“வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். ‘சரிதான் போடா தலைவிதி’ என்பது வெறும் கூச்சல்!” என்கிற வாலியின் வைர வரிகள் தான் இவரது கதையை கேட்கும்போது நினைவுக்கு வருகிறது. தோல்விகளை, அவமதிப்புக்களை, புறக்கணிப்புகளை கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்ட ஒருவர் சாதித்துக் காட்டியுள்ள உண்மை சம்பவம் இது.
எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் படிக்காம அரியர்ஸ் குவித்துவரும் மாணவர்கள் அவசியம் அறிய வேண்டிய வரலாறு இது.
ஆங்கில இணையதளம் ஒன்றில் இந்த சாதனையாளரை பற்றி வெளியான கட்டுரையை படித்ததும், மெய்சிலிர்த்துவிட்டேன். இரண்டு மூன்று தளங்களை REFER செய்து மேற்கொண்டு தகவல்கள் திரட்டி ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையையும் இவரது பேட்டியையும் மொழி பெயர்த்து தந்திருக்கிறேன்.
இந்தியாவின் கல்விமுறைகளும் கல்வி நிறுவனங்களும் எவ்வளவு குருட்டுத் தனமாக இருக்கிறது என்பதற்கு இதோ ஓர் உதாரணம். வசதியில்லாத, நன்கு படிக்கக் கூடிய, கடினமாக உழைக்க கூடிய, புத்திசாலித்தனமான மாணவர் ஒருவர் இங்கிருக்கும் செல்லரித்துப் போன கல்வி நடைமுறைகளுக்கும் குருட்டு சிந்தனைகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் அவற்றுடன் போராட முடியாமல் இதோ தனது மேற்படிப்புக்கு யூ.எஸ் செல்கிறார். இந்த மாணவருக்கு பிறவியிலிருந்தே இரு கண்களும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சாவ்னி என்னும் இந்த மாணவர், டெல்லியை சேர்ந்தவர். அவருடைய தந்தை லஜ்பத் நகரில் கடைவைத்திருக்கிறார். கூடப்பிறந்த சகோதர சகோதரிகள் உண்டு. 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.ஈ. தேர்வில் 95% மதிப்பெண்கள் பெற்றுள்ள இவருக்கு, நம் நாட்டில் உள்ள ஐ.ஐ.டிக்களில் மேற்படிப்பு படிக்க ஆசை. ஆனால் திறமையை என்றைக்கு நாம் மதித்திருக்கிறோம்?
இதோ ஐ.ஐ.டி.க்களால அலைகழிக்கப்பட்ட இந்த ஜீவனை அமெரிக்கா இருகரம் நீட்டி வரவேற்று ஸ்காலர்ஷிப்பு வழங்கியிருக்கிறது. பார்வையற்றவர் இவர் என்கிற ஒரே காரணத்துக்காக இவரை ஐ.ஐ.டி.யில் நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லையாம்.
இங்கு முயற்சிகள் தோற்ற பின்னர் வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு அப்ளை செய்ய, இவரது அபார திறமையை பார்த்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இவரை டக்கென்று வாரி அணைத்துக்கொண்டுவிட்டது.
கோவில் கோவிலா கும்பாபிஷேகம் பண்ணி, அன்ன தானம் முதலான தான தருமங்கள் செஞ்சி கோடிக்கணக்கான இந்தியவர்கள் சேர்க்கும் புண்ணியத்தை விட அதிகமான புண்ணியத்தை அமெரிக்கா இது மூலம் சுலபமா சம்பாதித்துவிட்டது என்றே எனக்கு தோன்றுகிறது. ஏன் பின்னே யூ.எஸ்.ல மட்டும் செல்வம் கொழிக்காது?
பதினோராம் வகுப்பு சேர்வதற்கே இவர் படாத பாடு படவேண்டியிருந்ததாம். சி.பி.எஸ்.ஈ. என்னும் உளுத்துப் போன ஒரு அமைப்புடன் இவர் அதற்கு நடத்திய யுத்தம் இருக்கிறதே அப்பப்பா… “சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தில் வரும் கிராப், வரைபடங்கள், மாடல்கள் இதையெல்லாம் இவர் எப்படி செய்வார்?” எனவே இவரை அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாம்.
