அடுத்து, இரண்டொரு நாளில் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்தும் அழைப்பு. தீவனம் தேவை என்று. மேற்படி இரண்டு இடங்களிலும் அவசரமாக தீவனம் தேவை என்றால் நம்மை தொடர்புகொள்ளுமாறு நாம் கூறியிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலை பொருத்தவரை அங்குள்ள கோ-சாலைக்கு நம்மை போல ஒரு நான்கைந்து உபயதாரர்கள் ரெகுலராக தீவனம் வாங்கித் தர ஒப்புக்கொண்டுள்ளார்கள். சுழற்சி முறையில் அதை நிறைவேற்ற வேண்டும். இருப்பினும் எதிர்பாராத விதமாக எவரும் வாங்கித் தராமல் தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் நமக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியிருக்கிறேன். சமீபத்தில் அது போன்று தட்டுப்பாடு ஏற்படவே, நமக்கு போன் செய்தார்கள். அடுத்த நாள் காலை சற்று சீக்கிரம் கிளம்பி மேற்கு மாம்பலம் சென்று தீவனம் ஆர்டர் செய்துவிட்டு, அவர்கள் அதை வண்டியில் ஏற்றி கோவிலில் வந்து இறக்கும் வரை உடனிருந்தேன்.
மழைக்காலமாதலால் கோ-சாலை அருகே வழக்கமாக தீவனம் வைக்கப்படும் இடத்தில் (ஷெட்) தண்ணீர் ஒழுகுகிறது. எனவே கோவிலுக்கு உள்ளே ஒரு இடத்தை காட்டி அங்கு தீவன மூட்டைகளை இறக்கச் சொன்னார்கள். அந்த இடம் எது தெரியுமா? அறுபத்துமூவர் விக்ரகங்களுக்கு முன்பு! ஆக அறுபத்துமூவர் சாட்சியாக நமது கைங்கரியம் நடந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதுவே ஒரு வகையில் நாம் செய்த பாக்கியம் தான்.
தீவன மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டவுடன் கோ-சாலையில் உள்ள நம் வேலனை பார்க்க சென்றேன். வரவர வேலன் பயங்கர சுட்டிப் பையனாகிவிட்டானாம். துர்க்காவோட குழந்தையாச்சே… சுட்டித் தனம் இருக்காதா என்ன….
இந்த கோவிலை பொருத்தவரை கோ-சாலையை குரு என்பவரும் பாலாஜி என்பவரும் தான் பராமரிமரிப்பவர்கள். கிளம்பும்போது, கே-சாலையை பார்த்துக்கொள்ளும் பாலாஜி அவர்களிடம் விடைபெற்று கிளம்பினேன். அப்போது மனதில் ஒன்று தோன்றியது.
“சார்… இந்த தீபாவளிக்கு உங்களுக்கு வேட்டி, சட்டை எடுத்து தர ஆசைப்படுறோம். ஏத்துக்குவீங்களா?”
“அதுக்கென்ன சார்… தாராளமா வாங்கி கொடுங்க!” என்றார் மகிழ்ச்சியுடன்.
அப்பா… ஒரு மிகப் பெரிய சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்று மனம் சந்தோஷப்பட்டது. அவரது சட்டை அளவை மட்டும் கேட்டுக்கொண்டேன். தீபாவளிக்கு முன்னர் வந்து சந்திப்பதாக கூறிவிட்டு சென்றேன். மாலை கோ-சாலையை பார்த்துக்கொள்ளும் மற்றொருவர் – குரு என்பவரிடமும் அவரது சட்டை அளவை விசாரித்து தெரிந்துகொண்டேன்.
கடைக்கு சென்று கலர் வேட்டிகள் இரண்டும் அவற்றுக்கு மேட்சாக இரண்டு ஷர்ட்களும் எடுத்துக்கொண்டேன். அப்படியே இருவருக்கும் இனிப்புக்கள் இரண்டு பாக்ஸ் வாங்கிக்கொண்டேன். ஒரு வழியா துணிமணியும் இனிப்பும் வாங்கியாச்சு. தீபாவளிக்கு முந்தைய தினமாவது அவர்களை பார்த்து கொடுத்தால் தானே அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும். வெள்ளிக்கிழமை சற்று சீக்கிரமே கிளம்பினேன்.
அடுத்து யாரை வைத்து இதை கொடுப்பது…? நம் தள வாசகர்கள் அல்லது நம் நண்பர்கள் யாரையாவது அழைத்து அவர்கள் மூலம் இதை தரவேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் நண்பர்கள் எவரும் வரும் சூழ்நிலையில் இல்லை. காலை நேரம் வேறு. என்ன செய்வது என்று யோசித்தபோது, அந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் நம் வாசகர்கள் பெரியவர் திரு.ராஜகோபாலன் மற்றும் சக்திபாய் அவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.
மஹா பெரியவரை பற்றிய இணையத்தில் தேடியபோது நம் பதிவு ஒன்றை பார்க்க நேர்ந்து அதிலிருந்து இவர்கள் நம் வாசகர்களாகிவிட்டனர்.
நாம் முதல்முறை திருவேற்காட்டுக்கு உழவாரப்பணிக்கு சென்றபோது, கருவிகள் வாங்க நமக்கு பொருளதவி செய்தவர்கள் இவர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது இவர்கள் வீட்டுக்கே சென்று இவர்களிடம் ஆசிபெற்றுவிட்டு தான் உழவாரப்பணிக்கு புறப்பட்டோம். “இந்த பக்கம் வந்தீங்கன்னா அவசியம் நம்ம வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுட்டு போகணும்!” என்று நமக்கு அன்புக்கட்டளையிட்டிருக்கிறார்கள். இப்போதும் அந்த பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் வீட்டுக்கு சென்று ஒரு எட்டு பார்த்து அவர்களிடம் ஆசிபெற்றுவிட்டு செல்வது தான் என் வழக்கம்.
மே மாதம் பாலம் ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவில் நாம் வரவேற்புரை ஆற்றியபோது அந்நிகழ்ச்சிக்கு நம் அழைப்பின் பேரில் வந்திருந்து சிறப்பித்தார்கள். சமீபத்தில் நடைபெற்ற நமது தளத்தின் ஆண்டுவிழாவின் போது கூட வந்திருந்தார்கள். இவர்கள் இருவர் வருவது பல நூறு பேர் வருவதற்கு சமம் என்றால் மிகையாகாது. இத்தனைக்கும் ராஜகோபாலன் அவர்களுக்கு அப்போது உடல்நிலை சரியில்லை. ஆனால் அந்த நிலையிலும் வந்திருந்து சிறப்பித்ததை என்னவென்று சொல்வது. எல்லாம் மகா பெரியவரின் கருணை தான்.
வஸ்திர தானத்தை இவர்களை வைத்து செய்யவேண்டும் என்று விரும்பி, அவர்களை தொடர்புகொண்டு விஷயத்தை கூறி, “நீங்கள் தான் வந்திருந்து இந்த எளிய கைங்கரியத்தை நடத்தி தரவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டேன். நிச்சயம் வருவதாக சொன்னார்கள்.
“இன்னும் முக்கால் மணிநேரத்துல கோவில்ல இருப்பேன். அதுக்கு ஏற்ற மாதிரி அங்கே வந்துடுங்க மாமா” என்று கூறிவிட்டு நான் வீட்டில் இருந்து கிளம்பினேன். நாம் கோவிலுக்கு சென்றபோது அவர்கள் ஏற்கனவே வந்திருந்தனர். இருவரும் சுவாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். நாமும் சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு பரஸ்பரம் நலம் விசாரித்தோம். தீபாவளி ஏற்பாடுகள் எப்படி போய் கொண்டிருக்கிறது என்று விசாரித்தார்கள். நங்கநல்லூர் நிலாச்சாரலுக்கு தீபாவளியன்று செல்வதை பற்றி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
திரு.குரு, திரு.பாலாஜி இருவரையும் அழைத்து அவர்களிடம் அறிமுகப்படுத்தினோம். “இவர்கள் தான் இங்கு கோ-சாலையை பார்த்துக்கொள்பவர்கள். சிறந்த முறையில் பசுக்களை பரமாரித்துவருகிறார்கள்!” என்றேன்.
மாமாவும் மாமியும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அவர்களை தெரிந்திருந்தது. “இவங்களை தெரியுமே… கோவில்ல இவங்க கைங்கரியம் ரொம்ப பெரிசாச்சே. பிரதோஷ நாட்களிலெல்லாம் பம்பரமாக சுழன்று எல்லா வேலைகளையும் செய்வாங்க… இவங்களுக்கு செய்வது ரொம்ப பொருத்தம்!” என்று கூறி அவர்கள் இந்த கோவிலில் ஆற்றி வரும் பணியை நம்மிடம் பட்டியலிட்டார்கள்.
பாலாஜியும் “இவர்களை இங்கு நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவர்கள் ஆற்றி வரும் கோ-சேவையின் மேன்மையை எடுத்துக் கூறி இருவருக்கும் நன்றி தெரிவித்தேன். தொடர்ந்து “ரெண்டு பேரும் ரைட்மந்த்ரா சார்பாக வழங்கப்படும் இந்த எளிய தீபாவளிப் பரிசை ஏத்துக்கணும். எங்கள் வாசகர்களின் பிரதிநிதியாக இவர்கள் உங்களுக்கு கொடுக்குறாங்க!” என்று கூறி அவர்களிடம் தீபாவளி வஸ்திரங்களை ஒப்படைத்தோம்.
எங்கு வைத்து புகைப்படமெடுப்பது என்று பார்த்தபோது அதற்க்கு தோதான இடம் கண்ணில் அகப்படவில்லை. “கோ-சாலைக்கு முன்னாடியே வெச்சு கொடுத்துடுங்க” என்றார் பாலாஜி. பக்தர்கள் வந்துபோகும் இடத்தில் பாதையை மறைத்துகொண்டு நிற்க நமக்கு விருப்பம் இல்லை.
வேற ஏதாவது நல்ல இடமாக பார்ப்போம் என்று கூறி கோவிலை ஒரு சுற்று வந்தபோது பிரகாரத்தில் ஒரு தூணில், மஹா பெரியவாவின் படத்தை பார்த்துவிட்டார் மாமி. “அட… மஹா பெரியவாவே இங்கே இருக்கார். இதைவிட பிரமாதமான இடம் கிடைக்குமா?” என்று பரவசப்பட, அந்த இடத்தில் மஹா பெரியவாவின் முன்னர் அந்த கைங்கரியம் நிறைவேறியது.
மஹா பெரியவாவின் திருவுருவப் படத்திற்கு முன்னர் வைத்து இந்த கைங்கரியம் நிறைவேற்றப்பட்டது. நம் தளம் சார்பாக இரண்டு மூத்த தம்பதியினர் அதை நிறைவேற்றித் தந்தபோது எனக்குள் எழுந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
கோ-சாலையில் பணிபுரிபவர்கள் என்பதால் அழுக்கோ கறையோ பட்டால் தெரியாதவாறு வண்ணத்தில் வேட்டி எடுத்திருந்தேன். அதற்கு ஏற்றார்போல மேட்சிங் ஷர்ட்.
பாலாஜி, குரு இருவருக்கும் நாம் தந்த ஆடைகள் மிகவும் பிடித்துவிட்டது.
“உங்களுக்கு இன்னும் பெரிசா செய்யனும்னு ஆசை. ஆனால் எங்க சக்திக்கு உட்பட்டு ஏதோ எங்களால முடிஞ்சதை செய்திருக்கிறோம்” என்றேன்.
“நீங்கள் செய்திருப்பது மிகப் பெரிய ஒன்று. எங்களுக்கு மிகவும் சந்தோஷம்! உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்!” என்றார்கள் இருவரும்.
கோ சேவை செய்பவர்களை வஸ்திரங்களுடன் இனிப்பும் தந்து கௌரவித்தன் மூலம் நம் தீபாவளி மிக மிக பவித்ரம் பெற்றது என்றால் மிகையாகாது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! அதை உணர்த்திய பெருமை என்றும் நம்மை வழி நடத்தும் மஹா பெரியவருக்கே!! (விபரங்கள் அடுத்த பதிவில்…!)
வசதியும் வாய்ப்பும் உள்ள நம் வாசகர்கள் பண்டிகை மற்றும் இதர விஷேட நாட்களில் இது போன்று அவரவர் பகுதிகளில் ஆலயங்களில் கோ-சேவை செய்பவர்களை கௌரவிப்பது மிக மிக அவசியம். இது அவர்களுக்கு ஒரு மனநிறைவை தருவதுடன், கோ-சேவையையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்ய உறுதுணையாய் இருக்கும். அத்தகு எண்ணம் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படவேண்டும் என்பது தான் இது போன்ற பதிவுகளின் நோக்கம்!
கோ-சம்ரோக்ஷனம் சர்வ தேவதா ப்ரீதி, சர்வ ரோக நிவாரணம்!
==============================================
நமது சேவைகளில் இணைய விரும்புகிறவர்கள் கவனத்திற்கு :
நம் நலப்பணிகளுக்கு ரைட்மந்த்ரா அக்கவுண்ட்டில் நீங்கள் செலுத்தும் தொகையே இது போன்ற கைங்கரியங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற சேவைகளில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் நிதியை ரைட்மந்த்ரா வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். கோ-சாலைகளிலிருந்து எப்போது தீவனம் கேட்டு அழைப்பு வரும் என்று தெரியாது. அந்த நேரத்தில் கணக்கிலோ அல்லது என்னிடமோ பணமிருந்தால் ஓ.கே. இல்லையென்றால்? எனவே அது போன்ற சந்தர்ப்பங்களில் தம்மை அணுகலாம் என்று கருதுபவர்கள் எனக்கு தங்கள் அலைபேசி எண் & தங்களை பற்றிய ஒரு சுய அறிமுகத்துடன் simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நமது ரைட்மந்த்ரா வங்கிக்கணக்கு விபரங்களை பதிவுகளில் சென்று தேட சிரமமாக இருக்கிறது என்றும் தளத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் நிரந்தரமாக வைத்தால் நமது பணிகளில் இணைய விரும்புகிறவர்களுக்கு சௌகரியமாய் இருக்கும் என்றும் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று ரைட்மந்த்ரா வங்கிக் கணக்கு விபரங்கள் ஒரு தனி பக்கத்தில் தரப்பட்டுள்ளது. கீழ்காணும் நம் தளத்தின் லிங்க்கை க்ளிக் செய்தால் நமது வங்கி கணக்கு விபரங்கள் வரும்.
நன்றி!
ரைட்மந்த்ரா வங்கிக்கணக்கு விபரங்களுக்கு :
http://rightmantra.com/?page_id=7762
==============================================
[END]
காலை வணக்கம் சார்
மிக மிக மிக அருமையான பதிவு சார்
nandri
ஓடி ஓடி கைங்காரியம் செய்துகொண்டிருக்கும் தாங்களை எப்படி என்று பாராட்டுவது …எங்களுக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தால் எப்படி ஓய்வெடுப்பது ..அல்லது எந்த வேலையே எப்படி முடிப்பது என யோசிச்சிகொண்டிருக்கின்றோம் …தங்கள் எப்பவுமே தாங்கள்தான் சார்..
இப்படிப்பட்ட கைங்காரியத்தில் பங்குபெறவேண்டும் என எனக்கும் ஆசைதான் ஆனால் என்னுடைய பொருளாதார நிலைமை வர வர படு மோசமாக போய்கொண்டிருக்கிரத்தை நினைத்து எப்படி சம்பாதிப்பது என என்நேரமும் நினைக்க வேண்டியுள்ளது…இறைவனை கருணை சீக்கிரம் கிடைக்க வேண்டும் ..எல்லாம் அவன் செயல் அல்லவா?.. .
நாளை கந்தசஷ்டி. அது குறித்த விசேஷ பதிவு நம் தளத்தில் வரவிருக்கிறது. அது உங்களுக்கு வழி காட்டும். கவலைவேண்டாம்.
– சுந்தர்
சுந்தர்ஜி
உண்மை தான் புகழ்ச்சி இல்லை.ஓடி ஓடி கைங்காரியம் செய்துகொண்டிருக்கும் தாங்களை எப்படி என்று பாராட்டுவது.
இப்படிப்பட்ட கைங்காரியத்தில் பங்குபெறவேண்டும் என எனக்கும் ஆசைதான் ஆனால் என்னுடைய பொருளாதாராம் + குடும்ப சூல் நிலை.சிறு எலின் வால் நுனி பாட்டு சிவன் கோவில் விளக்கு எரிவதை போல் தங்களுடன் சேர்ந்து நாங்களும் பயன் அடைவோம்.
‘
டியர் சுந்தர்,
அருமையான பதிவு. கடவுள் சில நேரம் சில மனிதனை அனுப்பி உபதேசம் செய்வார். அப்படி பட்ட மனிதர்களில் நீங்களும் ஒருவர் என்று. நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி.
நாராயணன்.
நிச்சயம் சுந்தர் சார், எல்லோரது பாராட்டும் உங்களுக்கு மிகவும் பொருந்தும்.
நேரம் கிடைபவர்களுக்கு மனம் இல்லை, மனம் இருந்தால் நேரமும் மார்க்கமும் இல்லை. அப்படி மனம் இருப்பவர்களுக்கு மட்டும் தாங்கள் நம் ரைட் மந்த்ரா மூலம் பல சேவைகள் செய்வதற்கு உதவி கரம் கொடுத்துள்ளிர்கள். தனிப்பட்ட முறையிலும் பல உதவிகள் செய்து வருவதை நம் வாசகர்கள் எல்லோரும் அறிவார்கள்.
வெறும் புகழ் வார்த்தைக்காக இல்லை நீங்கள் செய்யும் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.