Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, October 12, 2024
Please specify the group
Home > Featured > எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

print
world-aids-day posterடிசம்பர் 1, ஞாயிறு. சர்வேதேச எயிட்ஸ் தினம். எயிட்ஸ் நோய் குறித்தும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பல தவறான கருத்துக்கள் மற்றும் அபிப்ராயங்கள் உலவி வருகின்றன. சுய கட்டுப்பாடும் ஒழுக்கமின்மையும் தான் எயிட்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் என்றாலும், சம்பந்தமேயில்லாத அப்பாவிகளும் குழந்தைகளும் கூட சில சமயம் அந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கொடுமை.

சமீபத்தில் மதுரா திரு.வீ.கே.டி.பாலன் அவர்களை சந்தித்தபோது தான் எழுதிய ‘சொல்லத் துடிக்குது மனசு’ என்ற நூலை நமக்கு பரிசளித்தார். வாசிக்க வாசிக்க மனதை பிசைந்துவிட்டார். சமூகத்தை இன்று உலுக்கும் பல்வேறு  சீர்கேடுகளை குறித்து தனது குமுறல்களை அந்நூலில் கொட்டித் தீர்த்திருக்கும் திரு.பாலன், நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் எயிட்ஸ் குறித்தும் எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நமக்கு இருக்கவேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியிருக்கிறார்.

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நம் தளத்தில் வெளியிட அதை விட சிறந்த கட்டுரை வேறு எதுவும் இருக்க முடியாது. அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டும். தெளிவு பெறவேண்டும்.

==============================================================================

SollaThudikkudhu Manasu - VKT Balanஎயிட்ஸ் – தேவை ஒரு புரிதல்!

எயிட்ஸ் – இதுவே இன்றைய மிகப் பெரிய பயங்கரம். பேரழிவு ஆயுதம். உலகில் இதற்கு முன் காசநோய், பெரிபெரி, போலியோ, கேன்சர் போன்ற நோய்களைக் கண்டு மக்கள் பயந் தார்கள். இத்தகைய நோய்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாக அழித்தன என்பதும் உண்மை. ஆனால், மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி, இந்தக் கொடிய நோய்களை ஒழித்துக் கட்டும் மருந்தைக் கண்டுபிடித்தான் என்பதும், வெற்றி கண்டான் என்பதும் உண்மைதான்.

எல்லா உயிரினங்களுக்கும் உரிய உணவை படைத்துவிட்டுத்தான் பின்னர் அந்த ஜீவ ராசியை இறைவன் படைக்கிறான் என்பது நம் பிக்கை. அவன் ஒன்று மட்டும் செய்வதில்லை? அந்த உணவை அதன் கூட்டில் கொண்டு போய் வைப்பதில்லை. அதைப்போலத்தான் நோய் கள். எந்த நோயாக இருந்தாலும் அதற்குரிய மருந்தைப் படைத்துவிட்டுத்தான் நோயைப் படைக்கிறான் இறைவன் என்பது இறைப் பற்றுள்ளோரின் நம்பிக்கை. ஆனால், அந்த மருந்தை அவன் நேரடியாக நோயாளியின் இருப்பிடம் சென்று கொடுப்பதில்லை. நோய்க் குரிய மருந்தை மனிதன்தான் தனது அறிவால் ஆற்றலால் கண்டறிந்து வெற்றி பெற வேண்டியுள்ளது. அந்தவகையில் பார்த்தால், எயிட்சுக்கும் மருந்து இருக்கிறது என்பது ஆறுதல் தரும் நம்பிக்கை. ஆனால், இன்றைய நிலைமை என்ன?

