Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > ஒளவையை தேடி வந்த அனுமன்!

ஒளவையை தேடி வந்த அனுமன்!

print
சாதனையாளர்கள் & நல்லோர்களை சந்திக்க புறப்பட்டுள்ள நமது நெடும்பயணத்தின் சில அத்தியாயங்கள் இவை. தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருப்பவனுக்கு இடையிடையே  தாகம் எடுக்குமல்லவா? அப்படி தாகம் எடுக்கும்போது சற்று இளைப்பாற என் பாதையில் இறைவன் அமைக்கும் சோலைகள் தான் இந்த சந்திப்புக்கள். இவை என்னை முழுமையாக ரீ-சார்ஜ் செய்வது மட்டுமின்றி மனதை மிகவும் பக்குவப்படுத்துகின்றன. இறைவன் நம்முடன் இருக்கிறான் என்கிற தைரியத்தை, ஆன்ம பலத்தை தருகிறது.

திருவாசகம் முற்றோதல் சில வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றபோது வாழும் ஔவை அன்னை ராஜம்மாளை காணச் சென்றிருந்தோம். அப்போது தான் தாமோதரன் ஐயாவை நேரில் பார்த்தோம். தேனினும் இனிய குரலில் அவர் திருவாசகம் பாட உருகி நின்று கேட்டுக்கொண்டிருந்தோம்.

மேல தாளம் முழங்க ஊர்வலம் புறப்படுகிறது

அன்னையை நிகழ்ச்சியின் இறுதியில் சந்தித்து மரியாதை செய்து, தாள் பணிந்தேன். “அடுத்த வாரம் பழனியில் நடைபெறும் முற்றோதலுக்கு வா” என்று பணித்தார்.

சிவத்தொண்டுக்கென்றே தன்னை அற்பணித்தவரின் வார்த்தைகளல்லவா? அந்த வார்த்தைகளை ஏனோ எம்மால் மீற முடியவில்லை.

“எப்பாடுபட்டாவது நிச்சயம் வருகிறேன்” என்றோம். (காரணம் வாரத்தில் இரண்டு ஞாயிறு எனக்கு அலுவலகம் உண்டு.)

சிவனருளால் பழனி செல்ல முடிந்தது. உடன் நண்பர் மாரீஸ் கண்ணனும் வர அங்காள ஈஸ்வரி திருமண மண்டத்தில் நடைபெற்ற முற்றோதல் நிகழ்ச்சியில் மீண்டும் அன்னையின் தரிசனம்.

திருவாசகம் பாடிக்கொண்டிருந்த தாமோதரன் ஐயாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய பழனி வாழ் மக்களிடையே கடும் போட்டி நிலவியது. பல பெரிய மனிதர்கள் அந்த வாய்ப்புக்காக மணிக்கணக்காக காத்திருக்க எங்களுக்கு அந்த வாய்ப்பு ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் கிடைத்தது. காத்திருந்த கால்கள் புண்ணியம் செய்தன.

இப்படி கூறுமளவிற்கு அப்படி என்ன தாமோதரன் ஐயா பெரியவரா என்று கேட்க தோன்றலாம்…

காலை 4.30க்கு எழுந்து குளித்துவிட்டு 5.30 மணிக்கு திருவாசகம் ஊர்வலத்தில் கலந்துகொண்டு நகர்வலம் வந்து 6.00 மணிக்கு திருவாசக மேடையில் அமர்ந்துவிட்டால் மாலை 6.00 அல்லது 7.00 வரை இடையே சற்றும் நிறுத்தாமல், உணவருந்தாமல் சுமார் 12 மணிநேரம் தொடர்ந்து திருவாசகம் பாடுகிறார்.

காலை ஆரம்பிக்கும்போது குரல் எப்படி கணீரென்று இருக்குமோ அதே போல மாலை அவர் திருவாசகம் நிறைவு செய்யும்போதும் கணீரென்று இருக்கும்.

அவர் முகத்தில் சிறிதாவது களைப்பு தெரியவேண்டுமே…. ம்….ஹூம்…

அன்னைக்கு நம் தளம் சார்பாக சுந்தரகாண்டம் நூல் பரிசாக வழங்கப்படுகிறது

எங்களால் ஓரிடத்தில் பத்து நிமிடங்களுக்கு மேல் மண்டபத்தில் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. அப்படி இப்படி என்று நெளிந்தோம் .அங்கும் இங்கும் போய்வந்துகொண்டிருந்தோம். இத்தனைக்கும் எங்களுக்கு காலை உணவு சரியான நேரத்தில்… மதிய உணவு சரியான நேரத்தில்…

ஆனால் தாமோதரன் ஐயா உணவே உண்ணாமல் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி சுமார் 12 மணிநேரம் தொடர்ந்து (நிமிர்ந்து) உட்கார்ந்து திருவாசகம் பாடினார் என்றால் அதற்கு காரணம் அந்த சிவனருளேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்…?

இதில் விசேஷம் என்னவென்றால் 85 வயதை தொடும் அன்னை ராஜம்மாளும் அதே போல உணவு அருந்தாமல் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் ஒரே இடத்தில் அவருடன் அமர்ந்தபடி திருவாசகம் பாடியது தான்.

இப்போது சொல்லுங்கள்… இவர்களை சந்தித்து ஆசி பெற்ற நாங்கள் எத்தனை பெரிய பாக்கியசாலிகள்

இவர்களை சந்தித்துவிட்டு அப்படியே மலையேறி தண்டாயுதபாணியையும் சந்தித்துவிட்டு வந்தோம். அடுத்தடுத்து நல்ல செய்திகள் தான்…!

அன்னையை தேடி வந்த அனுமன்!

அனுமனே சிவரூபம் தானே. ருத்ரனின் அம்சம். எனவே அன்னையை தேடி அவன் வர விரும்புவதில் வியப்பில்லையே… நமக்கு கிடைத்த சுந்தரகாண்டம் விசேஷ பதிப்பு (பெரிய சைஸ்) நூல் ஒன்றை அன்னைக்கு நம் தளம் சார்பாக பரிசளித்தோம். மிக்க மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்கள்.


நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க
நல்லார் சொற்கேட்பதும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே!

=============================================
திருமதி. பேட்ரீசியா நாராயண் அவர்களின் பேட்டியை நாளை அளிக்கிறேன். அதை சற்று மேலும் சற்று மெருகூட்ட (SPICE UP) வேண்டியுள்ளது. அதற்கு சற்று அவகாசம் தேவை. நாம் இதுவரை எடுத்த பேட்டிகளில் நம்மை மிரள வைத்ததோடல்லாமல் நம் கண்களையும் மற்றுமொருமுறை திறந்தது… உங்கள் கண்களையும் திறக்கப்போவது என்பதால் அவசர கதியில் அதை அளிக்க விரும்பவில்லை. சற்று பொறுமையாக இருக்கவும்.
=============================================

Also check :
அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!

=============================================

6 thoughts on “ஒளவையை தேடி வந்த அனுமன்!

  1. சிவனருளால் இருமுறை அன்னையின் தரிசனம் பெற்றுளிர்கள்.
    பெரியோர் தரிசனம் உங்களுக்கு இளைபாற recharge என்றால் உங்கள் பதிவு எங்களுக்கு அதே உணர்வை தருகிறது.
    பழனி மலை ஏறி வந்த பிறகு உங்களுக்கு எப்போதும் ஏறு முகம் தான்
    சிவதொண்டு ஒன்றே முழுமையான தொண்டு.
    ஈசனே வண்ணத்து பூச்சியாக அய்யாவை சுற்றும் போது நீங்கள் அவர் தாழ் பணிவதில் சந்தோசமே.

  2. மதிப்பிற்குரிய சுந்தர் அவர்கலுக்கு,

    உங்களின் உயரிய சேவைக்கு ஆண்டவன் என்றென்றும் துணை இருக்க குடும்பத்துடன் பிரார்த்திக்கிறோம்.

  3. நல்லாவின் பால்முளுவதும் கன்றுகில்லை…..
    நறும்பூவின் மணம் முழுவதும் சோலைக்கில்லை…..
    நெல்லாகும் கதிர்முளுவதும் நிலத்திகில்லை……
    நிறைகின்ற நீர்முளுவதும் குளத்துகில்லை…….
    பல்லாரும் கனிமுலுவதும் மரத்துகில்லை…..
    பண்னரம்பின் இசைமுலுவதும் யாழுக்கில்லை……
    எல்லாம் பிறர்க்குழைக்க காணுகின்றேன்…..
    என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்!…வேண்டும்!…..
    .
    காலை முற்றோதல் தொடங்கும் போது “நமசிவாய வாஅழ்க! நாதந்தாள் வாஅழ்க! என்று தமதோரன் அய்யா பாடதொடங்கியது முதல் “செம்மைநலம் அறியாத” என்று 51 பதிகம் பாடி முடித்த அந்த நொடி வரை அந்த இடத்தின் ஒருவித அமைதியான மனதிற்கு இதமான ஒரு சூழல் உருவானதை அனுபவதித்தால் மட்டுமே தெரியும்….
    .
    வாழ்வின் பரபரப்புகிடையே நல்லோர்களை சந்திக்கவும் அவர்களின் ஆசியை பெறுவதும் என்று நம்மால் முடியாத காரியம்… என் வாழ்வில் அப்படி ஒரு காரியத்தை என்னக்கு ஏற்படுத்தி கொடுத்த அந்த ஆண்டவனுக்கும் இந்த தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்….
    .
    மாரீஸ்வரன்

  4. இதை படிக்கும்போது நம் ஊரிலும் “திருவாசகம் முற்றொதல்” நடக்காதா எனவும் நாமும் அவர்களை சந்திக்க மாட்டோமா எனவும் ஏங்க வைத்தது. இருந்தாலும் நாம் சந்தித்தால் கூட நமக்கு மட்டுமே வேண்டுவோம். சுந்தர்ஜி சந்தித்தது நம் எல்லோரின் நலனுக்கும் தானே. நன்றி

  5. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நீங்கள் செய்யும் தொண்டு போற்றுதலுக்குரியது. இந்த பதிவின் மூலம் தொண்டு என்று சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தை தந்துள்ளீர்கள்.

    அன்பே சிவம்

  6. புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அருமை !!!

    முற்றோத்தல் விழாவில் நேரில் பங்குபெற்றதுபோல் உணர்கிறோம் – சிவனடியார்களின் ஆசியை பரிபூரணமாக பெற்றதுபோன்று உள்ளம் எல்லை இல்லா மகிழ்ச்சியில் திளைக்கிறது !!!

    வாழ்க உங்கள் திருப்பணி
    தொடரட்டும் உங்கள் ஆன்மீக தேடல்கள்

    வாழ்க வளமுடன் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *