http://rightmantra.com/?p=5384
முதல் பாகத்தின் தொடர்ச்சி….
நாம் : சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களுக்கும் அப்பாவுக்கும் உள்ள அந்த தொடர்பு நட்பு பற்றி ஏதாவது சொல்லுங்களேன்… ஏனெனில் கவிஞர் மீது மிகப் பெரும் மரியாதை வைத்திருப்பவர் ரஜினி.
திரு.காந்தி கண்ணதாசன் : ரஜினி என்கிற மாபெரும் மனிதனின் துவக்கம் மிக மிக எளிமையான ஒரு துவக்கம். இன்றைக்கு இவ்வளவு பணம், பெயர் புகழ் வந்த பிறகும் அவர் எளிமையாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது எளிமையான ஆரம்பகாலம் தான். ரொம்ப எளிமையான மனிதர். மிகவும் ஜாலியான மனிதரும் கூட. வஞ்சம் என்கிற வார்த்தையை அறியா வெள்ளை மனம் கொண்டவர்.
கே.பி. சாரின் படங்களில் ரஜினி அப்போது நடித்துக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ரஜினி நடிக்கும் படங்களில் குறிப்பாக கே.பி. அவரை இயக்கம் படங்களில் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கும் மானரிசம் தவறாமல் இடம்பெற்றுவிடும். இந்த சூழலில் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் திருமணம் பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. அதற்கு ரஜினி வந்திருந்தார். அப்போது நாங்கள் அனைவரும் அவரை மாடிப் படிகளுக்கு கீழே அழைத்து சென்று, சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பதை செய்து காட்டச் சொன்னோம். மறுப்பேதும் சொல்லாமல் எங்கள் மகிழ்ச்சிக்காக அப்படியே தூக்கி போட்டு பிடித்து காட்டினார். எங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். அப்பா மீது ரஜினிக்கு மிகப் பெரும் மரியாதை உண்டு.
நாம் : சென்ற ஆண்டு கூட, திரு.விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களுக்கு தமிழக முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, இறந்தும் கூட புகழோடு இருப்பவர்கள் பட்டியலில் கண்ணதாசன் அவர்களின் பெயரையும் ரஜினி அவர்கள் சொன்னார் சார்.
திரு.காந்தி கண்ணதாசன் : ஆமாம்….. நான் கூட அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.
திரு.காந்தி கண்ணதாசன் : கண்ணதாசன் அவர்கள் ரஜினியின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒரு படத்திற்கு அப்பா அப்படி பாடல் எழுதிய சமயம் நடந்தது இது. ரஜினிக்கு அப்போது நேரம் சரியில்லை. பாலாஜி அவரை வைத்து ‘பில்லா’ எடுத்துக்கொண்டிருந்தார். பாலாஜி அப்பாவிடம் பேசும்போது “ரஜினி கொஞ்சம் டிஸ்டர்ப்டாக இருக்கிறார். எப்படியாவது ஜெயிக்கணும் என்கிற தவிப்பு அவர்கிட்டே இருக்கு!” என்று ஒரு தகவலை சொன்னார்.
அதை உள்வாங்கிக்கொண்ட அப்பா பாடல் எழுதும்போது,
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
நாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க
பாடு பட்டு பேர் சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க
யாரு சொல்லி என்ன பண்ணா
நானும் இப்போ நல்லா இருக்கேன்
உங்களுக்கும் இப்போ சொன்னேன்
பின்னாலே பார்க்காத முன்னேரு முன்னேரு
ஆளுக்கொரு நேரம் உண்டு அவுங்கவுங்க காலம் உண்டு
ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா மூவுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசிலே வைச்சு பின்னாலே பார்காம முன்னேரு முன்னேரு
– இப்படி எழுதினார்.
ரஜினி தன்னை பற்றிய எகத்தாளமான கருத்தை கொண்டிருந்த அனைவருக்கும் பதில் சொல்வது போல அந்த பாடல் அமைந்தது. கவிஞன் வாக்கும் பலித்தது. அந்த பாடலில் உள்ளபடியே ரஜினி தன்னை நிரூபித்தார்.
(மேலும் தொடர்கிறார்)
ஒரு நாள் திடீரென எங்கள் வீட்டு வாசலில் ஃபியட் கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து ரஜினி இறங்குகிறார். நான் வாசலில் நின்றுகொண்டிருந்தேன்.
“ஐயா இருக்காங்களா?”
“இல்லே.. வெளியே போயிருக்காங்க..”
“அம்மா இருக்காங்களா?? ”
“இருக்காங்க…”
“ஒன்னும் இல்லே… என்னோட கல்யாண பத்திரிகை கொடுக்கலாம்னு வந்திருக்கேன். அம்மாவை கூப்பிடுங்களேன்”
ரஜினி அப்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உயர்ந்திருந்தார். இருப்பினும் அப்பா மீது அவர் வைத்திருந்த மதிப்பின் காரணமாக அவருடைய கல்யாண பத்திரிக்கையை கொடுக்க அவரே நேரில் வந்திருந்தார்.
ரஜினியை பார்த்ததும் அம்மா, “வாப்பா….வாப்பா.. என்ன நீயே வந்திருக்கே?” என்று வரவேற்க…. “ஒண்ணுமில்லைம்மா… என்னோட கல்யாணப் பத்திரிக்கையை ஐயா கிட்டே நேரில் கொடுத்து ஆசி வாங்கலாம் என்று வந்தேன். அதனால என்ன அதான் நீங்க இருக்கீங்களே…. அவசியம் கல்யாணத்துக்கு வந்துடுங்க. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க”ன்னு சொல்லி அம்மா காலில் விழுந்து ஆசி பெற்று சென்றார் ரஜினி.
எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் எப்படி நன்றாக அமைந்ததோ அதே போன்று ரஜினிக்கும் அமைந்தது. அப்பா அவர்கள் மறைந்த பிறகு கூட ரஜினி நடித்த பல படங்களில் “பாடல்கள் : கண்ணதாசன்” என்று வருவதை பார்க்கலாம்.
அவ்ளோ ஏன்.. மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும் கூடு கண்ணதாசன் சொன்னதுங்க அப்படின்னு அப்பா மறைந்து பல ஆண்டுகள் கழித்து வெளியான அண்ணாமலையில் கூட அப்பாவின் பெயர் பாடலில் வரும். அதே போல் சந்திரமுகியில் கொஞ்ச கொஞ்ச நேரம் பாடலிலும் கண்ணதாசன் பெயர் வரும்.
ரஜினியின் படங்களில் கண்ணதாசன் என்ற பெயர் இடம்பெற்றால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கும். நன்றாக நீங்கள் கவனித்து பாருங்கள்.
திரு.காந்தி கண்ணதாசன் : ஒரு நாள் நான் ரஜினி அவர்களை ஷூட்டிங்கில் சந்திக்க சென்றேன். ‘ரஜினிசார் எங்கே? ரஜினி சார் எங்கே?’ என்று நான் தேட… “என்ன தம்பி நீங்க… வர்ற வழியில அவரை பார்க்கலியா?” என்று யூனிட்டார் கேட்க… நான் விழிக்க… “அதோ அந்த பெஞ்ச் மேலே முகத்துல துண்டை மூடிகிட்டு தூங்குறார் பாருங்க… அவர் தான் ரஜினி” என்று ஸ்பாட்டில் உள்ளவர்கள் சொல்ல அங்கே ரஜினி அவர்களை ஒரு சாதாரண பெஞ்சில் ஓய்வெடுப்பதை பார்த்தவுடன் எனக்கு அவரது எளிமை குறித்து பிரமிப்பே ஏற்பட்டது.
நாம் : வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து வந்ததால் அவரது எளிமை இயல்பான ஒன்றாக அமைந்துவிட்டது சார்…
நாம் : கவிஞரின் காலில் ரஜினி அவர்கள் விழுவது போல ஒரு ஸ்டில்லை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பேட்டிக்காக பஞ்சு அருணாசலம் அவர்களை சந்தித்தபோது ‘ஆறிலிருந்து அறுபது வரை’ வெற்றிவிழாவில் எடுக்கப்பட்டது என்று என்னிடம் கூறினார். அந்த நிகழ்வு பற்றி ஏதாவது தகவல் உண்டா?
திரு.காந்தி கண்ணதாசன் : ஆமாம்… அது ‘ஆறிலிருந்து அறுபது வரை’ பட வெற்றிவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான். ரஜினி பொதுவாக யார் கால்களிலும் அத்தனை லேசில் விழமாட்டார். அப்படி அவரை காணக்கூடிய புகைப்படங்கள் மிக மிக அரிது. ஏனெனில் சுயமரியாதை மிக்கவர் ரஜினி. இரண்டாவது காலில் விழும் நபரின் தகுதியை பற்றி அதிகம் யோசிப்பார். அப்படிப்பட்டவர் கண்ணதாசனின் கால்களில் விழுகிறார் என்றால்… இதற்கு பின்னணியில் உள்ள விஷயத்தை ஆராயவேண்டும். ரஜினி யோசித்தெல்லாம் அப்பா காலில் விழுந்திருக்கமாட்டார். அது இதயப்பூர்வமானது. உள்ளத்தின் உள்ளே உள்ள அன்பின்.வெளிப்பாடு. ரஜினியோ எளிமையின் சிகரம். பணிவின் பெருமை. பணிவு தான் இன்னொரு பணிவை போற்றும்.
என்றும் பணியுமாம் பெருமை
அப்பாவின் பணிவு பற்றி ஒரு சம்பவம் உண்டு.
தமிழறிஞர் திரு.கி.வ.ஜகன்னாதன் என்கிற கி.வ.ஜ. அவர்களும் அப்பாவும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்காக தமிழ் இலக்கியம் பற்றி கலந்துரையாடுவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
ஓப்பனிங் காட்சி எப்படி என்றால் கி.வ.ஜ. அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பார். அப்பா போய் கி.வ.ஜ.வுக்கு வணக்கம் கூறிவிட்டு அவர் இருக்கையில் அமரவேண்டும். இது தான் முடிவு செய்யப்பட்ட காட்சி. ஆனால் அப்பா செய்தது என்ன தெரியுமா?
கேமரா ரோல் ஆக ஆரம்பித்தவுடன், நேராக கி.வ.ஜ. அவர்களை நோக்கி செல்லும் அப்பா அவரை கைகூப்பி வணங்குவதற்கு பதில் அவரின் கால்களை தொட்டு வணங்கிவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்கிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த ஒட்டுமொத்த அரங்கமும் ஒரு கணம் மெய்சிலிர்த்துவிட்டது.
பார்வையாளர்களை பொருத்தவரை கி.வ.ஜ. என்பவர் தமிழின் உச்சம். கண்ணதாசன் என்பவர் இன்னொரு உச்சம். ஒரு உச்சம் இன்னொரு உச்சத்தின் கால்களை தொட்டு வணங்குகிறது என்றால் அப்போது யார் அதிக உச்சம்? சந்தேகமேயின்றி கி.வ.ஜ. அவர்கள் தான். அதை கண்ணதாசனே ஒப்புக்கொள்கிறார். குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் என்றுமே மரியாதைக்குரியவர்கள்.
ரஜினியும் அப்படித் தான் கண்ணாதாசன் அவர்களை பார்த்தார்.
நாம் : ரஜினிக்கு தான் எழுதும் பாடல்களை பற்றி அவரிடம் அப்பா பேசுவதுண்டா?
திரு.காந்தி கண்ணதாசன் : அப்பா தன் படத்திற்கு எழுதுகிறார் என்று தெரிந்தால் அந்த படப் பாடல் கம்போஸிங்கிற்கு ரஜினி தவறாமல் வந்துவிடுவார். அப்பா பாடல் எழுதுவதை அமர்ந்து ரசிப்பார்.
நாம் : கவிஞரின் ஸ்தானத்தில் இருந்து எங்கள் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
திரு.காந்தி கண்ணதாசன் :அப்பா அம்மாவை போற்றி வணங்கி வாருங்கள். தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை மறக்காது செய்யுங்கள். நம்மை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு அவர்கள் எத்தனையோ இன்னல்களை அனுபவித்திருப்பார்கள். நம்மை ஆரோக்கியமாக பெறுவதற்கு நாம் கருவில் இருக்கும்போது நம் தாய் எத்தனையோ தியாகங்களை செய்திருப்பாள். நாவை கட்டுப்படுத்திக்கொண்டிருந்திருப்பாள்.
இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் மறுபடியும் மறுபடியும் இது தான். தாய் தந்தையர் இருக்கும்போதும் சரி அவர்கள் நம்மை விட்டு போனபிறகும் சரி… அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த கிரஹத்தில் நிம்மதி இருக்காது.
இன்னொன்று… தாயை தெய்வமாக போற்றியவர்கள் அனைவரும் மிகப் பெரிய வெற்றியாளர்களாக சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறார்கள்.. எம்.ஜி.ஆர், கலைஞர், கண்ணதாசன், இளையராஜா, சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன்.
எம்.எஸ்.வி. அவர்கள் தன் அம்மாவின் இறுதிக் காலம் வரை தினமும் காலை அம்மே என்று தன் அம்மாவை அழைத்து பூஜையறைக்கு முன்பாக நிறுத்தி சுவாமியின் காலில் விழுகிறாரோ இல்லையோ அம்மாவின் காலில் விழுந்து வணங்குவார்.
நாம் : ஐயா.. ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நான் அலுவலகம் கிளம்பும்போதும் சரி…. வெளியே கிளம்பும்போதும் சரி…. என் பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்காது நான் வெளியே கிளம்புவதில்லை. இதை நீண்ட காலமாக பின்பற்றி வருகிறேன். இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் வேறு எதிலும் கிடைப்பதில்லை.
திரு.காந்தி கண்ணதாசன் : நீங்க எதுக்கு தனியா கோவிலுக்கெல்லாம் போய்கிட்டுருக்கீங்க சுந்தர்? இதுவே போதுமே….
நாம் : எத்தனையோ கஷ்டங்கள்… போராட்டங்கள்… புயல்…. மழை …. இதன் நடுவே தான் நான் என் கட்டுமரத்தை செலுத்திக்கொண்டிருக்கிறேன். என் கண்ணிற்கு கலங்கரை விளக்கமாக தெரிவது ஆண்டவன் ஒருவன் தான். அவன் காட்டும் வெளிச்சம் தான். உங்களை சந்திக்க வந்ததற்கு காரணம் கூட கொஞ்சம் பாசிட்டிவ் எனர்ஜியை எனக்கு சற்று ஏற்றிக்கொள்ளவேண்டும் என்று தான்.
(அந்த இடத்தில் அப்படி ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன். அப்பப்பா.. “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்று கவிஞர் சொன்னதன் அர்த்தம் அப்போது தான் புரிந்தது. கண்ணதாசனின் ஆன்மாவின் ஆகர்ஷன சக்தி அது!)
திரு.காந்தி கண்ணதாசன் : “சுந்தர்… வாழ்க்கையில் ஜெயிக்க நினைப்பவர்களுக்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிக மிக அவசியம். அப்பா அம்மா உங்களுடன் வசிப்பதாக சொல்கிறீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது? அவர்கள் உங்களுடன் இருப்பதால் தான் எத்தனையோ துன்பங்கள் வந்த வழியே திரும்ப ஓடியிருக்கின்றன. மீறி வரும் பிரச்சனைகளை பற்றி கவலைப் படாதீர்கள். வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போகும். அது தரும் பாடங்கள் மிக மிக முக்கியம்.
இன்னொரு விஷயம்…. அவரவர்க்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை அனைவரும் தவறாது செய்து வந்தாலே பல பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும். பலர் தங்கள் கடமைகளை குல வழக்கங்களை மறந்துவிட்டார்கள். ஆகையால் தான் இவ்வளவு கஷ்டங்கள்.
நம் குலம் சார்ந்த பழக்கவழக்கங்கள் பரம்பரை பரம்பரையாக வருவது. எனவே நமது பரம்பரையினர் செய்த நல்ல விஷயங்களை நாம் மறக்காது பின்பற்றவேண்டும்.
இவர் இன்ன குலத்தில் பிறக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. நாம் என்ன இந்த இனத்தில், இன்ன ஜாதியில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டா வந்தோம்? அல்லது அது நமது விருப்பமாக இருந்ததா? இல்லையே….
இதையும் கண்ணதாசன் அழகாக சொல்லியிருப்பார்….
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா..
இறந்த பின்பு வரும் அமைதி வந்துவிட்டதடா….
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா.. அதாவது எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம். இறைவன் சொல்கிறான்.. அங்கு போய் நீ பிறக்கவேண்டும் என்று. உடனே நாம் இன்னார் குடும்பத்தில் பிறக்கிறோம்.
இறந்த பின்பு வரும் அமைதி வந்துவிட்டதடா…. இறந்த பிறகு என்னவென்று யாருக்கும் தெரியாது. அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவமும் வந்துவிட்டது.
நான் அடிக்கடி பிசினஸ் விஷயமாகவோ பர்சனலாகவோ மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா என்று அயல்நாடுகளுக்கு பறந்துகொண்டிருப்பேன். நண்பர் ஒருவர் கேட்டார்.. “என்ன சார்… அடிக்கடி நீங்க இப்படி பறந்துகிட்டே இருக்கீங்க?” என்று.
நான் சொன்னேன்…. “வெளிநாடு செல்வது…. வெளிநாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்வது என்பது என்னுடைய ஜீன்களில் எழுதிவைக்கப்பட்டிருக்கும்போல” என்று. காரணம்… எங்கள் குல வழக்கப்படி (செட்டியார்) கடல் கடந்து வாணிபம் செய்வார்கள். கடல் கடந்து வாணிபம் செய்த முதல் இந்தியர்களும் நாங்கள் தான். பூம்புகார் தான் எங்கள் சொந்த ஊர். ஆகையால் கடல் கடந்து வியாபாரம் என்னுடைய ஜீன்களில் இருப்பதால் தான் எனக்கு வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்லவேண்டும் என்று தோன்றுகிறதோ என்னவோ…”
அதே போல ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு என்று உள்ள கடமைகள் உண்டு. பிராமணர்கள் என்றால் சந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் முதலியவற்றை செய்வது… இப்படி ஒருவர் செய்ய வேண்டிய வைதீக மற்றும் தார்மீக கடமைகள் அவர்களுடைய ஜீன்களிலேயே எழுதப்பட்டிருக்கும்.
அதே போல கோவில் குளம், நீர்நிலைகள் முதலியவற்றை தூர் வாருவது, கும்பாபிஷேகங்களில் கோவில் திருப்பணிகளில் உதவுவது, அன்னதானம் செய்வது, பசுவை தானமாக தருவது, திருவிழாக்கள் நடத்துவது, ஏழைகள் திருமணத்திற்கு உதவுவது, இப்படி அந்தந்த சமூகத்திற்கு என்று அவர்கள் தொன்று தொட்டு செய்து வரும் கடமைகள் உள்ளன. அவை எதுவென்று கண்டறிந்து அந்த கடமைகளை விடாமல் நாம் செய்யவேண்டும். இவை தவிர சமயம் சார்ந்த சடங்கு சம்பிரதாயங்கள் பல உள்ளன. அவற்றையும் செய்யவேண்டும்.
“அது சரி… நீங்கள் செய்ய வேண்டிய உங்கள் தார்மீக / வைதீக கடமைகளை தவறாது வருகிறீர்களா?” நம் பக்கம் கேள்வி திரும்பியது.
(சரியான இடத்தில் எனக்கு செக் வைக்க… நான் சற்று நெளிந்தேன்.)
நாம் : (சிறிது தயக்கத்துடன்) இல்லை சார்… தொடர்ந்து ரெகுலராக செய்ய முடிவதில்லை. இனி நிச்சயம் செய்வேன். (உறுதியாக கூறினேன்)
திரு.காந்தி கண்ணதாசன் : குட்… அதெல்லாம் சரியா செஞ்சிகிட்டு வாங்க.. அப்புறம் பாருங்கள்… உங்கள் வாழ்க்கை எப்படி மேலே போகுது என்று…
நாம் : நிச்சயம் சார்…ரொம்ப நன்றி…. ரொம்ப நன்றி… இவ்வளவு பொறுமையா சிறப்பா எங்ககிட்டே பேசியமைக்கும் பேட்டிக்கும். எங்கள் வாசகர்கள் நன்றி.
திரு.காந்தி கண்ணதாசன் : வாழ்த்துக்கள் சுந்தர். உங்கள் லட்சியம் கனவு இவை யாவும் ஆண்டவனின் அருளால் நிறைவேற என் வாழ்த்துக்கள். என் தந்தையின் நல்லாசிகள் என்றும் உங்களுக்கு உண்டு.
நமக்கு கிடைத்த பரிசு….!
விடைபெறும் நேரம் வந்ததையொட்டி கண்ணதாசன் அவர்கள் இயற்றிய ‘பொன்மழை’ பாடலின் சி.டி.யை நமக்கு பரிசாக கொடுத்தார்கள். (ஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் பதிப்பு இது. கவிஞர் இயற்றிய அருமையான காவியம்). வெள்ளி தோறும் கேட்டு வருகிறேன்.
திரு.கண்ணதாசன் அவர்கள் இயற்றிய நூலோ மேற்படி சி.டி.யோ வேண்டுகிறவர்கள் கீழே உள்ள கண்ணதாசன் பதிப்பகத்தின் இணைய முகவரிக்கு சென்று ஆர்டர் செய்துகொள்ளலாம்.
http://kannadasanpathippagam.com/
அதே போல நமக்கும் நண்பர் பிரேம் கண்ணனுக்கும் அவ்வையாரின் ‘ஆத்திசூடி’ மூலமும் உரையும் நூலை பரிசாக தந்தார்கள்.
அது வேறு ஒரு பதிப்பகத்தின் சார்பாக வெளியான நூல். தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கு பரிசளிப்பதர்க்கென்றே அவற்றை நிறைய வாங்கி வைத்திருப்பதாக சொன்னார்.
அவரே ஒரு பதிப்பகம் சொந்தமாக நடத்தும் நிலையில், வேறொரு பதிப்பகத்தின் தரமான ஒரு நூலை வாங்கி மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும்? சற்று யோசித்து பாருங்கள்….
ஆனால் அதில் வியப்பில்லை… ஏனெனில் அந்த பெருந்தன்மை அந்த குணம் அவரது ஜீன்களில் உள்ளது.
(சந்திப்பு நிறைவடைந்தது)
சுந்தர் சார்,
“most valueble information ” .
மிக்க நன்றி.
அருண்
///அவரவர்க்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை அனைவரும் தவறாது செய்து வந்தாலே பல பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும். பலர் தங்கள் கடமைகளை குல வழக்கங்களை மறந்துவிட்டார்கள். ஆகையால் தான் இவ்வளவு கஷ்டங்கள்///
////அப்பா அம்மாவை போற்றி வணங்கி வாருங்கள். தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை மறக்காது செய்யுங்கள். நம்மை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு அவர்கள் எத்தனையோ இன்னல்களை அனுபவித்திருப்பார்கள்.////
திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் மிக அருமையாக சொல்லியுள்ளார்..
நல்ல தகவல்களுக்கு நன்றி .
வாழ்க்கையில் ஜெயிக்க நினைப்பவர்களுக்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிக மிக அவசியம். தாய் தந்தையர் இருக்கும்போதும் சரி அவர்கள் நம்மை விட்டு போனபிறகும் சரி… அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த கிரஹத்தில் நிம்மதி இருக்காது. — சத்தியமான வார்த்தை சுந்தர். தாய் தந்தையர் இருக்கும்போது அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. அருமையான சந்திப்பு தங்களுக்கு கிடைத்துள்ளது. நல்ல தகவல்களுக்கு நன்றி சுந்தர்.
சார்
காலையில் மனது சரி யில்லாமல் இருந்தது. ஆபீஸ் வந்தவுடன் ரைட் மந்த்ரா பார்த்தேன் படித்தவுடன் ஒரு தெம்பு வந்தது மனதும் சரி ஆகி விட்டது .
அம்மா அப்பா பற்றி சொனது மிகையும் உண்மை.
selvi
கண்ணதாசன் என்கிற கவியரசை பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், கண்ணதாசன் என்கிற மாமனிதரைப்பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்துகொண்டேன். குறிப்பாக கவியரசின் பணிவு பற்றி எனக்கு தெரியாது. ஏனென்றால் பொதுவாக மேதைகளிடத்தில் கர்வம் இருக்கும். கவியரசு போன்ற மாமேதை இவ்வளவு பணிவுடன் நடந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல பாடம்.
நம் தள வாசகர்களுக்கு திரு காந்தி கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. அதிலும் குறிப்பாக பெற்றோர்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் / மரியாதை மற்றும் நம் குலக்கடமைகள் – மிக மிக முக்கியமானது.
அருணாசலம் படப்பாடலில் வரும் வரிகள் – தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு, நீ தனிதனியா கோயில் குளம் அலைவதுவும் எதுக்கு. மன்னன் படப்பாடலில் வரும் வரிகள் – நேரில் நின்று பேசும் தெய்வம் நீ, பெற்ற தாயன்றி வேறொன்று ஏது. இந்த இரண்டு பாடல்களிலும் தாயை தெய்வத்திற்கு சமமாக போற்றியிருக்கிறார்கள்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – இந்த வரிகள் தெய்வப்பாடகர் TMS குரலில் மீண்டும் மீண்டும் என் காதில் ஒலிக்கிறது. பதிவிற்கு நன்றி சுந்தர்.
சுந்தர் சார்
அருமையான பதிவு சார்
நல்ல தகவல்களுக்கு நன்றி சார் –
சுந்தர்ஜி,
அருமையான பதிவு. தாய் தந்தையரை வணங்கி
போற்றுபவர் எவரும் வீண் போவதில்லை.அதே போல் அவரவர் சம்பிரதாய படி செய்யும் விதி முறைகளை தவறாமல் தெரியாவிட்டாலும் பெரியவர்களை கேட்டு அதன் வழிகளை பின்பற்ற வேண்டும். தெஇயதவர்கலுக்கு தெரிவித்தமைக்கு நன்றி.
நல்ல தகவல்களுக்கு நன்றி சார்
சிலிர்ப்பூட்டும் சந்திப்பு !!!
சூப்பர் ஸ்டார் அவர்களைப்பற்றி நாம் எவ்வளவோ விஷயங்களை அறிந்திருந்தாலும் அதில் முன்னணியில் நிற்பதும் நம்மை யோசிக்க வைப்பதும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துவதும் அவரது எளிமை மற்றும் பணிவு !!!
தாமரை இலையின் நீர்போல் நீ ஒட்டி ஒட்டாமல் இரு – இது சூப்பர் ஸ்டார் விஷயத்தில் முற்றிலும் உண்மை !!!
கவிஞரின் பாடல்கள் அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு என்றால் அது இன்னும் சிறப்பு தான் !!!
கவிஞர் தமது தமிழால் என்றென்றும் நம்மோடு வாழ்ந்து நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் !!!
வாழ்க கவியரசரின் புகழ் !!!
வாழ்க வளமுடன் !!!
அ௫மையான பதிவுக்கு நன்றிகள் பல.