விரக்தியாக நான் இருந்த காலகட்டங்களில் வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட திருக்குறள் ஒரு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. “கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்” என்று என் பெற்றோர் மூலம் நான் அறிந்து கொண்டு வளர்ந்து வந்தாலும் எனக்கென்று ஒரு சுய அறிவு ஏற்பட்ட பின்னர் இறைவனை குறித்த எனது கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது. அப்போது “இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான்” என்று என்னை அழுத்தந்திருத்தமாக நம்ப வைத்தது திருக்குறள் தான். அந்தளவு திருக்குறளை நான் நேசிக்கிறேன்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள் 5)
முன்னர் சென்று கொண்டிருந்த அந்த ‘திருக்குறள் ஷேர் ஆட்டோ’வை (டாட்டா மேஜிக்) புகைப்படமெடுக்க வேண்டி, அதன் பின்னாலேயே மெதுவாக சென்று, ஒரு ஸ்டாப்பில் நிறுக்கும்போது புகைப்படமெடுத்தேன். அதன் டிரைவரிடம் பேசவேண்டும் என்று எத்தனித்தபோது அதற்குள் அவர் வண்டியை எடுத்துவிட, பக்கவாட்டில் முந்தி சென்று அவரை பார்த்து “ஒரு செகண்ட் சார்…” என்று சைகை காட்டினேன். ஓரமாக நிறுத்தினார்.
அவரது திருக்குறள் பணிக்கு முதலில் நம் வாழ்த்தை சொன்னேன். பின்னர் நம் விசிட்டிங் கார்டை கொடுத்து, நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “உங்களை சந்தித்து சற்று விரிவாக பேசவேண்டும். எனக்கு உங்கள் நம்பரை எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். பின்னர் உங்களை தொடர்பு கொள்கிறேன்” என்றேன்.
அன்று மதியம், உணவு இடைவேளையின்போது அவரிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்தது. அவரது பெயர் வள்ளிமுத்து என்று அறிந்துகொண்டேன். அவர் ப்ரீயாக இருக்கிறாரா , நம்மை சற்று விரிவாக அறிமுகப்படுத்திக்கொண்டு, நமது தளத்தை பற்றியும் அதன் பணிகள் பற்றியும் அவருக்கு எடுத்துக் கூறினேன்.
“காலை நீங்கள் சவாரியில் இருந்தபடியால் விரிவாக பேசமுடியவில்லை. திருக்குறள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களை இயன்றவரை ஊக்குவிப்பதை லட்சியமாக கொண்டுள்ளேன். எனவே உங்களை நேரில் சந்தித்து ஒரு சிறிய பேட்டி எடுக்கவேண்டும். அப்படியே உங்கள் சக ஓட்டுனர்களை வைத்து அவர்கள் முன்னிலையில் எங்கள் தளம் உங்களை கௌரவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்!” என்றேன்.
“கௌரவம் எல்லாம் எதுக்கு சார்? அதெல்லாம் வேண்டாமே…!” என்று சற்று கூச்சப்பட்டார்.
“சார்… திருக்குறள் பணியில் இருப்பவர்களை என்னால் முடிந்த மட்டும் ஏதோ ஒரு வகையில் ஊக்குவிக்க விரும்புகிறேன். என் நண்பர்களையோ தள வாசகர்களையே வைத்து அவர்கள் முன்னிலையில் உங்களை கௌரவிப்பதைவிட உங்களது சக ஷேர் ஆட்டோ ஓட்டும் நண்பர்களை வைத்து அவர்கள் முன்னிலையில் உங்களை கௌரவித்தால் உங்கள் பனியின் மேன்மை அவர்களுக்கு புரியும்…” இப்படியாக ஏதோ எடுத்துக் கூறி அவரை சம்மதிக்க வைத்தேன்.
அடுத்து வந்த ஒரு ஞாயிறு மதியம் சந்திப்புக்கு ஏற்பாடானது. போரூர் சேது ஷேத்ரம் அருகே ஷெல் பெட்ரோல் பங்க் எதிரே சாலை சற்று விசாலமாக இருக்கும். எனவே அங்கேயே சந்திப்பை வைத்துகொள்வது என்று முடிவானது.
அவரை சந்தித்து அவரிடம் உரையாடியதிலிருந்து….
தேனி மாவட்டம் உத்தமப்பாளையத்தைச் சேர்ந்தவர் வள்ளிமுத்து. சென்னை போரூர் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தற்போது போரூர் – பட் ரோடு சந்திப்பு வரை டாட்டா மேஜிக் ஓட்டிவருகிறார்.
ஆரம்பக் காலத்தில் அனைத்து ஆட்டோக்களையும் போலவே இவரது ஆட்டோவிலும் பெயருக்கு ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே புத்தகங்கள் படிப்பதில் இவருக்கு ஆர்வம் உண்டு. காலை, மாலை என இருவேளையும் பள்ளிக் குழந்தைகளை சவாரி ஏற்றி வந்த இவர், சன் டிவியில் பேச்சாளர் சாலமன் பாப்பையாவின், ‘தினம் ஒரு திருக்குறள்’ நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்து வந்தார். ஒரு நாள் ஏன் ஆட்டோவில் தினமும் ஒரு திருக்குறள் எழுதக் கூடாது என்ற ஆர்வம் மேலோங்கியது.
தமிழ் மொழியின் சிறப்பையும், திருக்குறளின் மேன்மையையும் அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்று அவருக்கு அப்போது ஏற்பட்ட எண்ணத்தின் தொடர்ச்சியாக இன்று வரை அவரது ஆட்டோவில் திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட பண்டைய தமிழ் பாடல்கள் இருக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த அரிய செயலை இவர் கடந்த 12 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகியவற்றில் இருந்து குறள்களை தேர்ந்தெடுத்து, ஆட்டோவின் பின் இருக்கையில் அமர்பவர்கள் படிக்க வசதியாக டிரைவர் சீட்டுக்கு பின்புறமும், ஆட்டோவின் பின்புறத்திலும் எழுதி வருகிறார். தேதி; அதிகாரம்; குறள் எண்: அதிகாரத்தின் தலைப்பு; தெளிவுரை, ஆங்கில விளக்கம் ஆகியவை இதில் இடம்பெறும். 1,080 திருக்குறளை இரண்டு சுற்று எழுதிவிட்டு, தற்போது மூன்றாவது சுற்றை துவக்கியுள்ளார்.
ஆட்டோவில் திருக்குறள் மட்டுமல்லாமல் ஒளவையாரின் ஆத்திச்சூடி, நீதிவெண்பா, கொன்றைவேந்தன் உள்ளிட்ட செய்யுள் பாடல்களையும், நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், நன்னெறி, பதினெண்கீழ்கணக்கு, புறநானூறு ஆகிய இலக்கியச் சுவை மிகுந்த செய்யுள்களையும், அதன் பொருளோடு சேர்த்து ஆட்டோவின் பக்கவாட்டு பகுதிகளில் எழுதி வருகிறார் வள்ளிமுத்து.
திருக்குறளை சிறு புத்தகமாக வெளியிட்டால், அதன் முழு பயன் கிடைக்கும் என்று கருதி, புரவலர்கள் உதவியுடன் 30 திருக்குறள் கொண்ட புத்தகத்தை வள்ளிமுத்து இலவசமாக வெளியிட்டார். ஒவ்வொரு மாதமும் திருக்குறள் புத்தகம், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட நூல்களை எளிய நடையில் அச்சடித்து பொதுமக்களுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறார்.
திருக்குறள் மட்டுமின்றி, ஆத்திச்சூடி; கொன்றைவேந்தன்; மூதுரை; அறநெறிச்சாரம்; நாலடியார்; திருவாசகம்; திருவருட்பா; விவேகானந்தர் சிந்தனைகள்; தியாகிகள் வரலாறுகளையும் வள்ளிமுத்து தொகுத்துள்ளார். இவரின் இந்த தொகுப்பு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மேலும், “தமிழ் இலக்கியச் சாரல்’ என்ற தலைப்பில், 34 புத்தகங்களை அச்சடித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக வள்ளிமுத்து வழங்கியுள்ளார். பெற்றோர் மத்தியில் ஆங்கில மோகம் அதிகரித்து வரும் சூழலில், திருக்குறளை எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில், திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தெளிவுரை எழுதுவதை ஊக்குவித்து வருகிறார்.
மேலும் திருக்குறளை மாணவர்களிடம் பரப்பும் விதத்தில் மாதந்தோறும் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் பல இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்ட போட்டிகளையும் நடத்தி வருகிறார்.
திருக்குறள் மீது ஆர்வம் வந்தது குறித்து திரு.வள்ளிமுத்து கூறியதாவது: “ஷேர் ஆட்டோ ஓட்டும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் திருக்குறள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். திருக்குறளில் இல்லாத நீதிகளே கிடையாது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனுபவங்களை திருக்குறளுடன் பொருத்திப் பார்க்கும்போது அதன் அர்த்தம் இன்னும் வியக்கவைக்கிறது.
இன்ப, துன்பங்களை சமாளிக்கவும், மனித வாழ்வில் திருக்குறள் ஓர் அங்கம் என்பதை உணர்த்தவே இந்த சேவையில் ஈடுபட்டுள்ளேன். ஆரம்பத்தில் என் முயற்சியை கேலி செய்தவர்கள், இன்று பாராட்டுகின்றனர். “எப்போது அடுத்த புத்தகம் போடுவீர்கள்’ என்று கேட்கின்றனர். தற்போது திருக்குறள் ஆர்வலர்கள் அதிகமாகிவிட்டனர். இதுவரை 34 திருக்குறள் பதிப்புகள் அச்சிட்டுள்ளேன்.”
இந்த புத்தகத்தில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அதற்க்கு பதில் புத்தக அச்சடிக்க உதவிய புரவர்களின் பெயரை மொபைல் நம்பரோடு தந்துள்ளார். ஒவ்வொரு புத்தகத்தையும் இது போன்று நிதி உதவி பெற்றே வெளியிட்டு வருகிறார்.
தனியார் பள்ளி ஒன்றில் 900 மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்து பள்ளி குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்தி, மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் இவர் வழங்கியிருக்கிறார். இவரை பாராட்டி பல அமைப்புகள் விருதுகளை வழங்கியுள்ளன.
அடுத்து 3,000 அல்லது 5,000 மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்து திருக்குறள் போட்டிகளை வித்தியாசமாக நடத்த திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு வள்ளிமுத்து தெரிவித்தார்.
திருக்குறள் மாநாடு ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் வள்ளிமுத்து.
அரசு செலவில் தொழில்நுட்பக் கல்வியும் உயர்கல்வியும் படித்துவிட்டு அயல்நாட்டுக்கு சென்று யாருக்கோ பணி செய்து தன் வசதி வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள நினைக்கும் மாணவர்களும் படித்தவர்களும் (?!) மிகுந்த இன்றைய சமூகத்தில் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும் அத்தனை கஷ்டத்திலும் திருக்குறள் பணியில் தன்னை அற்பணித்துக்கொண்டுள்ள வள்ளிமுத்து அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!
இவரது பணிகள் மற்றும் சேவையை தேசிய அளவில் ஏன் உலக அளவில் எடுத்துச் செல்லும் இணையதள பார்ட்னராக (WEBSITE PARTNER) நம் தளம் செயல்படும் என்றும்… உலக அரங்கில் அவரது பெயரை எடுத்துச் சென்று அவரின் அரும்பணியை அனைவருக்கும் தெரியவைப்பதே நம் குறிக்கோள் என்றும் கூறினேன்.
(ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். வள்ளிமுத்து அவர்களை பற்றி, அவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து திருக்குறள் தொண்டு செய்து வந்தபோது, பிரதான நாளிதழ்களில் செய்தி அவரது கருத்துக்களுடன் வந்துள்ளது. ஆனால் இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனரான பிறகு அவரை பற்றிய செய்தி புகைப்படத்துடன் நம் தளத்தில் தான் வருகிறது என்று கருதுகிறேன். அந்தளவில் நாம் பெருமிதம் கொள்ளலாம்! மற்றபடி வள்ளிமுத்து போன்ற சூரியன்களுக்கு நாம் அடிக்கும் டார்ச் இந்த பதிவு. அவ்வளவே!!)
“சேவை செய்ய கோடிகள் தேவையில்லை… மனம் ஒன்றே போதும்” என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்தி வருகிறார் வள்ளிமுத்து. திருக்குறள் எந்தளவு நம் சமூகத்தில் ஊடுருவிகிறதோ அந்தளவு சமூகத்தின் அவலங்கள் களையப்படும் என்பது உறுதி. அந்த வகையில் திரு.வள்ளிமுத்து அவர்கள் தொண்டு மிக மிகப் பெரிய ஒன்று.
அவரது சக ஆட்டோ நண்பர்களின் முன்னிலையில், அவர்களை வைத்தே திரு.வள்ளிமுத்து ஆற்றி வரும் திருக்குறள் பணி மற்றும் சேவையின் மகத்துவத்தை எடுத்துக்கூறி பலத்த கைதட்டல்களுக்கிடையே நம் தளம் சார்பாக அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
தான் வெளியிட்டு வரும் திருக்குறள் குறித்த சிற்றிதழை நமக்கு பரிசளித்தார் திரு.வள்ளிமுத்து.
திருக்குறள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களை தேடித் தேடி கௌரவிக்கும் நம் பணி தொடரும்.
[END]
டியர் சுந்தர்ஜி
திரு வள்ளி muthu ஆற்றி வரும் சேவை அளப்பற்கரியது. அவரது அரும் பணியை ஊக்குவித்த உங்களுக்கு எமது பாராட்டுக்கள்.
திருக்குறள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களை தேடித் தேடி கௌரவிக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நன்றி
UMA
உலகத்தின் பொது நூலான திருக்குறளில் இல்லாத வாழ்வியல் தத்துவங்களே இல்லை. ஒரு மனிதன் தன வாழ்நாளில் உன்னதமான வாழ்வை வாழ திருக்குறளை பின்பற்றினாலே போதும். திருவள்ளுவரால் எழுதப்பட்டு உலகம் முழுதும் எற்றுக்க்கொள்ளப்பட்ட நூல் திருக்குறள். நாம் போற்றிக் கொண்டாட வேண்டிய பொக்கிஷத்தை இன்றைய அவசர உலகில் மருந்துக்கும் நாம் நினைப்பதில்லை என்பதே உண்மை.பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் படித்ததோடு சரி. ஆனால், தான் அறிந்த திருக்குறளை, அதன் மகத்துவத்தை பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அய்யா. வள்ளிமுத்து அவர்களின் செயல் போற்றத்தக்கது. என்னைப் பொறுத்த வரையில் இதுவும் ஒரு ஆசிரியப்பணியே.
—
மிகச் சரியானவர்களைத் தேடிச் சென்று, எங்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்தத் தளம் முழுக்க முழுக்க தேடல் உள்ள தேனிக்களுக்காக என்று காட்டி வரும் உங்கள் பணி வளரட்டும்.
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
\\திருக்குறள் எந்தளவு நம் சமூகத்தில் ஊடுருவிகிறதோ அந்தளவு சமூகத்தின் அவலங்கள் களையப்படும் என்பது உறுதி. \\
படிக்க படிக்க ஆனந்தமாக உள்ளது ,தங்களின் தேடல் நமது தளத்திற்கு மேலும் கெளரவம் சேர்க்கிறது .
தங்களுடன் பயணிப்பதில் பெருமை கொள்கிறோம் .
-மனோகர்
உண்மையில் திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை எனலாம் ,அப்படிப்பட்ட திருக்குறளை எல்லோருக்கும் போய் சேரவேண்டும் என முயற்சி செய்துவரும் திரு ,வள்ளிமுத்து..அவர்களின் பனி மேலும் தொடர்ந்து ..அதனால் ஒருவர் திருந்தினால் கூட அவருக்கு மாபெரும் வெற்றிதான் … அன்னாரை இணையம் மூலம் உலகத்திற்கு அறிமுக படுத்த நம் தளம் சிறு கருவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இலை ..
திரு வள்ளிமுத்து அவர்களின் திருக்குறள் தொண்டு மகத்தானது. இவரை கண்டுபிடித்து சரியான முறையில் மரியாதை செய்து கௌரவித்த நம் சுந்தருக்கு நன்றி. அள்ள அள்ள குறையாத ஒரு அட்சய பாத்திரம் திருக்குறள்.
வித்யாசமான உபயோகமுள்ள ஒரு நல்ல பதிவு! திரு வள்ளிமுத்து அவர்களைபற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு சுந்தருக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
this week kumkumum has written a article about this man. Thought of informing you. But as usual you Sundar is fast very fast…
அருமையான உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
திரு வள்ளிமுத்து அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்த நன்றி
நம்முடைய தாய் மொழியில் பேச தயங்கும் இன்றைய கால கட்டத்தில் வள்ளிமுத்து அவர்களின் இந்த தன்னலமில்லா தொண்டு போற்றத்தக்கது.
வாழ்க வள்ளிமுத்து அண்ணன்.