===========================================================
[highlight]எல்லாம் இறைவன் செயல்[/highlight]
நான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என் ஜாதகத்தைப் பற்றியது.
`ஐம்பது வயதுக்கு மேல் நான் ஒரு சாமியாராகவோ அல்லது, அந்தக் குணங்கள் கொண்டவனாகவோ மாறிவிடுவேன்’ என்று குறிப்பிட்டதே அது.
அப்படி ஒருவர் குறிப்பிட்டபோது எனக்கு வயது இருபத்து ஒன்று. இப்போது ஐம்பதைக் கடந்துவிட்டேன். இந்த முப்பது ஆண்டுக் காலமும் அவர் சொன்னது போலவேதான் வாழ்க்கை ஓடியிருக்கிறது. இப்போது மனோபாவம் மட்டுமின்றி, உணவு முறை கூட சாமியார் முறையாகி இருக்கிறது.
எந்தெந்தக் காரியங்களை நான் பிரியத்தோடு செய்வேனோ, அதையெல்லாம் இறைவன் வெறுக்க வைத்திருக்கிறான். எவ்வெவற்றை நான் விரும்ப மாட்டேனோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி கட்டளை இட்டிருக்கிறான். உணவில் ஒவ்வொரு பொருளாக வெறுக்க வைக்கிறான். ஆனால், சிந்தனையில் நிதானத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.
எனக்கு எதிர்காலம் சொன்னவர், என் கைரேகைகளை மட்டும் தான் பார்த்துச் சொன்னார். ரேகை, ஜோசியம், ஜாதகம்-இவை சரியாகப் பார்க்கப்படுமானால், விஞ்ஞானம் உலகத்தைக் கணிப்பது போலவே இவை வாழ்க்கையைக் கணித்து விடும்.
இறைவனுடைய படைப்பில் ஒரு கன்றுக்குட்டிக்கும் கூட ஜாதகம் இருக்கிறது. கன்றுக்குட்டி என்ன, கடவுளுக்கே கூட ஜாதகம் இருக்கிறது. திருப்பதியில் நிற்கும் பெருமாள்தான் அழகர் கோயிலிலும் நிற்கிறார்.
ஆனால், திருப்பதி சமஸ்தானாதிபதி கோடீஸ்வரராகத் திகழ்கிறார்; அழகர் கோயிலில் பெருமாள் அன்றாடம் தடுமாறுகிறார். இத்தனைக்கும் காலத்தால் திருப்பதிக்கு முந்தியது அழகர் மலை என்று கருதப்படுகிறது.
கட்டியவன் ஜாதகம் எப்படியோ யார் கண்டது?
எனக்குத் தெரிந்த நல்ல குடும்பத்திலே பிறந்த அழகான பெண்ணொருத்தி, வசதி இல்லாத ஒரு அரைப்பைத்தியத்தை மணந்து கொண்டு, இட்லி சுட்டு வியாபாரம் செய்கிறாள். பார்த்தால் பொத பொதவென்று இருப்பாள் ஒருத்தி. வீதியில் போகும் விலங்குகள் கூட அவளை ஏறெடுத்துப் பார்க்க மாட்டா; அவளுக்கு லட்சாதிபதி வீடு; அழகான மாப்பிள்ளை கிடைத்து விட்டது.
கோயிலுக்கு ஜாதகம் இருக்கிறது. குருக்களுக்கு ஜாதகம் இருக்கிறது. கோயில் கட்டியவனுக்கும் ஜாதகம் இருக்கிறது. ஸ்ரீராமனுடைய ஜாதகத்திலும், பெண்டாட்டியைப் பறிகொடுக்கும் கட்டம் இருக்கிறது. சீதை பிறக்கும்போதே அவள் கை ரேகையில், அவள் காட்டுக்குப் போவாள் என்றிருக்கிறது.
ஒரு காரியம் நடைபெறுகிறது என்றால், அதற்கு நாம் காரணமில்லை என்றால், ஏதோ நமக்குத் தெரியாத ஒரு சக்தி தானே காரணம்?
தேர்தல் நடத்துவதும் நடத்தாததும் ஒருவர் கையில் இருந்த போது, அவர் தேர்தல் நடத்துவானேன்? தோல்வியுற்று அவதிப்படுவானேன்?
பெரிய பெரிய சாமர்த்தியசாலிகளையெல்லாம் ஜாதகம் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த அதே நேரத்தில் பாகிஸ்தானும் பிரிந்தது. பாகிஸ்தான் ஜாதகத்தில் ராணுவ ஆட்சி என்றும், இந்தியாவின் ஜாதகத்தில் கலப்படம், குழப்பம் என்றும் இறைவன் அப்பொழுதே எழுதி வைத்திருக்கிறான்.
நினைக்காத ஒன்று நடக்கும்போது அதுவே ஜாதகப் பலன் என்றாகி விடுகிறது.
இது மாதிரி விஷயங்களில் இந்துக்களின் நம்பிக்கை எவ்வளவு அர்த்த புஷ்டி வாய்ந்தது என்பதைக் காண முடிகிறது.
சில கோயில்களில் பிராகாரச் சுவர்களில் இன்ன காலத்தில் இன்ன காரியம் நடக்கும் என்பதே எழுதப்பட்டிருக்கிறது.
உலக வாழ்க்கையில் இந்துக்கள் தொடாத பகுதிகளே இல்லை. எத்தனை பகுத்தறிவுகள் பொத்துக் கொண்டு ஓடி வந்தாலும், கடைசியில் எங்கே போகிறோம் என்று தெரியாமலே தான் கண் மூட வேண்டியிருக்கிறது.
அந்த இடத்தைத்தான் இந்துமதம் `ஈஸ்வரன்’ என்று அழைக்கிறது. சொல்லப்போனால், இந்துமதச் சக்கரத்திற்குள்ளே தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது. இந்து மதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டுதான் மற்ற மதங்கள் உருவாக்கப்பட்டன.
மரத்தடி கிளி ஜோசியனில் இருந்து, மெக்சிகோ பேராசிரியர் வரை எல்லோரும் நம்புவது, `எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியது இந்துமதம் ஒன்றே’ என்பதைத்தான்.
(நன்றி : கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ | எழுத்துரு உதவி : senthilvayal.wordpress.com)
===========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?
சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்கள்!
ஜோதிடம் என்பது மிக மிக அற்புதமான ஒரு கலை. ஆய கலைகள் 64 ல் ஒன்று. ஜோதிடம் ஒரு அறிவியல். ஜோதிடர்களின் தவறு ஒரு போதும் ஜோதிடத்தின் தவறு ஆகாது. ஜோதிடத்தைவிட அதற்கு அடிப்படையான நவக்கிரகங்களை விட இறைவன் மிக மிகப் பெரியவன் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.
இன்றைக்கு ஜோதிடம் எங்கே போய்கொண்டிருக்கிறது ஜோதிடர்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜோதிடத்தை ஒரு பணம் செய்யும் தொழிலாக கருதாமல் அதை பாக்கியமாக கருதி, மக்களுக்கு நல்ல மார்க்கத்தை மட்டுமே காட்டுவதற்கு பயன்படுத்தும் ஜோதிடர்கள் மிக மிக குறைவு.
அப்படி இறைவன் அளித்துள்ள ஜோதிட ஞானத்தை மற்றவர் நலனுக்கு மட்டுமே பயன்படுத்துகிறவர்களில் ஒருவர் தான் சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்கள். இவர் அடிப்படையில் AMIE படித்த ஒரு பொறியாளர். ஜோதிடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
முதல் முறை நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது தன்னை 65 வயது இளைஞன் என்றே குறிப்பிட்டார். அதிலிருந்தே இவரது சிந்தனை போக்கை தெரிந்துகொள்ளலாம்.
திருச்சி BHEL தொழிற்சாலையில் 30 ஆண்டு காலம் பணியாற்றி, பின் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஜோதிடம் என்கிற மிக உன்னதமான கலையை, முறையாகப் பயின்று, பயின்றதை பலருக்கும் சொல்லிக் கொடுத்து, இதில் உள்ள மூட நம்பிக்கைகளைக் களைந்து எறிய வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளார். இந்த உயர்ந்த கலையை நிறைய மாணவர்களுக்கு குறைந்த செலவில் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். தன்னிடம் ஜோதிட பலன் கேட்டு வருபவரிடம் பணம் எதுவும் இவர் வாங்குவதில்லை. அப்படியும் தாங்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்று விரும்புபவர்களுக்காக ஒரு உண்டியல் வைத்து அதில் சேரும் தொகையை தர்ம காரியங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்.
விதியின் பயனாய் துன்பப்படும் நபர்களுக்காக, “விதியை இறையருள் கொண்டு வெல்வது எப்படி” என்கிற தலைப்பில் அவரும் அவரது நண்பர் திரு ராமச்சந்திரனும் சேர்ந்து ஒரு மலிவு விலைப் புத்தகத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரும் பாடிய தேவரப் பாடல்களும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழும், ஒவ்வொரு வினைக்கும், அதனால் ஏற்படும் துன்பத்தை நீக்க அதற்கு உரித்தான பாடல்களைத் தொகுத்து கொடுத்திருக்கிறார்கள்.
(அந்த நூலை அவரது வாழ்த்து செய்தி எழுதி கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்தார் திரு.நாராயணன்.)
அவர் மனைவி அவரது சகோதரியுடன் இணைந்து தேவாரப் பாடல்களை மறைந்த கலைமாமணி சைதை நடராஜன் அவர்களிடம் முறையாக கர்னாடக இசையில் பயின்று பல மேடைகளில் இசை நிகழ்சிகளை நடத்தி இரண்டு ஒலித்தட்டுக்களையும் வெளியிட்டிருக்கிறர்கள்.
இவரின் நட்பு நமக்கு கிடைத்தது தனிக்கதை. நல்லோர்களை தேடிச் செல்லும் பாதையில் நல்லோர்களை தானே பார்க்க முடியும்? அந்த வகையில், நங்கநல்லூர் நிலாச்சாரல் குறித்த நமது பதிவை பார்த்துவிட்டு நமது நண்பரானவர் இவர். இவரை நண்பர் என்று சொல்லுவதைவிட என் ஆசிரியர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆம்… இவரிடம் ஜோதிட பாடம் கற்க முடிவு செய்திருக்கிறேன். அவரும் நம்மை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு இவரை மணப்பாக்கத்தில் உள்ள இவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றதை மறக்க முடியாது. அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இவை.
நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி இவரை இந்த வாரம் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
நாரயணன் அவர்களுக்கு நம் தள வாசகர்கள் சார்பாக நன்றி.
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
====================================================================
நோயில் தவிக்கும் அன்னை நலம் பெறவேண்டும்
அன்பர்களுக்கு வணக்கம்.
எனது நண்பர் திரு. கணேசன் நடராஜன் அவர்களுடய தாயார் திருமதி. லலிதா(63) அவர்கள் அண்மைக்காலமாக தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். (இது நாள் வரை அவர் எந்த உபாதையும் இன்றி நலமாக இருந்துள்ளார்). மருத்துவரிடம் சோதித்ததில் அவருக்கு குடல் புற்று நோய் உள்ளதாகவும் மேலும் அது வயிற்றில் பரவி விட்டதாகவும், அது நிலை 4 எனவும் தெரிவித்து உள்ளனர். நோயின் தன்மை மிகவும் தீவிரம் அடைந்துள்ளதால், அவரை காப்பாற்ற முடியாது எனவும் அவர் இன்னும் 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டும் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர். இதனால் திரு. கணேசன் அவர்களின் குடும்பத்தார் செய்வதறியாது உள்ளனர். பல திருத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அன்பர்களிடம் வேண்டுவது பிரார்த்தனை கிளப்பில் அனைவரும் திருமதி. லலிதா அவர்கள் இந்த நோயில் இருந்து விடுபட, மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.
ஹர ஹர ஷங்கர !!! ஜய ஜய ஷங்கர !!!
– ஆர். ஸ்ரீராம்
அன்புள்ள நண்பர்களே,
என் அம்மா Pancreas மற்றும் கல்லீரல் புற்றுநோய் காரணமாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பார் என்று கூறியுள்ளார். அவரது வயது 63 ஆண்டுகள் ஆகிறது. நான் என் அம்மா இன்னும் கொஞ்ச நேரம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் அவர்களை நீண்ட நாள் வாழவைக்க முடிந்த அளவு முயற்சி செய்கிறேன். நான் காஞ்சிபுரம் கோவில் சென்று காமாட்சி அம்மனிடம் வேண்டினேன். மேலும் பெரியவர் கோவிலுக்கு வருகை தந்தார். நான் மகா பெரியவாவை என் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்று மலைபோல நம்பி இருக்கிறேன். என் அம்மாவின் உடல்நிலை தேற பிரார்த்தனை செய்யுங்கள். அவரது நீண்ட ஆயுள் பெறவேண்டும்.
– என்.என். கணேஷ்
==================================================================
தந்தையின் விருப்பப்படி சொத்து உரிமையாக வேண்டும்; அபாண்ட பழி நீங்கவேண்டும்!
வணக்கம் திரு சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா நண்பர்களே…
வாழ்க வளமுடன்.மஹா பெரியவாவின் பூரண ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைத்து..உங்களது எண்ணங்கள் எல்லாம் நல்லோர் துணையோடு சிறப்பாக நடந்தேற என்னுடைய உண்மையான பிரார்த்தனைகள்.
என்னுடைய ஆதங்கம் என்னுடைய உடன் பிறந்த மூத்த சகோதரி என் மேல் அபாண்டமாக பழி சுமத்தி நான் என் குடும்பத்துடன் தற்போது குடியிருக்கும் வீட்டைப் பெறுவதற்காக வழக்கு தொடுத்து உள்ளாள்..காலம் சென்ற எனது தந்தை இந்த வீடு எனக்குதான் என்று குறிப்பிட்டு உயில் எழுதி உள்ளார்…ஆனால் அவள்…நான் எனது தந்தையின் கை எழுத்தை போட்டு பொய்யான உயில் தயாரித்து சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளேன் என்று என் மீதும் என் கணவர் மீதும் குற்றம் சுமத்தி உள்ளாள்…
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது….மஹா பெரியவாளிடம் பரிபூரணமாக இந்த வழக்கை சமர்பித்து விட்டேன்….மற்றும் நீங்கள் பிரதி வாரம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் எல்லோருடைய குறைகளையும் நிவர்த்தி செய்வது உங்களது website மூலம் தெரிந்து கொண்டேன்….உங்கள் நல்ல எண்ணங்களின் மீது கொண்ட நம்பிக்கையில் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன். இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பைப் பெற்று தருவதோடு அல்லாமல்..நானும் எனது கணவரும் இத்தகைய கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு உணர்த்த் வேண்டும்….எங்களது இந்த கோரிக்கையுடன் எனது கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும்…எனக்கு சென்னையிலேயே சிறந்த வேலை கிடைத்து எனது குடும்பத்துடன் சேர்ந்து
வாழவும் பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…
மிக்க நன்றி
கீரன் நளினா
குவாலாலம்பூர், மலேசியா
==================================================================
இசைப்ரியாவின் படுகொலைக்கு நீதி வேண்டும்!
இலங்கையில் தமிழ் தொலைகாட்சி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்ரியாவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று கருதி, அவருக்கு வன்கொடுமை இழைத்து பாலியல் பலாத்காரமும் செய்து ஆடைகளை களைந்த நிலையில் அவரை காட்டுமிராண்டித் தனமாக சிங்களப் படையினர் படுகொலை செய்த வீடியோவை அண்மையில் சேனல் 4 வெளியிட்டது. சிங்கள படையினர் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தமிழர்களை கொன்று குவித்ததை அனைவரும் அறிவர் என்றாலும் சகோதரி இசைப்ரியாவின் படுகொலை காணொளி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை உலுக்கி எடுத்துள்ளது.
மிகப் பெரிய எதிரியாகவே இருந்தாலும் அவன் ஆயுதமின்றி இருக்கையில் அவனுடன் போர் புரிய கூடாது, பெண்களை தாக்கக்கூடாது போன்ற போர் நீதிகளை உலகத்திற்கே போதித்தவர்கள் தமிழர்கள். ஆனால், ஆயுதமின்றி இருக்கும் ஒரு அபலைப் தமிழ்ப் பெண் காட்டுமிராண்டித் தனமாக படுகொலைசெய்யப்பட்டுள்ளார் என்பதை பார்க்கும்போது நாமெல்லாம இருந்து செய்வதென்ன என்று வெட்கி தலை குனிய வேண்டியிருக்கிறது.
இசைப்ரியாவின் படுகொலைக்குக் காரணமானவர்கள் அனைவரையும் சட்டமும் உலகமும் தண்டிக்கிறதோ இல்லையோ இறைவன் தண்டிக்க வேண்டும் என்பதே நமது இந்த வார பொது பிரார்த்தனை.
சகோதரி இசைப்ரியாவின் ஆத்மா சாந்தியடைவதாக!
==================================================================
திரு.என்.என். கணேஷ் தன் தாயார் மீது எந்தளவு அன்பு வைத்துள்ளார் அவர் உடல்நிலை பாத்க்கப்பட்டு மருத்துவரால் நாட்கள் குறிக்கப்பட்டுள்ளதால் எந்தளவு கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அவரது வார்த்தைகளில் இருந்தே உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த பிரார்த்தனைக்கான கோரிக்கையை திரு.கணேஷும் அவரது நண்பர் ஸ்ரீராமும் அனுப்பி சில நாட்கள் இருக்கும். பிரச்சனையின் தீவிரத்தை மனதில் கொண்டு இந்த வாரம் இதை வெளியிட விரும்பி இன்று காலை இந்த பதிவை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதே, திரு.கணேஷ் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. பிரார்த்தனைக்கான கோரிக்கை அனுப்பியிருப்பதாகவும் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறி இந்த வாரமே வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். “உங்கள் பிரார்த்தனையை தான் நான் டைப் செய்துகொண்டிருக்கிறேன்” என்றேன். கந்தசஷ்டி என்பதால் இன்று நிச்சயம் ஏதாவது தொன்மையான ஆலயத்தில் முருகனை தரிசிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். நிச்சயம் தரிசிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் நாம் ஏற்கனவே அவர் நண்பர் ஸ்ரீராமிடம் கூறியபடி காஞ்சி சென்று மஹா பெரியவாவை அவரது அதிஷ்டானத்தில் தரிசித்துவிட்டு அங்கும் அவரிடம் பிரார்த்தனையை கூறிவிட்டு வந்திருக்கிறார்.
நண்பர் என்.என். கணேஷ் அவர்களின் தாயார் திருமதி. லலிதா(63) அவர்களுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி, அவர் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும், வாசகி நளினா அவர்களுக்கு சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கவும், சகோதரி இசைப்ரியாவின் படுக்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
கீரன் நளினா அவர்கள் திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் முகநூல் மூலம் நம்மை பற்றி அறிந்து நம் வாசகரானவர். நம் தளத்தை பார்த்து, நமது பதிவுகளை படித்து நமது பணிகள் பற்றி தெரிந்துகொண்டவுடன், தனது நண்பர்கள் அனைவருக்கும் “இப்படி ஒரு தளம் நடத்தபடுகிறது. நீங்கள் அவசியம் தோள் கொடுக்கவேண்டும்” என்று கூறியதோடு அல்லாமல் தனது பங்கிற்கு மாதா மாதம் ஒரு சிறிய தொகை அனுப்புவதாக கூறி அதை செயல்படுத்தியும் வருகிறார்.
==================================================================
நண்பர் என்.என். கணேஷ் அவர்களின் தாயார் திருமதி. லலிதா(63) அவர்களுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி, அவர் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும், வாசகி நளினா அவர்களுக்கு சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கவும், சகோதரி இசைப்ரியாவின் படுக்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : நவம்பர் 10, 2013 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சமூக சேவகர் திரு.ரகுபதி அவர்கள்.
– f
சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றிகளும் வணக்கத்தையும் இங்கு சமர்ப்பிக்கின்றேன் …..
மேலும் இந்த வாரம் பிரார்த்தனைக்கு வேண்டு கோள்விடுத்த, திரு. கணேசன் நடராஜன் அவர்களுடய தாயார் திருமதி. லலிதா(63) தீவிர வாயிற்று வழியில் இருந்து நிச்சயம் விடுபடுவார் எனவும் ..
திருமதி கீரன் நளினா அவர்களுக்கு நீதி கிடைக்கவும்..
இசைப்ரியாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கவும் இனி இதுபோல் ஒரு கொடுமை நடக்காமல் இருக்கவும் ..எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் …
அருமையான தொகுப்பு .படிக்கும் போது மனது லேசாக மரியாதையை உணரமுடிகிறது .இது அர்த்தமுள்ள ஹிந்து மதம் சாரத்தின் பிரதிபலிப்பு .
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் , சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்களை வணங்கி வரவேற்கிறேன் .
இந்த வார பிரார்த்தனைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம் .விரைவில் எல்லோருக்கும் நல்லதே நடக்கும் .
-நன்றி வணக்கம் .
மனோகர் .
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் , சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்களை வணங்குகிறேன் .
இந்த வார பிரார்த்தனைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம் .விரைவில் பரிபூர்ண
குணம்அடைய பிரார்த்தனை செய்கிறோம்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் உண்மையில் பெரிய ஞானி.
அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் பெரிய தத்துவ நூல் .
இந்த மூன்று பிரார்த்தனைகளும் நிறைவேற காஞ்சி மகா பெரியவாளை உளமார வேண்டுகிறேன்.
பி. சுவாமிநாதன்
திரு நாராயணன் போன்றவர்கள் தன்னலமற்று இந்த மாதிரி பணியில் இறங்கும் போது அதன் மதிப்பே தனி…
இந்த வார பிரார்த்தனை அடியேனுடைய சப்தரிஷி ஜோதிட மையத்தில் சுமர் 100 மாணவர்களால் ஞாயிற்றுக்கிழமை 10/11/2013 மாலை 5.30 ல் இருந்து 5.45 வரை அடியேனின் தலைமையில் ராம நாம கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சிவ நாம கோஷத்துடன் இனிதே நடந்தது. திரு கணேஷ் அவர்களின் வேண்டுகோளுக்கும், கீரன் நளினாவின் வேண்டுகோளுக்கும் இறைவன் செவிசாய்ப்பான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அத்துடன் செல்வி இசைப்ரியாவின் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்றும், இது போன்ற கொடுமைகள் இனி உலகத்தில் எந்த மூலையிலும் நடக்கமல் காக்கவேண்டும் என்றும் இறைவனிடம் மன்றாடினோம். இறைவன் செவி சாய்க்கட்டும்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்த திரு சுந்தர் அவர்களுக்கு என் சார்பிலும், எங்கள் மையத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றி.
பிரார்த்தனைக்கு என்றுமே பலன் உண்டு. அதுவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. இது ஒருவகையில் நமக்கு இறைவன் தரும் ஒரு நினைவுப்பதிப்பு. “நீ நன்றாய் இருக்கிறாய். அதனால் தான் உன்னால் மற்றவருக்காக பிரார்த்தனை செய்ய முடிகிறது” என்பது தான் அது.
நல்லவர்களுக்காக நல்லவர்களால் செய்யப்படும் இந்தப் பிரார்த்தனையில் வாராவாரம் அடியேனும் எங்கள் மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்பது உறுதி.
நெகிழ்ச்சியான மற்றும் நிறைவான இந்த தருணத்துக்காக இறைவனுக்கு அடியேனின் நன்றி மீண்டும்.
இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து தொகுக்கப்பட்ட மிகவும் பொருத்தமான பகுதிக்கு மனம் ஒரு சபாஷ் போடுகிறது திரு சுந்தருக்கு.
இந்தப்பணியும், நமது நட்பும் தொடரட்டும் நண்பரே.
மிக்க நன்றி சார்.
திருவள்ளுவர் திருக்கோவிலில் நடைபெற்ற சுப்ரமணியசாமி திருக்கல்யாண உற்சவத்தை கண்டு ரசித்துவிட்டு மாற்று மாலை பெற்றுவிட்டு தற்போது தான் வந்தேன். வந்து தளத்தை ஓப்பன் செய்து பார்த்தால், தங்கள் கமெண்ட்டை கண்டேன்.
மேலும் திரு.ராஜேந்திரன், திரு.சுவாமிநாதன் ஆகியோரின் கமெண்ட்டும் கண்டேன். ஒரே நேரத்தில் சான்றோர்கள் அனைவரும் அடியேனையும் எம் வாசகர்களையும் ஆசீர்வதித்தது இறைவன் சித்தம் தான்.
இன்று தாங்கள் இந்த பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்று பிரார்த்தனை செய்த விதம், என்னை சிலிர்க்க வைக்கிறது. நாமும் எங்கள் வாசகர்களும் என்றென்றும் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (குறள் 444)
என்றென்றும் நன்றியுடன்…
– சுந்தர்
பிரார்த்தனை செய்த அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றி. உங்கள் பிரார்த்தனை கண்டிப்பாக பலனளிக்கும் . என அம்மா குணம் அடைவார்கள் என மிகும் உறுதியாக நம்புகிறேன். அனைவர்க்கும் மீன்ட்ன்டுறம் என் நன்றி யை தெரிவித்து கொள்கிறேன். திரு சுந்தர் அவர் களுக்கும். திரு நாராயணன் அவர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள். ந.ந.கணேசன்