Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > “ஊசிக்கு பின்னாலே நூல்!” – அம்மையப்பனிடம் வரம் கேட்ட முனிவர் – Rightmantra Prayer Club

“ஊசிக்கு பின்னாலே நூல்!” – அம்மையப்பனிடம் வரம் கேட்ட முனிவர் – Rightmantra Prayer Club

print

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

Siva parvati cartoon art“பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.

“அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”

ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

“வணக்கம், முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

“மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.

முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

Needle threadஅப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.

“ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

“அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?”என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.

(நன்றி : www.tamilmantram.com)

===================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

திருக்குறள் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுவரும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் திரு.வள்ளிமுத்து !

இவரை பற்றிய விரிவான பதிவு நேற்று நம் தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

DSC05137

திருக்குறள் திரு.வள்ளிமுத்து அவர்களை எந்தளவு பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதை அவரிடம் பேசும்போது அறிந்துகொண்டோம். தனது திருக்குறள் சிற்றிதழில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையை இங்கு தருகிறேன்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’

“நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பது போல் மனிதர்களுடைய வாழ்க்கையிலும் அகம், புறம் என இரு பக்கங்கள் உள்ளன. அகம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. புறம் என்பது உடல் சம்பந்தப்பட்டது.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றார் கனியன் பூங்குன்றனார். ஆம்… நம் வாழ்க்கையில் மனம் மற்றும் உடலுக்கு ஏற்படும் இன்பம், துன்பம் எது? துன்பம் தரும் செயல்கள் எது? வாழ்க்கை என்றால் என்ன? எப்படி வாழவேண்டும்? வாழ்வின் இலக்கு என்ன? அதை எப்படி அடைவது அதை அடையும்போது எதிர்வரும் துன்பங்கள் எவை? அவற்றை எவ்வாறு களைந்து இலக்கை அடைவது என்பது பற்றி நம் தெய்வப் புலவர்ர் வள்ளுவப் பெருமகனார் தன்  திருக்குறள் மூலம் சாதி, மதம், நாடு கடந்து வழி காட்டுகிறார். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்றார் பாரதியார். ஆம் அன்னப்பறவை நீர்கலந்த பாலில் நீரை ஒதுக்கிவிட்டு பாலை பிரித்து உண்ணுமாம். அது போல திருக்குறளை நாம் படிப்பதால் நமக்கு ஏறபடும் துன்ப நிலைகளை அறிந்து அவற்றை களைந்து இன்ப நிலையை அடைந்து மனித வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும். இந்த உயரிய நோக்கத்திற்காக இத்திருக்குறள் பரப்பும் பணியை தொடர்ந்து செய்கிறேன்.”

என்ன ஒரு அருமையான விளக்கம் பார்த்தீர்களா?

திரு.வள்ளிமுத்து அவர்களிடம் நம் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி ஞாயிறு மாலை 5.30 க்கு பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். தன் நண்பர்களுக்கும் இது குறித்து தெரியப்படுத்தி, அவர்களையும் பிரார்த்தனை செய்ய சொல்வதாக கூறியிருக்கிறார். வள்ளிமுத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

நம் பிரார்த்தனை கிளப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரார்த்தனைகள் நிறைவேறியது குறித்து நமக்கு இரண்டு செய்திகள் வந்துள்ளன. அவற்றை விரைவில் உங்களிடம்  பகிர்ந்து கொள்கிறோம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்னைகளே இல்லை எனலாம். தேவை நம்பிக்கையும் பொறுமையும் மட்டுமே!

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

===================================================================

முதல் கோரிக்கை தங்கள் மகனுக்கு பேச்சுத் திறன் வரவில்லையே என்று ஏங்கும் ஒரு பெற்றோர் பற்றியது.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் (குறள் 66)

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, பிள்ளைகளின் மழலைச் சொல்லை கேட்பது போன்ற ஒரு மகிழ்ச்சி வேறு எதுவும் ஒரு பெற்றோருக்கு தரமுடியாது. அதற்கு வழியின்றி தவிக்கும் இவர்களது குறை விரைவில் நீங்கவேண்டும்.

அடுத்து மீனா சபா என்கிற வாசகியை பற்றியது. இவரது கணவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இவரும் இவரது குடும்பமும், எந்தளவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை அவரது வார்த்தைகளில் இருந்தே உணரமுடிகிறது. தங்கள் துன்பத்தை பெரிதாக நினைத்து கவலைப்படுபவர்கள் இவரது நிலையை சற்று சிந்தித்து பாருங்கள்.

===================================================================

மகன் பேசவேண்டும்; செவிகள் குளிர வேண்டும்!

வணக்கம் சுந்தர் மற்றும் ரைட்மந்த்ரா நண்பர்களே…

என் பெயர் முத்து ரமேஷ். கடந்த 2 மாதமாக உங்கள் இணைய தளத்தை பார்த்துவருகிறேன். என் மகன் பெயர் சரண் குரு சுந்தர் வயது 8.   இன்னும் சரிவர பேச இயலாமல் உள்ளான். எல்லாவிதமான பரிகாரங்கள் மற்றும் மருத்துவ பறிசோதனை அனைத்தும் செய்தும் பயனில்லை. என் மகனுக்காக பிரார்த்தனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்மனவேதனை புரிந்து என் மகனுக்கு வாய் பேச வேறு வழி முறையிருந்தால் ஆலோசனை கூறுங்கள்.

நன்றி
முத்து ரமேஷ்,
திருநெல்வேலி

===================================================================

கணவர் நலம் பெறவேண்டும் – குடும்பம் சிறக்க வேண்டும் – கவலைகள் தீரவேண்டும் !

Dear Sundar sir and Rightmantra viwers,

My name is Meena and my husband’s name is P.V. SURESH. We got married before 20 years.

He is addicted to sleeping pills and i have taken many treatments to come out of this habit but there is no much improvement. Because of this i’m facing many problems financially. Now he is suffering from severe stomach pain throughout the year. He also feels sick so he does not go for the job, he is working in a Transport company. I kindly request you to pray for him sir so that my family will be happy.

faithfully yours,
Meena Saba

===================================================================

நம் பொது பிரார்த்தனை

மக்கள் அச்சமின்றி வாழும் நிலை ஏற்படவேண்டும்!

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. (குறள் 738)

(பொருள் : மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.)

ஒரு நாட்டுக்கு எது தேவை என எத்தனை அழகாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார் பாருங்கள். ஆனால் நம் நாட்டில் நடப்பது என்ன?

bangalore_atm_attack_grid_360x270_635205471265053906நாட்டில் பொருளுக்காக செய்யும் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன. முக்கிய நகரப் பகுதிகளிலேயே பெண்களுக்கு முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய பொருளாதாரத்தின் படுமோசமான நிலையால், அத்தியாவசியப் பொருகளின் விலையும் வாழ்வதற்குரிய செலவினங்களும் விண்ணை முட்ட, பொருள் சார்ந்த குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன.

சமீபத்தில் பெங்களூர் நகரில் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணை மர்ம ஆசாமி ஒருவன் கொடூரமாக தாக்கி பணம் பறித்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். அவர் குடும்பத்தினர் சொல்லொன்னா துயரத்தில் உள்ளனர்.

அந்தப் பெண் விரைவில் நலம் பெறவேண்டும். அந்த பாதகச் செயலை செய்த கொள்ளையன் பிடிபடவேண்டும். இது போன்ற பொருளாதார குற்றங்கள் அறவே இல்லாத ஒரு நிலையை நம் நாடு அடையவேண்டும் என்று அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிருநெல்வேலியை சேர்ந்த திரு.முத்து ரமேஷ் அவர்களின் மகன் சரண் குரு சுந்தருக்கு விரைவில் பேச்சு திறன் வரவேண்டும் அதை கண்டு அவன் பெற்றோர் ஆந்தப்படவேண்டும், மீனா சபா அவர்களின் கணவர் சுரேஷ் அவர்கள் தனது தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு பரிபூரண ஆரோக்கியம் பெறவேண்டும், பணிக்கு தொடர்ந்து செல்லவேண்டும் அவர்தம் குடும்பத்தினரின் பிரச்சனைகள் தீரவேண்டும் என்றும் குருவருளையும் திருவருளையும் வேண்டி பிரார்த்திப்போம். அதே போல, பொருளாதார குற்றங்கள், களவு போன்றவை நம் நாட்டில் இல்லை என்னுமளவிற்கு நாடு முன்னேறவேண்டும். மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்போம்.

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : நவம்பர் 24, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ஏழு தலைமுறைகளாக குன்றத்தூர் முருகனுக்கு பூஜை செய்து வரும் பாக்கியம் பெற்ற திரு.ரகு ஐயர்!

9 thoughts on ““ஊசிக்கு பின்னாலே நூல்!” – அம்மையப்பனிடம் வரம் கேட்ட முனிவர் – Rightmantra Prayer Club

  1. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும்
    ஷேர் ஆட்டோ ஓட்டுனர் திரு.வள்ளிமுத்து அவர்களுக்கு மனமாந்த நன்றிகள்.

    திருநெல்வேலியை சேர்ந்த திரு.முத்து ரமேஷ் அவர்களின் மகன் சரண் குரு சுந்தருக்கு விரைவில் பேச்சு திறன் வரவும், மீனா சபா அவர்களின் கணவர் சுரேஷ் அவர்கள் தனது தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு பரிபூரண ஆரோக்கியம் பெறவும், அவர்தம் குடும்பத்தினரின் பிரச்சனைகள் தீரவேண்டும் என்றும் குருவருளையும் திருவருளையும் வேண்டி பிரார்த்திகிறேன். அதே போல, பொருளாதார குற்றங்கள், களவு போன்றவை நம் நாட்டில் இல்லை என்னுமளவிற்கு நாடு முன்னேறவேண்டும். மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திகிறேன்.

    நன்றி
    உமா

  2. நாம் நம் வேலையை ஒழுங்காக செய்தால் நமக்கு கிடைக்க வேண்டியது தானாக கிடைத்து விடும் என்று அறிவு புகட்டிய கதை நன்றாக உள்ளது.
    ஊசியின் பின்னே நூல் போகவேண்டும் – பெரிய தத்துவம்
    திரு.முத்து ரமேஷ் அவர்களின் மகன் சரண் குரு சுந்தருக்கு விரைவில் நல்லபடியாக பேசவும் மற்றும் மீனா கணவர் தீய பழக்கத்தில் இருந்து மாறி வேலைக்கு போகவும் மேலும் பொது பிரார்த்தனைக்கும் சேர்த்து நாம் நம் மகா பெரியவிடம் வேண்டிக்கொள்வோம்.

  3. சீர்காழி திருஞானசம்பந்தர், திருக்கோலக்கா திருத்தாளமுடையார் கோவில் இல் இருந்து தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். மூன்று வயதுடைய சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு ‘ நமசிவாய ’ என்ற திருஐந்து எழுத்துப் பொறித்த பொற்றாளம் கொடுத்து அருளினார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை.,இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி[தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி] எனவும் அழைக்கப்படுகிறார்கள்.சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது…..வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து கோயிலின் எதிரில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, குருவாரம் தேய்பிறை பிரதோஷ காலத்தில், இத்தல விருட்சமாம் கொன்றை மரத்தை பன்னிருமுறை வலம் வந்து பிரார்த்தனை ஆரம்பிக்க வேண்டும்…பின்பு ஓசை நாயகியிடம், “ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,’ என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து ,அம்பிகைக்கு அபிஷேகித்த
    தேனை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்..வாக்வாதினி அர்ச்சனை பண்ண வேண்டும் ….120 நாட்கள் அந்த தேனை சாப்பிட்டு வர வேண்டும்… தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை பெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள “பொற்றாளம்” கோயிலில் உள்ளது. .இதுவரை இங்கு வழிபட்டு 250 கும் மேற்பட்டோர் பேசும் வல்லமை அடைந்துள்ளனர்…இதனை பலன் பெட்டோர் இங்கு எழுதி வைத்துள்ளனர் ..முத்துசாமி தீட்சிதர், தியாக பிரம்மம், சியாமா சாஸ்திரிகள் போன்ற சங்கீத சக்ரவர்த்திகள் தொழுத புண்ணிய தலம் இது . ..சீர்காழியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் திருக்கோலக்கா[ cell: 9865885780 ] உள்ளது…

    மடையில் வாளை பாய மாதரார்
    குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
    சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்
    உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

    பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
    கொண்டான் கோலக் காவு கோயிலாக்
    கண்டான் பாதங் கையாற் கூப்பவே
    உண்டா னஞ்சை யுலக முய்யவே.

    பூணற் பொறிகொ ளரவம் புன்சடை
    கோணற் பிறையன் குழகன் கோலக்கா
    மாணப் பாடி மறைவல் லானையே
    பேணப் பறையும் பிணிக ளானவே.

    தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
    மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
    குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
    இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே.

    மயிலார் சாயன் மாதோர் பாகமா
    எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
    குயிலார் சோலைக் கோலக் காவையே
    பயிலா நிற்கப் பறையும் பாவமே.

    வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
    கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
    கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
    அடிகள் பாத மடைந்து வாழ்மினே.

    நிழலார் சோலை நீல வண்டினங்
    குழலார் பண்செய் கோலக் காவுளான்
    கழலான் மொய்த்த பாதங் கைகளால்
    தொழலார் பக்கல் துயர மில்லையே.

    எறியார் கடல்சூ ழிலங்கைக் கோன்றனை
    முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
    குறியார் பண்செய் கோலக் காவையே
    நெறியாற் றொழுவார் வினைகள் நீங்குமே.

    நாற்ற மலர்மே லயனு நாகத்தில்
    ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
    கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
    ஏற்றான் பாத மேத்தி வாழ்மினே.

    பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
    உற்ற துவர்தோ யுருவி லாளருங்
    குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
    பற்றிப் பரவப் பறையும் பாவமே.

    நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
    குலங்கொள் கோலக் காவு ளானையே
    வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
    உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே.

    …திருசிற்றம்பலம்…
    [120 நாட்கள் காலை மாலை நீராடி இந்த பதிகத்தையும் கண்டிப்பாக படித்து வரவும் ]

  4. தில்லையில் ,ஈழ மன்னனின் ஊமைப் பெண்ணைப் பேச வைத்த
    மாணிக்க வாசகரின் “திருச்சாழல்” பதிகம்
    பாடினால் பேச்சாற்றல் குறை தீரும் …[120 நாட்கள் மேற்கண்ட திருகோலகா பதிகதுடன் படித்து வரவும் ]ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்கு பேச ,
    ”திருச்சாழல்” படிக்கவேண்டும்……

    திருச்சிற்றம்பலம்

    பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
    பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
    பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை
    ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

    என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
    துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?
    மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
    தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.

    கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
    தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
    தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
    காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.

    அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை
    வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
    நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
    சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.

    தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம்
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
    எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ.

    அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
    சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ.

    மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
    சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
    சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
    பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.

    கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
    ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?
    ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
    மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.

    தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
    பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
    பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
    விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.

    தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
    ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
    ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
    வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.

    நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
    கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
    கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
    தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.

    கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
    ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
    ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
    வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.

    மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
    உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
    உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
    கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ.

    தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
    தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
    தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
    ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.

    கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
    இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
    தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
    இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

    நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
    கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ.

    அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்
    நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?
    நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ
    எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.

    சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
    நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?
    நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்
    அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.

    அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
    எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
    எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
    தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.

    அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
    இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?
    அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
    திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.

    திருச்சிற்றம்பலம்

  5. போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர்[பாம்புரேசுவரர்], பிரமராம்பிகை[மாமலையாட்டி]க்கு , அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம்…சட்டநாதர் சந்நிதி
    8 தீபம் போடவும் … இக்கோவிலில் மலைக்கோவிலை வலம் வரும்போது சட்ட நாதரையும் வழிபட்டு வரும்போது திருவீழிமிழலைத் திருக்கோவில் கோபுரத்தை தரிசிக்கலாம். [ திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் செல்: 94430 47302 ]கும்பகோணத்தில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்த்தில் அமைந்துள்ளது திருப்பாம்புரம்….

    திருவதிகை[செல்: 98419 62089 ]பண்ருட்டி நகரின் மேற்கே திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து திருவதிகை வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர்.ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார். அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது.உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் திருப்பதிகம் பாடினார் திருநாவுக்கரசர்…அதனால் மனமகிழ்நத வீரட்டானேசுவரர்
    நாவுக்கரசு என்று நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார்…இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு வயிற்று வலி (அல்சர்) நீங்கும்…

    திருச்சிற்றம்பலம்

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
    கொடுமைபல செய்தன நானறியேன்
    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
    நினையாதொரு போதும் இருந்தறியேன்
    வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
    நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
    அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
    படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
    துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
    பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
    டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மனே.

    முன்னம்மடி யேன்அறி யாமையினான்
    முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
    பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
    தலையாயவர் தங்கட னாவதுதான்
    அன்னநடை யார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
    நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
    வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
    உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
    உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
    உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
    ஒருவர்தலை காவலி லாமையினல்
    வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
    வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
    பயந்தேயென் வயிற்றின கம்படியே
    பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
    அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னாத்துறை அம்மானே.

    வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்
    வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
    சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
    சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
    கலித்தேயென் வயிற்றி னகம்படியே
    கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
    அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
    புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
    துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
    நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
    என்போலிக ளும்மை இனித்தெளியார்
    அடியார்படு வதிது வேயாகில்
    அன்பேஅமை யும்மதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
    புறங்காடரங் காநட மாடவல்லாய்
    ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
    அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
    வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
    என்வேதனை யான விலக்கியிடாய்
    ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    திருச்சிற்றம்பலம்
    [48 நாட்கள் படிக்கவும் ]

  6. மிகபெரியதொரு தொகுப்பினை வழங்கிய திரு : சிவ. அ.விஜய் பெரிய சுவாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் திரு.வள்ளிமுத்து அவர்களுக்கு மனமாந்த நன்றிகள்.

    இந்த வாரம் பிரார்த்தனை அனுப்பிய அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம் .

    -நன்றி

  7. சுந்தர்ஜி
    பிரச்னை என்று ஒன்று வந்தால் தீர்வு என்று ஒன்று உண்டு. அந்த தீர்வின் வடிகால் தான் நம் ரைட் மந்த்ரா. நமக்காக வேண்டுவதை காட்டிலும் பிறர்க்காக வேண்டுவது உடன்னடியாக தீர்க்கபடும்.இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் திருக்குறள் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுவரும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் திரு.வள்ளிமுத்து அவர்கள் பணி சீராக்க வாழ்த்துகள்.

  8. சுந்தர்ஜி

    ஊசியின் பின்னே நூல் சரியாக போகாததால் தான் நம் பிரார்த்தனையை வரம் வேண்டி இறைவனிடம் வைக்கிறோம். இதற்கு பின்பாவது இறைவன் அருளால் நல்லதே நினைத்து நல்லதே செய்வோம்.

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் ஓட்டுனர் திரு.வள்ளிமுத்து அவர்கள் சராசரி ஓட்டுனர்களைவிட மிகவும் வேறுபட்டு உன்னதமான பணியை செய்து வருகிறார். அவரை கண்டுபிடித்து பெருமைபடுத்திய தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரு.வள்ளிமுத்து அவர்களொடு இந்த வாரம் பிரார்த்தனைக்கு வந்துள்ளவர்களுக்கு நாமும் பிரார்த்திப்போம். நன்றி

  9. டியர் சுந்தர்,
    பதிவுகளையும் பதில்களையும் படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. பிரார்த்தனைகள் பலிக்க இறைவனை வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    பி. சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *