சுமார் அரை மணிநேரத்துக்கும் மேல் பேசிய வாலி, அரங்கையே கலகலப்பாக்கிவிட்டார். சிரித்து சிரித்து வயிரே புண்ணாகும் அளவிற்கு பேச்சு முழுவதும் நகைச்சுவை இழையோட எதுகை மோனையுடன் பேசிய அவரது பேச்சில் பார்வையாளர்கள் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டார். அதற்க்கு பிறகு ஒன்றிரண்டு விழாக்களில் அவரை பார்த்திருக்கிறேன். பேசும் வாய்ப்பு அமையவில்லை.
வாலி எழுதிய பல பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உதாரணத்துக்கு: ‘கண்போன போக்கிலே கால் போகலாமா’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்’, ‘இதோ எந்த தெய்வம் முன்னாலே’…. உள்ளிட்ட பல காலத்தால் அழியாப் பாடல்கள் வாலி இயற்றியவை தான். ஆனால் பலர் கண்ணதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றி வாலி தோன்றிய விகடன் மேடையில் இடம்பெற்ற கேள்வி பதில் ஒன்றை பார்ப்போம்.
கேள்வி : நீங்கள் எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்றே பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வருத்தமாக இல்லையா?
வாலி : வருத்தமா? மிகப் பெரிய அங்கீகாரம் அல்லவா அது!
என்ன ஒரு பதில்….!!! நமக்கு நடக்கும் நிகழ்வுகள் மீது இது போன்றதொரு கண்ணோட்டம் தான் உங்கள் அனைவருக்கும் வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
சமீபத்தில் காந்தி கண்ணதாசன் அவர்களை நேர்காணலுக்கு சந்தித்தபோது கூட இது பற்றி சிலாகித்து கூறினேன்.
எண்ணற்ற திரைப்பட பாடல்களை வாலி எழுதினாலும் விகடன், குமுதம் உள்ளிட்ட இதழ்களில் பல பக்தி தொடர்களை கவிதை வடிவில் எழுதியிருக்கிறார்.
திரைப்பட பாடல்கள் எழுதும்போது வார்த்தைகள் விளையாடுவது என்பது வேறு பக்தி இலக்கியங்களை எழுதும்போது வார்த்தைகள் விளையாடுவது என்பது வேறு. ஆனால் வாலி இரண்டையும் கைவரப்பெற்றிருந்தார் என்றால் அது அந்த அரங்கனின் அருள் தான்.
தம்மை விரைவில் காலதேவன் அழைத்துக்கொள்வான் என்று வாலி கணித்திருந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அஹோபில மடத்தின் 45வது ஜீயர் அழகிய சிங்கர் அண்மையில் வைகுண்ட ப்ராப்தி அடைந்தார். அவரது நினைவாக அவரது வாழ்க்கை வரலாற்றை குமுதம் பப்ளிகேஷன்ஸ் சார்பில் ‘அழகிய சிங்கர்’ என்னும் வசன கவிதை நூலை எழுதியிருந்தார் வாலி. 46 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தலைமையில் ஜூன் முதல் வாரம் சென்னையில் அதன் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய வாலி, “எத்தனையோ பாடல்களை, நூல்களை நிதிக்காக எழுதியிருக்கிறேன். இந்நூலை எழுதியது என் கதிக்காக….!” என்றார். மேலும் இனி நான் இந்த உலகத்திலிருந்து எந்த நொடி விடைபெற்றாலும் நிம்மதியாக விடைபெறுவேன். ‘அழகிய சிங்கர்’ எழுதியதன் மூலம் மிகப் பெரிய பாக்கியம் பெற்றேன்” என்றார். சொன்னது போலவே நம்மை விட்டுப் போய்விட்டார்.
வாலி அவர்களை கௌரவிக்கும் பொருட்டு அந்நூல் வெளியீட்டு விழாவை புகைப்படங்களோடு இங்கு பதிவு செய்கிறேன்.
இப்படி ஒரு பதிவை அளிக்கப்போகிறேன் என்றதும் குமுதத்திலிருந்து இந்நூலின் அட்டை வடிவமைப்பை நமக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.
இந்த பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் அரங்கனின் திருவருளும் அழகிய சிங்கரின் ஆசியும் கிடைக்கட்டும்.
அழகிய சிங்கர் நூல் வெளியீட்டு விழா தொடர்பாக தினமலர் இணையத்தில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றை தருகிறேன். அதே போல சான்றோர்கள் பங்கேற்ற இந்த அரிய நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் முழு வீடியோவை இத்துடன் இணைத்திருக்கிறேன். அனைவரும் அவசியம் பார்த்து பயன்பெறவேண்டும். குமுதம் ஜோதிடம் நூலின் ஆசிரியர் திரு.ஏ.எம்.ராஜகோபாலன் உள்ளிட்ட சான்றோர்கள் பேசுவதை கேட்கவேண்டும். (அவசியம் வாலி பேசுவதை கேளுங்கள்!) அவர்களின் வார்த்தைகளில் தமிழ் விளையாடுவதை ரசிக்கவேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சியை நேரில் காணும் பாக்கியத்தை தவறவிட்டமைக்கு வருந்துகிறேன்.
வாலி அவர்களின் உரையை இந்த வீடியோவில் கேட்டீர்களென்றால் குறைந்தது பத்து இடங்களிலாவது கைத்தட்டி ஆனந்தப்படுவீர்கள் என்பது உறுதி.
முழு வீடியோவும் பார்த்து ரசித்து சிலாகித்து ஆனந்தப்படவேண்டியது என்றாலும் வாலி அவர்களின் உரையை மட்டும் முதலில் பார்க்கவிரும்புகிறவர்கள் 1:08:53 to 1:22:36 என்ற இடைவெளியில் பார்க்கவும்.
============================================
தினமலர் கட்டுரை :
அழகிய சிங்கரை ஆராதிக்க ஒரு புத்தகம்!
கிருத யுகத்தில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது, பக்தன் பிரகலாதனைப் பார்ப்பதற்காக என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த கலியுகத்தில் தன் பக்தர்களைப் பார்ப்பதற்காக அந்த அழகிய சிங்கரே எழுந்தருளினார் சென்னை மியூசிக் அகாடமிக்கு!
பிரகலாதனாக இருந்து அங்கே பகவானின் புகழ்பாடும் ஜீயரை அழைத்துவந்தவர், குமுதம் குழுமத்தின் அதிபதி பா. வரதராசன் அவர்கள். அதுவும் அவர் அழகிய சிங்கரை அழைத்து வந்த விதம் எப்படி தெரியுமா? வாலால் கட்டி!
அந்த நூல் எப்படிப்பட்டது தெரியுமா? ஆண்டனைவிட ஆச்சார்யரே உயர்ந்தவர் என்பது வைணவ மரபு. அந்த மரபுக்கு மதிப்பளித்து, அகோபில மடத்தின் 45-வது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை கவிஞர் வாலியை வசன கவிதையில் எழுதச் சொல்லி உருவாக்கிய நூல்.
07.06.2013 மாலை ஆறுமணி. மியூசிக் அகாடமியில் கவிஞர் வாலி, வசன கவிதையில் எழுதிய ஸ்ரீமத் அழகிய சிங்கர் 45-ஆம் பட்டம் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில்தான் நிகழ்ந்தது அந்த நரசிம்ம அவதாரம்.
இது நிஜமா? பக்தரைப் பார்க்க பகவான் இப்போதும் வருவாரா? இறைவணக்கப் பாடல்களுக்கு பின், சமீபத்தில் முக்தியடைந்த, அகோபில மடத்தின் 45ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் குமுதம் டாட்காமிற்கு அளித்த பேட்டி ஒளி, ஒலியாகக் காட்டப்பட்டபோது கிடைத்தது.
நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டி கருடன் தவம் இருந்த இடம்தான் அகோபிலம். அவனது தவத்திற்காக எழுந்தருளிய நரசிம்மர், அங்கேயே அர்ச்சாமூர்த்தமாக நிலைத்தாராம். பின்னர் ஆதி வண்சடகோப அழகிய சிங்கரிடம், தாமே தேடிச் சென்று, பக்தர்களைப் பார்க்க விரும்புவதாகவும் அப்படித் தம் சார்பாகச் செல்ல ஆசார்ய பரம்பரையை துவக்கிவைப்பதாகவும் சொன்னாராம். அதாவது ஆண்டவனே ஆசார்யாளாக எழுந்தருளுவதாக ஐதிகம்.
அந்த வகையில் அகோபில மடத்தின் 46-ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் விழாவிற்கு முன்னதாகவே எழுந்தருளி, நிறைவுபெறும் வரை அனைத்தையும் பார்வையிட்டு ஆசியளித்தது, சிங்கபிரான் முன்னிலையிலேயே நூல் வெளியீடு நிகழ்ந்ததுபோல் நெகிழவைத்தது.
அழகிய சிங்கரின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா தொடங்கும் முன்பே, வந்திருந்த அனைவருக்கும் கேஸரி பிரசாதம் வழங்கப்பட்டது. என்ன பொருத்தம்! (கேஸரி என்றால் சிங்கம் என்றும் ஓர் அர்த்தம் உண்டே!)
விழாவின் தொடக்கத்தில் இறைவணக்கமாக, இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இசையமைப்பில் ஸ்ரீமத் அழகிய சிங்கரைப் பற்றி வாலி எழுதிய வெண்பாக்களை சிங்காரக் குரலில் பாடினார், பாடகி சின்மயி. (இது இவரது முதல் கர்நாடக இசைக் கச்சேரி)
குமுதம் ஜோதிடத்தின் ஆசிரியரும் ஸ்ரீமத் அகோபில மடத்தின் ஆஸ்தான வித்வானுமான ஏ.எம். ராஜகோபாலன் அகோபில மடத்தின் பெருமைகளைச் சொல்லி வரவேற்புரை நிகழ்த்தி நெகிழ்வுடன் தொடங்கிவைத்தார்.
நூலை வெளியிட்ட இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், டெல்லி மேல்சபை உறுப்பினருமான கே. பராசரன் அவர்களும், நூலைப் பெற்றுக் கொண்ட ஆடிட்டரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ். குருமூர்த்தி அவர்களும் வாலியின் கவிதைகளின் மாண்பையும், குமுதம் குழும அதிபரின் பண்பையும் பாராட்டிப் பேசினார்கள்.
மேனாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ. டாக்டர். அவ்வை நடராஜன், பேராசிரியர். முனைவர்.தெ. ஞானசுந்தரம், வழக்கறிஞர் திருமதி. சுமதி ஆகியோர் நூலில் இடம்பெற்றிருந்த வாலியின் கவிதைகளில் பலவற்றைச் சொல்லி, அவற்றின் எளிமையையும் நயத்தையும் அருமையாக விளக்கினர்.
ஏற்புரை வழங்கிய வாலி, குமுதத்தின் நிறுவிய பதிப்பாளரான திரு.பி.வி. பார்த்தசாரதியின் மைந்தரும் குமுதம் குழுமத்தின் அதிபருமான பா. வரதராசன் அவர்கள் கேட்டதற்கு இணங்க ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தாம் எழுதிய நூல் இது என்பதை, திருவல்லிக்கேணி தந்த காஞ்சிபுரத்தின் விருப்பபபடி ஸ்ரீரங்கம் எழுதிய நூல் இது என்று சொன்னது, ரசிக்க வைத்தது.
ஆசார்யன் இடம்தான் உச்சம், ஆண்டவன் இரண்டாம் பட்சம் என்பதற்கு இணங்க தாம் எழுதிய இந்த நூல் தமக்கு மனமகிழ்வைத் தருவதாகச் சொன்ன கவிஞர் வாலி, நிதிக்காக இருபதுவரிப் பாடல்களை எழுதும் நான் எழுதிய இந்த இருநூறு பக்கப் புத்தகம் நல்ல கதிக்காக எழுதியது என்று சொன்னபோது அரங்கே அதிர கைதட்டல் எழுந்தது. அது இந்தப் புத்தகத்தை படித்தாலே போதும், ஆசார்யான் அனுகிரகத்தால் ஆண்டவன் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாக எதிரொலித்தது.
“இந்தப் புனித நூலை என்னை எழுத வைத்தவர், பா. வரதராசன், அதனால் இந்த நூலை எழுதியதால் எனக்குக் கிடைக்கும் புண்ணியத்தில் 99.99 சதவீதம், பா. வரதராசனையே சேரட்டும்’ என்றார், வாலி.
அகோபிலமடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் ஆசியுரை எல்லோருக்கும் மனநிறைவைத் தந்தது நிஜம்.
விழாவின் முடிவில் குமுதம் குழும ஆசிரியர் ச.கோசல்ராம் நன்றியுரை நல்கினார்.
பூக்களால் பூஜித்துப் பெரும் நரசிம்மரின் அருளை ஆச்சாரியாளைப் போற்றும் பாக்களால் துதித்துப் பெற நல்லதொரு நூல் தந்த குமுதம் புதுத்தகத்தினைப் பலரும் பாராட்டி வாங்கிச் சென்றது, நிறைவைத் தந்தது.
விழாவில், துக்ளக் ஆசிரியர் சோ, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சோ. அய்யர், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இயக்குனர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், நடிகர்கள் பார்த்திபன், ராஜேஷ், ராஜகுமாரன், கிரேஸி மோகன், வி.எஸ்.ராகவன், நடிகை தேவயானி, கவிஞர்கள் முத்துலிங்கம், காசிமுத்துமாணிக்கம், பழநிபாரதி, கல்யாணராமன் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
– ஜெயாப்ரியன், தினமலர்.காம்
=============================================
வாலிப கவிஞர் வாலி அவர்கள் மறைந்துவிட்டார் என்பது கோடானு கோடி நெஞ்சங்களை வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.
தற்போது நீங்கள் கொடுத்த பாடல்கள் கண்ணதாசன் பாடல் என்று தான் நினைத்திருந்தேன்.
அழகிய சிங்கர் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞரின் வார்த்தைகளும் பேசும் அவரின் பெருமையைவும் பணியைவும் காட்டுகிறது
இதை எங்களுக்கு படித்து பார்க்க பாக்கியம் செய்த சுந்தர் சாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படி ஒரு கட்டுரை உங்களால் தான் என்னை போன்றவர்களுக்கு
கிடைத்துள்ளது. இல்லாவிட்டால் நிச்சயமாக எனக்கு தெரியாது. மிகவும் நன்றி சார்.
கவிஞர் வாலி மறைந்து விட்டார் என்பது தமிழ் மக்களுக்கு மாபெரும் இழப்பு. இப்படி ஒருவர் பின் ஒருவராக பாடகர் T MS , கவிஞர் வாலி என்று ஒவொருவராக இழந்து வருகின்றோம்.
உணமையிலேயே இந்த கட்டுரை படிக்கும்போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அழகிய சிங்கர் வெளியீட்டு விழாவில் அவர் நகைசுவை ததும்ப பேசுவதை கேட்கும்போது அவர் இன்னும் நூறாண்டுகாலம் இருந்து இருக்கலாமே என்று நினைக்க தோன்றுகின்றது.
NANDRI
அழகிய சிங்கர் நூல் வெளியீட்டு விழாவை விஜய் டீவீயில் இரண்டு மணி நேரம் பார்த்த என்னால் அவரது மறைவுச்செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும் 81 வயது வாழ்ந்து முத்தான பாடல்களையும் நல்ல நூல்களையும் நமக்கு தந்து ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் அமர கவி வாலி அவர்கள். அவருடைய முத்தான பாடல்களில் சில:
தாயின் பெருமையை போற்றும் அம்மா என்றழைக்காத
கடமையை உணர்த்தும் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
தாம்பத்திய உறவை மேம்படுத்தும் கண்ணன் ஒரு கை குழந்தை
வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண் போன போக்கிலே
பொது நல உணர்வுக்கு நான் ஏன் பிறந்தேன்
இறையுணர்வை கட்டும் கல்லை மட்டும் கண்டால்
இன்னும் எத்தனையோ பாடல்களை நமக்கு அளித்த ஜனரஞ்சக கவி வாலி அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும்.
மறைந்த கவி வாலி அவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது மழை கொட்டோகொட்டு என்று கொட்டியது. அவரது உடலை சுமந்து வந்த ஊர்தி கொட்டும் மழையில் மெதுவாக சென்றதை டீவீயில் பார்த்திருக்கலாம். பெசன்ட் நகர் மயான பூமிக்குள் உடலை எடுத்து சென்றவுடன் மழை நின்றுவிட்டது. நிச்சயம் இதற்கு காரணம் தன் மறைவுக்கு முன் அவர் எழுதிய அழகிய சிங்கர் எனும் நூல் ஜீயர் அவர்களின் ஆசியுடன் வெளியிடப்பட்டதுதான். இந்த பதிவின் தலைப்பை மீண்டும் படிக்கவும்.
நல்ல ஆத்மாக்களின் இறுதி ஊர்வலத்தின்போது இறைவன் மழை பொழிந்து அந்த உடலை புனிதபடுத்தி தன் அருளை மக்களுக்கு வெளிபடுத்துவான். இதை நான் பலசமயம் பார்த்து உணர்திருக்கிறேன்.
பெரியவர் வாலி அவர்கள் “அனைவரையும் வாழ்த்துவோம்” என்ற நல்ல பாடத்தை வாழ்ந்து காட்டி சென்றுள்ளர்கள் !
நாமும் கடை பிடிக்க உறுதி பேணுவோம்.
அன்புடன்
முத்து – திருவெறும்பூர்
கவிஞர் வாலி என்றென்றும் நம் உள்ளங்களில் இளமையோடு வாழ்ந்து கொண்டிருப்பார் !!!
அவர் தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது !!!
ஸ்ரீமத் அழகியசிங்கருடைய வாழ்க்கை வரலாற்றை கவிஞர் வாலி அவர்களின் தமிழில் படித்து இன்புறுவோம் !!!
மிகவும் நன்றி சுந்தர் சார்