரண்டும், பெண்களின் திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்டவை.
மனம் விரும்பியபடி நிம்மதியான திருமண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அது ஒரு வகையில் பேறு. நமது கர்மாவுடன் சம்பந்தப்பட்டது. ஆகையால் தான் முகூர்த்த நேரத்துக்கு ஒரு நொடி முன்னர் கூட பலர் வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது.
விதி வசத்தால் நடக்கக்கூடாது நடந்துவிட்டாலோ அல்லது நமது விருப்பத்திற்கு மாறாக ஏதேனும் நடந்தாலோ என்ன செய்யவேண்டும்?
நடந்ததை மாற்றும் சக்தி நமக்கில்லை. நம்மால் செய்யக்கூடியது எல்லாம் நல்லதையே எந்த சூழ்நிலையிலும் நினைத்திருந்து, இறைவனின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வதே. நிச்சயம் அல்லது நீங்கி நல்லது நடக்கும். 16 வயதில் மரணிக்கும் விதி இருந்தும், இறைவனை தஞ்சம் புகுந்ததால் எமனின் பாசக்கயிற்றுக்கு மார்க்கண்டேயன் தப்பிய கதை தெரியுமல்லவா?
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
===================================================================
கேள்விக்குறியான திருமண வாழ்க்கை
என் பெயர் தனலட்சுமி (23). நான் கோவை ஒண்டிப்புதூரில் வசிக்கிறேன். இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். எனக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தது. அனைத்தும் கைகூடி வந்தநிலையில், என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதித்திருந்தவரின் மனப்போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டு என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கான காரணம் எனக்கு தெரியாது. வேறு ஒருவரை எனக்கு வாழ்க்கைத் துணையாக என்னால் நிச்சயம் நினைக்க முடியாது. அவர் மனம்திருந்தி வந்து மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்க்கு உங்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
தனலட்சுமி,
கோவை.
===================================================================
ஏழைப் பெண்ணுக்கு இனியதொரு வாழ்க்கை அமையவேண்டும்
அடுத்து எனக்கு தெரிந்த நம் வாசகி ஒருவருக்கான வேண்டுதல் இது.
நம் தளத்தின் வாசகி இவர். இவர்களை சார்ந்து வாழும் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்தனர்.
மணவாழ்க்கை எல்லோருக்கும் மலர் படுக்கையாக அமைந்துவிடாதே…. என்ன காரணமோ தெரியவில்லை. புகுந்த வீட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அந்த பெண் ஒரே வாரத்தில் திரும்பவும் வந்துவிட்டார். அவரது திருமண வாழ்க்கை ஏழே நாட்களில் பட்டுப்போனது. அது மட்டுமின்றி கேள்விக்குறியாகவும் மாறிவிட்டது. திருமணம் செய்துவைத்த இவர்களுக்கு ஒரே சங்கடம் மனவேதனை. சமீபத்தில் ஒரு நாள் நம்மிடம் பேசும்போது இது பற்றிகூறி, அந்த பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சனையில் விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட்டு, அந்த பெண்ணுக்கு இனியதொரு வாழ்க்கை அமையவேண்டும் என்று பிரார்த்திப்போம்.
நன்றி!
===================================================================
இந்த வார பொது பிரார்த்தனை :
நம் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும்!
சமீபத்தில் செய்தித் தாளில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. காஞ்சிபுரத்தை அடுத்துள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவர் மீது காதல் ஏற்பட்டு படிப்பு ஏறாத ஊதாரியான அவனுக்கு உதவ வேண்டி குடியிருந்த வீட்டில் நகைகளை திருடி தற்போது போலீசில் அகப்பட்டு காதலனுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இறைவனுக்கு அடுத்து மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள். இவர்களை போன்றவர்கள் நாளை மருத்துவம் படித்துவிட்டு வெளியே வந்தால் என்னாவது? காசு கொடுத்தால் சீட் என்பதால் தகுதியற்றவர்களுக்கு எல்லாம் இப்படி பொறியியலும் மருத்துவமும் படிக்க வசதி ஏற்படுத்திவருவதால் இந்த அவலம்.
குற்றம் செய்து போலீசாரிடம் அகப்பட்டு இன்று இவர்கள் தண்டனை அனுபவித்து வரும் சூழ்நிலையில், இவர்களை படிப்பதற்கு அனுப்பிய (அதுவும் எம்.பி.பி.எஸ்) பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுக்கு எத்தனை அவமானம்?
பெற்றோர்கள் தலைகுனியும்படியான செயலை எந்த சூழ்நிலையிலும் செய்யமாட்டோம் என்று மாணவர்கள் உறுதி மேற்கொள்ளவேண்டும். மேலும் பெற்றோர் வீட்டை விற்று வயலை விட்டு படிக்க அனுப்பி வைக்கும் ஒரு சூழ்நிலையில் படிக்கும் காலத்தில் தேவையற்ற எதற்கும் இடம் கொடுக்கமாட்டோம் என்றும் மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.
வாழ்க்கை கணினி அல்ல. இங்கு CTRL+Z எனும் UNDO பட்டன் கிடையாது என்பதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
நம் இளையதலைமுறையினர் படிக்கும்போது எந்தவித மனச்சிதறல்களும் இன்றி ஒழுக்கத்துடன் கல்வி கற்கவும், பிறந்த ஊருக்கும் வளர்ந்து நாட்டிற்கும் தரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனை நிச்சயம் ஒரு சில மாணவர்களையாவது தவறான பாதையில் செல்லவிடாது தடுக்கும். அப்படி நடந்தால் அந்த புண்ணியம் பிரார்த்தனை செய்த உங்களுக்கும் உண்டு!
===================================================================
கோவையை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு அவர் மனம் போல இனியதொரு திருமண வாழ்க்கை அமையவும், நம் வாசகியின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ஒரு ஏழைப்பெண்ணுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும்,
நம் மாணவர்களும் இளைய தலைமுறையினரும் நன்கு ஒழுக்கத்துடன் படித்து பெற்றோர் கண்ட கனவுகளை நிறைவேற்றி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடி தரும் வண்ணம் வாழவேண்டும்! இறைவனை வேண்டுவோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 16, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ஆயிரக்கணக்கான பச்சை கிளிகளுக்கு தினசரி இரு வேளையும் உணவளித்து வரும் திரு.கேமிரா சேகர் அவர்கள்.
காலை வணக்கம் அன்பு சகோதரா
மிக நல்ல கருத்துக்களைக் கொண்ட மிக நல்ல பதிவு….ஆம் நாம் என்றும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்…பொழுது புலர்ந்து நமக்கு விழிப்பு வந்து நம் நிலை உணர்ந்து நாம் சுவாசிக்கும் முதல் மூச்சின் போதே நாம் இன்று உயிருடன் இருக்கிறோம் என்பது உறுதியாகி விடுகிறது…அந்த நொடி நாம் இறைவனுக்கு நம்மக்கு இன்னொரு நாளை வாழ கொடுத்ததற்கு நாம் நிச்சயம் நன்றி செலுத்தி நாளைத் துவக்க வேண்டும்…மற்றும் அந்த நாளை மஹா பெரியவா சொல்லியது போல மற்றவர்க்கு உபயோகமாக ஒரு சிறு துளி நேரமாவது செலவிட வேண்டும்…அப்படி பார்க்கையில் தம்பி மற்றவர் நலனுக்காக எந்நேரமும் நினைத்து மற்றும் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மஹா பெரியவாவின் அருள் பரி பூரணமாகக் கிடைத்திட வேண்டி மற்றவர்கள் கோரிக்கைகளுடன் உங்களுக்காகவும் எப்பொழுதும் போல பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் தம்பி. _/|\_
சார்
உண்மையில் ஆண்டவன் உங்களுக்கு நிறைய அனுக்கிரகம் செய்துள்ளார்
பேப்பரில் நீங்கள் சாதரணமாக படிக்கும் செய்திள்கள் கூட உங்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்ல பயன்படுகிறது. யு ஆர் கிரேட் சார்.
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருள வேண்டி கொள்கிறேன்
சிவராத்திரி எந்த கோயில் சார் போக போறீங்க?போறீங்க? தெரியப்படுத்தவும்.
selvi
சுந்தர் சார் வணக்கம் ….. மிக அருமையான பதிவு பிறர் செய்த நன்றி மறக்க கூடாது என்று மிக அற்புதமாக குறள் மூலம் விளக்கம் தந்தமைக்கு நன்றி .இந்த வாரம் பிராத்தனைக்கு தலைமை தாங்கும் எஸ் .ரகுராமன் & பி.பிரகாஷ் அவர்களின் ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க உதவும் மனப்பான்மை மற்றும் அவர்களின் தொண்டு தொடர வாழ்த்துகிறேன் …….ஏழை பெண்ணுக்கு இனியதொரு வாழ்கை அமைய பிராத்திப்போம் ….நம் மாணவர்கள் ஒழுக்கத்துடனும் பெற்ற தாய் தந்தை அவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலைலும் தலைகுனியும் படியான செயலை செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்து இளைய தலைமுறை ஒழுக்கத்துடனும் எந்த மனச்சிதறல்கள் இன்றி கல்வி கற்க இறைவனை பிராத்திப்போம் .. மகா பெரியவர்களின் அருள் பெற்று அனைவரும் நலமாக வாழ பிராத்திப்போம் ….. நன்றி தனலட்சுமி …….
பூமி, வானம், கடல் எல்லாவற்றையும் விட மிக பெரியது நன்றி மறப்பது என்ற அறிய விஷயத்தை வள்ளுவர் பெருமான் மூன்று குறள்களில் விளக்கி உள்ளார்.
நமக்கு இந்த உடலையும் உயிரையும் கொடுத்த கடவுளுக்கு நாம் என்றன்றும் கடமைபட்டுளோம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர்கள் செய்யும் தொண்டு மிக பெரியது.
தானத்தில் மிக சிறந்த தானமான கல்வி தானம் அவர்கள் செய்கிறார்கள். இதனால் ஏழை மாணவர்கள் பலர் பயன் பெறுகிறார்கள். அவர்கள் செய்யும் இந்த தொண்டு மேலும் பல மாணவர்கள் பலன் பெறும் வகையில் ஆண்டவன் அவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளையும் பல நல்ல உள்ளங்களையும் அவர்களுக்கு அருள்புரிய வேண்டும்.
கோவையை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு அவர் மனம் போல இனியதொரு திருமண வாழ்க்கை அமையவும், நம் வாசகியின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ஒரு ஏழைப்பெண்ணுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும்,
நம் மாணவர்களும் இளைய தலைமுறையினரும் நன்கு ஒழுக்கத்துடன் படித்து பெற்றோர் கண்ட கனவுகளை நிறைவேற்றி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடி தரும் வண்ணம் வாழவேண்டும். மிகவும் நன்றி சார்.
\\எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நன்றி மறக்கக்கூடாது. * நமக்கு கிடைக்கும் நன்மைகளுக்கும் சௌகரியங்களுக்கும் இறைவனிடம் நாம் நன்றியுடன் இருக்கிறோமா?
* நமக்கு உதவும் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் நண்பர்களிடம் நன்றியுடன் இருக்கிறோமா?
* சுவாசிக்கும் காற்றைத் தவிர மீதி அனைத்தும் வணிகமாகிவிட்ட இந்த அவசர உலகில், தன்னலமின்றி நமக்கு உதவி செய்பவர்களிடம் நாம் நன்றியுடன் இருக்கிறோமா? *
நமக்கு ஏதாவது ஒன்று என்றால் ஓடிவரும் உறவுகளிடம் நாம் நன்றியுடன் இருக்கிறோமா? \\.
இந்த வாரம் பிரார்த்தனைக்கு சமர்ப்பித்த அனைவரின் நலனுக்காகவும் ,பிரார்த்தனை செய்வோம் .
-நன்றிகளுடன்
மனோகர்
Sundarji,
thanks for story about “thanks”. I first thank our right mantra and you for one and all. I welcome and appreciate the guests Mr.Raguraman and Mr.Prakash for their valuable service, happy to pray for this week prayer requests with them.
சார்….
ரெண்டு பேரையும் திருமருகல் வண்டுவார் குழலி உடனுறை இரத்தினகிரீசுவரர் கோயில்[நன்னிலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம். ] சென்று வர சொலுங்க சார் ..சம்பந்தர் இத்தலத்திற்கு விஜயம் செய்த போது ஆலயத்தின் அருகே ஒரு இளம் பெண் அழுதுகொண்டிருப்பதையும் அவளருகே ஒருவன் இறந்து கிடப்பதையும் பார்க்கிறார்.அந்த பெண்ணும் அவளுடன் வந்த வணிகனும் வீட்டில் பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர் என்றும் இக்கோவிலுக்கு வந்து மணம் புரிந்து கோள்ள வேண்டி முன்தினம் இரவு கோவிலின் அருகே ஒரு மடத்தில் தங்கியதாகவும், இரவு தூங்கும்போது பாம்பு தீண்டி இறந்து விட்டதாகவும் தகவல் கூறினர். திருமணம் ஆகாததால் வணிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய் அந்தப் பெண் அழுது புலம்பினாள். இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல் “சடையாயெனுமால் சரண்நீ எனுமால்..”என்று தொடங்கும் பதிகம் பாட வணிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார்.திருமணம் தடைபட்ட வர்கள் இங்கு வந்து வழிபட திருமணம் மனம் போல் ஆகும் .. திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது….அப்புறம் இந்த பதிகத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக சொல்லுங்க சார் …..பலன் நிச்சயம் ….சிவாய சிவ ……..கூடவே பைரவர் வழிபாடு பண்ண சொலுங்க …..
திருச்சிற்றம்பலம்
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே.
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.
அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
திருச்சிற்றம்பலம்
கோவையை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு அவர் மனம் போல இனியதொரு திருமண வாழ்க்கை அமையவும், நம் வாசகியின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ஒரு ஏழைப்பெண்ணுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும், நம் மாணவர்களும் இளைய தலைமுறையினரும் நன்கு ஒழுக்கத்துடன் படித்து பெற்றோர் கண்ட கனவுகளை நிறைவேற்றி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடி தரும் வண்ணம் வாழவேண்டும்! இறைவனை வேண்டுவோம். –
வணக்கம் சார்
இறைவனிடம் இரண்டு தோழிக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டுகிறேன் .