Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 28, 2024
Please specify the group
Home > Featured > மழை வெள்ளம் & கடும் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா – நாட்டிற்காக நீங்கள் சில நிமிடங்கள் ஒதுக்கத் தயாரா?

மழை வெள்ளம் & கடும் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா – நாட்டிற்காக நீங்கள் சில நிமிடங்கள் ஒதுக்கத் தயாரா?

print
லகில் எத்தனையோ நாடுகள் இருந்தாலும் நம் பாரதத்துக்கு உள்ள சிறப்பு வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது. ஏனெனில் இது ஒரு புண்ணிய பூமி. உலகின் பழைமையான இதிகாசங்களும், புராணங்களும், உபநிஷத்துகளும், இவற்றையெல்லாம் விட முக்கியமாக நான்கு வேதங்களும் சாஸ்திரங்களும் இந்தியாவில்தான் தோன்றின. இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவை நிகழ்ந்த நாடு நம் நாடு.  இது ஒரு கர்ம பூமி என்பது அறிஞர்கள் கூற்று.

மகாவிஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களும், ஈசனின் திருவிளையாடல்கள் அறுபத்தி நான்கும் இங்குதான் நடைபெற்றன. ததீசி மகரிஷி, லோமசர் உள்ளிட்ட தன்னலம் கருதா மகரிஷிகள் பலர் தோன்றிய நாடு நம் நாடு. திருவள்ளுவர், கம்பர், ஒவ்வை, நக்கீரர் போன்ற தெய்வீகப் புலவர்களும் ஞான சம்பந்தரும், நாவுக்கரசரும், சுந்தரரும், மாணிக்க வாசகரும், இராமனுஜரும், ஸ்ரீ ராகவேந்திரர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், ஷீரடி சாய், மகா பெரியவா  போன்ற ஒப்பற்ற மகான்களும் அவதரித்த பூமி நம் நாடு.

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு

பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே    

இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்

கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே

என்று பாடினான் பாரதி.

இத்தனை சிறப்புக்கள் பெற்ற நம் நாடு இன்று எப்படி இருக்கிறது தெரியுமா?

சத்தியம் பொய்யாகும்
தர்மம் தலைசாயும்
அறநெறிகள் அலைமோதும்
அதர்மம் அரசாளும்

பருவ நிலைமாறும்
பசுமைக்கு பஞ்சம் வரும்
வறுமை சதிராடும்
மண்ணுலகே நரகாகும்

இதுமட்டுமா????

பூலோகத்தின் நிலை குறித்து எடுத்து கூறி, நிவாரணம் பெறுவதற்கு வைகுண்டம் செல்லும் நாரதர் அங்கு ஆதிசேஷன் மீது சயணித்துக்கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம்,

“தருமத்தின் வடிவே, பூலோகத்தில் தருமம் தலைகீழாக போய் கொண்டிருக்கிறது.

நேர்மையும் நீதியும் நிற்க இடமின்றி நிலைதடுமாறிக்கொண்டிருக்கின்றன.

அன்பு என்ற பதம் வெறும் அலங்காரச் சொல்லாகிவிட்டது.

கவர்ச்சிக்கு அளிக்கப்படும் மரியாதை திறமைக்கு அளிக்கப்படுவதில்லை.

பொய்யான விளம்பரத்துக்கு கிடைக்கும் புகழும் போற்றுதலும் மெய்யான உழைப்புக்கு இல்லை.

வெறும் பேச்சுக்கு அளிக்கப்படும் பட்டமும் பதவியும் உண்மையான தொண்டுக்கும் சேவைக்கும் இல்லை.”

அதற்கு பதிலளிக்கும் மகாவிஷ்ணு, “கவலைவேண்டாம் நாரதா.. தன்னலமற்றவர்களும் தியாகிகளும் மகாத்மாக்களும் அவ்வப்போது பூலோகத்தில் தோன்றுவார்கள். அவர்கள் பார்வையாலும் சேவையாலும் அனைத்தும் சீர்பட்டுவிடும்” என்கிறார்.
“ஆனால் தற்போது காணப்படும் நிலையில் நீங்களே நேரடியாக வந்து உங்கள் பார்வை பூமியில் பட்டால் தான் அனைத்தும் சரியாகும் பிரபோ” என்கிறார் நாரதர்.

அதற்கு பகவான் சொன்னது :

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

பொருள்: நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும் தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் உதிக்கிறேன்.

(திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தசாவதாரம்’ படத்தில் கலியுகம் குறித்தும்  பூலோகத்தின் நிலைமை குறித்தும் இடம் பெற்ற பாடலும் வசனமும் தான் நீங்கள் மேலே படித்தது.)

சரி… இந்த அலங்கோலங்களுக்கெல்லாம் யார் காரணம்???

கடமையை மறந்த ஆட்சியாளர்களும், வணங்க வேண்டியவர்களை வணங்காது, போற்ற வேண்டியவர்களை போற்றாது, அறநெறி தவறி வாழும் மக்களுமே காரணம் என்றால் மிகையாகாது.

ஆனால் நமெக்கென்ன என்று இப்படியே விட்டுவிடமுடியுமா…

பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

என்றல்லவா கெஞ்சுகிறான் பாரதி…!

பெருமழை வெள்ளம் Vs மாபெரும் பொருளாதார வீழ்ச்சி

மேற்கூறிய அலங்கோலங்கள் ஒரு பக்கமிருக்க, மறுபக்கம் வரலாறு காணாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. பட்ட காலிலே படும் என்ற கூற்றிற்கு இணங்க ஏற்கனவே பொருளாதார சீர்குலைவால் தடுமாறிக்கொண்டிருக்கும் பாரத மாதா இயற்கையின் சீற்றத்திற்கும் ஆளாகி நிற்கிறாள். பெருமழை மற்றும் வெள்ளம் வடஇந்தியாவை புரட்டிப்போட்டுள்ளது.

பல மாநிலங்கள் இந்த பேய் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும் உத்தரகாண்ட் மாநிலம் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த பெருமழை சர்வநாசத்தை தோற்றுவித்துள்ளது.

பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடுகிறது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து உடமைகள் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கேதார்நாத் போன்ற புண்ணிய தலங்களுக்கு யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் இந்த பெருமழையால் மலைப் பாதையில் நிலச் சரிவு ஏற்பட்டு வழியிலே சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு உண்ண உணவு இல்லை.

உத்தரகாண்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 150 என, உடல்கள் மீட்கப்பட்டதின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகின. ஆனால் மழை பாதிக்கப்பட்டுள்ள புண்ணிய தலங்களில் அமைக்கப்பட்டிருந்த 90 தர்ம சாலைகள் (தங்கும் விடுதிகள்) வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. அவற்றில் தங்கி இருந்தவர்கள் அத்தனை பேரும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, “மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஏராளமான கிராமங்கள் மூழ்கி விட்டன. அவற்றை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக உயிர்ப்பலி எண்ணிக்கையை உறுதிபட கூற இயலாது. இயற்கையின் கோரத்தாண்டவம் மிகக்கடுமையாக அமைந்து விட்டது” என உத்தரகாண்ட் மாநில காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முற்றிலுமாக சிதைந்து போன ருத்ரபிரயாக், சமோலி மாவட்டங்களில் 8 கிராமங்களை அதிகாரிகள் சென்றடைய முடியவில்லை. இந்த கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதாக அஞ்சுவதாக மாநில அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை பல்லாயிரங்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரகாண்ட் மாநில பேரிடர் தணிப்பு மற்றும் நிர்வாக மையம் அறிக்கையாக அளித்துள்ளது.

எத்தனையோ நாசங்களை இயற்கை அன்னை தன் சீற்றம் மூலம் செய்திருந்தாலும் சிவபெருமான் கோவில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலை மட்டும் அசைத்துப் பார்க்க அவளுக்கு துணிவிருக்கவில்லை. அதே போல ருத்ரப்ரயாகில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவபெருமான் சிலையும் தப்பிவிட்டது.

பொருளாதாரா வீழ்ச்சி

இயற்கையின் இந்த சீற்றம் காரணமாக இந்திய பொருளாதாரமே ஆட்டம் காணும் சூழ்நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி வேறு. 1 ரூபாய்க்கு 17 டாலர் என்று 1927 ஆம் ஆண்டு இருந்த நிலை மாறி தற்போது 1 டாலர் = 60 ரூபாய் என்ற நிலையில் நமது பொருளாதாரம் சரிந்திருக்கிறது.

ஏற்கனவே பணவீக்கம் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் இந்த பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மிக கடுமையாக பாதிப்பட்டுள்ளர்கள்.

புண்ணிய பூமி என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் இந்த திருநாடு தற்போது வாழ்வதற்கு வழியற்ற ஒரு நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை கண்டு நாட்டின் மீதும் பற்று கொண்ட பற்றாளர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடு எங்கே போய்கொண்டிருக்கிறது?

இறைவன் நேரடியாக தலையிட்டாலன்றி நமது நாட்டை எவரும் தற்போது காப்பாற்ற முடியாது என்பதே உண்மை. எனவே அந்த பரம்பொருளின் கருணைப் பார்வை இந்த புண்ணிய பூமியில் படவேண்டும்… மக்களின் வாழ்வு சிறக்கவேண்டும். தர்மம் தழைத்தோங்க வேண்டும் இயற்கை நிலைமாறாமல் மக்களை மகிழ்விக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

ஞாயிறு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

வரும் ஞாயிறு மாலை நடைபெறவிருக்கும் கூட்டுப் பிரார்த்தனையில் – வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மேம்படவும், வட இந்தியாவை கலங்கடித்துக்கொண்டுள்ள இயற்கையின் சீற்றம் தணியவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவும், அவர்களுக்கு உரிய நிவாரணமும் பாதுகாப்பும்  கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை ஏற்கனவே அனுப்பியிருப்பவர்கள் கவனத்திற்கு :

முன்னெப்போதையும் விட நம் பிரார்த்தனை கிளப்பிற்கு அவரவர் பிரச்னை மற்றும் துயரம் தொடர்பான கோரிக்கைகள் வந்து குவிந்துள்ளன. அனைத்தும் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த இரண்டு வாரங்களில் இடம்பெற்றுவிடும்.

இதனிடையே நம் தளம் சார்பாக ஒவ்வொரு வாரமும் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று பிறருக்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்கள் கோரிக்கைகள் தாமாகவே நிறைவேறும். அது தான் கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பு. நமக்கு வந்த துன்பமே பெரிதென்று எண்ணாமல் பிறருக்காக வேண்டும் உள்ளத்தையே இறைவன் என்றும் விரும்புகிறான். இத்தகையவர்களின் அபிலாஷைகள் தாமாகவே நிறைவேறுகின்றன.

எனவே வரும் ஞாயிறு மாலை கூட்டு பிரார்த்தனையின் பொது நம் நாட்டின் பொருளாதாரம் சிறக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவும் பிரார்த்திப்போம்.

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஜூன் 23, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

12 thoughts on “மழை வெள்ளம் & கடும் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா – நாட்டிற்காக நீங்கள் சில நிமிடங்கள் ஒதுக்கத் தயாரா?

 1. இயற்கையின் கோரத்தாண்டவம் குறித்து மிகவும் துல்லியமாக விளக்கிஉள்ளது மிக அருமை .
  இத்தனை சிறப்புக்கள் பெற்ற நம் நாடு இன்று எப்படி இருக்கிறது தெரியுமா?
  பொருளாதாரா வீழ்ச்சி?
  நாடு எங்கே போய்கொண்டிருக்கிறது?
  உங்களின் குமுறல்கள் எங்களால் உணரமுடிகிறது .
  எல்லாம் நன்மைக்கே .இறைவன் நேரடியாக தலையிட்டாலன்றி நமது நாட்டை எவரும் தற்போது காப்பாற்ற முடியாது எனதே உண்மை. எனவே அந்த \\\பரம்பொருளின் கருணைப் பார்வை இந்த புண்ணிய பூமியில் படவேண்டும்\\\.
  வழக்கம் போல் பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை .
  “எல்லாம் அவன் செயல்” என்று அனைவரும் தர்மத்தின் பாதையில் நடப்போம் என்று சபதம் ஏற்ப்போம் .
  ================================================================================
  ஆண்டவன் இயற்கையின் முதலாளி !!!

  கழனிக்கு (வயல்)செல்லும் வழியில், குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ, வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதி தான்.

  இருந்தாலும் அவன், “” பிள்ளையாரப்பா ! ஒரேயடியா வெயில் அடிக்குது ! வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது! நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது! விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது !” என்று வருத்தப்பட்டு வணங்குவான். அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒருநாள் அவன் முன் வந்தே விட்டார்.

  வேலு அவரிடம், “”சுவாமி! என்னைப் போல ஒரு விவசாயிக்குத் தான் எப்ப வெயிலடிக்கணும்! எப்ப மழை பெய்யணுங்கிற விபரம் நல்லாத் தெரியும். உங்களைப் போல தேவலோகத்தில் இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி விஷயத்திலே அனுபவமில்லே !” என்றான்.
  பிள்ளையாரும்,”” நீ சொல்றது உண்மை தான் ! இன்று முதல் மழை , காற்று, வெயில் தேவதைகள் எல்லாமே உன் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். நீ நினைச்சபடி வேலை வாங்கிக் கொள்,” என்று வரம் அளித்தார்.
  இனிமேல் மனம் போல வேலை வாங்கி நிறைய மகசூல் அடையலாம் என்று வேலு மனதில் சந்தோஷம் கொண்டான்.
  காலையில் எழுந்ததும் வானத்தை நோக்கினான்.
  “” மழையே இப்போதே பெய்!” என்று ஆணையிட்டான். என்ன ஆச்சரியம்! பிள்ளையார் அளித்த வரத்தின்படியே நடந்தது.
  வானில் கருமேகம் கூடியது. மழை கொட்டத் தொடங்கியது.
  வயலுக்குச் செல்ல ஆயத்தமானான். கலப்பையுடன் வாசலுக்கு வந்தான்.
  “” மழையே ! இப்போது நீ நிற்கலாம் !” என்றான். மழையும் நின்றது.
  ஈரமான வயலை கலப்பையால் உழத் தொடங்கினான். காற்றை அழைத்து சீராக வீசச் செய்து விதைகளைத் தூவினான்.
  மழை, வெயில், காற்று என எல்லாம் அவன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தன.
  பயிர்கள் பச்சைப் பசேல் என வளர்ந்து நின்றன. காற்றில் பயிர்கள் நர்த்தனம் செய்வதைக் கண்டு மகிழ்ந்தான். அறுவடை காலம் வந்துவிட்டது.
  வேலு பயிரை அறுக்கத் தொடங்கினான். அதில் தானியம் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனான். வேலுவுக்கு கண்ணீர் வந்தது. குளக்கரைக்கு ஓடினான். அங்கு பிள்ளையார் {“சிவனே’} என அமர்ந்திருந்தார்.
  “” அப்பனே!” என அவரது காலில் விழுந்து அழத் தொடங்கினான்.
  “” மழை, காற்று, வெயில் எல்லாமே தகுந்த நேரத்தில் இருந்தும் பயிர்கள் தானியங்களைத் தரவில்லையே! என் உழைப்பு வீணாகி விட்டதே! ஏன்?” என்றான்.
  இப்போதும் பிள்ளையார் புன்முறுவல் பூத்தபடி அவன் முன் தோன்றினார்.
  “” வேலு ! என் கட்டுப்பாட்டில் அவை இருந்தபோது, இயற்கை சீற்றங்கள் ஏன் நிகழ்ந்தன என்று நீ யோசிக்கவில்லை. நிலம் நன்றாக விளைந்து வருமானம் செழித்த போது, உலக மக்கள் என்னை நினைத்துப் பார்த்தார்களா? எல்லாம் அவரவர் திறமையால் வந்ததாக மார்தட்டிக் கொண்டனர். இறைவனாகிய நான் வகுத்த சட்டதிட்டங்களை மறந்து, பணம் தந்த மமதையால்
  தேவையில்லாத கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டார்கள். அதில் நீயும் அடக்கம். அது மட்டுமல்ல! வாழ்வில் போராட்டமே
  இல்லாவிட்டால் ஏது ருசி? ? சோம்பேறித்தனம் தான் மேலிடும். எனவே தான் இயற்கையை என் கட்டுப்பாட்டில் வைத்து, மக்கள் அட்டூழியம் செய்யும் போது பூகம்பம், புயல் முதலான சீற்றங்களை தருகிறேன். அந்த சமயத்தில், நீங்கள் பயத்தில் என்னைச் சரணடைகிறீர்கள். மீண்டும் தர்மம் ,நியாயம் ,படி நடக்கிறீர்கள் .அதனால் தான் நான் உலகின் முதலாளியாக இருக்கிறேன். புரிகிறதா!” .
  எல்லாம் அவன் செயல் என்று தர்மத்தின் வழி நடங்கள் ,மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் “என்றார்.
  பதில் சொல்ல முடியாத வேலு தலை குனிந்தான்.

  நன்றி
  மனோகர்

  1. மனோகர் மிகப் பெரிய உண்மையை ஜஸ்ட் லைக் தட் ஒரு கதையில் அழகாக விளக்கிவிட்டீர்கள். (கைவசம் ஏராளமான கதை வெச்சிருக்கீங்க போல…!)

   நன்றியோ நன்றி!!

   – சுந்தர்

 2. புயலால் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட இடங்களை பார்க்கும் போது மனம் சொல்லொண்ண வேதனை அடைந்தது.
  எத்தனையோ நாசங்களை இயற்கை அன்னை தன் சீற்றம் மூலம் செய்திருந்தாலும் சிவபெருமான் கோவில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலை மட்டும் அசைத்துப் பார்க்க அவளுக்கு துணிவிருக்கவில்லை. அதே போல ருத்ரப்ரயாகில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவபெருமான் சிலையும் தப்பிவிட்டது.
  இறைவன் நேரடியாக தலையிட்டாலன்றி நமது நாட்டை எவரும் தற்போது காப்பாற்ற முடியாது எனதே உண்மை. எனவே அந்த பரம்பொருளின் கருணைப் பார்வை இந்த புண்ணிய பூமியில் படவேண்டும்… மக்களின் வாழ்வு சிறக்கவேண்டும். தர்மம் தழைத்தோங்க வேண்டும் இயற்க்கை நிலைமாறாமல் மக்களை மகிழ்விக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

 3. இந்த பாதிப்பு ஏற்பட மிக பெரிய காரணம் மனிதர்கள் தான் வளர்ச்சி என்ற பெயரில் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்ததன் விளைவுதான் இவ்வளவு பாதிப்பு என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளார்கள் இன்னும் திருந்தவில்லை என்றால் பாதிப்புகள் நிறைய இருக்கும் அதற்க்கு நாம் கடவுளை குறை கூற முடியாது ,கடவுள் வீடு தான் கொடுப்பார் அதை பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டியது நாம் தான்

 4. இந்த பேரழிவு நிகழ்ச்சியை பார்க்கும்போது ஏன் இந்த கடவுள் இப்படி
  மனித குலத்தை ஆட்டிபடைக்கின்றா ன் என என்ன தோன்றுகிறது.

  ஆனால் இது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விசயமாக இருக்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இதில் நல்லவர் கெட்டவர் என பாரபட்சம் பாராமல் அழித்துவிடுகிறான்.

  “ஆண்டவன் போடும் கணக்கு அது புரியாது நமக்கு” என்று நீங்கள் ஏற்கனவே ஒரு பதிவில் கூறிய வாசகத்திற்கேற்ப எல்லா காரியத்திற்கும் ஒரு காரனம் உண்டு போல.

  கடவுள் என்ன திட்டம் வைத்துள்ளான் என்பது நம்மை போன்ற சாதாரன மனிதர்க்கு புரியவா போகிரது?..

  நம்ம மணோகர் சார் சொன்ன கதை இந்த பதிவுக்கு மிகவும் பொருத்தமாக உல்லது,எல்லம் அவன் செயல் என்று அவனை சரனாகதி அடைவதை தவிர வேரு வழி என்ன? இருக்க முடியும்..

  இறைவன் நேரடியாக தலையிட்டாலன்றி நமது நாட்டை எவரும் தற்போது காப்பாற்ற முடியாது எனதே உண்மை. எனவே அந்த பரம்பொருளின் கருணைப் பார்வை இந்த புண்ணிய பூமியில் படவேண்டும்… மக்களின் வாழ்வு சிறக்கவேண்டும். தர்மம் தழைத்தோங்க வேண்டும் இயற்க்கை நிலைமாறாமல் மக்களை மகிழ்விக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். –

  சரியான நேரத்தில் சரியான பதிவை அளித்துள்ளீர்கள் நன்றி.

 5. தேசிய நதி நீர் இணைப்பை செயல் படுத்தியிருந்தால் பல மாநில விவசாயிகள், பொது மக்கள் பலன் பெற்றிருப்பார்கள். சுயநலம் பிடித்த அரசியல் வியாதிகள் நம் தேசத்தை பின்னுக்கு தள்ளி இந்த தேசத்தை நோயாளியாக மாற்றிகொண்டிருக்கிரார்கள். என்று தணியும் இந்த இலவச மோகம்? யாராவது இப்போது நதி நீர் இணைப்பைப் பற்றி இப்போதாவது பேசி செயல் படுகிறார்களா?

  இயற்கைக்கு அரசியல்வாதிகளின் மிகப் பெரிய ஊழல் தெரியும். இவர்கள் மக்களுக்கு இலவசங்களை தந்து ஏமாற்றலாம். அதற்கு மக்கள் தலை வணங்கியதால் தான் இந்த தண்டனையோ என எண்ணத் தோன்றுகிறது. வழக்கம் போல எல்லா ஊழல், கேடு கேட்ட அரசியல் வாதிகள் அறிக்கை விட்டு தங்களுடைய சொகுசு பங்களாவில் நன்றாக வாழ்கிறார்கள். கடவுள் இருந்தால் நல்லா இருக்கும் மேலும் அவர் நல்லவர்களை ஆசிர்வதிக்க வேண்டும் கை விடக் கூடாது. கெட்டவங்களுக்கு அதிகமா சந்தோசத்தை இந்த கலியுகத்தில் கொடுத்துட்டார் ஆனா இன்னும் அவனுங்களை ஒன்னும் பண்ணலை. கெட்டவர்கள் கோவில் / சர்ச் / மசூதி உண்டிகளில் காணிக்கைப் போட்டு விட்டு தப்பி விடுவதில் கில்லாடிகள்.

  நம் மக்களையும் சுயநல வாதிகளாக மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். பாவ புண்ணியத்தை யாரவது நினைகிறார்களா எனத் தெரியவில்லை. எல்லோரும் சுயநலமிகளாக இருப்பதால் இயற்கையும் தன் பணியை செய்கிறது.

 6. பல ஆயிரக்கணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை? குழந்தைகள், வயதானவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் பலரது வாழ்க்கை முடிந்து விட்டது. செய்தியை படிக்கும் போதே மனம் பதறுகிறது. வரலாறு காணாத அளவு சேதம் அடைந்துள்ளது. நினைத்தாலே மிகவும் கஷ்டமாக உள்ளது. பூமித்தாய் பொங்கி எழுந்தால் மனிதர்கள் நிலை மிகவும் மோசம் தான். இயற்கையை நாம் மதிப்பதில்லை என்பதே உண்மை. மனிதனாக பிறந்த அனைவருமே நியாயம், தர்மம், சத்தியம் இவை பற்றி யோசிக்குறோமா என்பது கேள்விக்குறி தான். மனிதனுக்கு சுயநலம் மட்டுமே பெருகி விட்டது. நான் மட்டும், எனக்கு மட்டும் என்ற மன நிலை மாறி அனைவரும் நல்லதை நினைத்து, நல்லதை செய்தால் மட்டுமே நம்முடைய நிலைமை மாறும். அதற்கும் அந்த ஆண்டவன் தான் அனைவருக்கும் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். அவனை சரண் அடைந்தால் மட்டுமே நல்லவை நடக்கும். ஆண்டவனை வேண்டுவதை தவிர நம் கையில் ஒன்றும் இல்லை. உடைமைகள், உறவுகள் இழந்து வருந்தும் அனைவருக்காகவும், நல்ல அரசியல் தலைவர்கள் பதவிக்கு வந்து நம் நாடு நல்ல நிலைக்கு வரவும், உலகத்தின் முதலாளி நமது ஆண்டவனை மனதார நாம் வேண்டுவோம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

 7. பாரதத்தில் நடக்கு இந்த அவலங்களை நினைக்கும்பொழுது மனம் மிகவும் வேதனையடைகிறது. புண்ணிய பூமியில் நடந்துள்ள இந்த துயரம் வார்த்தைகளில் வெளிபடுத்த முடியாத வேதனையை தருகிறது. மக்களை ஆண்டவன் இரட்சிக்கக வேண்டும்.

  அரசியல் மாற்றங்களே நமது பாரதத்தின் நடந்து வரும் அவலங்களுக்கு சரியான தீர்வை அளிக்க முடியும்.

  சுந்தர்ஜி என்னால் முடிந்த வரை நீங்கள் குறிபிட்ட நேரத்தில் பிராத்தனையில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன் (இந்திய நேரம் 5.30 பம் மலேசியாவில் 8.00 pm ) .

  சுந்தர்ஜி நமது தளம் சார்பில் நிவாரண நீதி திரட்டினால் நிச்சயம் என்னால் முடிந்த தொகையை அனுப்பி வைப்பேன்.

  தொடரட்டும் தங்களுடைய சேவை

 8. இந்த கோர சம்பவங்களைபார்க்கும்போது, இது தான் நினைவுக்கு வருகிறது

  ‘இந்த நிலை மாறிவிடும், இது நிரந்தரமில்லை என்பதை நாம் எப்போதும் மறக்கக்கூடாது . அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்தக் கணம் கூட!’’ (சார்லி சாப்ளின் வரிகள்)

 9. எதோடு வேண்டுமானாலும் விளையாடலாம்
  இயற்கையோடு விளையாடக்கூடாது – என்ற கூற்று உண்மையாகிவிட்டது !!!

  மனிதன் எப்போது இயற்யோடு ஓட்ட ஒழுகாமல் விலகிப்போகிறானோ அப்போதே அவனது அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பிக்கிறது – அவனது அழிவுப்பாதை ஆரம்பமாகிறது !!!

  எவ்வளவு தான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் இயற்கையை அழித்து செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலும் அழிவையே சந்தித்திருக்கிறது !!! அதற்காக வளர்ச்சி தேவை இல்லை என்று அர்த்தம் அல்ல – அந்த வளர்ச்சி இயற்க்கைக்கு பாதகம் இல்லாமல் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை !!!

  கலியுகத்தில் மனிதன் மண், பெண், பொன் மீது கொண்ட அற்ப ஆசை காரணமாக இயற்கையை மீறி இன்னும் சொல்ல போனால் இயற்க்கைக்கு சவால் விடும் வகையில் பல காரியங்களை இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறான் – அதற்க்கு இயற்க்கை அன்னையும் அவ்வப்போது தக்க சமையத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறாள் !!!

  இயற்கையை கடிந்து குற்றமில்லை – இது மனிதர்கள் தமக்குத்தாமே தேடிக்கொண்ட அழிவு – இந்த கூற்று மனதிற்கு வழியை தந்தாலும் அது தான் உண்மை !!!

  நடந்ததிலிருந்து மனிதன் பாடம் கற்றுக்கொண்டு இனியாவது சிந்தித்து செயல்படுவார்கள் என்று நம்புவோம் !!!

  உயிர் உடமை நிம்மதி சொந்த பந்தங்கள் ஆகியோரை இழந்து வாடும் மக்களுக்கு அந்த மாநில அரசு போர்க்கால அடிப்படையில் எல்லா உதவிகளையும் வழங்கிட வேண்டும் – அதே சமயம் தொண்டுள்ளம் கொண்ட நல்லோர் தம்மால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு கொடுத்து உதவிட பணிவுடன் வேண்டுகிறேன் !!!

  எல்லாவற்றுக்கும் மேலாக பல்லாயிரக்காணக்கான பக்தர்களை தன்பால் கவர்ந்திழுத்த கேதார்நாத் திருக்கோவில் தற்போதைய நிலையிலிருந்து மீண்டு பழைய பொலிவை பெறவும், இயற்க்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோர் அவர் தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடவும், கோபத்துடன் இருக்கும் இயற்க்கை அன்னையின் மனம் மாறிடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தொழுவோம் !!!

  இறைவா – உனது பிள்ளைகளாகிய எங்களின் பிழைகளை பொறுத்து எங்களை என்றென்றும் துணை நின்று காத்து ரக்ஷிதிடுவாயாக !!!

 10. கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். அதர்மத்தின் வழி செல்லும் ஆட்சியாளர்களே

  ராம நாமம் ஒரு முறை உச்சரிப்பதே ஒரு விஷ்ணு சஹாச்ற நாமத்திற்கு ஒப்பானது

  உச்சரிப்பீர் மஹா மந்திரம்:
  ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
  கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
  ஹரே ராம ஹரே ராம
  ராம ராம ஹரே ஹரே

  Mr சுந்தர் ஜி நான் முன்பு ஒரு லக்ஷ்மி கடாக்ஷம் பற்றிய தொகுப்பில் கமெண்ட் செய்திருந்தேன். அதில் “தர்மம் – தெய்வீக நிலையை அடைவதற்கான வழி” எனும் புத்தகத்தை வாங்க உங்களுக்கு பரிந்துரைத்தேன். நினைவிருகிறதா? அந்த புத்தகத்தை வாங்கி விடீர்களா? வாங்க வில்லை எனில் உடனே வாங்கி அனுபவியுங்கள். இஸ்க்கான் கோவிலில் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *