Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

print
“இன்னாருக்கு தான் கேன்சர் வரும்” என்று கூற முடியாதபடி, எவருக்கு வேண்டுமானாலும் இன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய் சர்வசாதாரணமாக வருகிறது. நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்புக்கு இதுவரை வந்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை புற்றுநோய் பாதிப்பு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளே. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் நிச்சயம் வரும் என்றாலும் அவற்றை பயன்படுத்தாதவர்களுக்கு அது வரவே வராது என்று கூறமுடியாது. காரணம்… மாறிவிட்ட உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள்.

உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானதாக விளங்குவது கேன்சர். கேன்சரால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிப்ரவரி 4ம் தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுரையீரல், மார்பகம், தோல், வயிறு, நாக்கு, தொண்டை கேன்சர் என பல வகைகள் உள்ளன. கேன்சர், உடலின் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவுகிறது. இதை கட்டுப்படுத்த முடியாதாதல், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கேன்சரால் ஆண்டுதோறும் 76 லட்சம் பேர் இறக்கின்றனர். இது உலகில், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்பில் 13 சதவீதம். துவக்கத்திலேயே முறையான சிகிச்சை மேறகொண்டால், 40 சதவீதத்தை தடுக்க முடியும். இதில் மார்பக கேன்சர், குடல் மற்றும் தொண்டை கேன்சர் ஆகியவையும் அடங்கும். அனைத்து நாடுகளும் கேன்சரை கட்டுப்படுத்துவற்கு 4 முறைகளை கடைபிடிக்க வேண்டும். முன்னரே தடுப்பது, ஆரம்பக்கட்டத்திலயே தடுப்பது, பரிசோதனை மற்றும் சிகிச்சை, நோய் தணிப்பு ஆகியவை மூலம் கேன்சரை வராமல் தடுக்கவும் முடியும்.

புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது ?

செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் ஏற்படுவது புற்றுநோய். நமது உடல் முழுவதும் செல்களால் ஆனது. இவை வளர்ந்து, பிரிந்து உடலை ஆரோக்கியமாக மாற்றத் தேவையான பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில் தேவையற்ற பல புதிய செல்கள் உருவாதல் மற்றும் பழைய செல்கள் இறக்காமல் உயிரோடு இருத்தல் போன்ற மாற்றம் உடலில் ஏற்படுகிறது. இதுவே புற்றுநோய்க்கு காரணம்.

cancer18

புற்றுநோய், கொடிய நோய் என்றாலும் குணப்படுத்த கூடியதே; ஆனால், அதற்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் வேதனையான விஷயம் என்கிறார், கோவை டாக்டர் குகன். தன்னம்பிக்கை இருந்தால் போதும், புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம் என்கிறார், ஒரு நோயாளி.

இந்தியாவில், வரும் 2020ம் ஆண்டில், ஒன்பது முதல் பத்து லட்சம் பேர் வரை, புற்றுநோயால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. விபத்து, மாரடைப்பில் இறப்போர் எண்ணிக்கை தான் அதிகம். இதற்கு அடுத்த இடத்தில், புற்றுநோயால் இறப்போர் எண்ணிக்கை இடம் பிடித்து விடும் என எச்சரிக்கிறது, உலக சுகாதார அமைப்பு.

இதுகுறித்து, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் குகன் கூறியதாவது: உணவு பழக்க வழக்கங்களால் வருவது ஐம்பது சதவீத புற்றுநோய். புகையிலை எந்த வடிவத்தில் இருந்தாலும், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

Cancer causing and cancer fighting foods

மாறி வரும் உணவுப் பழக்க வழக்கம், அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உணவு பதார்த்தங்களை சேமித்து வைப்பதால், அதில் ஒருவித ரசாயனம் படிந்துவிடுகிறது. இந்த உணவை உட்கொள்வதாலும், புற்றுநோய் வரும் வாய்ப்புண்டு. எண்ணையில் பொரித்த உணவு வகைகள், கோழிக்கறி, பீட்ஸா, பர்கர், கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்கள், மசாலா சேர்க்கப்பட்ட அசைவ உணவு வகைகளும், புற்றுநோயை உண்டாக்கும். இது உணவுக்குழாயை பாதித்து, புற்றுநோய் உருவாக்கும். உணவு பழக்க வழக்கத்தை மாற்றினால், இத்தகைய புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்ததால், அதில் ரேடியேசன் தாக்குதலுக்கு உள்ளாகி, புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர், கோவையை சேர்ந்த தேவதாஸ். இவர் கூறியதாவது: புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தமுடியும். தன்னம்பிக்கை வேண்டும். டாக்டர்களின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். வேகவைத்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். மது, சிகரெட் போன்றவற்றை விட வேண்டும். எளிதான உடற்பயிற்சி, சந்தோஷமான விஷயங்களை பகிர்தல், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துதல் போன்றவையே நோயை துரத்திவிடும். புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது என்ற விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.இவ்வாறு, தேவதாஸ் கூறினார்.

Cancer factors

புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்!

மருத்துவர் கு.சிவராமன் கூறும்போது : ”இன்னாருக்குத்தான் புற்றுநோய் வரும் என்ற கணக்குகள் பொய்யாகும் காலம் இது. பரம்பரையில் யாருக்கும் இல்லை. புகை, மது போன்ற தீய பழக்கங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒருவருக்குப் புற்றுநோய் வருகிறது. காரணம், நாம் வாழும் சூழல். இன்றைக்கு மனிதர்களைத் தாக்கும் பெரும்பான்மையான புற்றுநோய்க்குக் காரணம், பிளாஸ்டிக். பிளாஸ்டிக் மூலம் புற்றுநோய் வரும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த உலகமே ஒரு நோய்க்கிடங்காக மாறிவருவதற்கு பிளாஸ்டிக்தான் காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

பொதுவாக, வெப்ப நிலை 100 டிகிரிக்கு மேல் போனாலோ, 15 டிகிரிக் குக் கீழ் போனாலோ பிளாஸ்டிக்கில் இருந்து டை-ஆக்ஸின் என்ற வேதிப் பொருள் வெளியேறும். இது புற்றுநோயை உண்டாக்கும் ஓர் ஆபத்தான வேதிப்பொருள்.

நமது உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் வேதிப் பொருட்கள் இன்னும் ஓர் எமன். அது கீரையோ, முள்ளங்கியோ, முட்டைக்கோஸோ… எதுவாயினும் நமது காய்கறிகளில் அளவுக்கு அதிகமாகப் பூச்சிமருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உண்ணும்போது புற்றுநோய்க்கான வாய்ப்பு கூடுதலாகிறது. பிராய்லர் கோழியையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். சதை அதிகமாக வளர்ந்து சீக்கிரமே எடை பிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கோழிகள் மனித இனத்தின் பேரபாயம்.

ஏன் புற்றுநோய்?

கேன்சருக்கு முதல் எதிரியே புகையிலை தான். வாய் மற்றும் தொண்டை கேன்சர் ஏற்பட இதுவே காரணம். இந்தியாவில், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. என்னதான், சிகரெட் அட்டையில் எச்சரிக்கை படம் ஒட்டப்பட்டிருந்தாலும், அது யாரையும் திருத்துவதாக தெரியவில்லை. பல இளைஞர்கள் புகைப்பதை, ஒரு “ஸ்டைலாக’ நினைத்து பாதிப்புக்குள்ளாகின்றனர்.

Healthy Life

எப்படி தடுப்பது?

ஆல்கஹால், புகையிலை பயன்படுத்துவதை அறவே ஒழிக்க வேண்டும். சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி அவசியம். சீரான உடல் எடையை கடைபிடிக்க வேண்டும். தூசியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் விறகு உள்ளிட்ட திடப்பொருள்களை பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் புகையிலிருந்து பாதுகாப்பது அவசியம்.

இவற்றைவிட மருத்துவர் சிவராமன் சொல்லும் ஒரு விஷயம் முக்கியமானது. ”மனிதர்களின் வாழ்வில் 35-45 வயது முக்கியமானது. அதுவரை ஓடியாடி வேலை பார்த்திருப்போம். வாழ்க்கைபற்றிய அபரிமிதமான கற்பனைகளும் கனவுகளும் வடிந்து ‘யதார்த்தம் இதுதான்; இப்படித்தான் நம் வாழ்க்கை இருக்கப்போகிறது’ என்பது புரிந்திருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் இந்த வயதில் உள்ளவர்கள் நிம்மதி இழந்துள்ளனர். ஏராளமான கடன்கள், தவணைகள், அலுவலக நெருக்கடிகள், குடும்ப உறவுச் சிக்கல்கள் என மன அழுத்தத்தில் இருக் கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

மனதின் அடி ஆழத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதுதான் கேன்சர் உள்ளிட்ட  அனைத்து நோய்களையும் தடுப்பதற்கான மருந்து. பலர், கார் வாங்கினால், ஐபோன் வாங்கினால் அது மகிழ்ச்சி என்று நினைக்கிறார்கள். வாரக் கடைசியில், மது பாட்டில்களில் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர். அது செயற்கையான மகிழ்ச்சி, ஒரு டெலி காலர் உங்களிடம் சிரித்துப் பேசுவதைப் போல. அதுவும் சிரிப்புதான். ஆனால், உணர்ச்சியற்ற சிரிப்பு. மாறாக, மகிழ்ச்சி என்பது இயற்கையைச் சிதைக்காமல் வாழ்வது. அடுத்தவர்களுக்கு உதவிசெய்து வாழ்வது. அடிமையைப் போல உழைக்காமல் சுதந்திரத்துடன் சிந்திப்பது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களோடு இருப்பது. கள்ளம் கபட மற்று இருப்பது. மற்றபடி, மகிழ்ச்சிக்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை!’

”சோதனை அவசியம்!”

மருத்துவர் அய்யப்பன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர், மெட்ராஸ் கேன்சர் கேர் பவுண்டேஷன்:

”மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலந்தோறும் புற்றுநோயாளிகள் உருவாகிக்கொண்டுதான் உள்ளனர். இப்போது மக்களிடையே விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் பெரும்பாலான புற்று நோய்களைக் குணமாக்கிவிட முடியும் என்பதுடன் சிகிச்சைக்கான செலவும் குறையும். இதற்கு, 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் உடம்பில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக உணர்ந் தால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் ஊரில், ‘நாங்கள்லாம் ஆஸ்பத்திரிக்கே போக மாட்டோம்’ என உடல்நலம் மீது அக்கறையின்றி இருப்பதை ஏதோ குடும்பக் கௌரவம் போலச் சொல்கிறார்கள். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழல் காரணமாக நோய்கள் பெருகிவிட்ட நிலையில், முன்கூட்டியே சோதனை செய்துகொள்ள வேண்டும். மனித உடம்பு எந்த நோயாக இருந்தாலும், உணர்ந்துகொள்ளும் வகையில் ஓர் அறிகுறியைக் காட்டத்தான் செய்கிறது. அதை நாம் சரியாக இனம் காண வேண்டும்!”

செக் லிஸ்ட்!

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது ‘நமக்கும் புற்றுநோய் இருக்குமோ?’ எனச் சந்தேகம் வரலாம். கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

*அளவுக்கு அதிகமான உடல் சோர்வு. *எதிர்பாராத இடங்களில் கட்டிவருவது. அது நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால், உடனே பார்க்க வேண்டும். *நீண்ட காலமாக மது, புகை, புகையிலை பழக்கம் இருந்தால், வாய்ப்பு அதிகம்.  *நாள்பட்ட நோய்கள் இருந்தால், புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். *பாரம்பரியமாக உங்கள் பெற்றோருக்கோ, தாத்தா, பாட்டிக்கோ இருந்தால், எச்சரிக்கை அவசியம்!

நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால், நோய்களை விரட்டுவது சாத்தியமே…!

புற்று நோய் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சாப்பிட வேண்டியவை..

காளான், திராட்சை, ஆரஞ்சு மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள், பூண்டு, முட்டைகோஸ், காலிபிளவர், தக்காளி, கிரீன் டீயும் பருகலாம். இவற்றில் வைட்டமின் சியும் ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் தன்மையும், பீட்டா கரோடின் மற்றும் ஃபோலிக் அமிலங்களும் உள்ளதால் அவை புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு அதன் வீரியத்தை குறைத்துவிடும்.

தவிர்க்க வேண்டியவை…..

ஊறுகாய், வெள்ளை ரொட்டி, அரிசிச் சோறு, சோடா மற்றும் குளிர்பானங்கள், எண்ணெயில் பொறித்த மைதா- கடலை மாவு பண்டங்கள், சிகப்பு மாமிசம் மற்றும்  எண்ணெயில் சிப்ஸ வகைகள் ஆகியன. இந்த உணவுகளில் புற்றுநோயை அதிகரிக்கும் வீரியம் அதிகம். அதிக சர்க்கரை, கொழுப்பு, அமிலங்கள் கொண்டவை இவை. ஆகவே தவிர்ப்பது மிக மிக நல்லது.

Think positivelyஎப்படித் தான் வாழ்வது ?

எந்நாளிலும் எந்த சூழ்நிலையிலும் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற பேருண்மையை புரிந்துகொண்டு, உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு இயற்கை சார்ந்த உணவு முறைகளை கையாண்டு, எளிய உடற்பயிற்சிகள் தினசரி செய்து மனதை மகிழ்ச்சியுடனும் பரோபகார சிந்தனையுடனும் வைத்திருந்தால் எந்த நோயும் அண்டாது.

இந்த பதிவில் கூறியுள்ளபடி உங்கள் உணவு முறைகள் மற்றும் இதர பழக்கவழக்கங்கள் மாறவேண்டும். குறைந்த பட்சம் அதற்கான முயற்சியை செய்யுங்கள். நாம் தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ள உணவு வகைகளை ஒருபோதும் தொடாதீர்கள். உங்களுடன் சேர்ந்து நாமும் இந்த மாற்றத்தை துவக்குகிறோம் என்று உறுதி கூறுகிறோம்.

இந்த உடலானது இறைவன் கொடுத்த பரிசு. நமது மருத்துவமோ அறிவியலோ ஒருபோதும் இதை ஈடு செய்ய முடியாது. ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரும், இறைவன் கொடுத்துள்ள இந்த பரிசை பேணி பாதுகாத்து நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துக்கிறோம்!

(ஆக்கத்தில் உதவி : தினமலர், ஆனந்த விகடன் 26 Jun, 2013)

END

15 thoughts on “புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

  1. டியர் சுந்தர்ஜி

    மிக நீண்ட பயனுள்ள பதிவு. எல்லோரும் படித்து பயன் பெற வேண்டும்.

    மருத்துவர் கு.சிவராமன் கூறியது 100% உண்மை

    //இன்னாருக்குத்தான் புற்றுநோய் வரும் என்ற கணக்குகள் பொய்யாகும் காலம் இது. பரம்பரையில் யாருக்கும் இல்லை. புகை, மது போன்ற தீய பழக்கங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒருவருக்குப் புற்றுநோய் வருகிறது. காரணம், நாம் வாழும் சூழல். இன்றைக்கு மனிதர்களைத் தாக்கும் பெரும்பான்மையான புற்றுநோய்க்குக் காரணம், பிளாஸ்டிக். பிளாஸ்டிக் மூலம் புற்றுநோய் வரும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த உலகமே ஒரு நோய்க்கிடங்காக மாறிவருவதற்கு பிளாஸ்டிக்தான் காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.//

    அதற்கு கீழ்க்கண்ட சான்றே உதாரணம்

    நாமும் நம் உணவு பழக்க வழக்கங்களை மாற்றினால் புற்று நோயிலிருந்து தப்பிக்கலாம். பொதுவாக பிளாஸ்டிக் பொருட்களை avoid பண்ணலாம். இன்றைய பேப்பரில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை தின்ற யானை இறந்து விட்டது என்ற செய்தி வந்திருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்கள் போட்ட பிளாஸ்டிக் பொருகளை 40 வயது பெண் யானை சாப்பிட்டு இறந்திருக்கிறது என்பது டாக்டர்களின் ஆய்வின் மூலம் தெரிய வந்தது. இது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி.

    //இன்றைக்கு மனிதர்களைத் தாக்கும் பெரும்பான்மையான புற்றுநோய்க்குக் காரணம், பிளாஸ்டிக். பிளாஸ்டிக் மூலம் புற்றுநோய் வரும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த உலகமே ஒரு நோய்க்கிடங்காக மாறிவருவதற்கு பிளாஸ்டிக்தான் காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்//

    புற்று நோயை பற்றிய awareness மக்களிடம் வரவேண்டும். புகையிலை மற்றும் மது போன்ற போதை பொருட்களை அறவே விடவேண்டும்.

    தங்கள் பதிவிற்கு நன்றி

    உமா

  2. சுந்தர் சார் வணக்கம் ……….. எல்லோருக்கும் பயனுள்ள தகவல் ….புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும் …..மருத்துவர் சிவராமன் சார் கூறியது உண்மை …….தங்கள் பதிவுக்கு நன்றி ……தனலட்சுமி

  3. சுந்தர் சார்,
    மிகவும் பயனுள்ள செய்தி.
    நன்றியுடன் அருண்

  4. மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. இதில் மிகமுக்கியமாக மருத்துவர் சிவராமன் அவர்கள் கூறியிருக்கும் வாழ்க்கை முறை – வேதவாக்கு. யார் என்ன சொன்னால் என்ன, நான் என் இஷ்டப்படி இருப்பேன் என்று இருந்தால், புற்றுநோயும் தன இஷ்டப்படி நம்மை பிடிக்கும். உணவே மருந்து – சான்றோர் வாக்கு என்றும் நிலைக்கும்.

  5. Timely article for upcoming generations. I know about this omen disease. Let us eliminate this disease from this world as soon as possible. It’s possible.

  6. தங்களுடைய தொகுப்புக்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளது.

  7. தங்களுடைய தொகுப்புக்கள் யாவும் மிகவும் நன்றாக உள்ளது

  8. அருமை நண்பா கேன்சர் உள்ளத என அறிவதற்கு இலவச மையம் எதாவது உள்ளத என தெரிவிக்க
    வேண்டும் .

    1. கட்டுபாடற்ற செல்களின் பெருக்கமே புற்றுநோய். அது எங்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.

    1. கட்டுபாடற்ற செல்களின் பெருக்கமே புற்றுநோய். அது எங்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *