பக்த விஜயத்தில் சமீபத்தில் நாம் படித்து உருகிய கதையை உங்களுக்கு இங்கே தருகிறோம்.
இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நாம் நம் கடமையை செய்துவந்தால் பார்க்கவேண்டியவர்களை அவன் பார்த்துக்கொள்வான் என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் உண்மை!
ஆடியில் செய்தவன் ஆவணி வந்ததும் அனுபவித்தே தீரவேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி!!
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (குறள் 319)
===============================================================
பக்தனை காத்த பாண்டுரங்கன்!
பயிர் பச்சைகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த நகரம் பைடனிபுரம். இந்நகரத்து மக்கள் தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். இங்கு சூரிய நாராயணர் என்ற பெரியவர் வசித்தார். இவர் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்த பின்னரே தமது வேலைகளைச் செய்வார். இவருக்கு சூரிய பகவானின் அருளால் ஒரு மகன் கிடைத்ததால், பானு என பெயரிட்டார்.
பானுவுக்கு ஏழு வயது ஆனதும், உபநயனம் செய்வித்து வேத அத்யனத்தை கற்பித்தார். ஆனால், தந்தையின் அடிக்குப் பயந்து ஒப்புக்குப் படிப்பான் பானு. இதனால் பெற்றோர் மிக வருந்தினர்.
ஒருநாள் தந்தைக்கு கோபம் உச்சிக்கு ஏற, மகனை நன்றாக அடித்துவிட்டார். இனி இங்கு இருந்தால் தந்தையார் நம்மை அடித்தே கொன்றுவிடுவார் என்று எண்ணிய பானு வீட்டைவிட்டு நகரை அடுத்துள்ள காட்டிற்கு சென்று விட்டான். பசி, தாகம் கண்ணை இருட்டிக்கொண்டு ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தான். அது சூரியதேவன் கோயில். சூரியதேவனைப் பார்த்ததும் துதிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற, இரு கரம் தூக்கி, “பகவானே ! வீட்டில் பெற்றோர் அடிக்கும் அடிக்குப் பயந்து உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றும்” என்று மனமுருக வேண்டி நின்றான். கதிரவன் ஓர் அந்தணர் வேடம் புனைந்து அவன் முன் காட்சி தந்தார். ஒளிவீசும் அவரின் முகமலரைக் கண்டு வியந்த சிறுவன் அவர் பாதங்களில் பணிந்து, “ஐயனே ! எனக்கு வேதங்கள் வரவில்லை. தாங்கள்தான் காக்க வேண்டும்” என்றான்.
கதிரவன் அவனை அணைத்து, “குழந்தாய் ! இனி உன்னை யாரும் அடிக்கமாட்டார்கள். இன்றுமுதல் உனக்கு எல்லாவிதக் கலைகளும், வித்தைகளும் வரும். ஸ்ரீ பாண்டுரங்கனின் புகழ்பாடி அவரை பக்திசெய்” என்று கூறி மகாமந்திரத்தை உபதேசித்தார்.
அறிவு ஒளி வீச பானு வீடு திரும்பினான். பானுவின் கண்களில் வீசும் அறிவு ஒளி கண்டு பெற்றோர் வியந்தனர். அவர்களிடம் காட்டில் நடந்தவற்றைக் கூறினான்.
காலம் உருண்டோடியது, பானு இளைஞன் ஆனான். அவனின் பக்தியையும் அறிவையும் கண்டு மக்கள் அவனை பானுதாசர் என அழைக்கலாயினர். தக்க வயதில் பானுதாசருக்கு மணம் முடித்தனர் பெற்றோர், அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தன் தந்தையின் பெயரான சூரியநாராயணன் என்ற பெயரை வைத்தார்.
பானுதாசரின் மனம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. இறைவனைப் போற்றிப்பாடுவதே தன் கடமை என்று நினைத்தார். இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. உறவின வியாபாரிகள் சிலர் பானுதாசரின் குடும்பம் கஷ்டப்படுவதைக்கண்டு அவருக்கு, சிறிய ஜவுளிக்கடை வைத்துக் கொடுத்தனர். அத்துடன் வியாபார நுணுக்கங்களான உண்மையைச் சொல்லி விற்றால் லாபம் கிடைக்காது. பொய் சொல்லிவிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர்.
பானுதாசர் ஜவுளிக்கடையை ஏற்றுக்கொண்டார். வியாபார நுணுக்கங்களை காற்றில் பறக்க விட்டார். பதிலாக கடைக்கு வருபவர்களிடம் நல்ல கருத்துக்களை கூறுவார். இதனால் இவர் பெருமை எங்கும் பரவியது. மக்களும் இவர் கடையில் குவிந்தனர். விற்பனையும் பெருகிற்று. மற்ற கடைகளின் வியாபாரம் மந்தம் அடையத் தொடங்கியது. இதனால் எல்லோரும் ‘யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போல் நாமே நம்மைக் கெடுத்துக்கொண்டோமே’ என்று பொறாமையும், கலக்கமும் கொண்டனர். இதற்கு ஒரு முடிவு கட்ட ஏற்பாடு செய்தனர்.
ஒருநாள் எல்லா வியாரிகளும் குதிரைகளின் மேல் சரக்குகள் ஏற்றி வெளியூர் சென்றனர். பானுதாசரும் தம் சரக்குகளுடன் புறப்பட்டார். வியாபாரம் முடிந்து ஊர் திரும்பும்போது இருட்டத் தொடங்கவே நடுவில் உள்ள ஒரு சிற்றூரில் உள்ள கோயில் மண்டபத்தில் மீதி சரக்குகளுடனும், விற்ற பணத்துடனும் தங்கினர்.
கோயிலுக்குள் ஹரிதாசர் என்னும் உபன்யாசர், பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பானுதாசர் மற்றவர்களிடம் தம் பொருள்களைப் பார்த்துக் கொள்ளும்படியும், பிரசங்கம் கேட்டுவிட்டு வருவதாகவும் கூறி கோயிலுக்குள் சென்றுவிட்டனர்.
மற்ற வியாபாரிகள், கடவுளே நமக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார் என்று நினைத்தனர். பானுதாசரின் பொருள்கள் அனைத்தையும் அருகில் இருந்த ஒரு பாழும் கிணற்றில் போட்டனர். குதிரையையும் அவிழ்த்து அதை விரட்டி விட்டனர். பானுதாசரிடம், “பொருள்கள் களவு போய்விட்டது” என்று சொல்லிவிடலாம் என்று திட்டமிட்டனர்.
அங்கே பானுதாசர் பிரசங்கம் கேட்டுக்கொண்டிருக்க, இங்கே நள்ளிரவில் உண்மையிலேயே கொள்ளையர் கூட்டம் வியாபாரிகள் தங்கியிருந்த மண்டபத்தைச் சூழ்ந்தது. அவ்வளவுதான் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். பொறாமை பிடித்த வியாபாரிகளின் பொருட்கள் அனைத்து கொள்ளையர்களால் அபகரிக்கப்பட, அங்கே கிணற்றுக்குள் பானுதாசரின் பொருட்கள் பத்திரமாக இருந்தது.
அப்போதுதான் தாங்கள் செய்த தவறை வியாபாரிகள் உணர்ந்தனர். பானுதாசரின் பொருட்களை அபகரிக்க நினைத்தோம். ஆனால் நமது பொருட்கள் பறிபோயின. கொள்ளையர்கள் நம்மை கொல்லாமல் விட்டதே கடவுள் புண்ணியம். பானுதாசர் தெய்வ பக்தி மிக்கவர். அவர் பொருட்கள் பத்திரமாக கிணற்றில் இருக்கின்றன. நமது பொருள்கள்தான் போய்விட்டன என்று மனம் வருந்தினர்.
பானுதாசர் ஹரிதாசரின் பிரசங்கத்தைப் பற்றி அசைபோட்டபடி மண்டபத்திற்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், “ஐயா ! இந்தாருங்கள் உங்கள் குதிரை” என்று அவரிடம் கடிவாளத்தைக் கையில் கொடுத்துச் சென்றான்.
கட்டி வைத்த குதிரை எப்படி இங்கே வந்தது ? கொடுத்துச் சென்ற மனிதர் யார் ? என்ற சிந்தனையுடன் அந்த மனிதனிடம் கேட்பதற்குள், வந்தவரைக் காணவில்லை. குழப்பத்துடன் அவர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே எல்லோரும் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தனர். எல்லோரும் பானுதாசரிடம் நடந்ததைக்கூறி வருந்தினர். அவர்களிடம், “ஐயா? நீங்கள் தான் எனக்கு வியாபாரம் செய்ய வழி செய்தீர்கள். இவை உங்களின் உடைமை. கிணற்றில் கிடப்பவற்றை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள்!” என்றார்.
இதன்பின் பானுதாசர் தெய்வ பக்தியில் மனம் செலுத்தினார். இறைவனைப் பற்றிப் பாடுவதையே தன் கடமையாகக் கொண்டார். தக்க தருணத்தில் இறைவன் அவரை ஆட்கொண்டார்.
(நன்றி : மஹா பக்த விஜயம், DINAMALAR.COM)
[END]
மிகவும் அருமையான கதை
நன்றி
உமா
சுந்தர்ஜி
உண்மைக்கு விலை ஆண்டவனின் கருணைதான்.மிக அருமையான பதிவு
சுந்தர் சார்,
என் மன வலி போக்க தக்க நேரத்தில் அருமையான பதிவு தந்தீர். என் நண்பனுக்கு உதவ போய் நான் பழி சுமந்து நிற்கிறேன். கடவுள்தான் அவனுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் வேண்டுகிறேன்.
பக்தனை காத்த பாண்டுரங்கன் தலைப்பில் பானுதாசர் கதை அருமை.
என்றும் உண்மை ஜெய்க்கும்.
இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நாம் நம் கடமையை செய்துவந்தால் பார்க்கவேண்டியவர்களை அவன் பார்த்துக்கொள்வான்.
ஆடியில் செய்தவன் ஆவணி வந்ததும் அனுபவித்தே தீரவேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி!! –
உங்கள் பதிவில் எல்லாமே அனுபவித்து படிக்க வேண்டிய வரிகள்.
வாழ்க வளமுடன்.
சுந்தர்ஜி
இறைவனிடம் செலுத்தும் அன்பு ஒருபோதும் வீண் போவதில்லை என்பதை உணர்த்தும் நல்ல கதை. இதை நம் தளத்தில் கொண்டுவந்ததற்கு நன்றி.
அன்பு சுந்தர் ஜி.
பாண்டுரங்கன் மகிமை படித்தேன். நன்கு உள்ளது. நன்றி.
அன்புடன்,
ஜீவன்.
Awesome sir…….
-Uday