பிப்ரவரி 12, ஆப்ரஹாம் லிங்கன் பிறந்த நாள்.
உலகம் கண்ட ஒப்பற்ற தலைவர், கறுப்பின மக்களின் விடிவெள்ளி, முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் தான் அவர். நம் ரோல் மாடல்களுள் ஒருவர். நமது விசிட்டிங் கார்டில் இவரது படம் பிரதானமாக பொறிக்கப்பட்டிருக்கும்.
இவரை எதுக்கு விசிட்டிங் கார்டுல போட்டிருக்கீங்க?
சென்ற ஆண்டு துவக்கத்தில் நாம் ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்தபோது அங்கு ஒரு ஆன்மீக ஸ்டாலில் அதன் அமைப்பாளரிடம் பேச நேர்ந்தது. கிளம்பும்போது நமது விசிட்டிங் கார்டை கொடுத்தோம். அதில், பாரதி, வள்ளுவர், விவேகானந்தர் ஆகியோரின் படங்களுக்கு இணையாக லிங்கனின் படமும் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டு முகம் மாறிய அவர், “இவரை எதுக்கு உங்க விசிடிங் கார்டுல போட்டிருக்கீங்க? இவர் வேற மதமாச்சே…?” என்றார்.
“சாதனையாளர்கள் நாடு, இனம், மொழி கடந்தவர்கள். அவர்களை இது போன்ற குறுகிய வட்டத்தில் அடைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எந்த சாதனையாளராக இருந்தாலும் சரி… கஷ்டப்படாமல் அவர்களுக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை. வலியின்றி அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவுமில்லை. சாதி மத இன பேதமின்றி உலகம் முழுதும் சாதனையாளர்களின் பயணம் ஒரே மாதிரி தான் இருந்துள்ளது, இருந்து வருகிறது… அதுவும் இவர் எவ்வளவு பெரிய சாதனையாளர்! இவரை போன்ற ஒரு சாதனையாளரை அற்புதமான மனிதரை சரித்திரம் மறுபடியும் சந்திக்குமா என்று தெரியாது!” என்றோம்.
நம் பதிலில் அவர் திருப்தியடையவில்லை. முடிவில் ஒரு திருக்குறளை கூறிவிட்டு நாம் நடையை கட்டினோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)
சுப்ரீம் கோர்ட்டே சொன்னபிறகு அதுக்கு மறுமொழி ஏது?
ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தநாள் விழா
அடுத்த சில நாட்களில், ஆப்ரஹாம் லிங்கனின் பிறந்த நாள் வரவிருந்தது. நாம் நீண்ட நாள் திட்டமிட்டு வந்த மஹா பெரியவா அவர்களின் மகிமைகள் நிகழ்ச்சியுடன் ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் சேர்த்து ஏற்பாடு செய்து, நம் ஆண்டுவிழாவும் பாரதி விழாவும் நடைபெற்ற சக்தி விநாயகர் பிள்ளையார் கோவிலில் அந்நிகழ்ச்சியை நடத்தினோம்.
லிங்கன் அவர்களைப் பற்றி, அவ்விழாவில் நாம் சிறப்புரை ஆற்ற, தொடர்ந்து மஹா பெரியவா அவர்களின் மகிமைகளை பற்றி திரு.பி.சுவாமிநாதன் சொற்பொழிவாற்றினார். ஒரு வகையில் குரு நமது செயலை ஏற்றுக்கொண்டு ஆமோதிப்பது போலிருந்தது அது.
நாம் அளிக்கும் நினைவுப் பரிசில் லிங்கன்
ஒவ்வொரு சாதனையாளரையும் நாம் சந்திக்கும்போதும், நமது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசளிக்கும்போதும் நாம் அளிக்கும் (MEMENTO) நினைவுப் பரிசில் ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் உருவமே முதலில் இடம்பெற்றிருக்கும்.
சென்ற மாதம் திருவள்ளுவர் தினத்தன்று நாம் சந்தித்த ஒரு மிகப் பெரிய சாதனையாளருக்கு நாம் வழங்கிய நினைவுப் பரிசு உங்கள் பார்வைக்கு.
தனி நபராக, ஒரு பெண்ணாக, போராடி ஒரு சிறு தையல் மிஷினுடன் வாழ்க்கையை துவங்கியவர் இன்று ஒரு மிகப் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி பலருக்கு வேலை கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிய காரணமாக இருப்பவர் திருமதி.டென்னிஸ் ஹஃப்டன். சென்னை பரங்கிமலையில் உள்ளது இவர் வீடும் யூனிட்டும். இவரது சந்திப்பு விரைவில் தனி பதிவாக வெளிவரவிருக்கிறது.சிறு சிறு பிரச்னைகளை கண்டே முடங்கிவிடும் பெண்கள் அவசியம் இவரது கதையை அறிந்துகொள்ளவேண்டும்.
லிங்கன் விஷயத்திற்கு வருவோம்.
இவர் கூட நம் தலைவர் தான் !
அமெரிக்காவின் மிகச்சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவராக போற்றப்படும் லிங்கன் கடந்து வந்த பாதை கற்பனைக்கும் அப்பாற்பட்டது. விறகு வெட்டி, மளிகை கடை ஊழியர், போஸ்ட் மேன், படகோட்டி, என பல தொழில்கள் செய்து இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தார். தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய காலகட்டத்தையும் குறைந்தது ஆயிரம் தடைகளையாவது தாண்டித் தான் லிங்கன் முன்னேறியிருக்கிறார். பாதையில் தடைகள் தோன்றுவது இயல்பு. தடையே பாதை என்றால்? இருப்பினும் லிங்கன் மனம் தளரவில்லை. அவரது ஒரே குறிக்கோள், அமெரிக்க ஜனாதிபதியாகி அமெரிக்காவை ஒரு ஒருங்கிணைந்த வலிமையான தேசமாக மாற்றி கறுப்பின மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்பது தான். (லிங்கன் ஒரு வெள்ளையர் என்பது குறிப்பிடத்தக்கது!)
நிறவெறி தலைவிரித்தாடி, அடிமை வாணிபம் கொடிகட்டிப் பறந்த அமெரிக்காவில் இன்று கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா, ஜனாதிபதியாகி இருக்கிறார் என்றால் அதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே அடிகோலியவர் ஆப்ரஹாம் லிங்கன் என்றால் மிகையாகாது.
அமெரிக்காவில் லிங்கன் இருந்த காலகட்டத்தில் (18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) அடிமை வாணிபம் கொடிகட்டி பறந்தது. ஒரு கணம் அந்த காலகட்டத்துக்கு நாம் சென்றோம் என்றால், தற்போது எந்தளவு நாம் சௌகரியத்தொடு, சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும். வரலாற்றின் இருண்ட பக்கங்கள் அவை.
என்னது வாழ்க்கையில் பிரச்னையா? தாங்க முடியாத கஷ்டமா?
அடிமை வாழ்வு என்றால் கற்பனைக்கும் எட்டாத கொடூரம் நிறைந்த வாழ்க்கை. நாள் முழுவதும் கடினமான வேலை. மிகக்குறைவான உணவு. அனல் தெறிக்கும் வார்த்தைகள், அடிகள்… சில நேரங்களில் கொலைகளாகவும் தண்டனைகள் முடியும். அடிமைகளுக்குப் பிறந்த குழந்தைகளும் அடிமைகளே. அடிமையையும் அடிமைக் குழந்தைகளையும் யாருக்கு வேண்டுமானாலும் விற்கும் அதிகாரம் அடிமைகளின் உரிமையாளர்களுக்கு உண்டு.
அடிமைகள் குடும்பமாக வசிக்கவே இயலாது. பலருக்கும் விற்கப்பட்டு, உறவுகள் தொடர்பற்றுப் போய்விடும். குளிருக்கு ஏற்ற உடை கிடைக்காது. தூங்குவதற்கு நல்ல இடம் இருக்காது. ஆண்களும் பெண்களும் கால்நடைகளைப் போல ஓர் அறையில் உறங்க வேண்டும். இந்தக் கொடுமையில் இருந்து தப்பிச் செல்வது அவ்வளவு எளிதல்ல… மீண்டும் மாட்டிக்கொண்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
“ஒரு நாள் நான் அமெரிக்க ஜனாதிபதியாவேன்!”
இப்படி அடிமைகள் படும் துயரை கண்டு கண்ணீர் வடித்தான் சிறுவன் லிங்கன். தான் அமெரிக்க ஜனாதிபதியானால் மட்டுமே இவர்களின் துயரை களைய முடியும் என்று நம்பினான்.
தன் நண்பர்களிடம் அப்படியே கூறியும் வந்தான். “நீங்க வேணும்னா பாருங்க… ஒரு நாள் நான் அமெரிக்க ஜனாதிபதியாவேன்!” என்றான் தன்னம்பிக்கையுடன்.
சொன்னதை செய்தும் காட்டினான் அந்த சிறுவன். மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் ஒரு விறகு வெட்டியின் மகனாக எங்கும் எதிலும் தோல்விகளை சந்தித்து, இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்த ஆப்ரஹாம் லிங்கனின் இந்த பயணம் ஒரு மடுவுக்கும் மலைக்கும் உள்ள பயணத்தை போன்றது. இந்த பயனத்தில் தான் அவர் சந்தித்த துன்பங்கள், தோல்விகள், துரோகங்கள், போராட்டங்கள் எத்தனை எத்தனை. இப்படியெல்லாம் துன்பம் அனுபவித்த ஒருவன் இறுதில் சாதிக்க முடியும் என்றால் ஏன் நம்மால் முடியாது என்று சாமானியனையும் யோசிக்க வைத்தவர் லிங்கன்.
இன்று அவரது பிறந்த நாள். அவரது பிறந்த நாளான இன்று, அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கீழ்கண்ட இந்த பதிவை அளிக்கிறோம்.
வழக்கறிஞர் தொழிலை லிங்கன் ப்ராக்டீஸ் செய்தபோது நடந்த சில நிகழ்வுகளை இங்கே உங்களுக்கு தருகிறோம்.
லிங்கன் – ஏழைகளுக்காக இரங்கிய உத்தர்!
லிங்கனைப் போன்ற ஒரு வழக்கறிஞரை எங்குமே பார்க்க முடியாது. அன்றைய காலகட்டங்களில் பணத்தையே பிரதானமாக கொண்டு வக்கீல் தொழில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் லிங்கன் ஏழை எளியோருக்காக தனது வாதத் திறமையை பயன்படுத்தி அவர்களுக்காக ஆஜராவார்.
“எனக்கு ஃபீஸ் எனக்கு இவ்வளவு வேண்டும்… அவ்வளவு வேண்டும்…” என்று அவர் கேட்டதே கிடையாது. வாடிக்கையாளர்கள் தாங்களாக மனமுவந்து கொடுப்பதை அவர் வாங்கிக்கொள்வார். அவ்வளவு தான்.
இதனால் அவர் மீது சக வழக்கறிஞர்கள் கோபத்திலும் பொறாமையிலும் இருந்தனர்.
“இவனால் நமது வழக்கறிஞர் குலத்துக்கே அவமானம். இந்த தொழிலையே அவர் மலிவாக்கிவிட்டார்” என்று குமுறித் தீர்த்தார்கள்.
இல்லானை இல்லாளும் வேண்டாள் அல்லவா? லிங்கனின் மனைவி மேரி டாடும் தன் பங்குக்கு கணவனை கரித்து கொட்டினார்.
உங்களுக்கு பிழைக்கவே தெரியாதா?
“உங்களுக்கு பிழைக்கவே தெரியாதா? நாலு காசு சேர்க்க என்னைக்கு தான் கத்துக்க போறீங்களோ?” என்று அவர் சீறும்போதெல்லாம்… “ஏதோ ஏழை எளியவங்க… நான் கொடுக்குறதை வாங்கிக்கிறேன்னு என்னை தேடி வர்றாங்க… அவங்க கிட்டே இருக்குறதையும் பிடுங்க சொல்றியா? என்னால முடியாது” என்று பதிலுரைப்பார்.
அவர் நடத்திய பல வழக்குகளை ஆராய்ந்து பார்த்தாலே தெரியும் அவர் எப்படிப்பட்டவர் என்பது. வீட்டு எல்லை பிரச்னை, வாய்த் தகராறு, பென்ஷன் வராமல் போவது, ஆடு, கோழி காணமல் போவது அல்லது திருடுவது, கடனை கட்டமுடியாமல் வாங்கியவர் மீது தொடரப்பட்ட வழக்குகள், விவசாய நிலங்கள் குறித்த கேஸ்கள் இவை தான் பெரும்பாலும் லிங்கனை தேடி வரும்.
பணத்தை திருப்பி அனுப்பிய லிங்கன்
ஒரு முறை லிங்கன் ஆஜரான வழக்கில் தன் கட்சிக்காரருக்கு அவர் வெற்றியை தேடி தந்துவிட, அதற்கு கட்டணமாக 25 டாலர்களை அவர் லிங்கனுக்கு அனுப்பியிருந்தார். 25 டாலர் என்பது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. அதில் பாதியை லிங்கன் திருப்பி அனுப்பிவிட்டார்.
பென்ஷன் எஜன்ட் ஒருவர் நிராதரவாக விடப்பட்ட வயதான மூதாட்டி ஒருவரை ஏமாற்றிவிட, அவருக்காக வழக்கில் ஆஜரான லிங்கன், அவருக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தந்தார். வழக்கு வெற்றி பெற்றுவிட்டபொதும் அதற்கு ஃபீஸாக ஒரு சென்ட் கூட வாங்கவில்லை லிங்கன். அதுமட்டுமா அவர் வந்து போனது முதல் விடுதியில் தங்கியது மற்றும் சாப்பிட்டது, உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் லிங்கனே ஏற்றுக்கொண்டார்.
அதற்கு லிங்கன் கூறிய காரணம் என்ன தெரியுமா? “எனக்கு இன்னும் வயது இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நான் சம்பாதிக்க முடியும். ஆனால் அந்த அம்மாவுக்கு யார் இருக்கிறார்கள்? இந்த பணத்தை வைத்து தானே அவர் தன் இறுதிக் காலத்தை கழிக்கவேண்டும்?” என்பது தான்.
ஏழை எளியவர்கள் கிட்டே பிடுங்கி வாழ்றதைவிட பட்டினி கிடந்து சாவுறது மேல்
வேறொரு கேசில் லிங்கன் நடந்துகொண்ட விதம் உண்மையில் அவரது மனிதாபிமானத்துக்கு சான்று. மனநோய் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர். அவரை ஏமாற்றி பத்திரங்களில் கையெழுத்து வாங்கி சொத்துக்களை கைப்பற்ற திட்டமிட்டார் அவரது உறவினர் ஒருவர். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது.
அந்த வழக்கில் அந்த பெண் சார்பாக லிங்கன் ஆஜரானார். தனது வாதத் திறமையால் அந்த பெண்ணுக்கு வெற்றி தேடி தந்தார் லிங்கன்.
அதற்கு கட்டணமாக லிங்கனின் நண்பர் வார்ட் லேமன் என்பவர் அந்த பெண்ணிடம் 250 டாலர் கட்டனாமாக வாங்கிக்கொண்டு வந்தார். அதை லிங்கனிடம் பெருமையும் அடித்துக்கொண்டார். லிங்கன் பதறிப்போனார்.
“யாரை கேட்டு அந்த பெண்ணிடம் நீ கட்டணம் வசூலித்தாய்? இப்படி ஒரு நிலைமைல இருக்குறவங்ககிட்ட ஃபீஸ் வாங்கித் தான் நாம பொழைப்பை நடத்தனுமா? ஏழை எளியவர்கள் கிட்டே பிடுங்கி வாழ்றதைவிட பட்டினி கிடந்து சாவுறது மேல். மொதல்லே அந்த பொண்ணுகிட்டே இந்த பணத்தை திருப்பி கொடு…” என்று கத்தித் தீர்த்துவிட்டார்.
வழக்கு என்று வந்தாலே சொத்தை அடமானம் வைத்து வாழ்க்கை நடத்துற நிலைமைக்கு இன்றைக்கு சில வழக்கறிஞர்கள் நம்மை தள்ளிவிடுகிறார்கள். ஆனால் லிங்கனை பொருத்தவரை, அவரிடம் வழக்கு என்று வந்தால் கூடுமானவரை நீதிமன்றத்தின் படி ஏறாமால் (OFF-COURT SETTLEMENT) கோர்ட்டுக்கு வெளியிலேயே அந்த வாழ்க்கைத் தீர்த்து வைக்க முயல்வார். முடியாத பட்சத்தில் தான் கோர்ட்டு படி ஏறுவார்.
தன் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைத் தான் லிங்கன் எப்போதும் வாங்குவார். தான் கேஸை ஜெயித்து தருவதால் கட்சிக்காரார்களுக்கு கிடைக்கக்கூடிய லாபத்தை கருத்தில் கொண்டு ஃபீஸை இஷ்டத்துக்கு ஏற்றமாட்டார். ஒரு வழக்கில் இவர் வாதாடி பெற்று தந்த வெற்றியின் மூலம் இவரது கட்சிக்காரருக்கு பல நூறு டாலர்கள் கிடைக்க, இவர் பெற்ற கட்டணமோ வெறும் 50 டாலர் தான். இத்தனைக்கும், லிங்கனின் பொருளாதார நிலைமை அப்போது சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
கறுப்பின மக்களின் வழக்கை தைரியமாக எடுத்து வாதாடியவர்
அன்று அமெரிக்கா இருந்த சூழ்நிலையில் கறுப்பின மக்களின் வழக்குகளை எடுத்து வாதிட பல வழக்கறிஞர்கள் தயங்குவார்கள். அவர்கள் வழக்குகளை எடுத்து நடத்தினால் சமூகத்தில் தங்கள் மதிப்பு போய்விடும் தான். ஆனால் லிங்கன், தைரியமாக கறுப்பின மக்களுக்காக பல வழக்குகளில் ஆஜரானார்.
லிங்கனின் மனிதாபிமான பக்கங்களை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
காந்தியை போன்றே லிங்கனும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் போலி அரசியல்வாதிகளையும் நம்மை சுரண்டிகொண்டிருப்பவர்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறோம். உண்மையில் நம் நாட்டுக்காக பாடுபட்ட உத்தமர்களை நாம் மறந்துவிட்டோம். ஆனால் அமெரிக்க மக்கள் லிங்கனை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டார்கள். அவர்கள் வல்லரசாக இருப்பதில் ஆச்சரியமென்ன?
=============================================================
Also check :
அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!
=============================================================
[END]
EXCELLENT ARTICLE.
டியர் சுந்தர்ஜி
இன்றைய பதிவு மிக அருமை. லிங்கனை போல் நாமும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வாழ்கையில் முன்னேற துடிக்க வேண்டும் என்று இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தோன்றும்.லிங்கனின் honesty அண்ட் simplicity really superb . லிங்கனை போல் கடின உழைப்பு உழைத்தால் நாமும் முன்னேறலாம்.
ரைட் mantra வும் தங்கள் கடின உழைப்பின் மூலம் வெகு விரைவில் ஒரு unreachable destination னை அடைய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்,.
உங்கள் உரைநடை மிக நன்றாக உள்ளது
நன்றி
uma
Dear sundarji,
Very nice artcle about Mr . Abraham Lincoln.
சுந்தர் சார் வணக்கம் ….. இன்றைய பதிவு மிக அருமை
சுந்தர் சார்
super .
நல்ல பதிவு.
நன்றியுடன் அருண்
Super.. Especially the last lines…
Tears in my eyes on reading this article. The earth still goes on existing because of thes divine souls. :/