Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > All in One > கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

print
லயங்கள் என்பவை ஆண்டவனின் அருள் கொட்டிக்கிடக்கும் மகாசமுத்திரம் போன்றவை. அவற்றில் இறங்கி முத்துக்களை அள்ளிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். கிளிஞ்சல்களை வாரிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். வெறும் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.

சமுத்திரம் கேட்டதை எல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறது எனும்போது வெறும் கையுடன் திரும்புவது யார் குற்றம்? “கோவில்களுக்கு சென்றேன்; ஆனால் பலனில்லை” என்று புலம்புவர்களுக்கு பதில் இது தான்.

எதற்குமே ஒரு முறை இருக்கிறது சாரே….

நம்மில் பலர் கோவில்களுக்கு செல்லும் முறை எப்படி இருக்கிறது தெரியுமா?

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் அதிகாரி என்று வைத்துக்கொள்வோம். ரோட்டில் நடந்து செல்பவர் ஒருவர், அது உங்கள் நண்பராகவே இருக்கட்டும் – எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் – உங்களது அப்பாயின்மென்ட்டுக்காக ஏற்கனவே பலர் வெளியே காத்திருக்கும் சூழ்நிலையில் – உங்கள் அலுவலக நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் – தான்தோன்றித் தனமாக உங்கள் அறைக்குள் நுழைந்துவிடுகிறார். நீங்கள் எரிச்சலுறும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைகின்றன. போதாக்குறைக்கு உங்கள் நிறுவன ஊழியர்களிடமும் சக ஊழியர்களிடமும் பக்குவமற்று நடந்துகொள்கிறார். அது மட்டுமா போவதற்கு முன்னர் உங்கள் அலுவலகத்தை வேறு அசுத்தப்படுத்திவிட்டு  சென்றுவிடுகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? அடுத்த முறை அவரிடம் பேசுவீர்களா? பேசினாலும் உங்கள் அலுவலகத்திற்கு உள்ளே தான் விடுவீர்களா? (உங்களில் சிலருக்கு இது போன்று அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்!)

மனுஷன் உங்களுக்கே இப்படி என்றால்… இந்த உலகையே கட்டிக்காக்கும் ஆண்டவனுக்கு? அவன் இருப்பிடத்திற்கு நீங்கள் எப்படி போகவேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்… ? யோசித்துப் பாருங்கள். இத்துனை நாட்கள் நீங்கள மிக மிக சாதாரணமாக நினைத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் எத்துனை முக்கியம் இது என்று இப்போது புரியும்.

ஆனா அவன் மனுஷன் இல்லையே. கருணைக் கடலாச்சே.  நாம என்ன தப்பு செஞ்சாலும் அவன் நம்மளை வரவேண்டாம்னு சொல்றதில்லே. துரத்துறதில்லே. அவனோட அருளை ஒவ்வொரு கணமும் வாரி வழங்க அவன் தயாராக இருக்கிறான். நாம் தான் அதை உதாசீனப்படுத்துகிறோம்.

அவனை போய் பார்த்து அவன் அருளை பெற, அந்த சமுத்திரத்தில் மூழ்கி முத்துக்களும் நவமணிகளும் எடுக்க… இதோ எனக்கு தெரிந்த சில எளிய வழிமுறைகள்.

இறைவனை ஆலயத்தில் தொழ அகத்தினாலும் புறத்தினாலும் தூய்மையானவர்களாக இருந்தாலே போதும் என்றாலும், கோவில் தரிசனத்திற்கு என்று பெரியோர்கள் வகுத்த விதிமுறைகளை பின்பற்றினால், அதற்குரிய பலன்கள் முழுமையாக கிட்டும்.

கோவில் தரிசனத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியவை :

  • எந்தக் கோவிலுக்கும் செல்வதற்கு முன்னால் அந்த கோவிலைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துவைத்துக்கொண்டு பின்னர் செல்லவேண்டும். முதன்முறையாக செல்லும் கோவில் என்றால், அந்த கோவிலைப் பற்றிய விபரங்களை அர்ச்சகரிடமோ அல்லது கோவில் அலுவலகத்திடமோ கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.
  • குளித்துவிட்டு தூய்மையான ஆடைகள் அணிந்து அவரவர் வழக்கப்படி திருநீறு அல்லது திருமண் ஆகியவற்றை அணிந்து கோவிலுக்கு செல்லவேண்டும்.
  • பெண்கள் இறுக்கமான ஆடைகள், டீ-ஷர்ட் உள்ளிட்டவைகளை அணிந்து கோவிலுக்கு செல்லவே கூடாது.
  • ஆண்கள் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்லவே கூடாது. நாம் போவது பொழுது போக்கிற்கு அல்ல. நமது உடைகள் நாகரீகமாக இருப்பது மிக மிக அவசியம்.
  • உள்ளே செல்லும் முன், அவரவர் மொபலை சுவிச் ஆஃப் செய்யவேண்டும் அல்லது சைலண்டில் வைக்க வேண்டும்.
  • கோவில் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கவேண்டும்.
  • ஆலயத்தில் கை, கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் வசதி இருக்குமானால நமது கை, கால்களை கழுவிக்கொள்ளவேண்டும்.
  • மலர்கள், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழைப் பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அர்ச்சனைக்காக வாங்கி செல்லவேண்டும். (வாழைப்பழத்தில் புதிதாக வந்திருக்கும் மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம் மற்றும் பச்சை நாடன் கூடவே கூடாது.)
  • சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டி பைகள் மற்றும் கேரி பேக்குகளை தவிர்க்கவேண்டும். நமது வீட்டிலிருந்து அர்ச்சனைத் தட்டோ, சிறு மூங்கில் கூடையோ, காகிதப் பையோ அல்லது துணியினால் ஆன பையையோ கொண்டு சென்று, அதில் மேற்படி மங்கலப் பொருட்களை எடுத்துச் செல்லவும். பையும் மாறாது. உங்கள் பொருள் உங்களுக்கே கிடைக்கும்.


 

  • கோவிலுக்கு உள்ளே உள்ள விநாயகரை முதலில் தரிசித்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும். பிரார்த்தனை நல்லபடியாக நிறைவற, ஆலய தரிசனம் முழுமையான பலன் தர தும்பிக்கையான் அருளை வேண்டிக்கொள்ளவேண்டும்.
  • பின்னர் நந்தி, கருடன் மற்றும் மயில் உள்ளிட்ட பிரதான வாகனங்களை வணங்கவேண்டும்.
  • மூலஸ்தானத்துக்கு வெளியே நிற்கும் துவார பாலகர்களை (இறைவனின் மெய்க்காப்பாளர்கள்) மானசீகமாக வணங்கி இறைவனை தரிசிக்க அவர்களது அனுமதியை பெறவேண்டும்.
  • மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள மற்ற மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.
  • சண்டேசுவரரை அமைதியாக வணங்க வேண்டும். கைகளை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது.

 

  • ஆலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்டவைகளை மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும். கிழே சிந்துதல் கூடாது. நாம் அணிந்தது போக கைகளில் மிகுதியாக உள்ளவற்றை ஒரு பேப்பரில் மடித்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். அல்லது அதற்கு என்று வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் போடலாம். கண்ட கண்ட இடத்தில் அவற்றை போடுதல் கூடாது.
  • அதே போல், விளக்கேற்றிய பின்னர் கைகளில் எண்ணெய் படிந்திருந்தால் அதை நாம் கொண்டு சென்ற துணியில் துடைத்துக்கொள்ளவேண்டுமே தவிர கோவில் சுவற்றில் தேய்த்தல் கூடாது.
  • கோவில் சுவற்றில் கிறுக்குதல், பெயரை எழுதுதல், பரீட்சை எண்ணை எழுதுதல் இவை அனைத்தும் மிகப் பெரிய தவறு. உங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லவேண்டுமேயன்றி சுவற்றில் அல்ல.
  • ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும். வலம் வருகையில் கைகளை வீசிக்கொண்டு நடக்காது, பொறுமையாக இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி கைகளை கூப்பிய நிலையில் வணங்க வேண்டும்.
  • கர்ப்ப க்ரஹத்தில் மேல் உள்ள விமானத்தை கைகளை கூப்பி வணங்கவேண்டும்.
  • இறைவனைத் தவிர ஆலயத்தில் வேறு எவரையும் வணங்கக்கூடாது.
  • கோவிலில் வம்பு பேசுதல், உலக விஷயங்களை, லௌகீக விஷயங்களை பேசுதல் அறவே கூடாது.
  • அந்தந்த கோவிலுக்கு செல்லும்போது அந்தந்த கடவுளரின் ஸ்லோகத்தை ஸ்தோத்திரங்களை பாக்களை பக்தியுடன் கூறிக்கொண்டே வலம் வரவேண்டும்.
  •  கலகலவென சிரித்தல், அதிர்ந்து பேசுதல், கூச்சல் போடுதல், மற்றவர்களை கடுகடுத்தல், அதிகாரம் செய்தல் இவை கூடவே கூடாது.
  • பிறரின் உடைகளை, ஆபரணங்களை பார்த்து பொறாமைப்படுதல் பெரிய தவறு.
  • மற்றவர்களை தரிசிக்க விடாது இடையூறாக இருப்பது கூடாது.
  • வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சுலபமாக தரிசனம் செய்ய உதவவேண்டும்.
  • இலகு தரிசனத்திற்க்காக கையூட்டு கொடுத்தல் கூடவே கூடாது.
  • அர்ச்சகருக்கு தட்டில் உங்கள் தட்சணையை போடுவது தவறல்ல. ஆனால் ஆலயத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தால் ஆலய உண்டியலில் உங்கள் காணிக்கையை போடவும்.

 

  • கோவிலில் பிரசாதம் அளித்தால் அதை சாப்பிட்டவுடன் அந்த இலையையோ அல்லது தொன்னையையோ கண்ட இடத்தில் போடாமல், அதற்கென உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும்.
  • கொடிமரத்தித்திற்கு அப்பால் அதற்கு கீழே மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தில் வேறு எங்கும் கீழே விழுந்து வணங்குதல் கூடாது.
  • கோவிலில் பசு கொட்டில் இருந்தால், அதை பராமரித்து வருபவர்களிடம் அனுமதி பெற்றே பசுக்களுக்கு பழம், கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுக்கவேண்டும். (அவங்களுக்கு தான் அவைகளோட உணவு முறைகள் மற்றும் ஒவ்வாமை பற்றி தெரியும்.)
  • வடக்கு திசை நோக்கி சற்று அமர்ந்து இறைவனின் பெயரை கூறி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.
  • சிவாலயத்தின் குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம். தவறு அல்ல.
  • இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது : நல்லவனாக இருப்பதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் எதுவும் இல்லை. எனவே சொல்லாலோ செயலாலோ மனத்தினாலோ யாருக்கும் எந்த தீங்கையும் செய்யாமல், உத்தமனாக வாழ்ந்து, பெற்ற தாய் தந்தையரையும், குடும்பத்தினரையும் உற்றார் உறவினரையும் பேணிக்காத்து அவன் அருளை பெறுவோம். எது வந்த போதும் அவன் திருவடியை விடாது பற்றியிருப்போம்! சுபமஸ்து!!

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். ஆலய தரிசனத்தின் பலன்களை முழுமையாக பெறுங்கள்.

 ———————————————————————

அடுத்து….

கோவிலுக்கு செல்லும்போது யாசகம் கேட்பவர்களுக்கு பிச்சையிடலாமா? கூடாது என்று சிலர் சொல்கிறார்களே… இது பற்றி பெரியோர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்? விரிவான பதிவு!

———————————————————————

 

[END]

 

·

 

4 thoughts on “கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

  1. One of the best article brother.. These things whether it brings full fruits of worship or not, but damn sure it creates self discipline among us. It’s very difficult to follow all of this. But will try level best. Lovely., u must be so dedicated to think this deep facts.

  2. Such a wonderful article. Especially that example. The higlight of this article is this example. Most of including me won’t follow the procedure. It is no just article it is message.

    Marees

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *