சாதாரண நாளிலேயே அன்னதானம் செய்தாலே பெரும் புண்ணியம். அதுவும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை போன்ற விஷேட நாட்களில் செய்தால் பன்மடங்கு புண்ணியம். (இது குறித்த கதை ஒன்றைத் தான் சில நாட்களுக்கு முன்பு நாம் அளித்தோம்!)
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு தங்கள் வாழ்வாதாரங்களாக விளங்கும் நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழியும் விளைந்தது. ஆடிப்பெருக்கு நாளென்பது புதிய முயற்சிகளை செய்வதற்கு ஏற்ற நாள். அன்று செய்யும் எந்த செயலும் விருத்தி அடையும் என்பது ஐதீகம்.
இத்தனை மகத்துவம் வாய்ந்த நன்னாளை நாம் தவற விட நமக்கு விருப்பமில்லை. அன்றைக்கு ஏதேனும் நல்ல விஷயம் செய்யவேண்டும் என்று தோன்றியது. என்ன வென்று மட்டும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இடை விடாத வேலைப்பளு காரணமாக ஆற அமர சிந்திக்க கூட முடியவில்லை.
நாமெல்லாம் அதாவது – தமிழ்நாட்டில் – இருப்பவர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் ஒருவர் இங்கு தர்மம் செய்ய நினைத்தால் அதை பெற்று கொள்வதற்கு தகுதியுடைய பலர் இங்கு இருக்கிறார்கள்.ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல.
நாமெல்லாம் அதாவது – தமிழ்நாட்டில் – இருப்பவர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் ஒருவர் இங்கு தர்மம் செய்ய நினைத்தால் அதை பெற்று கொள்வதற்கு தகுதியுடைய பலர் இங்கு இருக்கிறார்கள்.ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல.
ஆடிப்பெருக்கு அன்று நம் தளம் சார்பாக தானத்தில் சிறந்த தானமாகிய ‘அன்னதானம்’ செய்ய முடிவு செய்தோம். பிரேமவாசம் குழந்தைகளுக்கு எப்படியும் மாதம் மூன்று நான்கு முறை உணவை நம் தள வாசகர்கள் மூலம் ஸ்பான்சர் செய்துவிடுகிறோம். இம்முறை வேறு எங்காவது செய்யவேண்டும் என்று தோன்றியது.
ஆனால் நாட்கள் குறைவாக இருந்ததால் எதையும் திட்டமிட முடியவில்லை. அலுவலகம் சென்றுவிட்டால் வேறு விஷயங்கள் பற்றி யோசிக்க கூட நேரம் கிடைப்பதில்லை. ஆகையால் ஆடிப்பெருக்கிற்கு முந்தைய தினம் (வெள்ளிக்கிழமை) வரை என்ன செய்வதென்று முடிவுக்கு வரை முடியவில்லை. அடுத்த நாள் ஆடிப்பெருக்கு அன்று எனக்கு வேலை நாள். (சனி எனக்கு விடுமுறை அல்ல!) நினைத்தபடி எங்கும் சென்று எதுவும் செய்யமுடியாது. அப்போது தான் திடீரென்று சைதையில் உள்ள ஆதரவற்ற & நரிக்குறவ இனத்து குழந்தைகள் தங்கி படிக்கும் திருவள்ளுவர் குருகுலம் நம் நினைவுக்கு வந்தது.
ஆடிபெருக்கு அன்று மேற்படி திருவள்ளுவர் குருகுல மாணவர்களுக்கு வடை பாயசத்துடன் உணவளிப்பது என்று முடிவு செய்து திரு.ரகுபதி அவர்களை தொடர்புகொண்டு அடுத்த நாள் மாணவர்களுக்கு மதிய விருந்தளிக்க விரும்புவதாக சொன்னேன்.
மிகவும் மகிழ்ச்சியடைந்த திரு.ரகுபதி “என்ன விசேஷம் சார்?” என்று கேட்க, அவரிடம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ரைட்மந்த்ரா வாசகர்கள் அன்னதானம் செய்ய விரும்புகிறார்கள் என்று சொன்னேன்.
“கொஞ்சம் இருங்க… முதல்ல நாளைக்கு ஸ்லாட் ஃப்ரீயா இருக்கான்னு பார்க்குறேன்…” என்றவர் பள்ளி மேனேஜரிடம் பேசிவிட்டு திரும்பவும் நமது லைனுக்கு வந்தார்.
“தாராளமா பண்ணலாம் சார்… நாளைக்கு மதியம் ப்ரீ தான். வேற யாரும் புக் பண்ணலை” என்றார்.
நமக்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.
“சார்… நாளைக்கு மதியம் நான் நேர்ல வந்து பணம் தர்றேன். மத்த எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுங்க” என்று கேட்டுக்கொண்டேன்.
“தாராளமா… எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறோம். நீங்க நேர்ல வந்து அன்னதானத்தை துவக்கி வெச்சிட்டு பணம் கொடுத்தா போதும்” என்றவர் சொன்னபடியே அடுத்த நாள் வடை பாயசத்துடன் கூடிய மதிய உணவை ஏற்பாடு செய்துவிட்டார்.
இது திடீர் ஏற்பாடு என்கிறபடியால் நண்பர்கள் அனைவரிடமும் விஷயத்தை கூறமுடியவில்லை. விஷயத்தை சொன்னவர்களில் ராஜாவும், மாரீஸ் கண்ணனும் வருவதாக சொன்னார்கள். அண்ணாசாலையில் திருவள்ளுவர் குருகுலத்திற்கு அருகிலேயே நம் வாசகர் பரிமளம் அவர்கள் பணிபுரியும் அலுவலகம் இருப்பதால் அவர் வருவதாக சொன்னார்.
இதையடுத்து அலுவலகத்தில் சரியாக உணவு இடைவேளை நேரத்தில் அனைவரும் இங்கு வந்துவிட்டோம். எனக்கு தி.நகரில் அலுவலகம் என்பதால் இங்கு வருவதற்கு கஷ்டமாக இல்லை. ஆனாலும் எப்படியும் மதியம் வந்து செல்ல ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகிவிடும் என்பதால் மொத்தமாக ஒரு மணிநேரம் பர்மிஷன் போட்டுவிட்டு வந்தேன்.
நாங்கள் சரியாக ஒவ்வொருவராக வந்து சேர 1.10 ஆகிவிட்டது. குழந்தைகள் தயார் நிலையில் இருந்தனர்.
நாம் வந்தவுடன் ரகுபதி ஐயா அவர்கள் நம்மை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தினார். நமது பணிகளை பற்றி குழந்தைகளிடம் நெகிழ்ச்சியாக கூறியவர் நமக்காக பிரார்த்திக்கும்படி சொன்னார். ஆனால் நாம் குறிக்கிட்டு இது ரைட்மந்த்ரா வாசகர்கள் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி. எனவே இதற்குரிய நன்றி எங்கள் வாசகர்களுக்கும் எம் பணிகளுக்கு துணை நிற்பவர்களுக்கும் தான் போய் சேரவேண்டும். அதை கூட அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை என்பதால் சொல்கிறேன்.”
(அன்னமிடுபவர்களுக்கு தான் முழு பெருமையே தவிர கரண்டிக்கு எதற்கு?)
இது ரைட்மந்த்ரா வாசகர்கள் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி. எனவே இதற்குரிய நன்றி எங்கள் வாசகர்களுக்கும் எம் பணிகளுக்கு துணை நிற்பவர்களுக்கும் தான் போய் சேரவேண்டும். அதை கூட அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை என்பதால் சொல்கிறேன்.
அடுத்து குழந்தைகளுக்கு நண்பர் ராஜா, மாரீஸ் மற்றும் பரிமளம் ஆகியோர் தங்கள் கைகளால் உணவுப் பொருட்களை பரிமாறினார்கள்.
உணவு உண்ணத் துவங்கும் முன், திருக்குறள் சிலவற்றை குழந்தைகள் சொன்னார்கள். ஒரு மாணவன் திரு.ரகுபதி அவர்கள் எழுதி தந்த குறிப்பை படித்தான்.
“ஆடிப்பெருக்கை முன்னிட்டு ரைட் மந்த்ரா நண்பர்கள் & வாசகர்கள் இன்று நமக்கு மதிய உணவை வடை பாயசத்துடன் அளிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்!” என்று கூற அனைத்து குழந்தைகளும் அதை அப்படியே தங்கள் மழலை மொழிகளில் சொன்னது கண்கொள்ளா காட்சி.
தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. சில வினாடிகள் கழித்து குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்தனர். நம்மையும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுமாறு திரு.ரகுபதி கூற நாம் சற்று தயங்கினோம்.
“இது கோவில் பிரசாதம் போல. இவர்களுடன் நீங்கள் அமர்ந்து நிச்சயம் சாப்பிடவேண்டும்.” என்று வற்புறுத்த, அவரின் அன்புக்காக நாங்களும் அமர்ந்து சாப்பிட்டோம்.
அட…அட…அட… தேவாமிர்தம் போங்கள். பருப்பு சாம்பார், பொரியல், ரசம், மோர், வடை பாயசம் ஊறுகாய், அப்பளம் என திருமண பிரசாதத்திற்கு இணையாக இருந்த சாப்பாடு அது. ஒரு நன்னாளில் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட வாய்ப்பு கிடைத்தது நாம் செய்த பாக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
குழந்தைகள் சாப்பிடுவதை பார்த்த நமக்கு ஏற்பட்ட மனநிறைவை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அதை அனுபவிக்கும்போது தான் தெரியும். மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.
நாள் கிழமை விசேஷம் என்றால் வடை பாயசத்துடன் சாப்பிடுகிறோம். ஆனால் அப்படி சாப்பிட வாய்ப்பில்லாதவர்கள் பலர் உண்டு. அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் அதே போன்று சாப்பாடு போட்டு அவர்களுடன் அமர்ந்து நாமும் சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் இருக்கிறதே…. அனுபவித்தால் தான் புரியும்.
நம் விருப்பம் என்ன தெரியுமா ?
உழைத்து களைத்து நாலு பேரை சந்தோஷப்படுத்தி, அப்பா அம்மாவுக்கு நல்ல பிள்ளையா, மனைவிக்கு நல்ல கணவனா, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா, நண்பர்களுக்கு ஒரு நல்ல தோழனா இருந்து, முடிந்தவரை எல்லாருக்கும் ஒப்புரவு செய்து மனநிறைவோடும் தன்னிறைவோடும் வாழ்ந்து வந்தால் நீங்கள் எந்த நீதி நூலையும் / பக்தி நூலையும் படிக்கவேண்டியதில்லை. கோவிலுக்கும் போகவேண்டியதில்லை. வாழும் வாழ்க்கையே வழிபாடு என்று ஆகிவிட்ட பிறகு கோவில் எதற்கு? நம் வாசகர்கள் அனைவரும் இந்நிலையை எட்டவேண்டும் என்பதே நம் விருப்பம்.
நாம் சாப்பிட்டுக்கொண்டே குழந்தைகள் சாப்பிடும் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா குழந்தைகளும் அப்பளத்தை விரும்பி முதலில் சாப்பிடுவது புரிந்தது.
எனக்கு நேரெதிரே அமர்ந்து சாப்பிட்ட ஒரு பெண் குழந்தை தேவதை போல இருந்தாள். முருகப்பெருமானின் துணை வள்ளியின் ஞாபகம் தான் வந்தது. எனக்கு அருகில் பக்கவாட்டில் ஒரு குழந்தை சாப்பிட்டபடியே தூங்கிவிட்டான். அவன் பதட்டப்படாதபடி அவனை எழுப்ப நாங்கள் செய்த முயற்சி காமெடி கலாட்டா.
சற்று நேரத்தில் குழந்தைகள் சாப்பிட்டு முடித்துவிட குழந்தைகள் சாப்பிட்ட தட்டை கவனிக்கும்படி திரு.ரகுபதி அவர்கள் என்னிடம் சொன்னார். அப்போது தான் அனைவரின் தட்டையும் கவனித்தேன். எதுவும் வீணாக்காமல் அனைத்தும் சாப்பிடப்பட்டு தட்டு சுத்தமாக இருந்தது. இதற்காக ரகுபதி அவர்கள் அக்குழந்தைகளை மிகவும் பழக்கியிருப்பதை புரிந்துகொண்டேன். என் இலையை சற்று பார்த்தேன். மிச்சம் மீதி இருந்த பதார்த்தங்கள் எதையும் வீணாக்காமல் முழுமையாக சாப்பிட்டுவிட்டு தான் எழுந்தேன்.
இங்கு நாம் பார்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பின்னாலும் ஒரு மிகப் பெரிய கதை இருப்பதாக திரு.ரகுபதி நம்மிடம் சொன்னார். (அதில் சில நம்மிடம் சென்ற முறை சென்றபோது கூறியிருக்கிறார். நெஞ்சை உருக்குபவை அவை!). இவர்களில் பெரும்பாலானோர் ஆதரவற்ற, தாழ்த்தப்பட்ட, நரிக்குறவ இனத்து குழந்தைகள்.
குழந்தைகள் சாப்பிட்டு முடித்தவுடன் அவரவர் தட்டை சுத்தமாக கழுவி தங்கள் இடத்தில் வைத்தார்கள்.
அனைவரிடமும் விடைபெற்று கிளம்பி வந்தோம். வெளியே வரும்போது நம்மை பார்த்த குழந்தைகள் அனைவரும் மறக்காமல் ‘தேங்க்யூ அங்கிள்’ ‘தேங்க்யூ அங்கிள்’ என்றார்கள். வள்ளுவர் சொன்ன மிகப் பெரிய அறத்தை செய்த திருப்தி மனதில் ஏற்பட்டது. மனது நிறைந்தது. நம் வாழ்க்கையும் தான்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள் 322)
குழந்தைகள் இப்படி வடைபாயசத்தொடு சாப்பிட நாம் செலுத்திய தொகை ரூ.3500/-
மேற்படி அன்னதானத்தை பொருத்தவரை நம் வாசகர்கள் சிலர் என்னிடம் பணம் கொடுத்து வைத்துள்ள + நாம் கொஞ்சம் கையில் இருந்து போட்ட பணத்தை கொண்டு தான் தொகையை செலுத்தினேன். “நீங்கள் விரும்பும் எந்த நல்ல செயலை வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். அப்போது இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறி தங்கள் பெயர்களை கூட வெளியிட விரும்பாத நம் வாசகர்கள் சிலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக மொத்தம் ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர் இது!
=============================================
அடுத்து ஆடி அமாவாசை….
ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை (செவ்வாய் 06/08/2013) என்று காலை செங்கல்பட்டை அடுத்து திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள பித்ருதோஷப் பரிகாரத் தலமான நென்மேலி சென்றுவிட்டோம். சரியான கூட்டம். இந்த அனுபவங்கள் + படங்கள் தனிப்பதிவாக கொடுத்தால் தான் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். எனவே அது தனிப் பதிவாக வரும்.
ஆடிப் பெருக்கை போலவே ஆடி அமாவாசையும் அன்னதானத்திற்கு ஏற்றது. எனவே இந்த நன்னாளையும் நாம் தவறவிட விரும்பவில்லை. பொதுவாக இது போன்ற நாட்களில் பசுக்களுக்கு தீவனம் + வைக்கோல் வாங்கித் தருவதில் நாம் கவனம் செலுத்துவோம்.
நென்மேலியில் அனைத்தையும் முடித்து நாம் கிளம்பும்போது 11.00 இருக்கும். இரண்டு மூன்று பஸ் மாறி தாம்பரம் வந்து அங்கிருந்து அப்பாவை பஸ் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாம் தி.நகர் பஸ் பிடித்து தி.நகர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது மதியம் 1.00 ஆகிவிட்டது. இரண்டு மணிநேரம் பர்மிஷன் போட்டிருந்தேன். கடைசியில் அரை நாள் ஆகிவிட்டது.
ஆடி அமாவாசைக்கு தி.நகர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தருவது என்று தீர்மானித்திருந்தோம். ஏற்கனவே குருபெயர்ச்சி அன்று இங்கு தீவனம் வாங்கி தந்திருக்கிறோம். தவிர நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இதுவரை நான்கைந்து முறை இந்த ஆலயத்தின் பசுக்களுக்கு தீவ மூட்டைகள் வாங்கித்தந்திருக்கிறோம். (Check : கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!)
பசுக்களை பார்த்துக்கொள்ளும் குரு என்பவரிடம் முன்தினம் பேசினேன். ஆடி அமாவாசையை முன்னிட்டு நம் தளம் சார்பாக தீவனம் வாங்கித் தர விரும்புவதாக சொன்னோம்.
“நீங்கள் தீவனம் இறக்கிடுங்க. நான் காலைல 7.30 மணிவரைக்கும் தான் இருப்பேன். அப்புறம் ஆபீஸ் போய்டுவேன். அதைவிட்டா சாயந்திரம் 5 மணிக்கு தான் வருவேன்” என்றார்.
ஆனால் என்னால் நிச்சயம் அந்த நேரம் வரமுடியாது என்பதால் என்ன செய்யலாம் என்று கேட்டேன்.
“நீங்க தீவன மூட்டைகளை ஆர்டர் பண்ணிடுங்க. மிக்ஸ் பண்ணி கோணியில போட்டு கொண்டுவந்து அவங்க இறக்கிடட்டும். நீங்க தீவனம் இறக்கும்போது நான் கோவிலை திறக்கச் சொல்றேன். கவலைப்படாதீங்க!” என்றார்.
எந்த கைங்கரியமாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக அது சென்று சேர்கிறதா என்று பார்க்காதவரை எனக்கு திருப்தியாக இருக்காது.
குரு அவர்கள் சொன்னது நல்ல யோசனையாக இருந்ததால் அப்படியே செய்யலாம் என்று முடிவுசெய்தேன்.
நென்மேலியில் இருந்து பஸ்ஸில் ரிட்டர்ன் வரும்போதே தீவனக் கடைக்காரருக்கு ஃபோன் செய்து தீவனத்தை ஆர்டர் செய்து, சரியாக 1.00 மணிக்கு கோவிலுக்கு கொண்டு வருமாறு கேட்டுகொண்டேன்.கோவிலை திறக்க பசுக்களை பரமாரித்துவரும் திரு.குரு ஏற்பாடு செய்திருப்பதையும் சொன்னேன்.
சரியாக நாம் கோவிலுக்கு 1.10 க்கெல்லாம் சென்றுவிட, தீவனம் வந்து இறங்கி தயாராக இருந்தது. நாம் வந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு தீவனம் கொட்டிலில் சேர்க்கப்பட்டது.
குரு அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு, மாலை பசுக்களுக்கு தீவனம் வழங்கும்போது நமது மூட்டையிளிரிந்து பிரித்து தீவனத்தை அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
சரியாக நான் அலுவலகத்தில் இருக்கும்போது 5.30க்கு கூப்பிட்டார் குரு. “சார் நீங்க வாங்கித் தந்த மூட்டையை பிரிச்சி தீவனத்தை எடுத்து மாடுகளுக்கு வெச்சாச்சு!” என்றார்.
ஆடி அமாவாசை அன்று சகல தேவதா சொரூபமாக விளங்கும் பசுக்களுக்கு அதுவும் சிவாலயத்தின் பசுக்களுக்கு உணவிட கிடைத்த பேற்றை என்னவென்று சொல்வது? திரு.குரு அவர்களின் சேவைக்கும் உதவிக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லாது தவித்தேன். அவரது ஒத்துழைப்பு மட்டும் இல்லையேல் மிகப் பெரிய காரியத்தை ஆடி அமாவாசையன்று செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
நம் தள வாசகர் திரு.கண்ணன், மற்றும் மகளிர் வாசகர்கள் சிலர் ஆகியோர் இந்த கைங்கரியத்திற்கு உதவினர். அவர்களுக்கு என் நன்றி! இந்த பணி தொடர்ந்து நடைபெறும். பசுக்களுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக நமக்கு தகவல் அளிக்குமாறு குரு அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
நாம் சேர்த்து வைக்கும் பொருட்கள் எல்லாம் நம் செல்வம் அல்ல. தான தர்மத்திற்கு, அறச் செயல்களுக்கு நாம் எவ்வளவு செலவழிக்கிறோமோ அவை தான் நம் உண்மையான செல்வங்கள்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212)
அனைத்தையும் முடித்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். ஒரு மணிநேரம் வேலை பார்த்தபிறகு உணவு இடைவேளை எடுத்துக்கொண்டேன். அப்போது அவசர அவசரமாக தயார் செய்தது தான் நீங்கள் நேற்று படித்த பதிவு.
===========================
இந்த பதிவை படித்தவுடன் உங்கள் ஒவ்வொருவருக்கும் மேற்படி நற்காரியங்களில் நீங்களே நேரடியாக பங்குபெற்றதை போன்ற திருப்தியும் சந்தோஷமும் ஏற்படுகிறது அல்லவா? அந்த சந்தோஷத்தை உங்களுக்கு தரவே இந்த பதிவை அளித்தேன். மேலும் உங்கள் அனைவரிடத்திலும் இது போன்ற செயல்களை செய்யும் ஆர்வத்தை தூண்டவேண்டும் & நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற எளிய நோக்கமே அன்றி வேறொன்றுமில்லை!
===========================
[END]
//வாழும் வாழ்க்கையே வழிபாடு என்று ஆகிவிட்ட பிறகு கோவில் எதற்கு?// —
அற்புதம். குழந்தைகளின் புகைப்படங்கள் சந்தோஷத்தை கொடுக்கிறது. உடனே நாலு கட்டு கீரையா……..வது வாங்கி பசுக்களுக்கு தர வேண்டும் என தோன்றியது.
சுந்தர் அண்ணா உங்கள் சேவை அருமையாக உள்ளது .எங்களால் கலந்துகொள்ளமுடிவில்லை என்று வருத்தமாக உள்ளது
நன்றி. நீங்கள் இருக்குமிடத்தில் உங்களால் இயன்ற இது போன்ற சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாமே..!
– சுந்தர்
நிச்சயம் செய்வேன் அண்ணா இந்த உலகத்தில் இதைவிட புண்ணியமான மகிழ்ச்சியான சேவை வேற எதுவும் இல்லை என்றே நினைக்கிறன் நன்றி வாழ்கவளமுடன் .
சுந்தர் சார்,
/*”இந்த பதிவை படித்தவுடன் உங்கள் ஒவ்வொருவருக்கும் மேற்படி நற்காரியங்களில் நீங்களே நேரடியாக பங்குபெற்றதை போன்ற திருப்தியும் சந்தோஷமும் ஏற்படுகிறது அல்லவா? “*/
நிச்சயமாக திருப்தியும் சந்தோஷமும் உணர்ந்தேன்.
ஆனால் இதில் என் பங்களிப்பு எதுவும் இல்லை என்பதால் மனம் தவிக்கிறது.
நன்றியுடன் அருண்
சுந்தர் சார்
தங்களின் நல்ல சேவைகளை வார்தைளால் விவரிக்க முடியவில்லை…
சந்தோஷத்உடன் கண்ணீர் வர வைத்த பதிவு..
மிக்க நன்றி சார்…
தானத்தில் சிறந்தது அன்ன தானம்.
அன்ன தானம் தாங்கள் செலக்ட் செய்த இடம் மனதிற்கு மிகவும் பகிழ்ச்சியாக உள்ளது. பார்த்துப் பார்த்து நாம் வளர்த்து ஆளாக்கும் நம் குழந்தைகள் கூட சாப்பிடும் நேரம் அந்த கடவுளை வேண்டுமா? நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு வேலை சாப்பாடும் அந்த இறைவன் போட்ட பிச்சை என்று ஒவ்வொருவரும் அந்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்து விட்டுதான் சாப்பிட வேண்டும். அந்த பிஞ்சு குழந்தைகள் முகத்தில்தான் என்ன ஒரு மகிஷ்ச்சி காண காண ஆனந்தமாக உள்ளது.
அடுத்து பசுக்களுக்கு தீவனம். மேலும் மேலும் புண்ணியத்தை கட்டி கொண்டே இருகின்றீர்கள்.
அதில் தாங்கள் எடுத்துள்ள photos மிகவும் அற்புதம். குறிப்பாக கோபுர தரிசன போட்டோவில் பறவைகள் பறந்து செல்லும் அழகு கொள்ளை அற்புதம்.
இந்த மாதத்தை ரைட் மந்த்ராவின் புண்ணிய மாதம் என்றே கூறலாம் போல் உள்ளது.
பசுக்களுக்கு தீவனம் கொடுப்பது என்பது மிகவும் புண்ணியமான செயல்.புராணத்தில் எல்லா தெய்வங்களும் பசு மாட்டின் உடலில் வந்து இடம்புகுந்ததாகவும் மகா லட்சுமி கடைசியாக வந்த போது உலகின் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் இடம் கொடுத்து விட்டதாக பசு எனப்படுகிற கோமாதா சொல்ல சரி எனது சாணம் இடும் இடம் தான் உள்ளது எனச்சொல்ல மகா லட்சுமியும் கிடைத்த இடம் போதும் என அங்கே தங்கி விட்டதாகவும் புராணக்கதைகள் சொல்கின்றன.
ஆகவே தரித்திர நிலையில் உள்ளவர்கள் செல்வ வளம் இல்லாதவர்கள் அதிக பாவங்களை செய்து விட்டதாக எண்ணுபவர்கள் கன்றுடன் கூடிய பசு மாட்டை நம்பிக்கையுடன் ஒருமுறை சுற்றி வந்து பழம் அல்லது அகத்திக்கீரை கொடுத்து வணங்க எல்லா வளமும் நலமும் கிட்டுமெனவும் உலகின் அனைத்து தெய்வங்களையும் வலம் வந்த புண்ணியம் கிட்டுமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்.
முடிந்த வரையில் நல்லதை செய்து நாங்களும் உங்கள் மூலமாக புண்ணியத்தை சேர்த்து கொள்கின்றோம்.
நன்றி.
சுந்தர்ஜி,
இந்த பதிவை படித்த உடன் யானும் ஒரு ஆத்ம திருப்தியை உணர்ந்தேன். ஒரு நாளில் முடிவு செய்து அவசரமாக செய்தாலும் மிக மிக அவசியமான புண்ணிய காரியங்களை செய்து இருக்கிறீர்கள்.
அந்த குழந்தைகளின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி. இறைவனின் கைகளாக செயல்படும் உங்களுக்கு அந்த இறைவனே போதுமான செல்வத்தையும் பலத்தையும் அருளட்டும். எங்களால் முடிந்ததை நாங்களும் உங்கள் வழியில் செய்ய முயல்கிறோம். நன்றி
ஆடி spl அணைத்து பதிவுகளும் அருமை .ஆடி மாத பதிவில் முதலிடம் இந்த பதிவிற்கு தரலாம் .அப்பப்பா பம்பரமாக சுற்றி எவ்வளவு பெரிய வேலை .பதிவை படிக்கும்போது மலைப்பாக உள்ளது .ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒருபக்கம் விமர்சனம் ,கவிதை எழுதலாம் .குழைந்தைகள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு முன்னால் பல கோடிகள் துசுதான் .எனக்கு அழைப்பு விடுத்தும் ,தவறவிட்டு தருனதிர்க்கு வருந்துகிறேன் .சுந்தர் ஜி பசுக்களுடன் பேசும் பரிபாசை எப்போது அறிந்தீர்கள் ??…பசுக்களும் மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கிறது .
பிள்ளையார் வேற ஆமாம் என்பது போல் சிரிக்கிறார்.
எல்லாம் செய்துவிட்டு ,
\\\(அன்னமிடுபவர்களுக்கு தான் முழு பெருமையே தவிர கரண்டிக்கு எதற்கு?) \\
என்ன ஒரு அடக்கம் .நண்பர்கள் ராஜா ,மாரீஸ் .சகோதரி பரிமளம் அன்னமிட்ட கைகள் மிகுந்த பாக்கியம் செய்தவர்கள் .
நன்றி,பாராட்டுக்கள் .
-மனோகர்
ஒழுக்கம் என்பது கற்றுகொடுத்தால் அனைவரும் ஒழுங்காக நடப்பார்கள் என்பதற்கு இந்த குருகுலம் ஒரு மிக பெரிய சான்று ,ஏன் என்றால் உணவு பதார்த்தங்கள் அனைத்தும் வைத்தும் கூட ஒரு சிறு குழந்தை கூட எதையும் எடுத்து சாப்பிடவில்லை ,அணைத்து பதார்த்தங்களும் வைத்த பிறகு திருக்குறள் மற்றும் இறைவணக்கம் என ஒரு பத்து நிமிடம் பிடித்தது அதற்க்கு அப்புறம் தான் அணைத்து குழந்தைகளும் உணவில் கை வைத்தார்கள்
திருவள்ளுவர் குருகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவையும் அதனை ரசித்து ருசித்து சாப்பிடும் குழந்தைகளையும் பார்க்கும்போது மனம் எல்லை இல்லா ஆனந்தம் கொள்கிறது !!!
ஒவ்வொருவர் முகத்தினில் தான் எத்துனை மகிழ்ச்சி – தாமும் தமது பெற்றோரும் கடந்து வந்த இன்னல்களை மறந்து மனம் முழுவதும் சந்தோசத்துடன் இருக்கும் அவர்களை பார்க்கவே கண்கள் போதாது !!!
இதுபோன்ற விசேஷ நாட்களில் தமது சுற்றுபகுதியில் உள்ள ஏதேனும் ஒரு முதியோர் மறுவாழ்வு இல்லத்திருக்கோ அல்லது குருகுலத்திர்க்கோ சென்று அவர்களுக்கு நம் கையால் பரிமாறி அவர்களோடு சேர்ந்து நாமும் உணவருந்தி அவர்களோடு சில மணி நேரம் உரையாடி அவரவர் மனதில் உள்ளதை பகிர்ந்துகொண்டோமேயானால் நாம் வாழும் வாழ்க்கை உண்மையில் அர்த்தப்படும் !!!
சுந்தர் அவர்களே ஆழமா ஆற்றைக்கடக்க படகு மட்டும் இருந்தால் போதாது அதற்க்கு துடுப்பு மிகவும் அவசியம் – அது போல தான் தங்களின் பங்கும் – என்னதான் பொருளுதவியை அன்பர்கள் அளித்தாலும் அதனை முறையாக கொண்டு சேர்க்கவேண்டிய இடத்துக்கு கொண்டு சென்று அது முழுமையாக முறையா பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ன ஊர்ஜிதம் செய்யும் தங்கள் பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!
எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கும் இந்த நற்க்காரியத்தில் உதவிய அத்துணை மெய் அன்பர்களுக்கும் அவர்தம் குடுபங்களுக்கும் என்றென்றும் துணை நின்று காத்து அருள் புரிவாராக !!!