Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > Featured > நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!

நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!

print
வராத்திரியை முன்னிட்டு சற்று வித்தியாசமான, விசேஷ பதிவுகளை தயாரித்து வருகிறோம். நாளை முதல் நவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் இடம்பெறும். இப்போதைக்கு சென்ற ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு நாம் அளித்த பதிவை திரும்ப அளிக்கிறோம். நிச்சயம் உபயோகமாய் இருக்கும். நேற்று மகாளய அமாவாசையையொட்டி நடைபெற்ற கோ-சம்ரோக்ஷனமும் சிறப்பு வழிபாடும் இனிதே நடந்தது. வந்திருந்த நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

வராத்திரி பற்றிய சிறப்பு பதிவு ஒன்றை அளிக்குமாறு நம் வாசகியர் பலர் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். நவராத்திரி துவங்கும் முன்னரே இதை அளித்திருக்கவேண்டியது. உங்களுக்கே தெரியும்…இடைவிடாத பணிகளின் காரணமாக இயலவில்லை. நமக்கு தெரிந்த தகவல்களுடன் செய்திகளை சேகரித்து அவற்றையெல்லாம் ஒரே பதிவில் தொகுத்து தந்திருக்கிறேன்.

காஞ்சி மகா பெரியவர் நவராத்திரி பற்றி கூறிய அருளுரையில் துவங்கி, நவராத்திரியின் தத்துவம், அதன் சிறப்பு, நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதை, கொலுவின் தத்துவம், தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எளிமையான சுலபமாக சொல்லக்கூடிய வழிபாட்டு ஸ்லோகங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய COMPLETE PACKAGE இது. நிச்சயம் உங்களை கவரும்; உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அம்பிகைக்கு உகந்த நவராத்திரி காலம் நாளை முதல் துவங்குகிறது. நவராத்திரிப் பண்டிகை பக்தி, பண்பாடு, கலாசாரம், கலைத்திறன், விருந்தோம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முழுமையான பண்டிகையாகத் திகழ்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அம்பிகையானவள் நவசக்திகளாக இருந்து நம்மைக் காத்து வருகிறாள்.

முதலில், குருவின் அருளுரையில் இருந்து துவங்குவோம்…..

காஞ்சி மகாபெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை இதோ:

உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்விவளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.

தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடவேண்டும். இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம். நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.

கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும் (பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.

கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்ய வேண்டும். கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது. காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள்.

=====================================================

சக்தி வழிபாடு சகலமும் தரும்

“சும்மா தொணதொணங்காதே, சக்தி இருந்தா செய். இல்லாட்டி சிவனேன்னு கிட.” சாதாரணமாக எல்லார் வாக்கிலும் வரக்கூடிய வார்த்தைகள் தான் இவை. சௌந்தர்யலஹரியில் முதல் பாட்டின் கருத்து இது.

எவ்வளவு சொன்னாலும் சக்தியின் பெருமைக்கு முடிவே இருக்காது. அதனால்தான் வியாசர் அதற்குத் தனிப்பெருமை கொடுத்தார். மகாபாரதம் எழுதியவர் வியாசர் தான். ஆனால் அதைச் சொன்னவர் வைசம்பாயனர். இராமாயணம் எழுதியவர் வால்மீகி. ஆனால் அதை வெளிப்படுத்தியவர் லவ-குசன் ஆகிய இருவர்.

Navarathiri-_-நவராத்திரி

நூலை எழுதியவரே, அதைச் சொல்லி வெளிப்படுத்துவது என்பது சாதாரண செயலல்ல. அதைச் செய்தார் வியாசர். அந்தப் பெருமை ஸ்ரீதேவி பாகவதத்திற்குக் கிடைத்தது. அம்பிகையின் மகிமைகளைப் பற்றி, அடுத்தவரைச் சொல்லச் செய்வதைவிட, நாமே சொல்வதுதான் சாலச்சிறந்தது என்றே வியாசர் அவ்வாறு செய்தார்.

ஆனால், வேத வியாசர் முதலான ஆசார்ய புருஷர்கள் எவ்வளவோ பாடுபட்டு நமக்காகச் செய்த ஞான நூல்களை நாம் லட்சியம் செய்வது இல்லை. எல்லாரும் பரபரப்பாக எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒரு விசேஷம், எதைத் தேடுகிறோம் என்பதே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே நாம் தேட வேண்டியது, நமக்காக நம் ஆசார்ய புருஷர்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போன ஞானப் புதையலைத்தான். அவர்கள் புதைத்து வைக்கவில்லை. நம்முடைய அஜாக்கிரதையால் அலட்சியத்தால் அவர்கள் வைத்து விட்டுப்போன ஞானச் சொத்து புதைந்து போய்விட்டது. வாருங்கள் அதிலிருந்து சிறிதளவையாவது தேடி எடுக்க முயற்சிசெய்யலாம். நவராத்திரி வருவதால் அதைப்பற்றிய தகவல்கள் சில இங்கே இடம் பெறுகின்றன.

கடும் வெயில் காலத்தையும் கடும் மழைக் காலத்தையும் யமனுடைய இரண்டு கோரைப்பற்களாக, நமது ஞான நூல்கள் வர்ணிக்கின்றன. ஏனென்றால் அந்தக் காலங்களில் தான் பலவிதமான நோய்கள், நம்மைத்தாக்கி பாதிக்கின்றன. இந்த பாதிப்புகளிலிருந்து நம்மைக் கட்டிக் காப்பாற்றுபவள் அம்பிகை. அதனால்தான் அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையைப் பூஜை செய்கிறோம்.

அண்ட சராசரத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள். அவள் அருளால்தான், எல்லாம் உயிர் வாழ்கின்றன. இதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. பலவிதமான பொம்மைகளை இஷ்டப்படி வைக்காமல், கொலுவை முறையாக வைக்க வேண்டும்.

ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் கொலு வைக்க வேண்டும். ஒன்பது படிகள் என்ற முறையில் கீழிருந்து வரிசையாக, முதல் படியில் ஓரறிவுள்ள செடி, கொடி, மரங்கள் முதலானவற்றை வைக்க வேண்டும். இரண்டாவது படியில் ஈரறிவுள்ள சங்கு, நத்தை, அட்டை முதலான, மெதுவாக ஊரும் உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மூன்றாவது படியில் கறையான், எறும்பு முதலான, சற்று வேகமாக ஊர்ந்து போகும் மூவறிவுள்ள ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்கவேண்டும். நான்காவது படியில் பறவை, வண்டு முதலான நான்கறிவுள்ள உயிரினங்கள். ஐந்தாவது படியில் பசு முதலான ஐந்தறிவுள்ள உயிரினங்கள். ஆறாவது படியில் குறவன்-குறத்தி, செட்டியார், பாம்புப் பிடாரன் முதலான ஆறறிவுள்ள மனிதர்களின் பொம்மைகள். ஏழாவது படியில் ஞானிகள் மகான்களின் வடிவங்கள் எட்டாவது படியில் தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள். ஒன்பதாவது படியில் அதாவது மேல் படியில் பூர்ண கும்பத்துடன் அம்பிகையின் திருவடிவம் மட்டுமே இருக்க வேண்டும். அவள் அருளால்தான் பலப்பல ஜீவராசிகள் உருவாகி, படிப்படியாக உயர்ந்து மேல் நிலையை அடைகின்றன என்பதை உணர்த்தவே இந்தக் கொலு அமைப்பு.

இதே போல, நவராத்திரியின் போது, நவ கன்னிகை பூஜை செய்வது விசேஷம். இதன் முறைகளையும் பலன்களையும் தேவிபாகவதத்தில் வியாசர் விவரிக்கிறார்.

நவராத்திரியின் போது ஒன்பது நாள்களும் முறைப்படி ஒன்பது கன்னிகைகளைப் பூஜை செய்ய வேண்டும்.

முதல் நாள்: இரண்டு வயதுள்ள பெண் குழந்தையைக் ‘குமாரி’ என்ற பெயரில் பூஜை செய்யவேண்டும். (அந்தப் பெண்ணின் பெயர் குமாரி என்று இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.) குமாரியைப் பூஜை செய்வதன் மூலம் தரித்திரம், பகை நீங்கும். ஆயுளும் செல்வமும் வளரும்.

இரண்டாம் நாள்: மூன்று வயதுள்ள பெண்ணை திரிமூர்த்தி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இப்பூஜை அறம், பொருள், இன்பம், தானியம் ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என பரம்பரையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

மூன்றாம் நாள்: நான்கு வயதுள்ள பெண்ணை ‘கல்யாணி’ என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இதன் மூலம் ராஜ்ய சுகம், வித்தை ஆகியவை கிடைக்கும்.

நான்காவது நாள்: ஐந்து வயதுள்ள பெண்ணை ரோகிணி என்ற பெயரில் வழிபடவேண்டும். ரோகங்கள் நாசமாகும்.

ஐந்தாவது நாள்: ஆறு வயதுள்ள பெண்ணை காளிகா என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். பகைவர்கள் அழிந்து போவார்கள்.

ஆறாவது நாள்: ஏழு வயதுள்ள பெண்ணை சண்டிகா என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். சண்டிகா பூஜை ஸர்வ ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.

ஏழாவது நாள்: எட்டு வயதுள்ள பெண்ணை சாம்பவி என்ற பெயரில் வழிபாடு செய்ய வேண்டும். போரில் வெற்றி, ராஜ யோகம் ஆகியவை கிடைக்கும்.

எட்டாவது நாள்: ஒன்பது வயதுள்ள பெண்ணை துர்க்கை என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். கொடூரமான பகைவர்களை அழிக்கும், அரிய செயல்களைச் செய்யும் ஆற்றலைக் கொடுக்கும். முக்தி இன்பத்தை அளிக்கும். அப்படிப்பட்ட வழிபாடு இது.

ஒன்பதாவது நாள்: பத்து வயதுள்ள பெண்ணை சுபத்திரா என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இந்தப் பூஜையால் அடங்காத மனமும் அடங்கும்.

வசதியும் மனமும் கொண்டவர்கள் முதல் நாளன்று ஒரு பெண், இரண்டாம் நாளன்று இரண்டு பெண்கள் என ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குண்டான எண்ணிக்கைப்படி பெண்களை உட்கார வைத்துப் பூஜை செய்யலாம். மிகவும் சக்திவாய்ந்த வழிபாடு இது.

இவ்வாறு சொன்ன வியாசர், ஆங்கிரச முனிவரின் நவராத்திரி பூஜையையும் சொல்கிறார். அது:-

நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதை

காட்டில் இருந்த ஒரு குடிசையில், ஒரு பெண்ணின் மடியில் தலைவைத்து ஒருவர் படுத்துக் கிடந்தார். கடும்நோயாளியான அவரும் அந்தப் பெண்ணும் கிழிசலான ஆடைகளை அணிந்திருந்தார்கள். பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி, அவள் புடைவையை நனைத்தது. அப்போது குடிசை வாயிலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டு, கணவர் தலையை மெதுவாக கீழே வைத்து விட்டு அந்தப் பெண் வாசலுக்குப் போனாள் அங்கே…

ஆங்கிரஸ முனிவர் நின்றுகொண்டிருந்தார். வந்த பெண் அவரை வணங்கி எழுந்தாள். ஆங்கிரஸர் அவளுக்கு ஆசிகூற “அம்மா! யார் நீ? உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல் தெரிகிறது. அப்படி இருந்தால், ஏன் இந்தக் காட்டில் வந்து இருக்கிறாய்? உண்மையைச் சொல்.” எனக்கேட்டார்.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பெண் பதில் சொல்லத் தொடங்கினாள். “உத்தம ரிஷியே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் அரசியாக இருந்தவள். என் கணவர் உள்ளே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். தாயாதிகள் பொறாமை காரணமாகப் போரிட்டு, எங்களை இங்கே விரட்டிவிட்டார்கள். எங்களுக்குப் பழையபடியே ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும். நல்ல பிள்ளையும் பிறக்க வேண்டும். இதற்கு வழிகாட்டுங்கள்.” என வேண்டினாள்.

அவளின் சோகக் கதையைக் கேட்டு, ஆங்கிரஸ முனிவரே கண்ணீர் சிந்தினார். “அம்மா! அரசியே! கவலைப்படாதே. எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு. வழியும் உண்டு. பக்கத்தில் தான் பஞ்சவடி இருக்கிறது. அங்குபோய் அங்கே எழுந்தருளியிருக்கும் அம்பிகையைப் பூஜைசெய். உனக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும். புத்திரனும் பிறப்பான்.” என்றார்.

அவர் வார்த்தைகளை அப்படியே ஏற்ற அரசி,கணவருடன் பஞ்சவடியை அடைந்தாள். ஆங்கிரஸ முனிவர் தானே முன்னின்று அவர்களுக்கு நவராத்திரி பூஜையைச் செய்து வைத்தார். முறைப்படி பூஜையைச் செய்த அரசியையும் அரசனையும் அழைத்துக் கொண்டு திரும்பிய ஆங்கிரஸர், அவர்களைத் தன் ஆசிரமத்திலேயே தங்க வைத்தார். அரசர் நோயிலிருந்து மீண்டார். அம்பிகையின் அருளால், அரச தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, சூரியப் பிரதாபன் எனப்பெயர் வைத்தார்கள்.

அந்தக் குழந்தைக்கு ஆங்கிரஸ முனிவரே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். முனிவர் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் முழுமூச்சுடன் கற்றுத் தேர்ச்சி பெற்ற சூரியப் பிரதாபன் இளைமையின் வாசலைத் தொட்டான்.

பிறகென்ன? வாலிபன் ஆன பிறகு பெற்றோரின் வாட்டத்தைத் தீர்க்க முயல வேண்டாமா? சூரியப் பிரதாபன் ஆங்கிரஸ முனிவரை வணங்கி, அன்னை-தந்தையின் அனுமதி பெற்று, பகைவர்கள் மீது உரிமைப்போர் தொடுத்தான்.

பகைவர்கள் தோற்று ஓடினார்கள். சூரியப்பிரதாபன் ஆசிரமம் திரும்பி ஆங்கிரஸ முனிவரை வணங்கி நடந்ததை விவரித்து மகிழ்ந்தான். பெற்றோருடன் நாடு திரும்பி அரியணை ஏறினான்.

துயரப் புயலிலேயே சிக்கித் தவித்த அரசியும் அரசனும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். வேண்டுதல் நிறைவேறி விட்டதே என்பதற்காக அரசியும் அரசனும் தாங்கள் செய்து வந்த நவராத்திரி பூஜையை நிறுத்தவில்லை. தொடர்ந்து செய்து, அம்பிகையின் திருவடிகளிலே ஐக்கியமானார்கள். நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி நம்மையும் காக்க வேண்டுவோம்.

=====================================================

நவராத்திரி தோன்றிய கதை

ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.

துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.

=====================================================

கொலு அமைக்கும் முறையும் நன்மையும்

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோ ரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு.

என் தங்கை வீட்டு கொலு!

அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகு படுத்தலாம். கடந்த வருடம் வாங்கிய பொம்மைகள் இதற்கு பயன்படுத்தலாம். மேலும் புதிய பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒரு புது பொம்மையை வாங்கி வைப்பார்கள். வீட்டில் வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும்.

ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே அமைப்பார்கள். கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள். விவசாயத்தின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம். எனவே சிலர் வயல் வெளிகள் போன்ற பொம்மைகள் அமைத்து விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவார்கள்.

கொலு வைப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளை இன்றே செய்ய வேண்டும். குறிப்பாக கொலு வைக்கும் அறையை வெள்ளை அடித்து தூய்மையாக்க வேண்டும். நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும். அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின் இரவில் கொலு வைக்கலாம்.

கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு. நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.

வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது. கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர்கள் அதையும் கொண்டாட வேண்டும்.

அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும். விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம். வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும்.

குறிப்பாக செல்வம், அறிவு, தைரியம் போன்றவை வந்து சேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.

=====================================================


இங்கே மேலே நீங்கள் பார்க்கும் புகைப்படம், சென்னை குமணன்சாவடியை அடுத்து மாங்காடு செல்லும் சாலையில் உள்ள மேட்டு தெருவில் உள்ள கண்ணபிரான் கோவிலில் எடுத்தது. இந்த கோவிலின் குருக்கள் பூவிருந்தவல்லி வைத்தியநாதசுவாமி கோவிலில் குருக்களாக இருந்தவர். இந்த கோவிலுக்கு நாம் சென்ற கதை மிக மிக சுவாரஸ்யமானது. தற்போது நாம் அடிக்கடி செல்லும் ஆலயங்களில் ஒன்றாகிவிட்டது. அனைத்து தெய்வங்களின் சன்னதியும் அடங்கிய அற்புதமான ஆலயம் இது. இந்த கோவில் பற்றிய பதிவை நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிவருகிறேன். முடிந்த பாடில்லை. இந்த வார இறுதியில் அது பற்றிய பதிவை அளிக்கிறேன்.
தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் எளிமையான நவராத்திரி ஸ்லோகங்கள்

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ?ம்யை நம
ஓம் வரலெக்ஷ?ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

சரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம

தமிழில்

அம்பாள்

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

லட்சுமி

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!
சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!
பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே!
தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்

சரஸ்வதி

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

[நன்றி : – Dinamalar.com | பி.என். பரசுராமன், அம்மன் தரிசனம் | Maalaimalar.com | Dinakaran.com]

21 thoughts on “நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!

  1. முப்பெரும்தேவியரே போற்றி போற்றி..சரணம்.

  2. நவராத்திரி மகிமை பற்றி அளிக்கப்பட்டுள்ள பதிவு மிகவும் அருமை. இதில் இடம் பெற்ற்றுள்ள துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி ஓவியம் வெகு தத்ரூபம். கொலு எப்படி வைக்கவேண்டும் அதன் தாத்பர்யம் என்ன போன்ற தகவல்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டும். மற்றுமோர் பயனுள்ள பதிவிற்கு நன்றி சுந்தர்.

  3. மேற்கூறிய பதிவு மிக அருமை. பயனுள்ள கருத்துக்கள். சுந்தர்ஜிக்கு மிக்க நன்றி.

  4. நன்றி , சுந்தர்ஜி, அருமையான தகவல்கள். சுவாரசியமான கதைகள்

    தெரியாத கதைகள் தெரிந்துகொண்டோம். இதுமாதிரி நிறைய தெரியபடுத்துங்கள்.

  5. சுந்தர்ஜி
    நவராத்திரி பற்றி ஸ்ரீ காஞ்சி பெரியவர் அவர்களின் அருளுரை மிக அருமை. கொலு பற்றிய உபயோகமான தகவல்களுக்கும் ச்லோகங்களுக்கும் நன்றி .

  6. மிகவும் பயனுள்ள கட்டுரை. ஓவ்வொரு வரியாக படிக்க படிக்க நவராத்திரி பூஜை செய்ய மிகவும் ஆவலாய் உள்ளது. நன்றி .

  7. நவராத்திரி பற்றி அளிக்கப்பட்டுள்ள பதிவு அருமை.
    நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டோம்.
    மகா பெரியவா சொன்ன கருத்துகளும், தங்களின் துதி மற்றும் பாடல்களும் அருமை. தெளிவாக இருக்கிறது.
    முப்பெரும் தேவியர் படமும் கொலு மண்டபமும் மகாலட்சுமி படங்களும் நன்றாக உள்ளது.
    மிகவும் நன்றி சார்.

  8. வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
    தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
    துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
    கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

  9. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    . பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
    பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

    மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

    ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
    த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

    த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
    மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

  10. ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, அங்குச பாசங்குசமும் கருப்பும் அங்கையிற் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

    பயிரவி, பஞ்சமி, பாசாங் குசைபஞ்ச பாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி, காளி, ஒளிரும்கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.

  11. சுந்தர்ஜி,

    எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது. மிக்க நன்றி. படங்கள் மிகவும் அருமை. லேட்டாக பதிவு வந்தாலும் மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது.
    அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் அம்பாளை வழிபட்டு பயன் பெறுவோம்.

  12. உங்களுடைய நவராத்திரி பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ….
    மிகவும் நன்றி ……

  13. Excellent article. Eventhough this is a last year article, it will be useful to everybody.

    //எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு. வழியும் உண்டு. //

    Today i have faced some problems in my office. from morning itself , i was worried and did not take lunch. Now after seeing the above lines, i feel happy.

    All the slogas are very good and fabulous. My sincere wishes to everyone for Navaratri. May Mahaperiyava bless us all.

    When i entered into right mantra lastyear, i put my first comment to this article. I am an ardent reader of right mantra since day one. Thank god for showing me such a wonderful site.

    All the photos are superb
    Regards
    Uma –

  14. நவராத்திரி நாயகியரின் படங்கள் அற்புதம், தங்கள் வீட்டு கொலுவின் அலங்காரம் நன்றாக உள்ளது. எங்களது வீட்டில் கொலு வைப்பது பழக்கமில்லாத காரணத்தால் நாங்கள் கொலு வைப்பதில்லை. ஆயுத பூஜை மட்டும் சிறப்பாக செய்வோம், அன்னையரை துதிக்கும் பாடல்களை அளித்தமைக்கு நன்றிகள்.

  15. வணக்கம்…………

    நவராத்திரி பற்றிய சிறப்பான பகிர்வு………..நிச்சயம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்………….எளிமையான துதிகள்…………….நன்றிகள் பல………..

  16. நவராத்திரி முதல் நாள் சிறப்பு பதிவு அருமை.
    பூஜை தோன்றிய கதையும், பூஜையின் சிறப்பும் முனிவரின் கதையும் நன்றாக உள்ளது.
    முப்பெரும்தேவியர் படம் அழகாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *