வறுமை திறமைக்கு தடையாக இருக்க முடியுமா? உலக சரித்திரத்தில் ஆர்யபட்டாவுக்கு எப்படி ஓர் இடமுண்டோ அதேபோலத் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்னொரு மாமேதை ராமானுஜன். சிலர் தங்களது படிப்பாலும் உழைப்பாலும் மேதைகளாகிறார்கள். ஆனால் ‘கணித மேதை’ ராமானுஜன் பிறவியிலேயே மேதை. வறுமை ஒருவருடைய திறமையை முடக்கிப் போட்டுவிட முடியாது என்பதற்கு ‘கணித மேதை’ ராமானுஜன் ஓர் உதாரணம். இவர் விட்டுவிட்டுச் சென்றிருப்பது இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே. அதில் இருக்கும் கணித மேதைமை உலகளாவிய அளவில் தன்னிகரற்றது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிலர் வாழ்ந்து மறைகிறார்கள். ராமானுஜன் போன்ற ஒரு சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள்.
நூற்றாண்டு விழா, 125-வது பிறந்த நாள் விழா என்று கொண்டாடப்படும்போதுதான் ராமானுஜன்கள் நினைக்கப்படுகிறார்கள். ”என் கணவரைப்பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்” என்றார் கணித மேதை ராமானுஜன் மனைவி ஜானகி. ஒரு தன்னம்பிக்கையின் வரலாறு ராமானுஜனின் வரலாற்றை தன்னம்பிக்கையின் வரலாறாகத்தான் பார்க்க வேண்டும். கும்பகோணம் போர்டர் டவுன் ஹாலில் நடந்த ஆரம்பப் பள்ளித் தேர்வில் ராமானுஜனின் நண்பன் சாரங்கபாணி கணக்குப் பாடத்தில் 45-க்கு 43 வாங்கினார். ராமானுஜனால் 42-தான் வாங்க முடிந்தது. ‘இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது’ என்று, சாரங்கபாணியிடம் பேசாமல் இருந்துள்ளார் ராமானுஜன். அன்று முதல் கணக்குப் பாடத்தை திரும்பத் திரும்பப் போட ஆரம்பித்திருக்கிறார். பாடத்தைத் தாண்டி மற்ற கணக்குகளில் மனது ஈடுபட்டது. நூலகர் உதவியுடன் பல கணித நூல்களைப் படித்தார். எப்போதும் நோட்டு, பெரிய பலகை வைத்துக்கொண்டு கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தார். பள்ளியில் இருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தும் இது தொடர்ந்தது. கணிதப் பேராசிரியர் என்.ராமானுஜாச்சாரியார், இவரது நோட்டை வாங்கிப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். இந்தத் தகவல் கல்லூரி முதல்வருக்குத் தெரிவிக் கப்பட்டது. இதே கல்லூரியின் முன்னாள் கணிதப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார்தான், ‘உனது கணித ஆராய்ச்சிக் குறிப்புகளை இங்கே யாரிடமும் காட்டி நேரத்தை வீணடிக்காதே… கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பு’ என்றனர். ராமானுஜன் திறமை, உலகத்துக்கு பரவியது இப்படித்தான். ‘எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்’ என்று, லண்டன் கணித மேதை ஜி.எச்.ஹார்டிக்கு ராமானுஜன் எழுதிய கடிதம் அவரது வறுமை நிலையை உணர்த்துகிறது. வறுமை காரணமாக மதராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜன் வேலைக்குச் சேர்ந்தபோது உதவிய பிரான்சிஸ் ஸ்பிரிங் முதல், லண்டனுக்கு அவரை வரவழைத்துக்கொண்ட ஜி.எச்.ஹார்டி வரை எத்தனையோ ஆங்கிலேயர்கள் ராமானுஜனின் வாழ்க்கைக்கு உதவியுள்ளனர். இந்த பதிவை தயார் செய்துகொண்டிருந்தபோது அறிந்த ஒரு தகவல், ராமானுஜன் மீது நாம் வைத்திருந்த மதிப்பை பன் மடங்கு உயர்த்திவிட்டது. பிற உயிர்களை கொன்று தன்னுயிரை வளர்க்க விரும்பாத உத்தமர் இராமானுஜன் இலண்டன் சென்ற சில மாதங்களிலேயே முதலாம் உலகப் போர் தொடங்கியது. சைவ உணவு பழக்கமுள்ள இராமானுஜனுக்கு போரின் தொடக்கத்தில் பாலும், காய், கனிகளும் தடையின்றிக் கிடைத்தன. ஆனால் போர் நீடிப்பால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட, நாட்கள் செல்லச் செல்ல சைவ உணவுப் பொருட்கள் கிடைப்பது குறைந்துபோனது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கம் ராமானுஜனை விட்டு விலகத் தொடங்கியது. இந்நிலையில் TB எனப்படும் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. காசநோய்க்கான காரணங்களில் விட்டமின் டி சத்துக்குறைவும் முக்கிய காரணம். அப்போதெல்லாம் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விட்டமின் டி சத்து குறைப்பாட்டை தடுக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக் கறி, மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள் போன்றவையே உணவாக உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சைவ உணவை தீவிரமாக பின்பற்றும் பிராமணரான ராமானுஜன், இவ்வகை உணவுகளில் ஒன்றைக்கூட தொட விரும்பவில்லை. மருத்துவர்கள் பலவாறு அறிவுறுத்தியும், மீன் எண்ணெய் மாத்திரைகளைக் கூட உட்கொள்ள அவர் தயாராக இல்லை. சூரிய ஒளியில் உள்ள ULTRA VIOLET RAYS நமது தோளில் படும்போது விட்டமின் டி உற்பத்தியாகி உடலுக்குள் செல்லும். ஆனால் லண்டன் நகருக்குள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடந்து எப்போதும் கணக்கு சூத்திரங்களையே பழகிக்கொண்டிருந்ததால் சூரிய ஒளியே ராமானுஜன் மீது விழவில்லை.
“உயிரே போனாலும் பரவாயில்லை, அசைவ உணவை தொடமாட்டேன்” என்று வாழ்ந்த ராமானுஜனின் வைராக்கியத்தை பற்றி அறிந்த பிறகு அவர் மீதான் மதிப்பு எமக்கு பன்மடங்கு பெருகிவிட்டது. எனவே காசநோயை முற்றிலும் குணப்படுத்த வழியின்றி போனது. ஏற்கனவே சத்துக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த ராமானுஜன் சென்னை வந்து சில மாதங்களிலேயே காலமானார். வறுமையைப் புலமையால் வென்ற ராமானுஜனை காசநோய் காவு வாங்கியது. 32 வயதில் மரணம் அடைந்து விட்டார். அவரது நோட்டுப் புத்தகங்கள் 100 ஆண்டுகள் கழித்தும், கணித மேதைகளால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார் கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார். ராமானுஜனின் நினைவு வாழும் காலம்வரை இந்தியாவின் பெருமை பேசப்படும். இந்தியாவின் பெருமை பேசப்படும்போதெல்லாம் தமிழகம் ராமானுஜன் போன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கும். ராமானுஜன், தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். ………………………………………………………………………………………………………….. “நம்மிடையே வாழும் மேதைகளை எப்படி நடத்தவேண்டும் என்று நமக்கு தெரியவில்லை” பாரதி, பெரியார், முகம் ஆகிய மகத்தான படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். இதில் ராமானுஜனாக நடிப்பவர் ஜெமினிகணேசன் – சாவித்திரி தம்பதிகளின் பேரன் அபிநய் ஆவார். பைரசியில் அதை பார்க்காமல் திரையரங்கிற்கு நம் பிள்ளைகளை, தம்பி தங்கைகளை அழைத்து சென்று பார்ப்போம். அதுவே நாம் ராமானுஜனுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை தான்.
ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க காரணம் என்ன? ஞானராஜசேகரன் : “அவர் வாழ்க்கை இன்றளவும் நமக்கு பொருந்தக் கூடிய மிகப் பெரிய மெசேஜ் ஒன்றை சொல்லிவிட்டு போயிருக்கிறது. ஒரு மேதை நம் சமூகத்தால் எப்படி நடத்தப்படுகிறார் என்று அவரது வாழ்க்கை அப்பட்டமாக காட்டுகிறது. அவர் ஒரு மேதை என்பதை அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவரது அறிந்துகொள்கிறார்.” “ஒரு மேதையை அவர் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், அரசாங்கம், அதிகார வர்க்கத்தினர், முதலாளிகள் ஆகியோர் அடங்கிய நம் சமூகம் எப்படி நடத்தியது என்பதின் ஆவணமே இந்த திரைப்படம். இன்றைக்கும் நம்மிடையே வாழும் மேதைகளை எப்படி நடத்தவேண்டும், கொண்டாடவேண்டும் என்று நமக்கு தெரியவில்லை என்பது தான் சோகம். எனவே இந்த் திரைப்படம் தற்காலத்துக்கும் மிகவும் பொருந்தும்.” ………………………………………………………………………………………………………….. (ஆக்கத்தில் உதவி : விகடன் நூலகம், தினமணி | ராமானுஜன் புகைப்படங்கள் உதவி : REDIFF.COM)
SUPERB ARTICLE .
காமராஜர் பிறந்த தினம் பள்ளிகளில் கொண்டாடுவது போல், இவரது பிறந்த தினமும் பள்ளிகளில் கொண்டாடப் படவேண்டும்.
///கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார். ராமானுஜனின் நினைவு வாழும் காலம்வரை இந்தியாவின் பெருமை பேசப்படும். இந்தியாவின் பெருமை பேசப்படும்போதெல்லாம் தமிழகம் ராமானுஜன் போன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கும். ராமானுஜன், தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். -///
மா மனிதர்களின் பிறந்தநாளோ அல்லது நினைவுனாளோ அவர்களை பற்றி தனி பதிவினை இட்டு அவர்களுக்கு மரியாதை செய்வது தங்களுடைய தளம் சிறந்து விளங்குகிறது…நமது அரசாங்கம் அவர்களுடைய வாரிசுகளை எப்படி கவனிக்கின்றது..அவர்களின் நினைவு இடங்களை எப்படி பராமரிக்கின்றது என்பதை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம் ..(கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தினை போன்று ) உங்களுடைய இந்த சேவையை மற்றவர்கள் போற்றி புகழ்கிறார்களோ இலையோ. ..அந்த ஆன்றோர்களின் ஆத்மா நிச்சயம் உங்களை போற்றி வாழ்த்தும் …
டியர் சுந்தர்ஜி
பாரதி, பெரியார், முகம் ஆகிய மகத்தான படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருவது பற்றி மிக்க மகிழ்ச்சி,
இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களுக்கு ராயல் salute பாரதியை போல் ராமானுஜரும் சிறு வயதில் காலமாகிவிட்டார் என்பதை படிக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக உள்ளது. தான் வாழ்ந்த காலத்திற்குள்ளேய மிக பெரிய சாதனை செய்து விட்டார்;
i hereby ensure that i will go to theatre and see the film
regards
உமா
கணித மேதை ராமானுஜன் மஹாகவி பாரதி போன்றோர் உயிருடன் வாழ்ந்த கால கட்டம் மிகவும் குறைவாக இருந்தாலும் அவர்களது வாழ்கையின் தாக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு உணரப்படும். தீர்க்க ஆயுசுடன் வாழ்ந்து மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களிடையே துவேஷ உணர்வை தூண்டி தலைவர்களாவதைவிட, மஹாகவி மற்றும் ராமானுஜன் போல் மேன்மையான வாழ்கை வாழ்ந்தவர்கள்தான் உண்மையான மக்கள் தலைவர்கள்.
இதில் என்ன வேதனைஎன்றால் இவர்களையெல்லாம் மக்கள் நல்ல வழிகாட்டிகளாக உதாரண புருஷர்களாக பார்பதேயில்லை. ஏனென்றால் இவர்கள் பெரிதாக பணம் சம்பாதிக்கவில்லை என்பதாலோ என்னவோ? இருந்தாலும் நம்முடைய தளம் இந்த விஷயத்தில் மிகவும் வித்யாசமானது. நன்றி சுந்தர்.
அருமையான பதிவு சுந்தர் சார் …
சிலர் வாழ்ந்து மறைகிறார்கள். ராமானுஜன் போன்ற ஒரு சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள். உண்மையின வார்த்தைகள் சார்…
பிறவி மேதை ராமானுஜர் ……