ஆனால் இவர் மனம் தளரவில்லை… தன்னால் முடியும் என்பதை விளக்கி, அது எப்படி முடியும் என்பதையும் குறிப்பிட்டு சி.பி.எஸ்.ஈ. தேர்வுத் துறை இயக்குனருக்கு டஜனுக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதினார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா? ஒருவழியாக இவருக்கு +1 சேர அனுமதி கிடைத்தது.
“+1 சயன்ஸ் க்ரூப் சேர நான் அதிகாரிகளை கன்வின்ஸ் செய்ய மிகவும் கஷ்டப்படவேண்டியிருந்தது….” என்று கூறும் கார்த்திக்கிற்கு ஒரு வழியாக டெல்லி பப்ளிக் ஸ்கூலில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு இவருக்கு பலவாறாக உதவிகள் செய்து இவர் நிம்மதியாக படிக்க ஆவன செய்தார்கள். இவருக்கென்றே ஸ்பெஷலாக ப்ராக்டிகல் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் ஒருவர் அனைத்தையும் விளக்கி பேருதவி புரிந்தார். தேர்வுகள் இவருக்கு MULTIPLE CHOICE ANSWERS மூலம் நடத்தப்பட்டன.
“பார்வையற்றவர்கள் இந்திய கல்வி முறையில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அதுவும் கணிதமும், அறிவியலும் படிக்க அவர்கள் விரும்பினாலும் நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. அவர்கள் விரும்பாத ஆர்வமற்ற துறைகளுக்கு அவர்களை சிபாரிசு செய்கிறார்கள்” என்கிறார் தனியார் கல்வி மேம்பாட்டு நிறுவன தலை அதிகாரி ஜார்ஜ் ஆப்ரஹாம்.
உதாரணத்துக்கு இசைப் பிரிவு. அனைவருக்கும் இசையார்வம் இருக்குமா என்ன? மேலும் பார்வையற்றவர்கள் என்றாலே நிகழ்சிகளில் பாடுவதற்கு என்று முடிவுகட்டிவிட்டார்கள் போல… அடக் கொடுமையே…
ஆனால் கார்த்திக், தான் விரும்பிய சப்ஜெக்டை படிக்கவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். சயன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இரண்டும் தான் அவரது ஆர்வம். அவரது திறமை குறித்தும் ABILITY குறித்தும் சந்தேகம் எழுப்பியவர்கள் அவர் தேர்வில் குவித்த மார்க்குகளை பார்த்து வாயடைத்து போயினர்.
[highlight]அவரது திறமை குறித்தும் ABILITY குறித்தும் சந்தேகம் எழுப்பியவர்கள் அவர் தேர்வில் குவித்த மார்க்குகளை பார்த்து வாயடைத்து போயினர்.[/highlight]
நடந்து முடிந்த சி.பி.எஸ்.ஈ. தேர்வில் கார்த்திக், கம்ப்யூட்டர் சயன்சில் 99%, மற்ற நான்கு பாடங்களிலும் 95% ஸ்கோர் செய்திருக்கிறார். இவரது டோட்டல் 500க்கு 479. விடாமுயற்சியும் ஒரே சிந்தனையும் தான் இதற்கு காரணம் என்கிறார் கார்த்திக்.
“உடல் ஊனம் அல்லது பார்வைத் திறன் இல்லாமை நமது திறமையை வெளிக்காட்டுவதில் தடைகளை ஏற்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். அது தவறு. தங்கள் பலத்தை நம்புகிறவர்களை வெற்றி தேடி வரும்” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
+2 தேர்வு முடிவுகள் தந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மேற்படிப்பை தொடர் முயன்றவருக்கு IIT-JEE மூலம் சோதனை வந்தது. IIT-JEE என்பது இந்திய தொழில் நுட்ப கழகங்களில் சேர நடத்தப்படும் நுழைவு தேர்வு.
[highlight]“உடல் ஊனம் அல்லது பார்வைத் திறன் இல்லாமை நமது திறமையை வெளிக்காட்டுவதில் தடைகளை ஏற்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். அது தவறு. தங்கள் பலத்தை நம்புகிறவர்களை வெற்றி தேடி வரும்”[/highlight]
கடந்த ஆண்டு வரை ஐ.ஐ.டி.யில் நுழைவுத் தேர்வு எழுத பார்வையற்றவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனராம். மேலும் அவர்கள் கொடுக்க வேண்டிய VISUAL INPUTS களிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்ததாம். தியரி தேர்வு மட்டும் எழுதினால் போதும். அதை வைத்து அவர்களது மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மேற்கண்ட விதிமுறைகள் திருத்தப்பட்டதால் இந்த மாணவர் தேர்வு எழுத முடியவில்லை. பார்வையற்றவரிடம் விரலை காட்டி “இது எத்தனை சொல்லு” என்பது போல விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது ஐ.ஐ.டி.
நொந்து போன திரு.கார்த்திக், செய்வதறியாது தவித்தார். “11652 x 651 என்று நான் மனதிலேயே பெருக்கி விடை சொல்லவேண்டுமாம். மேலும் எனக்காக தேர்வு எழுதுபவர்கள் ஆர்ட்ஸ் & காமர்ஸ் பிரிவை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கவேண்டுமாம். ஆனால் அவர்களுக்கு கேள்வித் தாளில் உள்ள சிக்கலான கணித அறிவியல் சமன்பாடுகளை படிக்க தெரியவில்லை. மேலும் அறிவியல் மற்றும் கணித சூத்திரங்களை எழுதும்போது அதற்குரிய பிரத்யேக குறியீடுகளை எழுதத் தெரியவில்லை என்றும் கூறும் கார்த்திக், “அவர்களை கொண்டு எப்படி நான் தேர்வு எழுதுவது?” என்றும் கேட்கிறார். நியாயம் தானே?
ஒரு விரலை காண்பித்து இரண்டில் ஏதாவது ஒன்றை தொடு என்பது போலல்லவா இருக்கிறது இது.
“எனக்கு இங்கே நம் நாட்டில் தான் சார் படிக்க ஆசை. ஆனால் ஐ.ஐ.டி.யில் என்னை சேர்க்க முடியாது என்று கூறியதோடல்லாமல் நுழைவுத் தேர்வைகூட எழுத அனுமதிக்கவில்லை. ஐ.ஐ.டிக்களின் இந்த புதிய விதிமுறைகளால் என்னைப் போன்ற பல பார்வையற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்…” என்று குமுறும் கார்த்திக்குக்கு சந்தோஷப்பட ஒரு செய்தி இருக்கிறது.
இங்கிருக்கும் கல்வி முறைகள் இவரை கைவிட்டுவிட்ட நிலையில், பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு கார்த்திக் அப்ளை செய்தார். அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு முழு ஸ்காலர்ஷிப்புடன் இவர் விரும்பியபடி கணிப்பொறி பிரிவில் பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
(ஸ்டான்போர்ட்… கேள்விப்பட்ட பெயரா இருக்குல்ல? இந்த பதிவை படிங்க. புரியும். http://rightmantra.com/?p=4229)
இவருக்கு கிடைத்துள்ள உதவித் தொகை எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு $66,000.
அவர்களின் கல்வி முறையையும் தேர்வு முறையும் மெச்சும் கார்த்திக், “என்னை போன்ற பார்வையற்ற மாணவர்களுக்கு உதவுவதற்கு என்றே அவர்கள் பல வழிமுறைகளை வகுத்துள்ளனர். தேர்வு எழுத நவீன வசதிகள் உண்டு!”
“செல்லரித்துப் போன இந்திய தேர்வு முறைகளை நிச்சயம் மாற்றவேண்டும். ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு படிக்க விரும்பும் பார்வையற்ற மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தேர்வு மற்றும் அட்மிஷன் விதிமுறைகளில் திருத்தம் செய்யவேண்டும்”
சயன்ஸ் மற்றும் கணித பிரிவில் இருந்து எனக்காக யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் நான் தேர்வை சுலபமாக பாஸ் செய்துவிடு அவர்கள் உதவக்கூடும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் எனக்கு தேர்வு எழுத ஒரு ஐ.ஐ.டி பேராசிரியரையோ அல்லது ஐ.ஐ.டி தேர்வு கண்காணிப்பாளரையோ கொடுங்கள். நான் சொல்ல சொல்ல அவர்கள் எழுதட்டும். அவர்களுக்கு வேண்டுமானால் நான் ஊதியம் கொடுத்துவிடுகிறேன்” என்று சொன்னேன். அதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள்.
என்றும் எப்போதும் திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தான். 2005 ல் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. என்ன சொல்வது ? எனக்கு வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் ஏற்படும் விதமாக பேசி எனக்குள் இருந்த ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியை தூண்டிவிட்டவர் அவர் தான்.
என்னுடைய பார்வை குறைபாட்டையும் நான் செய்துள்ள சாதனைகளையும் தெரிந்துகொண்டபோது அவர் சொன்னது இது தான். “It is better to have a vision (foresight), than merely have vision (eye sight).” அவருடைய வார்த்தைகளை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். (குறள் 427)
[pulledquote]”It is better to have a vision (foresight), than merely have vision (eye sight).” அவருடைய வார்த்தைகளை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.[/pulledquote]
வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட மறக்கமுடியாத பாடம் எது ?
நான் சிறுவயதில் இருக்கும்போது, ஒரு சிலர் என்னிடம், “உன்னிடம் குறைபாடு இருப்பதால் நீ படிக்கவோ தேர்வு எழுதவோ முடியாது.” என்றார்கள். ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒரு குறைபாடு இருக்கிறது என்பதை காலப்போக்கில் புரிந்துகொண்டேன்… குறைகள் இல்லாதவர் இந்த உலகில் இல்லை. நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வீக்னெஸ் உள்ளது.
ஒருவருடைய திறமைகளை மற்றொருவருடன் ஒப்பிடுவது மிகப் பெரிய தவறு. உடல் குறைபாடு இருக்கும் ஒரே காரணத்திற்காக காரணமாக ஒருவர் மீது நாம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவதும் தவறு. எங்களை போன்றவர்களின் குறைகளை பட்டியலிட்டு அதை ஆராய்ச்சி செய்வதற்கு பதில் – இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பாக அதிகாரத்திலிருப்பவர்கள் உணர்ந்து – எங்களைப் போன்றவர்களின் மேம்பாட்டிற்காக முயற்சிகள் எடுக்கவேண்டும்.
எங்கள் வாசகர்களுக்கு ஏதாவது செய்தி உண்டா?
ஒருவரை அவரது தோற்றத்தை வைத்து எடை போடுவதற்கு பதில் அவர்களது திறமை என்ன, அவர்களது லட்சியம் என்ன அவர்கள் ஏதோ நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள்.
நாம் விரும்பியபடி எதுவும் நடக்காதபோது, சோர்ந்துபோவது யதார்த்தம் தான். ஆனால் வெற்றி சுலபாக கிடைத்தால் அதன் மதிப்பும் அருமையும் நமக்கு தெரியாமல் போய்விடும்.
எப்போதெல்லாம் நீங்கள் கஷ்டத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் நல்ல விஷயங்களையும் பாசிட்டிவ்வான விஷயங்களையும் நினைக்க வேண்டும். கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை. இதை பழக்கிக்கொண்டால் வெற்றி எப்போதும் உங்கள் காலடியில்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)
[button size=”large” color=”purple”]நாம் விரும்பியபடி எதுவும் நடக்காதபோது, சோர்ந்துபோவது யதார்த்தம் தான். ஆனால் வெற்றி சுலபாக கிடைத்தால் அதன் மதிப்பும் அருமையும் நமக்கு தெரியாமல் போய்விடும். எப்போதெல்லாம் நீங்கள் கஷ்டத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் நல்ல விஷயங்களையும் பாசிட்டிவ்வான விஷயங்களையும் நினைக்க வேண்டும்.[/button]
குடும்பத்தைவிட்டு விலகி தனியாக எங்கோ ஒரு அயல்நாட்டில் இருக்கப்போவதை எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கு கார்த்திக் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“வீட்டை விட்டு பெற்றவர்களை விட்டு செல்வதை நினைத்தால் எனக்கு கொஞ்சம் பதட்டமாக தான் இருக்கிறது. ஆனால் ஐ.ஐ.டி.யில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைக்கும்போது ஒரு புது உத்வேகம் கிடைக்கிறது. அவர்கள் முடிவு தவறு என்பதை நான் நிரூபிப்பேன்.” என்று சூளுரைத்தார் இந்த கர்ம வீரர்.
படித்து முடித்தவுடன், இந்தியா திரும்பி இங்கிருக்கும் உளுத்துப்போன கல்விமுறைகளுக்கு எதிராக போராடப்போவதாக கூறியிருக்கிறார் கார்த்திக்.
இவர் நிச்சயம் சாதிப்பார் நண்பர்களே.
எந்த ஐ.ஐ.டி. இவரை நிராகரித்ததோ அதே ஐ.ஐ.டி க்கு இவர் இயக்குனராகும் நாள் தொலைவில் இல்லை!!
(Source : Rediff.com, Indiatimes.com)
========================================
Also check :
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2
========================================
கோவில் கோவிலா கும்பாபிஷேகம் பண்ணி, அன்ன தானம் முதலான தான தருமங்கள் செஞ்சி கோடிக்கனகக்கான இந்தியவர்கள் சேர்க்கும் புண்ணியத்தை விட அதிகமான புண்ணியத்தை அமெரிக்கா இது மூலம் சுலபமா சாதித்துவிட்டது. ஏன் பின்னே யூ.எஸ்.ல மட்டும் செல்வம் கொழிக்காது?
நம்ம ஆளுங்க அரைச்ச மாவையே அரைக்க சொன்னா நல்ல அரைப்பங்க. புதுசா எதையும் செய்ய மட்டங்க, இதுவே நம்ம கார்த்திக் சாவ்,ஒரு சிஎம் மகனா இருந்தா இதுக்காக நம்ம சட்டத்தையே மற்றீருப்பாங்க,இங்கு திறமைக்கு மதிப்பில்லை என்று நம்மாளுங்க அமெரிக்கா ஓட காரணம் இதுதான் சார்..
இவருக்குக் கண்ணில் வெளிச்சம் இல்லை ஆனால் உள்ளத்தில் பிரகாசமான வெளிச்சம் உண்டு. இந்தத் திறமையான இளைஞருக்கு வாய்ப்பு மறுக்கபடுவது நம் கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை வலிமையாக எடுத்துக்காட்டுகிறது. கல்வியை வெறும் மதிப்பெண்களாக மட்டுமே பார்க்கும் சமுதாயத்தில் நாம் இருக்கிறோம். துறை சார்ந்த அறிவு அவர்களுக்கு போதிக்கப்படுவது இல்லை. அதனால் அடிப்பப்டை விசயங்களில் கூட இன்றைய மாணவர்கள் தடுமாறுகிறார்கள். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். ஒவ்வொரு மாணவரின் தனித்திறமைகளை கண்டறிந்து அதை ஊக்குவிக்கும் வண்ணம் நம் கல்விமுறை மாற வேண்டும்.அப்போது தான் கணிதமேதை ராமானுஜம், ஜி.டி.நாயுடு போன்ற பல சாதனையாளர்களை இந்த நாடு உருவாக்க முடியும்.
—
கார்த்திக் சாவ்னி அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.. கார்த்திக் சாவ்னி போன்ற இன்னும் பலர் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் இந்தியா தலை நிமிரும் என்பதில் ஐயமில்லை.
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
Hats Off to Karthik…
Muyarchi Thiruvinai Akum…
Lesson to all of us…
கார்த்திக் சாவ்னி ஒரு சாதனை மனிதர். அவர் இந்தியாவில்தான் படிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. இவரது மதிப்பை அமெரிக்க உணர்ந்து அவரது மேற்படிப்பை தொடர வழி செய்திருக்கிறது. கார்த்திக் போன்றவர்களின் திறமைக்கும் உழைப்பிற்கும் மொழி மதம் நாடு போன்ற எல்லைகள் கிடையாது. இந்தியாவில் ஜாதி வோட்டு ஆட்சி நடக்கும் வரையில் மிகபெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. கார்த்திக் சாவ்னி போன்றவர்கள் அயல் நாடுகளுக்கு சென்று படிக்கவோ அல்லது வேலை செய்து சம்பாதிக்க சென்றால் அவர்களை வாழ்த்தி அனுப்புவோம். முடிந்தால் நம் நாட்டில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.
இந்த கலியுகத்தில் நல்லதுக்கு காலமில்லை என்பதை மற்றொருமுறை நிரூபித்திருக்கிறார்கள் !!!
இப்போதெல்லாம் கல்வி மற்றும் அதை கற்போரின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது !!!
பிறந்த குழந்தை தம் மழலை மொழி மாறாத போதே அதை பள்ளிக்கு அனுப்ப துடிக்கும் பெற்றோர் !!!
குழந்தைகளுக்கே உள்ள இயல்பான சுறுசுறுப்பு மற்றும் விளையாட்டுத்தனம் இவற்றை மறக்க செய்து தட்டு தடுமாறி நடக்கும் குழந்தைகளையும் அவர் தம் முதுகில் பொதி சுமப்பது போன்று புத்தக மூட்டைகளை சுமக்க செய்யும் பள்ளிகள் !!!
சிறு குழந்தைகளின் ஆரம்பகால பள்ளி படிப்பிற்கு பல ஆயிரம் வசூலிக்கும் வணிக நிறுவனமாக மாறிவிட்ட பள்ளிகளில் தமது சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளைகளை சேர்த்து அப்படிப்பை தொடர மாதா மாதம் கழுத்தை நெரிக்கும் வட்டிப்பணத்தை கொடுக்க முடியாமல் விழி பிதுங்கும் பெற்றோர் !!!
குழந்தை சற்று வளர்ந்து பள்ளி கல்லூரி என்று போக ஆரம்பித்து விட்டால் அவர் தம் பெற்றோர் பாடு திண்டாட்டம் தான் – வசதி படைத்தவர்கள் இதில் விதி விலக்கு !!!
இவை எல்லாவற்றையும் விட கொடுமை சாதியின் காரணமாகவும் உடலில் உள்ள குறைகள் காரணமாகவும் சக மாணவர்களாலும் சில சமையம் ஆசியர்களாலும் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகும் மாணவ மாணவிகளின் நிலை !!!
சோதனைகளை சாதனைகளாக மாற்ற தெரிந்த விவேகானந்தர் போன்ற மகான்கள் வாழ்ந்த இந்த பூமியில் நமது நண்பர் கார்த்திக் போன்ற கொள்கை வீரர்கள் பிறந்திருப்பது நமக்கு மகிழ்ச்சியே !!!
அவமானங்களையும் வெகுமானமாக கருதி ஒருமனதோடு இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சையம் என்பதற்கு வாழும் உதாரணமாக நமது நண்பர் கார்த்திக் திகழ்கிறார் !!!
இந்த உலகில் கருணை மனிதாபிமானம் ஒரு துளியேனும் மிச்சமிருக்குமானால் இந்த பதிவை பற்றியும் இதில் கூறப்பட்டுள்ள நண்பர் கார்த்திக் பற்றியும் கேள்விப்படும் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளும், கல்வியாளர்களும் , கல்வித்துறையை தன்னகத்தே கொண்டுள்ள அரசு நிர்வாகிகளும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த அரசும் நண்பர் கார்த்திக்கிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மற்றொரு மாணவ மாணவியர்க்கு ஏற்படாதவண்ணம் மாற்ற முயர்ச்சிக்கட்டும் !!! அவர்களால் நிச்சையம் முடியும் !!! மனமிருந்தால் மார்க்கம் !!!
திறமையை அங்கீகரிக்க மறுக்கும் தாய் நாட்டை காட்டிலும், அதனை ஊக்குவித்து சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுக்கும் அயல் நாட்டை பாராட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம் – இதை வரம் என்பதா சாபம் என்பதா?
நண்பர் கார்த்திக் அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட முயற்ச்சியில் வெற்றி பெற்று தமது இலக்கை விரைவில் அடையவும், வருங்காலத்தில் அவர் மேற்கொள்ள இருக்கும் தார்மீக போராட்டங்கள் நமது கல்வி முறையில் நல்லதொரு மாற்றங்களை கொண்டு வரும் என்ற நம்புவோம் !!!
எல்லாம் வல்ல இறைவா
உனது செல்ல குழந்தையான நண்பர் கார்த்திக் அவர்களையும் அவர் தம் குடும்பத்தையும் என்றென்றும் எப்போதும் துணை நின்று காத்து அருள் புரிய வேண்டுகிறோம் !!!
இந்த கர்மவீரர் சபதம் வெற்றி பெற நம் தளம் சார்பாக வாழ்த்துகள்.
சார்
நிச்சியமாக கல்வியில் ஒரு மற்றம் கண்டிப்பா வரணும்
மனப்பாடம் செய்யும் நிலை மாற வேண்டும்
பிள்ளைகளின் தனித்திறமை பர்திது அவர்களின் எழுல்பு தகுந்த மாதிரி சொல்லிதர வேண்டும்
நம் எதிர்கால சந்ததியினராவது நல்ல முறையில் டென்ஷன் இல்லாமல் படிக்கட்டும்
selvi
சுந்தர்ஜி,
மற்றுமொரு இளங்கோ உருவாகி கொண்டு இருகின்றார். நம் திறமையை அயல் நாட்டில் மட்டும் உணர்கின்றார்கள். ஆனால் நம் திறமையை வெளிபடுத்த நம் நாட்டில் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. அதனால்தான் அவர்கள் நம்மை வைத்து கொண்டு அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றார்கள். என்றுதான் நம் நாடு திருந்துமோ
////”ஒருவருடைய திறமைகளை மற்றொருவருடன் ஒப்பிடுவது மிகப் பெரிய தவறு. உடல் குறைபாடு இருக்கும் ஒரே காரணத்திற்காக காரணமாக ஒருவர் மீது நாம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவதும் தவறு. எங்களை போன்றவர்களின் குறைகளை பட்டியலிட்டு அதை ஆராய்ச்சி செய்வதற்கு பதில் – இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பாக அதிகாரத்திலிருப்பவர்கள் உணர்ந்து – எங்களைப் போன்றவர்களின் மேம்பாட்டிற்காக முயற்சிகள் எடுக்கவேண்டும்” என்ற கார்த்திக் சாவ்னியின் செய்தி அதிகார வர்க்கத்தினரின் பார்வைக்கு செல்லவேண்டும்.////
ஆனால் அவர்கள் தான் குருடர்களாக இருக்கிறார்களே !
சுந்தர் சார்,
திரு கார்த்திக் சவானியை பார்க்கும் பொழுது அவர் நம் நிஜ ஹீரோ இளங்கோ சார் நாபகம் வருகிறது. மற்றும் ஒரு மிக சிறப்பான பதிவு.
சாதிக்க பிறந்த திரு கார்த்திக் சாவனிக்கு ” ஆல் தி பெஸ்ட்”.
நன்றி
அருணோதய குமார். அ
தன்னம்பிக்கை நாயகன் கார்த்திக்கின் சாதனை அபாரமானது. நம் நாட்டில் திறமைக்கு மதிப்பு இல்லை. இந்த பதிவை படிக்கும் பொழுது திரு இளங்கோ அவர்களின் சாதனை ஞாபகத்திற்கு வருகிறது, சாதனைக்கு உடல் ஊனம் ஒரு தடை அல்ல என்பதை ஆனித்தரமாக நிரூபித்திருக்கும் கார்த்திக் கிற்கு ஒரு ராயல் solute .
//எந்த ஐ.ஐ.டி. இவரை நிராகரித்ததோ அதே ஐ.ஐ.டி க்கு இவர் இயக்குனராகும் நாள் தொலைவில் இல்லை!!// கண்டிப்பாக
நன்றி அழகிய பதிவிற்கு
உமா