பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா!
அக்டோபர் 7, திங்கட்கிழமை என் வாழ்வில் மறக்க முடியாத மற்றுமொரு நாளாகிவிட்டது. திங்கட்கிழமைக்கே உரிய போக்குவரத்து நெரிசலில் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அலுவலகம் சென்றபோது அரை மணிநேரம் தாமதமாகிவிட்டது. எங்கள் அலுவலகம் எதிரே உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது நரிக்குறவர்கள் இருவர் ஏறி நின்று கவண்கல்லை (உண்டிகோல்) வைத்து எதையோ அடித்துக்கொண்டிருந்தனர். எதிரே உள்ள வீட்டில் மாமரம் உண்டு. சரி ஏதோ மாங்காய் தான் அடிக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டு பைக்கை ஆபீஸ் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய எத்தனிக்கையில் அவர்களில் ஒருவர் கீழே விழுந்த எதையோ எடுத்ததை பார்த்தேன்.
என்ன அது ? சற்று உற்றுப் பார்க்கும்போது தான் புரிந்தது. அணிற்குஞ்சு.
எனக்கு புரிந்துவிட்டது. நரிக்குறவர்கள் அணில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் எங்கே வந்து? குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து… தைரியமாக ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி நின்றுகொண்டு… எனக்கு வந்தது பாருங்கள் ஆத்திரம். உடனே அவர்களை நோக்கி சென்றேன்.
“என்ன அது கையில? என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க இங்கே வந்து??”
என் குரலை அவர்கள் சட்டை செய்யவில்லை.
எப்படியாவது அந்த அணிலை காப்பாற்ற துடித்தேன். “அந்த அணிலை என்கிட்டே கொடுத்துடுங்க… பணம் வேணும்னா வாங்கிக்கோங்க….” என் சட்டைப் பையில் கையை விட்டேன். என் குரலை அவர்கள் பொருட்படுத்தாது அவர்கள் பாட்டுக்கு வேகமாக நடந்தார்கள்.
கைகளில் இருந்த சாக்கு மூட்டையை பார்க்கும்போது மனம் ஒரு கணம் பதறியது. அடப்பாவிகளா? எத்தனை அணிலை இந்த மாதிரி அடிச்சி எடுத்துகிட்டு போறீங்க…? என்ன ஆனாலும் சரி… இவர்களை விடக்கூடாது என்று முடிவு செய்து துரத்த ஆரம்பித்தேன்.
“ஏய்… நில்லுங்க முதல்லே…” என் கோபாவேசமான குரலை கேட்டு அவர்கள் ஓட ஆரம்பிக்க…. நானும் துரத்த… வழியில் நின்றிருந்தவர்களை “அவங்களை பிடிங்க சார்… அவங்களை பிடிங்க” என்று கத்தியபடி ஓட… அங்கிருந்த சிலர் ஓடிச் சென்று அவர்களில் ஒருவனை பிடித்துவிட்டார்கள். கைகளில் சாக்குப்பை வைத்திருந்த மற்றொருவன் எவர் பிடிக்கும் சிக்காமல் தப்பி ஓட…. அந்நேரம் பார்த்து ஆபத்பாந்தவனாய் ஒரு போலீஸ்காரர் பைக்கில் வந்தார்.
“சார்… சார்… அவனை பிடிங்க…” என்று கத்தினேன். உடனே அவனை துரத்திய அந்த போலீஸ்காரர் அவன் சட்டையை கொத்தாய் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.
எனக்கு இவர்களை துரத்திக்கொண்டு ஓடியதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
இந்தே களேபரத்தை கண்டு ஒரே கூட்டம் கூடிவிட்டது.
“ஒவ்வொரு வீட்டு காம்பவுண்ட் சுவரா ஏறி ஏறி உண்டிகோலை வெச்சி எதையோ அடிச்சி அடிச்சி கோணிப் பைக்குள்ளே போட்டுக்கிட்டு வர்றாங்க… இது குடியிருப்பு பகுதி… நான் என்னன்னு விசாரிக்க கூப்பிட்டா பதில் சொல்லாம ஓடுறாங்க…” என்று கூடிய கூட்டத்திடம் விளக்கம் கொடுத்தேன்.
அதில் ஒருவர் சென்று அந்த கோணிப்பையை பறித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க… நான்கைந்து அணிற்பிள்ளைகள் குற்றுயிரும் குலையுயிருமாய் காயப்பட்டு துடித்துக்கொண்டிருந்தன.
ஐயோ…சர்வேஸ்வரா… என்ன இது கொடுமை? அந்த காட்சியை கண்டு பதறிப்போனேன்.
அணிற்பிள்ளைகள் விளையாடுவதை நாளெல்லாம் கூட பார்த்து ரசித்து கொண்டிருக்கலாமே… அவற்றை இப்படி அடித்துபோட எப்படி இந்த பாதகர்களுக்கு மனம் வந்தது? என் கோபம் அவர்களை நோக்கி திரும்பியது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க சாக்குபையை வைத்துக்கொண்டிருந்தவனை நையப்புடைத்துவிட்டேன். எனக்கு இப்படி ஒரு கோபம் வந்ததேயில்லை.
“நான் அவ்ளோ தூரம் கூப்பிடுறேன்… கெஞ்சுறேன்… கொஞ்சமாவது சட்டை பண்ணியா நீ என்னை? போலீஸ் ஸ்டேஷனுக்கு போ…அங்கே லாடம் கட்டுவாங்க… அப்போ தெரியும்டா வலின்னா என்னனு உனக்கு” என்று கூறி மீண்டும் ஒரு அடி கொடுக்க …. அப்போதும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை.
(இந்த நிகழ்வை பொறுத்தவரை யார் இதை செய்தது என்று பார்க்கத் தேவையில்லை. அவர்கள் செய்தது என்ன என்றே பார்க்கவேண்டும்.)
அவர்கள் மீது புகார் பதிய காவல் நிலையம் கூட செல்ல தயாராய் இருந்தேன். ஆனால் போலீஸ்காரர் “நான் பார்த்துக்குறேன் சார் இவங்களை” என்று கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு தன் மொபைலில் இருந்து ஃபோன் செய்தார். அந்த பகுதி அரசு உயரதிகாரிகள், பெரும் பணக்கார்கள் வசிக்கும் HI-SECURITY ஏரியா என்பதால் போலீஸ்காரர் இதை சற்று சீரியசாகவே டீல் செய்தார்.
கூடிய கூட்டத்திடம் “சார்… இங்கே பக்கத்துல வெட்ரினரி டாக்டர் யாராச்சும் இருக்காங்களா?” என்று விசாரிக்க, ஒருவருக்கும் தெரியவில்லை.
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் அணில் குட்டிகளின் உயிருக்கு ஆபத்து.
அந்த சாக்குமூட்டையை கைகளில் பாதுகாப்பாக ஏந்திக்கொண்டு அலுவலகம் சென்றேன். நான் மூச்சு வாங்க வேகமாக வருவதை அலுவலகத்தில் மேனேஜர் பார்க்க… அவரிடம் நடந்ததை விவரித்து, “இப்போ உடனடியா இந்த அணிற்பிள்ளைகளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாகணும்… நான் பக்கத்துல ஏதாவது வெட்ரினரி கிளினிக் போய்ட்டு வந்துடுறேன்… நீங்க பார்த்துக்கோங்க”…. அவருடைய பதிலுக்கோ ஒப்புதலுக்கோ காத்திருக்காமல் நான் பாட்டுக்கு அவசர அவசரமாக ஜஸ்ட் டயலுக்கு (JUST DIAL) ஃபோன் செய்து அந்த பகுதியில் உள்ள வெட்ரினரி கிளினிக்குகள் நம்பரை கேட்க்க… அவர்கள் உடனடியாக சில கிளினிக்குகளின் முகவரியை தொலைபேசி எண்ணுடன் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.
எங்கள் பகுதியின் அருகில் இருந்த கிளினிக்கில் முதலில் பேசினேன்.
என்ன ஏது என்று விசாரித்தவர்கள்…. அணில்குட்டிகளுக்கு ட்ரீட்மென்ட் என்றவுடன்… “நீங்க உடனடியா வேப்பேரி போங்க” என்றனர். (வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைதான் இது போன்ற சிறிய விலங்குகளுக்கு பெஸ்ட்டாம்.)
அடுத்து வேறு ஒரு க்ளினிக்கின் லேடி டாக்டரிடம் பேசினேன். அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டார்கள். “சார்… நான் இப்போ ஒரு செமினார்ல இருக்கேன். சாயந்திரம் 6 மணியாகும் வர்றதுக்கு. நீங்க உடனே பக்கத்துல சைதாப்பேட்டையில் இருக்குற வெட்ரினரி ஹாஸ்பிடலுக்கு போங்க…. அவங்க பர்ஸ்ட் எய்ட் கொடுத்து உடனே அதுகளை காப்பாத்த முயற்சி பண்ணுவாங்க…” என்றார்.
அவரிடம் மருத்துவமனையின் சரியான லொக்கேஷனை கேட்டு தெரிந்துகொண்டேன். அண்ணாசாலையில மெயின் ரோட்டிலேயே இருக்கிறது ஹாஸ்பிடல் என்று தெரிந்துகொண்டேன். உடனே பைக்கை ஸ்டார்ட் செய்து, சைதை நோக்கி விரைந்தேன். பத்தே நிமிடத்தில் வெட்ரினரி ஹாஸ்பிடலை அடைந்தேன். கைகளில் வைத்திருந்த கோணிப்பையுடன் உள்ளே ஓடினேன்.
தலைமை மருத்துவரின் அறையில் ஒரு லேடி டாக்டர் பணியில் இருந்தார். ஏதோ ஒரு செல்லப் பிராணிக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார்.
அணிற்பிள்ளைகள் வேட்டையாடப்பட்ட விஷயத்தையும் அவைகளை மீட்டு கொண்டு வந்துள்ள விஷயத்தையும் கூறி உடனே முதலுதவி வேண்டும் என்றேன்.
“அங்கே டேபிள் மேல வைங்க… இதோ வர்றேன்” என்றார்.
டேபிளில் கோணிப்பையை வைத்து… உள்ளுக்குள் பிரார்த்தித்தபடி கோணியை கவிழ்க்க நான்கு அணிற்பிள்ளைகள் பொத் பொத்தென்று விழுந்தன.
உச்சு கொட்டியபடியே அந்த பெண் மருத்துவர்… ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்து… “சாரி… சார்… ஒன்னு கூட உயிரோட இல்லை…” என்றார்.
துடித்துப் போய்விட்டேன். ஐயோ… இதற்காகவா… இறைவா இப்படி ஓடிவந்தேன்… எந்த விலங்கிற்கும் இல்லாத பெயர் அணிலுக்கு தானே உண்டு…. அணிற்பிள்ளை என்று. இந்த குழந்தைகளை காப்பாற்றியிருக்க கூடாதா…. கண்கள் கசிந்தன. ஒவ்வொன்றும் அத்தனை அழகு. (ஒரு வேளை அவை காப்பாற்றப்பட்டிருந்தால் அவைகளை நிச்சயம் ஃபோட்டோ எடுத்து உங்களுக்கு காண்பித்திருப்பேன்.)
இந்த அணிற்பிள்ளைகளில் தாய் அணில் ஏதேனும் இருந்தால் மரத்திலுள்ள அதன் குட்டிகள் தங்கள் தாயை காணாது தவிக்குமே… கனத்த இதயத்துடன் மீண்டும் அவைகளை கோணியில் போட்டுகொண்டு அலுவலகம் திரும்பினேன். நடுவே சிக்னலில் நின்றபோது என் வண்டியின் முன்னே நான் சுருட்டி வைத்திருந்த கோணியையும் என்னையும் சிலர் ஏற இறங்க பார்த்தனர்.
எங்கள் அலுவலகத்திலேயே முன்புறம் மரத்தின் கீழே ஒரு சிறிய பள்ளம் தோண்டி அவற்றை அடக்கம் செய்துவிடுவதாக மானேஜரிடம் சொன்னேன்.
“எதுக்கு…இங்கேல்லாம் அதை செஞ்சுகிட்டு ? பக்கத்துல காலி கிரவுண்டு இருக்கே… அங்கே போய் போட்டுட்டு வந்துடுங்க…” என்றார்.
உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது…. ஒன்றும் பேசாமல் கைகளில் கோணிப்பையை எடுத்துக்கொண்டு அந்த காலி மைதானத்திற்கு சென்று கையில் கிடைத்த சிமென்ட் ஓடு ஒன்றை வைத்து சிறிய பள்ளம் தோண்டி அந்த அணிற்பிள்ளைகளை எனக்கு தெரிந்த சில ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லடக்கம் செய்தேன்.
அலுவலகம் வந்த பின்னரும் வேலை ஓடவில்லை. சகஜ நிலைக்கு வருவதற்கு சற்று நேரம் பிடித்தது. அணிற்பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போனது குறித்து வருத்தம் இருந்து கொண்டிருந்தது. இருப்பினும் இறைவன் ஏன் இன்று நம்மை இந்த செயலில் ஈடுபடுத்தினான்? யோசித்தேன்.
சற்று நேரம் கழித்து தான் புரிந்துகொண்டேன்.
பரவாயில்லை… நரிக்குறவர்கள் நம்ம கண்ணுல மட்டும் படாம இருந்திருந்தா எத்தனை அணிற்பிள்ளைகளை சாகடித்திருப்பார்களோ…? அந்த மட்டும் பல அணிற்பிள்ளைகளின் உயிர்களை இன்று அவர்கள் கவண் கல் தாக்குதலில் இருந்து காப்பாற்றியிருக்கிறோம் என்று மனம் சமாதானம் சொன்னது.
========================================================
கொசுறு தகவல் : சுற்றுச் சூழலை பாதுகாப்பதில், பசுமையை பெருகச் செய்வதில் அணில் இனத்தின் பங்கு அபாரமானது. அணில்கள் இருக்கும் இடத்தில் பசுமை என்றும் செழித்திருக்கும். மனிதனுக்கு அணில் இனம் மூலம் எந்த நோய்த் தொற்றும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.peta.org/issues/wildlife/squirrels.aspx
========================================================
அடுத்து நான் செய்யப்போகும் உடனடி காரியம் என்ன தெரியுமா? … ப்ளூ கிராஸில் உறுப்பினராவது தான். ஏனெனில் இது போன்ற கொடுமைகளை காணும்போது அவற்றுக்கு எதிராக போராட, நடவடிக்கை எடுக்க, சட்ட ரீதியான பலம் நமக்கு கிடைத்துவிடும்.
இதை ஏன் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் தெரியுமா?
இது போன்ற ஜீவ ஹிம்சைகளை நீங்கள் காண நேர்ந்தால் நமக்கென்ன என்று விட்டுவிடாது அதை தடுக்க இயன்றவரை போராடவேண்டும் என்பதற்காகத் தான். இதுவும் ஒரு வகையில் இறை வழிபாடு தான்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. (குறள் 244)
========================================================
இந்த பதிவில் அளிக்க வேண்டி பொருத்தமான பாரதி பாடல் ஒன்றை இணையத்தில் தேடியபோது பாரதி இது போன்ற சந்தர்ப்பத்தில் செய்த ஒரு செயலை பற்றி படித்தேன்.
பாரதியின் தீவிர அடிப்பொடி அடியேன் என்பதாலோ என்னவோ, அவருக்கிருந்த அதே ஜீவகாருண்யம் நம் மனதிலும் புகுந்துவிட்டது போல…
http://sugarsenthil.wordpress.com என்ற தளத்தில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள்…
////எங்கள் ஊரில் பாரதி தங்கி இருந்தபோது பெரும்புயல் ஒன்று அநேகமாக 1916ம் ஆண்டு வீசியது. இது தொடர்பாக அவரது கவிதைகள்- வசனங்கள் உங்களுக்கு நினைவு வர வேண்டும். இது பற்றி ஒரு கதை வழங்குகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இது நடந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.பேசியும் எழுதியும் வருகிறேன்.
சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு சூரியனை மக்கள் பார்த்தார்கள். பெரும் சேதம். காடெல்லாம் விறகாச்சு. அரவிந்தர், மண்டயம் ஆச்சாரியார், வ.ரா. எல்லோரும் அரிசி, பருப்பு தண்டி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டு சென்றார்கள். பாரதியும் ஐயரும் (வ.வெ.சு. ஐயர்) ஒரு பெரிய கூடையை எடுத்துக்கொண்டு தெருவில் விழுந்து கிடக்கும் செத்த பறவைகளைத் திரட்டி எடுத்துச் சென்று மனிதர்களை அடக்கம் செய்வது போல அடக்கம் செய்தார்கள்.
பாரதி இப்படிச் செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். காக்கை குருவி எங்கள் சாதி என்றது அவரல்லவோ? அது வெறும் கவிதை வரி அல்லவே. அதுதானே பாரதியின் வாழ்க்கை நெறி.////
========================================================
[END]
இன்று ஒரு நல்ல காரியம் செய்தீர்கள்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை ….இருந்தல்லும் அணிற்பிள்ளை இறந்தது மனம் வரதமாக உள்ளது …..எல்லாம் அவன் செயல்.
சுந்தர்ஜி
மனிதன் எவற்றை எல்லாம் கொன்று சாப்பிடுவது என்ற வரைமுறை இல்லாத இக்காலத்திலும் ஆரூயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்று நீங்கள் நிருபித்து விட்டிர்கள். ஆனால் மற்றவர்க்கு இது சாதரணமாகவோ அல்லது கேலிக்குரிய விஷயமாகவோதான் தெரியும். நம்மோடே ஒருத்தர் வாழ்ந்து நம் கண்முன்னே அவரின் மரணத்தை பார்த்தவர்களுக்குத்தான் மற்ற உயிர்களின் வலி என்ன ? பிரிவுத்துயர் என்ன ? எனத் தெரியும்.
அணில்பிள்ளைகளை காப்பாற்றமுடியாதது வருத்தம் என்றாலும் எல்லோர்க்கும் ஒரு பாடம் இந்த பதிவு. நம் சக்திக்கு மீறி நடப்பதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் நன்மைக்கே!
வாடிய பயிரை கண்ட போதெல்லம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் தான் ஞாபகம் வந்தார்! வாழ்த்துக்கள் !
IRRESPECTIVE OF YOUR WORK PRESSURE – U HAD THE MIND TO SAVE SQUIRREL.
குட்
suma
மனதிற்குள் அழுது கொண்டு ,மனதையும் தேற்றிக்கொண்டு ,தாங்களே ஆறுதலும் தேறிக்கொண்டு அப்பப்பா ?எவ்வளவு போராட்டத்திற்கு பிறகு இந்த பதிவினை அளித்தது புரிகிறது.நேற்று காலை முதல் தங்கள் குரலில் இருந்த தாக்கம் தெரிகிறது.
இதை ஏன் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் தெரியுமா?
\\\ இது போன்ற ஜீவ ஹிம்சைகளை நீங்கள் காண நேர்ந்தால் நமக்கென்ன என்று விட்டுவிடாது அதை தடுக்க இயன்றவரை போராடவேண்டும் என்பதற்காகத் தான். இதுவும் ஒரு வகையில் இறை வழிபாடு தான்.\\\
\\\ உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்\\\.
\\பரவாயில்லை… நரிக்குறவர்கள் நம்ம கண்ணுல மட்டும் படாம இருந்திருந்தா எத்தனை அணிற்பிள்ளைகளை சாகடித்திருப்பார்களோ…?\\
எல்லாம் அவன் செயல் .
-மனோகர்
நல்ல காரியம் செய்தீர்கள் சுந்தர். அணில் பிள்ளைகளை நினைக்கும்போது மனது மிகவும் கனக்கிறது. குழந்தைகளை பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷம் அணில் பிள்ளைகளை பார்க்கும்போதும் கிடைக்கும். அணில் உட்கார்ந்து சாப்பிடும் அழகே அழகு. அப்படிப்பட்ட குழந்தைகளை கொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனது வருகிறதோ. என்ன செய்வது, எத்தனையோ இயற்க்கை கோளாறுகளில் இதுவும் ஒன்று போலிருக்கிறது. ப்ளூ கிராஸ் உறுப்பினராகும் உங்கள் முயற்சி மிகவும் சரியானது. உங்கள் சமூக உணர்வுக்கு ஒரு சலாம்.
சாதாரண அணில் பில்லைக்கே இப்படி போராடிய உங்கள் குணம் பாராட்டத்தக்கது ……ஆனால் இன்று மனித இனங்கள் எவ்வளவோ நடு ரோட்டில் படுகொலை செய்யப்பட்டு கேட்க நாதியற்று உயிருக்கு போராடி கிடக்கிறது அவற்றை எல்லாம் கண்டும் காணாது செல்வோர் எவ்ளோபேர்???ஏன் இப்படி போகிறார்கள் தெரியுமா? பின்னால் கோர்ட்டு… கேசு…சாட்சி ..என அலையவேண்டுமே? ..அதுமட்டுமல்ல தவறு செய்தவனை விட்டு விட்டு உதவி செய்தவனை தொந்தரவு செய்யும் நமது காவல்துறை…சட்டம் ..
எங்கே போகுது நம் நாடு ….சர்வேஸ்வரா????????????
சினிமா நடிகர்களை மேடைஜெற்றி அழகு பார்க்கும் தமிழக அரசு நரி குறவர்களுக்கு என்ன செய்தது?
இதை ஒரு பணக்கார பைஜன்கள் செய்தால் உங்களால் என்ன செயச முடியும்.
அணிலுக்கு உதவிய நீங்கள் அந்த சிறுவர்களுக்கு ஒரு உணவு பொட்டலம் கொடுதிருக்கலாம்.
என் அன்பான வேண்டுகோள் தயவு செய்து ஏழை குழந்தைகளை நோகடிக்க வேண்டாம்.
உன்ன ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.
அன்பு நண்பரே தங்கள் கருத்தை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
தமிழக அரசு நரிக்குறவர்களின் மேம்பாட்டுக்கு என்ன செய்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் சைதையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் குறிப்பாக நூற்றுக்கும் மேல் நரிக்குறவ மாணவர்கள் பயிலும் திருவள்ளுவர் குருகுலத்தில் இதுவரை நம் தளம் சார்பாக இந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை வடை பாயசத்துடன் அன்னதானம் செய்துவிட்டோம். அது குறித்த பதிவுகளையும் அவ்வப்போது அளித்துவந்துள்ளோம். எம் வாசகர்களும் அதை அறிவார்கள்.
http://rightmantra.com/?p=6024
இந்த அணில் வேட்டை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது? எதை வைத்து அந்த முடிவுக்கு வந்தீர்கள்? அதில் ஒருவனுக்கு வயது இருபதுக்கு மேலும் மற்றவனுக்கு வயது எப்படியும் முப்பத்தைந்துக்கும் மேலும் இருக்கும்.
சென்ற வாரம் செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற இந்த தளத்தின் ஆண்டுவிழா அன்று கூட அங்கு அக்குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. (அது குறித்த புகைப்படம் நம் பேஸ்புக்கில் பகிரப்பட்டது!)
அவ்வளவு ஏன், ஆடிபெருக்கு அன்றும், விநாயக சதுர்த்தி அன்றும் கூட நரிக்குறவ இனத்து குழந்தைகள் படிக்கும் அங்கு நம் தளம் சார்பாக நண்பர்களுடன் சென்று அன்னதானம் செய்தோம்.
ஏன்… வரும் ஞாயிறு அன்று கூட காலை அங்கு அன்னதானம் நடைபெறவிருக்கிறது. தெரியுமா?
தளத்தை முழுமையாக படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை எதுவாகிலும் வைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இதே பணக்கார வீட்டு குழந்தைகள் இந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும் இதையே செய்திருப்பேன். சொல்லப்போனால் இதை விட கடுமையாக எனது செயல் அமைந்திருக்கும்.
– சுந்தர்
நமது தமிழக அரசு அவர்களுக்கு வீடு கொடுத்து, அவர்கள் செய்யும் தொழிலுக்கு உதவியும் அளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் பஸ்டாண்டில் அவர்கள் வாழ்கை நடத்தி வந்தார்கள். இப்போது அவர்களை தாங்கள் அங்கு பார்க்க இயலாது.
இன்று காலை தினமலரில் கூட ஒரு செய்தி ,திருவான்மியூரில் பூனைகளை கறிக்காக வேட்டையாடி வைத்து உள்ளார்கள் என்று சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்களை பிடித்து கொடுத்து உள்ளார்கள்
உண்மையில் நரிகுறவர்கள் தங்கள் நிலையை மாற்ற வேண்டும் என்று நினைப்பது 10 சதவீதம் தான் ,மீதி இருப்பவர்கள் இப்படி தான் இருகிறார்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மாற மனம் வருவதில்லை ,இது நான் நேற்று திருவள்ளுவர் பள்ளிக்கூடம் சென்றேன் அங்கே கண்கூட பார்த்தது
நன்றி அய்யா
கலியுகத்தில் நாம் பண்ணும் ஹோமம் பிரார்த்தனை இவைகளுக்கு
பலன் குறைவு நம் முயற்சிக்கு தான் பலன் தங்கள் முயற்சி தான்
பாராட் டுக்கு குரியது
சின்ன குழந்தைகள்மீதோ,ஏழைகள் மீதோ கனிவு காட்டுவது சரிதான். என்றாலும், அணில் பிள்ளைகள் போன்ற சிறுசிறு உயிர்களிடத்தும் கனிவு காட்டாதவர்கள் மீது நாமும் கனிவு காட்டுவது அல்லது உணவு தருவது அங்கிகரிக்கப்பட்ட பாவம் என்பதே உண்மை. சுந்தர்ஜி தங்கள் வீரமான, நியாயமான கனிவுக்கு மக்கள் நேயமுடன் சல்யூட்.
வணக்கம் சுந்தர் சார்
அணில் பிள்ளைகளுக்கு நீங்க தர்ப்பணம் பண்னோம் ப்ராப்தம் சார்
மனது கணக்கிறது சார்..
நன்றி
“என் கோபம் அவர்களை நோக்கி திரும்பியது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க சாக்குபையை வைத்துக்கொண்டிருந்தவனை நையப்புடைத்துவிட்டேன். எனக்கு இப்படி ஒரு கோபம் வந்ததேயில்லை” — செம காமெடி சுந்தர்… அணில் பிள்ளைக்கு பாவம் பாத்த நீங்க அந்த நரி குறவர்களுக்கு பாவம் பாக்காம ஏன் அடித்தீர்கள்? அது பாவம் இல்லையா? அந்த இடத்தில் நரி குறவர்களுக்கு பதில் வேற யாராவது இருந்திருந்தால் (நல்ல உடல் வாகுவுடன் ) இப்படி அடிக்க போயிருப்பீங்களா? போயிருந்தா உங்களுக்கு தான் ‘செம’ அடி கிடைச்சி இருக்கும்… நான் ஏன் சொல்றேன் னா ஊருல எவ்ளோ ரவுடிங்க இந்த மாதிரி நிறைய அநியாயங்கள் பண்றாங்க… எங்க அவங்கள போயி இந்த மாதிரி ‘அடிச்சி’ போலீஸ்ல புடிச்சி கொடுங்க பாப்போம்… நீங்க இங்க செஞ்சது அணில் மேல் உள்ள அன்பு தான் காரணம் னு எனக்கு தெரியும்… ஆனா அந்த குறவர்கள அடிச்சிது ரொம்ப தப்பு… நீங்க இன்னும் மேம்படணும் சுந்தர்… I Know you are not going to publish this , Its Okay 🙂
////நீங்க இங்க செஞ்சது அணில் மேல் உள்ள அன்பு தான் காரணம் னு எனக்கு தெரியும்…////
ஆம் அணில்களின் மேல் உள்ள அன்பினால் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்பது உண்மை தான்.
அவ்வாறு நான் நடந்துகொண்டிருக்க கூடாது. தவறுக்கு வருந்துகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலைகள் எழுந்தால் உணர்ச்சிவசப்படாமல் அணுக முயற்சிக்கிறேன்.
தவறை நயமாக சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
– சுந்தர்
கலைஅரசன் அவர்களின் கமெண்ட்டை போட்டு அதற்கு பதில் சொல்லி மன்னிப்பும் கேட்டதற்கு சபாஷ் சுந்தர். இதைத்தான் உங்களிடம் எதிர் பார்த்தேன். இதில் உங்கள் பரந்த மனமும் மனமுதிர்ச்சியும் தெரிகிறது.
மாபெரும் தவமுனிகள்கூட கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு சாபம் கொடுத்து தங்கள் தவ வலிமையை இழந்திருக்கிறார்கள். சுந்தர் கலியுகத்தில் வாழும் ஒரு சராசரி மனிதர். ஆனால் சமூக உணர்வு மிக்கவர். அவர் இன்னும் பக்குவப்பட்டு நிறைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு தேவை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை.
உங்களுக்கு நல்லது என்று தோன்றியதை செய்திருக்கிறீர்கள். நன்று. தொடரட்டும் தங்களின் நற்பணிகள்.
உங்கள் பதிவு மற்றும் பதில் இரண்டும் நயமாக இருக்கிறது …உங்கள் பணி தொடரட்டும் … வாழ்த்துக்களுடன்
No wonder u put your best efforts and tried your best anna because u have already shown these glimpses on earlier occasions too.
This incident has taught us all a good lesson—
“FIGHT AGAINST INJUSTICE-however small they be!!”
And irrespective of the person who does crime to the society , he should be taken to task.
Regards
R.HariHaraSudan.
“HE WHO KNOWS THE SELF KNOWS ALL”
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு…..
நல்லது செய்தால் சில கமெண்ட்ஸ் வரதான் செய்யும் ….சுந்தர் சார் அதற்கு எல்லாம் பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாமல் அந்த டைம் இல் சில நல்ல பதிவுகள் போடலாம் …..
ஒரு ஜீவன் ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்டபோதும், கேட்டபோதும், அறிந்தபோதும், மற்றொரு ஜீவனுக்கு உருக்கமுண்டாவது ஆன்ம உருக்கத்தின் உரிமை என்று அறிய வேண்டும்.ஊழ்வகையாலும், அஜாக்கிரதையாலும் அன்னிய ஜீவர்களுக்கு நேரிடுகின்ற அபாயங்களை நிவர்த்தி செய்ய தக்க சுதந்திரமும், அறிவுமிருந்தும் ஜீவகாருண்யம் செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பத்தோடு மோட்ச இன்பத்தை அனுபவிகின்ற சுதந்திரம் அருளால் அடையப்படுவதில்லை.ஒரு ஜீவனைக்கொன்று மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுவித்தல் கடவுளருளுக்குச் சம்மதமுமல்ல, ஜீவகாருணிய ஒழுக்கமுமல்ல என்று சத்தியமாக அறிய வேண்டும்.
திருவண்ணாமலை…………..
ஏ, ஜீவன்களே, இந்த மலையின் காந்த சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள். இது இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்து இழுக்கிறது. இதை நினைக்கும் அந்தக் கணத்திலேயே நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, காம, க்ரோத, மத, மாச்சரியங்களை வெல்லும் வல்லமை ஒருவனுக்கு வருகிறது. இந்த மலையை நோக்கி அவன் இழுக்கப்படுகிறான். இது மனிதனைத் தன் பக்கம் இழுப்பது மட்டுமில்லை; அவனை நிர்குணம் படைத்தவனாகவும் ஆக்குகிறது. இதனுடைய சக்தி அளப்பரியது. இது யுகம் யுகமாக இங்கே நின்று கொண்டு பலருடைய ஒப்பற்ற தியாகங்களையும் பார்த்துக்கொண்டு ஒரு மெளன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. ஏ, மானுடர்களே, இதன் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொண்டு இதனோடு ஐக்கியமாகி விடுதலை பெறுங்கள்.”.இது சேஷாத்ரி சுவாமிகள் சொல்லியது ….
உலகில் வாழும் சின்னஞ்சிறிய ஜீவராசிகளான ஈ, எறும்பு போன்றவற்றிற்கும் ஆத்மா இருப்பதால் அவற்றைக் கொல்வது மகாபாவம் என்ற எண்ணம் கொண்ட சுந்தர் சார் சாரின் செயலை பாராட்டுவோம்
இந்த பதிவை படிக்கும் பொழுது மனது கனக்கிறது. அன்றைய தினம் அணில்களை தாங்கள் எப்படியும் காப்பற்றி இருப்பீர்கள் என்று நினைத்தோம். முடிவில் எவ்வளவு பிரயத்தனப் பட்டும் அதை காப்பாற்ற முடியவில்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த பத்தி அளித்து 9 மாதங்கள் இருக்கும் . தாங்கள் சொன்னபடி ப்ளூ கிராஸ் மெம்பெர் ஆகி விட்டீர்களா.
தைகள் நரிக்குறவர்களை அடித்தது தவறு என்று உணர்ந்து sorry சொல்லி இருக்கிறீர்கள். இது தாங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த பெருந்தன்மை தான் தாங்களை இந்த அளவு உயர வைத்திருக்கிறது.
நன்றி
uma
எவ்வளவோ முயன்றும் கடைசி வரை காப்பத்த
முடியாமல் போனதே/ ரொம்பவும் கஷ்டமா இருந்தாலும் அந்த பசங்கள்ளலே மத்த அணில்கள் காப்பாததியது சந்தோசமா இருக்குது
பெரிய விஷயம் சார்.
சோ.ரவிச்சந்திரன்
கைகா
, கர்நாடகா