Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

print
தான் செல்லும் சாலை வழியே யானைக்கூட்டம் ஒன்றை பார்க்கிறான் ஒருவன். யானைகளை பார்த்து அச்சப்பட்ட வேளையில், அவற்றின் கால்கள் மிக மெல்லிய ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறான். எந்நேரமும் அவை அந்த சங்கிலியை சுலபமாக அறுத்துக்கொண்டு  ஓடமுடியும் என்று அவனுக்கு தோன்றியது. அருகே அதன் பாகனும் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும் அவன் அச்சம் ஓரளவு நீங்கியது.

பாகனிடம் “இப்படி ஒரு மெலிசான சங்கிலியில் யானைகளை காட்டியிருக்கீங்களே… அதுக திடீர்னு அறுத்துகிட்டு ஓடினா என்னாகிறது?” என்று கவலையுடன் கேட்கிறான்.

“அவை குட்டிகளாக இருந்தபோது இதே மெல்லிய சங்கிலியால் தான் அவைகளை கட்டுவோம். அப்போது அவற்றுக்கு அந்த சங்கிலியே போதுமானதாக இருந்தது. ஆனால் அவைகள் வளரும்போது, அந்த சங்கிலியை தங்களால் அறுக்கவே முடியாது என்கிற மனோபாவத்தில் தான் வளர்ந்தன. எனவே தற்போது பன்மடங்கு பலத்துடன் அவை வளர்ந்துவிட்டபோதும் சங்கிலி பிணைப்பிலிருந்து விடுபட அவை முயற்சிக்கவேயில்லை. எனக்கும் வேறு சங்கிலி வாங்கும் அவசியமே இல்லாமல் போய்விட்டது!” என்றான்.

இந்த பதிலை கேட்டு அவன் ஆச்சரியப்பட்டான். எந்நேரமும் அவற்றால் தாங்கள் கட்டப்பட்டுள்ள தளைகளை அறுக்க முடியும் என்றாலும், தங்களால் முடியாது என்று நினைக்கும் ஒரே காரணத்தால் அவை அடிமை வாழ்வை வாழ்கின்றன என்று அவன் புரிந்துகொண்டான்.

இந்த யானைகளை போலத் தான் பலர் தங்கள் பலமும் தகுதியும் தங்களுக்கு தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள்.  முன்பு ஒரு முறை முயற்சித்து தோற்ற காரணத்தால் தம்மால் செய்யக்கூடிய எத்தனையோ மகத்தான விஷயங்களை செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். சூழ்நிலைகள் அடிமையாக்கியிருக்கும் ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.

எப்பொழுதே கிடைத்த தோல்வியை மனதில் வைத்து ஏன் மகத்தான வெற்றிகளை தவற விடவேண்டும்? தோல்வி என்பது வெற்றிக்கான படிகளில் ஒரு அங்கம். அதன் மீது காலை வைக்காது எவரும் வெற்றி என்னும் சிகரத்தின் மீது ஏறவே முடியாது.

மனித மனம் அளப்பரிய சக்தி கொண்டது. ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் அடையக்கூடிய சக்தியை தரவல்லது. எழுந்திருங்கள். துணிவோடு நில்லுங்கள். உங்களை சுற்றி பிணைக்கப்பட்டுள்ள தளைகளை அறுத்தெறியுங்கள். உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும். DON’T FORGET YOU ARE BORN TO WIN AND ALWAYS UNIQUE.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

[END]

9 thoughts on “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

  1. சரியானநேரத்தில் சுந்தர் ஜி,
    எனக்குள் இருந்த விவேகத்தை தட்டி எழுப்பிவிட்டார் .

    \\இந்த யானைகளை போலத் தான் பலர் தங்கள் பலமும் தகுதியும் தங்களுக்கு தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள். முன்பு ஒரு முறை முயற்சித்து தோற்ற காரணத்தால் தம்மால் செய்யக்கூடிய எத்தனையோ மகத்தான விஷயங்களை செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்\\.

    ==============================================================
    ஒருஆட்டு மந்தையில் ஒருபெண் சிங்கம் நுழைந்தது. பயந்துபோன ஆடுகள் சிதறி ஓடின. தாய்மை நிலையிலிருந்த அந்தப் பெண் சிங்கம் ஒரு குட்டியை பெற்றுப் போட்டு விட்டு இறந்து போனது.
    தாயை இழந்த சிங்கக் குட்டிக்கு ஆட்டுக் கூட்டம் அடைக்கலம் தந்து பாலூட்டி வளர்த்தன.
    ஆட்டுப்பாலைக் குடித்தும், புல் தின்றும், ஆடுகளோடு விளையாடி மே… மே… என்றும் கத்தியது.
    வீரமும் கர்ஜனையும் மறந்து செம்மறி ஆடாகவே தன்னை எண்ணி வந்தது.
    ஒரு நாள் ஒரு சிங்கம் ஆடுகளை வேட்டையாட வந்தது. எல்லா ஆடுகளும் பயந்து ஓடின. கூடவே குட்டிச் சிங்கமும் பயந்து ஓடுவதைக் கண்டது. வேட்டைச் சிங்கம் வேட்டையாடுவதை விட்டு விட்டு தன்னைப் போலிருந்த குட்டி சிங்கத்தை மட்டும் துரத்திப் பிடித்தது. சிங்க ஆடு நடுங்கியது.
    அதைப்பார்த்து சிங்கம் கேட்டது, நீ ஏன் என்னைக் கண்டு பயந்து ஓடுகிறாய், நீயும் என்னைப் போல வலிமையான சிங்கமல்லவா?

    சிங்க ஆடு மே.. மே… என்று கத்தியபடி பதில் சொன்னது“நான் செம்மறி ஆடு தானே…நான் எப்படி சிங்கமாவேன்” என்றது. தான் ஒரு சிங்கம் என்பதை அதற்கு உணர்த்த அந்தக் காட்டில் இருந்த ஒரு குளத்தின் அருகே இழுத்துச் சென்றது பெரியசிங்கம்.

    “இதோ பார் நீயும் சிங்கம், நானும் சிங்கம் தெரிகிறதா?” என்று கோபமாக கர்ஜித்துக்கொண்டே அதன் தலையை தண்ணீரில் தெரியும்படி கவிழ்த்துக் காட்டியது. “ஆமாம் நானும் சிங்கம்தான்” என்று தண்ணீரில் தன் நிழலைப் பார்த்த குட்டி சிங்கம் கூறியது.
    “ஆஹா! உனக்கு தன்னம்பிக்கை வந்து விட்டது” என்று சிங்கம் பலமாக கர்ஜித்தது. அதைப்பார்த்த சிங்க ஆடும் கர்ஜித்தது. அதன் புதிய கர்ஜனை காடு முழுவதும் எதிரொலித்தது.
    தான்ஒரு சிங்கம்தான் என்ற தன்னம்பிக்கை வந்ததால் அது செம்மறி ஆட்டுக் கூட்டத்தை விட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்தது.
    மனிதர்கள் தங்கள் சக்தியைப் புரிந்து கொள்ளாத வரை செம்மறி ஆடுகளைப் போல நடந்து கொள்கிறார்கள். புரிந்து கொண்டாலோ அப்போதே அவர்கள் சிங்கத்தைப் போலவே வலிமை உடையவர்கள் ஆகிறார்கள்.

    நாமும் சிங்கம் போல் கர்ஜித்தது ,வெற்றி என்ற வேட்டைக்கு
    தயாராகி விட்டோம் அல்லவா???????????

    1. மனோகரன் சார்.. தூள் கிளப்புறீங்க. பொருத்தமான பதிவில் பொருத்தமான கதை.
      நன்றி!!
      – சுந்தர்

  2. உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.
    “DON’T FORGET YOU ARE BORN TO WIN AND ALWAYS UNIQUE.”

    எங்களுக்கும் வெற்றி நிச்சயம் சாதிக்கும் நாள் விரைவில் ………………

    நன்றி

  3. சுந்தர் சார்
    அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு
    நிச்சயம் இந்த யானைகள் போலத்தான் தனக்குள் இருக்கும் திறமையை பலர் உணர்வதில்லை. மனோகர் சார் பொருத்தமாக கதை சொல்லி உள்ளார்.

  4. //மனித மனம் அளப்பரிய சக்தி கொண்டது. ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் அடையக்கூடிய சக்தியை தரவல்லது. எழுந்திருங்கள். துணிவோடு நில்லுங்கள். உங்களை சுற்றி பிணைக்கப்பட்டுள்ள தளைகளை அறுத்தெறியுங்கள். உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.//

    தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல பதிவு
    விளக்கு எரியும்போது அது அணையும் நேரத்தில் தூண்டிவிட்டால் நன்றாக எரியும் மனிதர்களுக்கும் அவ்வப்போது ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது,அது குருவாக இருக்கலாம்,அல்லது கடவுளாக இருக்கலாம். நம்ம மனோகர் சார் சொன்னதை போல ஆட்டு சிங்கத்திற்கு தன்னை யார் என்பதை அறிய ஒரு ஒரிஜினல் சிங்கம் தேவைப்பட்டது.

    இதற்க்கு நம் தளம் ஒரு சிறு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

    நன்றி ..

    தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல பதிவு

  5. சுந்தர் சார், மனோகர் சாரின் சிங்க கதை. ரைட் மந்த்ரவினால் வந்த எடுத்துக்காட்டு. நன்றி சுந்தர்.

  6. அருமையான பதிவு. அதற்கு ஏற்ற மனோஹரனின் கிளைக்கதை. கவிஞர் எழுதிய வரிகள் ஞாபகம் வருகிறது – எறும்பு தோலை உரித்து பார்க்க யானை வந்ததடா, என் இதய தோலை உரித்து பார்க்க ஞானம் வந்ததடா.

    நன்றி சுந்தர்

  7. சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கு சுறுசுறுப்பையும் உத்வேகத்தையும் கொடுக்ககூடிய அருமையான கதை !!!

    நம்பிக்கையோடு எந்த ஒரு காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்தோமேயானால் வெற்றிக்கனி வெகு தொலைவில் இல்லை என்பதற்கு இந்த கதை ஒரு நல்ல சான்று !!!

    முயல்வோம்
    முன்னேறுவோம்
    வெற்றி பெறுவோம்

    வாழ்க வளமுடன் !!!

  8. I am Shaken by this article.I felt as if this was written personally to me. Even at so many moments, of life, i feel that i have cheated myself with illusions like anxiety, fear, excusies and worries instead of making any action. I pledge from the bottom of my heart that this piece of invaluable information will tick my Mind and attitude, as well as others towards the path of Success..,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *