ஏற்கனவே பொருட்களை இழந்துவிட்ட இவர்களுக்கு பசியெடுக்க…. அந்த பகுதியில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார்கள். மிகப் பெரும் முயற்சிக்கு பிறகு – கிட்டத்தட்ட பசியால் மயக்கமடைந்து விழும் நேரத்தில் – ஒரே ஒரு மாம்பழம் இவர்களுக்கு கிடைக்கிறது.
இருப்பதோ மூன்று பேர்… அதுவும் கொலைப் பட்டினி. ஒரே ஒரு மாம்பழத்தை எப்படி சாப்பிடுவது ?
“இறைவா நீ தான் எங்களுக்கு ஏதேனும் ஒரு வழி சொல்லவேண்டும்” என்று பிரார்த்திக்கிறார்கள்.
உடனே அவர்கள் முன் தோன்றிய இறைவன், “உங்கள் பிரச்னையை போக்குகிறேன். கவலை வேண்டாம். உங்கள் மூவருக்கும் ஒரு சிறிய பரீட்சை வைக்கிறேன். அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கிறீர்களோ உங்கள் ஞானத்தை வெளிப்படுகிறீர்களோ அதை பொறுத்து அருள் செய்கிறேன். நீங்கள் மூவரும் பசியாறுவதற்கு நீங்களே ஒரு வழியை சொல்லுங்களேன். அது நிகழுமாறு நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்று கூறுகிறார்.
முதலாமவன் சொன்னான் : “நாங்கள் மூவரும் சாப்பிட இன்னும் அதிக மாம்பழங்கள் வேண்டும். எனவே அதிக மாம்பழங்களை தோன்றச் செய்!”
இறைவன், “உன் பதிலில் ஞானம் இல்லை. நான் எதிர்பார்ப்பதும் இல்லை” என்று கூறுகிறார்.
அதாவது நம்மிடம் உள்ள ஆற்றலை உபயோகிக்காமல் பிரச்னைக்கு மாயமந்திரம் மூலம் தீர்வு காண முயலக்கூடாது. NEVER EXPECT MAGIC FROM GOD. BUT MIRACLE.
முதலாமவனுக்கு இறைவன் சொன்ன பதிலை மனதில் வைத்து இரண்டாமவன்… “பழத்தை நாங்கள் மூவரும் சாப்பிட்டு பசியாறுவதற்கு ஏற்ப மிகப் பெரியதாக ஆக்கு. அது போதும்!” என்றான்.
“இது கூட நான் எதிர்பார்க்கும் தீர்வு அல்ல” என்கிறான் இறைவன்.
பிரச்சனைகளை சமாளிப்பதற்கு நம்மிடம் இருக்கும் சக்தியை – ஆதாரத்தை – பெருக்கும்படி (MULTIPLY) கேட்கக்கூடாது. ஏனெனில் இதற்கு முடிவே கிடையாது. ஆண்டவன் எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று தான் மனம் கேட்கும்.
மூன்றாமவன் உண்மையில் ஒரு சிறந்த பக்திமான். ஞானி. “இறைவா நாங்கள் பசியோடிருந்தாலும் பெருமிதத்துடன் உள்ளோம். இந்த ஒரு பழமே எங்கள் பசியை தீர்க்க போதும் என்கிற அளவிற்கு எங்கள் மூவரின் உருவத்தையும் மிகச் சிறியதாக்கிவிடு. எனக்கு அது போதும்!” என்கிறான்.
இம்முறை கைகளை தட்டும் இறைவன்…. “மிகச் சரியான பதில். நான் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது இத்தகைய மனோபாவம் தான். எனக்கு முன்னே தன்னை சிறுமைபடுத்திக்கொண்டு அடக்கத்துடன் இருப்பவர்களே எனது அருளை பெறமுடியும். மேலும் பிரச்சனைகளை சமாளிக்க மாற்றத்தை வெளியே எதிர்பார்ப்பதற்கு பதில் அனைவரும் தங்களிடம் முதலில் அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.”
மூன்றாமவன் சொன்ன பதிலில் தன் எத்தனை எத்தனை அர்த்தங்கள். எத்தனை அற்புதமான பதில்….!!!!!!!!!!
அவனருளை பெற மாற்றம் நம்மிடம் வேண்டும்.
பிரச்னைகளை சமாளிக்க அதிலிருந்து தப்பிக்க சுலபமான வழிகளை தேடுபவர்களுக்கு நடுவே ஏதாவது தியாகத்தை செய்து பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். எதையுமே தியாகம் செய்யாமல் அவனருளை எதிர்பார்ப்பது வீண் வேலை. எதையுமே இழக்காமல், தியாகம் செய்யாமல், நாம் அவனருளை பெறவேண்டும் என்று கருதுவதால் தான் இறைவன் நம்மிடம் பலநேரங்களில் பாராமுகமாக இருக்கிறான்.
மேற்கூறிய சந்தர்ப்பங்களில் சுயநலமே நம்மை ஆட்கொள்கிறது. எதுவும் இழக்கக்கூடாது. ஆனால் எல்லாம் வேண்டும். இது எப்படி????
கடவுடளிடம் ஒன்றை கேட்கும்போது நம்மை சிறுமைப்படுத்திக்கொண்டு, பக்தியோடு அவனிடம் கேட்கவேண்டும். நம்முடைய உல்லாசத்தை சுகபோகத்தை சற்று குறைத்துக்கொண்டு அடக்கத்தோடு அவனிடம் கேட்டால் அவன் நமது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பதை காணலாம்.
இது ஒன்றே இறையருளை பெற உறுதியான இறுதியான வழி!
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?
==========================================================
குறள் நெறிப்படி வாழும் ஒரு உத்தமர்!
மதுரை டால்பின் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் திரு.அரு.ராமனாதன்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள் 231)
என்கிற குறள் நெறிப்படி வாழும் ஒரு உத்தமர்.
பெரிய கொடையாளர். சைவம், வைணவம் இரண்டையும் இரு கண்களாக போற்றி வருபவர். திருவாசகத்தை தனது உயிர் மூச்சாக கருதி வாழ்பவர்.
அண்மையில் பழனியில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது சொந்த செலவில் சுமார் 4000 திருவாசகம் புத்தகங்கள் அச்சடித்து இலவசமாக வழங்கியிருக்கிறார்.
அத்தனை புத்தகமும் தரமான காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு நீடித்த உபயோகத்திற்கு ஏற்றவண்ணம் சிறப்பாக பைண்ட செய்யப்பட்டிருந்தன. (ஒரு நூலின் மதிப்பு எப்படியும் ரூ.100/- இருக்கும்.). அத்தனை புத்தகங்களையும் வந்திருந்தவர்களுக்கு இலவசமாகவே கொடுத்தார் திரு.ராமனாதன்.
(திரு.அரு.ராமனாதன் அவர்கள் பழனியில் அளித்த திருவாசகம் புத்தகம் தான் கீழே நீங்கள் பார்ப்பது. அட்டையில் பார்த்தீர்களா யார் என்று ? நம்மை என்றும் ஆட்கொள்ளும் அருணாச்சலேஸ்வரர்!)
* ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியை தனது பள்ளிகளில் அளிக்கிறார்.
* மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வண்ணம் பல போட்டிகள் நடத்தி பல சாதனையாளர்களை இந்த விளையாட்டில் ஆண்டு தோறும் உருவாக்கி வருகிறார். அந்த போட்டிகளில் வெற்றி பெறு ம் மாணவர்களுக்கு இலவசக் கல்வி முதல் அனைத்தும் வாரி வழங்கப்படுகிறது.
* இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
* மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டு தை மாதம் பொங்கல் தினத்தன்று சர்வசமய பொங்கல் டால்பின் பள்ளியில் வைக்கப்படும். அன்றைய தினத்தில் டால்பின் பள்ளியில் பணிபுரியும் பல்வேறு சமயங்களை சேர்ந்த ஆசிரியர்களை கொண்டு 108 பொங்கல் பானைகள் வைத்து தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடப்படும்.
* தனது பள்ளிக் குழுமத்தின் சார்பில் அனைத்து மதத்தை சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கும் உதவிகளை வாரி வழங்கி வருகிறார். தொண்டு செய்வதில் சாதி சமய வேறுபாடுகளை இவர் பார்ப்பதே இல்லை.
* மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல பல முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அரிசி, கட்டில்கள், குளிர் சாதனப்பெட்டி, கிரைண்டர், படுக்கை விரிப்புக்கள், என பலவற்றை நன்கொடையளித்துள்ளார்.
* இவருடைய பள்ளியில் பல ஆதரவற்ற ஏழை மாணவர்கள் இலவசமாக படித்து வருகின்றனர்.
இப்படி இவருடைய அறப்பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
அடுத்து சமயப் பணிகள் என்று பார்த்தால் அது ஒரு பெரிய பட்டியலே உள்ளது. மதுரை ஒத்தைகடையில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவில், என பல கோவில்களுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து பல இன்றியமையாத பொருட்களை வாங்கி தந்திருக்கிறார்.
(இவரை பற்றியும் இவரது சேவை மற்றும் சாதனை வரலாற்றை பற்றியும் இவரது விரிவான பேட்டி நம் தளத்தில் இடம்பெறவிருக்கிறது!)
இவரின் நட்பு நமக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம். நல்லோர்களை என்னிடம் நாளுக்கு நாள் சேர்த்து திருவிளையாடல் புரிந்துவரும் அருணாச்சலேஸ்வரரின் கருணையே இதுவன்றி வேறொன்றும் இல்லை.
இவரின் அறிமுகம் நமக்கு கிடைத்தது எப்படி, நமக்கு இவர் செய்த உபகாரம் என்ன, நமது தளத்திற்கு செய்த உபகாரம் என்ன ஆகியவற்றை தெரிந்துகொண்டால் அந்த அருணாச்சலேஸ்வரர் நம்மை எந்தளவு கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு புரியும். இது பற்றி ஒரு தனி பதிவு விரைவில் தருகிறேன். இது பிரார்த்தனை பதிவு என்பதால் இந்தளவில் நிறுத்திக்கொள்கிறேன்.
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா ?
========================================================
மகனின் காலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீர்ந்து அவர் குடும்பத்தை காக்கவேண்டும்!
அன்புள்ள திரு.சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா நண்பர்களுக்கு,
வணக்கம். நேற்று இரவு உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நீண்ட நாட்களாக பழகிய நண்பர் ஒருவருடன் பேசியது போன்ற ஒரு உணர்வு மனதில் ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது. நான் வணங்கும் இறைவன் என்னை நல்லவர்கள்பால் இணைத்திருக்கிறான் என்று எண்ணும்பொழுது மனம் மிகவும் நெகிழ்கிறது.
“என்னுடைய இளைய மகன் திரு.கௌதம் ஸ்ரீகண்டன் (வயது 23) அவர்கள் சில நாட்களாக கால் வலியினால் அவதியுற்று வருகிறார். மருத்துவர்களை அணுகியதில் பல்வேறு பரிசோதனைகள் செய்து அவர் “AVASCULAR NECROSIS” என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சில நாட்கள் கழித்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும் என்று கூறி தற்போது அவருக்கு முழு ஓய்வுடன் சில மருந்துகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.
பொறியியல் பட்டதாரியான அவர் வேலைக்கு செல்ல முடியாத நிலையையும் எங்கள் வீட்டின் செல்லப்பிள்ளைக்கு இப்படி ஒரு உபாதையா என்றும் நினைத்து நாங்கள் மிகவும் வேதனையில் ஆழ்ந்திருக்கிறோம்.
அவர் அறுவை சிகிச்சை ஏதுமின்றி மருந்துகளால் மட்டுமே குணமடைய வேண்டும் என்றும் கூடிய விரைவிலேயே அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
நன்றி!
என்றும் அன்புடன்,
V.கோபிநாத்,
திருச்சி-620 007
07.08.2013
========================================================
வாலிபம் வயோதிகம் என்று பாராமல் அனைவரையும் வாட்டும் புற்றுநோய் அறவே நீங்கவேண்டும் !
நம் தள வாசகி திருமதி.சுபாஷினி அவர்களுக்கான பிரார்த்தனை வேண்டுதல். அவரின் தங்கை கணவர் திரு.ஸ்ரீரங்கன் (66) குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அடையாறு கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் பரிபூரண குணமடைந்து நலமுடன் வாழவேண்டும்.
மேலும் சுபாஷினி அவர்களின் சகோதரியின் நண்பரின் புதல்வனும் அதே மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார்கள். அவர் பெயர் சந்தோஷ். வயது 20. CHEST கேன்சர் நோயினால் பாதிக்க பட்டுள்ளார். சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்க இந்த சின்னஞ்சிறு வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் குணமடைந்து அவர் பெயரில் உள்ள சந்தோஷத்தை அடைய இறைவனின் அருளும் உங்கள் பிரார்த்தனையும்.
========================================================
அடுத்து என் பிரார்த்தனை
சமீபத்தில் வெளியான ஜூனியர் விகடன் இதழில், திடீர் திடீரென தானாகவே தீப்பற்றி எரியும் குழந்தை ஒன்றை பற்றி செய்தியை படித்தேன். விளக்கேற்றும் போதோ சமையலறையிலோ அணையும் தீக்குச்சி நம்மை சுட்டாலே துடித்து போகிறோம். அப்படியிருக்க உடல் பற்றி எரியும்போது அக்குழந்தை எத்தனை வேதனைப்படும். தன் துன்பத்தை கண்ணீரைத் தவிர வேறு வழிகளால் சொல்லக் கூட அந்த குழந்தையால் முடியாதே…. பிஞ்சு குழந்தைக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று மனம் வேதனைப்பட்டது.
தானாகவே உடல் பற்றி எரியும் குழந்தை
திண்டிவனத்தை பொம்மடிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 25), கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (21). ராஜேஸ்வரிக்கு 2 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராகுல் என்று பெயர் வைத்தனர்.
குழந்தையின் உடல் ஏதோ ஒரு காரணத்தினால் தானாகவே தீப்பற்றி எரிந்துவிடுகிறது. இது பற்றி நாம் ஜூனியர் விகடனில்
படித்தபோது நம்பாமல் இருக்க முடியவில்லை. அமானுஷ்யமா அறிவியலா என்று காரணத்தை இதுவரை கண்டுபிக்க இயலவில்லை. இதுவரை நான்கைந்து முறை குழந்தை உடல் தீப்பற்றி எரிந்துவிட்டது.
ஏதோ சக்தி குழந்தையின் உடலில் புகுந்திருப்பதாக கூறி ஊரே இவர்களை ஒதுக்கிவைத்துவிட்டது. தனது குழந்தையை கைகளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கும் கோவில்,மசூதி, சர்ச் என்று வழிபாட்டு தலங்களுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி. இதற்கிடையே மனவேதனையில் குழந்தையின் தாய் ராஜேஸ்வரி நேற்று விஷம் குடித்தார். அவரை முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் தந்தை கர்ணன் கூறியதாவது:– “எனது குழந்தையை எங்கு கொண்டு சென்றாலும் அங்கு விபரீத சம்பவம் நடந்து வருகின்றது. குழந்தை உடலில் தீபிடிப்பதுடன் அந்த ஊரில் உள்ள வீடுகளிலும் தீ பிடிப்பதால் ஊர்மக்கள் அச்சம் அடைந்து எங்களை ஊருக்குள்ளேயே விடாமல் விரட்டியடிக்கின்றனர். இதனால் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். குழந்தையை நாங்கள் தொடர்ந்து வளர்த்தால் ஏதேனும் பிரச்சினை ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது. எனவே குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விடலாமா? என்று யோசித்து வருகிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு பெண், குழந்தையை நல்லபடியாக பெற்று வளர்ப்பதே போராட்டம் என்று ஒரு சூழல் நிலவும் இந்த சமூகத்தில் இப்படி ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அவர்கள் படும் பாடு நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறை நீங்கி பெற்றோர் நிம்மதியும் சந்தோஷமும் பெற வேண்டும். அதுவே நம் பிரார்த்தனை.
========================================================
திரு.கோபிநாத் அவர்களின் மகன் திரு.கௌதம் ஸ்ரீகண்டன் அவர்களுக்கு காலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விரைவில் நீங்கவேண்டும். பணிக்கு சென்று பால் வார்க்கவேண்டும். மேலும் திருமதி.சுபாஷினி அவர்களின் தங்கை கணவர் திரு.ஸ்ரீரங்கன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும். 20 வயதே நிரம்பிய இளைஞன் சந்தோஷ் அவர்களுக்கும் புற்றுநோய் நீங்கி நலம் பெற்று அவர் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடி தரும் ஒரு பிள்ளையாக வாழவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். குழந்தை ராகுலுக்கு ஏற்பட்டுளால் வினோத பிரச்னை நீங்கி அக்குழந்தை நலம்பெறவும் பெற்றோர் மனம் குளிரவும் பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
============================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 11, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ‘மகா பெரியவா’ தொண்டர் திரு.பி.சுவாமிநாதன் (ஆன்மீக எழுத்தாளர் & சொற்பொழிவாளர்)
சுந்தர்ஜி,
இந்த வாரம் பிரார்த்தனையில்தலைமை தங்க இடம் பெற்றுள்ள மதுரை டால்பின் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் திரு.அரு.ராமனாதன்
அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றேன். அவரது அற பணிகளை பற்றி தாங்கள் எழுதியது மிகவும் பிரமிப்பாக உள்ளது. அவருடைய அற செயல்கள் மென் மேலும் வளர்ச்சியடைய வேண்டி எல்லாம் வல்ல அருணாச்சலரை பிரார்திகின்றேன்.
இன்றய பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவரர் பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியோடு வாழ நிச்சயமாக அந்த மஹா பெரியவா வழிகாட்டுவர். இது சத்தியமான உண்மை.
நானும் பிரார்த்தனை கிளப்பில் என் மகளுக்கு நல்ல வேலை வேண்டி பிரார்த்தனை செய்ததில் என் மகளுக்கு விப்ரோ வில் வேலை கிடைத்து உள்ளது. வரும் 12.08.2013 அன்று வேலையில் சேர உள்ளாள். எனக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை திரு சுந்தர் அவர்களுக்கு மெயில் செய்து உள்ளேன் அவர் அதை தனி பதிவாக தர இருக்கின்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
நன்றி.
மூன்றாமவன் பதிலில் உள்ள பொருள் மிகவும் ஆழமானது. இறைவன் முன்னால் நம்மை சிறுமை படுத்தி மனதார வேண்டினால் நிச்சயம் அருள் உண்டு. மிகச்சிறிய கதையில் மிகப்பெரிய சரணாகதி தத்துவம்.
குழந்தை ராகுலைப்பற்றி நானும் படித்தேன். நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனது பெற்றோர்களின் மனவேதனை எனக்கு புரிகிறது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம், நிச்சயம் நல்லது நடக்கும்.
சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு..
அணைத்து பிரார்த்தனை வாசகர்கள்லாகவும் குழந்தை ராகுல்கவும்
பிரார்த்தனை செய்ய கடமை பட்டுஇருகிறோம் சார்..
மிக்க நன்றி சார்…
இன்றைய அவசர வர்த்தக உலகில் திரு ராமநாதன் அவர்களின் சேவை மனப்பான்மை, அவர் செய்யும் தர்ம காரியங்கள் இளைஞர் சமுதாயத்திற்கு போய் சேரவேண்டிய உதாரண வாழ்க்கை முறை. இவர் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குகிறார் என்பது நமக்கு பெருமை. திரு ராமநாதன் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களின் ஆதரவு ரைட் மந்த்ராவுக்கு மிக பெரிய பலம். நன்றி சுந்தர்.
சுந்தர்ஜி,
குழந்தை ராகுலின் பிரச்சனை மனதை பிசைகிறது . என்ன இயற்கையின் விநோதம் சிறு குழந்தையை இந்த விதத்தில் சோதிக்கிறது. அவர் குணமாகவும் மற்ற சகோதர சகோதிரிகளின் பிரார்த்தனை நிறைவேறவும் மஹா பெரியவரிடம் பிரார்த்திப்போம். திரு ராமநாதன் போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவு நம் தளத்திற்கு தொடர்ந்து கிடைப்பது இறைவனனின் கருணையும் உங்களது தொடர் முயற்சியும் மூலமே. நன்றி
ஆன்மீகத்தேடலில் மற்றுமொரு இனிய நண்பரான திரு ராமநாதன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி – சுந்தர் அவர்களுக்கு நன்றிகள்
சமீபமாக தொலைகாட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் அதிகம் காணப்பட்ட செய்தி அந்த இலவம் பஞ்சு மேனி தாமாகவே தீயில் போசுங்குவது – ஆம் குழந்தை ராகுல்
இந்த விஞ்ஞானயுகத்தில் இது போல கூட நடக்குமா என்று எண்ணி வருந்த வைக்கும் அக்குழந்தையின் நிலை – உயிர் வாழ துடிக்கும் குழந்தை ஒருபுறம் – அக்குழந்தையை பெற்றெடுத்த ஒரே குற்றத்துக்காக அவர்களை வாழ விடாமல் துரத்தும் மனித மிருகங்கள் மற்றொருபுறம் – எப்படியாவது அக்குழந்தையை காப்பாற்றதுடிக்கும் மனித தெய்வங்களான மருத்துவர்கள் ஒரு புறம் – என்ன கொடுமை இது? – அந்த கருணாமூர்த்தி அவர்களை என் இப்படி சோதிக்க வேண்டும் ? – அந்த பிஞ்சு முகத்தை காணும்போது மனம் கணக்கிறது
இறைவா
மானிடபதர்களாகிய நாங்கள் எத்துணையோ தவறு செய்கிறோம்
இருந்தபோதும் எங்கள் மீது கருணை கொண்டு எங்களை மன்னித்து காத்து ரட்சிப்பது உமது கடமையல்லவா?
நல்லோர் பிரார்த்தனை நிறைவேறுவது உறுதி என்று நம்புவோமாக
நமது குரு மஹா பெரியவரின் கருணையினாலும் அந்த பரம்பொருளின் க்ருபா கடக்ஷத்தினாலும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நல உள்ளங்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறி நீள் ஆரோக்யத்துடன் வளமோடும் மகிழ்ச்சியோடும் வாழ அந்த பரம்பொருள் அருள் புரிவாராக !!!
வாழ்க வளமுடன் !!!
முருகன் அவர்களே, எத்தனை நாள் கழித்து வந்தாலும் ஒவ்வொரு பதிவாக படித்து அவற்றுக்கு விரிவான பின்னூட்டம் அளித்து, சம்பந்தப்பட்ட பதிவு குறித்து உங்கள் கருத்தையும் கூறி, நம் வாசகர்களுக்கும் அதில் ஒரு மெசேஜ் கூறி… உங்களுக்கும் உங்களது பண்புக்கும் ‘நன்றி’ என்று ஒரு வார்த்தையில் பதில் கூற முடியவில்லை.
இருப்பினும் .கூறுகிறேன்.. ‘நன்றி!’
– சுந்தர்