அவரவர் சௌகரியப்படி தொன்மை வாய்ந்த ஆலயம் ஏதேனும் ஒன்றை அவர்கள் பகுதிக்கு அருகாமையில் தேர்ந்தெடுத்து சென்று வருதல் நலம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆலயம் வணிக நோக்கில் கட்டப்பட்டதாக இல்லாமல் ஆலயத்திற்கு என்று பாரம்பரியம் மிக்கதாக இருப்பது சிறப்பு.
சென்ற வருடம் மார்கழி மாதம் நாம் நந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஸ்ரீனிவாசப்பெருமாளை தரிசித்தது நினைவிருக்கலாம். அது தொடர்பாக பல பதிவுகள் வெளியிட்டோம்.
இந்த ஆண்டு மார்கழியை முன்னிட்டு ஆலய தரிசனத்திற்கு வேறு ஏதேனும் ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து செல்ல விரும்பினோம். காரணம், ஒரு புதிய கோவிலுக்கு சென்றால் புது விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். உணரலாம் உங்களிடமும் பகிர்ந்துகொள்ளலாம் என்பதே.
இது தொடர்பாக நம் மனதில் இருந்தது போரூர் – குன்றத்தூர் சாலையில் இருந்த இராமநாதீஸ்வரர் கோவிலும், மதனந்தபுரம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலும் தான்.
பெருமாள் கோவில் மிகவும் தொலைவாக இருந்தது. தவிர சென்ற முறை அரங்கனை தரிசித்ததால் இம்முறை ஈசனை தரிசிக்க மனம் ஆவல் கொண்டது.
இந்த இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு நாம் இதுவரை சென்றதில்லை.மேலும் முதல் நாள் தரிசனத்தை நேரம் தவறி சென்று விட்டுவிடக்கூடாது என்றும் விரும்பினோம். எனவே ஒரு நாள் முன்னதாக கோவிலுக்கு சென்று மார்கழி நடைதிறப்பு, மற்றும் அபிஷேக, ஆராதனை நேரம் இவற்றை தெரிந்துகொள்ள விரும்பினோம். மேலும் கோவிலுக்கு ஏதேனும் தேவைகள் இருப்பின் அதையும் செய்ய ஆர்வம் கொண்டோம். எனவே இது தொடர்பாக விசாரித்தறிய மார்கழிக்கு முந்தைய தினம் ஞாயிறு மாலை அக்கோவிலுக்கு செல்வது என்று தீர்மானித்தோம்.
ஆனால் ஞாயிறு முழுதும் நாம் இராமகிருஷ்ண மடத்தில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தபடியால், அங்கிருந்து கிளம்பி போரூர் வந்து சேரவே இரவு 8.00 மணியாகிவிட்டது. (அது என்ன நிகழ்ச்சி? சற்று பொறுங்கள்… விரிவான பதிவு வருகிறது!)
நந்தம்பாக்கம் இராமர் கோவிலில் தீபங்கள் ஏற்றுவதற்கு ஏற்கனவே எண்ணை கேட்டிருந்தார்கள். இன்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்த ஆலயத்திற்கு தான் தவறாது சென்றுவருவதால் அதற்கான முழு செலவை தானே ஏற்றுக்கொள்வதாக நண்பர் மாரீஸ் கூறியிருந்தார். மார்கழி முதல் நாள் காலை எண்ணையை ஒப்படைத்துவிடுவது என்று முடிவு செய்திருந்தோம். (எங்கள் முந்தைய பிளான் படி).
இதன் பொருட்டு தீப எண்ணை ஒரு டின் வாங்க வேண்டியிருந்தது. “நான் போரூர் வருகிறேன். அங்கு எண்ணை டின் வாங்கிவிடலாம். அப்படியே நாளை காலை ஆலயத்திற்கு செல்வது குறித்து பேசிக்கொள்ளலாம்!” என்று நம்மிடம் கூறியிருந்தார். (எண்ணை டின் வாங்குவது சுலபமல்ல. ஆயில் ஸ்டோர்களில் மட்டுமே தீப எண்ணை 15 லிட்டர் டின் கிடைக்கும். தவிர அதை எடுத்து செல்வதற்கு சௌகரியாமாய் ஹோண்டா ஆக்டிவா அல்லது ஸ்கூட்டி போன்ற டூ-வீலர்கள் வேண்டும்!)
நாம் போரூரில் அவரை சந்தித்தபோது, “சென்ற ஆண்டு அரங்கனை சேவித்தோம். இந்த ஆண்டு ஈசனை சேவிப்போமா? தவிர இந்த வருடம் ஒரு நாம் போகாத ஒரு புதிய கோவிலாக போனால் வாசகர்களுக்கும் புதுப் புது தகவல்கள்/புகைப்படங்கள் கிடைக்குமே…?” என்றோம்.
மாரீஸ் இந்த ஆண்டும் கோதண்டராமர் கோவிலுக்கு செல்வது என்று மனரீதியில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தாலும் நம் யோசனைக்கு துளி கூட தயக்கம் இன்றி ஒப்புக்கொண்டார்.
நாமோ சரி… நம் நண்பர்களோ சரி… ஒரு விஷயத்தில் மிக மிக தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு ஹரியும் ஒன்று தான். ஹரனும் ஒன்று தான். எங்களுக்கு தெய்வங்களிடம் பேதம் பார்க்க தெரியாது. அப்படி பேதம் பார்ப்பதையே பாபம் என்று கருதுபவர்கள் நாங்கள்.
எனவே தான் எம்மால் சிவனை தரிசிக்கும்போதும் உருக முடிகிறது. அவன் மைந்தன் முருகனை தரிசிக்கும்போதும் அதே உருக்கத்தை உணர முடிகிறது. அவன் மாமன் அரங்கனை சேவிக்கும் போதும் சிலிர்க்க முடிகிறது. ‘தூய பக்தி இருந்தால் எல்லா தெய்வமும் அவர்களுக்கு ஒன்றே’ என்று கூறுவார்கள். அந்த நிலையை நாங்கள் எட்டவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஞாயிறு என்பதால் ஆயில் ஸ்டோர்ஸ் எதுவும் திறந்திருக்கவில்லை. எனவே நண்பரிடம், “நாளை மார்கழி பிறப்பதால் இப்போதைக்கு இராமர் கோவிலுக்கு தீப எண்ணை ஒரு லிட்டர் பாட்டில் வாங்கி கொடுத்துவிடுங்கள். இந்த வார இறுதிக்குள் 15 லிட்டர் டின்னை வாங்கி கொடுத்துவிடலாம்” என்றோம். அவர் அந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டார்.
அவர் மேட்டரை செட்டில் செய்தாயிற்று.
இதையடுத்து போரூர்-குன்றத்தூர் சாலையில் போரூர் சிக்னலில் இருந்து சுமார் 1 கி.மீ. சென்றால் அருகே உள்ள தெருவின் திருப்பத்தின் இறுதியில் உள்ள இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். இது ஒரு சிறந்த குரு பரிகாரத் தலம். சென்னையில் உள்ள நவக்கிரக பரிகாரத் தலங்களில் ஒன்று.
குருக்களை பார்த்தால் எங்கோ பார்த்தது போலிருக்கவே… “உங்களை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் சுவாமி…” என்றோம்.
“கே.கே.நகர் பிள்ளையார் கோவில்ல பார்த்திருப்பீங்க….” என்றார்.
“அட… ஆமாம்…” நமக்கு குதூகலாமாகிவிட்டது. நமது ஆண்டு விழாவும் பாரதி விழாவும் அங்கு சமீபத்தில் நடைபெற்ற விஷயத்தை கூறினோம். மிகவும் சந்தோஷப்பட்டார்.
கோவில் நடைதிறப்பு மற்றும் இதர விபரங்களை குறித்து கேட்டு தெரிந்துகொண்டோம். அதிகாலை 4.30க்கு கோவில் திறக்கப்பட்டு 5.00 மணிக்கு திரை விலக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறும் என்றும் தொடர்ந்து ஒரு 15 நிமிடம் இடைவெளிக்கு பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மீண்டும் தீபாராதனை காட்டப்படும் என்றும் கூறினார்.
நாம் மார்கழி முழுக்க கோவிலுக்கு வரவிரும்பும் விஷயத்தை கூறினோம்.
“தாராளமா வாங்க… அபிஷேகம் நடக்கும்போது திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் இதெல்லாம் பாடலாம். இங்க அக்கம் பக்கத்துல இருந்து மக்கள் வருவாங்க. அவங்க கூட நீங்களும் உட்கார்ந்து படிக்கலாம். அபிஷேகம் தினமும் நடக்கும். இருந்து பார்த்துட்டு, பிரசாதம் கூட சாப்பிட்டுட்டு போகலாம்!” என்றார்.
அவர் சொன்னது அத்தனையும் நமக்குத் தான் அல்வா போலாச்சே…. மிக மிக சந்தோஷமாய் தலையசைத்தோம்.
நமது தளம் பற்றியும் நமது பணிகள் பற்றியும் பகவத் கைங்கரியத்தில் நம் வாசகர்களுக்கு உள்ள ஈடுபாடு பற்றியும் எடுத்துக்கூறி, தேவைகள் ஏதேனும் இருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்கவேண்டும் என்றும் நம்மால் இயன்றதை செய்ய காத்திருக்கிறோம் என்றும் கூறினோம்.
மேலும் நம் தளம் சார்பாக மாதந்தோறும் மேற்கொண்டு வரும் உழவாரப்பணி குறித்தும் கூறினோம். அவருக்கு தெரிந்த தொன்மை வாய்ந்த உழவாரப்பணி தேவைப்படும் கோவில்களை நமக்கு REFER செய்வதாக கூறியிருக்கிறார்.
மார்கழி மாத தேவைகள் குறித்து பேசியபோது, பிரசாதம் செய்ய தினசரி மிளகு தேவைப்படுவதாகவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் மிளகு, 50 கிராம் சீரகம் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
நம் அவற்றை வாங்கித் தருவதாக கூறினோம். வாங்குவதாக இருந்தால் 50 50 கிராம் பாக்கெட்டுகளாக வாங்கிக்கொள்ளும்படியும், தினமும் ஒரு ஒரு பாக்கெட்டை மடப்பள்ளியில் கொடுக்க சௌகரியமாய் இருக்கும் என்றும் கூறினார்.
வேறு தேவைகள் குறித்து கேட்டபோது, தீபம் ஏற்ற எண்ணை தேவைப்படுவதாக கூறினார். ஆஹா… இதைவிட ஒரு கைங்கரியம் கிடைக்குமா? இதையடுத்து இந்த மார்கழியில் விளக்கு ஏற்ற ஒரு டின் எண்ணை வாங்கித் தருவதாக கூறியிருக்கிறோம்.
தொடர்ந்து அவரிடம் வேறு விஷயங்களை பிரகாரத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கும்போதே மூலவரின் நடையை சாத்திவிட்டார்கள்.
மாரீஸ் பதறிப்போய்விட்டார்…. “சுந்தர்… சுந்தர்…. நடையை அடைச்சிட்டாங்க பாருங்க… நாம தரிசனம் பண்ணவேயில்லையே இன்னும்….” என்றார்.
“பரவாயில்லை விடுங்க… அதான் நாளைக்கு வரப்போறோமே… பார்த்துக்கலாம்….” என்றோம் சிறிதும் பதட்டப்படாமல்.
ஆனால் மாரீஸ்ஸுக்கு மனம் சமாதானமடையவில்லை என்பது அவரது முகத்தை பார்த்தபோதே புரிந்தது.
“சரிங்க ஸ்வாமி. நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம். சிவனருளால் காலை சந்திப்போம்…” என்று கூறி விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம்.
வெளியே வந்து அவரவர் டூ-வீலர்களை ஸ்டார்ட் செய்து…. டீ கடை ஏதேனும் இருக்கிறதா என்று தேடினோம். காரணம், ஒரே பசி. ஆனால் நேரமாகிவிட்டபடியால் ஒரு கடையும் இல்லை. ஞாயிறு வேறு.
அப்படியே பைக்கை வந்த திசைக்கு நேர் எதிர் திசையில் மெதுவாக ஓட்டிக்கொண்டே ஏதேனும் டீக்கடை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தோம். ஒரு சில வினாடிகள் கழிந்திருக்கும்… ஒரு மிகப் பெரிய கோவிலின் இராஜகோபுரம் ஒன்று (அதே தெருவில்) கண்ணில் தென்பட்டது. (தெரு சற்று வளைவாக இருக்கும் என்பதல சிவன் கோவிலில் இருந்து பார்க்கும்போது இது கண்களுக்கு தெரியவில்லை.)
பெயரை பார்த்ததில் ‘அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில், போரூர், சென்னை 116’ என்று பெயர் காணப்பட்டது.
“மாரீஸ்… இந்த கோவிலோட ஆர்ச்சை நான் அந்த பக்கம் மெயின்ரோட்டுல போகும்போது பார்த்திருக்கேன். ஆனால் இது இவ்வளவு பெரிய கோவிலா இருக்கும்னு நினைச்சி கூட பார்க்கலை… சான்ஸே இல்லை…” என்று நம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினோம்.
கோவிலை தாண்டும்போது கோவிலின் அழகு நம்மை ஈர்க்க, டூ-வீலரை சற்று நிதானித்தோம். மூலவர் சன்னதி திறந்திருந்தது தெரிந்தது. (அப்போது நேரம் எப்படியும் 8.45 PM இருக்கும்)
“வாவ்…. சன்னதி திறந்திருக்கு… வாங்க வாங்க… ஒரு செகண்ட் போய் முருகனை தரிசனம் பண்ணிட்டு ஓடி வந்துடலாம்… அங்கே சிவனை தான் பார்க்கமுடியலே…” என்று கூறியபடி பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினோம்.
மாரீஸும் நம்மை தொடர்ந்து விரைந்து வந்தார்.
அங்கே மூலஸ்தானத்தில் முருகன் சந்தன அலங்காரத்தில் தங்க கவசம் அணிந்து ஜொலி ஜொலியென ஜொலித்துக்கொண்டிருந்தார். (முருகன் என்றாலே அழகு தான். அதுவும் இந்த கோவிலின் முருகன் அழகோ அழகு!)
தீபாராதனை முடிந்து விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு கிளம்ப எத்தனிக்கையில் கோவில் பற்றி அர்ச்சகரிடம் விசாரித்தோம்.
சுமார் 40 வருடங்கள் பழமையான கோவில் என்றும், பூமியை தோண்டும்போது முருகனின் சிலை ஒன்று கிடைத்தது என்றும் அப்படியே அதை பிரதிஷ்டை செய்து கோவிலாக கட்டிவிட்டனர் என்றும் கூறினார்.
மார்கழி நடைதிறப்பு மற்றும் விஸ்வரூப தரிசனம் பற்றி கேட்டபோது 5.30 க்கு நடைதிறக்கப்படும் என்றார். நாம் அருகே இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரவிருக்கும் விஷயத்தை கூறியவுடன், “அங்கே தரிசனம் முடிச்சிட்டு போகும்போது இங்கே வாங்கோ… சரியா இருக்கும்” என்றார்.
நமக்கு ஒரு கணம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. பின்னே அப்பா, பிள்ளை இருவரையும் மார்கழி முழுதும் தரிசிக்கப்போகிறோமே… !
கோவிலை சுற்றி பார்த்தபோது, கோவில் மிக நல்லமுறையில் பராமரிக்கப்படுவது தெரிந்தது.
திருமுருக கிருபானந்த வாரியார் இந்த கோவிலின் மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பது கல்வெட்டை பார்த்தபோது தெரிந்தது. அப்படியே கோவிலின் அழகில் மெய்மறந்தபடி பிரகாரத்தை சுற்றிவந்து மீண்டும் முருகனை பிரிய மனமின்றி அவன் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம்.
சற்று நேரம் கண்குளிர தரிசித்துவிட்டு எதிரே திரும்பினால்…. அட… நம்ம மஹா பெரியவா. மஹா பெரியவா படம் ஒன்று பெரிதாக லேமினேட் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. அதுவும் நதிதீரத்தில் அவர் தபஸ் செய்துகொண்டிருப்பது போன்று அற்புதமான படம். அருகிலேயே வாரியார் சுவாமிகளின் படம் ஒன்றும்.
வாரியாரையும் மஹா பெரியவரையும் ஒருங்கே சந்தித்தது நாம் செய்த பாக்கியம் தான். அதுவும் ஞாயிறு கார்த்திகை நட்சத்திரம் வேறு.
அந்த கண்கொள்ளா காட்சியை மொபைலில் எடுத்துக்கொண்டிருக்கும்போது… (நம் கேமிரா பழுதடைந்துள்ளது. அதை சர்வீஸ்க்கு கொடுத்துள்ளோம்.) யாரோ… “சார்…சார்…” என்று கூப்பிடுவதை போல இருக்க… “இங்கே ஃபோட்டோல்லாம் எடுக்கக்கூடாது” என்று சொல்வார்கள் போல…. என்று நினைத்து சற்று திரும்பிப் பார்த்தால், அர்ச்சகர்களில் ஒருவர் ஒரு பக்கெட்டை கைகளில் கொண்டு வந்து, ஒரு பெரிய கரண்டியில் இருவருக்கும் பஞ்சாமிர்தம் தந்தார். கூடவே இன்னொரு பாத்திரத்திலிருந்து கொஞ்சம் சர்க்கரை பொங்கல்..!
ஒரு கணம் திக்குமுக்காடி போய்விட்டோம்.
மாரீஸிடம் சொன்னோம்… “பார்த்தீங்களா…. அப்பா கண்டுக்கலேன்னாலும் பையன் கூப்பிட்டு தரிசனம் கொடுத்ததோடல்லாமல் பஞ்சாமிர்தமும் கொடுத்துட்டார்…? இப்போ தெரியுதா கருணாமூர்த்தியப்பா எங்கள் கந்தன்!” (முதல் முறை வரும்போதே பசிக்கு பஞ்சாமிர்தம் கொடுக்கிறான் என்றால் அவன் எப்பேர்ப்பட்ட வள்ளல் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!)
அவரும் அதை ஆமோதிப்பது போல “ஆமாம்… ஆமாம்…. சுந்தர்” என்றார்.
கைகளை அலம்பிக்கொண்டு மீண்டும் ஒரு முறை வலம் வந்து கொடிமரத்திற்கு அப்பால் விழுந்து நமஸ்கரித்துவிட்டு கிளம்பினோம்.
“மாரீஸ்… தினமும் அங்கே முடிச்சிட்டு இங்கேயும் ஒரு எட்டு வந்துட்டு போய்டுவோம்”
“நிச்சயமா ஜி… கோவிலோட அழகு சான்ஸே இல்லை… இப்படி ஒரு கோவில் இங்கே இருக்குங்கிறதே இத்தனை நாள் தெரியாம போய்டிச்சே…” என்றார்.
“சரி.. காலை இறையருளால் சந்திப்போம்” என்று கூறி விடைபெற்றோம்.
நாம் நேரே ஒரு சூப்பர் மார்க்கெட் போய் 50 கிராம் மிளகு, 50 கிராம் சீரகம் தலா பத்து பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டோம். (அரைகிலோ மிளகு, அரை கிலோ சீரகம் ரூ.480/- ஆனது.)
முதல் நாள் தரிசனத்தை தவறவிட்டுவிடக்கூடாது என்பதால் மறுநாள் காலை 3.30க்கெல்லாம் அலாரம் வைத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டோம். ஞாயிறு முழுதுமே ஓய்வே இல்லை குறித்த நேரத்தில் எழுந்திருக்க முடியுமா என்ற அச்சத்துடன் தான் உறங்கச் சென்றோம்.
ஆனால் இறையருளால் 3.30 க்கு அலாரம் அடித்தவுடன் எழுந்திருக்க முடிந்தது. மாரீஸ்ஸுக்கும் போன் செய்து அவரும் எழுந்துவிட்டாரா என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம்.
குளித்து முடித்து கோவிலில் 4.30க்கு ஆஜர். பின்னாலேயே மாரீஸும் வந்துவிட்டார்.
அர்ச்சகரை சந்தித்து முதல் வேலையாக வாங்கி வந்திருந்த மிளகு சீரகம் பாக்கெட்டுகளை கொடுத்தோம். அவர் உடனே மடப்பள்ளியில் அதை சேர்த்துவிட்டார். இன்னும் ஒரு கிலோ வாங்கி தரவேண்டியிருக்கிறது. “இதை முதலில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மீதியை அடுத்த வாரம் வாங்கித் தருகிறோம்” என்று கூறியிருக்கிறோம்.
சன்னதியில் 5.00 மணிக்கு திரை விலக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் துவங்கியது. எனக்கு நினைவு தெரிந்து இப்படி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவபெருமானுக்கு நடக்கும் ஆராதனைகளை நாம் பார்ப்பது இதுவே முதல் முறை என்று கருதுகிறோம்.
மார்கழி அதிகாலை சிவாலயத்தில் இருப்பதே சிறப்பு. அதுவும் சிவாலயத்தில் நாதஸ்வர மிருதங்க சப்தத்தை கேட்பது அதை விட சிறப்பு. அதுவும் அபிஷேக ஆராதனையியின் போது அதை கேட்ப்பது அதைவிட சிறப்பு.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? எத்தனை எத்தனை இனிமை… நாடி நரம்பெங்கும் மங்கள இசை ஊடுருவ, அபிஷேகங்கள் துவங்கியது. பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி என அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்றது. அபிஷேகம் நிறைவடைந்தவுடன் சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது. ஒரு 15 நிமிட இடைவேளை கழித்து திரை விலக்கப்பட்டது.
அப்பப்பா…. பட்டாடை உடுத்திக்கொண்டு சாம்பிராணி புகைக்கிடையே பரமன் காட்சியளித்த விதம்… என்ன ஒரு தரிசனம்…. இந்த கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் சுவாமிக்கு முன்பாக பெரிய திரிசூலம் ஒன்றையும் வைப்பார்கள். ஆகவே பார்க்கும்போதே ஒரு வித பரவசம் அனைவருக்கும் ஏற்படும் என்பது உறுதி.
தீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் தரப்பட்டது. அடுத்து தீர்த்தம் தரப்பட்டு, சடாரி வைக்கப்பட்டது. சடாரி வைணவ ஆலயங்களில் மட்டுமே உண்டு. ஆனால், சிவாலயத்தில் சடாரி வைக்கப்படுவது இங்கு மட்டும் தான். ராமர் பூஜித்த தலமாதலால் அதை போற்றும் விதமாக தீர்த்தமளித்து சடாரி வைக்கும் வழக்கம் உண்டாயிற்று.
ஆக, சிவன் கோவிலில் எங்கள் மார்கழி தரிசனம் அமைந்தாலும் பெருமாள் கோவிலில் கிடைக்கும் அதே உணர்வு இங்கும் கிடைத்தது. அதுமட்டுமல்ல இங்கு சுவாமி சன்னதியில் அமர்ந்து பாடும் பெண்கள் திருவெம்பாவை பாடி முடித்தவுடன் திருப்பாவையும் பாடுகிறார்கள். இது எத்தனை மகத்துவம் தெரியுமா?
கோவிலை சுற்றி வந்தோம். அதற்குள் பிரசாதம் விநியோகம் தொடங்கியிருந்தார்கள். வெண்பொங்கல், சுண்டல், மற்றும் அபிஷேக பஞ்சாமிர்தம் ஆகியவற்றை ஒரு இலையில் தந்தார்கள். தேவாமிர்தம் போல அத்தனை சுவை. சாப்பிட்டுவிட்டு கைகளை அலம்பிக்கொண்டு நமஸ்கரித்துவிட்டு கிளம்பினோம்.
பிறகு அதே தெருவில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலுக்கும் சென்று முருகப் பெருமானையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.
ஆக ஒரே நாளில் சைவ, வைணவ, கௌமார தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இந்த மார்கழியில் எங்களுக்கு அமைந்தது.
=============================================================
உங்களுக்கு புண்ணியம் சேர்த்துவிட்டு வந்திருப்பதாக நேற்று சொன்னோம் இல்லையா? என்ன அது ?
ஒன்று:
உங்கள் அனைவருக்காகவும் சிவன் அபிஷேகத்தில் திளைத்திருந்த சமயம், (அப்போது லோகநாயகன் கள்ளுண்ட வண்டு போல மெய்மறந்திருப்பார்!) சில அப்ளிகேஷன்களை போட்டிருக்கிறோம்.
இரண்டாவது:
பிரசாதம் செய்ய மிளகு வாங்கி கொடுத்தது. இதை நாம் முதலில் நமது தனிப்பட்ட முறையில் தான் செய்ய விரும்பினோம். தனிப்பட்ட முறையில் புண்ணியம் சேர்க்க எமக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆனால் மார்கழி கைங்கரியத்தில் உங்கள் அனைவரின் பங்கு இருக்கட்டும் என்று கருதி நமது ரைட்மந்த்ரா அக்கவுண்ட்டில் இருந்து ரூ.500/- ஐ எடுத்து மிளகு சீரகம் வாங்கி தந்திருக்கிறேன். (ரைட்மந்த்ரா அக்கவுண்ட்டில் சுந்தரகாண்டம் நூல்கள் வாங்கவே பணம் கொஞ்சம் இருக்கிறது. மற்றபடி தற்போது இருப்பு இல்லை. பெங்களூரை சேர்ந்த வாசகர் ஒருவர் சமீபத்தில் ரூ.600/- நம் கணக்கில் செலுத்தியிருந்தார். அதை வைத்தே இதை வாங்க முடிந்தது.)
ரைட்மந்த்ரா வங்கிகணக்கு என்பது பால்குடம் போன்றது. அதில் வாசகர்கள் அளிக்கும் தொகை அவர்கள் ஊற்றும் பால் போன்றது. பால் குடத்தில் உள்ள பாலில், இன்னார் ஊற்றிய பால், இன்னார் இட்ட துளி இங்கு தான் சென்றது என்று கூற முடியுமா? சிறிதோ பெரிதோ நீங்கள் அளிக்கும் தொகை, பாலானது எப்படி குடத்தில் ஊற்றப்படும்போது ஏற்கனவே உள்ள பாலில் இரண்டற கலந்து பரவி விடுகிறதோ அதே போல நமது கைங்கரியத்தில் கலந்துவிடுகிறது. இந்த பால்குடத்தை வற்றாமல் பார்த்துகொள்வது நிச்சயம் புண்ணியத்திலும் புண்ணியம் தான். ஏனெனில் நாம் செய்யும் பல்வேறு கைங்கரியங்களுக்கு தோள் கொடுத்து அவை இடையூறு இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதற்குரிய பலனை இறைவன் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிப்பான். நாம் செய்யும் கைங்கரியங்கள் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த குடத்தில் பால் வற்றாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை. அப்படி பார்த்துக்கொள்ளும் அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.
இந்த குடத்தில் இதுவரை ஒரு துளி அளித்திருந்தாலும் சரி… பல துளிகள் பல படிகள் அளித்திருந்தாலும் சரி… அனைவருக்கும் ஒவ்வொரு மிளகு/சீரகம் கொடுத்த புண்ணியம் சென்று சேரவேண்டும் என்று வேண்டிகொண்டே தான் மிளகையும் சீரகத்தையும் அர்ச்சகரிடம் அளித்தோம். யார் யார் எந்த சூழ்நிலையில் இருந்துகொண்டு அவரவர் பங்களிப்பை செலுத்தினீர்களோ அந்த சூழ்நிலையை பொறுத்து பலன்கள் தாமாகவே வரும் என்பது திண்ணம்! (பொருளாதாரம் சரியாக இல்லாமல் சற்று சிரமப்படுபவர்கள் கொடுக்கும் 100/- ரூபாய்க்கும், சற்று வசதிமிக்கவர்கள் கொடுக்கும் அதே 100/- ரூபாய்க்கும் உள்ள வேறுபாட்டை இறைவன் அறிவான்!)
வாழ்வாங்கு வாழ்ந்துவிட்டு இறுதியில் மேலுலகில் பாவ புண்ணிய கணக்காளரை சந்திக்க நேர்ந்தால், “நீங்கள் செய்த புண்ணியம் ஏதாவது ஒன்றை முதலில் கூறுங்கள்?” என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அப்போது, “மார்கழி மாதம் சிவாலயம் ஒன்றுக்கு பிரசாதம் செய்ய ஒரு மிளகையும், ஒரு சீரகத்தையும் நான் கொடுத்திருக்கிறேன்!” என்று பெருமிதத்தோடு கூறுங்கள். இங்கே நீங்கள் அளித்த ஒரு சிறிய மிளகானது அங்கே ஒரு மலையைப் போல உங்களை காக்கும் என்றால் மிகையாகாது.
=============================================================
[END]
டியர் சுந்தர்ஜி
உங்களுக்கும் மாரிஸ் கண்ணனுக்கும் கடவுளின் கடைக்கண் பார்வை உங்கள் மேல் விழ அதிகம் புண்ணியம் செய்துள்ளீர்கள். . அதனால் தான் நீங்கள் சிவனையும் முருகனையும் ஒருசேர தரிசனம் செய்து இருக்கிறீrகள். இன்று நான் 3.30 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து 5 மணிக்கு சங்கர நாராயணர் கோயில் மற்றும் ராகவேந்திரரை தரிசித்தேன், காலை 4 மணிக்கு என் மகன் ஹரிஷ் வடபழனி முருகன் கோயில் சென்று விஸ்வ ரூப தரிசனம் செய்தான்.
எல்லாம் உங்களின் article படிப்பதால் எங்களுக்கும் மார்கழி மாதம் இறைவனை தரிசக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது
தீபாவளி என்றல் கூட நாங்கள் 4.30 மணிக்கு தான் எழுந்திருப்போம். ஆனால் இந்த மார்கழியில் சீக்கிரம் எழுந்திருப்பதற்கு உங்கள் ரைட் manthra முக்கிய காரணம்.
உங்கள் தொண்டு மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்
நன்றி
உமா
அமர்க்களம் சுந்தர் …அருமையான நடை..புல்லரிக்கும் விதமான வர்ணனை….உங்கள் தொண்டு தொடரட்டும்..தொண்டுகள் தொடர…அன்புள்ளங்களின் அன்பளிப்பும் பெருகட்டும்… _/\_
சுந்தர் சார்,
உங்கள் எழுத்துக்களின் மூலம் உங்களுடனே நடை போடும் உணர்வை, ஒரு தாக்கத்தை உண்டாக்குகிரிர்கள்.
கோவில் புகைப்படங்கள் அருமை.
நீங்கள் கண்ணன் சாரும் போன ஜென்மத்தில் நெறைய புண்ணியம் செய்து இந்த ஜென்மத்தில் நண்பர்களாக அமைந்துள்ளிர்கள். கடவுள் அனுகிரகம் உங்களுக்கு எப்போதும் உண்டு.
ரைட் மந்த்ரா படிக்க படிக்க எல்லோர் மனமும் நிறையும் போது பால் குடம் மட்டும் குறையுமா?.நாம் செய்யும் சிறு உதவி கூட நமக்கு மிக பெரிய அளவில் புண்ணியத்தை தரும் எனும்போது சுவாமியின் மிளகு, சிரக பிரசாதம் கண்டிப்பாக நாம் செய்யவேண்டிய கைகர்யம் தான்.
கடைசி பாரா அற்புதம்.
இராமநாதீஸ்வரர் கோவில் அவசியம் நாம் தரிசிக்க வேண்டிய திருத்தலம். எல்லோருக்கும் அம்மைஅப்பன் அருள் புரியட்டும்.
தந்தையையும் மகனையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறிர்கள். மிகவும் சந்தோசம்.
வாழ்வில் எல்லா நலனும் பலனும் பெற்று வாழ சிவனும் முருகனும் அருள் புரியட்டும்.
சுந்தர்ஜி
உங்கள் மார்கழி தரிசனம் நன்றாக தொடருவதில் மகிழ்ச்சி. பொதுநலன் கருதி கடுகளவு செய்தாலும் மலை அளவு புண்ணியம் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் மட்டும் இல்லாமல் தள வாசகர்களுக்கு எனவும் மார்கழியில் நீங்கள் இறைவனிடம் வேண்டுவது எங்களுக்கு கிடைத்த வரபிரசாதம். நன்றி.
டியர் சுந்தர்ஜி,
மிகவும் அருமை. உங்கள் கடவுள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்.
நன்றி.
நாராயணன்.
Dear sundarji,
As usual today went to vadapalani murugan temple at 4:00 to see viswaroopa darshan.
en appan muruganai parthathil mikka
magizhchi.
Om saravana bhava