Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > “ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்!” – கலாம் காட்டும் வழி! ABDUL KALAM B’DAY SPL

“ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்!” – கலாம் காட்டும் வழி! ABDUL KALAM B’DAY SPL

print
ந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் (October 15) இன்று. பதவியால் பெருமை பெற்றவர்களிடையே பதவிக்கே பெருமை சேர்த்தவர் திரு.கலாம். இந்த இனிய நாளில் அவர் இன்றும் போல் என்றும் வையம் சிறக்க வாழ பரம்பொருளை பிரார்த்திப்போம்.

பதவியில் இருந்து ஒய்வுபெற்றுவிட்டாலும் தன் அடுத்த பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க துடிக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகளிடையே அடுத்த தலைமுறையின் கல்வி பற்றி  சிந்தித்துக்கொண்டிருப்பவர் கலாம்.

தமது அதிரடி நடவடிக்கைகளால் குடியரசுத் தலைவர் மாளிகையையே கிடுகிடுக்க வைத்தவர் திரு.கலாம். (ஆண்டாண்டு காலமாக அசைவ உணு சமைக்கப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையில் கலாம் காலத்தில் சைவ உணவு பரிமாறப்பட்டது. மேலும் மாளிகை கிச்சனிலும் கலாமின் விருப்பத்திற்கேற்ப சைவ உணவு மட்டுமே சமைக்கப்பட்டது என்பது தெரியுமா?)

வழிவழியாக கடைப்பிடித்து வந்த பல மரபுகளை தூக்கி வீசிவிட்டு புதுமைக்கு, புரட்சிக்கு, அடிகோலியவர் திரு.கலாம். குடியரசு தலைவர் பதவியில் இருந்து அவர் தற்போது ஒய்வு பெற்றுவிட்டாலும் “இந்தியாவை வல்லரசாக்கியே தீருவேன்” என்று இன்றும் நாடு முழுவதும் பறந்து பறந்து சென்று நாளொன்றுக்கு எண்ணற்ற மாணவர்களை சந்தித்து அவர்களிடையே உரையாற்றி வருகிறார் திரு.அப்துல் கலாம்.

திரு.கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது நாளொன்றுக்கு 200 மாணவர்களை சந்தித்து அவர்களிடையே பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பது தெரியுமா?

திருக்குர்ஆன் எந்தளவு தெரியுமோ அதே அளவு பகவத் கீதையும் வரிக்கு வரி அறிந்தவர் கலாம்.

முதலில் கலாமின் பர்சனல் செகரட்டரியாக அவரிடம் பணியாற்றிய ஒருவர் கலாம் பற்றி கூறும் தகவல்களை பார்ப்போம். அடுத்து, சமீபத்தில் ஒரு பள்ளியில் கலாம் அவர்கள் ஆற்றிய உரையை பார்ப்போம். அந்த உரையில் கலாம் அவர்கள் கூறியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் கல்வெட்டில் பொரிக்க வேண்டியவை. ஆம் உங்கள் இதயத்தில் உள்ள கல்வெட்டில்.

பார்வையற்ற பள்ளி மாணவன் தனது ஆசையை தெரிவித்தபோது அவனுக்கு அவர் கூறியது முதல் அவருக்கு டிரைவராக பணிபுரிந்த எஸ்.எஸ்.எல்.சி. வரை மட்டுமே படித்த ஒருவர் தற்போது பேராசிரியராக பணிபுரிந்துவரும் அதிசயம் வரை அனைத்து வரி விடாமல் படிக்கவேண்டிய ஒன்று.

“ஒன்னும் நாம ஜெயிக்கணும். இல்லே ஜெயிச்சவங்களை முகர்ந்துகொண்டு இருக்கவேண்டும்” என்று கிராமங்களில் ஒரு வழக்கு உண்டு. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? ஒன்னு சாதனையாளர்களா இருக்கணும். அல்லது சாதனையாளர்களின் கூட இருக்கவேண்டும்” என்பது தான். அந்த பழமொழி எத்தனை அர்த்தமிக்கது என்பதை கலாம் அவர்களின் ஓட்டுனர் வாழ்வில் உயர்ந்திருக்கும் ஒரு சம்பவமே சாட்சியாகும்.

என் வாழ்வின் மிகப் பெரிய லட்சியங்களில் ஒன்று கலாம் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும், அவரை சிறப்பு விருந்தினராக வைத்து நம் தளத்தின் விழா ஒன்று நடத்தவேண்டும், என்பது தான். எத்தனை ஆண்டுகளானாலும் சரி, இந்த லட்சியத்தை அடைந்தே தீருவது என்று உறுதி பூண்டிருக்கிறேன்.

திருவருள் துணை செய்ய வேண்டும்!

==================================================================

கலாம் குடியரசுத் தலைவராக பணிபுரிந்த பொது அவரின் பர்சனல் செக்ரட்டரியாக பணிபுரிந்த பரமேஸ்வரன் நாயர் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் கலாமுடன் தனது அனுபவங்களை கூறியது இது :

குடியரசுத் தலைவர் மாளிகையில் உறவினர்கள் சாப்பிட்ட செலவை தன் கையிலிருந்து தந்த கலாம் !

“1981-ல் கேரளாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்தான் முதன்முதலா கலாம் சாரைச் சந்தித்தேன். நான் நிர்வாகத் துறையில் தலைமை அதிகாரி. கலாம் தலைமை விஞ்ஞானி களில் ஒருவர். எல்லோரும் சரியா சாயங் காலம் 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பிடுவாங்க. ஆனா, கலாம் சார் மட்டும் ராத்திரி 10 மணிக்கு மேலும் வேலை பார்ப்பார். சமயங்களில் அங்கேயே தூங்கிவிடுவதும் உண்டு. மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து வழக்க மான வேலைகளை ஆரம்பித்துவிடுவார். அந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் அவருக்கு இந்தியாவின் முதல் குடிமகன்கிற அந்தஸ்தைத் தந்தது!

சில வருடங்களில் நான் ஆயுத உற்பத்தி துறைக்கு மாற்றப்பட்டேன். எனக்கும் அவருக்கும் பெரிய இடைவெளி ஆகி விட்டது.

2002-ல் கலாம் ஜனாதிபதி ஆனார். ஒருநாள் நான் என்னோட சீனியர், ‘கலாம் உங்களைப் பார்க்க விரும்பறார்’னு சொன்னார். பிறகுதான் தெரிஞ்சுது கலாம் என்னைத் தன்னோட பெர்சனல் செக்ரட்டரியா நியமிச்சு இருக்குற விஷயம். பரவசமான அனுபவங்கள் அளித்த ஐந்து வருடங்கள் அவை!

ஒரு முறை ராஷ்டிரபதி பவனுக்கு கலாம் சாரின் உறவினர்கள் வந்திருந்தாங்க. மொத்தம் 59 பேர். அவங்களோட சாப்பாடு, தங்கும் இடம் தொடங்கி டீ வரைக்கும் ஆன செலவை கலாமே கொடுத்துவிட்டார். இதுவாவது பரவாயில்லை. கலாமின் அண்ணன் கலாமின் அறையில் அவரோடு தங்கி இருந்தால், அந்த அறைக்கான வாடகையையும் கொடுத்துவிடுவார்.

ஒரு முறை கலாமின் அண்ணன் ஹஜ் பயணம் போனார். ‘எப்படியும் பாஸ்போர்ட்டில் ஏ.பி.ஜே-ன்னு இனிஷியல் இருக்கிறதால் என் அண்ணன்னு தெரிஞ்சுடும். அதுக்காக அவருக்கு எந்த சிறப்புச் சலுகைகளும் தர வேணாம்னு தூதரக அதிகாரிகளிடம் சொல்லிடுங்க’னு சொன்னார். நெகிழ்ந்துட்டேன். ஒரு விபத்தில் சிக்கி, என் மனைவியின் கால் முறிந்தபோது, நேரடியா வீட்டுக்கு வந்து விசாரிச்சார். அந்த எளிமைதான் அப்துல் கலாமின் அடையாளம்.

இளைஞர்கள் மீதுதான் அவருக்கு அளவு இல்லாத நம்பிக்கை. ஆனால், அவர் எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டார். அரசியல் கட்சி தொடங்கவும் மாட்டார். ‘அறம், அறிவியல், ஆன்மிகம் இது மூன்றும் இணைந்த இளைஞர்கள்தான் இன்றையத் தேவை’னு அடிக்கடி சொல்வார். அவரோட ஆசைப்படியே அப்படியான இளைஞர்கள் 2020-ல் இந்தியாவை வல்லரசு தகுதிகளுடனான நல்லரசாக வடிவமைப்பார்கள்!”- சிலிர்ப்புடன் முடிக்கிறார் பரமேஸ்வரன் நாயர்.

==============================================================
தனலெக்ஷ்மி மேல் நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் திரு.அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரை

நான் விளக்காக இருப்பேன்,
நான் படகாக இருப்பேன்,
நான் ஏணியாக இருப்பேன்,
அடுத்தவரின் துன்பத்தை துடைப்பேன்,
மனநிறைவோடு வாழ்வேன்.

நண்பர்களே, இங்கு கூடியிருக்கும் எல்லா மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம். இன்றைக்கு உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்றைக்கு தனலக்ஷமி பள்ளி நூற்றாண்டு விழாவிலே கலந்து கொண்டு உங்களுடன் உரையாட எனக்கு கிடைத்த வாய்ப்பிற்கு மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனலக்ஷமி பள்ளி நிர்வாகத்தார்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும், மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். உங்கள் மத்தியில் இன்றைக்கு “எனக்குள் புதைந்துள்ள அரும்பெரும் சக்தியால் நான் வெற்றியடைவேன்” என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்.

நண்பர்களே, இன்றைக்கு என் வாழ்வில் கண்ட அனுபவங்கள், என் ஆசிரியர்கள், அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட அரிய எண்ணங்கள், சில அருமையான புத்தகங்கள் எவ்வாறு என் வாழ்வின் சிந்தனையை மாற்றியது. எல்லாவற்றையும் விட என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஒரு புனிதமான கருத்து என்னவென்றால், நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும். இது நான் என்னுடைய வாழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம். அதை உங்களுக்கான என்னுடைய உரையில் இருந்து 8 உறுதிமொழிகளாக உருவாக்கி இருக்கிறேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாம் ரெடியா? என்னுடன் திருப்பி சொல்கிறீர்களா? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.

மாணவர்களுக்கான 8 உறுதிமொழி

1. எனக்குள் ஒர் அரும்பெரும் சக்தி புதைந்துள்ளது. வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து, என் சக்தியாலேயே, நான் வெற்றி அடைந்தே தீருவேன்.

2. ஒவ்வொருநாள் வகுப்பிலும், ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களையும், அறிவியல் பாடங்களையும், கணித கணக்குகளையும், சமூகவியல் பாடங்களையும், அன்றைய நாளே, அன்றைய இரவே, நானே அந்த அறிவை உள்வாங்கி, புரிந்து, எழுதி எழுதி படிப்பேன். இந்த முறையான படிப்பின் மூலம் என் உள்ளத்தின் ஆழ் மனதில் ஒவியம் போல் பதிந்துவிடும் படி நான் கற்று உணர்ந்து, தெளிவேன்.

3. அறிவுப்பெட்டகமாக திகழும் எனது ஆசிரியர்கள் வாழ்வு முறையை அறிந்து, தெரிந்து, அவர்களை மதித்து அதன்படி நடந்து என் வாழ்வை செம்மைப்படுத்துவேன்.

4. பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்பேன், ஆசிரியர்களிடம் இருந்து அறிவார்ந்த லட்சியத்தை அடைவேன்.

5. என்னால் எதைக் கொடுக்க முடியும் என்ற லட்சியத்தை என் உள்ளத்தில் உருவாக்குவேன். நான் பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுப்பேன், அன்பை கொடுப்பேன், பண்பை வளர்ப்பேன், மற்றவர்களை மதிப்பேன் எல்லாவற்றிற்கும் மேல் அனைவரிடமும் நட்பை வளர்பேன்.

6. நான் வெற்றி பெறுவேன், மற்றவர்கள் வெற்றியையும் கொண்டாடி மகிழ்வேன்.

7. பெற்றோர்கள் உதவியுடன், நான் என் வீட்டில் ஒரு சிறு நூலகம் அமைத்து, தினமும் ஒரு 30 நிமிடமாவது புத்தகங்களைப் படிப்பேன்.

8. இன்றையில் இருந்து என் மனதில் ஒர் உன்னத லட்சியம் உதயமாகிவிட்டது; அறிவை தேடி, தேடி, சென்றைடைவேன்; கடினமாக உழைப்பேன்; பிரச்சனைகளை கண்டு பயப்படமாட்டேன்; தோல்வி மனப்பான்மைக்கு தோல்வியை கொடுத்து, விடாமுயற்சி செய்து எனது உன்னத லட்சியத்தை வென்றடைவேன்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்

பார்வையற்ற சிறுவன் தெரிவித்த ஆசையும் கலாம் சொன்ன பதிலும்

நான் 11வது குடியரசுத்தலைவராக இருந்த பொழுது, ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்பொழது ஒரு நாள். ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன என்று கேட்டேன். வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக, இன்ஜினியராக, IAS/IPS அதிகாரிகளாக, தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக, அரசியல் தலைவர்களாக ஆவோம் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு பையன் கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த், அவன் 9ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும் தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டேன். அவன் சொன்னான். கலாம் சார், நான் வாழ்க்கையில், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத்தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னான். எனக்கு அவனது உயர்ந்த எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவனிடம், நீ வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக உனக்கு 4 முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன் என்றேன், அதாவது 4 விஷயங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. அவை என்ன.

1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.
2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.

இந்த நான்கு குணங்களும் உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம் என்று அவனை வாழ்த்தினேன்.

ஸ்ரீகாந்த் அதோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றான். என்ன ஒரு விடாமுயற்சி, அவன் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியதாகம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute Institute of Technology) யில் கணிணி தொழில் நுட்பிவியல் படிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தான். ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020 & GE Volunteers சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது. பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்பு கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று தெரியவந்தது. உடனே ஸ்ரீகாந்த் MIT க்கு எழுதினான், நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டி தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான். போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள் மத்தியில் பிறந்த பார்வையற்ற ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டான். எழுத்து தேர்வில் நான்காவதாக வந்தான். தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு MIT தலைவணங்கியது. அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப அறிவியல் துறையில் பட்டம் படிக்க அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு. அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பி வைத்த GE கம்பெனியின் மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், நீ படித்து முடித்தவுடன் உனக்கு வேலை ரெடியாக இருக்கிறது என்று. அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பினான். அதில் கடைசியாக எழுதியிருந்தான், ஒருவேளை எனக்கு பார்வையற்ற முதல் குடியரசுத்தலைவர் பதவியடைய முடியாவிட்டால் கண்டிப்பாக உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்று. இதில் இருந்து மாணவர்களாகிய உங்களுக்கு தெரிந்து கொள்ளும் அனுபவம் என்ன. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும் என்பது தான். மற்றொரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கலாமின் ஓட்டுனர் சாதித்த கதை

நான் DRDL, Hyderabadல் டைரக்டராக இருந்த போது, என்னிடம் கதிரேசன் என்பவர் எனது கார் டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது நீண்ட நேரம் பணியில் இருந்து விட்டு நான் காரில் ஏறி வீட்டுக்கு செல்ல வரும் பொழுதெல்லாம், கதிரேசன் எதாவது படித்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது ஒரு நாள் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார், சும்மா இருக்கும் நேரம் படித்தால் எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று படிக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் 10ம் வகுப்பு வரை படித்ததாக சொன்னார். மேலும் படிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டேன். மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் என்னால் எப்படி படிக்க முடியும் என்று வினவினார். உடனே நான் அவரை திறந்தவெளி பள்ளி மூலம் +2 படிக்க ஏற்பாடு செய்தேன். அதை வெற்றிகரமாக முடித்தார். அதன் பின் B.A படித்தார். அப்புறம் நான் டெல்லி சென்று விட்டேன். அனால் அவர் படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தார் M.A முடித்தார், M.Phil முடித்தார், பின்பு அரசியல் அறிவியலில் Ph.D படித்து முடித்து டாக்டரேட் பட்டம் பெற்றார். இப்போது அவர் தமிழ்நாட்டில், மதுரைக்கு பக்கத்திலே மேலூர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

எனது கிராமப்புற கல்வியின் அனுபவம்

நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும், உங்களால் வெற்றி அடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் 1936 முதல் 1944 வரை நான் படித்த போது, கடற்கரையோரம், பாதி கட்டிடமும் பாதி கூரை வேய்ந்த நிலையில் தான் எங்கள் பள்ளி இருந்தது. இராமேஸ்வரம் தீவில் அது ஒரு பள்ளி தான். 400 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்றோம். இப்போது இருக்கும் பல பள்ளிகள் மாதிரி பல் வேறு வசதிகளும், கட்டிடங்களும் இல்லாத பள்ளி அது. அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயரும், அறிவியல் ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர் அவர்களும், மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப் பட்டவர்கள். நான் அப்பொழுது 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தில் 40 மதிப்பெண்களுக்கும் கீழ் தான் எடுத்தார்கள். கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொன்னார், மற்ற பாடங்களில் 80க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள், ஏன் கணிதத்தில் மட்டும், மதிப்பெண் குறைகிறது என்று கேட்டார். மாணவர்கள் நிலையை அறிந்த கணித ஆசிரியர் திரு இராமகிருஷ்ண ஐயர் சொல்வார், எனது லட்சியம் எனது மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிக்கவைப்பது தான் என்று. அது மட்டுமல்ல, கணிதத்தில்  நல்ல மதிப்பெண் பெற வைப்பதும் எனது லட்சியம் தான் என்று சொல்வார். உடனே அவர் மாணவர்கள் அனைவரையும் கணிதத்தில் எப்படி ஈடுபாட்டுடன் படிக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை தீட்டி, எங்களுக்கு கணிதத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். எங்களுக்கு என்று கணித சிறப்பு வகுப்பை ஏற்படுத்தினார், அதில் கணிதத்தை அனைத்து மாணவர்களுக்கும் புரியும் படி சிறப்பாக நடத்தினார். எங்களுக்குள் விவாதிக்க வைத்தார். அதன் மூலம், கணிதத்தை எங்களுக்கு எளிமையாக புரிய வைத்தார். அப்புறம் 10 முக்கியமான கணக்குகளை கொடுத்து எங்களை பரிச்சை எழுத வைத்தார். அந்த பரிச்சையில் 90 சதவிகிதம் மாணவர்கள் கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற வைத்தார். அதிலிருந்து கணிதத்தின் மீதிருந்த பயம் மாணவர்களை விட்டு அகன்றது. மகிழ்ச்சியால் அனைவரும் மிதந்தோம். பல வருடங்களுக்கு பிறகு தான், கணிதத்தில் அவர் விதைத்த நம்பிக்கை என்ற விதை எங்களுக்குள் எப்படி பரிணமித்தது என்பதை பற்றி அறிந்து கொண்டோம். எனவே நண்பர்களே, நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை, நாம் ஒவ்வொருவருக்கும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த நாட்டில் நம்மால் முடியும் என்ற எண்ணம் மலரும்.

வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான்

எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்கு பிடித்த ஓரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும்.

புதிய சிந்தனைகளுடன் படி

எனவே மாணவர்களே, இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் பாட புத்தகம் மட்டும் படிப்பது உங்களை கல்வியின் அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்லும். ஆனால் அது சம்பந்தமாக, பல்வேறு புத்தகங்களை நூல் நிலையங்களுக்கு சென்று படித்தால், உங்களது சந்தேகங்கள் நிவர்த்தியாகும். அடிப்படை கணிதம், அடிப்படை அறிவியலில் நீங்கள் பல்வேறு புத்தங்களை படித்து தேர்ந்து விட்டீர்கள் என்றால், பின்பு மேல் படிப்பு உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மனப்பாடம் பண்ணுவது ஒரு அறிவியல் தத்துவத்தை, கணித சூத்திரத்தை, தீர்வுக்கான முறையை உங்கள் மனதில் பதிய வைக்காது. ஒவ்வொரு பாடத்தையும் மூன்று முறையாவது ஆழப் படித்து, உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் விவாதித்தீர்கள் என்றால், அது உங்கள் மனதை விட்டு அகலாது. கேள்விகளுக்கு பதில் சொல்லி தெளிவாக்கினீர்கள் என்றால், அது உங்களது வாழ்க்கைக்கும் நினைவிருக்கும்.

நான் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, எனது தமிழ் ஆசிரியர் திரு பரமேஸ்வரன் அவர்களும், கணித ஆசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களும், வகுப்பு எடுக்கும் போதெல்லாம், சொல்கிற பாடங்களை, நான் அன்றே, அந்த பாடங்களை ஒரு தடவை என்னுடைய நோட் புத்தக்த்தில் அந்த இரவே என் கையால் எழுதி முடித்துவிடுவேன். இந்த பழக்கம், கல்லூரியிலும் நீடித்த்து. தமிழிலும், கணித்த்திலும் பல தடவைகள் ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் வகைகள் பல சமயங்களில், தமிழில் 90 சதவிகிதம் எடுத்திருக்கிறேன். கணிதத்தில் 100 சதவிதம் எடுப்பேன். இதிலிருந்து நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், ஆசிரியர் சொல்வதை புரிந்து அதை பாடமாக எழுதவேண்டும், அது மனதில் என்றென்றும் பதிந்து விடும்.

எந்த படிப்பும் கஷ்டமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையை பள்ளிகளில், வீடுகளில், பள்ளி விடுதிகளில் ஏற்படுத்த வேண்டும். அந்த சூழ்நிலைதான் உங்களை அறிவார்ந்தவர்களாக மாற்றும்.

எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள், அதானல் பெற்ற அறிவை விவாதித்து தெளிவு படுத்தினீர்கள் என்றால் உங்கள் இலட்சியம் நிச்சயம் ஜெயிக்கும்.

தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், உங்களை நீங்கள் பக்குவப் படுத்திக்கொள்வதன் மூலம்.

எனவே நண்பர்களே, உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. எங்கே திருப்பி சொல்லுங்கள் பார்ப்போம். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு.

Conclusion

இத்தருணத்தில், காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காந்திஜியின் 9 வது வயதில் அவரது தாயார். அவருக்கு ஒரு அறிவுரையை தந்தார் அந்த அறிவுரையாவது.

காந்திக்கு சிறு வயதில் அவரது தாயார் கூறிய அறிவுரை

“மகனே, உனது வாழ்வில், துன்பத்தில் துவளும், யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாக பிறந்ததின் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்.

இந்த அறிவுரை, இந்த பூமியில் பிறந்த எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரை.

எனவே, தனலக்ஷிமி மேல் நிலைப் பள்ளியின் சார்பாக நடக்கும் நூற்றாண்டு விழாவிலே உங்கள் அனைவரையும் வாழ்த்தி, மாணவர்கள் மத்தியில் நல்ல கல்வியோடு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு நல்ல மகிழ்ச்சியான குடும்பத்திற்கு வழி வகுத்து, நாட்டில் அறிவார்ந்த சமுதாயம் அமைய பாடுபட வேண்டும், மதங்களுக்குள் மானுடத்தை போற்றி, ஜாதி, சமுதாய வேறுபாடற்ற சம தர்ம சமுதாயம் அமைக்க பாடுவேண்டும்.

May God Bless you.

(Courtesy : www.abdulkalam.com)

=======================================

Also check from our archives:
“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”

=======================================

[END]

12 thoughts on ““ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்!” – கலாம் காட்டும் வழி! ABDUL KALAM B’DAY SPL

  1. உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு.

    1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.
    2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
    3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
    4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.

    இவை அனைத்தும் நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய வைர வரிகள்

    அன்புடன்,
    விஜி

  2. திரு அப்துல்கலாம் அவர்களின் இந்த பிறந்த நாளில் அவரின் ஊக்கமுடைய கருத்துக்களை எங்களுக்கு பதிவாக அளித்தமைக்கு நன்றிகள் ..

  3. அருமையான கட்டுரை. தகவல்களை அருமையாக தொகுத்து உள்ளீர்கள். ஒவ்வொரு இளைஞருக்கும் தேவையான , அடிப்படை கருத்துக்களை ஐயா அவர்கள் அளித்துள்ளார்…..

    \\\\\\\\\\\\\\\\
    எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது.\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
    தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், உங்களை நீங்கள் பக்குவப் படுத்திக்கொள்வதன் மூலம். \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

    மேலே கூறிய படி சில முக்கியமான வரிகளை கூறுவதென்றால் மொத்த கட்டுரையையுமே கொடுக்க வேண்டி வரும்…..
    நம் பேரை சொன்னாலே – பெரியவர்கள் , கலாம் ஐயா போன்றவர்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு , வாழ்க்கையில் நாமும் சிகரம் தொடவேண்டும் என்கிற உத்வேகத்தை , இந்த கட்டுரை மீண்டும் ஒருமுறை அளித்து இருக்கிறது….

    THANK YOU SO MUCH FOR THIS WONDERFUL ARTICLE

    வாழ்த்துக்களுடன்,

    ரிஷி

    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ரிஷி அவர்களே!

      தாங்கள் சொல்வதைப் போல முக்கிய வரிகளை மட்டும் எடுத்து தருவதென்றால் ஒவ்வொரு வரியையும் எடுத்து தரவேண்டியிருக்கும். எனவே தான் வரி விடாமல் படியுங்கள் என்று கூறினேன்.

      – சுந்தர்

  4. சுந்தர், இதுவரை நம் தளத்தின் பதிவுகளில் நான் படித்த மிகச்சிறந்த பதிவு இது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் திரு அப்துல் கலாம் அவர்களின் உரையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. இவர்தான் உண்மையான ஆன்மிகவாதி.

    நிச்சயம் இவர் ஒரு நாள் நம் தளத்தின் விழாவில் கலந்து கொண்டு நமக்கு பெருமை தேடிதருவார். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. எல்லாம் இறைவன் அருள்.

  5. கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் லட்சிய தீயை அனைய விடாமல் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது. மிக அருமையான கட்டுரை. நன்றி.

  6. ‘நாம் அடைந்த லட்சியதைவிட, நாம் அடைய வேண்டிய லட்சிய தூரமே ஊக்கம் ……..தரும்’. வலிமையான வார்த்தைகள். ஊக்கம் தருகின்ற அருமையான பதிவு. நன்றிகள் ஜி.

  7. சுந்தர்ஜி மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. உங்களின் மிக பெரிய லட்சியம் நிறைவேற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மிக்க நன்றி

  8. என் வழிகாட்டிக்கு இந்த எளியவனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..வாழ்நாளில் ஒரு முறை இவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு..

    நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்றிருந்தேன்..அங்கு கலாம் அய்யா அவர்களின் வீட்டைக் காண நேர்ந்தது..அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு இருந்த அந்த வீட்டில் உள் நுழைந்த உடன் இந்தியாவின் உயரிய மனிதர் வாழ்ந்த வீட்டில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வில் கொஞ்சம் பெருமித்தப்பட்டு கொண்டேன்..நாம் வாழ்நாளில் கண்டிப்பாக ஒரு முறையேனும் காண வேண்டிய அறிவுக்கோவில் அது…அங்கு கலாம் ஐயா பயன்படுத்திய உடைகள், ஆயவகக் கருவிகள், விமானி உடை, ராக்கெட்டுகளின் சிறிய வடிவங்கள் என ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய தருணங்கள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன,.ராமேஸ்வரம் செல்பவர்கள் கண்டிப்பாக அய்யாவின் வீட்டுக்குச் செல்லுங்கள்…இந்தியனாய் பெருமிதப்படுங்கள்…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  9. அருமையான பதிவு. வாழ்கையில் ஒவொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய , பின் பற்ற வேண்டிய அருமையான வரிகள். இதை படிக்கும்போதே வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்ற உற்சாகம் தொற்றி கொள்கின்றது.

    நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும் .//////..

    நமது அடுத்த ஆண்டு விழாவில் திரு அப்துல் கலாம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    நன்றி.

  10. அருமையான தொகுப்பு , ஒரு ஒரு வரியும் மிகவும் வலிமையான தன்னம்பிக்கை வரிகள் .

    சுந்தர் ஜி தங்களின் விருப்பம் நிறைவேற வாசகர்களாகிய நாங்களும் விரும்புகிறோம் .
    எல்லோராலும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை recharge அபராம்.
    ============================================================
    \\\\\வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.\\\\\

    உயர்வு உள்ளல்
    ————————————————————————————————————
    வெள்ளத்து அனைய மலர் நீட்டம் -மாந்தர்தம்
    உள்ளத்து அனையது உயர்வு
    – திருக்குறள்

    நீரின் மட்டம் எத்தனை உயரமோ அந்த அளவு உயரமான அதில் பூத்திருக்கும் தாமரைத் தண்டின் உயரம். அது போல மனிதனின் எண்ணங்களின் உயர்வுக்கு ஏற்ப அவனது வாழ்வின் உச்சமும் அமைகிறது.

    ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சில அளவீடை பெற்றிருக்கிறான் . அவனது ஆழ் மனத்தில் அவனைப் பற்றிய சில வரையறைகள் சில அகல உயர நீளங்களை அளவீடாக உருவாக்கி இருக்கிறான். அதுவே அவன் தன்மதிப்பு, அதுவே அவன் தன்நிலை. அந்த அவனது சிகரத்தை தாண்டி அவன் அதற்கு மேலே செல்வதில்லை. வெறும் செல்வ வளம் மட்டமல்ல, சமுதாயத்தில் மனிதனது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல்நலம் யாவும் அந்த தன்மதிப்பை பொறுத்து அமைகிறது.

    போர்க்களத்தில் போரிடும்போது மாவீரன் நெப்போலியன் நெஞ்சில் சில குண்டுகள் பாய்ந்துவிட்டன. அவனின் நெஞ்சை கீறி அதிலுள்ள குண்டுகளை மருத்துவர் அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நெப்போலியன் கூறுகிறான். “ டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக போய் என் இதயத்தை திறந்து பாருங்கள். அங்கே நான் காணும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தை நீங்களும் காணலாம் ” என்றான்.

    அவனது உள்ளத்தின் ஆழத்தில், அவனது ஆழ் மனதில், அவரது லட்சிய கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவனது சிகரம். அந்த கனவால் ஏற்பட்ட உக்கிரமான ஆசை அவனை ஆட்டிப் படைத்தது.

    நமது உடலின் செல்களில் உள்ள டி.என்.ஏ.யில் நம் உடல் அமைப்பைப் பற்றி வரை படம் உள்ளது . அது போல நமது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வரைபடம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பதிவுகளில் மாற்றம் செய்யும்போது அதற்கு ஏற்ப அவரவர் வாழ்வில் கதவுகள் திறந்து கொள்கின்றன.

    -மனோகர்

  11. மிகச் சிறந்த பதிவை மீண்டும் மீண்டும் படித்து திரு கலாமை நம் தளம் சார்பாக நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.

    இந்த பதிவை அனைத்து பள்ளி குழந்தைகளும், சிறுவர்களும், இளைஞர்களும் படிக்க வேண்டிய பொக்கிசமான பதிவு.

    எந்த ஓர் நாளிதழிலும் கூட இவ்வளவு அழகாக நேர்த்தியாக தொகுத்து வழங்காத ஒன்றை தாங்கள் செய்து இருக்கிறீர்கள்/.

    மிகவும் தன்னம்பீகை அளிக்கக் கூடிய நேர்த்தியான பதிவு ….. இது

    lovely ……. article

    தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்….

    வாழ்க ……… வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *