அந்தளவு பல மேன்மைகள் பொருந்திய திவ்ய தேசம் இது. தாயார் லக்ஷ்மி தேவி ஒரு சமயம் பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு இங்கு வந்து நின்ற இடமாதால் இது திருநின்றவூர் என்று அழைக்கப்படுகிறது. ‘திரு’ என்றால் லக்ஷ்மி அதாவது ‘செல்வம்’ என்று அர்த்தம். இப்பேர்ப்பட்ட தலத்தில் உழவாரப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால் அதன் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?
உழவாரப்பணி செய்ய இந்த நமக்கு கிடைத்ததே ஒரு வகையில் சுவாரஸ்யமான சம்பவம் தான். ஆன்மீகத்தையும் இறை பணியையும் பொருத்தவரை நாம் பெரிய திட்டங்கள் எல்லாம் தீட்டுவதில்லை. அது பாட்டுக்கு நடக்கும். எது நடந்தாலும் நன்மைக்கே என்று நான் எதற்கும் அலட்டிக்கொள்வதில்லை.
திருப்போரூருக்கு அருகே உள்ள நெல்லிக்குப்பத்தை அடுத்து காட்டூர் என்ற ஊரில் ஒரு சிறிய மலை மீது கால பைரவர் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் நமது உழவாரப்பணியை செய்ய வேண்டும் என்று கல்பாக்கத்தை சேர்ந்த நம் தள வாசகர் விஜய் பெரியசுவாமி என்பவர் நமக்கு கடந்த சில மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தார்.
நமது இடைவிடாத பணிகளின் காரணமாக அவருக்கு சரியான முறையில் நம்மால் ரெஸ்பான்ஸ் செய்யமுடியவில்லை. இரண்டு மாதங்கள் இப்படியே போனது. இந்த கோவிலை பொருத்தவரை சர்வே செய்ய செல்வதற்கே எனக்கு அரை நாள் வேண்டும். கடந்த சில மாதங்களாக விடுமுறை நாட்களில் கூட நாம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தபடியால் இங்கு செல்லமுடியவில்லை. இருந்தாலும் விஜய் பெரியசுவாமி நம்மை தவறாக எடுத்துக்கொள்ளாது, தொடர்ந்து எனக்கு அவ்வப்போது அதுபற்றி நினைவூட்டி வந்தார்.
எனவே, திருஇலம்பையங்கோட்டூரை அடுத்து இந்த கோவிலில் தான் பணி செய்ய வேண்டும் என்று கருதி, ஆண்டு விழா முடியட்டும் என்று காத்திருந்தேன். “நீங்கள் வரும்போது சொல்லுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று விஜய் பெரியசுவாமி கூறியிருந்தார். எனவே அவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு சென்ற வாரம், ஆயுத பூஜைக்கு முந்தைய தினத்தன்று மேற்படி கோவிலுக்கு சென்று உழவாரப் பணி குறித்த சர்வே செய்துவர அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு போட்டுவிட்டு கிளம்பினேன்.
காலை எழுந்து சீக்கிரமே தயாராகி, காட்டூருக்கு பயணமானேன். பைக் பயணம் தான். கூடுவாஞ்சேரி சென்று அங்கிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூருக்கு செல்லவேண்டும்.
காட்டூருக்கு சென்றபோது விஜய் பெரியசுவாமி கல்பாக்கத்திலிருந்து கிளம்பி வந்து சேர்ந்துவிட்டார். இருவரும் சேர்ந்து மலை மீது ஏறி பைரவர் கோவிலுக்கு சென்றோம்.
கோவிலை சுற்றி பார்த்தபோது தெரிந்தது… மக்கள் வழிபட அரிதாகவே வரும் கோவில் என்பதால் கோவில் முழுக்க சிதிலமடைந்திருந்தது. இங்கு தேவை உழவாரப்பணி அல்ல, புனருத்தாரணம் (கோவிலை முழுக்க இடித்து கட்டி சீரமைப்பது) என்பது புரிந்தது. கோவிலில் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வந்தவரிடம் பேசியதில், கோவிலை பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. (விரைவில் இந்த கோவில் பற்றியும், இதன் சிறப்பு பற்றியும் தனி பதிவு அளிக்கப்படும்.)
உழவாரப்பணி செய்ய வேறு கோவிலை உடனடியாக தேடவேண்டிய நிர்பந்தம் எழுந்தது. எனக்கு வரும் ஞாயிறை தவறவிட்டால் சிரமம். ஏற்கனவே நண்பர்கள் சிலரிடம் வரும் ஞாயிறு (அக்டோபர் 20) உழவாரப்பணி அநேகமாக இருக்கும் என்று சொல்லியாகிவிட்டது. நண்பர்கள் சிலர் வேறு சில கோவில்களை பற்றி சொல்லியிருந்தாலும் அங்கு சென்று சர்வே செய்துவிட்டு வந்து பிறகு முடிவு செய்ய அவகாசம் இல்லை. மேலும் எனக்கு சர்வே செய்வதற்கு செல்ல இந்த வார இறுதியை விட்டால் நாள் இல்லை.
எனவே சென்ற வேலை நடக்காது காட்டூரிலிருந்து சோகத்துடன் திரும்பினேன். அலுவலகம் சென்று பணிகளில் மூழ்கி விட்டேன்.
அன்று மாலை பணி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பும் வழியில் தி.நகரில் உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு சென்றேன். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றிவிட்டு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து எள் விளக்கை ஏற்றும் வழக்கத்தை தற்போது இந்த கோவிலில் தான் செய்து வருகிறேன்.
நவராத்திரி கடைசி நாள் என்பதால் நல்ல கூட்டம். கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. கொலு வைத்திருந்தார்கள். காமாட்சியம்மன் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
அறநிலையத்துறை சமீபத்தில் எடுத்துக்கொண்டாலும் இந்த கோவில் நிர்வாகமே கார்பரேட் கம்பெனி போல கச்சிதமாக இருக்கும். நாம் செல்லும்போது பூஜை நடந்துகொண்டிருந்தது. பூஜை செய்துகொண்டிருந்த அர்ச்சகர் நிறுத்தி நிதானமாக அனைவருக்கு புரியும் வண்ணம் மந்திரங்களை அழகாக சொல்லி அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்.
சற்று நேரம் கேட்டுவிட்டு, ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றிவிட்டு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்துவிட்டு பின்னர் சுண்டல், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தந்தார்கள். அதை சாப்பிட்டுவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன். அடுத்து எங்கு உழவாரப்பணி செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்தபோது நினைவுக்கு வந்தது தான் திருநின்றவூர். சென்னை-திருவள்ளூர் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர்.
இங்கு இருதயாலீஸ்வரர் என்கிற பிரசித்தி பெற்ற சைவத் தலமும், 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவத்சலப் பெருமாள் கோவிலும் உண்டு.
சென்ற முறை உழவாரப்பணிக்கு கோவில் தேடியபோது இருதயாலீஸ்வரர் கோவிலில் விசாரித்திருக்கிறேன். சமீபத்தில் தான் ஒரு குழுவினர் வந்துவிட்டு சென்றதாக கூறினர். எனவே விட்டுவிட்டேன்.
எனவே பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் விசாரிப்போம் என்று கருதி, கோவில் அலுவலகத்தில் விசாரித்தபோது அவர்கள் உழவாரப்பணிக்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் “கோவிலில் இப்போ உற்சவம் நடக்குது. நாளைக்கு பணிக்கு வந்தீங்கன்னா உபயோகமா இருக்கும். நாளைக்கு வரமுடியுமா?” என்று கேட்டார்கள்.
கைங்கரியத்தில் பங்கு கொள்ளும் உறுப்பினர்கள் பலர் விடுமுறைக்கு அவரவர் ஊருக்கு சென்றிருப்பதால் சிரமம் என்றேன். மேலும் அனைவருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லவேண்டும். அப்போது தான் அவர்கள் திட்டமிட வசதியாக இருக்கும். முந்தைய தினம் சொல்லி அடுத்த நாள் வரவழைப்பது சிரமம் என்கிற நடைமுறை சிக்கலை விளக்கினேன்.
“சரி பரவாயில்லே…. அடுத்த வாரம் வந்து செய்ங்க!” என்றார். ஹப்பாடா… மனது நிம்மதி பெருமூச்சு விட்டது.
“உழவாரப்பணிக்கு அடுத்த வாரம் வர்றோம். நாளை (ஆயுத பூஜை தினத்தன்று) மதியம் நான் கோவிலுக்கு வருகிறேன் சார். ஒரு முறை கோவிலை சுற்றி பார்த்தால், என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன கைங்கரியம் தேவைப்படும் என்று எனக்கு ஒரு ஐடியா வரும். முன்கூட்டியே எங்கள் பணியை பிளான் செய்ய வசதியாக இருக்கும்!” என்றேன்.
“சரி வாங்க” என்றார்கள்.
ஆயுத பூஜை அன்று அந்த பரபரப்பிலும் காலை ஒரு மிக முக்கியப் பிரமுகரை சந்திக்க கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் அவரை சந்தித்து, ஆசி பெற்றுவிட்டு (இது பற்றி தனிப் பதிவு வரும்) மீண்டும் வீட்டுக்கு வந்து பூஜையை முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு உடனே திருநின்றவூர் புறப்பட்டேன்.
கிளம்பும் முன்னர் மறக்காமல் கோவில் அலுவலகத்தில் நாம் பேசிய சேகர் என்பவரிடம் நாம் வந்துகொண்டிருக்கும் தகவலை கூறினேன்.
“நாங்க இங்கே தான் இருப்போம். நீங்க வாங்க சார்” என்றார்.
ஒரு மணிநேரத்தில் திருநின்றவூரில் இருந்தோம். கோவிலில் நல்ல கூட்டம். வெளியே காணப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் மூலம் உற்சவம் நடைபெறுவது தெரிந்தது.
நாம் சென்ற நேரம் சரியாக எம்பெருமானுக்கு கல்யாண உற்சவம் நடந்துகொண்டிருந்தது. பக்தர்கள் பெருமளவு திரண்டிருக்க, மேல தாளங்கள், நாதஸ்வரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்தது.
“சரியான நேரத்துல தான் நம்மளை வரவெச்சிருக்கான் பக்தவத்சலன்…” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த நாம், நம் கேமிராவில் அந்த காட்சிகளை பதிவு செய்தோம்.
திருக்கல்யாண உற்சவம் முடிந்ததும் அனைவரும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் துளசியும், தீர்த்தமும், தலையில் சடாரி வைத்து ஆசி தந்தனர். வரிசையில் நின்று அதை பெற்றுக்கொண்டு, கோவிலை சுற்றி வந்தோம்.
கோவில் நல்ல முறையில் பராமரிக்கப்பாட்டாலும் விஷேட நாட்களில் குவியும் கூட்டத்திற்கும் அவர்கள் செய்யும் அசுத்தத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் திணறுவதும் புரிந்தது. பெரும்பாலான கோவில்களை போல, இங்கும் தரையை பெருக்குவது, ஒட்டடை அடிப்பது போன்ற அடிப்படை கைங்கரியங்கள் தேவைப்படுகிறது.
அடுத்து சமபந்தி போஜனம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் போஜனத்திற்காக உட்கார்ந்துவிட்டனர். கோவில் பணியாளர்கள் நம்மையும் அமர்ந்து சாப்பிடுமாறு கூற, ஏற்கனவே வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்திருப்பதால் பசியே இல்லை. எனவே நான் அமரவில்லை. (கல்யாணத்தை பார்க்க வெச்சவன், நம்மளை விருந்து சாப்பிடவேண்டாம்னு ஏன் நினைச்சான்னு புரியலே!).
அனைத்து சன்னதிகளையும் பார்த்து, குறிப்பெடுத்துகொண்டே வந்தேன். தாயார் சன்னதி வந்தவுடன், அங்கிருந்த எந்திரம் ஒன்று நம்மை கவர, அதையும் மறக்காது படமெடுத்தேன். சகல செல்வமும் பெற எந்திரம் ஒன்றின் முன்பாக காசு முடிந்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடும் வழிபாடு முறை இது! (இந்த பதிவில் அதை தருவதைவிட தனிப் பதிவாக தருகிறேன். சரி..சரி… நீங்க நினைப்பது புரியுது….சீக்கிரமே தந்துடுறேன்!!)
தாயாரின் பெயர் என்ன தெரியுமா? ‘என்னை பெற்ற தாயார்’. திரும்ப திரும்ப ஒரு பத்து முறையாவது அந்த பெயரை சொல்லி சந்தோஷப்பட்டிருப்பேன்.
கோவிலின் தலைமை குருக்கள் மணிவண்ணன் பட்டரை சந்தித்து, அடுத்த வாரம் நடைபெறும் நமது உழவாரப்பணி பற்றி கூறினேன். அந்த பரபரப்பிலும் நம்மிடம் பேசினார். “எந்தளவு நீங்கள் அதிகம் வேலை கொடுக்குறீங்களோ அந்தளவு எங்களுக்கு சந்தோஷம் சுவாமி” என்றேன். கோவில் பாத்திரங்கள், விளக்கு உள்ளிட்டவற்றை துலக்குவதற்கு தரும்படியும் கேட்டுக்கொண்டேன். நிச்சயம் தருவதாக கூறினார். மேலும் என்னென்ன கைங்கரியம் தேவைப்படும் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.
கோவில் அலுவலகத்தில் விடைபெற்றுவிட்டு கிளம்பினேன். “அப்படியே ஏரி காத்த ராமர் கோவிலையும் ஒரு எட்டு பார்த்துட்டு போய்டுங்க. அங்கேயும் பணி தேவைப்படுகிறது!” என்றார்.
இந்த (கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவெனில் ஆதிசேடன், திருமங்கையாழ்வார், இராமானுஜர், தியாகப் பிரம்மம், மற்றும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆகியோர் இங்கு விஜய செய்து பக்தவத்சலனின் தரிசனம் பெற்றுள்ளனர் என்பதே. இணைக்கப்பட்டுள்ள கல்வெட்டு புகைப்படத்தை பாருங்கள்.)
எனவே கோவிலுக்கு சற்று பின்னால் இருக்கும் ஏரி காத்த ராமர் கோவிலுக்கு அடுத்து சென்றோம்.
சிறிய கோவில் தான். ஆனால் இந்த வரலாறு அப்பப்பா… மகத்துவம் வாய்ந்தது. (இது தனி பதிவாக அளிக்கப்படும்!)
கோவிலுக்கு ஒரே ஒரு கேட் தான். கேட் பூட்டியிருந்தாலும் சன்னதி திறந்திருந்தபடியால், ஸ்ரீ ராமனின் திவ்ய தரிசனம் கிடைத்தது.
அந்த அரையிருட்டில் கூட ராமபிரான் நெற்றியில் இருந்த திருநாமம் மட்டும் தக தகவென மின்னியது. சீதா லக்ஷ்மண சமேதராக ராமபிரான் ஆஜானுபாகுவாக நின்றுக்கொண்டிருந்த காட்சியை பார்த்தவுடன் ஒரு கணம் சிலிர்த்துவிட்டேன். ராமபிரானே சாட்சாத் நேரில் நின்றுகொண்டிருபதை போன்று இருந்தது. (மிகையில்லை… உண்மை உண்மை. உண்மையாயினும் உண்மை. நேரில் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்!). மற்ற கோவில்களை போலல்லாமல் இங்கு விக்ரகங்கள் நல்ல உயரம். உண்மையில் ராமர் லக்ஷனருடனும் அன்னை சீதாவுடனும் நின்றுகொண்டிருப்பதை போன்றே இருக்கும்.
கோவிலை சுற்றி பார்த்தபோது நிச்சயம் இங்கு கைங்கரியம் தேவைப்படும் என்று புரிந்தது. ஆங்காங்கே குப்பை கூளங்கள் சிதறிக்கிடந்தன. பலர் பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அந்த தொன்னைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றிருந்தனர்.
கோவிலுக்கு பின்னே பிரம்மாண்டமான திருநின்றவூர் ஏரி. ஏரியின் மத்தியில், வசந்த மண்டபம் கான்னப்பட்டது கொள்ளை அழகு. இங்கு தெப்ப உற்சவமும் நடப்பதுண்டு என்று அந்த பகுதியில் நான் பார்த்த பெரியவர் ஒருவர் கூறினார்.
எப்படியே திவ்யதேசம் ஒன்றில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்ததோடல்லாமல் பிரசித்தி பெற்ற இராமர் கோவிலிலும் கைங்கரியம் செய்ய வாய்ப்பு கிடைத்தது நாம் செய்த பாக்கியமே.
நமது பேரம்பாக்கம் நரசிம்மர் ஆலய உழாரப்பணி அனுபவங்கள் குறித்த பதிவு விரைவில் வெளியிடப்படும். ஒவ்வொரு பதிவையும் நாம் மிக சிறப்பாக அளிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை நீங்கள் அறிவீர்கள். தாமதமானாலும் சிறப்பாக வரும் என்பதால் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். (பதிவுகள் படிக்க கூட முடியாம அடுத்தடுத்து வருதேன்னு சிலர் நினைக்கலாம். நீங்க அத்தனை விஷயத்தையும் படிச்சி உள்வாங்கனுமேன்னு தான் நான் கொஞ்சம் ஸ்லோவா போறேன். இல்லேன்னா இன்னும் ஸ்பீடா பதிவுகள் வரும்!)
========================================
உழவாரப்பணிக்கு உதவிட விரும்புகிறவர்கள் கவனத்திற்கு :
போக்குவரத்து, உணவு உள்ளிட்ட இந்த உழவாரப்பணியின் செலவுகளுக்கு உதவிட விரும்புகிறவர்கள் கீழே காணும் நமது ரைட் மந்த்ரா வங்கி கணக்கில் தங்களது பணத்தை செலுத்தலாம். உழவாரப்பணி உள்ளிட்ட நமது தளத்தின் பணிகள் மற்றும் இதர சேவைகள் தொடர்பாகவும் உதவிட விரும்புகிறவர்களும் இந்த வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தை செலுத்தலாம். இதில் செலுத்தப்படும் தொகை யாவும் நமது சமூக & ஆன்மீக பணிகள், கோ-சேவை, உழவாரப்பணி, விசேட நாட்களில் செய்யப்படும் அன்னதானம், மற்றும் இதர அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
Name : Rightmantra Soul Solutions
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
=======================================================
திருநின்றவூர் உழவாரப்பணிக்கு வர விரும்புகிறவர்கள் கவனத்திற்கு :
திருநின்றவூர் உழவாரப்பணிக்கு வர விரும்புகிறவர்கள் வரும் ஞாயிறு (அக்டோபர் 20, 2013) காலை 6.30 மணிக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை அடுத்து அமைந்துள்ள ஐயப்பன்தாங்கல் பஸ் நிலையம் வந்துவிடவேண்டும். அங்கிருந்து வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு பணி முடித்து திரும்புவதாக திட்டம்.
ஐயப்பன்தாங்கலில் இருந்து பூவிருந்தவல்லி, திருமழிசை வழியாக வெள்ளவேடு சென்று அங்கிருந்து திருநின்றவூர் பயணம். பசுமை நிறைந்திருக்கும் அழகான பாதை இது.
டூ-வீலரில் வருபவர்கள் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரேயுள்ள டூ-வீலர் பார்க்கிங்கில் தங்கள் வாகனத்தை நிறுத்தலாம்.
காலை உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செல்லும் வழியில் வேனை நிறுத்தி வழங்கப்படும். மதிய உணவு கோவிலில் மடப்பள்ளியில் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உழவாரப்பணிக்கான துடைப்பம், கிளீனிங் பிரஷ், பிளாஸ்டிக் குடம் உள்ளிட்டவை நம்மிடம் உள்ளது. குப்பைகளை அல்ல பிளாஸ்டிக் முறம் ஒரு நான்கைந்து தேவைப்படுகிறது. வருபவர்கள் எவரேனும் வாங்கி வந்தால் சௌகரியமாக இருக்கும். இதர ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவருகிறோம். மேலும் உங்களிடம் இருக்கும் கருவிகள் கூட எதையேனும் முடிந்தால் கொண்டுவரலாம். பணி முடிந்து திரும்பவும் கொண்டு செல்லலாம்.
உழவாரப்பணிக்கு வரவிரும்புகிறவர்கள் ஏற்கனவே தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தாலும் இந்த பதிவை பார்த்தவுடன் அவசியம் நமக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கவும்.
பணிக்கு வரும் அனைவரும் முந்தைய தினம் (சனிக்கிழமை இரவு) சற்று முன்கூட்டியே உறங்க செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஞாயிறு தாமதமாக எழுந்திருக்கும் வழக்கம் பலருக்கு உள்ளதால் உறங்கி விட வாய்ப்பிருக்கிறது. சிலர் இதனால் உழவாரப்பணிக்கு வர விருப்பம் இருந்தும் தவற விட்டுவிடுகின்றனர்.
========================================
குறிப்பு : திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலின் தல வரலாறு, மற்றும் கோவிலின் இதர சிறப்புக்கள் மற்றும் ஏரி காத்த ராமர் கோவிலின் வரலாறு ஆகியவை குறித்த புகைப்படங்களுடன் கூடிய விரிவான ‘ஆலய தரிசன’ பதிவு நாளை அளிக்கப்படும்.
========================================
நாளை (அக்டோபர் 18, வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகத் திருநாள்!
நாளை அன்னாபிஷேகத் திருநாள். சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறும். நாளை சிவபெருமானை தரிசித்தால் கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நாம் செய்யவேண்டியது என்ன, மற்றும் அன்னாபிஷேகத்தின் சிறப்புக்களை விளக்கி சென்ற ஆண்டு நாம் வெளியிட்ட பதிவை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!
http://rightmantra.com/?p=1043
நன்றி!
நமது முந்தைய உழவாரப்பணி குறித்த பதிவுகளுக்கு :
http://rightmantra.com/?cat=124
[END]
காட்டூர் ஸ்ரீ காலபைரவர் திருகோயில் படங்கள் ரொம்ப அற்புதம் சுந்தர் சார் …..
பூசலார் நாயனாரின் அவதாரத் தலம் திருநின்றவூர்.(தின்னனூர்) வராக க்ஷேத்ரம் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது….திருமங்கையாழ்வார் திருநின்றவூருக்கு வந்தபோது இரவு நேரமானதால், திருக்கோவில் நடையடைக் கப்பட்டு பெருமாள் ஏகாந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எனவே ஆழ்வார் பயணத்தைத் தொடர்ந்து கடல்மல்லை (மாமல்லபுரம்) வந்து சேர்ந்தார்.திருமங்கையாழ்வார் திருநின்றவூரில் சேவை சாதிக்கும் திருமகளையும் பக்தவத்சலப் பெருமாளையும் சேவிக்காமல்- பாசுரங்கள் செய்யாமல் போனது திருமகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.அவள் பெருமாளை உசுப்பி, கடல்மல்லைக்குச் சென்று திருமங்கையாழ்வாரிடம் தங்களுக்கான பாசுரங்களைப் பெற்றுவருமாறு சொல்ல, பிராட்டியின் சொல்தட்ட முடியாத பெருமாள், கடல்மல்லைக்குச் சென்றார். அப்போது, திருமங்கையாழ் வார் தலச்சயனப் பெருமாள் சந்நிதியில் நின்று சேவித்துக் கொண்டிருந்தார். தான் வந்திருப்பதை ஆழ்வாருக்கு குறிப்பால் உணர்த்திய திருநின்றவூர் பெருமாள், தான் வந்த நோக்கத்தை சூசகமாகத் தெரிவித்தார்.பெருமாள் வருகையைப் புரிந்துகொண்ட ஆழ்வார் பூரித்துப் போனார். மாமல்ல புரத்திலிருந்து கொண்டே, திருநின்றவூர் பெருமாள்மீது பாசுரம் செய்தார்.
“நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.’
பாசுரத்துடன் திரும்பிவந்த திருமாலிடம் தாயார், “”எல்லா திவ்விய தேசங்களுக்கும் ஆழ்வார் பத்திற்கு மேற்பட்ட பாசுரங்கள் பாடியவர். நமக்கு மட்டும் ஏன் ஒரு பாசுரத்து டன் நிறுத்திக்கொண்டார்?” என்று கேட்டு, மேலும் பாசுரங்களைப் பெற்று வருமாறு எம்பெருமாளை அனுப்பி வைத்தாள். அதற்குள் திருமங்கையாழ்வார் பல திவ்விய தேசங்களை சேவித்துக்கொண்டு திருக்கண்ண மங்கைக்கு வந்துசேர்ந்தார்.இங்கே ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், திருக்கண்ணமங்கை பெருமாளின் திருநாமமும் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள்தான். திருநின்றவூர் பெருமாள் திருக்கண்ணமங்கை பெருமாளின் சந்நிதியில் நின்றிருந்த திருமங்கை ஆழ்வாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தோடு, நோக்கத்தையும் உணர்த்தினார். பரவசத்தால் நெகிழ்ந்துபோன திருமங்கையாழ்வார் கீழ்வரும் பாசுரத்தை அருளிச் செய்தார்.
“கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலினைச் சென்றுநாடி
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே!’
பாசுரங்களைப் பெற்றதில் பிராட்டிக்கும் பரந்தாமனுக்கும் பெருத்த மகிழ்ச்சி.
எம்பெருமாள் தான் இருந்த இடத்திலிருந்தே பாசுரங்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் தன் அடியார் களிடம் அன்பும் பாசமும் கொண்டவர் என்பதால் ஆழ்வாரைத் தேடிப் போய் பாசுரம் பெற்றுவந்தார். அதனால்தான் பக்தவத்சலன் என்றழைக்கப்படுகிறார்.
சிவமே விஷ்ணு ….விஷ்ணுவே சிவம் ….சங்கர நாராயநா
…
சுந்தர்ஜி
அடுத்த அடுத்த அருமையான பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள். எதை விட எது சிறந்தது என எனக்கு சொல்லத் தெரியவில்லை. இந்த உழவாரபணிப் பதிவில் பொதுவாக எனக்கு ரைட் மந்திரா மூலம் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். நெரூர் சதாசிவ பிரம்மேந்திரா பற்றிய உங்கள் பதிவில் எனது கமேண்ட்டில் தகுந்த துணை கிடைத்தால் அங்கு செல்வதாக போட்டிருந்தேன். பதிவிற்கு முன்பே அது எனது நீண்ட நாளைய விருப்பமும் கூட. ஆனால் கோவிலுக்கு செல்ல விரும்பும் அளவுக்கு ஜீவசமாதிகளுக்கு மக்கள் விரும்புவதில்லை. ஆனால் எல்லா பிரசித்திப்பெற்ற கோவில்களுக்கும் அங்கே ஏற்கனவே உள்ள மஹான்களின் ஜீவ ஆற்றலால்தான் சக்தி பெருகுகிறது என்பது உண்மை. உதாரணம்:- பழனி – போகர், திருப்பதி – கொங்கணர், திருவண்ணாமலை-அருணகிரியோகீஷ்வரர் ஆலயத்தில் மற்றும் பலர் கிரிவலப்பாதையில், என சொல்லிக்கொண்டே போகலாம்.
அத்தகைய ஆற்றல் மிக்க சதாசிவர் நம் தளத்தில் அவரிடம் வர துணைவேண்டும் என நான் குறிப்பிட்டதும் நம் தளம் சார்பாகவே ஒரு துணையினை அனுப்பிவைத்தார். நான் கோயமுத்தூரில் ஒரு கிராமத்தில் வசிப்பவள். கடந்த 15.10.13 அன்று அலுவலகம் செல்ல ஆயத்தமானேன். காலை 8.30 மணி சுமார்க்கு நம் தளவாசகி திருமதி பரிமளம் அவர்கள் எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு “நான் சென்னையிலிருந்து மதுரை வந்து என் தாயாரை பார்த்துவிட்டு தற்பொது கோவையில் தம்பி வீட்டீல் இருக்கிறேன். நீங்கள் கமேண்ட் பகுதியில் துணை கிடைத்தால் நெரூர் வருவதாக சொல்லிருந்தீர்கள். இன்று போகலாம் வருகிறிர்களா?” எனக்கேட்டார்கள்.
எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் நாளை அதிகாலையில் செல்லலாம். இன்று போனால் வர தாமாதமாகும் எனக்கூறினேன். திருமதி பரிமளம் அதற்கு ” நாளை நான் சென்னை திரும்ப வேண்டும். மீண்டும் கோவை எப்ப வருவேன் எனத்தெரியாது.இன்றே போகலாம்.” என்றார்கள். பிறகென்ன? உடனடியாக அலுவலுக்கு விடுமுறை எடுத்துவிட்டு கிளம்பிணோம்.
இடையில் தங்களது வழிகாட்டுதலின் மூலம் நெரூர் மாலை 4 மணிக்கு சென்று தரிசனம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
திரும்பும்பொது கருர்சித்தரையும் பார்த்துவிட்டு செல்லலாம் என நான் சொன்னேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி கோவைதிரும்ப இரவாகும் என்றதும் திரு.பரிமளம் அவர்களுக்கும் உடன் வந்த அவரின் தம்பி மனைவிக்கும் கொஞ்சம் தயக்கம். சரி என்று மனதிற்குள் கருவுராரிடம் வேண்டிக்கொண்டேன். நாங்கள் கரூரை நெருங்கும்பொது மெல்ல பக்கத்தில் உள்ளவரிடம் இதுபற்றி பேச்சு எடுக்க அவர் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கோவில் முன்புரம் இறங்கி வணங்கிவிட்டு பின்புரம் சென்ரால் கோவைக்கு பஸ் ஏறிக்கலாம் என்றார்.
இதை திருமதி பரிமளம் அவர்களும் கேட்க, நான் “எப்படியும் தாமதம் ஆகிவிட்டது மேடம்! ஒரு அரைமணிக்குள் என்னாகிவிடும்? மீண்டும் நாம் இணைவது அரிது என ஒருவாறு சொல்லி கருவூராரையும் பசுபதிஸ்வரர் ஆலயத்தையும் கண்குளிர தரிசித்து கிளம்பிணொம். அவரவர் இல்லம் வர மணி 10 ஆகிவிட்டது. இருந்தாலும் இந்த நிமிடம் நினைத்தாலும் ஒரு இனிய கனவைப்பொல் தரிசனங்கள் வந்து போகின்றன.
நான் சற்றும் எதிர்பாராத இந்த இனிய அனுபவத்திற்கு இரு மகான்களுக்கும், நம் தளத்திற்கும், தங்களுக்கும், முக்கியமாக என் உடன் பிறந்த சகோதரி போல என்னை அழைத்து சென்ற திருமதி பரிமளம் அவர்களுக்கும் என் நன்றியினை காணிக்கை ஆக்குகிறென்.
கடவுளை நம்பினோர் கைவிடபடமாட்டார் என்பது நம் தளத்தின் மூலம் மீண்டும் நிருபணம்ஆகிவிட்டதில் சொல்லமுடியாத மகிழ்ச்சி.
தங்கள் பணி மற்றும் நம் தளம் மென்மேலும் சிறக்க இறைவனை வணங்கி நன்றி செலுத்துகிறேன். நன்றி
மேலே உள்ள பதிவில் கஷ்டம் என்பதற்கு பதிலாக சிரமம் என்பது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் அருமையான பதிவு