Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!

அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!

print
ன்னை இராஜம்மாள் அவர்களை பற்றி நான் கேள்விப்பட்ட மூன்றாவது நாளே அவருடன் பேசும் பாக்கியமும் அவரை தரிசிக்கும் பாக்கியமும் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு அந்த திருவருள் தான் காரணமாக இருக்கமுடியும்.

நாம் அறிமுகமான இரண்டாம் நாள் நம்மை தொடர்புகொண்ட சகோதரி உமையாள் (இராஜம்மாளின் கடைசி மகள் இவர்) “குடியாத்தம் நகரில் நடைபெறும் திருவாசகம் முற்றோதலுக்கு அம்மா வருகிறார். நீங்கள் குடியாத்தம் செல்லுங்கள். தாமோதரன் ஐயாவிடமும் பேசுங்கள்” என்று கூறியிருந்தார்.

(தற்காலத்து அவ்வைப்பாட்டி அன்னை ராஜம்மாள் பற்றி தெரிந்துகொள்ள….  http://rightmantra.com/?p=5755 )

இதையடுத்து குடியாத்தம் செல்வதற்கு ஆயத்தமானோம். அது குறித்த பதிவை பார்த்துவிட்டு நண்பர்கள் முத்துக்குமாரும் மனோகரனும் நம்முடன் குடியாத்தம் வருவதாக சொன்னார்கள்.

திருவாசகம் முற்றோதலுக்கு எப்படியும் வரும் ஞாயிறு பழனி செல்வதால் இங்கு எனக்கு அன்னையையும் தாமோதரன் ஐயாவையும் பார்த்து ஆசி பெறுவது தான் நோக்கமாக  இருந்தது. எனவே மதியத்திற்கு மேல் குடியாத்தம் சென்று இருவரிடம் ஆசிபெற்றுவிட்டு முற்றோதல்  முடியும் வரை இருந்துவிட்டு பின்னர் சென்னை திரும்பலாம் என்பது தான் எங்கள் திட்டம்.

ஞாயிறு மதியம் கோயம்பேட்டில் பஸ்ஸை பிடித்து ஒரு வழியாக குடியாத்தம் சேர 4.30 ஆகிவிட்டது. முத்துக்குமார் பெங்களூரில் இருந்து நேரடியாக குடியாத்தம் வந்துவிட்டார். மனோகரன் என்னுடன் வந்துவிட்டார்.

குடியாத்தத்தில் பேருந்து நிலையம் அருகிலேயே முற்றோதல் நிகழ்ச்சி குறித்த பேனர் வைத்திருந்தார்கள். நிகழ்ச்சி நடைபெறும் திருவள்ளுவர் மேனிலைப் பள்ளி, பேருந்து நிலையத்திலிருந்து சற்று அருகே தான்இருந்தது. நாங்கள் செல்லும்போது முத்துக்குமார் எங்களுக்காக வாசலில் காத்திருந்தார். பெங்களூரிலிருந்து காலை சற்று சீக்கிரமே கிளம்பிவிட்டபடியால் அவர் எங்களுக்கு முன்பாகவே வந்துவிட்டார். ஆனால் எங்களால் தான் சொன்ன நேரத்திற்கு வந்துசேர முடியவில்லை. அதற்கு மன்னிப்பு கோரினேன்.

நிகழ்ச்சி நடைபெற்ற பள்ளி வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருவாசகம் முற்றோதல் போன்ற ஜென்மம் கடைத்தேற்றும் நிகழ்ச்சிக்கு இப்படியும் கூட மக்கள் திரண்டு வருவது மகிழ்ச்சியாக இருந்தது.

கூட்டத்தை பார்த்தவுடன், “இதுல எங்கே நாம அம்மாவை பார்த்து பேசி ஆசி வாங்குறது?” என்கிற மலைப்பு தான் ஏற்பட்டது.

இருந்தாலும் பழனியில் இருந்து அன்னையின் மகள் உமையாள் நமக்காக இங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தது எங்களுக்கு சௌகரியமாய் இருந்தது.

முதலில் அம்மாவின் டிரைவர் சண்முகம் என்பவரை அலைபேசியில் பிடித்தேன். மைக் சத்தத்தில் ஒன்றுமே கேட்கவில்லை. எப்படியோ திரும்ப திரும்ப முயற்சித்து அவரை பிடித்துவிட்டோம்.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “அம்மாவையும் ஐயாவையும் பார்த்து சால்வை போட்டு மரியாதை பண்ணனும். அப்படியே அவங்க கிட்டே ஆசி வாங்கணும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்க” என்றேன்.

“இந்த பதிகம் முடியட்டும்… கொஞ்சம் கேப் கிடைக்கும். அப்போ டக்குனு போய்டுங்க…! இங்கேயே நில்லுங்க நான் கூட இருந்து கவனிச்சுக்குறேன்” என்றார்.

அதன்படியே அந்த பதிகம் முடியும் வரை காத்திருந்தோம். அப்போது 40 வது பதிகம் பாடிக்கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

நண்பர் முத்துக்குமார் ஆசி பெறுகிறார்

காத்திருந்த கணங்களில் திரண்டு வந்திருக்கும் கூட்டத்தை ஒரு முறை பார்த்தேன். 20 வயது முதல் 80 வயது வரை பலதரப்பட்ட மக்கள் வந்திருந்தார்கள். அனைவரும் தங்கள் கைகளில் ஆளுக்கு ஒரு திருவாசகம் நூலை வைத்துக்கொண்டு பதிகத்தை தாமோதரன் ஐயா பாட பாட அவருடன் சேர்ந்து படித்தது கண்கொள்ளா காட்சி.

நண்பர் மனோகரனுக்கு திருநீறு பூசி ஆசி

அவர்கள் மட்டுமல்ல அம்மாவின் டிரைவர் திரு.சண்முகமும் கைகளில் ஒரு திருவாசகம் நூலை வைத்துக்கொண்டு அவரும் சேர்ந்து படித்து வந்தார்.  சண்முகத்தின் வயது அதிகபட்சம் 28 இருக்கும். ‘கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்” என்பது போல, அன்னையின் சாரதிக்கும் திருவாசகம் மேல் இருந்த ஈடுபாட்டை கண்டு நெஞ்சம் சிலிர்த்தது. பொதுவாக இது போன்ற நெடிய நிகழ்சிகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் காரில் இருக்கையை சாய்த்துவிட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள் அல்லது ஏதாவது சினிமா பாடலை ஒலிக்கவைத்து அதை கேட்டு ரிலாக்ஸ் செய்து கொண்டிருப்பார்கள்.

நமது ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ் அன்னையிடம் வழங்கி ஆசிபெறப்படுகிறது

ஆனால் திரு.சண்முகம் இங்கு கூட்டத்தோடு கூட்டமாக நின்று திருவாசகம் படித்துக்கொண்டிருந்தார். கூடவே அன்னையின் தேவை என்ன என்பதையும் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் அன்னைக்கு டிரைவர் மட்டுமல்ல… உதவியாளரும் கூட என்பதை சற்று நேரம் சண்முகத்திடம் பேசியபோது தெரிந்துகொண்டேன். கொடுத்து வைத்தவர்.

நண்பருக்கு திருவாசகம் நூல் பரிசாக வழங்கப்படுகிறது

சரியாக 40வது பதிகம் முடிய… மேடைக்கு முன்புறம் வெளியே நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து நாம் வந்திருப்பதை அன்னைக்கு சைகை மூலம் உணர்த்தினார் சண்முகம். அன்னை நம்மை வரும்படி சொல்ல…. உடனே மேடை நோக்கி உட்கார்ந்திருந்த கூட்டத்தை விலக்கி கொண்டு ஓடிச் சென்றோம்.

முதலில் இருவருக்கும் நம்மை அறிமுகம் செய்துகொண்டு அடுத்து நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தேன். நண்பர் முத்துக்குமார் தாமோதரன் ஐயாவுக்கு சால்வை அணிவிக்க, அவர் அதே சால்வையை பதிலுக்கு முத்துக்குமாருக்கு அணிவித்துவிட்டார்.

அன்னையின் டிரைவர் திரு.சண்முகம் மற்றும் நண்பர் முத்துக்குமாருடன்

சென்னையிலிருந்து பெங்களூரிலிருந்தும் அவரையும் அன்னையையும் பார்க்க வந்திருக்கும் விபரத்தை சொன்னோம். சிவாய நம சிவாய நம என்று கூறி திருவாசகம் நூலை அவருக்கு அளித்து அன்னை ஆசீர்வதித்தார்.

அடுத்து அன்னைக்கு நாம் சால்வை அணிவித்து “உங்களை பார்க்க நேர்ந்தது நான் செய்த பாக்கியம். எங்களையும் எங்கள் தள வாசகர்களையும் ஆசீர்வதிக்கவேண்டும் அம்மா” என்றேன்.

“சிவாய நம சிவாய நம” என்று சொன்னவர் நாம் அணிவித்த அதே சால்வையை பதிலுக்கு நமக்கு அணிவித்தார். பின்னர் சுவாமி மீது போட்டிருந்த ஒரு மலர் மாலையை வரவழைத்து அதை நமக்கு எதிர்பாராமல் அணிவிக்க… ஒரு கணம் என் கண்களில் ஆனந்தக்கண்ணீர். இருக்காதா பின்னே…? கும்பிடப் போன தெய்வம் எதிரே வந்து நம்ம கழுத்துல மாலை போட்டிருக்கே…

வளாகத்தில் பக்தி நூல்கள் விற்பனையும் நடைபெற்றது

தொடர்ந்து நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இதுவரை பிரார்த்தனை கிளப்பில் தங்கள் கோரிக்கைகளை சமர்பித்திருந்த அனைவரது பெயர்களும் அடங்கிய பட்டியலை அவரிடம் கொடுத்து, ஆசீர்வதிக்க கோரினேன். அந்த பட்டியலை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அன்னை.

பின்னர் எனது கைகளை பற்றி முத்தம் கொடுத்து ஆசீர்வதித்தார். மீண்டும் ஒரு கணம் சிலிர்த்துவிட்டேன்.

என்ன புண்ணியம் செய்தேன் அம்மா நீங்கள் என்னை உச்சி முகர்ந்து முத்தம் தர…? அந்த காரைக்கால் அம்மையே இந்த எளியவனை ஆசீர்வதித்தது போன்று உணர்ந்தேன்.

எமது பணிகளுக்கு கிடைத்த வெகுமதி இது என்று எனக்கு தோன்றவில்லை. இனி செய்யப்போகும் பணிகளுக்கு இறைவன் கொடுக்கும் உற்சாகம் என்றே எடுத்துக்கொண்டேன்.

அன்னைக்கு பாரதியின் புதிய ஆத்திசூடி பரிசளிக்கப்பட்டது. பாரதியை பார்த்ததும் தான் அன்னைக்கு எவ்வளவு சந்தோஷம்?  தொடர்ந்து நமது தளத்தின் ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸும் தந்து ஆசிபெற்றோம்.

அடுத்து நண்பர் மனோகரனும் அன்னையிடம் ஆசி பெற்றார்.

அன்னை எங்கள் மூவருக்கும் திருவாசகம் நூல் பரிசாக தந்தார்கள். போற்றி பாதுகாத்து தற்போது படித்துவருகிறோம்.

இத்தனையும் சுமார் ஓரிரு நிமிட இடைவெளியில் நடந்திருக்கும். கூட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதால் உடனே அந்த இடத்திலிருந்து மூவரும் வெளியே வந்துவிட்டோம்.

அம்மாவின் டிரைவர் சண்முகத்திற்கு நன்றி கூறினோம். மறக்காமல் அம்மாவின் மகள் உமையாளையும் உடனே அலைபேசியில் அழைத்து நன்றி கூறினோம்.

நண்பர் முத்துக்குமார் எப்படியும் அவர் பெங்களூர் சென்றடைய 4 முதல் 5 மணிநேரம் ஆகும் என்பதால் தான் உடனே புறப்படுவதாக சொன்னார்.

அவர் புதிய கார் வாங்கியுள்ளபடியால் “அம்மாவின் கார் டிரைவர் சண்முகம் அவர்களை  ஓட்ட வைத்து ஒரு சிறிய ரவுண்ட் வாருங்கள். அப்புறம் கிளம்புங்க. அது மிகவும் நல்லது.” என்றேன்.

“நல்ல யோசனையா இருக்கே” என்றவர் சண்முகத்திடம் விஷயத்தை கூறி “நீங்கள் என் காரில் ஏறி உட்கார்ந்து சிறிது மூவ் செய்தால் கூட போதும். நான் கார் வாங்கியதன் பயனை அடைவேன்” என்று கூற சண்முகம், அத்தனை பரபரப்புக்கிடையிலும் எங்கள் அன்புக்கு மறுப்பு சொல்ல முடியாது ஒப்புக்கொண்டார் சண்முகம்.

காரில் நம்மையும் நண்பர் மனோகரானையும் கூட ஏறிக்கொள்ளும்படி சொல்லி, அந்த காரில் திரு.சண்முகம் அந்த வீதியை ஒரு சிறிய ரவுண்ட்  வந்தார்.

திரும்ப நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்ததும் “நீங்க என் கார் சீட்டில் உட்கார்ந்தது நான் செய்த புண்ணியம்” என்று அவரிடம் நன்றி கூறினார் முத்துக்குமார். பின்னர் அவர் புறப்பட்டு செல்ல நானும் நண்பர் மனோகரனும் முற்றோதலில் ஐக்கியமானோம். தற்போது 44 வது பாடல் போய்கொண்டிருந்தது.

திருவாசகத்தின் சிறப்பு

திருவாசகம் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும். திருவாசகம் படிப்பதற்கு மிகவும் இனியது. எளிதில் பொருள் விளங்கக்கூடியது. நம் ஜென்மம் கடைத்தேற்ற வல்லது.

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்கிற கூற்று எத்தனை பெரிய உண்மை என்பதை திருவாசகத்தை ஒரு முறை படித்தால் உங்களுக்கு விளங்கும்.

திருவாசகம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாவதாக விளங்குகிறது. இது மாணிக்க வாசகரால் அருளிச் செய்யப்பட்டது. இந்நூல் உருகா உள்ளத்தையும் உருக்கி உயிர்க்குப் பதித்துவம் அருளவல்லது. ஆதலால் இது செந்தமிழுக்கு அன்பு மறையாய்ப் போற்றப் பெறுகின்றது. திருவாசகம் என்ற பெயர் திருவுடைய சொற்களால் ஆகிய அருள் நூல் எனப் பொருள்படும். திருவாசகத்தைத் தேன் எனக் கூறுதல் மரபு. தேன் உடற்பிணிக்கு மருந்தாதல் போல, இந்நூல் உயிர்ப்பிணிக்கு மருந்தாகும்.

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லல் அறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகமென்னும் தேன்.

இந்நூல், ஓதுவார் உள்ளத்தை உருக வைக்கும் பேராற்றல் மிக்கது. நாடு, மொழி, இனத்தால் வேறுபட்ட வெளிநாட்டவரையும் கசியவைக்கும். டாக்டர்.ஜி.யு.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

ஜூன் 30 ஆம் தேதி திருவேற்காட்டில் நடைபெற்ற முற்றோதலில் பட்டாம்பூச்சி வந்து இரண்டு மணிநேரம் அமர்ந்து பாடல் கேட்ட அதிசயத்தை பற்றி சண்முகத்திடம் சொன்னோம்.

“இங்கே கூட வந்தது சார்.” என்றார்.

“என்னது இங்கே கூடவா? யாராவது போட்டோ எடுத்திருக்காங்களா?”

“ஐயாவோட குழுவில் சரவணன்னு ஒருத்தர் இருக்கார். அவர் அதை வீடியோ எடுத்திருக்கார்னு நினைக்கிறேன்”

“சார்… எனக்கு அதை வாங்கி கொடுங்களேன். வீடியோ கூட வேண்டாம். ஜஸ்ட் இரண்டே இரண்டு ஸ்டில்ஸ் கிடைச்சா கூட போதும். என் தள வாசகர்களுக்கு காமிக்கணும்” என்றேன்.

“ஓதல் முடியட்டும். அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். வாங்கிக்கலாம்” என்றார். (சொன்னபடியே பிற்பாடு சரவணனை நமக்கு அறிமுகம் செய்துவைக்க அவர் நமக்கு ப்ளூ டூத்தில் இரண்டு படங்கள் அனுப்பினார்.)

திருவேற்காட்டை போலவே இங்கும் நெடிய நேரம் பட்டாம்பூச்சி தாமோதரன் ஐயாவின் மடியில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முற்றோதல் இறுதியில் நன்றி கூறிய தாமோதரன் ஐயா ஒரு பாடலை பாட, அது திருவாசகத்தில் அடுத்த பதிகம் என்றெண்ணி அனைவரும் புத்தகத்தை பார்க்க, “புத்தகத்தை பார்க்காதீங்க. இது நான் உங்களை வாழ்த்தி பாடுற பாட்டு. புத்தகத்துல இருக்காது” என்று சிரித்தபாடி கூறினார்.

சர்வ மங்களமும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க எல்லாரையும் வாழ்த்தி அவர் பாடிய பாடல் இருக்கிறதே…. தேனாறு போங்கள். அப்படி ஒரு குரல் வெண்கலக் குரல் அவருடையது.

ஓதல் முடிந்ததும் மேளதாளங்கள் முழங்க அற்புத இசையில் நடனத்துடன் பூதகணங்களின் ஆட்டம் நடைபெற்றது. வந்திருந்தவர்கள் சிலரும் உணர்ச்சிவசப்பட்டு அந்த ஆட்டத்தில் தாங்களும் கலந்துகொண்டனர். கேட்க கேட்க கால் துடித்தது நமக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் ஆட்டம் நீடித்திருந்தால் நானும் உள்ளே கோதாவில் இறங்கியிருப்பேன் போல. அப்படி ஒரு இசை.

இதற்கிடையே முற்றோதலுக்கு நடுவே – கூட்டத்தில் – அரிபரியில் – அன்னையை பார்த்ததால் பார்த்தது போலவே இல்லை. அம்மாவை தனியாக பார்த்து அவரிடம் நாலு வார்த்தைகள் பேசி ஆசி பெறவேண்டும் என்கிற ஆவல் எனக்கும் நண்பர் மனோகரனுக்கும் – எங்கள் இருவருக்குமே இருந்தது.

தவிர பிரார்த்தனை கிளப் தொடர்பாக கோரிக்கை அனுப்பியிருந்தவர்கள் பெயர் பட்டியலை நாம் கொடுத்தது குறித்து அம்மாவுக்கு ஏதாவது புரிந்திருக்குமா என்று எனக்கு உள்ளூர சந்தேகம்.

அது மட்டுமல்ல நம்மை அம்மா சரியாக யார் என்று தெரிந்து தான் ஆசி வழங்கினார்களா என்று எனக்கு சந்தேகம் இருந்தபடி இருந்தது. காரணம் அங்கு மைக் சத்தத்தில் நாம் கூறியது எதுவும் அன்னையின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. மற்றொன்று அம்மாவின் வயது. கிட்டத்தட்ட அம்மாவுக்கு 85 வயதுக்கும் மேல் இருக்கும். நமக்கே இந்த பரபரப்பான உலகில் அன்றாட வேலைகளில் காலையில் பேசியவர்கள் பெயர் மாலை மறந்துவிடுகிறது. அம்மாவுக்கு இந்த வயதில் நம்மை பற்றி என்ன தான் முன்கூட்டியே யார் தகவல் தெரிவித்திருந்தாலும் அது நினைவில் இருக்குமா என்று எனக்கு சிறு சந்தேகம்.

எனவே டிரைவரிடம், “நிகழ்ச்சி முடிஞ்சவுடனே எப்படியாவது அம்மாவை தனியா பார்த்து மரியாதை பண்ணனும். அவங்க கிட்டே ஆசி வாங்கணும். அதுக்கு ஏற்பாடு செய்யுங்க.” என்றேன்.

“நிச்சயமா… நீங்கே இங்கேயே நில்லுங்க. நான் சொல்றேன் உங்களுக்கு” என்றார்.

சொன்னபடி… திருவாசகம் முற்றோதல் முடிந்தவுடன் அம்மா சற்று இளைப்பாறுவதற்கு பக்கவாட்டில் இருந்த வகுப்பறை கட்டிடத்துக்கு செல்ல, சண்முகம் நம்மை பஅலைபேசியில்  அழைத்தார்.

அவர் அங்கே இருப்பதை பார்த்துவிட்ட பொதுமக்கள் சிலர் ஒவ்வொருவராக அம்மாவிடம் வந்து தங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டு அவர்களின் காலில் விழுந்த வண்ணமிருந்தனர். இதற்கே நேரம் சரியாக இருந்தது. அன்னைக்கு கிடைக்கும் இந்த கௌரவமும் வரவேற்பும் எனக்கும் நண்பர் மனோகரனுக்கும் சந்தோஷம் என்றாலும் நாம எப்போ அம்மாகிட்டே தனியா பேசி ஆசி வாங்குறது என்கிற கவலை எழ ஆரம்பித்துவிட்டது. காரணம் சற்று நேரத்தில் அம்மா கிளம்பிவிடுவார் போல இருந்தது.

ஒரு வழியாக ஒரு கேப் கிடைக்க அம்மாவுக்கு மீண்டும் ஒருமுறை பொன்னாடை ஒன்றை போர்த்தி ஆசை தீர புகைப்படம் எடுத்துக்கொண்டோம். காலில் விழுந்து ஆசிபெற்றோம்.

“அம்மா என்னை யாருன்னு தெரியுதுல்ல??” என்றேன் சற்று சந்தேகத்தோடு.

“என்னப்பா… இப்படி கேட்டுட்டே…. சுந்தர் சுந்தர்னு உன் பேரைத் தான் இன்னைக்கு நிறைய தரம் சொல்லிகிட்டிருந்தேன். நீ வந்துட்டியா வந்துட்டியான்னு கேட்டுகிட்டிருந்தேன். எவ்ளோ பெரிய கைங்கரியம் பண்றே நீ… எவ்ளோ நல்ல மனசு… மத்தவங்களுக்காக பிரார்த்தனை பண்ண ஒரு குழுவை அமைச்சு… அதற்காக முயற்சியால் எடுத்து…. நீ நல்லா இருப்பேப்பா…. சிவாய நம சிவாய நம…” என்று சொல்ல நமக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் ஒரு பக்கம் அன்னையின் நினைவாற்றலை சந்தேகப்பட்டதால் சவுக்கால் அடித்தது போன்றும் இருந்தது.

அன்னையின் இந்த பாராட்டு மொழிகளை கேட்டதும்… என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

“அம்மா உங்களிடம் வாழ்த்தும் பாராட்டும் பெற்றது நான் செய்த பேறு. நான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறை இறைவன் எனக்கிட்ட பிச்சை. அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பாக்கியம் பெற்றேன்!!” என்று கூறி அவரின் கால்களில் விழுந்தேன்.

நண்பர் மனோகரன ஆசி பெறுகிறார்

“சிவாய நம சிவாய நம…” என்று கூறி நம்மை ஆசீர்வதித்தார்கள்.

பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்தார்களா என்று எனக்கு தெரிந்துகொள்ள ஆசை. அது பற்றி கேட்டேன்.

“என் குழந்தைகளுக்காக நான் அவன்கிட்டே வேண்டாம இருப்பேனா?” என்று சொன்னவர்கள் அடுத்த வாரம் பழனியில் நடைபெறும் முற்றோதலுக்கு அவசியம் நம் நண்பர்களை அழைத்து வரவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார்கள்.

“நிச்சயம் வர்றோம்மா…” என்றேன்.

பொதுமக்களில் ஒருவர் தன் குடும்பத்துடன் அன்னையிடம் ஆசி

நண்பர் மனோகரனும் அம்மாவிடம் சில வார்த்தைகள் பேசி விழுந்து வணங்கி ஆசிபெற்றார்.

தொடர்ந்து அம்மா வெளியே கிளம்புவதற்கு அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வர அவர் செல்லும் வழி நெடுகிலும் அம்மாவின் கால்களில் மக்கள் வந்து விழுந்த வண்ணமிருந்தனர். குடும்பத்துடன் பலர் கால்களில் விழுந்தனர்.

அம்மாவின் பெண் உதவியாளர் கல்யாணி என்பவர் நம்மிடம் அவர்களுடன் வந்து உணவருந்திவிட்டு தான் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்து ஒரு இரண்டு கி.மீ. தொலைவில் ஒரு பெரும் தொழிலதிபர் – சிவபக்தர் – ஒருவரின் வீட்டில் தான் அனைவருக்கும் உணவு ஏற்பாடாகியிருந்தது.

தாமோதரன் ஐயாவின் திருவாசகம் குழுவினர் உட்பட ஒரு நூறு பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு அவ்வீட்டில் இரவு விருந்தளித்தார்கள்.

சிவனடியார்கள் மற்றும் திருவாசகம் ஓதியவர்கள் அனைவரும் அவ்வீட்டில் பசியாறினர். அது வீடு என்பதை விட மிகப் பெரிய பங்களா என்று சொல்லலாம். சிவத் தொண்டில் சிறந்து விளங்குபவர் உரிமையாளராக இருக்கவேண்டும் என்பது பார்த்தவுடனே புரிந்தது.

சிவனாடியார்களுக்கு உணவிட்டதன் மூலம் அந்த இல்லம் பவித்ரம் பெற்றது. எதிர்காலத்தில் இது போன்று கைங்கரியங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்று உறுதிபூண்டுள்ளேன்.

இத்தனை அடியார்களுக்கு உணவிட்டு இயற்கை உபாதையையும் அவர்கள் சிரமமின்றி கழிக்க உதவி செய்துள்ள அவ்வீட்டின் உரிமையாளர் யாரென்று விசாரித்து தெரிந்துகொண்டு அவரிடம் சென்று “மிகப் பெரிய கைங்கரியம் செய்ததோடு மட்டுமல்லாமல் வந்தவர்கள் உங்கள் வீட்டின் கழிவறை முதற்கொண்டு அனைத்தையும் பயன்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். இது ரொம்ப பெரிய விஷயம். ரொம்ப சந்தோஷம்” என்று அவருக்கு கைகுலுக்கி நன்றி கூறினேன்.

நம்மை பற்றி கேட்டார். அன்னையையும் தாமோதரன் ஐயாவையும் சந்தித்து ஆசி பெற சென்னையிலிருந்து நம் தளம் சார்பாக வந்த விபரத்தை கூறினேன். தளத்தை பார்ப்பதாக கூறியிருக்கிறார்.

அடுத்து நானும் நண்பர் மனோகரனும் பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அன்னையிடம் விடைபெற்று கிளம்பினோம்.

மீண்டும் ஆசி வழங்கும்படி கூறி அன்னையின் கால்களில் விழுந்தேன். நம் அனைவரின் நலனை வேண்டிக்கொண்டதோடு என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையை சொன்னேன். (தெரியுமில்லை?).

“நிச்சயம் சீக்கிரமே விவாகப் ப்ராப்தம் உனக்கு உண்டு” என்றார்.

“அம்மா எனக்கு திருமணம் ஆவது முக்கியமல்ல… எனது பணிகளில் துணை நிற்கும்படியாக பக்தியும் குணமும் மிக்க ஒரு பெண் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று ஆசீர்வதியுங்கள்” என்றேன்.

“அப்படியே குழந்தை… நிச்சயம் நல்லது நடக்கும். சீக்கிரமே நடக்கும். சிவாய நம… சிவாய நம” என்று கூறி திருநீறை நம் நெற்றியில் பூசினார்கள்.

மனோகரனும் அன்னையின் கால்களில் ஆசிபெற்றார்.

தொடர்ந்து தாமோதரன் ஐயாவிடமும் ஆசி வழங்கும்படி கேட்டேன்.

“நீங்க திருவீழிமலை போய்ட்டு வாங்க… நிச்சயம் உடனே நல்லது நடக்கும்” என்றார்.

ஆகஸ்ட் மாதம் இடையில் ஒரு நாள் திருவீழிமலை சென்று வர உத்தேசித்திருக்கிறேன்.

அன்னை இராஜம்மாள் அங்கிருந்து இரவு கிளம்பி மறுநாள் திருக்கழுக்குன்றத்தில் தாமோதரன் ஐயாவின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் முற்றோதலில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அம்மாவிற்கு சற்று உடல் சுகவீனம் ஏற்பட்டதால் நேரே பழனிக்கே கிளம்பிவிட்டார்கள்.

நாங்கள் கிளம்பும்போது தாமோதரன் ஐயாவின் குழுவினர் சென்ற வேனில் ஏறி குடியாத்தம் பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொண்டோம். சற்று UNTIME  ஆகிவிட்டதால் எப்படி ஊர் போய் சேருவது என்ற கலக்கத்தில் இருந்தோம். ஆனால்
அன்னையின் ஆசியும் சிவனருளும் இருந்தபடியால் அனைவரும் சௌகரியமாய் வந்து சேர்ந்தோம்.

=========================================
நோட்டீஸ் ஸ்பான்சர் வேண்டுகோள் :

பழனியில் முற்றோதல் நடைபெறும் திருமண மண்டப வளாகத்தில் நமது தளம் சார்பாக தயாரான ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீசை வருபவர்கள் அனைவருக்கும் வழங்க ஏற்பாடாகியுள்ளது. சுமார் 5000 நோட்டீஸ் என்பதால் இங்கிருந்து பிரிண்ட் செய்து எடுத்து செல்வது கடினம். பழனியிலேயே அதை பிரிண்ட் செய்ய உத்தேசித்துள்ளேன்.

அந்த நோட்டீஸ் அச்சடிக்கும் செலவை நம் வாசகர்கள் எவராவது ஏற்றுக்கொண்டால் மிகவும் நன்றியுடையவனான். எனவே அதை ஸ்பான்சர் செய்ய விரும்புகிறவர்கள் நம்மை அலைபேசியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!!
=========================================

[END]

5 thoughts on “அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!

  1. பழனி அம்மாவை நேரில் தரிசிததுபோல் இருந்தது. அற்புதமான பதிவு சுந்தர். உண்மையிலேயே நாம் எல்லோரும் பாக்கியசாலிகள், ஏனென்றால் நமக்காக அன்னை பிரார்த்தனை செய்திருக்கிறார். சிவத்திரு தாமோதரன் ஐயா அவர்களின் மடியில் வண்ணத்துபூச்சி அமர்ந்திருக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது. அன்னை அவர்கள் உங்களுக்கு அவர் கையால் திருநீறு பூச நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் சுந்தர். மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் கொடுத்த பதிவிற்கு நன்றி சுந்தர்.

  2. படிக்க படிக்க ஆனந்தம். பரவசம். மெய்சிலிர்த்தது.
    மேல சொல்ல வார்த்தைகள் இல்லை.நீங்கள் அடைந்த பெரும்பேறு மற்றவர்களும் உணர அன்னை அவர் அருள் செய்ய வேண்டும்.
    மகிழ்ச்சியால் மனம் பெருமிதம் கொள்கிறது.
    வாழ்க நின் பயணம். வளர்க உங்கள் தொண்டு

  3. இந்த மாதம் முழுக்க எவ்வளவு நல்ல உள்ளங்களை நம்மோடு தெய்வம் சுந்தர் மூலம் சேர்த்திருக்கிறது. திருவண்ணாமலை மணிமாறன், கோவை சபரி வெங்கட், பழனி அம்மா மற்றும் தாமோதரன் அய்யா என அனைவராலும் நமது பிராத்தனை கிளப் வலுபெறுவதை நினைத்தால் உள்ளம் உருகுகிறது . எத்தனை கொடுத்து வைத்துள்ளோம் ரைட் மந்த்ராவில் ஒன்று சேர. இன்றைய கலியுகத்திலும் இறைசக்தியின் பேரருள் எளிதில் கிடைக்க நாம சங்கீர்த்தனம் எளிய வழி என்பார்கள். அந்த வகையில் தாமோதரன் அய்யா திருவாசகம் ஓதும் இடங்களில் பட்டாம் பூச்சி வருவது இறைவனின் அருள்தான். மலைக்க வைக்கும் வரிசையான பதிவுகள். ஹாட்ஸ் ஆப் டு சுந்தர்ஜி.

  4. சுந்தர்ஜி,

    மெய் சிலிர்க்க வைக்கின்றது என்ன ஒரு அற்புதமான PTHOTTOKKAL காண கண் கோடி வேண்டுமப்பா. எனக்கு உண்மையிலேயே இப்படி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி மேள தாளத்துடன் நடக்கும் என்று தெரியாது. நான் போட்டோகளை பார்த்த வரையில் முதியவர்களை விட சிறியவர்கள் கலந்து கொண்டு நிகழ்சிகளை நடத்தியது மிகவும் ஆச்சர்யமாக இருகின்றது. தங்களுக்கு கிடைத்த மலர் மாலை தங்களுக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு. தாமோதரன் அய்யா மற்றும் பழனி அம்மா ஆசிர்வாதத்தால் தங்களுக்கு வெற்றி மேல் வெற்றி தான்.
    சாப்பிடும் போது ஒரு சிவா பக்தர் இருகின்றார். அவரை பார்த்தால் சிவபெருமானை போன்று உள்ளது. இன்னும் எழுதி கொண்டே போகலாம். மொத்தத்தில் நான் நேரில் பார்த்ததை போன்று மகிழ்ச்சியாக உள்ளது. ANNUAL DAY காக காதிரிகின்றேன்.நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். அலுவல் காரணமாக எழுத இயலவில்லை.

    NANDRI

  5. நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற மன திருப்தி !!!

    சான்றோர் தரிசனம் மற்றும் ஆசி நம் வாழ்க்கையில் நிச்சையம் ஒரு திருப்பு முனையாக திகழும் என்பதில் ஐயமில்லை !!!

    நம் தள வாசகர்கள் அனைவரின் சார்பாக சுந்தர் அவர்கள் பெற்றுள்ள இந்த ஆசி நம் எல்லோரையும் நல்வழிப்படுத்தி வாழ்க்கை என்னும் கடலை கடக்க நிச்சையம் உதவிடும் !!!

    வாழ்க வளமுடன்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *