Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

print
18/12/2013 புதன் மார்கழி திருவாதிரை. சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசனம். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழி கொண்ட இரு நட்சத்திரங்கள் திருவாதிரையும், திருவோணமும் ஆகும். இதில் திருவாதிரை சிவபெருமானுக்கும், திருவோணம் திருமாலுக்கும் உகந்தவையாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இதில் இருந்தே திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்பு நமக்கு விளங்கும்.

ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன்மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்றுதான் சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும்  வழிபாடாக உள்ளது.

Arudhra Dharisanam

நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் (சிருஷ்டி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம், கிருஷ்ணகந்தம்) ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

தானும் ஆடிக்கொண்டு, உலகமனைத்தையும் ஆடவைத்துக் கொண்டு ஒரு மகத்தான சக்தி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதே இப்பண்டிகையின் நோக்கம். உலக இயக்கத்திற்குக் காரணமான சிவபெருமானின் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் திருநாளே திருவாதிரை நாள். அன்று சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருவான்மியூர் ஆகிய தலங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ‘ஆகா! அற்புதம்! அற்புதமான காட்சி!’ என்று மனமுருகி சத்தம் போட்டார். அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.

கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். ‘சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?’ என்றனர்.

lakshmi-vishnu-Pictures-Photos

திருவாதிரைக்கு இணை தரணியில் ஏது?

‘திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டும் என்றால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா!’ என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு.

ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.

திருவாதிரை நன்னாளில் இறைவனின் திருநடனம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. இறைவனின் திருநடனம் உலக இயக்கத்தைக் குறிக்கிறது. மிகச்சிறிய அணு முதல் பிரம்மாண் டமான அண்டங்கள் வரை சீராக இயங்குவதற்கு அந்நடனமே அடிப்படையாக விளங்குகிறது. நடராஜப் பெருமானின் திருநடனத்திலிருந்தே வேதங்கள், ஆகமங்கள், கலைகள் அனைத்துமே பிறக்கின்றன. நாதம் பிறக்கிறது. நாதத்திலிருந்தே ஓசை ஒலிகளும், ஓம் என்னும் பிரணவ மந்திரமும் தோன்றின. இந்த நன்னாளில்தான் உமையம்மை, பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாதர் ஆகியோருக்கு சிவபெருமான் இத்திருக்கூத்தை ஆடிக்காட்டினார். அந்நடனத்தை பக்தர்கள் கண்டு மகிழும் வண்ணம் ஆடி, தரிசனம் தந்து, திருவாதிரையன்று அருள் பாலிக்கிறார். அதுவே ‘ஆருத்ரா தரிசனம்’ என்ற சிறப்பான விழாவாக நடராஜர் கோவில் கொண்டிருக்கும் தலங்களில் கொண்டாடப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.

திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள்.  “திருவாதிரைக்களி ஒரு வாய் தின்னாதவர் நரகக்கூழ்” என்பது பழமொழி. ஏழு காய்கறிகளால் செய்த கூட்டுடன் களியை நிவேதனம் செய்து வழிபட்டால் ஏழு பிறவிகளிலும் இன்பமே கிட்டும் என்பது ஐதீகம்.

thiruvadhirai kaliகளியின் பின்னணியில் உள்ள இறைவனின் திருவிளையாடல்!

களி நிவேதனம் செய்யப்படுவதற்கு ஒரு வரலாறும் கூறப்படுகிறது. சேந்தனார் என்ற சிவபக்தர் தில்லையில் விறகு விற்று ஜீவனம் நடத்திவந்தார். தினந்தோறும் அடியார்களுக்கு உணவளித்துவிட்டு, அதன் பிறகே தான் உண்ணும் பழக்கமுடையவர். ஒரு சமயம் தொடர்ந்து மழை பெய்ததால் விறகு சேகரிக்க முடியவில்லை. உணவில்லாமல் பசியால் வாடினார். ஒரு நாள் சிறிதளவு மாவு கிடைத்தது. அதில் களிசெய்து, உணவு படைப்பதற்காக சிவனடியார் யாரேனும் வருகின்றனரா என எதிர்பார்த்து காத்திருந்தார்.

சிவபெருமான் சேந்தனாரின் பக்தியைச் சோதிப்பதற்காக முதியவர் வேடம் கொண்டு அவருடைய இல்லத்திற்கு வந்தார். அவர் அளித்த களியை உண்டு மகிழ்ந்தார். மீதமிருந்த களியையும் தன்னிடம் கொடுக்கும்படி முதிய வர் கேட்டார். தனக்காக வைத்திருந்ததையும் ஒரு பழந்துணியில் கட்டி அடியாராக வந்த சிவபெருமானிடம் கொடுத்தார் சேந்தனார். அதனைப் பெற்றுக் கொண்ட இறைவன் பொன்னம்பலம் நோக்கிச் சென்றமர்ந்தார்.

சோழ மன்னன் தினந்தோறும் நாள் வழிபாட்டில் நடராஜப் பெருமானின் திருவடிச் சிலம்புகளின் அருளோசையைக் கேட்டு மகிழ்வான். அன்று சிலம்போசை கேளாததால் மனம் வருந்தினான். அன்றிரவு சிவபெருமான் அம்மன்னன் கனவில் தோன்றி, “சேந்தன் இல்லத்தில் களி அமுது உண்ணச் சென்றதால், நீ நடத்தும் நாள் வழிபாட்டிற்கு வரத்தவறினோம்!” எனக்கூறி மறைந்தார்.

மறுநாள் விடியற்காலையில் வழிபாட்டிற்காக மன்னன் பொன்னம்பலத்திற்குச் சென்ற போது அங்கு களி சிந்தியிருந்ததைக் கண்டான். முதல் நாளிரவு கனவில் சேந்தன் இல்லத்தில் களி அமுது உண்டதாகக் கூறியது நினைவில் வந்தது. அது உண்மையே என்று உணர்ந்த மன்னன் அச்செய்தியை மற்றவர்களுக்கும் கூறினான். அன்று முதல் திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு களி நிவேதனம் செய்யும் மரபு ஏற்பட்டு ‘திருவாதிரைக் களி’ சிறப்பு பெற்றது.

அறிவிழந்து ஆணவம் கொண்டு செயல்படுவோரை, இறைவன் அசுரன் முயலகனைக் காலடியில் போட்டு மிதிப்பதைப் போல, மிதித்துக் களியாக்கி விடுவான் என்பதே களியின் தத்துவம்.

உத்தரகோச மங்கை அதிசயம்

இராமநாதபுரத்திற்கு மேற்கே உத்தரகோச மங்கை என்ற தலம் அமைந்துள்ளது. அங்குள்ள திருக்கோவிலின் வடக்குப் பிராகாரத்தில் நடராஜர் சந்நிதி சிறிய கோவில் அமைப்பில் உள்ளது. அங்குள்ள நடராஜர் நிரந்தரமாக சந்தனக் காப்புக்குள் மறைந்திருக்கிறார். அந்தத் திருஉருவம் மரகதத்தினால் ஆனது. அதன் பிரகாசம் கோடி சூரிய ஒளி கொண்டது. அவ்வுருவத்தை நேரிடையாகக் கண்ணால் காணமுடியாது. ஆண்டுக்கொரு முறை மார்கழி திருவாதிரை நாளில் முதல் ஆண்டில் இடப்பட்ட சந்தனக்காப்பு அகற்றப்பட்டு புதிதாக சந்தனக்காப்பு இடப்படுகிறது. இறைத் திருமேனியில் காப்பிடும் அர்ச்சகரும் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காப்பிடுவார். காப்பிடப்பட்ட பிறகுதான் நடராஜர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

இத்திருவாதிரை நோன்பை அடிப்படையாகக் கொண்டே மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடியுள்ளார்.

(ஆக்கத்தில் உதவி : தினத்தந்தி & கே. சுவர்ணா, அம்மன் தரிசனம் ஆன்மீக இதழ்)

8 thoughts on “ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

  1. Dear sundarji,

    Myself and my mother went to vadapalani to see viswaroopa darshan today at 04:00am and today viswaroopa darshan started at 02:00am till 02:30am.We missed it today, we saw
    arudhra darshan in vadapalani murugan temple.

    After darshan was completed we came to murugan shrine.

    Adadaaa enna oru katchi kaalaiyil thandhar en appan murugan.

    Day started with a nice darshan.

    Thanks & Regards

    Harish.V

  2. டியர் சுந்தர்ஜி

    Happy morning

    இன்றைய பொழுது இனிமையாக துவங்கியது . உங்கள் பதிவிற்கு நன்றி.

    This is the first time, I went to temple and saw natrarajar abhisekam in வடபழனி முருகன் temple . Very nice experience for me and my son .

    //உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
    நிலவுலாவிய நீர்மலி வேணியன்
    அழகிற் சோதியன் அம்பலத்தாடுவான்
    மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் //

    நன்றி
    உமா

    1. உமா அவர்களே அது அழகிற் அல்ல அலகிற் சோதியன்

      அவரை அளவிட முடியாத என்பது என் கருத்து

  3. சுந்தர்ஜி
    சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை காண, நடராஜரின் ஆருத்ரா தரிசனம் அனந்தம்.

    கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
    சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
    நின் தாள் துணை நீ தா!

    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    அல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வா (தில்லை)

    எங்கும் இன்பம் விளங்கவே
    அருள் உமாபதே
    எளிமை அகல வரம் தா வா வா
    வளம் பொங்க வா (தில்லை)

    பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    கலையலங்கார பாண்டிய ராணி நேசா
    மலை வாசா! மங்கா மதியானவா (தில்லை)

  4. டியர் சுந்தர்ஜி
    தங்கள் பதிப்பு அருமை . நடனத்தின் கடவுள் நடராஜர் கடவுள் பெருமை அறிந்த அயல் நாட்டு விஞ்ஞானிகள் – மிக முக்கியமாக கடவுள் துகள் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் – அந்த நியுகிளியர் லேப் (CERN லேப் ) முன்பாக நம் நடராஜர் சிலையை வைத்துள்ளார்கள் . இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பௌதிக கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசும் பெற்றனர் இந்த விஞ்ஞானிகள் (2013). பிரபஞ்சம் தோன்றியது நம் நடராஜ கடவுளின் நடனத்தில் மற்றும் அவரின் உடுக்கை ஒலியிலும் என அவர்களே ஒப்பு கொள்கின்றனர் .
    அத்தகைய கடவுளை அவர்க்குரிய நன்னாளாம் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தீஸ்வரர் கோவிலில் காலையில் 5.45 கு சிறப்பு வழிபாடுகளுடன் காணும் பாக்கியம் தந்தார். மற்றும் இன்றைக்கு அவர்க்கு உரிய பிரசாதம் -களி உண்டு மகிழ்ந்தோம் .

    நன்றி

  5. சுந்தர் தம்பி வணக்கம்….ஆருத்ரா பற்றிய உங்களது பதிவு அருமை…அதற்கு இணையாக நீங்கள் போடும் புகைப் படங்களும் மிக அருமை…. _/\_

  6. //முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன் அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்//
    .
    மெய்மறந்து போனேன் என்பார்களே அதை இன்று நேரில் காணும்பொழுது சிலுர்த்திவிட்டது…ஆம் இன்று மார்கழி திருவாதிரையை முன்னிட்டு ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் அந்த சிவபெருமானின் அபிஷேக ஆராதனைகளை பார்க்கும்பொழுது என்னுள் அப்படித்தானே இருந்தது…நன்றி சுந்தர்
    .
    மாரீஸ் கண்ணன்

  7. Hi sundarji,

    . Y’day i have gone to thiruvalangadu and saw the aarudra abishekam from 10pm to 4.15am.It is really the god’s grace.I have felt that it is the great moment in my life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *