கிராமப்புற மறுமலர்ச்சி இன்றி ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கமுடியாது. என்றைக்கு நம் நாட்டில் கிராமங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறுகிறதோ அன்றைக்கே நாம் ‘முன்னேறிய நாடு’ என்று மார்தட்டிக்கொள்ள முடியும். எனவே தான் ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்று காந்தியடிகள் சொன்னார்.
புறநகருக்கு சற்று வெளியே வந்தால் நம்மை சுற்றி எத்தனையோ கிராமங்கள் உள்ளன. அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் பல உண்டு. அனைத்தையும் அரசாங்கமே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காமல், ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவற்றை இந்த கிராமங்களுக்கு செய்யவேண்டும்.
வேலையை விட்டுவிட்டு தான் இந்த சேவைகளில் இறங்கவேண்டும் என்பதில்லை. இந்த அத்தியாயத்தின் ஹீரோ திரு.முருகன் செய்வதை போல வார இறுதியில் கூட சற்று நேரம் ஒதுக்கி இந்த மகத்தான சேவையை செய்யலாம்.
கோவிலுக்கு செல்வது, விரதங்கள் இருப்பது, ஹோமங்கள் செய்வது, சாஸ்திரங்கள் கூறியுள்ள பல புண்ணிய காரியங்களை செய்வது etc. etc., இப்படி அனைத்தையும் விட பவித்திரமானது புண்ணியமிக்கது திரு.முருகன் செய்யும் சேவை என்றால் மிகையாகாது.
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்று மகாகவி பாரதி கூறியபடி புண்ணியத்திலேயே மிகப் பெரிய புண்ணியம் ஒரு ஏழையின் கல்விக்கு உதவுவது தான்.
முருகன் அவர்களே, உங்களை பற்றிய செய்தியை பகிர்வதில் பெருமை கொள்கிறோம். உங்கள் பணி தொடர், தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!!
=======================================================
இங்கு ‘சேவை’ என்ற விதைகளின் மூலம் ‘நம்பிக்கை’ என்ற மரங்கள் வளர்க்கப்படுகிறது!
திறமையும் தகுதியும் உடைய மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) கிடைப்பதுண்டு. அப்படி கிடைக்கும் கல்வி உதவி தொகையை பொதுநலனுக்கு செலவிட பெரிய மனது வேண்டும். அந்த மனது முருகனுக்கு இருந்தது. தான் கல்லூரியில் சேர விரும்பியபோது தனக்கு உதவ முன்வந்தவர்களை முருகன் மறக்கவில்லை. அது போல நாம் மற்றவர்களுக்கு உதவுவது தானே முறை என்று முடிவுக்கு வந்த முருகன், தனக்கு கிடைத்த மொத்த உதவித் தொகையையும் கஷ்டப்படும் மாணவர்களுக்கு அளிக்க முன்வந்தார்.
தான் பகுதி நேர பணிக்கு சென்று சம்பாதிப்பதே தனக்கு போதுமானதாக இருக்கிறது என்று கருதினார் முருகன். ஆகையால் தனக்கு கிடைத்த உதவித் தொகையை தைரியமாக கஷ்டப்படும் பிற மாணவர்களுக்கு கொடுத்து உதவினார்.
அவரது சமூக சேவைக்கான வித்து ஊன்றப்பட்டது இப்படித் தான். இன்று சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை அவரது VILLAGE VISION அமைப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. VILLAGE VISION அமைப்பு தனது ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு பாதுகாப்பான பணிக்கு சேர்ந்தபிறகு, வார இறுதிகளில் கேளிக்கை, கொண்டாட்டங்கள் என்று செல்லாமல் வெளி உலக தொடர்புகள் அற்ற குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லித் தருகிறார் முருகன். இந்த கிராமங்களுக்கு பெரும்பாலும் முறையான போக்குவரத்து வசதிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.. எனவே முருகனும் அவரது நண்பர்களும் பல சமயம் நடந்தே செல்வார்கள்.
முதலில் இவர்களிடம் தங்கள் பிள்ளைகளை ட்யூஷனுக்கு அனுப்ப கிராம மக்கள் ஆர்வம் காட்டவில்லை. “எங்கிருந்தோ வருபவர்கள் அதுவும் இப்படி காடு மேடெல்லாம் நடந்தே வந்து நம் பிள்ளைகளின் கல்வி புகட்ட அக்கறை செலுத்தும்போது நாம் செலுத்தவில்லை என்றால் எப்படி?” என்று சிந்தித்த மக்கள் நாளடைவில் தங்கள் பிள்ளைகளை இவர்களிடம் இலவச ட்யூஷன் படிக்க அனுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
முருகன் மேற்படி கிராமத்து மாணவ, மாணவிகளுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். அதற்குரிய வசதிகளை அவர்களுக்கு செய்து தருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம், வஞ்சிவாக்கம், எலவம்பேடு, குளக்கரை, கனவான் துறை, நந்தியம்பாக்கம், ஆசனபுதூர் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி குழந்தைகள் இவரது இலவச டியூஷன் சென்டரால் பயன்பெறுகின்றனர். இந்த பத்து கிராம்கங்களுக்கும் சேர்த்து மொத்தம் 400 குழந்தைகள் இவரிடம் இலவச ட்யூஷன் வகுப்புக்கு பதிவு செய்துள்ளனர்.
(ஆசானபுதூர், வஞ்சிவாக்கம் பஞ்சாயத்து,பொன்னேரி வட்டம், கிராம பார்வையின் 10 வது இரவு பாடசாலை 15-ஆகஸ்டு கல்வி தந்தை காமராசர் பிறந்த நாளன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு பாடசாலையில் 70 மாணவர்கள் படிக்கின்றனர். தற்பொழுது 6 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தன்னார்வமாக பாடம் எடுக்கின்றனர்… மொத்தம் 400 மேற்பட்ட மாணவர்கள் 10 கிராம பார்வை இரவு பாடசாலையில் படிக்கின்றனர்.)
அனைத்து வகுப்பு மக்களும் இவர்களுக்கு ஒத்துழைப்பு தந்ததாகவும் ஆனால் இருளர் சமூக மக்கள் சற்று முரண்டு பிடித்ததாகவும் கூறுகிறார் முருகன். அவர்களை இதற்கு ஒப்புகொள்ள வைத்து அவர்கள் பிள்ளைகளை ட்யூஷனுக்கு அனுப்ப செய்வதற்குள் போதும் போதுமேன்றாகிவிட்டதாக முருகன் கூறுகிறார்.
VILLAGE VISION அமைப்பு இந்த கிராமங்களில் இருந்து 15 இளைஞர்களை அடியாளம் கண்டு அவர்களுக்கு ‘கிராம சிற்பி’ என்னும்விருதை தந்து கௌரவித்ததாம். இந்த இளைஞர்கள அனைவரும் கிராமப்புற கல்வி மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர்களும், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு உதவியர்களும் ஆவர். இவர்களின் முக்கிய குறிக்கோளே படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து தங்கள் அடிப்படை கல்வி உரிமையை அவர்கள் பெறுமாறு செய்வது தான்.
அதுமட்டுமா? கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்காக அவர்கள் பொருளாதார தன்னிறைவு பெறவேண்டி, டெய்லரிங் வகுப்புகள் எடுத்து அவர்களுக்கு டெய்லரிங் கற்று தருகின்றனர். இதுவரை சுமார் 100க்கும் மேற்ப்பட்ட கிராமப்புற பெண்கள் இவர்களின் டெய்லரிங் வகுப்பில் சேர்ந்து டெய்லரிங் கற்றுக்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமா? மரங்களை வளர்த்து பசுமையை பேணும் பணியிலும் VILLAGE VISION அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாணவர்கள் கிராமங்களில் மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்கிற காந்தியடிகளின் கூற்றுக்கு வலு சேர்க்கின்றனர்.
தொடர்புக்கு :
திரு.A.முருகன்,
மொபைல் எண் : 9962239924
மின்னஞ்சல் : villagevision.chennai@gmail.com
==================================================
இவர்களை போன்ற, வெளியுலகினர் அதிகம் அறியாத ஹீரோக்களை பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நமக்கு நாமே ஒரு உத்வேகத்தை அளித்துக்கொள்வோம். ஏனெனில் நாளைய உலகம் சிறப்பானதாக அமைவதில் நமது பங்கும் இருக்கிறது.
நீங்கள் இது போல, நிஜ ஹீரோக்களை பற்றி கேள்விப்பட்டாலோ அல்லது பார்த்தாலோ எங்களை தொடர்புகொள்ளுங்கள். உங்கள் அருகிலேயே அவர்கள் இருக்ககூடும். தொடர்புக்கு : simplesundar@gmail.com, rightmantra@gmail.com
==================================================
UNSUNG HEROES மற்ற அத்தியாயங்களுக்கு:
சுந்தர்ஜி
முருகனுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கம். வாழ்க முருகன், வளரட்டும் அவரது சேவை மனப்பான்மை . நன்றி.
Sundaji
முருகனுடைய பனிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இப்படி ஒவ்வொரு விட்டிலும் ஒரு முருகன் உருவாக வேண்டும். அதற்க்கு நாம் செய்ய வேண்டியது நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரி article எடுத்து கூறி குழந்தைகள் மததியில் நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும்.
விதைகளை கையில் எடுத்து,கல்வியெனும் பயிர்வளர்க்கும் திருவாளர்கள் அனைவருக்கும் ரைட் மந்திரா வாழ்த்துக்கள்..
உண்மைதான் சுந்தர் – வார இறுதி நாட்களில் எங்கே ஊர் சுற்றலாம், கேளிக்கை கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் உருப்படாமல் போகலாம் என்று பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் மத்தியில், பணி நாட்களுக்கு பிறகு ஓய்வைப்பற்றிக்கூட நினைக்காமல் குக்கிராமங்களுக்கு சென்று ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி கொடுக்கும் முருகன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சினிமா மோகம் பிடித்த இன்றைய சமூகத்தில் முருகன் போன்றவர்கள் ஒரு பாலைவனச்சோலை.
நம் தளத்தின் மூலம் இவர்களுக்கு ஒரு உற்சாகம் கிடைக்கிறது என்றால், இது போன்ற பதிவுகள் மூலம் என்னை போன்றவர்களுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைக்கிறது. முருகன் போன்றவர்கள் இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். தொடரட்டும் இவர்கள் பணி.
வாழ்க முருகன் …வளர்க அவரது சேவை …
நீங்கள் தான் உங்கள் kurikholgalil வாழ்கிறீர்கள். உங்கள் சேவை இனிதே தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. முன் பார்த்த murugankum இப்பொது பார்க்கும் முருகனுக்கும் வித்தியாசம் ஏதும் கிடையாது.. எனக்கு மிகவும் பெருமை படுகின்ற விஷயம் உங்கள் சேவை.. இந்த சேவை தொடரவும் தங்களுக்கு உதவவும் நண்பர்கள் பலர் முன்வர என்னுடைய பணிவான வேண்டுகோள்.. நன்றிகள் பல..
இப்படிக்கு,
புவனா