உலகில் எந்த மூலையில் தாக்கம் ஏற்பட்டாலும் அது தன்னையும் தாக்கும் என்று புரிந்து கொள்கிறவன் தான் மனிதன். எயிட்ஸ் குறித்தும் நமக்கு விழிப்புணர்வு நிச்சயம் வேண்டும். யாருக்கோ வந்திருக்கிறது, அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன, நமக்கா வந்திருக்கிறது என்று அலட்சியமாக இருப்பது ஆபத்தானது. உலக மக்கள் தொகையில் 1% எயிட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் (அதாவது சுமார் 7 கோடி) என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் 1.5 % ஆக அது உயர்ந்துகொண்டிருக்கிறது. இது மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்பட்ட புள்ளிவிவரமே தவிர, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படாதவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 3 விழுக்காடாக இருக்கும் என்றும் மருத்துவ உலகத்தினர் சொல்கிறார்கள்.

எயிட்ஸ் நோய்க்கென்று ஒரு வரலாறும் உண்டு. தென்னாப்பிரிக்காவில் இருக்கக்கூடிய குரங்குகளிலிருந்து வந்தது, அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளைக் கடந்து இந்தியாவுக்கு வந்தது என்று சொல்வார்கள். எது, எங்கிருந்து வந்தபோதும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும், தியானம், யோகா போன்ற அற்புதமான பாதுகாப்புக் கலைகளைக் கொண்டிருக்கும் இந்திய தேசத்திற்கு இது வந்திருக்க வேண்டிய தேவையே இருந்திருக்கக்கூடாது. ஆனால், இன்று எயிட்ஸ் தாக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் முன்னணியில் இருப்பது மிகப்பெரிய சோகம்.

இதற்கு அரசைக் குறை சொல்வது பொருத்த மற்றது. தனிமனித வக்கிரமே இதற்குக் காரணம். தனி மனிதர்களது காமப்போக்கே இந்த நோயைப் பரப்பியும் பெருக்கியும் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விழிப்புணர்வும், பாதுகாக்க வேண்டியதும், குணப்படுத்த வேண்டியதும் அரசினாலோ சில நிறுவனங்களாலோ மட்டும் முடிகின்ற செயல் அல்ல. இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்கும் ஆற்றல் ஒவ்வொரு தனி மனிதனின் ஒழுக்கத்திலும்தான் இருக்கிறது என்பதை நம்புபவர்களில் நான் முதன்மையானவன்.

எயிட்ஸ் விழிப்புணர்வும் நோயாளிகள் மீது அனுதாபமும் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அவர்களைப் பெரிய தியாகிகள் போல சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எயிட்ஸ் நோயாளிகளில் திருந்தாத திருடர்களும் இருக்கிறார்கள். விபச்சாரத்தையே நான் பரப்பிக் கொண்டிருப்பேன். அது எனக்குத் தொழில், என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். தனக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கும் நேரட்டும் என்கிற வக்கிரத்தனத்தோடும், மிருகத்தனமான காம இச்சைகளோடு செயல்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் எயிட்ஸ்+திருடன், எயிட்ஸ்+ விபச்சாரி என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்று அனுதாபம் காட்ட முடியாது. அதற்காக எயிட் சால் பாதிக்கப்பட்டவர்களை ஒட்டுமொத்தமாக நான் நிராகரிக்கவில்லை. அவமானப்படுத்தவுமில்லை. உண்மையான அப்பாவிகளும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தவன்.

Aids Awareness

23 வயதில் நாமக்கல்லில், ஒரு ஓட்டுநரைக் கௌசல்யா என்ற பெண் திருமணம் முடிக்கிறாள். அப்பாவி கிராமப் பெண். கணவன் லாரி ஓட்டுநர். 6-ஆவது மாதத்தில் அந்தப் பெண்ணுக்கு மயக்கமும் தளர்ச்சியும் வர, மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள… அவளுக்கு எயிட்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரிய வருகிறது. பயந்து நடுங்கிய அவள், மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காகத் தன் தாய் வீட்டுக்கு வரு கிறாள். அதே நேரத் தில், அவள் கணவ னுக்கு நோய் முற்றி, இறந்துபோகிறான். அவன் சடலத்தைக்கூட பார்க்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை. இரண்டு குடும்பத்திற்குமான நல்லுறவு, எயிட்ஸ் எனும் கத்தியால் அறுபட்டு விட்டது.

கௌசல்யா மீது அனுதாபம் காட்டி ஆதரிக்கும் அளவுக்கு அவளது தாய் வீட்டாரிடம் அக்கறையோ வசதியோ விழிப்புணர்ச்சியோ இல்லை. தனிமரமான அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். தானாகவே சென்னைக்கு வந்து எயிட்ஸ் நோய்க்கான மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள். அங்கே தன்னைப் போலவே எயிட்ஸால் பாதிக்கப் பட்டவர்கள் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டி ருப்பதைக் கண்ட கௌசல்யா, தன் வாழ்நாளை இவர்களுக்காக செலவழிப்பேன் என்ற கொள்கையுடன் `POSITIVE WOMEN NETWORK’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார்.

பொதிகை தொலைக்காட்சியில் நான் தொகுத்து வழங்கும் `வெளிச்சத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சியில் இந்தத் தகவல்கள் ஒளிபரப்பானது. அது ஒளிபரப்பான அரை மணிநேரத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அங்கே நடைபெற்ற எயிட்ஸ் காங்கிரசில் அவர் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். அங்கே சென்று அவர் பேசிய பேச்சு எல்லோரது வரவேற்பையும் பெற அதன்பின் மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். இத்தாலியில் நடந்த எயிட்ஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக இரண்டே பேர் கலந்துகொண்டனர். ஒருவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர். மற்றொருவர், கௌசல்யா. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்திய நாடாளுமன்றத்தில் எயிட்ஸ் குறித்த சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக அமெரிக்காவின் பில்கேட்ஸ் 500 கோடியைச் செலவழிக்கத் திட்டமிட்ட நிலையில், அதற்கான தென்னிந்திய தலைவியாக கௌசல்யா நியமிக்கப்பட்டு சேவையாற்றி வருகிறார்.

“வாழ்ந்து காட்டுவேன், வாழ வைப்பேன்” எனும் அவரது மன உறுதி மனித நேயத்தின் மகோன்னதம்.

25 வயது நிரம்பிய ஒரு செவிலியர் என்னைச் சந்தித்தார். அவருக்கு எயிட்ஸ். ஒருவரைக் காதலித்து திருமணத்திற்கு முன்பே உறவும் வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தக் காதலருக்கு எயிட்ஸ் இருந்ததால் இவருக்கும் பரவியிருக்கிறது. நான் அவரிடம் ஒரு யோசனை சொன் னேன். சகோதரி… திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை-பெண்ணின் ஜாதகங்களைப் பார்க்கிறோம். அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இனி மருத்துவச் சான்றிதழைப் பார்க்க வேண்டும். இதன் மூலம் எயிட்ஸினால் அப்பாவிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்றேன். உடனே அவர் கொதித்துப் போய் என்னைப் பார்த்தார். நான் இப்போது திருமணம் செய்யப்போகிறேன். நானும் வாழ்ந்தாக வேண்டும். காதலித்தவன் எயிட்ஸைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

“வேறொருவரைத் திருமணம் செய்ய வேண்டிய நிலையில், எனக்கு எயிட்ஸ் இருக்கிறதென்றால் யார் என்னைத் திருமணம் செய்துகொள்வார்கள்? எனக்கு ஒருவன் எயிட்ஸைக் கொடுத்தான் என்பதற்காக நான் திருமணம் முடிக்காமல் இருக்கவேண்டுமா?” என்ற அவரது கேள்வியில் நான் அதிர்ந்து போனேன். இந்தச் சிந்தனை பல எயிட்ஸ் நோயாளிகளிடம் இருப்பதை அதிர்ச்சியோடு அறிந்துகொண்டுதான் இருக்கிறேன்.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிறந்த காரணத்தால் எயிட்ஸ் தாக்கப்பட்டு பிறந்த, 600 குழந்தைகள் தமிழகத்தில் இருப்பதை அறிவேன். அவர்களுக்குத் தக்க மருத்துவ வசதி இல்லை. பள்ளிக்கூடத்தில் சேர்க்க மறுக்கிறார்கள். தனக்கு எயிட்ஸ் இருப்பதே அறியாத அந்தக் குழந்தைகள் புறந்தள்ளப்பட்டு வருகிறார்கள். இந்தக் கொடுமை அடுத்த தலைமுறையில் இருக்கக்கூடாது.

எனவே கூடுமானவரை, எயிட்ஸ் பரி சோதனை செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கட்டாயப் பரிசோதனை செய்வது மனித உரிமை மீறல் என்ற கருத்தும் உள்ளது. ஆனால், காலத்தின் தேவை கருதி இந்தப் பரிசோதனையை அனைவரும் ஏற்கும் விதத்தில் நிலைமையை உருவாக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளையின் ஜாதகத்தைப் பெண் வீட்டார் தங்கள் ஜோசியரிட மும், பெண்ணின் ஜாதகத்தை மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஜோசியரிடமும் காண்பித்து பொருத்தம் பார்ப்பதுபோல, இனி மாப்பிள்ளையைப் பெண் குடும்பத்தாரின் மருத்துவரிடமும், பெண்ணை மாப்பிள்ளைக் குடும்பத்தாரின் மருத்துவர் மூலமாகவும் பரிசோதனை செய்து, எயிட்ஸ் பாதிக்கப்படாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து, பின் திருமணம் முடிப்பது இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும். அதைவிட முக்கியம், சுய ஒழுக்கம்.

தமிழ்நாட்டிலிருந்து 6 இளைஞர்கள் கோவா விற்குச் சுற்றுலா சென்றனர். அப்போது அவர் களுக்கு ஏற்பட்ட உந்துதல் காரணமாக ஒரு விலைமாதுடன் அன்றைய இரவைக் கழித்து விட்டு, பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார் கள். அவளும் சென்றுவிட்டாள். உற்சாகமும் மகிழ்ச்சியும் நிரம்பிய மனநிலையோடு உறங்கியவர்கள், காலையில் எழுந்ததும் அந்த அறை யில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தார்கள். இரவில் அவர்களுடன் இருந்த அந்த விலைமாது தனது லிப்ஸ்டிக்கால் அந்தக் கண்ணாடியில் எழுதியிருந்ததைப் பார்த்து அதிர்ந்துவிட்டனர்.

அந்தப் பெண் எழுதி இருந்த வாசகம்…. WELCOME TO THE WORLD OF AIDS!

– கலைமாமணி வீ.கே.டி. பாலன் | ‘சொல்லத் துடிக்குது மனசு’

[END]

One thought on “எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

  1. திருமண பதிவு எப்படி கட்டாயமாக்க பட்டதோ அதே போல் திருமணம் நடக்கும் முன் மாப்பிள்ளை பெண் இருவருக்கும் ரத்த பரிசோதனை செய்வது கட்டாயமாக்க பட வேண்டும் அப்பொழுது தான் இது போல் நடக்காமல் இருக்கும் ,எங்களது தூரத்து சொந்தம் ஒருவருக்கும் இதே பிரச்சனை தான் கணவர் லாரி ஓட்டுனர் ,அவரை திருமணம் செய்து அந்த பெண்ணுக்கு கிடைத்த பரிசு aids நோய் ,அதோடு போகாமல் அவர்கள் குழந்தைக்கும் இப்பொழுது அந்த நோய் உள்ளது ,அவன் இறந்து விட்டான் ,ஒரே ஆறுதல் அந்த பெண்ணின் குடும்பம் நல்லபடியாக பார்த்து கொள்கிறார்கள் அவர்களும் வேலைக்கு போய் நல்ல படியாக இருகிறார்கள் ,ஒரு உண்மையை மறைத்ததன் விளைவு இன்று இரண்டு பேர் எந்த தப்புமே செய்யாமல் உயிர் கொல்லி நோயால் பாதிக்க பட்டு உள்ளார்கள்

    ரத்த பரிசோதனை திருமணதிற்கு முன் கட்டாயமாக்க பட வேண்டும் அதே போல் ஆச்சி மனோரமா அவர்கள் சொன்னது போல் ஆண்மை பரிசோதனையும் கட்டாயமாக்க படவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *