Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

print
வ்வொரு முறையும் உழவாரப்பணியின் மேன்மை குறித்து விளக்கமளித்து அந்த பணிக்கு அழைப்பு விடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் இது நம் கடமை. சற்று யோசித்து பாருங்கள்…. கோவிலுக்கு சென்று செய்யும் பிரார்த்தனை, பூஜை, அபிஷேகம், அர்ச்சனை இவையெல்லாம் நமது நன்மைக்காக (அதாவது சுயநலத்திற்காக) செய்வது. அதனால் இறைவனுக்கு ஒன்றும் பயனில்லை. ஆனால் உழவாரப்பணி ஒன்றே இறைவனுக்காக நாம் செய்வது.

மனிதனாக பிறந்த அனைவரும் தங்களால் இயன்ற போது ‘உழவாரப்பணி’ எனப்படும் கோவிலை சுத்தம் செய்யும் கைங்கரியத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அவனது அருளுக்கு பாத்திரமாகவேண்டும்.

உழவாரப்பணியின் மேன்மை குறித்த எண்ணம் பலருக்கும் போய் சேரவேண்டுமே என்பதால் கீழ் கண்டகதை ஒன்றை கூறுகிறேன்.

தினையளவு உதவி; பனையளவு பயன்!

அவன் ஒரு மிகப் பெரும் செல்வந்தன். வட்டிக்கு பணம் விடுவதை தொழிலாக கொண்டவன். அநியாய வட்டிக்கு பணத்தை கொடுத்தும் பொருட்களை அடகு பிடித்தும் வாழ்ந்து வந்தான். அவனிடம் ஈவு இறக்கம் என்பதையே எதிர்பார்க்க முடியாது.

சரியான நேரத்தில் கடனை திருப்பி கொடுக்காதவர்களை அவமானப்படுத்துவது, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வது என்பது போன்ற அவனது நடவடிக்கைகளால் பாதிப்பட்டவர்கள் அந்த ஊரில் ஏராளம். இதன் காரணமாக பலரின் சாபத்துக்கும் அவன் ஆளானான்.

கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும் அங்கு அவனுக்கும் அவன் செல்வத்திற்கும் கிடைக்கும் மரியாதைக்காகவே அவன் சென்று வந்தானேயன்றி பக்தியின் காரணமாக அல்ல.

இந்நிலையில் அவனுக்கு திருமணமாகி அவன் மனைவி கருவுற்றிருந்த நேரம். பிரசவம் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற நிலை. அவன் மலையென குவித்த பாபத்தின் காரணமாகவும் ஏழைகளை வயிறு எரியச் செய்ததின் காரணமாகவும் அவனது குலம் தழைக்காது போய் அவனது மனைவிக்கு குழந்தை கருவில் தங்காது கலைந்து போகவேண்டும் என்கிற விதி இருந்தது.

இந்நிலையில் ஒரு நாள் தனது வட்டிக்கடையில் அமர்ந்து வழக்கம் போல கணக்கு பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக தகவல் வந்தது. உடனே அவனது வீடு நோக்கி விரைந்தான்.

விதிப்படி கருவில் இருக்கும் குழந்தையின் உயிரை கவர எமகிங்கரர்கள் அவன் இல்லம் விரைந்தார்கள்.

இவன் வீட்டுக்கு செல்லும் வழியில், சிவாலயம் ஒன்று இருந்தது. அந்த ஆலயம் குடமுழுக்கிற்காக தயாராகி கொண்டிருந்தது. எனவே ஊர்மக்களில் சிலர் ஆளாளுக்கு ஒவ்வொரு பணியை செய்துகொண்டிருந்தனர். ஒரு சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஒரு சிலர் தோரணம் கட்டிகொண்டிருந்தனர். ஒரு சிலர் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கோவிலுக்கு பின்னே இருக்கும் ஒரு சிறிய குறுகலான பாதையில் சென்றால் வீட்டுக்கு சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதால் இவன் வேகமாக அந்த குறுகலான பாதையில் சென்றுகொண்டிருந்தான். அப்போது ஏணியில் நின்றபடி கோவில் மதில் சுவற்றை ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்துவிட, அந்தப் பக்கம் சென்ற இவனை அழைத்து, “ஐயா தர்மப் பிரபு, கொஞ்சம் அந்த மட்டையை எடுத்து கொடுங்களேன்…. கீழே விழுந்துவிட்டது” என்று கூற, ‘தர்மபிரபு’ என்கிற வார்த்தையால் மனம்குளிர்ந்த இவன் குனிந்து அந்த மட்டையை எடுத்து ஏணியில் சில படிகள் ஏறி அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பவும் தன் வழி நோக்கி நடக்கலானான்.

இந்நிலையில் குழந்தையின் உயிரை கவர இவனது வீட்டிற்கு வெளியே காத்திருந்த எமகிங்கரர்கள் தயாரான தருணம், திடீரென சிவலோகத்திலிருந்து பூதகணங்கள் இருவர் அங்கு தோன்றி எமகிங்கரர்களை தடுத்தனர்.

“குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்திற்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த ஒரு அடியவருக்கு இவர் மிகச் சிறிய உதவி ஒன்றை செய்துள்ளார். அதன் மூலம் அந்த சிவபுண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது. இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை. மேலும் அருகிலிருந்து சுகப் பிரசவத்திற்கு ஆவன செய்யும்படி எம்பெருமான் கட்டளையிட்டுள்ளார். எனவே நீங்கள் போகலாம்” என்று கூறி எமகிங்கரர்களை தடுத்து விடுகின்றனர்.

எமகிங்கரர்களும் ஈசனின் கட்டளை என்பதால் திரும்ப சென்றுவிடுகின்றனர்.

தன் குழந்தைக்கு நிகழவிருந்த ஆபத்து சிவனடியார்களுக்கு சிறிய உதவியின் மூலம் தவிர்க்கப்பட்டதை விரைவில் தனது ஜோதிடர் மூலம் தெரிந்துகொள்ளும் அந்த கருமி அதன் பிறகு மனம் மாறி தனது செல்வங்களை நற்காரியங்களுக்கு செலவு செய்து வரலானான். அவனுக்கு பிறந்த குழந்தையும் பக்தியும் ஆன்மீகமும் கொண்டு வளர்ந்து அவன் குலம் தழைக்க உதவியது.

கோவிலை சுண்ணம் அடித்துகொண்டிருந்தவர்களுக்கு மட்டையை எடுத்து கொடுத்ததற்கே இப்படி ஒரு பலன் என்றால் அவன் ஆலயத்தில் உழவாரப்பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் என்று நினைத்துபாருங்கள்.

ஆனால் நாமோ நம் நண்பர்களோ இந்த பணியை செய்வது புண்ணியம் கருதி அல்ல. அவன் மீது நாங்கள் வைத்திருக்கும் எல்லையற்ற எங்கள் அன்பிற்கான எடுத்துக்காட்டு. ஒவ்வோர் கணமும் எங்களை காக்கும் அவன் அருள் மழைக்கு நாங்கள் செய்யும் சிறு பிரதி உபகாரம்.

==========================================================

குளிர்ந்த நாயகி உடனுறை அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர்

நமது அடுத்த உழவாரப்பணி திருமழிசையில் உள்ள குளிர்ந்த நாயகி உடனுறை அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது. சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்து இக்கோவில் அமைந்துள்ளது. 1000-2000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த இந்த கோவிலில் பலர் சிறப்புக்கள் உள்ளது.

ஒத்தாண்டேஸ்வரரை வணங்கினால், மனோபலம் ஏற்படும் என்பதால் இவருக்கு “மன அனுகூலேஸ்வரர்’ என்றொரு பெயரும் உள்ளது. அம்பாளுக்கு குளிர்ந்த நாயகி என்ற பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உள்ளது.

தலவரலாறு மற்றும் இன்ன பிற சிறப்புக்களை பின்னர் தனி பதிவாக அளிக்கிறோம். உழவாரப்பணியின் போது கோவிலில் இன்னும் பல தகவல்களை விசாரிக்க இருக்கிறோம்.

==========================================================

மேன்மை பொருந்திய இந்த  ஆலயத்தில் நம் தளம் சார்பாக வரும் ஞாயிறு (ஜூன் 16, 2013) காலை 7.00 முதல் பகல் 12.00 வரை உழவாரப்பணி நடைபெறவுள்ளது.  இந்த அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பயனடையுமாறு வாசக அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம். வருபவர்களுக்கு நம் தளம் சார்பாக மதிய உணவு வழங்கப்படும்.

சுத்தம் செய்வதற்குரிய கருவிகள் (சிறிய/பெரிய பிரஷ், முதலானவை) தங்களிடம் இருந்தால் தயவு செய்து எடுத்து வரவும்!

திருமழிசையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற கோவிலான அருள்மிகு ஜெகன்னாத பெருமாள் ஆலயத்தில் நமது முந்தைய உழாவாரப்பணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு:

Mobile : 9840169215  | E-mail  : editor@rightmantra.com

==========================================================

பஸ்  ரூட் :

பிராட்வே – திருமழிசை ரூட் – 153

திருவள்ளூர் – திருமழிசை ரூட் – 501, 538, 566A, 596, 596A, 597

கோயம்பேடு – திருமழிசை ரூட் – 596, 596 A

தாம்பரம் – திருமழிசை ரூட் – 566A

தி.நகர் – திருமழிசை ரூட் – 54V, G54, 154A, 597

வேளச்சேரி  – திருமழிசை ரூட் – 54L

பஸ் ஸ்டாப் : திருமழிசை கோவில்

==========================================================

உழவாரப்பணியின் சிறப்புக்கள் மற்றும் நமது முந்தைய உழவாரப்பணி குறித்த பதிவுகளுக்கு கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.
http://rightmantra.com/?cat=124

[END]

 

 

7 thoughts on “உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

  1. அண்ணா விரைவில் நானும் உங்களுடன் வருவேன்

  2. இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார் என்பதற்கு மேலே கூறப்பட்டுள்ள கதை ஒரு மிக சிறந்த உதாரணம் !!!

    நமக்காகவும் நமது பிரார்த்தனைகள் நிறைவேருவதர்காகவும் ஆலயத்துக்கு செல்லும் நாம் அந்த இறைவன் அருளால் அந்த பிரார்த்தனை நல்ல படியாக நிறைவேறியவுடன் அந்த நன்றிக்கடனை எப்படி அடைக்க முடியும்? – உழவாரப்பணி மூலமாக !!!

    முடிந்த வரை ஓய்வு கிடைக்கும் போது அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று தம்மால் இயன்ற சேவையை செய்வதன் மூலம் உடலும் உள்ளமும் அமைதியும் மேன்மையும் பெரும் என்பதில் ஐயமில்லை !!!

    கோவிலுக்கு செய்யப்படும் சேவைக்கு வரையறை கிடையாது – அது மனமும் உடலும் ஒன்றி செய்யும் உழவரப்பணியாகவும் இருக்கலாம், இறைவனின் சந்நிதானத்தில் ஏற்றப்படும் திருவிளக்கிர்க்கான எண்ணெய் திரியாக வாங்கி கொடுப்பதாக இருக்கலாம் , பக்தர்கள் தாகம் தணிக்கும் நீர் பந்தலாக அமைப்பதாக இருக்கலாம் , திருவிழா காலங்களில் பக்தர்களை ஒழுங்கு படுத்தி காவல் துறைக்கு உதவுவதாக இருக்கலாம் இப்படி பல – இவற்றில் அன்பர்கள் அவரவர் தமது சக்திக்கு ஏற்ப சிறு சிறு கைங்கர்யத்தை செய்து புண்ணியம் தேடலாம் !!!

    இன்னும் நமது கிராமப்புறங்களிலும் நகர்ப்புறத்துக்கு சிற்று தொலைவினிலும் எண்ணற்ற ஆலையங்கள் கேட்பாரின்றி சிதிலமடைந்து கிடக்கின்றன – எத்தைனையோ பாடல் பெற்ற தளங்களின் இன்றைய நிலை ஒரு வேலை பூஜை கூட நடைபெறாமல் வேதனை தருவதாக உள்ளது !!!

    இவ்வகை பாடல் பெற்ற சிறப்பு மிக்க தளங்களை தேடி பராமரித்து வருங்கால சந்ததியினருக்கு விட்டு செல்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகிறது !!! எனவே தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள் செல்வந்தர்கள் அரசாங்க உதவியை எதிர்பாராமல் தாமாக தம்மை இது போன்ற திருப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திகொள்வார்கலேயானால் அவர் தம் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் – அது மட்டுமல்லாது எல்லாம் வல்ல அந்த இறைவனின் பொற்பாத கமலத்தை அடையும் அற்புத மார்கமாக திகழும் என்பதில் ஐயமில்லை !!!

    பிறவிக்கடல் என்னும் சாகரத்தை கடந்து இறை அருளை அடைய
    உழவாரபணி – ஒரு மிக சிறந்த தோணி !!!

    வாழ்க திருப்பணி
    வளர்க உழவாரபணி !!!

  3. மிக அற்புதம். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  4. வில்வ இலை தன்னால் சிவ லிங்கம் மீது விழுந்ததுக்கு அந்த இலைக்கு கிடைத்த புண்ணியம் நாம் அறிந்ததே.கடவுள் மேல் விழுந்த இலைக்கே அந்த மதிப்பு என்றால் அவனின் இருப்பிடமான கோவிலை சுத்தம் செய்யும் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது நமக்கு கிடைப்பது அவன் செயல் அன்றி வேறென்ன

  5. \\ஆனால் நாமோ நம் நண்பர்களோ இந்த பணியை செய்வது புண்ணியம் கருதி அல்ல. அவன் மீது நாங்கள் வைத்திருக்கும் எல்லையற்ற எங்கள் அன்பிற்கான எடுத்துக்காட்டு. ஒவ்வோர் கணமும் எங்களை காக்கும் அவன் அருள் மழைக்கு நாங்கள் செய்யும் சிறு பிரதி உபகாரம்.\\

    நானும் எனது மகன் மோனிஸ் ராஜ் இருவரும் கலந்து கொள்கிறோம் .

    எங்களுடன் சேர்ந்து இறைப்பணியில் இணைந்து கொண்டு ஒத்தாண்டேஸ்வரர் அருள் பெற அழைக்கிறோம் .

    -மனோகர்

  6. அடுத்த உழவர பணி எங்கு? கலந்துகொள்ள ஆவலாக இருக்கிரேன்.

    1. அடுத்த உழவாரப்பணி இறுதி செய்யப்பட்டவுடன் தளத்தில் முன்கூட்டியே வெளியிடப்படும். சற்று பொறுமையாக இருக்கவும். அக்டோபர் இரண்டாம் வாரம் இருக்கும்.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *