Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, August 18, 2022
Please specify the group
Home > Featured > மகனின் கல்வி உதவி – தாய் அடைந்த சிவலோகப் பதவி!

மகனின் கல்வி உதவி – தாய் அடைந்த சிவலோகப் பதவி!

print
பாவ புண்ணிய கணக்குகளை இறைவன் நிர்வகிக்கும் விதமே அலாதி தான். அவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டுவரவே முடியாது. இன்னது… இப்படித் தான்…. இவ்வளவு புண்ணியம் என்று எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. புண்ணியமானது செய்பவர் என்ன செய்கிறார் என்பதைவிட எந்த சூழ்நிலையில் செய்கிறார், யாருக்கு செய்கிறார் என்பதை பொறுத்தே கணக்கிடப்படும். மேலும் செய்யக்கூடிய நேரமும் மிக மிக முக்கியம். எனவே உதவிகளை தேவையறிந்து விரைந்து செய்யவேண்டும்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102)

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு அதை தற்பெருமை பேசும் பணக்காரனைவிட  பாரமிழுக்கும் ஒரு வயதான கூலித் தொழிலாளிக்கு பசிக்கு ஒரு வேளை உணவு வாங்கித் தந்து அதை பார்த்து  சந்தோஷப்படும் ஒரு வேலை தேடும் இளைஞன் பெறும் புண்ணியம் மிக மிக மிக அதிகம்.

(Pls check: “எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ)

எப்போது நாம் குன்றத்தூர் சென்றாலும் படி ஏறும் போது வழியில் இருக்கும் பாதாள விநாயகர் கோவிலையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது, ஒரு நாள், அந்த கோவிலில் பூஜை  செய்யும் அர்ச்சகர் ஒருவரிடம் பேச நேர்ந்தது. அந்த சன்னதியின் தேவைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து கேட்டறிந்து, “இயன்றதை நிச்சயம் செய்வோம்” என்று நம்பிக்கையளித்தோம்.

DSC05491

இந்த சன்னதி தவிர, கீழே அடிவாரத்தில் உள்ள கந்தலீஸ்வரர் சன்னதியையும் இவர் தான் பார்த்துக்கொள்வார் என்று தெரிந்தது. (இந்த டூட்டி மாறி மாறி வரும்.)

“ஐயா… எங்கள் இறைவனை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அவன் எங்களை கவனித்துக் கொள்கிறானோ இல்லையோ அவனை நாங்கள் நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதே எங்கள் ஆசை. கோவிலுக்கு ஏதேனும் தேவையென்றால் தயங்காமல் என்னிடம் கூறுங்கள்!” என்றோம்.

“சரி…!” என்றார்.

அவர் முகத்தை பார்த்தபோது, அவர் வேறு ஏதோ கேட்க நினைத்து ஆனால் தவிர்ப்பதை புரிந்துகொண்டோம்.

DSC05499

அரசு தரும் சொற்ப சம்பளத்தால் கோவிலில் பூஜை செய்ய அர்ச்சகர்கள் கிடைக்க கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் இவர்களை போன்றவர்களின் தேவைகளை நம்மால் இயன்ற வரையில் நிறைவேற்றுவது நம் கடமை என்றே கருதுகிறோம். (கோவில் பணியை விட ஹோமம், யாகம், முதலான வைதீக காரியங்களுக்கு சென்றால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது).

“உங்களுக்கும் ஏதேனும் தேவையிருந்தால் சொல்லுங்கள்… இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் கூடுமானவரை சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கருதுபவர்கள் நாங்கள். சிறிதோ பெரிதோ எங்களால் இயன்றதை செய்வோம்!” என்றோம்.

“ஒண்ணுமில்லே சார்… அது வந்து….” கொஞ்சம் இழுத்தார்.

“பரவாயில்லே…சொல்லுங்க…..”

“எனக்குன்னு எதுவும் வேண்டாம். என் ரெண்டு குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டனும். ஏற்கனவே கஷ்டத்துல இருக்கேன். இதுல term ஃபீஸ் எப்படி கட்டுறதுன்னு தெரியலே…” என்றார்.

“அட… அவ்வளவு தானா? எவ்வளவு ஃபீஸ்  கட்டனும் என்கிற விபரத்தை மட்டும் அடுத்த தடவை வரும்போது சொல்லுங்க… நாம் இது விஷயமாக உதவ முயற்சி பண்றோம்” என்றோம்.

“ரொம்ப சந்தோஷம் சார்…. ரொம்ப சந்தோஷம்!”

மிகப் பெரிய பிரச்னை ஒன்று தீர்ந்ததற்க்கான சந்தோஷம் அவர் கண்களில் தெரிந்தது.

“அவனுக்கு நீங்கள் செய்யும் சேவையில் எந்த குறையும் வைக்காமல் முழு மனதோடு சிறப்பாக செய்யுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை அவன் எவர் மூலமாவது செய்வான்!” என்றோம்.

=========================================================

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நமது பிரார்த்தனை கிளப்பிற்கு கணேஷ் என்பவர் ஒரு கோரிக்கை அனுப்பியிருந்தார். தனது தாயார் லலிதா அம்மாள் (வயது 63) அவர்களுக்கு  கணையம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் இன்னும் சொற்ப காலமே உயிர் வாழ்வார் என்று டாக்டர் நாள் குறித்துவிட்டதாகவும், தனது தாயார் இன்னும் சில காலம் வாழவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் கூறி பிரார்த்தனைக்கு விண்ணப்பித்திருந்தார். (http://rightmantra.com/?p=7806)

அவரிடம் பேசியபோது, நிலைமை கைமீறி சென்றுவிட்டதும் எந்நேரம் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நிலை இருப்பதையும் புரிந்துகொண்டோம்.

கந்தசஷ்டி அன்று நாம் காலை குன்றத்தூரில் தரிசனம் முடித்துவிட்டு அலுவலகம் சென்றுகொண்டிருக்கும் வழியில், திரு.கணேஷின் ஃபோன் வந்தது. அவரையும் உடனே குன்றத்தூர் போகச் சொல்லி, முருகனை தரிசித்துவிட்டு அர்ச்சனையும் செய்துவிட்டு வரச் சொன்னோம். அவரும் உடனே குன்றத்தூர் விரைந்து குமரனை தரிசித்து விட்டு வந்தார்.

இதற்கிடையே… பாரதி விழா நெருங்க அது தொடர்பான ஏற்பாடுகளில் மூழ்கிவிட்டோம்.

=========================================================

பாரதி என்றாலே ஏழைக் குழந்தைகளின் கல்வி மேல் அவருக்கு இருந்த அக்கறையும், பாமரனின் பசி மேல் அவருக்கிருந்த பரிவும் தான் அடையாளம். சென்ற டிசம்பர் 2012 அன்று நாம் முதலாம் ஆண்டு பாரதி விழாவில் நிரஞ்சன் என்கிற ஏழை மாற்றுத் திறனாளி மாணவனுக்கு நமது ரைட்மந்த்ரா சார்பாக கல்வி உதவி வழங்கியிருந்தோம்.

இந்த ஆண்டு நிதி பற்றாக்குறைக்கு இடையே பாரதி விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபடியால் எதையுமே திட்டமிடமுடியவில்லை. ஒப்புக்கொண்ட ஒவ்வொன்றாக கைவிடவேண்டிய நிலையில் இருந்தோம். ஆனால் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு ஏழைக் குழந்தைக்கு கல்வி உதவி நிச்சயம் வழங்கவேண்டும் என்று விரும்பினோம். அன்னயாவினும் புண்ணியங்கோடி தரும் தொண்டாயிற்றே அது….!

இதற்கிடையே……

விழாவின் ஏற்பாடுகள் தீவிரமாக இருந்த போது, திரு.கணேஷ் ஒரு நாள் மீண்டும் நம்மை தொடர்புகொண்டார்.

“சார்… பாரதி விழா ஏற்பாடுகள் எப்படி போய்க்கிட்டுருக்கு என்னன்னு விசரிக்க்கலாமானு தான் ஃபோன் பண்ணேன்!” என்றார்.

“ம்… நல்லா போய்க்கிட்டுருக்கு சார்… அம்மா எப்படி இருக்காங்க…?”

“பரவாயில்லே சார்… ஆனாலும் இன்னும் அபாய கட்டத்துல தான் இருக்காங்க. அதுனால நான் ஆபீஸ்ல WORK FROM HOME கேட்டு வாங்கி பண்ணிக்கிட்டுருக்கேன்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில்… “பாரதி விழா சம்பந்தமா ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க சார்… என்னால் முடிஞ்சுது நிச்சயம் பண்றேன்…. அதுக்கு தான் நான் ஃபோன் பண்ணினேன்!”

கடந்த சில மாதங்களாக அவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை நாமறிவோம். அந்த மனநிலையிலும் பாரதி விழா பற்றி அக்கறைகொண்டு விசாரித்து, அதற்கு உதவ வேறு தயாராக இருக்கிறேன் என்று அவர் சொன்னது நம் நெஞ்சை தொட்டது.

குன்றத்தூர் மலையின் பிள்ளையார் கோவிலின் அர்ச்சகர் தனது குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்ட உதவி கேட்டது நினைவுக்கு வந்தது. அவரது கோரிக்கை பற்றி இவரிடம் கூறி, “பாரதி விழாவில் கல்வி உதவி செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். அந்த அர்ச்சகரின் குழந்தைகளின் அடுத்த டெர்ம் ஃபீஸ் செலவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன். விழாவுக்கு அவரை அழைக்கிறேன். நீங்களே அவரிடம் உங்கள் கைப்பட அந்த உதவியை மேடையில் செய்யலாம்” என்றோம்.

“நிச்சயம் செய்றேன் சார்… ஆனால் என் கைப்படவெல்லாம் வேண்டாம். நீங்களே கொடுத்துவிடுங்கள்!” என்றார்.

=========================================================

அடுத்த முறை குன்றத்தூர் சென்றபோது அந்த அர்ச்சகரை சந்தித்தோம்.

“உங்கள் குழந்தைகளுக்கு fees ரெடி…” என்றோம்.

“ரொம்ப சந்தோஷம் சார்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே”

“எனக்கெதற்கு சுவாமி நன்றி? ஆனைமுகனுக்கு நன்றி சொல்லுங்கள். இது அவன் திருவுள்ளம். நாம்  இதில் வெறும் கருவி” என்றோம்.

“பள்ளியின் பெயரில் செக் கொடுத்துவிடலாமா?”

“செக் வாங்கமாட்டார்கள். குறிப்பிட்ட வங்கியில் தான் கட்டவேண்டும். அதுவும் வங்கி சல்லானை பள்ளியிலேயே நிரப்பித் தருவார்கள்” என்றார்.

DSC_0085

“சரி.. பரவாயில்லே… உங்கள் பெயருக்கு எங்கள் தளத்தின் சார்பாக CASH CHEQUE கொடுத்துவிடுகிறோம். நீங்கள் நேரடியாக வங்கி சென்று பணத்தை டிரா செய்துகொண்டு உங்கள் வங்கியில் கட்டிவிடுங்கள்!” என்றோம்.

ஆனைமுகனை சேவித்துவிட்டு கிளம்பும்போது பிரசாதம் தந்தார்.

“டிசம்பர் 8, பாரதி விழாவுக்கு மறக்காம உங்க குழந்தைகளை அழைச்சிகிட்டு வந்துடுங்க!” என்று கூறிவிட்டு புறப்பட எத்தனிக்கையில், இத்தனை தடவை வர்றோம், அவர் பேரை கேட்கலியே என்று தோன்றியது. “ஸாரி… இத்தனை தடவை இங்கே வர்றோம்… உங்க பேரை கேட்கலை… உங்க பேர் என்ன ஸ்வாமி?”

“திருமுருகன்!” என்றார்.

No comments!!

=========================================================

பாரதி விழாவிற்கு திருமுருகன் தனது மகன் ஸ்ரீநாத்துடன் வந்திருந்தார்.  இன்னொரு குழந்தையை  தவிர்க்க இயலாத காரணத்தால் அழைத்து வர இயலவில்லை என்றார். அவரை வரவேற்று அழைத்து சென்று அமரவைத்து, நிகழ்ச்சியின் இறுதியில் கூப்பிடுவதாக சொன்னோம். (கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சியை இறுதியில் வைத்திருந்தோம்.)

கல்வி கட்டணத்தை ஸ்பான்ஸர் செய்த கணேஷ் அவர்கள் அவரின் தாயாரின் உடல்நிலை மீண்டும் சீரியஸாகிவிட்டபடியால், அருகே இருந்து கவனித்துக்கொள்ள வேண்டி வர இயலாமல் போனது.

அர்ச்சகர் திருமுருகன் ஆற்றி வரும் தொண்டை பற்றி சிறப்பு விருந்தினர்களிடம் விளக்கப்படுகிறது
அர்ச்சகர் திருமுருகன் ஆற்றி வரும் தொண்டை பற்றி சிறப்பு விருந்தினர்களிடம் விளக்கப்படுகிறது

விழாவின் இறுதியில், அர்ச்சகர் திருமுருகனை பற்றி குறிப்பிட்டு அவர் கோவிலில் ஆற்றி வரும் சேவையை பற்றி அனைவருக்கும் எடுத்துக் கூறி, பாரதி விழாவை முன்னிட்டு அவர் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை வழங்குவதாக கூறி, சிறப்பு விருந்தினர் தேவார முரசு திரு.சிவக்குமார் அவர்களின் கைகளால் காசோலையை வழங்கினோம்.

இறைவனுக்கு பூஜை முதலான தொண்டு செய்து வரும் திருமுருகனுக்கு இறைவனின் திருவுளப்படி கிடைக்கும் ஒரு சிறிய உதவி இது. குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை எப்படி செலுத்தப்போகிறோம் என்று நிச்சயம் திருமுருகன் தவித்திருப்பார்.

திருமுருகன் கௌரவிக்கப்படுகிறார்
திருமுருகன் கௌரவிக்கப்படுகிறார்

“உனக்கு பூஜை முதலானவைகளை செய்கிறேனே… எனக்கு இதையாவது நீ செய்யக்கூடாதா?” என்று நிச்சயம் இறைவனிடம் முறையிட்டிருப்பார். முறையிடவில்லை என்றால் கூட உள்ளுக்குள் தவித்திருப்பார். ஆனைமுகனுக்கு அவன் அப்பனுக்கும் அந்த தவிப்பு தெரியாமல் இருக்குமா?

தொடர்ந்து இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலில் நம் தளம் ஒரு அங்கம் அவ்வளவே.

DSC_6496
திருமுருகன் அவர்களிடம் காசோலை வழங்கப்படுகிறது

‘இறைவனுக்கு தொண்டு செய்து வருபவர்கள் தங்களது தேவைகளை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அது தானே நடக்கும். எவரேனும் ஒருவரை கருவியாக்கி அவர்கள் மூலம் இறைவன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வான்’ என்பது தான் இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஏனெனில், சென்ற வாரம் வரை இவர் யார் என்று எனக்கு தெரியாது. நான் யார் என்று இவருக்கு தெரியாது. இவருக்கு கல்வி கட்டணத்தை நம் தளம் சார்பாக அளித்திருக்கும் கணேஷ் அவர்களுக்கும் இவரை தெரியாது. சொல்லப்போனால் கணேஷ் அவர்களையே எமக்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு வரை தெரியாது.

எங்கள் அனைவரையும் இணைத்தது யார் ?

சற்று யோசித்து பாருங்கள்!

=========================================================

லலிதா அம்மாள்
லலிதா அம்மாள்

இதற்கிடையே… கணேஷிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அவரது தாயார் லலிதா அம்மாள் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தன்று சிவலோக பதவி அடைந்து விட்டதாக கூறினார்.

தொடர்ந்து அவரிடம் பேசும்போது, தாயாருக்கு இறுதி நாட்கள் சற்று கடுமையாக இருந்ததாகவும், ஆனால் மார்கழி திருவாதிரையன்று தாயார் சிவலோகப் பதவி அடைந்தது ஒரு வகையில் அவர் செய்த பாக்கியம் என்றும் கூறினார்.

உண்மை தான்… புற்று நோயால் பாதிக்கப்பட்டு நாள் குறிக்கப்பட்டிருந்த அவர், மார்கழி திருவாதிரையில் அதுவும் ஆருத்ரா தரிசனத்தன்று முக்தி அடைந்தது ஒரு வகையில் பேறு தான்!

60, 65 வயது தாண்டிவிட்டாலே, எப்படி வாழப்போகிறோம் என்பதை விட எப்படி போகப்போகிறோம் என்கிற கவலை தான் பலருக்கு இருக்கும். யாருக்கும் எவ்வித சிரமமும் இன்றி உயிர் பிரியவேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது. காரணம்… நல்லவிதமாக அதுவும் நல்ல நாளில் இறைவனடி சேர்வதும் கூட ஒரு வகையில் பாக்கியம் தான்.

ARUDHRA

“சார்… அன்னயாவினும் புண்ணியங்கோடி தொண்டான வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு நீங்கள் உதவி செய்தீர்கள். அதுவும் மனமுவந்து. அந்த புண்ணியத்தால் தான் உங்கள் தாயார் திருவாதிரை அன்று சிவலோகப் பதவி அடைந்தார்”

“நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை சார். அம்மாவின் இறுதி நாட்கள் சற்று பயங்கரமாகத் தான் இருந்தது. (அவருக்கு இருந்தது கணையம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்!) மேலும் சில வாரங்கள் அது நீடித்திருந்தால் அவர் நிலைமை என்ன, அதை கண்டு துன்புறும் என் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்துகூட என்னால் பார்க்கமுடியவில்லை. ஆனால் அவர் திருவாதிரைத் திருநாளில் நல்லபடியாக முக்தியடைந்தது நாங்கள் எதிர்பாராதது!”

“உங்களை போன்று தொண்டுள்ளம் கொண்டவர்களை இறைவன் நிச்சயம் பார்த்துக்கொண்டு தானிருக்கிறான் சார்!” என்றோம்.

ஆம்… இறைவன் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்!

=============================================================
குறிப்பு : கோவில் அர்ச்சகர் என்றில்லை… விவசாயி, நெசவாளி, துப்புரவு தொழிலாளர்கள் போன்றோரின் குழந்தைகளின் கல்வி தேவைக்கு நாம் இயன்றளவு உதவி செய்யவேண்டும். இதன் முக்கியத்துவம் பற்றிய விரிவான பதிவை விரைவில் அளிக்கிறோம்.
=============================================================

[END]

9 thoughts on “மகனின் கல்வி உதவி – தாய் அடைந்த சிவலோகப் பதவி!

 1. சகோதரரே ,
  படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது…..உங்கள் தொண்டைப் பற்றிக் கூற வார்த்தைகள் இல்லை…இறைவன் என்றும் உங்களுடன் இருக்கட்டும்…வாழ்க வளமுடன்….

 2. சுந்தர்ஜி

  திரு கணேஷ் அவரது தாயார் லலிதா அம்மாள் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தன்று சிவலோக பதவி அடைந்து விட்டதாக செய்தி படித்தவுடன் ஒரு பக்கம் மனதுக்கு வருத்தம் தான். ஆனால் சிவனுக்குவுகந்த திருவாதிரை அன்று சிவலோக பதவி கிடைத்தது அவர் செய்த புண்ணியம்.லலிதா அம்மாள் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் .

  கணேஷ் அவர்களுக்கு, தாயார் லலிதா அம்மாள் அவர்கள் எப்பொதும் ஆசிவதித்து அவரின் துணை இருபார்

 3. இறைவன் போடும் முடிச்சு அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் … நீங்கள் உணர்வு பூர்வமாக அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் …

  “60, 65 வயது தாண்டிவிட்டாலே, எப்படி வாழப்போகிறோம் என்பதை விட எப்படி போகப்போகிறோம் என்கிற கவலை தான் பலருக்கு இருக்கும்.” இன்று முதியோர்கள் படும்பாடு அப்பட்டமான உண்மை … கணேஷ் ஒரு மகனின் கடமையை பரிபூரணமாக நிறைவேற்றி விட்டார் … அவருக்கு வாழ்த்துக்கள்

 4. நீங்கள் தேடி தேடி போய் உதவுவது கண்களில் நீரை வர பண்ணுகிறது. எதனை பேர் இப்படி இருக்கிறார்கள் இக் காலத்தில். எனக்கும் இப்போது தான் இறைவன் சரியான தோழமையை தந்து கொண்டு உள்ளன் என எண்ணுகிறேன்.

 5. டியர் சார் ,

  இட்ஸ் ஹாப்பி டு சி தி வொர்க்ஸ் தட் ஆர் டன் பி யு,இட் வில் சுரேலி encourage யௌங்க்ச்டெர்ச் லைக் மீ டு பொல்லொவ் யுவர் வொர்க்ஸ் .

 6. அன்பு சுந்தர்,

  காலத்தினல் செய்த உதவிசிறிதெனினும் அது ஞாலத்தினும் மாலப் பெரிது என்று வள்ளுவர் கோமான் சொன்னது இன்று மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது உங்களால். பாரதி விழாவிற்குப் பின்னர் நான் வெளியூர் சென்று விட்டேன். இண்டு தான் திரும்பினேன். அதனால் உங்களிடம் பேச முடியவில்லை. விழா நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்தேன். அதுவும் பார்வை தெரியவில்லையே என்கிற குறை ஏதும் இல்லாமல் அந்தப் பெண்குழந்தை “தீராத விளையாடுப் பிள்ளைக்கு” நடன மாடியது இன்னும் என் கண்களிலும் மனதிலும் அப்படியே அழியாத சித்திரமாக இருக்கிறது. அதுபற்றி நான் வெளியூரில் இருக்கும்போது சிலரிடம் பேசினேன். எந்னால் கண்ணில் நீர் வராமல் பேச முடியவில்லை. வாழ்க திரு ராதாகிருஷ்ணனும் அவரது குழந்தைகளும்.அதுபோல குன்றத்தூர் முருகன் கோவில் (பிள்ளையார் கோவில்) குருக்களுக்கு தாங்கள் செய்த உதவி மிகவும் சிறந்தது. கணேஷின் தாயார் சிவலோகப் பிராப்தி அடைந்தது இந்த தானத்தினால் நேரே மோட்சபதவி நிச்சயம் அவர்களுக்கு.

  இப்படி இன்னொரு சந்தர்ப்பம் வரும்போது அடியேனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அடியேன் என்னாலான உதவிகளைச் செய்கிறேன்.

  நன்றி மீண்டும்.

  அன்பன்

  நாராயணன்
  மணப்பாக்கம்.

  1. சார்… பாரதி விழாவுக்கு தாங்கள் தவறாமல் வந்திருந்து விழா முடியும் வரை இருந்து எங்களை ஆசீர்வதித்தது நாங்கள் பாக்கியம்.

   உங்கள் சேவையை நிச்சயம் எதிர்காலத்தில் பயன்படுத்திகொள்வோம்.
   ………………………………………
   வாசக அன்பர்களே, திரு.கணேஷ் அவர்களின் தாயார் லலிதா அம்மாள் அவர்களுக்காக நடைபெற்ற பிரார்த்தனையில் நமது பிரார்த்தனை கிளப்பில் தலைமையேற்று அந்த வாரம் நடத்தியது இவர் தான்.

   – சுந்தர்

 7. திருமதி லலிதா அம்மாள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  நீங்கள் தானாக முன் வந்து அடுத்தவர்களுக்கு செய்யும் உதவியை பார்த்து நாங்களும் அது போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது .இந்த நல்ல எண்னத்தை உருவாகிய RMS அவர்களுக்கு இந்த தளம் சார்பாக கோடானு கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  வாழ்க உமது தொண்டு. இறைவின் கடை கண் பார்வை உங்கள் மேல் பட வாழ்த்துக்கள்.

  நன்றி
  uma

 8. சுந்தர்ஜி,

  நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பாரதி விழா அன்று கிடைக்காமல் போய் விட்டது. மனம் மிகவும் வருந்துகின்றது.

  திருமதி லலிதா அம்மாளின் ஆன்மா நிச்சயம் நல்ல வழிக்கு சென்று இருக்கும். பிள்ளையாருக்கு நித்ய பூஜை செய்யும் திரு முருகன் அவர்களை பிள்ளையார் கை விடமாட்டார். அவர் குழந்தைகள் மேன் மேலும் நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வருவார்கள்.

  உங்கள் தொண்டுகள் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  NANDRI

Leave a Reply to kishore Cancel reply

Your email address will not be published. Required fields are marked *