Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > மருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்!

மருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்!

print
டி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்தநாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் கூட! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக பல உற்சவங்கள் நடைபெறும். காவடி பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்ச காவடி, சேவற்காவடி, தீர்த்த காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர். சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்தி ஆனந்த பரவசம் அடைகின்றனர்.

கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற முருகன் பக்தி பாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர். அறுபடை வீடுகளில் திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், வழக்குகள், சகோதர உறவுகள் இடையே பிரச்னைகள் குரு திசை, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடிக் கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷங்களும் தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம். ஆடி கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானை தரிசித்து திருவருள் பெறுவோம்.

கடந்த ஞாயிறு நாம் சிவத்திரு.தாமோதரன் ஐயா மற்றும் அன்னை ராஜம்மாள் ஆகியோரின் திருவாசகம் முற்றோதலில் கலந்துகொள்ள பழனி சென்றிருந்தது நினைவிருக்கலாம். இடையில் சிறிது பிரேக் எடுத்து மலைக்கு சென்று தண்டாயுதபாணியை தரிசித்துவிட்டு வந்தோம்.

அதே போல, நம் தள வாசகர் திரு. முத்துக்குமாரசுவாமி என்பவர்  ‘எந்த உதவி வேண்டுமானாலும் தாங்காமல் கேளுங்கள்’ என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நம்மை தேடி முற்றோதல் நடைபெறும் அங்காள ஈஸ்வரி மண்டபத்திற்கு தமது உறவினர் திரு.கணேஷ் என்பவருடன் வந்து பார்த்து பேசிவிட்டு சென்றார். அன்னைக்கு மரியாதை சியா சால்வை வாங்க நாம் கடைவீதிக்கு சென்றபோது உடன் வந்து உதவிபுரிந்தார்.

இவர்களுக்கு அன்புக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியவில்லை. நல்லோர்களை அறிமுகம் செய்து வைத்த முருகனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

நண்பர் ராஜாவின் நண்பர் நமக்கு சிறப்பு தரிசனத்திற்கான விஷேட அனுமதி சீட்டை நம்மை தேடிக்கொண்டு வந்து கொடுத்தார்.

(பொதுவாக இது போன்ற விசேஷ அனுமதி அட்டைகளை (Special Pass) நாம் விரும்புவதில்லை. திருவாசகம் முற்றோதலின் இடையே நாம் வந்ததால் வேறு வழியின்றி நாம் அதை பயன்படுத்தினோம். அப்படியும் கூட ஒரு மணிநேரம் வரிசையில் காத்திருந்தோம். மேலும் இது இலவசம் அல்ல. இந்த விஷேட அனுமதி அட்டை கோவிலின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வழங்கப்படுகிறது. அதைத் தான் நாம் பெற்றுகொண்டோம். )

இதையடுத்து தண்டாயுதபாணி கோவிலுக்கு புறப்பட்டோம். மலைக்கு செல்வதற்கு வின்ச்சை தவிர்த்து யானைப்பாதை வழியாகவே பயணித்தோம். சுமார் 25 நிமிடத்தில் மலையை அடைந்தோம்.

மலையில் ஏற ஏற பழனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியின் இயற்கை அழகு நம் மனதை கொள்ளை கொண்டது.

ஞாயிற்று கிழமை என்பதால் நல்ல கூட்டம். ஒரு அரை மணிநேரம் காத்திருந்த பிறகு தண்டாயுதபாணியை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

தண்டாயுதபாணியின் முன் நின்றிருந்த அந்த தருணம் நம் தளவாசகர்களின் நலனை வேண்டிக்கொண்டேன். குறிப்பாக நம் பணிகளுக்கு துணை நிற்கும் அனைத்து நல்லுலங்களுக்காகவும், இது வரை பிரார்த்தனைகளை சமர்பித்திருந்தவர்களுக்காகவும் வேண்டிக்கொண்டேன். அத்தனை பரபரப்பிலும் முருகனுக்கு அர்ச்சனை செய்ய தவறவில்லை. நிச்சயம் அனைவருக்கும் அந்த தண்டாயுதபாணியின் அருள் உண்டு.

கண்குளிர தரிசித்துவிட்டு, பிரகாரத்தில் உள்ள போகரின் ஜீவசமாதியையும் தரிசித்துவிட்டு வந்தோம்.

ஆடிக்கிருத்திகை நன்னாளாம் இன்று பழனியம்பதியை பற்றி சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

திருத்தல உற்சவம் மற்றும் விஷேட நாட்களில் தலப்புராணம் மற்றும் அதன் பெருமைகளை படிப்பது மிகுந்த நன்மை பயக்கக்கூடியது. புண்ணியங்களை அளிக்க கூடியது.

நித்தம் பாவம் செய்யும் கண்கள், இது போன்ற புண்ணிய தளங்களை பற்றி படிப்பதன் மூலமே தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றன என்பதால் இவற்றை வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் தவறாமல் படிக்கவேண்டும்.

மருந்தே மலையாக அமைந்த தலம்!

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

பழநிமலை மேல் வீற்றிருப்பவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி. கலி பகவானை விரட்ட, கையில் தர்மக்கோல் தாங்கியிருக்கிறார். கௌபீனம் என்னும் கோமணத்துடன், சந்யாசி கோலம் கொண்டு நவபாஷாணத்தால் ஆன மேனியுடன் அருள் பாலிக்கிறார். இடும்பன் என்ற அசுரன் சுமந்து வந்த சக்திகிரியில், ஞானப்பழம் வேண்டி வந்த மனச்சுமையை முருகன் இறக்கி வைத்த இடம்தான் பழநிமலை எனப்படுகிறது.

எனவே இடும்பனுக்கு முருகன் முதல் பூஜையை தந்தருளினார். இடும்பனைத் தொழுத பின்தான் முருகனை தரிசிக்கவேண்டும். இது இத்தல மரபு. இடும்பனைத் தொழுதால் சகல விதமான பித்ரு தோஷமும் விலகும். முன்னோர்கள் ஆத்மா நற்கதி அடையும் என்கிறார் போகர், தனது போக நாதநாடியில்.

திருமுருகன் நின்ற இடத்தில், ஒரு மூர்த்தியை நிறுவ எண்ணங்கொண்ட அகத்தியர் சீன நாட்டைச் சேர்ந்த காளிங்கநாதர், புலிப்பாணி சித்தரையும் அழைத்து வந்து, போகரிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

நவரத்தினங்களை ஒன்றாக்கி நவகிரகங்களை ஒரே உருவில் செய்தால் என்ன சக்தி கிட்டுமோ அதைவிட சக்தி கூட்டி, அழகில் திருமகளைப்போல தண்டாயுதபாணியை, ஒரு தைப்பூச நன்நாளில் ஆரம்பித்து 16 ஆண்டுகள் சிரமப்பட்டு நவபாஷாண மூலவரை நிறைவாகச் செய்தார்.

தனக்கு ஞானப்பழம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் தீர்ந்த இடத்தில், அந்த நவபாஷாண சிற்பத்தை நிர்மாணித்தார்.

இவ்வாறு சிலையை உருவாக்குவதற்காக, பற்பல மலைகளிலிருந்தும் கடல்களிலிருந்தும் நவ பாஷாணங்களைக் கொணர்ந்தனர். புலிப்பாணியும் காளிங்கநாதரும் வான்வெளியில் பறந்து பல பாஷாணங்களையும் மூலிகைகளையும் கொண்டு வந்து சேர்த்தனர். போகரும் பல அரிய மூலிகைகளை சேகரித்து நவபாஷாணத்தைக் கட்டி எஃகை விட வலிமையுடைய மெழுகாகச் செய்து, தண்டாயுதபாணி சிற்பத்தை உருவாக்கினார்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை அன்று முருகப்பெருமான், கனிக்காக கோபித்து நின்ற அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ஜோதி ஸ்வரூபமாய் காட்சி தந்தார் முருகன். காளங்கிநாதர், போகர், பாபாஜி, புலிப்பாணி ஆகியோர் இன்றும் கார்த்திகை ஜோதி அன்று குகையிலிருந்து வெளிப்பட்டு பக்தர்களோடு பக்தர்களாகக் கலந்து முருகனை வழிபடுகின்றனர்.

தண்டாயுதபாணி சுவாமியின் அடியில் உள்ள சுரங்கப்பாதை போகர் குகை வரைக்கும் நீண்டு பின் மலையுள் செல்கிறது. போகரும் கோரக்கரும் புலிப்பாணியும் தங்கம் செய்யும் வித்தை கற்றவர்கள். காளங்கிநாதரும் பாபாஜியும் நவரத்தின வித்தை தெரிந்தவர்கள். எனவே ஏராளமான பொக்கிஷத்தைக் கூட்டி சுரங்கத்தில் வைத்துள்ளனர்.

பற்பல மரகதலிங்கத்தை உற்பத்தி செய்து போகர் குகையுள் வைத்து பூஜித்தார். அதில் ஒன்றுதான் இன்று நாம் பழநியில் காண்பது. அகத்தியர், நக்கீரர், பாம்பாட்டி சித்தர், கோரக்கர், சிவ வாக்கியர், திருமூலர் என பற்பல சித்தர்கள் நித்தியவாசம் செய்யும் தலம் பழநி.

பழநி முருகனை தரிசித்தால், ‘‘வற்றாத செல்வமும், இன்பமும், தடையிலா வெற்றியும், ஒரு பிணி இல்லா வாழ்வும் சேரும்” என்கிறார் சிவவாக்கியர்.

நவபாஷாண மூர்த்திக்கு செய்யப்படும் அபிஷேகத்தில் உள்ள ஒவ்வொரு துளியிலும் மருத்துவகுணம் உண்டு.

குஷ்டரோகம், புற்றுநோய், மலட்டுத்தன்மை, இதயபீடை, சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் பீடை போன்றவை பழநி முருகனுக்கு சார்த்திய சந்தனத்தை, மிளகு அளவு எடுத்து காலை சூரியோதயத்திற்கு முன் வெறும் வயிற்றில் (அப்போது நீர் கூட அருந்தியிருக்கக் கூடாது) உண்டால், மூன்று மண்டலத்தில் முழுபலன் கிட்டும். அதாவது நோய் பூரணமாய் குணமடையும். இது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட.

‘‘மேனியிற்பட்ட பொருள் யாவுமே அரு மருந்து & வினை நோயுமறுபடுமே” என்கிறார் அகத்தியர்.

மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக் கொண்டுள்ளனர்.தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் முக்கிய தலம்.

அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார். தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம். அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம். தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது. பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம்.

தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான். பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன.புராண காலத்தலும்,சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம். செலுத்துகின்றனர்.

சிறப்பு தகவல் : முருகனைப் பாடும் ‘திருப்புகழ்’ நூல் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது!

(‘திருப்புகழ்’ என்பது சிலர் நினைத்துக்கொண்டிருப்பது போல ஒரு புத்தகம் அல்ல. ஆறு மிகப் பெரிய நூல்களின் தொகுப்பு. அனைத்தும் சேர்த்து ரூ.1500/- வரும்.

எனவே நீங்கள் திருப்புகழ் வாங்க விரும்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை கொண்டு CONCISE பதிப்பாக வெளிவந்துள்ள நூலை வாங்கினாலே போதும். முன்னணி பதிப்பகங்களில் இந்த CONCISE VERSION கிடைக்கும். அதை வாங்கி முதலில் படிக்குமாறு வேண்டுகிறேன்)

(Temple info Reference : kumaranadi.blogspot.in, dinakaran.com, dinamalar.com)

[END]

EQU      :        B.E.

11 thoughts on “மருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்!

 1. பழனி சென்று முருகனை தரிசித்த திருப்தியை உங்கள் பதிவு தந்துள்ளது. அனைவருக்கும் முருகன் அருள் கிட்டட்டும். வாழ்த்துக்கள் சுந்தர்!

 2. சுந்தர் சார்,

  இந்த திருநாளில் பழனி ஆண்டவரை நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது இந்த பதிவு. எங்களுக்கு தெரியாத செய்திகளும் மிக தெளிவுடன் கொடுத்துள்ளிர்கள்.

  நன்றியுடன் அருண்.

 3. நான் என்னுடைய கல்லூரிப் படிப்பை பழனி-யில் தான் முடித்தேன்…அந்த நாட்களில் மலைக்கு மொத்தமாகவே 2 முறை கூட சென்றது இல்லை… இத்துனை சிறப்பு வாய்ந்த மலைக்கோவிலை அதன் அருகில் இருந்தும் தரிசிக்காமல், ரசிக்காமல் இருந்து விட்டோமே என்று இப்பொழுது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது..இப்பொழுது போக நினைத்தாலும் போக முடிவதில்லை…மனிதனுக்கு எப்பொழுதும் ஒன்றன் அருமை அருகில் இருக்கும் பொழுது தெரிவதில்லை போல..

  நானும் என் நண்பரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலைக்கு சென்றிருந்தோம்.. அன்று பிரதோஷ நாள் என்று தெரியாமல் சென்றுவிட்டோம்…கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்…கீழே குனிந்து பார்த்தால் நடக்கும் நிலம் தெரியாத அளவுக்கு கூட்டம்…எப்படியோ ஒரு வழியாக மலை மேல் சென்றால் சாமி தரிசன வரிசை நீண்ண்ண்ண்ண்டு இருந்தது….காலை சுமார் 9 மணிக்கு வரிசையில் நின்ற நாங்கள் இரவு 7 மணிக்குத்தான் சாமி தரிசனம் செய்தோம் ….ஆனால் அதற்க்கான காரணம் முருகனைப் பார்த்த பின்பு தான் புரிந்தது..ஆம்..அதுவரை சாதாரண அலங்காரத்தில் காட்சி தந்த முருகன் எங்கள் முறை வந்ததும் ராஜ அலங்காரத்தில் காட்சி தந்தான்…என்னே ஒரு பிரகாசம்….காணக் கண் கோடி வேண்டும்….!

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

  விஜய் ஆனந்த்

  1. சிலிர்க்க வைக்கும் அனுபவம்.முருகன் காத்திருக்க வைத்தால் அதில் நிச்சயம் அர்த்தம் உண்டு.
   – சுந்தர்

 4. சுந்தர்ஜி,

  பழனி தெரிந்த கோவில் என்றாலும் பல தெரியாத தகவல்கள் தங்கள் பதிவின் மூலம் கிடைத்துள்ளது. சந்தன மருத்துவம் உபோயகமான தகவல். எனக்கும் பழனிக்கு வேண்டுதல் உண்டு. என் பிரார்த்தனை நிறைவனால் குடும்பத்தோடு சென்று செலுத்த வேண்டும். இந்த நிலையில் நீங்கள் எங்களுக்காக வேண்டிக்கொண்டதில் பெரும் மகிழ்ச்சி. அதுவும் ஆடி கிருத்திகை அன்று இதை படிப்பதில் ஒரு முறை பழனி ஆண்டவனை தரிசித்த மகிழ்ச்சி. எல்லாம் வல்ல முருக பெருமான் அனைவர்க்கும் அவரவர் வேண்டுதல் நிறைவேற இந்நாளில் அருளட்டும்.

  மேலும் பழனி அடிவாரக் கோவில்(பெரியநாயகி அம்மன்) முருகனை தரிசித்த பின் தான் மலை மேல் உள்ள முருகனை தரிசிக்க வேண்டும் என எங்கள் பகுதி பெரியவர்கள் சொல்லுவார்கள்.

 5. சுந்தர் சார்

  மிக மிகவும் அருமையான பதிவு…

  நன்றி..

 6. சுந்தர்ஜி,

  மிகவும் அருமை. ஆடி கிருத்திகை அன்று பழனி ஆண்டவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க பெற்றோம். நேற்று பதிவே போடாமல் ஏமாற்றி விட்டீர்கள் என்று நினைத்து கொண்டிருந்த எங்களுக்கு பழனி பஞ்சமிர்தமாக இந்த பதிவு கிடைத்து விட்டது. நாலு வரி கமென்ட் கொடுக்கவே எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. தாங்கள் இவ்வளவு பெரிய ……………….. போஸ்ட் போடுவதக்குதான் ஒரு நாள் லீவு என்று தெரிந்து விட்டது.

  சந்தன மருத்துவம் அனைவருக்கும் இன்று வரப்ரசாதமாக அமைந்து விட்டது. மழலை வேண்டுவோர் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.அவன் அவதார தினத்தன்று தாங்கள் தெரியபடிதமைக்கு மிகவும் நன்றி. ஆனால் சந்தனம் பழனியில் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. முடிந்தால் அதை பற்றி விசாரித்து சொல்லுங்களேன்.

  வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்ததை போல் இருக்கும் உங்களுக்கு என்று நினைக்கின்றேன்.

  நன்றி.

 7. அது அவர்கள் பழனி பகுதியில் கடை வைத்து உள்ளதால் அவர்களுக்கு கோவில் சார்பாக அளித்துள்ள ஒரு சிறப்பு தரிசனம் அவ்வளவுதான் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு நபர்கள் தான் அனுமதிப்பார்கள்

 8. ஆடி கிருத்திகை நன்னாளில் அருமையான பதிவு . அரியபல தகவல்களை அளித்துள்ளது தங்களின் முருகபக்தியை காட்டுகிறது.இறைவன் தங்களுடன் பயணிப்பது தெரிகிறது .நமது தல வாசகர்களுக்காக பழனி முருகனிடம் பிரார்த்தனை என மெய்சிலிர்க்கும் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி .

  அரோகரா,அரோகரா,அரோகரா……

  அரோகரா,அரோகரா,அரோகரா……

 9. நம் எல்லோரையும் பழனிக்கு கூட்டி சென்று, அந்த ஆண்டி ஸ்வரூபனை தரிசிக்கவைத்து, பழனியம்பதியின் வரலாற்றை நமக்கு விளக்கி கூறி , முருகப்பெருமான் நவபாசான மூர்த்தியாக எழுந்து அருள்பெற்றவிதத்தை எடுத்துரைத்து, கண்களுக்கு குளிர்ச்சிதரும் அருமையான புகைப்படங்களை நமக்கு காட்டி நமக்காக பிரார்த்தனையும் செய்து வந்துள்ள சுந்தர் அவர்களுக்கும் இம்முயற்சியில் அவருக்கு துணை நின்ற அனைத்து நல உள்ளங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

  வாழ்க திருப்பணி
  வளர்க நற்தொண்டு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *