ஆனால் உலகிலேயே மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன், தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன் – இப்படி பல சிறப்புக்கள் அவருக்கு இருப்பது பலருக்கு தெரியாது.
இவை எல்லாவற்றையும் விட ராஜ ராஜ சோழனின் தலையாய சிறப்பு என்ன தெரியுமா?
இன்று நாம் படித்து உருகும், தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் ராஜ ராஜ சோழனே. ராஜ ராஜ சோழன் என்கிற மன்னன் ஒருவர் இல்லையென்றால் சைவத் திருமுறைகளே நமக்கு கிடைத்திருக்காது.
இன்று நாம் படித்து மகிழும் சைவத் திருமுறைகள் ஏதோ சுலபமாக வெளியுலகிற்கு கிடைத்தவை அல்ல. வாழ்வியல் தத்துவங்களை நமக்கு விளக்கி நன்னெறிக்கு நம்மை அழைத்து செல்லும் திருமுறைகள் ஒருகாலத்தில் எங்கிருக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. வருங்கால சமுதாயம் பயன்பெற அவற்றை கண்டுபிடித்தே தீரவேண்டும் என்கிற உந்துதலில் அதற்காக பலவித முயற்சிகள் மேற்கொண்டு வந்தார் ராஜ ராஜ சோழன். இதன்பொருட்டு அவர் சந்தித்த ஏமாற்றங்கள், அவமதிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ தொடர்பாக நாம் திரட்டிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
===================================================
பிள்ளையாரின் உதவியோடு திருமுறைகளை மீட்ட ராஜ ராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பியும்!
திருநாரையூ ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் சன்னதியில் பக்தியுடன் தினமும் பூஜித்து வந்தார் ஆதி சைவர் மரபில் தோன்றிய அனந்தேசர். இவர் துணைவியார் கலியாணி அம்மையார். இவர்களது புதல்வர் நம்பி. தினந்தோறும் நைவேத்தியத்தைக் கோவிலில் விநியோகித்தே திரும்புவார். பிரசாதம் கேட்கும் தன் புதல்வன் நம்பியிடம் ‘பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார்’ எனப் பதில் சொல்லுவார்.
ஒருமுறை தந்தை வெளியூர் போக, சிறுவன் நம்பி பக்தியுடன் பூஜை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைத்தான். சாப்பிட வேண்டினான். மன்றாடினான். பிள்ளையார் சாப்பிடவில்லை. தான் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் பிள்ளையார் உணவை ஏற்க மறுக்கிறார் என்று எண்ணி வேதனையுடன் தலையை கல்லில் முட்டி மோதி அழுதான்.
தும்பிக்கை நாதன் தம் தாளில் நம்பிக்கை வைத்த நம்பியை தம் திருக்கரத்தால் தாங்கித் தடுத்தருளி ‘நம்பி பொறு’ என கூறி துதிக்கையை வலப்புறமாக நீட்டிச் சாப்பிட்டார். மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பிய நம்பி, விஷயத்தை தாயிடம் சொன்னான். எப்படி நம்புவாள் அவள்? மறுநாள் தந்தை மறைந்திருந்துப் பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைப்பெற்றது. மெய் சிலிர்த்தார் அனந்தேசர். மகனைக் கட்டிக்கொண்டார். நாளுக்கு நாள் நம்பிக்கும் பிள்ளையாருக்கும் நெருக்கம் வளர்ந்தது. விநாயகர் திருவளால் எல்லாக் கலைகளும் நம்பிக்கு எய்தின.
“என்னை நினைந்தடிமை கொண்டேன்
இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் –
புன்னை விரசு மகிழ் சோலை வியன்
நாரையூர் முக்கண் அரசு மகிழ் அத்திமுகத்தான்”
என்று ஆரம்பிக்கும் ‘திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை’ உட்பட பத்து நூல்களை விநாயகர் அருளால் ‘ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி’ இயற்றினார். அந்த பரம பக்திமான் அவதத்த திருத்தலமும் இதுவே!
ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், ஸ்ரீநம்பியாண்டார் நம்பி, சோழ பேரரசன் இராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக தேவாரத் திருமுறைகளை நமக்கு கிடைக்கச் செய்தார். அந்த வரலாற்றை இனி காண்போம்.
திருமுறை தந்த தலம்
ஸ்ரீநம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் இராஜ ராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிடவேண்டும் என்ற அவரது நெடுநாளைய ஆசைக்கு ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் ஆசி வேண்டி வந்தார். இராஜ ராஜ சோழனின் காணிக்கைகளையும் நைவேத்யங்களையும் நம்பியின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து ஏற்றார் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்.
‘திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும்’ என்று இராஜ ராஜனும், நம்பியும் வேண்ட, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் என தெய்வ வாக்கு ஒலித்தது. (இன்றும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயத்தின் மேற்கு உள் பிரகாரத்தில் ‘திருமுறை காட்டிய விநாயகர்’ சன்னதி அமைந்துள்ளது.)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகளை வைக்கப்பட்டதாக பிள்ளையார் கூறிய அறையை ராஜ ராஜ சோழன் திறக்கச் சொன்னபோது, தீட்சிதர்கள் அந்த அறையை திறக்க மறுத்துவிட்டனர். சாவியையும் தரமுடியாது என்று கூறிவிட்டனர். ராஜ ராஜ சோழன் எத்தனையோ மன்றாடியும், “முடியாது!” என்று சொல்லிவிட்டனர்.
“அப்பர், ஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் வரட்டும். அவர்கள் வந்தால் அவர்கள் முன்னிலையில் நாங்கள் சாவியை தருகிறோம்” என்றனர். ராஜ ராஜ சோழனின் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்பாக வாழ்ந்த சைவ சமய குரவர்களை எப்படி அழைத்து வருவது?
கடைசியில் ராஜ ராஜ சோழன், மூவரின் உருவத்தையும் ஐம்பொன்னால் செய்து அதை பல்லக்கில் கொண்டு வந்து வைத்து, “உள்ளே தில்லை அம்பலத்தில் ஆடிக்கொண்டிருப்பது சாட்சாத் அந்த சிவபெருமானே என்றால், இந்த சிலைகளும் அப்பர், ஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரே. இல்லை இங்கே இருப்பது வெறும் உலோகத்தால் ஆன சிலை தான் என்றால் அதுவும் உலோகச் சிலையே…!” என்றார். அவர் வாதத்திற்கு மறுப்பு கூறமுடியாது கடைசியில் அறையின் சாவியை தருவதற்கு ஒப்புக்கொண்டனர்.
பின்னர் மூவர் சிலைகளை பூஜித்து அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையை திறக்கச் செய்தார் ராஜ ராஜ சோழன். ஏடுகள் புற்று மூடியிருக்கக் கண்டனர். உள்ளம் நொந்தனர். ‘இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம்’ என அசரீரி ஒலித்தது.
திருவருள் வாக்கால் ஒருவாறு அமைதிப்பெற்றனர். திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றை பதினொரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தார். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறை அமைக்க விரும்பிய நம்பியும் அரசனும் திருஎருக்கத்தம்புலியூல் உள்ள சிவபெருமானை வேண்டினார்கள்.
“திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண்ணுக்கு (பாடினி) பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்னை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்” என்று தெய்வ வாக்கு கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் அத்தலத்திலுள்ள அந்த பெண்ணைக் கண்டறிந்து தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர்.
இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீநம்பியாண்டார் நம்பி, இராஜ ராஜ சோழன் மூலமாக அருளியவர் திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்.
ராஜ ராஜ சோழனின் நினைவிடம் இருக்கும் பரிதாப நிலை!
ஆனால் இப்படிப்பட்ட மாமன்னனின் நினைவிடத்தை பாருங்கள். கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் என்ற ஊரில்தான் இந்த நினைவிடம் இருக்கிறது. தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார். பக்கிரி சாமி என்ற ஒரு பெரியவர்தான் இந்த நினைவிடத்திற்கு பூஜை செய்து பராமரித்து வருவதாக தெரிகிறது.
பல அரசியல் தலைவர்களின் சமாதிகள் ஜொலித்துக்கொண்டிருக்க, திருமுறைகளை மீட்டு அவற்றை நம் சந்ததியினருக்கு அளித்த ஒரு மாமன்னனின் நினைவிடத்தை பாருங்கள்…
“இது ராஜ ராஜ சோழன் சமாதியல்ல… அவர் அஸ்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் தான்” என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சமாதியோ அல்லது அஸ்தி வைக்கப்பட்டுள்ள நினைவிடமோ, எதுவாக இருந்தாலும் தமிழர் பெருமையை தரணிக்கு உரைத்த மன்னனின் அடையாளம் இப்படியா இருக்கவேண்டும்?
என்ன சொல்வது… நெஞ்சு பொறுக்குதில்லையேஇந்த நிலை கேட்ட மனிதரை நினைத்துவிட்டால்…!
[END]
டியர் சுந்தர்ஜி
இந்த பதிவின் மூலம் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொண்டோம். நான் மிகவும் விரும்பி படிக்கும் தேவாரம் , ராஜராஜ சோழன் மற்றும் ஸ்ரீநம்பியாண்டார் நம்பி மூலமாக கிடைத்ததை பற்றி அறியும் பொழுது மிக்க மகிழ்ச்சி. இந்த பதிவிற்காக உங்களுக்கு ஒரு ராயல் salute
நன்றி
உமா
சுந்தர்ஜி…
இராஜராஜ சோழரைப் பள்ளிக்கூடப் பையன் போல் அவன், இவன் என்று சொல்வது மரியாதைக் குறைவாகப் படுகின்றது. மாற்றி விடுங்களேன்.
எனக்கு கூட அது தோன்றியது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இயன்றவரை மாற்றியிருக்கிறேன். விடுபட்டவைகளை இரவு மாற்றிவிடுகிறேன்.
மன்னிக்கவும்.
– சுந்தர்
சார், திருமுறை நமக்கு கிடைத்தது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய பதிவு.
தற்போது சோழனின் சமாதி இருக்கும் இடம் கண்டு மனம் மிகவும் கனக்கிறது.
நம் படிக்கும் காலத்தில் சோழர்களின் போர் முறை, அவர் கட்டிய கோவில்கள் மற்றும் அவர் வாழ்க்கை வரலாறு மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் திருமுறை கிடைக்க அவர் அரும்பாடு பட்டது நீங்கள் எழுதிய பிறகு தான் தெரியும்.
திருமுறை நம் வாழ்வியல் பொக்கிஷம்.
திருநாரையூர் நம்பிஇடம் ஆனைமுகத்தான் பிரசாதம் சாப்பிட்ட கதை தெரியும். ஆனால் அவர் தான் திருமுறை பதிகங்களை தொகுத்து கொடுத்துள்ளார்.
புது புது தகவல்கள்.
சுந்தர்ஜி
, திருமுறை நமக்கு கிடைத்தது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய பதிவு.தற்போது சோழனின் சமாதி இருக்கும் இடம் கண்டு மனம் மிகவும் கனக்கிறது. திருமுறை கிடைக்க அவர் அரும்பாடு பட்டது நீங்கள் எழுதிய பிறகு தான் தெரியும்.திருமுறை நம் வாழ்வியல் பொக்கிஷம்.ராஜ ராஜ சோழன் திருமுறை தந்தமைக்கு ஒரு சிரம் தாழ்த்தி வணக்கம்.
மன்னரின் சமாதி நிலை கண்டு மனம் கணக்கிறது…! இன்று நாம் சினிமாவிற்கும், சினிமா நடிகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.. முகநூலில் நம்மவர்கள் அதிகம் விரும்பி பார்ப்பதும், பகிர்வதும் அனேகமாக சினிமா விசயங்களாகத் தான் இருக்கிறது…ஒரு தமிழ் மன்னரின் வரலாறு தமிழர்களால் மறக்கப்படுவது வேதனைக்குரியதே….!
—
இன்றைய சமுதாயம் தமிழர் பெருமைகளை மறந்து வரும் சூழலில் உங்கள் பதிவு ஒரு மிகப்பெரிய நினைவூட்டலாய் அமைந்தது…உங்கள் முயற்சிக்கு நன்றிகள்…!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
ஆயிரம் வருடங்கள் தாண்டி இன்றும் மிக கம்பீரமாக இருக்கும் கோவில் ,இன்றுவரை அந்த கோபுரத்தில் இருக்கும் ஒரு பாறை எப்படி வைத்தார்கள் என்று புரியாத புதிர் அப்படி பட்ட ஒரு கோவிலை நிர்மாணித்த ஒரு மாபெரும் அரசனின் சமாதி இப்படி பரிதாப நிலையில் இருக்கிறதை பார்க்கும்போது வருத்தமாக தான் இருக்கிறது.
அருமையான பதிவு !!
தேவாரப் பதிகங்களுக்குப் பண்முறை அமைத்த திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண் பெயர் என்ன ?
தமிழுக்கு பணி செய்த இவர்கள் எல்லாம் காலகாலத்திற்கும் போற்றப்பட வேண்டியவர்கள் ?
முருகானந்தம்
தேவாரப் பதிகங்களுக்குப் பண்முறை அமைத்த திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த பெண் மதங்கசூளாமணி ஆவார்.
இதை படிக்காமல் இருந்த்ருந்தால் கஷ்டமே இல்லை சார்.
படித்ததும் நெஞ்சு வெடிச்சுரும் போலே இருக்குதே .
கடவுளே இந்த அரசியல் வாதிகளுக்கு கண்ணில்லையே ? என்ன பண்ருது சார்.
கனத்த மனதுடுன்
சோ. ரவிச்சந்திரன்
கைகா, கர்நாடகா
9480553409