இத்தனை மகத்துவம் மிக்க நாளில் நாம் இறைவனை தரிசிக்காமல் இருப்போமா? ஒன்றுக்கு மூன்று ஆலயங்களில் சிவ தரிசனம்.
அன்னாபிஷேகம் குறித்து வள்ளுவர் கோவில் குருக்கள் நமக்கு போன வாரமே அலைபேசியில் அழைத்து நினைவூட்டியிருந்தார். “நீங்க வேணும்னா அன்னாபிஷேகத்தன்னைக்கு இங்கே வாங்க. நம்ம கோவில்ல சுவாமிக்கு விசேஷ அலங்காரம் உண்டு. இங்கே தரிசனம் பண்ணலாம், பக்கத்துலேயே மூணு நாலு கோவில் இருக்கு… அங்கேயும் தரிசனம் பண்ணலாம்…” என்றார்.
இது நல்ல ஐடியாவா இருக்கே என்று கருதி “நிச்சயம் வர்றேன் சார்…” என்றேன்.
அக்டோபர் 18 வெள்ளியும் வந்தது. ஆறுமுக குருக்களிடம் வருவதாக சொன்னேனே தவிர, அங்கு போகும் உத்தேசம் இல்லை எனக்கு. காரணம் என் அலுவலகத்தில் இருந்து வள்ளுவர் கோவில் அமைந்திருக்கும் மயிலை சென்று அங்கு இறைவனை தரிசித்துவிட்டு மீண்டும் என் வீட்டுக்கு திரும்ப மிகவும் நேரம் பிடிக்கும். அதுவும் இப்போதெல்லாம் இரவானால் மழை பிடித்துக்கொள்கிறது. பலநேரங்களில் இப்படி மழையில் மாட்டிக்கொண்டு ரெண்டுங்கெட்டான் தனமாக நேரம் வீணாக போய்விடுகிறது. ஆகையால் தான் சில நாட்களில் பதிவு அளிக்க முடிவதில்லை.
எனவே நாம் வீட்டுக்கு போகும் வழியில் ஏதேனும் ஆலயத்தில் இறைவனை தரிசித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது வடபழனி வெங்கீஸ்வரர் தான். ஆனால் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் சன்னதியை தற்காலிகமாக மூடியிருக்கிறார்கள். எனவே அங்கு சாத்தியமில்லை.
சரி என்ன செய்யலாம்? வழியில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கருங்கற்களை கொண்டு பல நூறாண்டுகளுக்கு முன்பு நம் அரசர்களால் கட்டப்பட்ட கோவில்களில் அவனை தரிசிக்கும் இன்பமே தனி. எனவே பேசாமல் கபாலீஸ்வரர் கோவில் சென்றுவிடலாமா என்று யோசித்தேன். அன்னாபிஷேகம் தவிர பௌர்ணமி வேறு. நிச்சயம் மயிலையில் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு அவனை தரிசிக்க மணிக்கணக்கில் நிற்கவேண்டுமே… இருக்கும் சொற்ப நேரம் அதில் போய்விட்டால் வீட்டுக்கு வந்து நம் தளத்திற்காக எழுத நேரம் கிடைக்காதே… என்ன செய்வது… இப்படி பலவாறாக மனம் சிந்தித்தது.
கடைசீயில் வள்ளுவர் கோவிலுக்கு சென்று அங்கு ஏகாம்பரேஸ்வரரை மட்டும் தரிசித்துவிட்டு உடனே திரும்பிவிடலாம் என்று முடிவு செய்து கிளம்பினேன்.
சரியாக அரைமணிநேரத்தில் வள்ளுவர் கோவிலில் ஆஜர். ஆறுமுக குருக்கள் நம்மை எதிர்கொண்டு வரவேற்றார்.
ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் தரிசனம் செய்வித்தார். இங்கு இந்த முறை அர்த்தநாரீஸ்வரர் அன்ன அலங்காரம். சுவாமி மிக அற்புதமாக ஜொலித்தார். அவரது மகன் தான் இந்த அலங்காரத்தை செய்தது. மிக மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வருவோர் போவோர் எல்லாம் பாராட்டிக்கொண்டிருந்தனர்.
நாம் விஷேட அர்ச்சனை செய்தோம். அர்ச்சனை முடிந்த பின்னர் பழம், பூ, தேங்காய்கள் உள்ளிட்டவைகளை குருக்கள் ஒரு பையில் போட்டு தந்தார். கோவில் பிரகாரத்தை வலம் வந்து, திருவள்ளுவரையும் வாசுகி அம்மனையும் தரிசித்துவிட்டு ஆறுமுகக் குருக்கள் அவர்களிடம் விடைபெற்றோம்.
“நேரா போய் திரும்பினீங்கன்னா… விருபாக்ஷீஸ்வரர் கோவில். அதுக்கு எதிரே வாலீஸ்வரர். கொஞ்சம் தள்ளி போனீங்கன்னா… காரணீஸ்வரர்…. மூணு கோவிலையும் பார்த்துடலாம். எல்லாம் பக்கத்துல பக்கத்துல தான். அங்கே நல்லா அலங்காரம் பண்ணியிருப்பாங்க.” என்றார்.
அவர் இப்படி சொன்ன பிறகு நம்மால் போகாமல் இருக்க முடியுமா? ஆனது ஆச்சு ஒரு எட்டு இறைவனை பார்த்துட்டு போயிடலாமே. மறுபடியும் அவனை அன்னாபிஷேக கோலத்துல பார்க்க ஒரு வருஷம் காத்திருக்கணும். தவிர இந்த கோவில்களுக்கெல்லாம் நான் போனதே கிடையாது. இப்போவாவது அதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குதே என்றெண்ணி உடனே பைக்கை அங்கே திருப்பினோம்.
மயிலை பஜார் வீதியே ஒரு பரப்பரப்புடன் காணப்பட்டது. இது வழக்கமான ஜன நெரிசலில் காணப்படும் பரபரப்பு அல்ல. இது வேறு ஒன்று. நமக்கு எரிச்சல் ஏற்படுத்தாத பரபரப்பு. எங்கு பார்த்தாலும் சுவாமி புறப்பாடு, ஊர்வலம் என்று அந்த பகுதியே ஒரு வித மங்களகரமான பரபரப்போடு காணப்பட்டது. மயிலைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.
பஜார் வீதியில் நாம் முதலில் சென்றது விருபக்ஷீஸ்வரர் கோவில். அந்தக் காலத்து கோவில். மயிலையில் மார்கெட் பகுதியில் இப்படி ஒரு புராதன கோவில் இருக்கும் என்று நான் நினைத்ததேயில்லை. பரபரப்பான மார்கெட் பகுதியில் கோவில் இருந்தாலும் டூ-வீலர் பார்க்கிங் செய்ய கோவிலில் இடவசதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இறைவனை தரிசிக்கும் ஆவலில் கிடைத்த இடத்தில் பைக்கை சொருகிவிட்டு ஓடினேன்.
மயிலை விருபக்ஷீஸ்வரர் பக்தர்களது விருப்பங்களைத் தன் கண் பார்வையாலேயே தீர்த்து வைப்பவர் என்று பொருள். தாயார் விசாலாக்ஷி.
சோற்றுடை சொக்கநாதராக மேனி முழுவதும் அன்னத்தை அப்பிக்கொண்டு அங்கே விருபக்ஷீஸ்வரர் இருந்த கோலம்… அப்பப்பா… அத்தனை அழகு. மற்ற கோவில்களைவிட விருபக்ஷீஸ்வரர் லிங்கம் சற்று பெரியது.
அன்னாபிஷேகத்தன்று நம் அண்ணலை தரிசிக்கும் அந்த பாக்கியத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவே முடியாது. எத்தனை கோடி இன்பம் தேடி வந்தாலும் சிவபெருமானை கண் குளிர தரிசிக்கும் அந்த ஒரு கண இன்பத்திற்கு அவை ஈடாகாது. (தரிசித்தவர்களுக்கு அது தெரியும்.).
எதேதோ கேட்க நினைத்து கடைசீயில் மௌனமே மொழியாகிப் போனது. ஆற அமர அவன் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். சுமார் 10 நிமிடம் நான் பாட்டுக்கு ஓரமாக நின்றுகொண்டு அவனுக்கு நடக்கும் பூஜைகளை அர்ச்சனைகளை ரசித்துக்கொண்டிருந்தேன். எதுவுமே கேட்க தோன்றவில்லை. வார்த்தைகளும் வரவில்லை. கேட்காமலே அள்ளி தரும் அண்ணலிடம் கேட்க என்ன இருக்கிறது?
இந்த வாழ்க்கை, இந்த பொறுப்பு, இந்த அந்தஸ்து, இந்தளவு எம் மீது பேரன்பு செலுத்தும் வாசகர்கள், தன்னலமற்ற நண்பர்கள் இவை அனைத்தும் அவன் போட்ட பிச்சை. கடந்த காலங்களில் அவனுக்கென்று நான் எதுவுமே செய்யாத போதும் அவன் என் மீது கருணை கொண்டு எனக்கிட்ட பிச்சை இவை. அவனை துதிக்காமலே அவனை கேட்காமலே இப்படி அள்ளித் தந்த வள்ளலுக்கு நான் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்? ஆகையால் தான் அவன் ஆலயத்தை சுத்தம் செய்யும் கைங்கரியத்தை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனியாகவும் நண்பர்களுடன் சென்று செய்து வருகிறோம்.
சிவனை சிந்தையில் வைத்து அன்பு செலுத்துபவன் என்கிற அந்தஸ்தை காலத்தால் அழிக்க முடியாது. எவராலும் பறிக்க முடியாது.
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!
என்று ஏன் திருஞான சம்பந்தர் பாடினார் என்று மீண்டும் ஒருமுறை புரிந்தது. கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளை துடைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
வாலீஸ்வரர் கோவில் எதிரே உள்ள சிறிய தெருவுக்குள் இருந்தது. சற்று தள்ளி காரணீஸ்வரர் கோவில் கோபுரம் தென்பட்டது. வாலீஸ்வரர் கோவிலுக்கு போகலாமா இல்லே காரணீஸ்வரர் கோவிலுக்கு போகலாமா என்று சற்று நேரம் யோசித்தேன். வாலீஸ்வரரை இன்னொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு காரணீஸ்வரரை தரிசிக்கலாம் என்றெண்ணி காரணீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன்.
வெளியே பலர் அர்ச்சனைக்குரிய பூ, பழம், விளக்கு உள்ளிட்ட பூஜை சாமான்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மிகவும் வயதான ஒரு பாட்டியிடம் அர்ச்சனை பொருட்களை வாங்கினேன். பிளாஸ்டிக் பையை தவிர்த்து, எப்போதும் நாம் கொண்டு செல்லும் மஞ்சள் பையில் அனைத்தையும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.
அனைத்திற்கும் காரணமான ஈஸ்வரன் என்பதால் இவர் பெயர் காரணீஸ்வரர். அம்பாள் பெயர் பொற்கொடி அம்மன். இங்கும் சுவாமி அன்னத்தால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். காரணீஸ்வரருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, மறக்காமல் இன்று அவனை தரிசிக்கும் பாக்கியத்தை தந்தமைக்காக நன்றி கூறினேன். இன்றைய தினத்தை மிஸ் செய்திருந்தால் எப்பேர்ப்பட்ட பாக்கியத்தை இந்த கண்கள் இழந்திருக்கும்…
பின்னர் ஒவ்வொரு சன்னதியாக தரிசித்துக்கொண்டே பிரகாரத்தை வலம் வந்தேன். துர்க்கை அம்மன் சன்னதி அருகே சுவற்றில் “துக்க நிவாரண அஷ்டகம்” பதித்திருந்தார்கள். என்ன தோன்றியதோ… எனக்கு மிகவும் பிடித்த சுலோகம் என்பதால் முழுவதையும் படித்து முடித்தேன். கொடிமரத்திற்கு அப்பால், விழுந்து நமஸ்கரித்துவிட்டு சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு ஒரு பெருமிதத்துடன் எழுந்தோம். (அன்னாபிஷேகத்தன்னைக்கு 3 கோவில்ல சிவனை பார்த்துடோம்ல!)
புறப்பட எத்தனித்து வாயில் நோக்கி சென்றபோது, திடீரென மேள தாளங்கள் முழங்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்தால் சுவாமி ஊர்வலம் முடித்து கோவிலுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ஆரத்தி காட்டிய பின்பு, மேல தாளங்கள் முழங்க சுவாமியையும் அம்பாளையும் உள்ளே அழைத்துவந்தார்கள். இந்த இடைவெளியில், உற்சவரை அருகே நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
“ஐயனே இதற்காகத் தான் வாலீஸ்வரர் கோவிலுக்கு போகாமல் இங்கே வரச் செய்தாயோ”…மனம் உருகியது.
ஒரு ஐந்து நிமிடம் அந்த மேள தாள வாத்தியங்களை கேட்டுக்கொண்டே அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை டிராபிக் நெரிசல் சத்ததையே கேட்டு கேட்டு உளுத்து போயிருந்த காதுகளுக்கு தேன் பாய்ந்தது போன்றிருந்தது அந்த மங்கள இசை. ஆசை தீரும் வரை புகைப்படம் எடுத்தேன். கோவிலை மும்முறை வலம் வந்த பின்னர் நிலையில் உற்சவரை நிறுத்தினார்கள்.
எப்படியோ அன்னாபிஷேகத்தனைக்கு மூன்று கோவில்களில் இறைவனை தரிசித்தாகிவிட்டது.
“அவன் அருளால் அவன் தாள் வணங்கி…” – வேறென்ன சொல்ல?
(குறிப்பு : வாசகர்கள் எவரேனும் அன்னாபிஷேகத்தன்று இறைவனை தரிசித்திருந்தால் அது பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.)
[END]
சுந்தர் சார் வணக்கம்
அன்னாபிஷேகத்தன்று ஆண்டவனே தரிசிக்க முடியாமல் போனாலும் உங்களின் மூலம் தரிசிக்க முடிந்தது…
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி சார்..
இறைவனை தேடி தேடி ஓடிக்கொண்டிருக்கும் சுந்தர் சார் உங்களை தேடி இறைவன் ஒருநால் நிச்சயம் வரப்போகிறார் …வாழ்த்துக்கள்…
நமசிவாய வாழ்க
இன்றைய நாள் இனிய நாளாய் அமைய வாழ்த்துக்கள்,
அன்புடன் இனிய காலை வணக்கம்
அன்பு சுந்தர் , அருமையான பதிவு ….உங்கள் பதிவை பார்த்து தான் எனக்கு அன்று அன்னாபிஷேகம் என்று தெரியும். உடனே மலை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றேன். அனால் என் துரதிஷ்டம் அலங்காரம் ஆகாமல் இருந்தது ….
அன்று இருவு திருவண்ணாமலை சென்றதனால் அங்கு உள்ள அஷ்ட லிங்கம் சில அன்னாபிஷேக அலங்காரத்துடன் அழகாக காட்சியளித்தார்…பௌவர்னமி நிலவில் திருவண்ணாமலை தரிசிப்பது எவளோ அழகு ….கோடி வந்தாலும் அந்த இன்பம் வராது …. அதிகளையல் பௌவர்னமி நிலவு அண்ணாமலை இவை இரண்டும் ராஜா கோபுரம் வழியாக தரிசனம் போனும் போது அப்பா அப்பா அதை விளக்க சொல்கள் இல்லை….
வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்..
வாழ்க வளர்க உங்கள் பணி.. வளர்க உங்கள் தொண்டு…
திருச்சிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
டியர் சுந்தர்
உங்கள் பதிவு மிகவும் நன்று எப்பொழுதும் போல்.
நீங்கள் உங்கள் ரைட் மந்த்ராவில் அன்னாபீஷேகத்தின் அருமை உணர்ந்து நானும் என் மகனும் என் வீட்டிற்கு அருகில் உள்ள சாலிக்ராமம் சங்கர நாயனார் கோவிலுக்கு சென்று வந்தோம் . மிகவும் அருமையான தரிசனம். தரிசனம் முடித்து வரும் பொழுது சாம்பார் சாத பிரசாதமும் கிடைத்தது. எந்த வருடமும் அன்னாபிஷேகதன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்ததில்லை. இந்த வருடம் இறைவனின் கடைக்கண் பார்வை பட்டதற்கு ரைட் மந்த்ரா தான் காரணம்.
வாழ்க உங்கள் இறை தொண்டு . இறைவனின் அருளுடன் இந்த தளம் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்
நன்றி உமா
ஒம் சிவ சிவ ஓம்
கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்.
மூன்று கோவில்களில் தரிசனம். சிவன் உங்களுக்கு நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார்.
அன்னபிசேகம் அலங்காரம் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும்.
நான் காந்தி ரோடு சிவன் கோயில் போனேன்.
அன்னாபீஷேகத்தின் அருமை உணர்ந்து நானும் என் மகலும் என் வீட்டிற்கு அருகில் உள்ள சாலிக்ராமம் சங்கர நாயனார் கோவிலுக்கு சென்று வந்தோம் . மிகவும் அருமையான தரிசனம். தரிசனம் முடித்து வரும் பொழுது சாம்பார் சாத பிரசாதமும் கிடைத்தது. எந்த வருடமும் அன்னாபிஷேகதன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்ததில்லை. இந்த வருடம் இறைவனின் கடைக்கண் பார்வை பட்டதற்கு ரைட் மந்த்ரா தான் காரணம். –
selvi
சுந்தர்ஜி
கோவில் படங்கள் அருமை. அடியேனும் எங்கள் குலதெய்வம் தங்கம்மன் கோவிலில் (காங்கேயம் பக்கம் கொடுமணல்) உள்ள திரிபுரசுந்தரி உடனமர் அக்னிபுரிஸ்வரர் கோவிலில் வழக்கமான பௌர்ணமி பூஜையுடன் அன்னாபிஷேகமும் கண்டு களித்தேன். நம் தளத்தின் மூலம் அன்னாபிஷேகத்தின் பெருமை மேலும் தெரிந்ததால் சிவனை மீண்டும் மீண்டும் ஓடிச்சென்று தரிசித்தேன். அன்னத்துடன் காய்கறி சேர்த்து மிக அழகாக அலங்காரம் செய்து இருந்தார்கள். நன்றி
கோயில், பண்டிகை, விழாக்கள் பற்றிய செய்திகளை அறிய தங்களுடைய தளத்தைதான் முதலில் பார்வையிடுவேன். செய்திகள் கிடைக்கவில்லை என்றால் தான் வேறு தளத்தை பார்வையிடுவேன்.தங்கள் தளத்தின் அனைத்து கட்டுரைகளும் மிகவும் அருமை அருமை அருமை.நன்றி சுந்தர் சார்.