உள்ளே நுழையும்போதே மேலே “புலை கொலைத் தவித்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்!” என்ற அறிவிப்பு கண்ணில்பட்டது. நாம் சென்ற நாள் சாதாரண நாள் என்பதால் கூட்டம் அதிகமில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மட்டும் திரைகள் அனைத்தும் விலக்கப்பட்டு இங்கு பூஜைகள் நடைபெறும். சத்திய ஞான திருச்சபையில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு எழுந்தோம்.
ஆலயத்தை சுற்றிபார்த்துவிட்டு புறப்பட எத்தனிக்கையில் மழைக்கு இரண்டு நாய்க்குட்டிகள் அங்கு ஒதுங்கியிருந்தன. வள்ளலாரின் இடத்தில் இந்த சிறிய ஜீவன்களுக்கு இடமில்லாமலா?
அடைக்கலம் தேடி வந்த அவற்றை எவரும் விரட்டவில்லை. அவை ஒரு ஓரத்தில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!
பாரதியின் வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வந்தது. அடுத்தநொடி, அக்குட்டிகள் நமது வி.ஐ.பி.க்களாகிவிட்டன.
அவற்றின் கண்களை பார்த்தபோது என்னவோ போலிருந்தது.
ஆலயத்தை ஒரு முறை வலம் வந்துவிட்டு புறப்பட எத்தனிக்கையில், ஒரு வயதான பாட்டி ஒருவர் அங்கு நின்றுக்கொண்டிருப்பதை பார்த்தோம்.
அங்கு வெளியே கிடந்த சங்கிலியை காட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
நமக்கு சற்று ஆர்வம் ஏற்பட, அருகே சென்றோம். ஏற்கனவே பேசிக்கொண்டிருந்தவர்கள் நகரும் வரை காத்திருந்தோம். அவர்கள் நகர்ந்தபிறகு,”பாட்டி என்ன சொல்லிகிட்டிருந்தீங்க அவங்ககிட்டே? ஏதோ ஞானச் சங்கிலின்னு விழுந்தது. அதான் கேட்கிறேன்” என்றோம்.
“இது தான் தம்பி வள்ளலார் வைத்த ஞானச்சங்கிலி. நமது கண்களுக்கெல்லாம் இது இரும்பு சங்கிலி. ஆனால் இது உண்மையில் பொன். வள்ளலாரின் கண்களுக்கு மட்டுமே பொன்னாக தெரியும்!” என்றார்.
பாட்டியிடம் மேற்கொண்டு பேசியபோது அவர் பொய் சொல்வது போல தெரியவில்லை. இந்த வயசுல பொய் சொல்லி என்ன பண்ணப்போறாங்க அவங்க?
மேற்கொண்டு பேச்சு கொடுத்தபோது, சத்தியஞான திருச்சபை வளாகத்தை அவ்வப்போது கூட்டிப் பெருக்குவதாவும் திருச்சபைக்கு வந்து செல்லும் பக்தர்கள் கொடுக்கும் 5, 10 இல் தமது வாழ்க்கை ஓடுவதாகவும் கூறினார்.
சத்திய ஞான திருச்சபையை கூட்டி பெருக்குவதாக சொன்னதும், “பாட்டி… ரொம்ப நன்றி. தொடர்ந்து செய்ங்க. மிகப் பெரிய சேவையை வல்லாருக்கு செய்துகிட்டு வர்றீங்க!” என்று கூறி ஒரு இருபது ரூபாய் எடுத்து அவரிடம் கொடுத்தோம்.
“நீ நல்லாயிருக்கனும்பா…!”
“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா…” என்று கூறி கால்களில் விழுந்தேன்.
“மகராசனா இருப்பா!” என்றார்கள்.
“அடுத்தமுறை வேற ஒருத்தரோடு இங்கே வருவேன். அப்போ உங்களை நிச்சயம் பார்க்கிறேன் பாட்டி!” என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.
அடுத்து தருமசாலையில் உள்ள வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பை தரிசிக்க சென்றோம்.
அணையா அடுப்பு உள்ள சமையற்கட்டுக்கு முன்பாகவே ஒரு சிறிய ஆலயம் உள்ளது. அங்கு வள்ளலாருக்கு பூஜை முதலானவைகள் நடைபெறுகின்றன.
உள்ளே சமையற்கட்டுக்கு சென்று பார்த்தோம். மதிய உணவு தயாராகிக்கொண்டிருந்தது.
பசிக்கொடுமையால் எரியும் பல ஏழைகளின் வயிறு குளிரும் இடமாதலால் அந்த இடத்திலே ஒருவித வைப்ரேஷன் இருப்பதை உணர முடிந்தது. நாம் சென்ற அன்று சரியான மழை பெய்து ஓய்ந்திருந்தபடியால், அங்கு சூழலே மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.
வடலூரை பிரிய மனமின்றி தான் கிளம்பினோம்.
(குறிப்பு : சத்திய ஞான திருச்சபையில் சுவாமிஜி ஒருவர் அமர்ந்து வள்ளலார் பாடல்கள் சி.டி.க்கள் விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சுமார் 160 பாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்று வாங்கினோம். (விலை.ரூ.50/- என்று நினைக்கிறேன்). வாங்கி வந்தோமே தவிர அதை கேட்பதற்க்கு நேரம் இருக்கவில்லை. இந்த பதிவை தட்டச்சு செய்துகொண்டிருந்தபோது அந்த சி.டி. எதிரே கண்ணில் பட்டது. சற்று வள்ளலார் பாடல்கள் கேட்டுகொண்டே தட்டச்சு செய்யலாமே என்று சி.டியை கம்ப்யூட்டரில் போட்டு, நமக்கு மிகவும் பிடித்த ‘ ஒருமையுடன் நினது திருவடி’ பாடலை தேடிப் பிடித்து அதை பிளே செய்தால்… ஒரே இன்ப அதிர்ச்சி… எமக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவரான சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் அந்த பாடல் அமைந்திருந்தது. இப்படி ஒரு ஹைபிட்ச் குடல் வேறு எந்த பாடகருக்காவது இருந்திருக்குமா என்பதே சந்தேகமே. அவருடைய குரலில் அந்த பாடலை கேட்பது தனி சுகம்!!)
நாளை (17/01/2014) தைப்பூசம் வடலூரில் மிகவும் விசேஷம். இணையத்தில் சில கட்டுரைகளை தேர்ந்தெடுத்து சுருக்கி, இங்கே தந்திருக்கிறோம்.
நமது வடலூர் பயணத்தின் புகைப்படங்கள், நிச்சயம் இந்த கட்டுரைக்கு அணி சேர்க்கும் என்று நம்புகிறோம்.
“அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி”!
==========================================================
தைப்பூசம் – அருட்பெருஞ்சோதியில் வள்ளலார் கலந்த நாள்!
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவர் அருட்பெருஞ்சோதியில் ஐக்கியமான தினம் தைப்பூசமாகும்.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் ராமையா பிள்ளை- சின்னம்மையாருக்கு மகவாக, 1823, அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்தவர் ராமலிங்கம். உடன்பிறந்தோர் நால்வர்.
பிறந்த குழந்தையை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபடுவது அக்கால வழக்கம். அவ்வாறே சிதம்பரத்தில் குழந்தை ராமலிங்கத்திற்கு சிதம்பரம் ரகசியம் என்னும் திரையைத் தூக்கி தரிசனம் காட்டப் பெற்றபோது, குழந்தை கல கல எனச் சிரித்ததையடுத்து ஞானக் குழந்தைதான் என்ற எண்ணம் அப்போது அங்கிருந்த அறிஞர்களுக்கு ஏற்ப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிகழ்ச்சிதான் ராமலிங்கம் வள்ளலார் ஆக அறியப்பட முதற் காரணமாக அமைந்தது. அவர் தன்னுடைய நாற்பத்தி ஒன்பதாம் வயதில் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலை என்னும் தலைப்பில் சிதம்பர ரகசியத்தை எழுதினார்.
முன்னதாக அவர் கல்வி கற்கச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்ச்சி ஓன்று அவர் குழந்தை ஞானி என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அது, ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் ராமலிங்கத்தை அமரச் சொன்னார் . இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் . அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள் முதல் பாடமாகும். ஆசிரியர் சொல்லச் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும். ஆசிரியர் சொன்ன பாடல்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்
என்ற பாடலை ஆசிரியர் சொல்ல, ராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் திரும்பச் சொன்னார்கள். ஆனால் இராமலிங்கம் மட்டும் சொல்லவில்லை. அதற்கு மாறாக `வேண்டாம்’ போன்ற சொல் அமங்கலம் என்றும், தன்னால் அதனை மாற்றிச் சொல்ல முடியும் என்றும் கூறி ஆசிரியரின் அனுமதியுடன் வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் எனக் கூறுகின்றனர்.
ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார்தம்
உறவு கலவாமை வேண்டும்.
அதன் பின் அவர் எந்த பள்ளியிலும் பயின்றதாகச் செய்திகள் இல்லை.
அச்சிறு பருவத்திலே சாதி ஆசாரப் பொய் என்று அறிவித்து அவைகளை பின்பற்றாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். உலகில் உள்ள பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை, முதலிய இச்சைகளில் தன் அறிவைச் செலுத்தாது இருந்தார். அனைத்து உயிர்களையும் சமமாக நோக்கினார், அனைத்து உயிர்களும் இன்பம் அடையச் சுத்த சன்மார்க்கத் தனிநெறியினை அமைத்தார்.
அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவாற்றி குடும்பத்தைப் பராமரித்து வந்தார். அதன் காரணமாக இயல்பிலேயே ஆன்மிக நாட்டமும், இறைஞானமும் வாய்க்கப் பெற்றவராக வளர்ந்த ராமலிங்கம், சிறுவயதிலேயே ஆன்மிக உபன்யாசம் செய்து புகழ் பெற்றார். சென்னை கந்தகோட்டத்தில் உறைந்த முருகனை வழிபட்டு வந்த அவர், விரைவிலேயே உருவமற்ற அருட்பெருஞ்சோதியே கடவுள் என்று உணர்ந்தார்.
சன்மார்க்கம் உதயம்:
பிறப்பால் சைவ சமயத்தினராக இருந்தாலும், அனைத்து சமயங்களையும் நேசிக்கும் உள்ளம் கனிந்தவராக ராமலிங்கர் இருந்தார். தனது ஞானப்பெருக்கால் ‘சன்மார்க்கம்’ என்ற புதிய தத்துவத்தை அவர் நிறுவினார். புலால் மறுத்தல், பிறவுயிர்க் கொலை தவிர்த்தல், சாதி- மத- இன- மொழி பேதங்களை மறுத்தல், கடவுளருக்கு உயிர்ப்பலி தடுத்தல் ஆகியவற்றை ஊர்தோறும் சென்று பிரசாரம் செய்தார்.
ராமலிங்கர் சமய உபன்யாசகர் மட்டுமன்று. அவர் ஓர் உரையாசிரியர், கவிஞர், இதழாசிரியர், பதிப்பாளர், தீர்க்கதரிசி, சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர் எனப் பல பரிமாணங்களை உடையவர்.
தனது போதனைகளைப் பரப்ப, ஜீவ காருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகிய உரைநூல்களை ராமலிங்கர் இயற்றினார். தமிழின் உரைநடைப் போக்கில் இவரது எழுத்துகள் பெரும் மாற்றம் நிகழ்த்தியவையாகக் கருதப்படுகின்றன.
இவர் இயற்றிய ஆன்மிகப் பாடல்களின் திரட்டு ஆறு திருமுறைகளாக ‘திருவருட்பா’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆசிரிய விருத்த நடையில் அமைந்த 5,818 அருட்பாடல்கள் திருவருட்பாவில் இடம்பெற்றுள்ளன.
அமுதசுரபி ஆனவர்:
இவர் வாழ்ந்த காலம் தமிழகத்தில் பெரும் பஞ்சம் வாட்டியது. ஆங்கிலேய ஆட்சியின் தடையற்ற தானிய ஏற்றுமதியாலும், இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட வறட்சியாலும் லட்சக் கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாகினர். அப்போது ஏழை மக்களுக்கு உணவளிக்க வடலூரில் தருமசாலையைத் துவக்கினார் ராமலிங்கர். இதற்காக வடலூர் மக்களிடம் இரந்து பெற்ற 80 காணி நிலத்தில் அணையா அடுப்புடன் கூடிய தருமசாலையை நிறுவினார் ராமலிங்கர்.
1867, மே 23-ஆம் தேதி தருமசாலை துவங்கியது. அன்றுமுதல் இன்றுவரை, அங்கு இடையறாது அன்னதானம் நடைபெற்று வருகிறது. பஞ்சத்தால் உணவின்றித் தவித்த லட்சக் கணக்கான மக்களை பேரழிவிலிருந்து காத்ததால் அவர் “வள்ளலார்’ என்ற நாமம் பெற்றார். ஏழைகளுக்கு உணவளிக்க செல்வந்தர்களிடம் கெஞ்சி யாசகம் கேட்கவும் வள்ளலார் தயங்கவில்லை.
ஞானப் பகலவன்:
பசிக்கொடுமை போக்கியதுடன் மக்களின் அஞ்ஞான இருள் போக்கவும் வள்ளலார் முயன்றார். சமய நல்லிணக்கம், தீண்டாமைக்கு எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துகளுடன் ஆன்மநேய ஒருமைப்பாட்டை விளக்கி, எவ்வுயிர்க்கும் பேதமில்லாப் பெருநிலையை மனிதர்கள் அடைய வேண்டும் என்று வள்ளலார் போதித்தார்.
இதற்காக, வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார். அங்கு அருட்பெருஞ்சோதி வழிபாட்டை புதிய வழிமுறையாக்கினார். சோதி வடிவானவன் இறைவன்; அவனை சக மானுடருக்கு சேவை செய்வதன் மூலமாகவும், உள்ளார்ந்த தியானம் மூலமாகவும் உணர முடியும் என்பதே வள்ளாரின் உபதேசம்.
ஐம்பது ஆண்டுகாலம் எறும்பு போல சுறுசுறுப்புடன் மானுட சேவையாற்றிய வள்ளலார், 1873, ஜனவரி 30-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, தைப்பூசத் திருநாளன்று, தான் நிறுவிய சத்தியஞான சபையில் ஏற்றிவைத்த சோதியிலேயே கலந்தார்; தனது பூதஉடல் யாருக்கும் புலப்படாமலேயே மறைந்தார். அதன் காரணமாக நித்ய சிரஞ்சீவியாக வள்ளலார் வழிபடப்படுகிறார்.
இன்றும் ஆண்டுதோறும், தைப்பூச நன்னாளன்று வள்ளலார் அன்பர்கள், வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் லட்சக் கணக்கில் திரண்டு வள்ளலார் விழா கொண்டாடுகின்றனர். அன்று ஒருநாள் மட்டும் சத்தியஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி சோதி வழிபாடு நடத்தப்படுகிறது.
இவர் மனித வாழ்வின் மேன்மைக்கு உருவாக்கிய தத்துவங்களை இத்தைப்பூச திருநாளில் நினைவு கொள்வோமே. இயற்கையே இறைவன். சிவப்பரம்பொருளாய் உள்ள இறைவனை, உருவ வழிபாட்டில் நிறுத்தல் கூடாது. சிறு தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலிகள் கொடுத்தல், சடங்குகள் கிரியைகள் செய்தல் போன்ற அனைத்தையும் நீக்குதல் வேண்டும். இறந்தவர்களை மண்ணில் நல்லடக்கம் செய்க, தீயிட்டுச் சுடல் வேண்டா.
மாதந்தோறும் வரும் பூச நட்சத்திர நன்னாளில் இல்லங்களிலும், பொது இடங்களிலும் கூட்டு வழிபாடு, சோதி வழிபாடு நிகழ்த்தலாம், அருட்பா அகவல் ஓதலாம், ஏழைகட்கு அன்னமிடலாம். குழந்தைகளுக்குக் கல்வியுதவி செய்யலாம். ஆண்டுதோறும் தை மாதப் பூச நட்சத்திரத்தன்று வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்று சோதி வழிபாடு செய்யலாம்.
எப்போதும், எவ்விடத்தும், “பசித்திரு”, “விழித்திரு” , “தனித்திரு” என்ற பெருநெறியைக் கைக்கொள்ளலாம். வழிபடும் முன்னும் பின்னும், “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி” என்ற மகா மந்திரத்தை மனம் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.
(நன்றி : ராஜேஸ்வரி ஐயர் – தி ஹிந்து, வ.மு.முரளி – blog.dinamani.com)
[END]
எத்தனை தடவை வடலூர் சென்று இருந்தாலும் மழையில் வடலுரை கண்டதில்லை. அழகாக இருக்கிறது. பெரும்பாலும் ஆசையை விட்டவர்களுக்கு தான் சத்யஞான சபையும் வள்ளலாரும் என்பதால் தான் இது பெருவாரியான மக்களை கவர்ந்து இழுக்க வில்லை. (ஞான சபைக்கு போவது என்பது வேறு. அதை FOLLOW பண்ணுவது என்பது வேறு) ஆனாலும் மனிதர்களாகிய நாம் எப்போதும் ஒரே மன நிலையிலே இருப்பதில்லை.MOOD SWING ஆகி கொண்டேதான் இருக்கும். ஆசை அற்ற வெறுமையான மன நிலையும் சில சமயம் மனிதர்களாகிய நாம் உணருகிறோம். (சுயமாக பணத்தின் மீது ஆசை இல்லாதவர்கள் கூட அடுத்தவர்கள் தன்னை கௌரவமாக நினைக்க வேண்டும் என்பதால் அதன் பின்னால் ஓட ஆசை படுகிறார்கள். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஆசை விட விட பிறவியும் குறையும் ஏன் அடுத்த பிறவியே இல்லாமல் கூட போகலாம். அன்பு, தயை, இறக்கம், இவைகள் எல்லாம் ஆசை விட விட அதிகமாக நம்மிடம் வந்து ஒட்டி கொள்ளும்.) எனவே விதையை போட்டு வைப்போம். யார் மனதில் அது மரமாக ஆகின்றதோ ஆகட்டும். கட்டுரைக்கு மிக்க நன்றி. தேவைக்கு கொடு இறைவா!!!!!!ஆசையை அறு இறைவா!!!!!!!!! இதுவே அருட்பெருஞ் ஜோதி முன்னால் நம் பிரார்தனையாக இருக்கட்டும். VALLALARISAM என்பது தேட வேண்டிய ஒன்று இல்லை. அனுபவிக்க வேண்டிய ஒன்று. அப்போது தான் அதன் ஆழம் புரியும்.
PS: புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே போக வேண்டும் என வள்ளலார் எழுதி வைத்தமயால் ஒரு முறை தந்தை பெரியார் வடலூர் சென்ற பொது நான் உள்ள வரவில்லை வெளியே நிற்கிறேன் என்றும், இதை மீறி உள்ளே போக கூடாது என்றும் கூறியதாக ஒரு தகவல் படித்து இருக்கிறேன்.
அன்பு சகோதரா காலை வணக்கம், மிக அருமையான பதிவு. நான் நிதமும் படிக்கும் மனுமுறை கண்ட வாசகம் பற்றி கூறியது மிக்க மகிழ்ச்சி ,,இதை படிப்பவர் யாரும் அத்தகைய தவறுகளை செய்ய முயல மாட்டார்கள்…மற்றும் வள்ளலார் மட்டுமே ஜோதி வடிவ இறைவனை நம்பியவர்…மத சார்பின்மை அவரது மிக உயர்ந்த குறிக்கோள்…நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை…ஆழ் த்யானம் மூலம் முருகனைக் கண்ணால் கண்டு உணர்த்தியவர்…இவர்தான் நவீன கால சித்தர் என்று அழைக்கப் பட்டவர். உங்கள் எண்ணங்கள் நிறைவேற…என்னுடைய பிரார்த்தனைகள் வாழ்க வளமுடன் _/|\_
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
ராமலிங்க வள்ளலார் பற்றிய பதிவுக்கு நன்றி சுந்தர். நான் இதுவரை வடலூர் சென்றதில்லை. ஆனாலும் அங்கு நேரில் சென்றுவந்த ஒரு திருப்தி இந்த பதிவை படித்தபிறகு ஏற்பட்டது. வடலூர் செல்லவேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கிவிட்டது. புகைப்படங்கள் மிகவும் அருமை (அதிலும் முக்கியமாக ஞான சங்கிலி மற்றும் நாய் குட்டிகள்).
தங்கள் பதிவு அருமை. இந்த பதிவை படித்ததும் எனக்கும் வடலூர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
photos சூப்பர்.
நன்றி
உமா
வள்ளலார் ஆசியை அனைவருக்கும் வழங்கி சிறப்பு பதிவிட்டமைக்கு நன்றி ….
‘அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி ”
வள்ளல் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும் . உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவ மாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.
அதே போல சிதம்பரத்தில் ஓசை எழுப்பும் சிகண்டி பூர்ணம் மணி பெரும்பாலான பக்தர்களுக்கு இரண்டு மணியாகத் தோற்றமளிக்கும். என்று இந்த இரண்டு மணிகளும் ஒரே மணியாகத் தோன்றுகிறதோ அன்று ஆன்மீகத்தில் முதல் பாடம் பயில தகுதி பெற்றதாகக் கணக்கில் கொள்ளலாம்.