Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்!!

தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்!!

print
சில நாட்களுக்கு முன்பு ‘அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை’ என்கிற தலைப்பில் சேவைக்காக தம்மை அர்பணித்துக் கொண்டு வாழும் திருவண்ணாமலையை சேர்ந்த மணிமாறன் என்கிற இளைஞரை பற்றி பதிவளித்தது நினைவிருக்கலாம்.

பதிவை அளிக்கும் சமயம் மணிமாறனுக்கு வாழ்த்து கூறுவதற்காக அவரிடம் பேசினோம். அப்போது சென்னை வரும்போது தகவல் தெரிவிக்கும்படியும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னோம். மணிமாறனுக்கும் நம்மை சந்திக்கும் ஆர்வம் இருந்தது. எனவே  அவரும் அதற்கு விருப்பம் தெரிவித்தார்.

ஜூன் 30 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் அதன் பொருட்டு ஒரு அரை நாள் பயணமாக சென்னை வருவதாக சொன்னார்.

“நிச்சயம் நான் அங்கு வந்து நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு உங்களை சந்திக்கிறேன்” என்றேன். தானும் அந்த தருணத்திற்காக காத்திருப்பதாக சொன்னார்.

நண்பர் ராஜாவிடம் மணிமாறன் சென்னை வரும் விபரத்தையும் அவரை சந்தித்து நாம் கௌரவிக்க இருப்பது பற்றியும் கூறி அவரையும் என்னுடன் இணைத்துக்கொண்டேன்.

நானும் ராஜாவும் ஞாயிறு காலை சரியாக 9.30 மணிக்கு வைஷ்ணவா கல்லூரி சென்றுவிட்டோம். கல்லூரி வளாகத்தில் உள்ள ADMINISTRATIVE BLOCK எதிர்புறம் உள்ள சிமென்ட் பெஞ்சில் நமக்காக காத்திருந்தார் மணிமாறன். (அவருக்கு முன்னால் நாம் வருவதாக ப்ளான். ஆனால் தாமதமாகிவிட்டது.) நம்மை பார்த்தவுடன் எழுந்து நின்று நம்மை வரவேற்றார். சற்று தாடி வைத்து வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்டார். கட்டியணைத்து பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொண்ட பின், நண்பர் ராஜாவை அறிமுகம் செய்தோம்.

தமது சேவையை பற்றிய பதிவை மிக அருமையாக எழுதியிருப்பதாக கூறி ‘நன்றி’ தெரிவித்தார்.

“உங்களைபோன்று நிச்சயம் எங்களால் சேவை செய்ய முடியாது. உங்கள் சேவையை பற்றி நான்கு பேரிடம் சொல்லி அட்லீஸ்ட் உங்களை உற்சாகப்படுத்தவாவது செய்யலாமே” என்று தான் அந்த பதிவை அளித்ததாக சொன்னோம்.

அப்படி ஒன்றும் தாம் பெரிய சேவை செய்யவில்லை என்று அடக்கத்தோடு மறுத்தார்.

பேச்சினூடே அங்கு என்ன நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட போது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அவரது சமூக பணிகளுக்கு வாழ்த்தும் நன்றியும் கூறி அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ய விரும்புவதாகவும் நம் கௌரவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறினோம்.

“அதெல்லாம் எதுக்கு அண்ணா? வேண்டாமே….” என்று சங்கோஜத்துடன் தயங்கினார். பொன்னாடையையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

“இது நாங்கள் அளிக்கும் கௌரவம் அல்ல. எங்கள் தள வாசகர்கள் உங்களுக்கு அளிக்கும் கௌரவம். தயவு செய்து ஏற்றுகொள்ளுங்கள்” என்றேன்.

அப்போதும் தயங்கினார்.

“இப்போதைக்கு இதை ஏற்றுக்கொள்ளுங்கள்… உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளியோர், சாலையில் வசிப்போர் எவருக்கேனும் இதை கொடுத்துவிடுங்கள்….” என்றேன்.

சரி அதற்காகவாவது பயன்படட்டுமே என்று கருதி அதன் பிறகு தான் பொன்னாடையை ஏற்றுகொண்டார்.

முழுமுதற்கடவுள் விநாயகப்பெருமானின் சன்னதிக்கு முன்பு அவருக்கு பொன்னாடையை அணிவித்து கௌரவம் செய்தோம்.

“பணமே பிரதானம் என்று இயங்கும் இந்த அவசர உலகில் உங்கள் சேவை மிகப் மிகப் பெரியது. உங்களை போன்றவர்கள் தான் இறைவனுக்கு வெகு அருகில் இருக்கிறீர்கள். உங்களை போன்றவர்களை கௌரவிப்பதையே உற்சாகப்படுத்துவதையே இறைவனும் விரும்புவான். எங்கள் வாசகர்கள் சார்பாக உங்கள் சேவை சிறக்க – மேன்மேலும் வளர – எங்கள் வாழ்த்துக்கள்.”

“விநாயகப் பெருமானின் ஆசி உங்களுக்கு இருக்கு போல… அதனால் தான் இந்த இடத்தில் அவருக்கு முன்பாக இது நடக்கிறது!!” என்றார் ராஜா.

“அவரோட ஆசி மட்டுமில்லே.. அவரோட ஆப்பாவின் ஆசியும் எனக்கு எப்போதும் உண்டு!” என்றார் மணிமாறன்.

அடுத்து பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ நூல் ஒன்றை பரிசளித்தோம். அப்போது தான் அவரது முகம் உண்மையில் பிரகாசமானது.

“இதைத் தான் சார் நான் எதிர்பார்க்கிறேன். இது போன்ற நல்ல நூல்களின் மீது எனக்கு எப்போதுமே அலாதி பிரியம் உண்டு…” என்றவர் மிக மிக மகிழ்ச்சியோடு அதை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவரது சேவை மற்றும் பணி தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம்.

சமீபத்தில் கூட உத்திரகாண்ட் சென்று மீட்பு பணிகளில் இராணுவத்தினருக்கு உதவிவிட்டு வருவதாக எங்களிடம் சர்வ சாதாரணமாக சொன்னபோது எங்களை நாங்கள் ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொண்டோம்.

‘உத்திரகாண்ட்’ மற்றும் ‘கேதார்நாத்’ அழிவு தொடர்பாக பேஸ்புக்கில் லைக்கும் ஷேரும் செய்வதே மிகப் பெரிய சேவையாக அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் சர்வ சாதாரணமாக உத்திரகாண்ட் சென்று மீட்பு பணிகளில் உதவிவிட்டு வருவதாக மணிமாறன் சொன்னபோது எங்களுக்கு மலைப்பாக இருந்தது.

திருப்பூர் சென்று மொத்தமாக துணிமணிகள் வாங்கி வந்து வார இறுதியில் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருவதாகவும் மற்ற நாட்களில் சமூக பணிக்கு என்று ஒதுக்கியிருப்பதாகவும் கூறினார்.

வாரம் முழுதும் தங்களுக்காக (ஸாரி எவருக்காகவோ) உழைத்துவிட்டு வார இறுதியில் கேளிக்கைகளில், கொண்டாட்டங்களில், ஓய்வில் (?!) தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் சரசாரி மனிதர்கள் மத்தியில் வார இறுதியில் தனது வேலையை வைத்துக்கொண்டு மற்ற நாட்களில் சமூகத்திற்கு என்று ஒதுக்கியுள்ள மணிமாறனை என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை.

பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அருணாச்சலேஸ்வரரின் மிகப் பெரிய பக்தர் அவர் என்பதை தெரிந்துகொண்டேன். ‘அட இவரு நம்ம ஆளுப்பா’ என்று எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மொழி தெரியாத அயல் தேசத்தில் தமிழ் பேசுபவரை கண்டால் சந்தோஷப்படுவோமே அதே போன்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவருக்கு அதை விட மகிழ்ச்சி. சமீபத்தில் சென்னை வந்து சென்ற இமயத்தில் ஏறி சாதனை படைத்த மாற்றுத் திறனாளி அருணிமா சின்ஹாவை பற்றி அவருக்கு எடுத்துக்கூறி அவரை நேரில் சந்தித்து நம் தளம் சார்பாக அருணாச்சலேஸ்வரர் படம் ஒன்றை பரிசளித்தது பற்றியும் கூறினேன். என் கைகளை பற்றி… “ரொம்ப நன்றி அண்ணா… ரொம்ப நன்றி….” என்றார் அதே அவருக்கே கொடுத்தது போல.

(Double click to enlarge and view the pic)

தொடர்ந்து அவரது பணிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். “எனக்கு எல்லாமே அருணாச்சலேஸ்வரர் தான் சார். அவர் என்றால் எனக்கு உயிர்” என்று அந்த அண்ணாமலையை நினைத்து நினைத்து உருகினார் அவர்.

அருணாச்சலேஸ்வரர் பிரசாதம்

“நீங்க திருவண்ணாமாலை வரும்போது சொல்லுங்கள்… நானும் உங்களுடன் கோவிலுக்கு வருகிறேன்.. உங்களுக்கு விரிவாக எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுகிறேன்” என்று ஒரு அற்புதமான ஆஃபரை நமக்கு தந்திருக்கிறார் மணிமாறன்.

“நீங்க எனக்கு பரிசு கொடுத்தீங்க…. நான் உங்களுக்கு தரவேண்டாமா?” என்றவர் தனது பையில் இருந்து எடுத்து “இதோ அடுத்து உங்களுக்கு என்னோட பரிசு!” என்று கூறி எனக்கும் நண்பர் ராஜாவுக்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் குங்குமம் மற்றும் விபூதி அடங்கிய பிரசாத பாக்கெட்டை தந்தார்.

ஒரு கணம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். ஏனெனில், விரைவில் திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசிக்கவேண்டும் என்று சமீபத்தில் தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

நினைத்தவுடனே ஆட்கொள்ளும் கருணாமூர்த்தியல்லவா ? அந்த அருணாச்சலேஸ்வரரின் கருணையை எண்ணி எண்ணி உருகினேன்.

அருணிமா, மணிமாறன் என அடுத்தடுத்து எங்களை அந்த அருணாச்சலேஸ்வரர் ஏதோ ஒரு வகையில் இணைப்பதை எண்ணி வியந்தேன்.

மணிமாறன் செய்யும் சேவைகளை பற்றி ஏற்கனவே நாம் நன்கு அறிந்திருந்தாலும் தான் கொண்டு புகைப்படங்கள், பேப்பர் கட்டிங்குகள் உள்ளிட்டவற்றை நமக்கு காட்டினார். கேட்பாரற்று சாலைகளில் படுத்துக்கிடக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட, தொழுநோயால் காயப்பட்ட முதியோர்களுக்கெல்லாம்  காயத்தை சுத்தம் செய்து மருந்து போட்டு அவர்களுக்கு தேவையான முதலுதவிகளை செய்து… அப்பப்பா… மணிமாறன் செய்யும் சேவைகள் இருக்கிறதே… வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.சம்பந்தப்பட்ட புகைப்படங்களை பார்த்தாலே உங்களுக்கு நான்கு நாட்கள் சாப்பாடு ஏறாது என்பது உறுதி. ஆனால் அப்படிப்பட்ட கோரமான புண்கள், காயங்கள், தொழுநோய் சிரங்குகள் உடைய அவர்களையெல்லாம் தொட்டு, தூக்கி, காயத்திற்கு மருந்திட்டு…. குளிப்பாட்டி மணிமாறனை என்னவென்று சொல்வது?

பல கோவில்களுக்கும் புண்ணிய ஷேத்ரங்களுக்கும் சென்று வந்தால் கூட ஒருவர் பெற முடியாத புண்ணியம், மணிமாறன் போன்ற தன்னலமற்ற நல்ல உள்ளங்களை கௌரவிப்பதிலும் உதவுவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் கிடைத்துவிடும்.

இவரை பார்க்க நேர்ந்ததே நான் செய்த பாக்கியம் தான்.

பல நற்செயல்கள் செய்தும் நான் பெறமுடியாத புண்ணியங்களை மணிமாறனை பார்த்தவுடனேயே நான் பெற்றுவிட்டேன் என்றால் மிகையாகாது. இல்லையெனில் அருணாச்சலேஸ்வரர் பிரசாதம் என்னை தேடி வந்திருக்குமா? யோசித்து பாருங்கள்!

இதில் மேலும் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், நண்பர் ராஜா ஒவ்வொரு பௌர்ணமியும் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்திய பௌர்ணமிக்கு கூட கிரிவலம் சென்றுவந்தார். அங்கு வந்து தன்னை தரிசிக்கும் தன் பக்தனை தேடி இங்கு மகா பிரசாதமாக வந்துவிட்டார் அருணாச்சலேஸ்வரர்.

=======================================

ல்லூரி அரங்கில் நடைபெறவுள்ள தாம் கலந்துகொள்ள வந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்ட மணிமாறன் எங்களையும் அதில் கலந்துகொள்ள அழைத்தார்.

“கரும்பு தின்ன கூலியா?” என்று ஆவலுடன் அவருடன் சென்றோம். நான் அன்று ஒரு special assignment பொருட்டு அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் மேற்கொண்டு அரை மணிநேரம் மட்டுமே அங்கு என்னால் இருக்க முடிந்தது. ஆனால் நண்பர் ராஜா தொடர்ந்து சில மணிநேரம் மணிமாறனுடன் இருந்தார்.

எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதுவரை நான் கலந்து கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு நிகழ்ச்சியில் இதுவரை கலந்துகொண்டதில்லை.

ஒரு நல்லவரை தேடி நான் சென்றதால அந்த அருணாச்சலேஸ்வரர் எனக்கு தந்த பரிசு இது. இப்படிப்பட்ட விஷயங்களுக்காகத் தானே இந்த தளம் காத்திருக்கிறது. நீங்களும் காத்திருக்கிறீர்கள்….!

சுருக்கமா சொல்லவேண்டும் என்றால் ஒரு நல்லவரை தேடிச் சென்றேன். அங்கு நூறு நல்லவர்களின் அறிமுகம் கிடைத்தது.

அப்படி என்ன நிகழ்ச்சி ? அங்கு மணிமாறனுக்கு என்ன பங்கு? ஏற்பாடு செய்தது யார்? அதில் கலந்துகொண்டது மூலம் நமக்கு கிடைத்தது என்ன?

விரிவான சிறப்பு பதிவு விரைவில்..!

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (குறள் 443)

பொருள் : சான்றோர்களை போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

=======================================

இதயத்தில் அன்னை !

அப்புறம் இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேனே… தாம் இருக்கும் (?) அரசியல் கட்சியின் கொடி, சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள் மற்றும் உருவங்களை பச்சை குத்திக்கொண்டிருக்கும் இளைன்ஞர்களுக்கு நடுவே மணிமாறன் யார் உருவத்தை பச்சை குத்திக்கொண்டிருக்கிறார் தெரியுமா?

அன்னை தெரசா!

அதுவும் எங்கு தெரியுமா? தனது மார்பில்!

அன்னை தெரசா மீது தாம் உயிரையே வைத்திருப்பதாக சொல்லும் மணிமாறன், அன்னையின் சேவை தமக்கு ஒரு உந்து சக்தி என்று குறிப்பிட்டார்.

இப்படியும் கூட நம் நாட்டில் இளைஞர்கள் இருப்பதை எண்ணி ஒரு கணம் பெருமிதம் கொண்டோம்!

=======================================

இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்

ஜூலை 4 – இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள். சுவாமிஜி மறைந்தாலும் அவர் லட்சோப லட்சம் இளைஞர்களுக்குள் ஏற்படுத்திய லட்சியத் தீ இன்னும் அணையவில்லை.

அருணிமா, மணிமாறன் போன்று எத்தனையோ இளைஞர்களை அவர் இன்றும் வழி நடத்தி வருகிறார் என்பதை அவர்களிடம் சற்று பேசினாலே நமக்கு புரியும். (மணிமாறன் தனது குருவாக கருதுவது விவேகாந்தரைத் தான் தெரியுமா?)

அது மட்டுமா நம்மை போன்று உறக்கத்திலிருந்த எத்தனையோ தட்டி எழுப்பி அவரவர் கடமைகளை நினைவூட்டி வருகிறார் சுவாமிஜி.

அந்த வீரத் துறவியை என்றும் நினைவோ கூர்வோம். அவர் காட்டிய வழியில் சென்று நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்.

ஜெய் ஹிந்த்!

=======================================

‘சுந்தரகாண்டம்

முதல் கட்டமாக ‘சுந்தரகாண்டம்’ நூல் கேட்டிருந்தவர்கள் அனைவருக்கும் நூல் அனுப்பியாகிவிட்டது. பலருக்கு கிடைத்தும் விட்டது. அனைவரும் நாளை முதல் பாராயணத்தை துவக்குவோம். முதலில் கம்பராமாயணத்தின் சுந்தரகாண்ட பதிப்பை துவக்குவோம். அது முடிந்த பின்னர் அடுத்த வால்மீகி ராமயானத்தின் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யப்படும்.

முன்னரே கூறியது போல, காலை சற்று சீக்கிரம் எழுந்து குளித்து விளக்கேற்றிவிட்டு, வேண்டுதலை சங்கல்பம் செய்த பிறகு சுத்தமான இடத்தில் அமர்ந்து சுந்தரகாண்டம் படிக்கவேண்டும்.

மேலும் நூல் கேட்டிருப்பவர்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்னும் சில நாட்களில் அனுப்பப்படும். அவர்கள் அடுத்த வெள்ளி முதல் நம்முடன் பாராயணத்தில் இணைந்துகொள்ளலாம்.

நூலுக்கான விலை + கூரியர் செலவை மணியார்டர் அனுப்பவேண்டிய விலாசம் / ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் செய்யவேண்டிய வங்கி கணக்கு விபரமும் தனித்தனியே மெயில் அனுப்பட்டுள்ளது.

பாராயணம் நடைபெறும்போதே இடையிலேயே ஒரு நாள் பசுக்களுக்கு உங்கள் அனைவரின் சார்பாக தீவனம் அளிக்கப்படும். எனவே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள அன்னதானம் பற்றி கவலை வேண்டாம். தனியாக உங்களால் எவருக்கேனும் அன்னதானம் செய்ய முடிந்தால் தாரளமாக செய்யலாம்.

மகத்தான் சேவைக்கு எம்மை ஆட்படுத்திய அனைவருக்கும் நன்றி!

19 thoughts on “தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்!!

  1. மனித உருவில் வாழும் தெய்வத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சுந்தர். இவர் போல சில நல்ல உள்ளங்கள் வாழ்வதால் தான் நமக்கு சிறிதேனும் மழை எட்டி பார்க்கிறது. நல்லவர்களை பார்க்க, அவர்களுடன் பழக பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. நாங்களும் அவருடன் பேச முடியுமா என எங்களை ஏங்க வைத்து விட்டீர்கள் . வாய்ப்பு கிடைக்குமா சுந்தர்? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மிகவும் கடமைப்பட்டவர்கள் ஆவோம். மிக்க நன்றி சுந்தர்.

  2. I can see VIVEKANANDAR is still living with these kind of people.
    I salute him.
    Sundar sir is the right person for finding these kind of people.
    Hearty wishes.

  3. கேட்பாரற்று சாலைகளில் படுத்துக்கிடக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட, தொழுநோயால் காயப்பட்ட முதியோர்களுக்கெல்லாம் காயத்தை சுத்தம் செய்து மருந்து போட்டு அவர்களுக்கு தேவையான முதலுதவிகளை செயவது என்பது,எல்லொரலும் முடியாது, அனைத்துயிகலும் சமம் எம நினைக்கும் ஒர் ஜீவனால்தான் இது முடியும்,அப்படி எல்ல உயில்கலும் சமம் என நினைப்பது இந்த உலகில் கடவுள் மட்டும் தான்,ஆனால் கடவுள் இந்த உலகத்தில் நேரடியாக வந்து உதவி செய்ய முடியாது ஆதலால்தான் இப்படிபட்ட மகா மனிதர்கல் பூமியிள் அனுப்பியுல்லான் போலும்..

    இப்படிபட்ட மகா மனிதர்கல் நம் தலத்திர்க்கு கிடைத்தது அலவில்லா மகிழ்ச்சிதான்…மனிதன் எதை நினைக்கின்ராணோ அவன் அதுவாகவே ஆகிரான் என விவேகானந்தர் சொல்லியுல்லார்..அன்னை தெரசாவை பற்றியெ நினைக்கும் நம்ம மணிமாறன் .அன்னை தெரசா வாகவே மரிவிட்டார் என்ரால் அது மிகையாகாது..
    நம் தலமும் நல்ல விசயங்கலையெ பதிவிடுவதால் பல நல்ல மனித்ர்கலை(இரக்கமுல்ல) உருவாக்கி வருகிரது என்பதில் சந்தேகமில்லை..
    ஓவ்வொரு இலைனனும் விவேகானந்தர் நினைவு நலாகிய இன்று
    அவரின் சக்தி மிகுந்த வார்த்தைகலை நினைவில் கொல்லவெண்டும் என்பது என் கருத்து..

  4. இந்த தள வாசகர்கள் அனைவரும் ஒரு விடுமுறை நாளில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரரை தரிசித்தால் என்ன? ப்ளீஸ்…..

    1. நிச்சயம். விரைவில் ஏற்பாடு செய்கிறேன். நன்றி.
      – சுந்தர்

        1. அது இந்த கிரிவல நாளாக கூட இருக்கலாமே ,இந்த தடவை ஞாயிறு(22.07.13) இரவு கிரிவலம்,காலையே சென்றால் தரிசனமும் செய்யலாம் ,அதன் பிறகு மாலை கிரிவலம் ஆரம்பித்தால் நாடு இரவில் முடித்து திங்கள் விடிய கால வந்து விடலாம் யோசியுங்கள்

  5. “”தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்””
    தலைப்பு மிகமிக பொருத்தம் .
    எம்மை ஆளும் அருணாச்சலேஸ்வரர் மணிமாறனையும் சுந்தர் ஜி அவர்களையும் தன்பால் அரவணைத்து வழி நடத்துகிறார் என்பது உண்மை .

    அருணாச்சலேஸ்வரர் நமது தளத்துடன் வாசம் செய்கிறார் என்பது திண்ணம் .
    – மனோகர்.

  6. சார்.

    மிகவும் பொருத்தமான தலைப்பில் ஒரு கட்டுரை.
    இந்த சின்ன வயதில் அவர் செய்யும் சேவையை அறிந்து அவருக்கு கோடி வணக்கம் செய்கிறேன்.
    இந்த சிவபெருமானின் ஆசி அவருக்கு எப்போதும் உண்டு.
    மற்றவர்கள் யோசிக்க முடியாத ஒரு தொண்டை செய்கிறார்.
    வீர துறவியை குருவாக கொண்டவர் வேறு எப்படி இருக்க முடியும்.
    இன்றைய இளைஞர் மத்தியில் இப்படி ஒருவர் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது.
    வாழ்ந்ததற்கு அர்த்தமும் வாழ்வதற்கு அடையாளமும் உள்ளவரிடம் பழக கொடுத்து வைத்துள்ளோம் உங்கள் மூலமாக

  7. வாழ்வதற்கு அர்த்தம் வாழ்ந்தற்கு அடையாளமாக மணிமாறனை போன்று முதலுதவி செய்வது யாராலும் முடியாது. அவர் கடவுளின் பரிசுதான். கடவுள் அவருக்கு மிகவும் சகிப்பு தன்மையை கொடுத்து உள்ளார்.அவர் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

    நன்றி.

  8. சுந்தர் சார்,
    நீங்கள் காட்டிய இந்த மணி மாறன்தான் உண்மையான ஆயிரத்தில் ஒருவன். இவரை பற்றி சொல்ல வார்த்தை இல்லை. . . !

    நன்றி.
    அருனோதயகுமார். எ

  9. அந்த நிகழ்ச்சி பத்தி சுந்தர் போடட்டும் அப்பொழுது நிறைய பேர் ஐயோ இப்படி ஒரு நிகழ்ச்சியை நாம் கலந்துஒல்லாமல் விட்டுவிட்டோமே என்று வருத்த பட போவது உண்மை அவ்வளவு அருமையான நிகழ்ச்சி அது

  10. நான் மணிமாறனுக்கு தலை வணங்குகிறேன்!!

  11. நானும் மணிமாறனுக்கு தலை வணங்குகிறேன்!!

  12. மணிமாரனைப்பற்றி நம் தளத்தின் மூலம் தெரிந்துகொண்டபிறகு, நான் இன்னும் என் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லை என்று நினைக்கத்தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த இளம் வயதில் இவர் செய்திருக்கும் சேவை மலைக்க வைக்கிறது. இவரை வாழ்த்த எனக்கு வயது இருந்தாலும் தகுதி இல்லாத காரணத்தால் மணிமாறன் அவர்களை அவரது தன்னலமில்லா நல்ல மனதை வணங்குகிறேன்.

  13. வணக்கம் சார்
    தங்கள் மூலம் அறிந்த நண்பர் மணிமாறன் செயல் கடலை விட, ஏன்இந்த அவனியை விட மிகப்பெரியது
    மணிமாறன் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் நேரில் காண ஆசைப்படுகிறேன்.
    ஆர்.பன்னீர் செல்வன் ,
    சந்தவாசல்
    திருவண்ணாமலை .மா

  14. அருமையான பதிவு !!!

    அன்பு பாசம் கருணை இவை இன்னும் இந்த பூமியில் ஆங்காங்கே இருந்துகொண்டேதான் இருக்கிறது என்பதற்கு நண்பர் மணிமாறன் ஒரு மிக சிறந்த உதாரணம் !!!

    அவரது சேவை மேலோட்டமாக பார்த்தால் துன்பப்படுபவர்களுக்கு உதவுவது போல தோன்றும் ஆனால் சற்றே ஆழ்ந்து சிந்திப்போமேயானால் அவரது தொண்டு அதில் அவர் அடையும் ஆனந்தம் மன திருப்தி இவற்ற்றை சொன்னால் புரியாது அதை அவரது நிலையில் இருந்து உணர்ந்தால் தான் புரியும் !!!

    இந்த கலியுகத்தில் தாய் தந்தையரின் ஆசியோடு மணிமாறன் போன்ற மனித நேயரின் நட்பும் கிடைக்க பெட்ரால் நாம் வாழும் வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் ஐய்யமில்லை!!!

    1. நேரம் எடுத்துக்கொண்டு பல பதிவுகளை படித்ததோடுமட்டுமல்லாமல் அவற்றுக்கும் பின்னூட்டமும் இட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி முருகன் அவர்களே.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *