நமது திருக்கோவில் உழவாரப்பணியின் நோக்கம் கூட தொன்மையான ஆலயங்களை போற்றி காப்பது மட்டுமின்றி இதன் மூலம் அவற்றின் பெருமைகளை சிறப்புக்களை வெளியுலகிற்கு நம்மால் இயன்றவரையில் படம் பிடித்துக் காட்டி ‘ஆலய தரிசனம்’ செய்வதை ஊக்குவிக்கவேண்டும் என்பது தான்.
நம் தளம் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது அறியாமையின் காரணமாக மக்கள் தகாத செயல்களை செய்வதை கண்ணுற்றோம். நம்மால் இயன்றவரையில் இந்த நிலையை மாற்றவேண்டும் என்று அப்போதே உறுதி பூண்டோம்.
எனவே தான் ஆலயத்தின் பெருமைகளை ஆலய தரிசனம் செய்வதன் மகத்துவத்தை வலியுறுத்தி கீழ்கண்ட பதிவுகள் அளித்தோம்.
ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!
கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய!
முந்தைய பதிவில் சொன்னதை போல இணையத்தை பார்க்கவோ பயன்படுத்தவோ வாய்ப்பில்லாத சாமானிய மக்களுக்கு கூட இந்த கருத்துக்கள் போய் சேரவேண்டும் என்று கருதி தான் அதை நோட்டீசாக அச்சடித்து விநியோகித்தும் வருகிறோம்.
இதுவரை இதை அச்சடித்து வழங்கி வந்த முழ செலவை நாமே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு செய்துவந்தோம். ஆனால் தொடர்ந்து என்னால் செலவு செய்ய இயலாத நிலை. நண்பர்களும் நலம்விரும்பிகளும் ‘உங்கள் கைகளில் இருந்து பொருளை செலவு செய்து அச்சடிக்கவேண்டாம்’ என்று நம்மை வலியுறுத்தினார்கள். எனவே தான் முந்தைய பதிவு ஒன்றில் நம் வாசகர்களை ஸ்பான்சர் செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.
சமீபத்தில் பழனியில் நடைபெற்ற சிவத்திரு. தாமோதரன் ஐயா மற்றும் அன்னை இராஜம்மாள் அவர்களின் திருவாசகம் முற்றோதலில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்படி ஆலய தரிசன விதிமுறைகள் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வந்தவர்களிடையே பலத்த வரவேற்பும் பெற்றது.
நோட்டீஸை படித்துவிட்டு எவரும் அலட்சியமாக வீசிவிட்டு போய்விடக்கூடாது என்று கருதி அதில் ஒரு முக்கிய அம்சத்தை ஆரம்பத்திலேயே சேர்த்திருந்தோம். அது நன்கு ஒர்க்-அவுட் ஆகிவிட்டது.
இதனிடையே நமது நோட்டீசை பார்த்து விட்டு பொள்ளாச்சியை சேர்ந்த திரு.பாலசுப்ரமணியன் என்பவர் நம்மை தொடர்புகொண்டார். நமது பணிகளை பாராட்டியவர் நமது மின்னஞ்சல் முகவரியை கேட்டு பெற்றுகொண்டார். அடுத்த நாள் ஒரு நெகிழ்ச்சியான மின்னஞ்சலை நமக்கு அனுப்பியிருந்தார்.
மின்னஞ்சல் விபரம் வருமாறு….
=======================================
ரைட்மந்த்ரா.காம் ஆசிரியருக்கு வணக்கம்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோட்டூர்-மலையாண்டிபட்டணத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக ‘ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை சேவை மையம்’ என்ற பெயரில் சேவை மையத்தை நடத்திவருகிறோம்.
ரமண மகரிஷி அருளிய ‘ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை’ பாடலை புத்தக வடிவில் அச்சிட்டு ஆன்மீக அமைப்புக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.
மேலும் எங்கள் பகுதியை சுற்றியுள்ள 100 பள்ளி மாணவ மாணவியருக்கு தினசரி ஒரு மணி நேர ஆன்மீக பயிற்சி வகுப்பு 2006 முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிறு 28/07/2013 அன்று நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் விழாவில் ரைட்மந்த்ரா.காம் சார்பில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட – ‘ஆலய தரிசனத்தின் முழுமையான பலன்கள் கிடைக்க ஒரு எளிய வழிகாட்டி’ நோட்டீஸ்களை பெற்று வந்தேன். தற்போது தினசரி எமது ஆன்மீக பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவ மாணவியருக்கு அதை படித்துக்காட்டி விளக்கமளித்து அதன் பின்பே மற்ற பாடல் பயிற்சிகளை அவர்கள் செய்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் ஆலய தரிசன விதிமுறைகளை எளிய முறையில் விளக்கி கேயேடு வெளியிட்டுள்ள ரைட்மந்த்ரா.காம் ஆசிரியருக்கும் இதர நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
T பாலசுப்ரமணியன்
ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை
20/12 E, கடலைக்காரர் வீதி,
கோட்டூர் – மலையாண்டிப்பட்டினம் அஞ்சல்,
பொள்ளாச்சி தாலுக்கா, கோவை – 642114
செல் : 99656 22878
மின்னஞ்சல் : ramanadhason@gmail.com
=======================================
மேற்படி சேவை மையத்தின் பெயரை கவனித்தீர்களா?
அருணாச்சலேஸ்வரர் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை ஆட்கொண்டபடியே இருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
நாட்டின் வருங்காலத் தூண்களாம் மாணவ மாணவியர்களின் கரங்களில் நமது நோட்டீஸ் சென்று சேர்ந்தது எம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளது. இதன் மூலம் ஏதாவது புண்ணியம் கிடைக்கும் என்றால் அது இந்த நோட்டீஸ்களை அச்சடிக்க, விநியோகிக்க உதவிய நம் நண்பர்களுக்கு போய் சேரட்டும்.
இவ்விடத்தில் நம்மை ஊக்குவிக்கவும் உற்சாகப்படுத்தவும் நேரம் எடுத்துக்கொண்டு மின்னஞ்சலும் செய்த திரு.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நம் தளத்தில் இடம்பெற்றுள்ள நீதிக்கதைகள் மற்றும் பக்திக் கதைகளை அம்மாணவர்களுக்கு தினசரி கூறுமாறு திரு.பாலசுப்ரமணியன் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
(பொருள் : தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர்; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும்.)
பாடலின் பொருளை கூர்ந்து கவனியுங்கள். அப்பர் பெருமான் எத்தனை அழகாக நிகழ்வினைகள் ஓடிப்போவதற்கு வழியை சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
[END]
மிகவும் முக்கியமான பதிவு.
தாமோதரன் ஐயாவையும் அவ்வைப்பாட்டி அன்னை ராஜம்மாளையும் தாங்கள் சந்தித்த பிறகு தங்களுக்கு எந்நேரமும் நல்ல நேரமாக அமைந்துவிட்டது
பள்ளி குழந்தைகள் கரங்களில் தல நோட்டீஸ் பார்த்தது மிகவும் சந்தோசம் தரும் விஷயம்.
மாணவர்கள் நாட்டின் வருங்கால தூண்கள்.
அப்துல் கலாம் அவர்கள் சொன்ன மாதிரி ஆயிரம் கனவுகள் காணும் மாணவர்கள் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி விளக்கேற்றுவர்கள்.
அருணாச்சலேஸ்வரர் எதோ ஒரு ரூபத்தில் மட்டுமல்ல எப்போதும் உங்கள் கூடவே இருப்பவர் என்று உங்களுக்கு தெரியாதா.
சேவை மையதிற்கு எங்கள் நன்றிகள்.
சுந்தர்ஜி,
அருணாச்சலேஸ்வரர் உங்களுக்கு கை மேல் பலன் கொடுத்து விட்டார்.இனி வரும் காலமெல்லாம் உங்களுக்கு பொன்னாளே.
வாழ்க உங்கள் தொண்டு,
நன்றி.
சுந்தர், எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆங்கிலத்தில் “Chain Reaction ” என்று சொல்வதை போல தங்கள் முயற்சிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
நன்றி !!
என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் உடல் புல்லரித்து கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
சுந்தர் சார்,
சான்ஸ் லெஸ். ரியலி கிரேட்.
அருண்
சுந்தர்ஜி…
நமது தளம் துவங்கியதின் அர்த்தம் அதற்க்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன்கள் இறை அருளால் பெறப்பட்டு வருகிறதை நாம் பல முறை உணர்ந்து வருகிறோம். இந்த நிகழ்வு தங்கள் மணிமகுடத்திற்கு ஒரு வைரம். வாழ்த்துக்கள்…. வாழ்வோம் வாழ்விப்போம். கற்போம் கற்பிப்போம்.
சந்தோசம்
ப.சங்கரநாராயணன்
சுந்தர் சார்
சார் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.சொல்வதற்கு வார்த்தை யில்லை . நீங்கள் எழுதும் படைப்பு அனைத்தும் மிகவும் அருமை.
அனைவரும் ஆழ்ந்து படிக்க வேண்டும் . பின்பற்ற வேண்டும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
– சுந்தர்
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நம் ரைட் மந்த்ரா நண்பர்கள் திரு சுந்தர் அவர்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம் ,அதன் பலன் தான் இப்பொழுது நம் தளம் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக மாறிக்கொண்டு வருகிறது
இன்றைய இளைய சமுதாயத்துக்கு சுய ஒழுக்கம், மன உறுதி, விடாமுயற்சி ஆகியவை முக்கியமான தேவைகளாக உள்ளன – அவர்களை நல்ல முறையில் வழி நடத்தி சென்றோமேயானால் நிச்சையம் இந்த சமுதாயத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை நாம் கண் கூடாக காண முடியும் – இந்த மாபெரும் முயற்ச்சியில் ராமபிரானுக்கு அணில் உதவியது போல நமது தளம் தமது பங்கை செவ்வனே ஆற்றி வருவது பாராட்டுக்குரியது!!!