Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, December 7, 2024
Please specify the group
Home > Featured > முடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு!

முடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு!

print
மீபத்தில் நாளிதழ்களில் நாம் படித்த இரண்டு செய்திகள் நம் கவனத்தை மிகவும் கவர்ந்தன. காரணம் அந்த செய்திகள் உணர்த்திய வாழ்வியல் பேருண்மைகள். நம் வாசகர்கள் நிச்சயம் அது பற்றி தெரிந்கொள்ளவேண்டும்.

Plant coming out of rockநாம் அனைவரும் இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைக்கும் இடங்களில் தான் சிலருக்கு வாழ்க்கை தொடங்குகிறது. தொடங்க வேண்டிய இடங்களில் சிலருக்கு முடிந்துவிடுகிறது.

நேர்மறை சிந்தனையாலும் நல்ல பழக்கவழக்கங்களாலும் அணுகுமுறைகளில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்தாலும் முடிந்து போனதாக கருதப்பட்ட ஒருவரது வாழ்க்கை துளிர்த்திருக்கிறது. கூடா சகவாசத்தாலும் குடிப்பழக்கத்தாலும் இனிமையாக தொடங்கவேண்டிய ஒருவரது வாழ்க்கை முடிந்திருக்கிறது.

அப்படி இருவருக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பார்ப்போம்.

(இந்த பதிவின் நோக்கம் – வாழ்வில் எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சரி… நல்லதையே நினையுங்கள். நல்லதையே பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்பதை வலியுறுத்துவது தான்.)

ஆயுள் தண்டனை சிறைக் கைதியை கரம்பிடித்த பெண் வக்கீல்!

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 9-வது தெருவை சேர்ந்தவர் சோமு என்ற சோமசுந்தரம் (வயது 48). கூலிப்படையை சேர்ந்த இவர், பிரபல ரவுடி சேராவின் கூட்டாளி ஆவார். மேலும், சென்னை நகரில் தாதாவாக வலம்வந்த கபிலன், மனோ என்ற மனோகரன், ஆசைத் தம்பி, கோபால், ‘பாம்’ செல்வம் ஆகியோருடனும் நெருக்கமாக இருந்தவர். 2001-ம் ஆண்டு நடந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சோமசுந்தரம் புழல் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில், சோமசுந்தரத்தின் நடவடிக்கையும் மாறத்தொடங்கியது. 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் கல்வி கற்க தொடங்கியதுடன், யோகா – தியான வகுப்புகளில் தவறாமல் கலந்துகொண்டார். சிறைச்சாலையில் இருந்தபோது, அவரது மீது எந்தப் புகாரும் இல்லை. இதன் காரணமாக சிறை அதிகாரிகளிடம் நன்னடத்தை சான்றிதழும் பெற்றுள்ளார்.

அவர் மீதான வழக்குகளை எழும்பூரை சேர்ந்த பிரபல வக்கீல் ஒருவர் நடத்தி வந்தார். அவரிடம் ஜூனியர் வக்கீலாக கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த அருணா (32) என்பவர் இருந்தார்.

Lawyer weds life prisoner

அருணா கடந்த 4 ஆண்டுகளாக சோமசுந்தரம் மீதான வழக்குகளை கவனித்து வந்தார். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவ்வப்போது புழல் சிறைக்கு சென்று சோமசுந்தரத்தை அருணா சந்தித்து வந்தார். அப்போது தனது வாழ்க்கை மற்றும் குற்றவாளியாக மாறிய சூழல் உள்ளிட்டவற்றை சோமு அருணாவிடம் பகிர்ந்துகொண்டார். சோமுவின் உள்ளத்திலும் ஈரம் இருப்பதை அருணா உணர்ந்துகொண்டார். மெல்ல இருவருக்குள்ளும் காதல் ‘தீ’ பற்றிக்கொண்டது.

சிறைக் கம்பிகளுக்கு பின்னாலே இவர்களின் காதல் வளர்ந்தது. இந்த நிலையில், சோமசுந்தரம் – அருணா இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அருணா தனது முடிவை பெற்றோரிடம் தெரிவித்தார். முதலில், பெற்றோர் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டனர். இருவீட்டாரும இறுதியில் ஒப்புக்கொண்டனர். வருங்கால கணவரை கரம்பிடிக்க, அவரை பரோலில் விடுவிக்க கோர்ட்டு உதவியை நாடினார் அருணா. மனுவை விசாரித்த நீதிபதிகள், சோமசுந்தரத்தின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு, அவருக்கு 10 நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து வியாசர்பாடியில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் மத்தியில் இருவரது திருமணம் நடைபெற்றது.  சோமசுந்தரத்தின் விடுமுறை, பிப்ரவரி 10 மாலை 7 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர், மனைவியை பிரிந்து அவர் மீண்டும் சிறை செல்ல உள்ளார். இன்னும் 2½ ஆண்டுகளில் சோமசுந்தரம் விடுதலை ஆகிவிடுவார் என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பின்னர், இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்க உள்ளனர். (திருமணம் முடிந்து 10 நாட்களில் மனைவியை பிரிந்து மீண்டும் சிறை செல்லவிருக்கும் சோமு, தான் செய்த தவறுகளுக்கு இதற்கு முன்பு எந்தளவு வருந்தினாரோ தெரியாது… தற்போது இந்த பிரிவினால் வருந்துவார் என்பது உண்மை. அதுவே மிகப் பெரிய ஒரு தண்டனை தான்.)

இரட்டை ஆயுள் தண்டனை கைதி ஒருவர் மீது ஒரு பெண்ணுக்கு காதல் வந்து அவரை கரம்பிடிப்பது என்பது எப்படி பார்த்தாலும் நம்பமுடியாத ஒன்று. இதே சம்பவம் ஒரு திரைப்படத்தில் வந்திருந்தால் கூட நம்பமுடியாததாகத் தான் இருந்திருக்கும்.

பின்னர் எப்படி இது சாத்தியமாயிற்று?

நிச்சயம் அது வாழ்க்கை குறித்த சோமுவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் தான். சிறைச்சாலை ஒரு போதிமரம். அடிதடி, வெட்டு. குத்து என்று வாழ்ந்து வந்த சோமசுந்தரத்துக்கு நிச்சயம் சிறை தண்டனை மனமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது அல்லவா? கடந்த காலத்தை நினைத்து வருந்திக்கொண்டிராமல் சிறைச்சாலையில் தியானம், யோகா வகுப்பு, உடற்பயிற்சி, என்று ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனத்தை செலுத்தியமையால், அவருக்கு இது சாத்தியமாயிற்று.

சோமு செய்த தவறுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. அவரும் அதை சட்டப்பூர்வமாக அனுபவித்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்துவிடுவார்.

நீங்களோ நாமோ மாறுவது என்பது ஒரு விஷயம் இல்லை. ஏனெனில் மாறினால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிற ஸ்கோப் நமக்கு இருக்கிறது. ஆனால் வாழ்க்கையே முடிந்துவிட்டது… இனி மாறி யாருக்கு என்ன பயன் என்ற நிலையில் இருக்கும் ஒருவரின் மனமாற்றம் சாதாரண விஷயமா?

எல்லோரையும் வியக்க வைத்திருக்கும் சோமசுந்தரத்தின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த இந்த திருப்பம் உணர்த்துவது இரண்டு விஷயங்கள்.

வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் (உண்மையில்) காண விரும்புவோர் எதிர்மறை சிந்தனைகளை விடுத்து தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்.

நேர்மறையான சிந்தனையும் திருந்திய வாழ்க்கையும் பட்டுப்போகவிருந்த ஒருவரின் வாழ்க்கையில் விளகேற்றி வைத்துள்ள அதே நேரம் கூடா சகவாசத்தாலும் குடிப்பழக்கத்தாலும் துவங்கவிருந்த ஒருவர் வாழ்க்கை முடிந்து போன கதையை பார்ப்போம்.

போதையில் சுருண்ட மணமகன் – வேறொருவரை கரம்பிடித்த மணமகள்!

மேட்டூர், கட்டபொம்மன் நகரை சேர்ந்த மின் ஊழியர் மோகன் மகள் ரேவதி. எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த குப்பன் மகன் விஜயரத்னம், 27, என்பவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

மேட்டூர், ஒர்க்ஷாப் கார்னர் மண்டபத்தில், குறிப்பிட்ட முகூர்த்த நாளன்று விஜய்ரத்தினத்துக்கும், ரேவதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மணமகளும் மண்டபத்தில் திருமணத்துக்கு தயாராக இருந்தார்.

Girl stops marriage drunkard groom_2திருமணத்துக்கு முதல்நாள் இரவு, மணமகன் விஜய்ரத்னம் நண்பர்களுடன் மது அருந்தினார். நண்பர்கள் ஏதோ ஏற்றிவிட உச்சகட்ட போதையில் மோகன் குடும்பத்தினரிடம் சென்று தகராறு செய்துள்ளார். காலை, திருமணத்துக்கும் வரவில்லை. முதல் நாளில் கழுத்து வரைக்கும் குடித்திருந்ததால் அவரால் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை. மயக்கமாகிக் கிடந்தார். இதனால் முகூர்த்த நேரம் தாண்டியும் மாப்பிள்ளை மணமேடைக்கு வரவில்லை.

விஷயமறிந்த மணமகள், இப்படி ஒரு பொறுப்பற்ற குடிகாரரை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். மோகனின் உறவினர்கள், திருமணத்திற்கு வந்துள்ள உறவுப் பையன் யாரையாவது பேசி உடனடியாக ரேவதிக்குத் திருமணத்தை நடத்தி விடலாமே என்று யோசித்துள்ளனர். ரேவதியும், குடிகார மாப்பிள்ளை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தபடியால் அங்கேயே தேடிப் பார்த்ததில் அவர்களது உறவினரின் மகன் சுகுமாரன் என்பவர் கிடைத்தார். உடனடியாக அவருக்கும், ரேவதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்து மணமகள் வீட்டார் மகிழ்ச்சியுடன் செல்ல, குடிப்பழக்கத்தால் திருமண வாழ்க்கையை இழந்த விஜயரத்தினத்தின் குடும்பத்தார் அவமானத்தால் கூனி குறுகி நின்றனர்.

இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் இரண்டு.

1) கூடா நட்பு கேடாய் முடியும்.

2) ஒரு நொடியில் தலைகீழாக மாறக்கூடியது மனித வாழ்க்கை. ஆணவம் அழிவைத் தரும். தீயதை மனதால் கூட நினைக்கக்கூடாது.

நம்மை பொருத்தவரை நாம் நம்புவது: ஒரு பேராபத்திலிருந்து காத்து நல்லதொரு வாழ்க்கையை உடனடியாக மணமகள் ரேவதிக்கு ஏற்படுத்தி தந்தது அவர் வணங்கும் தெய்வமே என்றால் மிகையாகாது. எந்த கோவிலுக்கு சென்று எங்கு விளக்கேற்றி வந்தாரோ…!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

====================================================================

சிறைத்தண்டனை பெற்றாலும் நல்ல பழக்கங்களாலும் நல்ல சிந்தனையாலும் முடியவிருந்த ஒருவரின் வாழ்க்கை தொடங்கியிருக்கிறது. தீயபழக்கங்களாலும் தீயோரின் சகவாசத்தாலும் துவங்கவிருந்த வாழ்க்கை ஒருவருக்கு முடிந்து போனது.

நல்லதை விதைத்தால் நிச்சயம் இந்த பிரபஞ்சம் நமக்கு நல்லதை வட்டியும் முதலுமாக திருப்பித்தரும்.

முடிவுற்ற  இடத்தில் ஒருவர் வாழ்க்கை துவங்கியதும், துவங்கவேண்டிய இடத்தில் ஒருவர் வாழ்க்கை முடிந்ததும் இதைத் தான் காட்டுகிறது!

====================================================================

[END]

7 thoughts on “முடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு!

  1. டியர் சுந்தர்ஜி

    ரேவதி, தான் செய்த புண்ணியத்தால் குடிகார மா ப்பிள்ளை இடமிருந்து தப்பித்து உறவினரை கரம் பிடித்துள்ளார். இல்லாவிட்டால் லைப் லாங் கஷ்ட படவேண்டியதுதான்.

    என்ன தான் தவறு செய்தாலும் சோமசுந்தரத்தின் மன மாற்றத்தால் அவருக்கு ஒரு நல்ல வாழ்கை கிடைத்தது

    //நல்லதை விதைத்தால் நிச்சயம் இந்த பிரபஞ்சம் நமக்கு நல்லதை வட்டியும் முதலுமாக திருப்பித்தரும்

    முடிவுற்ற இடத்தில் ஒருவர் வாழ்க்கை துவங்கியதும், துவங்கவேண்டிய இடத்தில் ஒருவர் வாழ்க்கை முடிந்ததும் இதைத் தான் காட்டுகிறது!//

    நன்றி
    உமா

  2. சுந்தர் சார் வணக்கம் …முடிய வேண்டிய இடத்தில் ஒரு துவக்கம் துவங்க வேண்டிய இடத்தில் ஒரு முடிவு… நல்லதை விதைத்தால் நல்லதை திரும்ப பெறுவாய் மிக அருமையான பதிவு ….. நன்றி தனலட்சுமி ……

  3. வணக்கம் சுந்தர் சார்

    எதை விதைக்கிறோமா அதை மட்டுமே அறுவடை செய்ய முடியும்…

    நன்றி

  4. இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் இரண்டு.

    1) கூடா நட்பு கேடாய் முடியும்.

    2) ஒரு நொடியில் தலைகீழாக மாறக்கூடியது மனித வாழ்க்கை. ஆணவம் அழிவைத் தரும். தீயதை மனதால் கூட நினைக்கக்கூடாது.

  5. தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயீனும் அஞ்சப் படும் – Kural

    இது தீ பறக்கும் திருக்குறள்

  6. நல்ல கருத்து. அருமையான பதிவு ..நன்றிகள்.

    நல்லதை விதைத்தால் நல்லதே விளையும். விதய்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை…

    ஒரு நொடியில் முற்றிலும் மாறக்கூடியது மனித வாழ்க்கை… அற்புதம்..

  7. சுந்தர் சார்,

    மிக அருமையான தலைப்பு அதில் ஆழ்ந்த கருத்துள்ள சம்பவத்தை மிக எளிதாக பதிவில் கொடுத்துள்ளீர்கள்.

    நன்றியுடன் அருண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *