Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > அன்னதானம் என்கிற அருந்தவம்!

அன்னதானம் என்கிற அருந்தவம்!

print
புத்தாண்டை முன்னிட்டு நமது தளம் சார்பாக ஜனவரி 1 அன்று பல்வேறு அறப்பணிகள், ஆலய தரிசனம், அன்ன தானம் உள்ளிட்டவை நடைபெற்றன. அன்று ஹனுமத் ஜெயந்தி என்பதால் அனுமனுக்கு சிறப்பு அர்ச்சனையும் வெண்ணைக் காப்பும் சார்த்தப்பட்டது. இந்த நிகழ்வுகளை ஒரே பதிவாக எழுதி வருகிறோம். ஆகையால் சற்று நேரம் பிடிக்கிறது. இடையே வேறு சில பதிவுகளும் எழுத வேண்டியுள்ளது. கிடைக்கும் நேரமோ மிகவும் குறைவு. எனவே தான் சற்று தாமதமாகிறது. அனுபவத்திற்காக இல்லையென்றாலும் புகைப்படங்களுக்காகவேனும் அந்த பதிவை நிச்சயம் அளிக்கவேண்டும் என்று கருதுகிறோம். அந்த அளவு மப்பேடு, பேரம்பாக்கம் ஆகிய ஊர்களின் அழகை படம்பிடித்து வந்துள்ளோம். எத்தனை சீக்கிரம் அளிக்க முடியுமோ அத்தனை சீக்கிரம் புத்தாண்டு பதிவை அளிக்க முயற்சிக்கிறோம். நன்றி.

இதனிடையே…. பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் நம் தளம் சார்பாக அன்னதானம் நடைபெற்றுவருவது நீங்கள் அறிந்ததே. எனவே இந்த பொங்கலுக்கு வழக்கமாக நாம் மேற்கொள்ளும் திருப்பணிகள் மற்றும் சமூக பணிகளுடன் சேர்த்து அன்னதானமும் நடைபெற்றது. (கடைசி நேரம் சில வாசகர்கள் நம் தளத்தின் அக்கவுண்ட்டில் பணம் போட்டமையால் திட்டமிட்டபடி ஓரளவு சமாளிக்க முடிந்தது.)

இதன் தாத்பரியம் என்னவெனில், பண்டிகை காலங்களில் நாம் வடை, பாயசத்துடன் சாப்பிடுவது போல, அப்படி சாப்பிட வழியில்லாமல் இருப்பவர்களுக்கு அதே போன்று வடை பாயசத்துடன் அன்னதானம் செய்யவேண்டும் என்பது தான்.

பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்வதைவிட, உங்களால் நான்கு பேர் பசியாறினால் அதுவே மிகப் பெரிய பகவத் சேவை தான்.

எனவே பொங்கலுக்கு அடுத்த நாள், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு (மாட்டுப் பொங்கல் அன்று) நம் தளத்தின் சார்பாக கே.கே. நகர் சக்தி விநாயகர் கோவிலில் வடை, பாயசத்துடன் அன்னதானம் செய்ய பணம் கட்டியிருந்தோம். (நமது ஆண்டுவிழாவும், பாரதி விழாவும் நடைபெற்ற அதே இடம்! டிசம்பர் 11 அன்று பாரதி பிறந்த நாளை முன்னிட்டு இங்கு அன்னதானம் செய்ததும் அது தொடர்பான பதிவு ஒன்றை அளித்ததும் நினைவிருக்கலாம்)

விடுமுறை நாளில் வெளியே செல்லும் வேலை ஏதேனும் இருந்தால் ஒன்று காலை அல்லது மாலை வைத்துகொள்வது நம் வழக்கம். நடுவே வைத்துக்கொண்டால் ஒரு நாள் முழுவதையும் அது விழுங்கிவிடும். அதிலும் நம் வீடு அமைந்திருப்பது நகருக்கு வெளியே. சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இது அன்னதானமாயிற்றே. நம் சௌகரியப்படியெல்லாம் வைத்துக்கொள்ள முடியாதே. அவர்கள் குறிப்பிடும் நேரம் நாம் அங்கு இருக்கவேண்டும்.

சரியாக திருவள்ளுவர் தினமான ஜனவரி 15 புதன்கிழமை அன்று 12.00 மணிக்கு நம்மை வருமாறு என்று ஆலயத்தில் கூறியிருந்தார்கள்.

DSCN0366

பசியோடு வருபவர்கள் நமக்காக காத்திருக்கக்கூடாது என்பதால் நாம் ஒரு பத்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டோம். நண்பர்கள் ஒருசிலரை, விஷயத்தை கூறி வருமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்களால் வர முடியாத சூழ்நிலை. கடைசியில் நாம் மட்டும் தான் சென்றோம்.

ஆலய அலுவலகத்தில் நம்மிடம், சாப்பாடு தயாராகிக்கொண்டிருக்கிறது என்றும், இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும் என்றும் அதற்குள் எல்லாருக்கும் இலையெல்லாம் போட்டு, தண்ணீர் வைத்துவிட்டு தயாராக இருக்குமாறும் கூறினார்கள்.

அதன்படி இலை போடப்பட்டு தண்ணீர் வைக்கப்பட்டது. இந்த இடைவெளியில் நாம் இவர்களிடம் பேசிவிடுவோம் என்று அனைவருக்கும் வணக்கம் கூறி… அவர்கள் மத்தியில் பேச ஆரம்பித்தோம்.

DSCN0369

“சாப்பாடு ரெடியாக ஒரு பத்து நிமிஷம் ஆகும்னு சொல்றாங்க. அதுக்குள்ளே உங்க கிட்டே சில விஷயங்களை பேசிவிடுகிறேன். பேசலாமா….??”

“சாப்பாடு நான் இங்கே வரலேன்னாலும் போடுவாங்க. ஆனா நான் வந்தது உங்க கிட்டே பேசணும், உங்க கூட கொஞ்ச நேரம் செலவு பண்ணனும்னு தான்!”

“பேசுங்க…சார்… நீங்க பேசுங்க…” என்றார்கள் அமர்ந்திருந்தவர்கள்.

“இன்னைக்கு உங்களுக்கு வடை பாயசத்தோட சாப்பாடு. காரணம் தெரியுமா? இன்னைக்கு என்ன விசேஷம்… அதாவது இன்னைக்கு என்ன நாள்?” நம் கேள்வியை வீசினோம்.

கூட்டத்தில் ஒரு கணம் மௌனம்.

ஓரிருவர், “இன்னைக்கு மாட்டுப் பொங்கல்” என்றனர்.

“அதைவிட வேற ஒரு விசேஷம் இருக்கு. என்னன்னு தெரியுமா?”

ஒருவர் மட்டும், “இன்னைக்கு திருவள்ளுவர் திருநாள்” என்றார்.

“ஆம்… கரெக்ட். இன்னைக்கு திருவள்ளுவர் திருநாள். அதனால தான் உங்களுக்கு அப்பளம், வடை பாயசத்தோட அன்னதானம் நடக்குது!”

“அன்னதானத்தோட பெருமையை திருவள்ளுவர் போல சொன்னவங்க வேற யாருமில்லே……..” பேசிக்கொண்டே இருந்த நாம் சற்று நிறுத்தினோம்.

நாம பேசுறதை இவங்க ஆர்வமா கேக்குறாங்களா… இல்லே வேற வழியில்லாம கேக்குறாங்களா….? திடீர் சந்தேகம் ஏறபட்டது நமக்கு.

“நான் பேசலாமா? பேசுறதை கேக்குறீங்களா? சாப்பாடு ரெடியாகி வர்ற வரைக்கும் உங்ககிட்டே பேசிகிட்டுருக்கலாமேன்னு தான்…”

“சார்… நீங்க பேசுங்க சார்… நீங்க பேசுங்க…” என்றார்கள் கோரஸாக.

ஒரு முதியவர் நம்மை பார்த்து…. “யார் தம்பி எங்கிகிட்டே இதெல்லாம் பேசப்போறாங்க…? நீங்க பேசுங்க” அவரது வார்த்தையை கேட்ட பிறகு தான் நாம் தொடர்ந்தோம்.

“பணத்தை பொதுவா சேர்த்து வைக்கிற இடம் எது? உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன் பார்க்கலாம்…”

“பேங்க்”……. “பீரோ” ……… “சீட்டு” ……… “தங்கம்” ……… “நிலம்” – ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றியதை சொன்னார்கள்.

இதெல்லாம் பாதுகாப்பான முதலீடு என்று நினைத்துவிட்டார்கள் போல.

“ஆனால்… வள்ளுவர் என்ன சொல்றாரு தெரியுமா???? “பணத்தை சேர்த்து வைக்கும் இடம் ஏழைகளின் வயிறு!!!!!” என்கிறார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

அப்படின்னு சொல்றார் வள்ளுவர்.

இதோட அர்த்தம் என்ன தெரியுமா?

ஏழைகளின் பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

DSCN0372

நீங்கள் எல்லாம் வருங்காலத்தில் வாழ்க்கையில் உயர்ந்தால்… நிச்சயம் உயர்வீர்கள்…. அப்படி உயரும்போது, இதே போல பசி என்று வருபவர்களின் பசியை தீர்த்து வைக்கணும். அன்னதானமெல்லாம் செய்யனும். நாங்க இருக்குற நிலைமைக்கு அன்னதானமான்னு கேட்காதீங்க. வாழ்க்கை இப்படியே போகாது. உங்களில் பலர் வாழ்க்கையில் நாளையே உயரலாம். கஷ்டப்படுகிறவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கமாட்டார்கள். இன்று பசியாறும் நீங்கள் நாளை பிறரின் பசியை தீர்த்து வைக்கும் நிலைக்கு உயர்வீர்கள். அப்போது இதே போல நீங்களும் அன்னதானம் செய்யவேண்டும். எத்தனை பேரின் பசியை தீர்த்து வைக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஒருவர் பசியை தீர்த்து வைத்தால் கூட போதும். சரியா…?

அனைவரும் ஆமோதிக்க… பார்க்கவே அத்தனை சந்தோஷமாக இருந்தது.

“தானத்தில் சிறந்தது அன்னதானம்னு சொல்வாங்க. ஏன் தெரியுமா? மனுஷன் எதுகொடுத்தாலும் போதாது இன்னும் வேணும்… இன்னும் வேணும்னு தான் சொல்வான். ஆனால் சாப்பாடு ஒன்னை மட்டும் தான் போதும்னு சொல்வான். சரியா?”

இந்த உலகத்தையே கட்டி ஆண்டாலும் கடைசியில போகும்போது ஒன்னும் கொண்டு போக முடியாது. நம்ம கூட வருவது நாம் சேர்க்கும் புண்ணியம் ஒன்று தான். சுடுக்காட்டுல அண்ணாக்கயிறை கூட உருவிடுவாங்க. என்ன தான் விழுந்து விழுந்து சம்பாதிச்சாலும் கடைசியில கூட வர்றது நாம சேர்க்குற பாவ புண்ணியம் தான். அங்கே (மேலே கை காட்டியபடி) புண்ணியம் தான் ரூபாய் நோட்டு.

DSCN0383

சாதனைக்கு அளவுகோலா பணத்தை நினைக்கக்கூடாது. நம்மால நாலு பேருக்கு நல்லது பண்ண முடிஞ்சா அதைவிட பெரிய சாதனை வேற ஒண்ணுமில்லை.

எனக்கு தெரிந்து ஒரு மிகப் பெரிய பணக்காரர் இங்கே சென்னையில இருக்கிறார். சென்னை நகரில் அவருக்கு நான்கு பெரிய வீடுகள் இருக்கின்றன. ஒரு பென்ஸ் மற்றும் ஒரு பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்ட அரை டஜன் கார்கள், மற்றும் ஊட்டி, கொடைக்காணல் போன்ற இடங்களில் பல எஸ்டேட்டுக்கள் இருக்கின்றன. சொடக்கு போட்டால் வந்து நிற்க நூற்றுக்கணக்கான வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.

ஆனாலும் என்ன பயன்? நினைத்ததை சாப்பிட முடியாத அளவிற்கு அவருக்கு சர்க்கரை நோய் உச்சத்தில்… போதாகுறைக்கு சிறுநீரகம் வேறு பழுதடைந்துள்ளது. பார்த்து பார்த்து ஒரே மகனுக்கு கல்யாணம் செய்துவைத்தார். அவனுக்கோ திருமண வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு, மனைவி அவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட, அவன் புத்தி கலங்கி எங்கோ தெருவில் சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல்.

இப்போ சொல்லுங்க… பணத்துனால என்ன பிரயோஜனம்?

(இதை அனைவரும் மிகவும் உன்னிப்பாக ஆர்வமாக கேட்டார்கள்!)

எனவே வாழும்போதே தான தருமங்கள் செஞ்சி புண்ணியம் சேர்த்துக்கனும். பாவமென்று சொல்பவற்றை மறந்தும் கூட செய்யக்கூடாது.

தானத்தில் சிறந்தது அன்னதானம்னு சொல்வாங்க. அதை வலியுறுத்துறதுக்கு ஒரு கதை கூட சொல்வாங்க….

கர்ணன் எவ்ளோ பெரிய கொடையாளின்னு உங்களுக்கு தெரியும். அவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு போனான். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்பதே யாருக்கும் இருக்காது! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு வந்தார். அவரிடம் தனக்கு பசிக்கும் காரணத்தை கேட்டான்.

DSCN0395நாரதர், “பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள்” என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தவுடன், பசி நீங்குகின்றது.

அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார். அதற்கு, நாரதர் “உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய். ஆனால், அன்னதானம் செய்ததில்லை. அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் ஏன் பசி நீங்குகிறது என்றால உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் ஒரு பிரஜை உன்னிடம் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்று சொன்னாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானம் நடக்கின்ற இடத்தை காட்டியமையால் உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.

அன்னதானம் செய்யாமலேயே, அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.

பேசிக்கொண்டிருக்கும்போதே சாப்பாடு வந்துவிட, அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. சாதம், சாம்பார், ரசம், பொரியல், அப்பளம், மோர், பாயசம், வடை என அனைத்தும் பரிமாறப்பட்டது.

அனைவரும் ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தனர்.

ஒரு பெரியவர் நாம் யார் ? எங்கிருந்து வர்றோம் ? என்று விசாரித்தார். “நீங்க சொன்னதெல்லாம் நல்லா இருந்துச்சு…வயித்துக்கு உணவோட செவிக்கும் கொஞ்சம் உணவு போடுறீங்களே… அதான் கேட்டேன்” என்றார்.

அவரிடம் நமது தளத்தை பற்றி சுருக்கமாக விளக்கினோம்.

“ஓ… ரொம்ப நல்ல விஷயம் ஸார்…!”

DSCN0396

சாப்பிடுபவர்களில் பெரும்பாலானோர் மிகவும் வறுமை நிலையில் இருப்பதையும், இது போன்ற அன்னதானங்களை நம்பித் தான் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது என்பதையும் புரிந்துகொண்டோம்.

இவர்களில் பலர் எந்தவித வேலையும் செய்ய இயலாத ஒரு நிலையில் இருப்பவர்கள். ஒன்று முதுமை அல்லது நோய் – இவை இரண்டில் ஏதாவது ஒன்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது.

ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு சோகம் ஒளிந்திருப்பது அவர்களிடம் பேசும்போது புரிந்தது.

ஒரு பெரியவர், பிள்ளைகள் விரட்டி விட்டுவிட்டதால் வீதிக்கு வந்துவிட்டதாகவும் இது போன்ற கோவில் அன்னதானங்களை நம்பி வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

ஒரு பாட்டியின் கதை கதை மிகவும் சோகமானது.

“என் பிள்ளைகளுக்கு எவ்வளவோ செஞ்சேன். என் நகையெல்லாம் கழட்டிக் கொடுத்தேன். இப்போ என் கையில ஒண்ணுமில்லேன்னு எல்லாரும் சேர்ந்து என்னை விரட்டிவிட்டுடாங்க தம்பி. இந்த வயசான காலத்துல நான் எங்கே போவேன்?” என்றார்.

மற்றொருவர், “என் மருமகன் தினமும் குடிச்சிட்டு வந்து என் பொண்ணையும் குழந்தைகளையும் போட்டு அடிக்கிறான் தம்பி. அதை பார்க்க சகிக்காம வீட்டை விட்டு வந்துட்டேன்” என்றார்.

இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சோகம்.

பாயசம் தயாரானதும் பாயசத்தை கப்பில் ஊற்றி தந்து ஒவ்வொரு இலையாக வைக்கச் சொன்னார்கள். வைத்துக்கொண்டே வந்தோம்.

ஆலய ஊழியர் ஒருவர் நம்மிடம், “சார்… வாசல்ல ஒருத்தர் டிரை சைக்கிள்ல இருக்கார் பாருங்க. அவர்கிட்டே இந்த சாப்பாட்டை கொண்டு போய் கொடுங்க. அவரால உள்ளே வரமுடியாது!” என்று கூறி ஒரு பார்சலை தந்தார்.

உடனே அதை வாங்கிக்கொண்டு வாசலுக்கு ஓடிச்சென்று அவரிடம் கொடுத்தோம்.

“திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்னைக்கு அன்னதானம் சார்…” என்றோம்.

“ரொம்ப நன்றி சார்” என்று கூறி இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டார்.

என்னவோ போலிருந்தது நமக்கு. “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” – ஒரு கணம் பிரார்த்தித்துக்கொண்டோம்.

"ஆதிலட்சுமி!"
“ஆதிலட்சுமி!”

மீண்டும் உள்ளே ஓடிச் சென்று பந்தியை கவனித்தோம். சாம்பார் முடிந்து ரசம் ஆரம்பித்தது. அனைவருக்கும் ரசம் ஊற்றிக்கொண்டே வந்தோம்.

மீண்டும் சாதம் பரிமாறப்பாட்ட பின்பு, மோர் ஊற்றப்பட்டது.

"ரங்கநாயகி"
“ரங்கநாயகி”

ஒரு ரவுண்டு வந்தோம். யாருக்காவது ஏதேனும் தேவைப்படுகிறாதா? பார்த்துக்கொண்டே மூன்றாவது வரிசையில் மூன்று மூதாட்டிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. என்னவோ இவர்களை பார்க்கவே ஒரு வித கடாட்சம் தெரிந்தது. (நீங்களே புகைப்படங்களை பாருங்கள். புரிந்துகொள்வீர்கள்!)

"வள்ளி"
“வள்ளி”

“எப்படி பாட்டி இருக்கு சாப்பாடு?”

“நல்லாருக்கு ராசா!”

அவர்கள் பெயரை கேட்கவேண்டும் என்று தோன்ற, “உங்க பேர் என்ன பாட்டி?”

“ஆதிலட்சுமி!”

“ரங்கநாயகி”

“வள்ளி”

ஒவ்வொருவாராக பெயர்களை கூற… நமக்கு சிலிர்த்துப் போனது.

சாட்சாத் திருமகளும், நிலமகளும் அவர்களின் மகள் வள்ளியுமே வந்து சாப்பிடுவது போல தோன்றியது! (மகாவிஷ்ணுவின் கண்களில் இருந்து தோன்றிய இரு மகள்கள் தான் தெய்வானையும் வள்ளியும் என்பது உங்களுக்கு தெரியுமா?)

முந்தைய யுகங்களில் ஆண்டுக் கணக்கில் அருந்தவம் புரிந்து கடவுளைக் கண்டனர். ஆனால் கலியுகத்தில் மனமுவந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்தாலே போதும். இறைவனை காணலாம். ஏனெனில், கலியுகத்தின் அருந்தவம் அன்னதானமே!

DSCN0392

================================================================
இந்த பதிவை நாம் அளிக்கும் நோக்கமே அன்னதானத்தின் சிறப்பை வலியுறுத்தவும் இவர்களை போன்றவர்களிடம் ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசுவதன் அவசியத்தையும் வலியுறுத்தவும் தான். ஒரு நாள் நீங்களும் இப்படி அன்னதானம் செய்து பாருங்கள். அதைவிட நிம்மதியும் சந்தோஷமும் தரும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

நிச்சயம் நீங்கள் இவர்களின் சிரிப்பில் இறைவனை பார்க்கலாம். கண்களுக்கு புலப்படும் இவர்களிடையே நாம் கடவுளை காணமுடியவில்லையெனில் வேறு எங்கு போய் பார்க்கப்போகிறோம்?

தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களிலும் இந்த நித்திய அன்னதானம் நடைபெறுகிறது. உங்கள் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நீங்களும் ஒரு நாள் உபயம் செய்து, உங்கள் கைகளால் அன்னம் பரிமாறலாம்.  அரசு வழங்கும் அன்னதானத்தில் வடை, பாயசமெல்லாம் கிடையாது. அதை நாம் கூடுதல் பணம் செலுத்தி ஏற்பாடு செய்யவேண்டும். கோவில்களில் விசாரித்தால் அதற்கான வழிமுறைகளை சொல்வார்கள். முடிந்தால் நம்மிடம் ஆலோசிக்கவும்.

நன்றி!
================================================================
Also check :
வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!
================================================================

[END]

13 thoughts on “அன்னதானம் என்கிற அருந்தவம்!

  1. சகோதரா சுந்தர்
    கண்ணில் வழியும் கண்ணீருடன்…தேடி தேடி டைப் செய்து கொண்டிருக்கிறேன்…மனம் கனத்து விட்டது…உங்கள் தொண்டுள்ளத்தை என்ன என்று பாராட்ட ? தெய்வம் மனுஷ ரூபினே…
    ஆம் தம்பி…மற்றவர்களின் குறைகளை தீர்க்க பிரார்த்தனை கிளப் நடத்துவதிலாகட்டும், ஏழைப் பெண்களின் திருமணம் செலவை ஏற்கும் பொறுப்பில் ஆகட்டும்…பசுக்களைப் பேணும் பண்பிலாகட்டும்…ஒரு தனி மனிதனாக இவ்வளவையும் சிந்தித்து செயல் படுத்துவதற்கு நிச்சயம் தெய்வாம்சம் நிறைந்திருக்க வேண்டும் தம்பி…இது தவிர…உங்களின் செயல்களை அவை நடக்கின்றனவா இல்லையா என்பதை அவ்வப் பொது இத்தகையப் பதிவுகளின் மூலம் எங்களுக்கு தெரியப் படுத்தி உங்கள் கடமையை செவ்வனே செய்கிறீர்கள் …இந்த பதிவில் அன்னதானம் உள்ளவர்களுக்கு செல்லாமல் இல்லாதவர்களுக்கு மட்டுமே சென்றுள்ளது என்பது உங்களின் புகைப் படங்களில் இருந்தே தெரிகிறது…முதியவர்கள், இயலாதவர்கள்…ஆதரவற்றவர்..என உரியோருக்கு சென்று சேர்ந்துள்ளது…இதயம் கனத்துதான் போனது தம்பி…உங்களுக்கு புண்ணியம் கோடானு கோடி…உங்களுடன் இறைவன் என்றென்றும் இருப்பாராக… _/|\_

    1. மிக்க நன்றி. உங்கள் வார்த்தை எம் பொறுப்பை அதிகரிக்கச் செய்கின்றன.

      மற்றபடி எல்லாப் புகழும் இறைவனுக்கே.

      – சுந்தர்

  2. அன்பு சுந்தர்ஜி…

    தினப்படி வாழ்வில் மனம் கொஞ்சமாவது தூய்மை அடைவது, தங்களது தெய்வத் திருப்பணிகளைப் படிக்கும் போது மட்டுமே!

    மேலும் நாமும் இது போல் சில நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது.

    நன்றிகள்.

  3. சுந்தர்ஜி,

    அவனவன் எப்படா லீவ் கிடைக்கும் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று இருக்கும் காலத்தில் காலம், நேரம் இன்றி ஓய்வு இல்லாமல் எந்த நேரமும், சதா சர்வ காலமும் கிடைக்கும் நேரத்தில் நல்ல காரியங்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து கொண்டு இருக்கும் உங்களை காக்க பகவான் என்றென்றும் துணை இருப்பார்.

    மானிட வாழ்வின் மிக பெரிய நோய் பசி இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான். இப்படி வறியவரின் பசியை போக்கி அவர்களுடன் சிறிது நேரம் பேசி அவர்கள் மனத்திலும் அன்ன தானத்தின் முக்கியத்தை உணர்த்திய தங்களை பாராட்ட வார்த்தைகள் தெரியவில்லை. அந்த மூதாடிகளை பார்க்கும் போது மனம் மிகவும் பாரமாக உள்ளது. நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர்…………….

    நாமும் நம்முடைய குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து
    ஆளாக்கி பெற்றோர்களை பேணி காக்க வேண்டும் என்ற எண்ணங்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருகின்றோம்.காலம் தான் வழி நடத்த வேண்டும்.

    சுந்தர் என்கின்ற நல்லதொரு பிள்ளையை பெற்றெடுத்த
    தங்களின் பெற்றோருக்கு என் பணிவான வணக்கங்கள்.

    நன்றி

  4. காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடை வழிக்கு என்ற பட்டினத்தார் பெற்ற கருத்தை, இன்று தங்கள் மூலம் மறுபதிவு செய்து கொண்டோம். மிக்க நன்றி.

    * என்னை இதில் கலந்துகொண்டு பரிமாற அழைத்தீர்கள். வர இயலாமல் போனதற்கு இப்போது வருந்துகிறேன்.

  5. அன்னதானத்தின் பெருமை பற்றி பல பதிவுகள் போட்டாலும் சித்தி விநாயகர் கோயில் சிறப்பு பெறுகிறது.
    தானத்தில் சிறந்தது அன்னதானம்னு சொல்வாங்க. மனுஷன் எதுகொடுத்தாலும் போதாது இன்னும் வேணும்… இன்னும் வேணும்னு தான் சொல்வான். ஆனால் சாப்பாடு ஒன்னை மட்டும் தான் போதும்னு சொல்வான என்ற வரிகளும் கர்ணனின் கதையும் சாட்சாத் திருமகளும், நிலமகளும் அவர்களின் மகள் வள்ளியுமே வந்து சாப்பிடுவது போல தோன்றியது என்ற வரிகளும் உங்களுக்கு புண்ணியத்தையும் எங்களுக்கு கண்ணில் நீரையும் வர வைத்தது.
    மிகவும் நெகிழ்ச்சியான உரைநடை.
    all photos are very nice

  6. டியர் சுந்தர்ஜி,

    பதிவை படித்தேன் , மிக்க மகிழ்ச்சி .

    உங்கள் நற்பணிகள் தொடர என் வாழ்த்துக்கள்.

    நன்றி

    V HARISH

  7. உண்மைலேயே இதை படிக்கும் போது கண்களில் கண்ணீர், தொடரட்டும் உங்கள் பணி. ிங்கள் நீடூடி வாழ அந்த காஞ்சி மகானிடம் மனதார பிரார்த்தனை செய்கிறேன். ஜெயா ஜெயா சங்கர, ஹர ஹர சங்கர.

  8. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணிமேகலையில் சீத்தலை சாத்தனார்

  9. சுந்தர்ஜி
    உங்களின் இந்த பதிவு நம்மை மிகவும் பாதித்துவிட்டது.தாங்கள்
    தானத்தில் சிறந்த அன்னதனம் செய்து அனைவரின் அன்புக்கு பாத்திரம் ஆகிவிட்டீர்கள். அன்னதனம் ஒன்றுதான் வாயும், வயிரும் சேர்ந்து வாழ்த்தும்.இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும்.
    தானங்களிலும்,தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும், மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.

    உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும்.
    எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும். உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.

    அளப்பரிய வகையில் தானம் செய்த பெரும் பெயர் கிடைக்கின்றது. தானம் பெற்றவுடன் வேதியர், தன் சுய உருக்கொண்டு, கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகின்றார்.

    கர்ணன் மடிகின்றான்.

    இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே!

    தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.

    கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.

    மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.

    அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.

    அன்னதானம் செய்யாமலேயே, அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.

    கர்ணனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அன்னதானத்தையும் அளப்பரிய வகையில் செய்யத் தோன்றுகின்றது. பரம்பொருளிடம் தன் எண்ணத்தை முன்வைக்கின்றான் கர்ணன்

    கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

    மாமல்லபுரத்தைக் கட்டிய நரசிம்ம பல்லவன் காலம்.

    நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி. மகா வீரர்.

    பரஞ்சோதி படைக் கலன்களைக் கையாள்வதில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம் சிவத் தொண்டிலும், சிவனடியார்க்குத் தொண்டு செய்வதிலும் மனம் அதிகமாகச் சென்றது.

    நரசிம்ம பல்லவனுக்காக, வடபுலம் சென்று வாதாபி எனும் நகரைக் கொளுத்தி வெற்றி வாகை சூடி வருகின்றார்.

    பரஞ்சோதி படைத் தளபதியாக இருந்தாலும், ஆழ்மனதில் சிவத்தொண்டு செய்யும் மனப்பாங்கே அதிகமாக இருந்தது.

    வெற்றிச் செய்தியை நரசிம்ம பல்லவனுக்குச் சொல்லிய அதே நேரம் தன் உள்ளக் கிடக்கையாகிய சிவத்தொண்டு புரிவதே தன் விருப்பம் என்று சொல்கின்றார்.

    மனம் மகிழ்ந்த பல்லவன் பரஞ்சோதியின் விருப்பத்திற்கிணங்க, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தான்.

    திருவெண்காட்டு நங்கை எனும் தன் மனையாளுடன் இல்லறம் நடத்திவந்தார். சீராளன் எனும் செல்வ மகன் பிறந்தான். மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

    சிவனடியார்களில் தான் ஒரு சிறு அடியவர் என அறிவித்துக் கொண்டமையால் அவர் சிறுத்தொண்டர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.

    ஒவ்வொரு நாளும் சிவனடியாருக்கு அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்டு, அந்த சிவப் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார். அப்பணியை குடும்பமே உவந்து செய்து வந்தது.

    அவரின் சிவத்தொண்டினை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.

    ஒரு நாள், வைரவர் (வடதேசத்திலிருந்து வந்த காபாலிகர். சிவச் சின்னங்களோடு, கையில் மண்டையோடு, சூலாயுதம் தரித்து) வேடம் கொண்டு, சிறுத்தொண்டர் இல்லம் சென்றார்.

    அச்சமயம், சிறுத்தொண்டர் சிவனடியார் எவரேனும் இருக்கின்றாரா என்று பார்த்து அழைத்து வர வெளியில் சென்றிருக்கின்றார்.

    வைரவர் வேடம் கொண்ட சிவமூர்த்தியைக் கண்ட சிறுத்தொண்டரின் மனைவி ஆவலுடன் அன்னமிட அழைக்கின்றார்.

    அவரோ, ஆண்கள் இல்லாத வீட்டில் நுழையமாட்டேன், அருகில் (உள்ள ஆலயமாகிய திருச்செங்காட்டங்குடியின் ஸ்தல விருக்ஷமாகிய) அத்தி மரத்தின் கீழ் அமர்கின்றேன், உன் கணவர் வந்தால் வரச்சொல் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

    சிவனடியார் எவரையும் காணாமல் மனம் நொந்து வருகின்ற கணவரைக் கண்டு, அவரின் மனைவி நடந்ததைச் சொல்ல, சிறுத்தொண்டரோ மனம் மிக மகிழ்ந்து அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வைரவர் கோலம் கொண்ட வடகயிலை நாதனின் பாதத்தில் விழுந்து, அன்புடன் அடியவன் இல்லம் வந்து அமுது கொண்டு, அருள்பாலிக்க அழைக்கின்றார்.

    வைரவரோ, நான் கேட்கும் உணவை உன்னால் அளிக்க முடியாது. ஆகையால் உன் இல்லம் வரமுடியாது என்கின்றார்.

    சிறுத்தொண்டர், தாங்கள் கேட்கும் உணவை மிக நிச்சயமாக அளிப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றார்.

    அனைவரும் அதிரும் வண்ணம், வைரவர், ‘நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு கொள்வேன். அந்த உணவு ஐந்து வயதுடைய, குடும்பத்திற்கு ஒரே வாரிசான ஆண் குழந்தையின் கறியை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் அக்கறியை அக்குழந்தையின் அன்னை கால்களைப் பிடிக்க, தந்தை அரிவாளால் அரிந்து சமைக்க வேண்டும். இந்தச் செயலைச் செய்யும் போது எவர் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது. மனமகிழ்வுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் சாப்பிடுவேன்’ என்கின்றார்.

    எந்தக் குழந்தையின் தாய் தன் ஒரே மகனை வெட்டுப்படுவதைப் பார்க்க முடியும்? எந்தத் தந்தைதான் தன் ஒரே குழந்தையை வெட்ட முடியும்? அதுவும் அச்செயலை மனமகிழ்வுடன் எவர்தான் செய்ய முடியும்?

    கலங்கிய நிலையில் வீட்டிற்கு வரும் கணவரை ஆவலுடன் கேட்கின்றார் அவரின் மனைவி. நடந்ததை விவரிக்கின்றார் சிறுத்தொண்டர். வேறு எவரிடமும் சென்று உங்கள் குழந்தையை வெட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என்று வருந்துகின்றார். இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கின்றனர். தமது ஒரே குழந்தையை, ஆசையும் பாசமும் சேர்த்து வளர்த்துவரும், செல்வ மகனை, ஐந்து வயதுடைய சீராளனையே கறி சமைத்து அன்னமிட முடிவெடுக்கின்றனர்.

    பாடசாலை சென்றிருந்த சீராளனை அழைத்துவருகின்றார் சிறுத்தொண்டர். ஏதுமறியாக் குழந்தை ஆசையுடன் தந்தையின் கழுத்தைக் கட்டி முத்தமிடுகின்றது. வீட்டிற்கு வந்தவுடன், குழந்தையைக் குளிப்பாட்டி, அழகு செய்து, அமரவைக்கின்றார் திருவெண்காட்டு நங்கை.

    நங்கை கால் பிடிக்க, சிறுத்தொண்டர் குழந்தையை அரிவாளால் அரிந்து தர, குழந்தைக் கறி செய்கின்றனர்.

    இதை அனைத்தையும் முடித்து வைரவரை அழைக்கின்றார்.

    வைரவரும் சிறுத்தொண்டரின் இல்லம் வந்து அன்னமிடச் சொல்கின்றார். நங்கை அன்னத்துடன் குழந்தைக் கறியையும் கொண்டு வந்து பரிமாறுகின்றார்.

    அப்போது வைரவர் தன்னுடன் அமர்ந்து சாப்பிட சிறுத்தொண்டரை அழைக்கின்றார். வைரவரின் மனம் கோணக் கூடாது என எண்ணி, அவர் அருகே அமர்கின்றார். சிறுத்தொண்டருக்கும் குழந்தைக் கறியுடன் உணவு பரிமாறப்படுகின்றது. தன் மகனின் கறியை தானே சாப்பிடவும் துணிகின்றார்.

    வைரவர் மேற்கொண்டு, சிறுத்தொண்டரை நோக்கி, உனக்கு மகன் இருக்கின்றான் எனில் அவனையும் அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுங்கள் என்கின்றார்.

    தன் மகனின் கறியைத் தான் சமைத்தோம் என்று சொன்னால், இறந்தவர் வீட்டில் வைரவர் சாப்பிட மாட்டாரோ என்று எண்ணி அஞ்சி, ‘அவன் உதவான்’ என்கின்றார்.

    வைரவரோ, ‘இல்லை இல்லை. அவன் வந்தால் தான் சாப்பிடுவேன்’ என்கின்றார்.

    மனம் கலங்கி நின்ற சிறுத்தொண்டரை நோக்கி, வைரவர், உங்கள் மகனை அழையுங்கள் என்கின்றார்.

    நிலைதடுமாறி, வாசலில் நின்று ‘சீராளா’ என்கின்றார்.

    மகன் எப்படி வரமுடியும்?

    வைரவர் திருவெண்காட்டு நங்கையை நோக்கி, நீங்கள் சென்று அழையுங்கள் என்கின்றார்.

    அவரும் தலைவாசல் வந்து ‘சீராளா’ என்கின்றார்.

    அனைவரும் அதிசயக்கும் வகையில், சீராளன் பாடசாலையிலிருந்து வரும் நிலையில், ‘அப்பா, அம்மா’ என்று அழைத்தபடியே வர, பெற்றோர்கள் அவனை அப்படியே வாரியெடுத்து உச்சிமோர்ந்து, மகிழ்ந்து உள்ளே வர, அங்கே இருந்த உணவையும், வைரவரையும் காணவில்லை.சிவனும் பார்வதியும் இடபாரூடராகக் காட்சி நல்கினார்கள்.

    அனைவரும் நற்கதி பெற்றனர்.

    …..

    கர்ணனுக்கும், சிறுத்தொண்டருக்கும் என்ன சம்பந்தம்?

    சொர்க்கத்திலும் பசியெடுத்த கர்ணன் பரம்பொருளிடம், தான் மறுபடியும் பூலோகத்தில் பிறந்து, கொடைக்கு ஒரு கர்ணன் என்று பெயர் எடுத்தது போல, அன்னதானத்திலும் தான் ஒரு பெரும் பெயரும் பேறும் பெற வேண்டும் என்று பெரும் தவம் செய்து வேண்டிக்கொண்டான்.(கர்ணனின் முற்பிறப்பு ஸஹஸ்ர(1000)கவசன் என்றும், நரநாராயணர்களால் 999 கவசங்கள் அறுபட்டு, சூரியனிடம் அடைக்கலம் புகுந்தவன் என்றும், அவனே மறுபிறப்பில் ஒரே ஒரு கவசத்துடன் பிறந்த கர்ணன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகின்றது.)அந்தக் கர்ணனின், மறுபிறப்புதான் சிறுத்தொண்டர்.எவரும் செய்யத் துணியாத வகையில் வைரவருக்கு அன்னமிட்டவர். சிவ பதவி அடைந்தவர். 63 நாயன்மார்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர்.

    அவரின் தூய்மையான பக்தியையும், இறைத் தொண்டினையும், ஆழ்ந்த நம்பிக்கையும், அன்னமிடுதலில் உள்ள அளவிலா அவாவினையும் இன்றளவும் உலகம் மெச்சுகின்றது.

    கர்ணன் வேண்டி விரும்பிப் பெற்ற பிறவியே சிறுத்தொண்டர். முழுக்க முழுக்க அன்னதானத்திற்காகவே பிறப்பெடுத்தவர்.

    அன்னதானமிட்டு அளப்பரிய பேறு பெற்றவர்.

    அருந்தவம் செய்ததாலேயே அன்னதானம் செய்ய முடிந்தது.

    அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன

    அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.
    அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோம் !!

  10. I do not have words to explain my feelings after reading this article. But i can feel and see the god in these images as u said.

    Keep continue this service.

    Thanks,
    Nagaraj T.

  11. dear சுந்தர்ஜி

    தங்களின் அன்ன தான பதிவு மிக அருமை. இதை படித்து விட்டு எனக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தேடி தேடி நீங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்து வருகிறீர்கள். உங்கள் பணி மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
    நன்றி
    உமா

  12. ஹாய்,
    இந்த kadhaigalai படிக்க படிக்க மனசு நிறைஞ்சு இருக்கு. இன்னும் நிறை கதைகள் படிக்க ஆவலாக இருக்கிறது.தெரியாத விஷயங்கள் இக்கதை மூலம் தெரிந்து கொண்ட சந்தோஷம்,மனசுக்கு சரியான மருந்து .நன்றி, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *