Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

print
சென்ற மாதம் மத்தியில் உறவினர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள கரூர் செல்லவேண்டியிருந்தது. அது பற்றி தளத்தில் நான் கூறியிருந்ததை பார்த்த சம்பத் குமார் என்கிற வாசக அன்பர், கரூரில் உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்திற்கு சென்று வரும்படி கேட்டுக்கொண்டார். நானும் நிச்சயம் செல்வதாக அவருக்கு உறுதி கூறினேன்.

தமிழகத்தில் மக்கள் வசிப்பதற்கு ஏற்ற அடிப்படை கட்டுமானங்கள் சிறப்பாக அமையபெற்றுள்ள நகரங்களில் கரூரும் ஒன்று என்றால் மிகையாகாது. போக்குவரத்து வசதி, நல்ல சாலைகள், பஸ் மற்றும் ரயில் வசதி, கோவில்கள் என சகலமும் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர் கரூர். கருவூரார், சதாசிவ பிரம்மேந்திராள், பாலுசாமி சித்தர் என சித்தர்கள் குடியிருக்கும் ஊராயிற்றே.

கரூர் சென்ற செப்டம்பர் 14 அன்று மாலை நெரூருக்கு புறப்பட்டேன். கரூரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெரூர் அமைந்துள்ளது. நெரூர் செல்லும் பாதையெங்கும் பசுமை பசுமை அப்படி ஒரு பசுமை. நாம் தமிழ்நாட்டில்  இருக்கிறோமா என்று சந்தேகம் வந்துவிட்டது. அப்படியொரு பசுமை.

நெரூரில் சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானதிற்கு அருகிலேயே ஸ்டாப்பிங் உள்ளது, அங்கு இறங்கி சில அடி தூரம் நடந்தால் அதிஷ்டானம்  வந்துவிடும்.

இங்கு காவிரி கரையோரம் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி ஆலயம் உள்ளது. ஆலயத்தின் பின்புறம் தான் சதாசிவ பிரமேந்திரரர் அதிஷ்டானம் உள்ளது. (அதிஷ்டானம் = சமாதி).

வில்வ மரங்கள் சூழ்ந்து ஒரே அமைதியை கொண்டு இத்தலம் இருக்கிறது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு  நெரூர் வந்து சேர்ந்த சதாசிவ பிரம்மம் தந்து சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் மகாராஜா ஆகியோரை அழைத்து “இங்கு குகை அமையுங்கள். நான் உட்கார்ந்ததும் விபூதி, உப்பு, மஞ்சள் தூள், செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள். ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும். பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து ஒருவர் சிவலிங்கம் கொண்டு வருவார். அதை வைத்து கோயில் எழுப்புங்கள். இந்த வில்வ விருட்சத்திற்கு எந்த மறைப்பும் வேண்டாம். மேடை போட்டு விடுங்கள்” என்று அருளினார் .
அவர் சொன்னபடி ஒன்பதாம் நாள் வில்வ மரம் தோன்றியது. நீங்கள் இங்கு புகைப்படத்தில் பார்க்கும் விருட்சம் அது தான். பன்னிரெண்டாம் நாள் அவர் சொன்னபடி காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தார். 12  அடிக்கு கீழே அதை வைத்து கோயில் கட்டினர். மகரிஷிகளின் சமாதி மீதே  கோயில் கட்டுவது வழக்கம். இங்கு மட்டுமே சமாதிக்கு 12  அடிக்கு கீழ்புறம் சிவலிங்கத்தை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது .இங்கு துவாதசாந்த பெருவெளியில் சதாசிவ பிரம்மம் எழுந்தருளியிருக்கிறார். துவாதசம் எனில் 12  அங்குலம். அங்குலத்தை அடியாக கொண்டு சிவலிங்கத்தை அமைத்துள்ளனர்.

விருச்சிக ராசி மற்றும் கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு இந்த கோவில் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கும் பூஜை நடைபெறுகிறது. மன அழுத்தம், தீராத நோய்கள், கடும் நிதி நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு பௌரனமியும் இங்கு வந்து கைலாசநாதரை தரிசித்து பிர்மேந்திரரின் ஜீவ சமாதி முன்பாக அமர்ந்து தமது கோரிக்கைகளை கூறி தியானம் செய்யவேண்டும். விரைவில் கோரிக்கைகள் நிறைவேறும் அற்புதத்தை உணரலாம்.

கோவிலின் வெளியேயே நியாயமான விலையில் அர்ச்சனை பொருட்கள், பூக்கள் எல்லாம் கிடைக்கிறது. கரூர் பஸ் நிலையத்திலிருந்து 4 ஆம் எண் பஸ் நெரூருக்கு உள்ளது.

நாம் சென்ற நேரம் கோவில் நிசப்தமாக இருந்தது. அமைதி அமைதி பரிபூரண அமைதி. எரிச்சல் ஏற்படுத்தும் சென்னை நகர சத்தங்களுக்கிடையே வாழ்ந்துகொண்டிருப்பவனுக்கு இந்த அமைதி உண்மையில் பேரானந்தமாய் இருந்தது.

கோவிலில் முருகன், பிள்ளையார் என அனைத்து சன்னதிகளும் உண்டு. பின்புறம் தான் சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானம் .

கோவிலுக்கு வெளியே வாங்கிய அர்ச்சனை தட்டை கொடுத்து நம் பெயர் ராசி, நட்சத்திரம் உள்ளிட்டவற்றை சொல்லி அர்ச்சனை செய்தோம். (கோவிலுக்கு செல்லும்போது பலர் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்கிறார்கள். அது தவறு. நம் பெயரையோ அல்லது குடும்பத்தினர்  அல்லது நண்பர்கள் பெயரையோ சொல்லி சங்கல்பம் செய்து தான் அர்ச்சனை செய்யவேண்டும்.) நம்மை பொருத்தவரை என் குடும்பத்தினர் என்றால் அது நம் வாசகர்கள் தான். இப்போதெல்லாம் நம் முதல் வேண்டுதலே உங்களுக்காகத் தான். “நாங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகள். லௌகீக வாழ்க்கையில் கிடந்து உழல்பவர்கள். மதி மயக்கத்தில் என்ன பிழை செய்தாலும் பொறுத்துக்கொண்டு நல்வழிப்படுத்தி உங்கள் இன்னருளை என்றும் எங்களுக்கு தரவேண்டும் ஸ்வாமி!” – இதுவே பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தில் நம் பிரார்த்தனையாக அமைந்தது.

அர்ச்சனைமுடிந்த பின்னர் அப்படியே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டேன். மனதை கஷ்டப்பட்டு ஒருமுகப்படுத்தி சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு எழுந்தோம்.

கோவிலை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டு கோவிலுக்கு பின்னால் இருக்கும் பிரம்மேந்திரரின் சீடரின் ஜீவ சமாதிக்கு சென்றோம். இங்கு சமாதி மீது மகா மேரு உள்ளது. இவரையும் தரிசித்துவிட்டு கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பழங்கள் கொடுத்துவிட்டு பின்னர் மீண்டும் கரூர் புறப்பட்டோம்.

ஒரு முறை சென்று வந்தால் அடிக்கடி செல்லத் தூண்டும் ஒரு அற்புதமான தலம் இந்த நெரூர்.

பொதுவாக ஸ்ரீ ராகவேந்திரர், மகா பெரியவா, சதாசிவ பிரம்மேந்திரர், பாலுச்சாமி சித்தர் (இவரைப் பற்றி விரைவில்) போன்ற சமாதி நிலையில் இருக்கும் குருமார்களுக்கு நமது வேண்டுதல்களுக்கு பலன் தரும் சக்தி அதிகம். ஏனெனில் அவர்கள் சேர்த்து வைத்துள்ள புண்ணியத்திலிருந்து சிறிது எடுத்து நமக்கு வழங்கி நமது பாபக் கணக்கை சரி செய்துவிடுவார்கள். ஆனால் அதற்கும் ஒரு ப்ராப்தம் வேண்டும். நல்ல நேரமானது நம்மை நெருங்கும்போது நாம் நல்ல செயல்களை நல்லவர்களுடன் செய்துகொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால் நல்லவர்களுடனாவது இருக்கவேண்டும். இல்லையேல் நல்லநேரம் வந்தும் பலனின்றி போய்விடும்.

நெரூர் சென்று வாருங்கள். துன்பத்தை தொலைத்துவிட்டு இன்பத்தை அள்ளிக்கொண்டு வருவீர்கள் என்பது உறுதி.

=======================================================

கீழே தினமலர் இணையத்தில் கண்ட சதாசிவ பிரம்மேந்திரரின் புனித வரலாற்றை  தந்திருக்கிறேன்.குருவின் வரலாற்றை படிப்பது பல விதங்களில் நலன் தரும். பாபம் போக்கும். படியுங்கள். குருவின் அருளை பெறுங்கள்.

நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரி புனித வரலாறு !

மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார்.

இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார்.  அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா? ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை. வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை!  ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!

வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது.

சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ஓ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது!  சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே… ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும்
முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!

கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம்.

சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல் அவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும் சித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!

(ஆக்கத்தில் உதவி : தினமலர், wikipedia)

22 thoughts on “தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

  1. சுந்தர்ஜி
    மிக அற்புதம். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரா சுவாமிகளின் வரலாறு ஏற்கனவே படித்து இருந்தாலும் தங்கள் உரையில் அழகிய படங்களுடன் மீண்டும் நம் தளத்தில் படிப்பது ஒரு பிரத்தியேகமான அனுபவம். அதுவும் அவர் காஞ்சி மடத்தின் பிரத்தியேக சீடர் என்பதாலோ என்னவோ நம் தளத்திற்கு அவரின் அருளும் கிடைத்துவிட்டது அதுவும் எதிர்பாராமலே. எமக்கும் அங்கு செல்ல வெகுநாளாக விருப்பம். சரியான துணை(பயணத்திற்கு?) கிடைத்தால் விரைவில் செல்வோம். மிக்க நன்றி

  2. சார்
    இந்த பதிவை படிக்கவே நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் .
    ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து, உணர்ந்து படிக்க தோன்றுகிறது.
    நெரூர் மகான் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த புனிதமான தொடரை படிக்க வைத்த உங்களுக்கு என் நன்றிகள் பல.
    அவரின் சரிதமும் அற்புதங்களும் மெய் மறக்க செய்கிறது.
    சொல்லவோ எழுதவோ வார்த்தைகள் இல்லை. மனமார்த்த நன்றிகள்.

  3. /////நல்ல நேரமானது நம்மை நெருங்கும்போது நாம் நல்ல செயல்களை நல்லவர்களுடன் செய்துகொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால் நல்லவர்களுடனாவது இருக்கவேண்டும். இல்லையேல் நல்லநேரம் வந்தும் பலனின்றி போய்விடும்./////

    என்றைக்கு ரைட் மந்த்ரா வாசிக்க ஆரம்பித்தோமோ அன்றே நல்ல நேரமும் நல்லவர் நட்பும் கிடைத்துவிட்டது.

  4. பார்க்கும்போதே மனதிற்கு இனிமையாக உள்ளது…படிக்கும்போது இன்னும் அருமையாக உள்ளது …
    ///நம்மை பொருத்தவரை என் குடும்பத்தினர் என்றால் அது நம் வாசகர்கள் தான். இப்போதெல்லாம் நம் முதல் வேண்டுதலே உங்களுக்காகத் தான்.///
    நாங்கல் உங்களுக்காக பிரார்த்திக்கரோமோ இல்லையோ சுந்தர் சார் நீங்கள் என்களுக்காக பிரார்த்தனை செய்வது என்பது தன்னலம் இல்லாத உங்கள் சேவையை பிரதிபலிக்கிறது பாக்கியம் செய்திருக்கவேண்டும் நம் வாசகர்கள்..
    நன்றி..நன்றி..

  5. நல்ல அருமையான பதிவு. படிப்பதற்கே பாக்கியம் செய்திருக்கவேண்டும். மிக்க நன்றி.

  6. /////நல்ல நேரமானது நம்மை நெருங்கும்போது நாம் நல்ல செயல்களை நல்லவர்களுடன் செய்துகொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால் நல்லவர்களுடனாவது இருக்கவேண்டும். இல்லையேல் நல்லநேரம் வந்தும் பலனின்றி போய்விடும்./////

    என்றுமே நல்லதை வழங்கும் எங்கள் ரைட் மந்த்ரவுடன் இருப்பதால் எப்போதும் எல்லோருக்கும் நல்ல நேரமே.

  7. “நாங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகள். லௌகீக வாழ்க்கையில் கிடந்து உழல்பவர்கள். மதி மயக்கத்தில் என்ன பிழை செய்தாலும் பொறுத்துக்கொண்டு நல்வழிப்படுத்தி உங்கள் இன்னருளை என்றும் எங்களுக்கு தரவேண்டும் ஸ்வாமி!”

    என்ன ஒரு அருமையான வலிமையான வார்த்தைகள்…

    ///நம்மை பொருத்தவரை என் குடும்பத்தினர் என்றால் அது நம் வாசகர்கள் தான். இப்போதெல்லாம் நம் முதல் வேண்டுதலே உங்களுக்காகத் தான்.\\\

    தங்களின் தன்னலம் அற்ற வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் .

    ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அருளாசி தங்களின் மூலம் எங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி .
    -மனோகர்

  8. திரு சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி
    தங்களின் இந்த பதிப்பினை ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தேன்.
    மிக சிறந்த பதிப்பு.அற்புதமான புகைப்படங்கள்.
    நேரில் சென்று வந்தது போல் உள்ளது.இந்த மகிழ்சியனை வார்த்தைகளால் வருணிக்க இயலாது

    இந்த மகானின் அதிஷ்டானத்திற்கு.வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர இறைவன் அருள் புரிய வேண்டும்.

  9. மிகவும் நல்ல பதிவு.மெய்சிலிர்க்க வைத்தது.
    நன்றி
    ஸ்ரீதர்

  10. இன்று பௌர்ணமி….கார்த்திகை தீபம்…இன்றுதான் இந்த பதிவை பார்க்கிறேன்….
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சதாசிவ ப்ரமேந்திராள்…இதன் மூலம் என் இல்லம் வந்து விட்டார்…
    கொஞ்ச நேரத்தில் தொடர்கிறேன்…நமஸ்காரம்.

  11. அதிசயம்…அல்லது அற்புதம்(அ) மகிமை:
    1.சில ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதியில் உள்ள வில்வ மரம்
    தீ விபத்தில் முற்றும் கருகி போனது…சில மாதங்களிலேயே எரிந்து கருகிய மரம் துளிர்த்து இன்று முன் போலவே உள்ளது.நான் குளித்தலயில் வசித்தபோது 2 முறை தரிசித்து உள்ளேன்.

    2.என் மனத்தில் உள்ள கோரிக்கை..மகன் திருமணம் .நியாயம் தானே என்கிறீர்களா?
    அவன் நட்சத்திரம் கேட்டை…ராசி விருச்சிகம்….
    இன்று பௌர்ணமி…ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் அருள் தானே?
    நமஸ்காரம் …நன்றி தொடருவேன்

    1. சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானத்தின் வில்வ மரம் கருகியது பற்றிய செய்தி இப்போது தான் தெரிந்துகொண்டேன். எங்கோ அருகில் ஏற்படவிருந்த தீ விபத்தை குரு தன்னிடம் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவ்வளவே…

      அடுத்து உங்கள் மகன் திருமணம்… விரைவில் நல்லதே நடக்கும்.
      வாழ்த்துக்கள்.

      – சுந்தர்

  12. மிக அருமையான தகவல். உங்களின் பணி சிறக்க வேண்டுகிறேன் .

  13. இந்த மகானின் அதிஷ்டானத்திற்கு.வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர இறைவன் அருள் புரிய வேண்டும்.

  14. Arumayana thagaval.Padhithadhum engal vinai anaithum neengiya sandhosom.Avasiyam dharisikka vendiya sthalam.

  15. மிக்க நன்றி சார் அருமையான தகவலை பகிர்தம்மைக்கு நன்றி குருவின் அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்கும் .

  16. A nice post. A very nice site too. Many many thanks and appreciations. May your service continue and reach more and more people. Our love and best wishes for your well-being and prosperity, though your motto is the highest good of all .
    Sadasiva brahmmendrar’s Guru is known by the name Sri Paramasivendra Saraswathi. He was the 57th Pontiff of Sri Kanchi Kamakoti Mutt. His Samadhi is situated at Thiruvengadu, 12 kms from Sirkazhi.

  17. இந்த மகானின் வாழ்கை வரலாறை படிக்கும் போது எனக்கு அவரின் கோவிலுக்கு செல்ல வேண்டும் போல இருக்கிறது. அவரின் சன்னதியில் அமர்ந்து அவரது தெய்வீக இயல்பை கொஞ்சம் வாங்க வர தூண்டுகிறது. அவர் அணுக்ரம் வேண்டும் ஒரு அடியவன்

  18. டியர் ரைட் மந்த்ரா வாசகர்களே!

    திரு பாலகுமாரன் எழுதிய “தோழன்” என்னும் நாவல் சதாசிவ ப்ரஹ்மெந்திரரை பற்றியது. அதையும் படித்து பயன் பெறுங்கள்.

    நன்றியுடன்,
    நாகராஜன் ஏகாம்பரம்
    99625 57572

  19. என்ன ஒரு அற்புத திவ்ய சரிதம் ப்ரம்மேந்திராள் எத்துணை முறை படித்தாலும்
    பரவசம் ஏற்படுகிறது .குருப்யோ நமஹ!

  20. எப்படி ஒரு கோவில் பக்கத்திலிருந்தும் எனக்கு தெரியாமல் போயிருக்கு …….நெரூர் பயணம் கிளப்பியாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *