Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > “ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

print
சென்ற வருடம் ஒரு நாள் டி.எம்.எஸ். அவர்கள் நடித்த ‘பட்டினத்தார்’ மற்றும் ‘அருணகிரிநாதர்’ படத்தை வீட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்பதைவிட பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக ‘பட்டினத்தார்’ படத்தை பார்த்ததிலிருந்து  டி.எம்.எஸ். அவர்களை பார்க்கவேண்டும், அவரிடம் ஆசி பெறவேண்டும் என்ற உணர்வு என்னுள் பலமாக எழ ஆரம்பித்துவிட்டது. (‘பட்டினத்தார்’ படத்தை பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன்.)

இந்த முதுபெரும் கலைஞரை, இறை அடியாரை (90 வயது!) அவர் வாழும் காலகட்டத்தில் சந்தித்து ஆசி பெறவில்லை எனில் அது எனக்கு மிகப் பெரிய இழப்பு என்று தோன்றியது.

(‘பட்டினத்தார்’ படம் பார்க்கும் எவருக்கும் உடனே இவரை சந்திக்கவேண்டும், இவரிடம் ஆசி பெறவேண்டும் என்று தோன்றும்! நேரம் கிடைக்கும்போது ‘பட்டினத்தார்’ படத்தை  பார்க்கவும். ஒரிஜினல் டிவிடி, கடைகளில் கிடைக்கும்).

சந்திப்பின்போது ‘பட்டினத்தார்’ ஆலயம் பற்றி இவர் கூற கூற எனக்கு அங்கு செல்லும் ஆவல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ‘பட்டினத்தார்’ ஆலயம் உடனே செல்லும்படி எனக்கு திரு.டி.எம்.எஸ். அவர்கள் உத்தரவிட்டார். எனவே அடுத்த சில நாட்களில் திருவொற்றியூர் சென்று திருவொற்றீஸ்வரரையும் வடிவுடையம்மனையும் தரிசித்துவிட்டு பின்னர் ‘பட்டினத்தார்’ முக்தியடைந்த தலத்தில் அவருக்கு எழுப்பப்பட்டுள்ள ஆலயத்திற்கு சென்று அவரை தரிசித்தேன். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் பதிவினூடே நீங்கள் பார்ப்பது.

சென்னையில் இருப்பவர்களோ சென்னைக்கு வருபவர்களோ அவசியம் தரிசிக்கவேண்டிய ஒரு அற்புதமான இடம் இந்த பட்டினத்தார் கோவில்.

ஆசி பெறுவதே நோக்கம்

பேட்டி என்று இல்லாமல் அவரை சந்தித்து அவரிடம் ஆசி பெறுவதே எனது நோக்கமாக இருந்தது. அதற்காக 2012 பிப்ரவரி இறுதியில் நாம் அவரை தொடர்புகொண்டபோது அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். “அவர் தற்போது தான் மருத்தமனையிலிருந்து திரும்பி ஓய்வில் இருக்கிறார். மெல்ல குணமடைந்து வருகிறார். அடுத்த மாதம் கூப்பிடுங்கள். முடிந்தால் பார்க்கலாம்” என்று அவரது மகன் பால்ராஜ் நம்மிடம் கூறினார்.

நாம் ஏமாற்றமடைந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. சரியாக மார்ச் இறுதியில் மீண்டும் தொடர்புகொண்டோம். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தபடியால் இந்த முறை சற்று நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை ஃபாலோ செய்த பின்பு “நீங்க வாங்க சார்… இப்போ கொஞ்சம் நார்மலா இருக்கிறார் அப்பா. பேசலாம் அவர்கிட்டே !” என்றார் திரு.பால்ராஜ் நம்மிடம்.

அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நண்பர்கள் கண்ணன் வைரமணி மற்றும் விஜய் ஆனந்த ஆகியோருடன் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றோம்.

எங்கள் உரையாடல் துவங்கிய பின்னர் எங்களுடன் பேசப் பேச அவருக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.  ஒரு சில இடங்களில் அந்தந்த பாடல்களை அப்படியே பாடிக் காட்டினார். நாள் முழுவதும் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். இந்த வயதிலும், தன் குரல் மீது அவருக்கு இருக்கும் அபார நம்பிக்கை சற்றும் குறையவில்லை. தன்னம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறார்.

முருகனுக்கு இவருக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கி இவர் கூறியிருக்கும் சம்பவங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை. ‘பட்டினத்தார்’ திருக்கோவிலில் நடைபெற்றதாக கூறும் மற்றொரு நிகழ்ச்சி இவரது வாக்கிற்கு உள்ள வலிமையை நமக்கு உணர்த்துவதாகும். இந்த உரையாடலில் வெளிப்பட்டிருக்கும் பல விஷயங்கள் இதுவரை நீங்களோ வேறு எவருமோ கேள்விப்படாத விஷயங்கள் ஆகும். அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லவேண்டும்.

குடும்பத்தினர் ரசித்த சந்திப்பு

எங்கள் உரையாடலை அவரது மனைவி சுமித்ரா, மகன் பால்ராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் ஆவலாக ஒரு ஓரத்தில் அமர்ந்து ரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் இப்படி மீண்டும் உற்சாகமாக பேசுவதை இடையிடையே பாடுவதை பார்க்க பார்க்க அவர்களுக்கு பரம சந்தோஷம்.

நாம் இதுவரை எழுதிய பதிவுகளில் நமக்கு கடினமாகவும், எழுதுவதற்கு சவாலாகவும் அதிக நேரம் எடுத்துக்கொண்டதும் இது தான். அதே சமயம் சுவாரஸ்யமாகவும், ஆத்ம திருப்தியுடனும் இருந்ததும் இந்த பதிவு தான். எனவே நிதானமாக படித்து ரசிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இணைக்கப்பட்டுள்ள வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்க மறவாதீர்கள்!  அவை உங்கள் அனுபவத்தை மேலும் இனிமையாக்கும்!!!

கிடைப்பதற்க்கரிய வாய்ப்பு

மிகப் பெரிய ஊடகங்களுக்கு கூட கிடைப்பதற்க்கரிய இந்த வாய்ப்பு இந்த எளியவனுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவனின் கருணையே என்றால் மிகையாகாது!

சரி சந்திப்புக்குள் செல்வோமா?

காத்திருந்த சில நொடிகளில் வந்துவிட்டார் டி.எம்.எஸ். அவருக்கு வணக்கம் தெர்வித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். நமது விசிட்டிங் கார்டை அவருக்கு கொடுத்தேன். கண்ணாடி அணிந்து கார்டை நிதானமாக ஆராய்ந்தார்.

சந்திப்புக்கு தயாரானவர், “என்ன வேணும் உங்களுக்கு? நான் என்ன செய்யணும்?” என்றார்.

நாம் : தமிழ் திரையுலகின் முதுபெரும் கலைஞர் நீங்கள். உங்களோட திரையுலகப் பயணத்துல இருந்து நீங்க பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள், அனுபவங்கள் இதையெல்லாம் சொன்னீங்கன்னா… இப்போது உள்ள தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ‘பட்டினத்தார்’ & ‘அருணகிரிநாதர்’ ஆகிய படங்களில் நீங்கள் நடித்தது பற்றியும், முருகக் கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள பந்தத்தை பற்றியும் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறோம்.

(நாம் சொன்னதற்கு சற்று யோசனையில் ஆழ்ந்தார்!)

திரு. டி.எம்.எஸ். : “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்” அப்படின்னு கையை காலை ஆட்டிகிட்டே பாடுவேன். ட்ரூப்ல எல்லாரும் வாசிக்கிறதை மறந்துட்டு என்னையே பார்த்துக்கிட்டுருப்பாங்க.

என் பாட்டில் நடிப்பதற்கே நடிகர்களுக்கு பொதுவா ஒரு தயக்கம் உண்டு. சிவாஜியே அடிக்கடி, “இன்னும் எத்தனை மாதிரி பாட்டு பாடி எங்களை சோதனை பண்ணுவே நீ?” அப்படின்னு சொல்லி கோவிச்சிக்குவார். நான் பாடும் பாட்டுக்கள் எல்லாம் அப்படியிருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் நல்லா மியூசிக் பண்ணியிருப்பார், கண்ணதாசன் பிரமாதமா எழுதியிருப்பார், நான் உருகி உருகி பாடிடுவேன். அதற்கு ஈடுகொடுத்து நடிப்பது நடிகர்களுக்கு சவாலாக இருக்கும். உதாரணத்திற்கு ‘வியட்நாம் வீடு’ படத்தில் ஒரு பாட்டு வரும்… ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ அப்படின்னு. அதுக்கு நான் பாடின பாட்டை கேட்டு, “உனக்கு இதே வேலையா போச்சு. நீ பாட்டுக்கு பாடிட்டு போய்டுவே… அதுக்கு எத்த மாதிரி நான் நடிக்க வேண்டாமாய்யா? அப்போ தானே அது ஜனங்க மத்தியில அது எடுபடும். இந்த பாட்டுக்கு நடிக்க எனக்கு ஒரு வாரம் டயம் வேணும்”னு சொல்லிட்டு போய்டுவார்.

“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…..” (பாட்டை அப்படியே பாடிக் காட்டுகிறார்!)

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் Vs சிவாஜி ரசிகர்கள்

நாம் : இதுவரை ஆயிரக்கணக்கான கச்சேரிகள்ல பாடியிருப்பீங்க. உங்க கச்சேரிகளின்போது நடைபெற்ற சுவையான சம்பவங்கள் ஏதாவது உண்டா?

திரு. டி.எம்.எஸ். : இந்த கச்சேரிகள்ல நான் பாடும்போது எம்.ஜி.ஆர். பாட்டை  பாடும்போது “சிவாஜி பாட்டை பாடுங்க”ன்னு சிவாஜி ரசிகர்கள் எல்லாம் கத்துவாங்க. சிவாஜி பாட்டை பாடும்போது “எம்.ஜி.ஆர். பாட்டை பாடுங்க”ன்னு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கத்துவாங்க. அதுனால அந்த கார்னர்ல இருந்து இந்த கார்னர் வரைக்கும் போலீஸ் பாதுகாப்போட தான் என் கச்சேரி எப்பவுமே நடக்கும்.

ரசிகர்களோட இந்த ATTITUDE ன் காரணமா எனக்கு கோபம் வரும். இருந்தாலும் நிலைமையை சமாளிப்பேன். சமயோசிதம்… அந்த நேரத்துக்கு எப்படி பேசனும்னு எனக்கு தெரியும்.

கச்சேரிகள்ல  என்னோட பாட்டை கேட்பவர்கள், “சார்… நாங்க இன்ன இடத்துல கச்சேரி வெச்சிருக்கோம். நீங்க அங்கே வந்து பாடனும்”னு கேட்டுக்குவாங்க. ஆனா அங்க போனா இந்தப் போராட்டம் தான் சார். “எங்க பாட்டை பாடுங்க… உங்க பாட்டை பாடுங்க”ன்னு இந்த எம்.ஜி.ஆர். –  சிவாஜி ரசிகர்களோட கூச்சல் தான்…. பார்க்க தமாஷா இருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்மொழி பாடல்

நாம் : நீண்ட நாள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்மொழி பாடலுக்கு பாடியது பற்றி?

திரு. டி.எம்.எஸ். : கருணாநிதி ஐயா ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’னு  கவிதை எழுதினாங்க. கடற்கரையில் அதை எடுத்தாங்க. நிறைய பாடகர்கள் அதில் கலந்துகொண்டு பாடினார்கள். அதில் நானும் பாடினேன் என்பதில் ரொம்ப மகிழ்ச்சி எனக்கு.

பட்டினத்தார் திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை

நாம் : இன்றைய இசையுலகத்துக்கு மூத்தவரா உங்களோட செய்தி என்ன?

திரு. டி.எம்.எஸ். : என்னுடைய ரசிகர்களை வாழ்த்துவது போல உங்களை வாழ்த்துகிறேன்.

நாம் : ‘பைரவி’ படத்துல நீங்க ‘நண்டூருது நரியூருது’ பாட்டு பாடினீங்க. ரஜினி சாருக்காக நீங்க முதன் முதல்ல பாடின அந்தப் பாட்டை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

திரு. டி.எம்.எஸ். : மிகச் சிறந்த நடிகர் அவர். அந்த பாடலுக்கு இயக்குனர் சொல்லிக்கொடுத்ததை விட, என் கற்பனையையும் சேர்த்து பாடினேன். ரஜினி ஒரு படி மேல் சென்று, என்னுடைய பாடலை நன்கு உள் வாங்கி, நான் பாடிய ஸ்டைலிலேயே ரொம்ப அற்புதமாக பாடி நடித்திருப்பார்.

எம்.எஸ்.வி. கூட ஒரு முறை ரஜினி கிட்டே சொன்னாரு… “உங்க குரலுக்கு ஏற்ற மாதிரி டி.எம்.எஸ். பாடியிருக்கிறார்” என்று.  அதற்கு பதிலளித்த ரஜினி, “அதில் வியப்பில்லை. ஆனா  டி.எம்.எஸ். சாரின் வாய்சுக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறதுக்கு நான் பாடுபடனும்” என்றாராம்.

திரு. டி.எம்.எஸ். : “எனக்கு இருக்கும் ஒரு சாமர்த்தியம் அது. எம்.ஜி.ஆருக்கு பாடினேன்னா  தொண்டை மற்றும் இதயத்திலிருந்து குரல் எழுப்பி பாடவேண்டும். சிவாஜிக்கு பாடனும்னா (ABDOMEN) அடி வயிற்றிலிருந்து பாடவேண்டும்.”

(உடனே சிவாஜி பாடுவது போன்று ஒரு மாடுலேஷனை செய்து பாடிக் காண்பிக்கிறார்.)

நாம் : “ரஜினி சாருக்கு எப்படி பாடுனீங்க?”

திரு. டி.எம்.எஸ். : “அந்த பாட்டை பாடுறதுக்கு முன்னாடி ரஜினி கிட்டே கொஞ்சம் நேரம் பேச்சு கொடுத்து அவர் குரலை நல்லா உள் வாங்கினேன். பின்னர் அதே மாதிரி பாடிக் காட்டினேன்.”

(நண்டூருது நரியூருது பாடலை பாடிக்கட்டுகிறார்.)

“எல்லா ஸ்டைல்லயும் பாடுவேன். வெஸ்டர்ன் ஸ்டைல்ல கூட பாடுவேன். இந்த மாதிரி வாய்ஸ் எங்களுக்கு கூட இல்லையே” அப்படின்னு வெஸ்டர்ன் பாடகர்கள் கூட வியந்து பாராட்டியிருக்காங்க.”

(உடனே ஒரு ஆங்கிலப் பாடலை பாடிக் காட்டினார்.)

நாம் : ‘ராணா’ பூஜைக்கு நீங்க வந்தீங்க… அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

திரு. டி.எம்.எஸ். : “ரஜினி சார் திடீர்னு கூப்பிட்டார். காலைல 8 மணிக்கு பூஜை. மறக்காம ஏ.வி.எம். வந்துடுங்க. நீங்க தான் குத்துவிளக்கு ஏற்றி வெச்சி தொடங்கி வெக்கணும்.” அப்படின்னார்.

“கண்டிப்பா  வர்றேன்”னு சொன்னேன். “நீங்க எப்படி இமயலமலைக்கு போய் தியானம் பண்றீங்களோ அதே போல நானும் தினமும் தியானம் பண்றேன்”னு சொன்னேன். அதுக்கு “எனக்கு தெரியும். கண்டிப்பா நீங்க தியானம் பண்ணுவீங்கன்னு. ஏன்னா … நீங்க ஒரு சித்தர் என்பது எனக்கு தெரியும்”னு சொன்னார்.

என்னை ரஜினி சார் எப்பவுமே ‘சித்தர்’ன்னு தான் கூப்பிடுவார். பூஜைக்கு வந்திருந்தவங்க எல்லார்க்கிட்டயும் என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். “டி.எம்.எஸ். ஏன் இவ்ளோ நல்லா பாடுகிறார்… ஏன் அவர் குரல் நன்றாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர் ஒரு சித்தர். அதனால தான் நினைத்த குரலெல்லாம் அவரால் கொண்டு வரமுடிகிறது” அப்படின்னு சொன்னார். எல்லாரும் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணினாங்க.

நாம் : ரஜினி அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது பற்றி?

திரு. டி.எம்.எஸ். : “ரஜினிக்கு இப்போ நடக்கிறது நல்ல டயம். இந்த உடம்புக்கு முடியாம போனது கூட எதுக்குன்னா அவர் நல்லா பரிமளிக்கிறதுக்கு தான். இனிமே அவருக்கு எந்த நோயும் வராது. நான் அப்போவே ரஜினி ஐயாவுக்கு.ஆசீர்வாதம் பண்ணினேன், “உங்களுக்கு எந்த நேயம் வராதுய்யா உங்களோட நல்ல குணத்துக்கு” அப்படின்னு. அவர் நிச்சயம் தீர்க்காயுசா ஆரோக்கியமா இருப்பார்.

நீங்க வேணும்னா பாருங்க… கொஞ்ச நாள்ல அவர் ஜம்முனு ஆகி, ஸ்டைலா ஒரு படத்துல ஆக்ட் பண்ணுவாரு. காமிரா முன்னாடி அப்படி ஸ்டைலா வந்து நிப்பாரு. அவரை மாதிரி ஆக்ட் பண்றதுக்கு வேற யாரும் இல்லே என்கிற சவால் வாங்கணும்.

நாம் : உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசி பலித்துவிட்டது என்றே தான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆகையால் தான் சென்ற ஆண்டு படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது இரண்டாம் கட்ட ‘கோச்சடையான்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். உங்களை சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். டி.எம்.எஸ்.அவர்களை சந்திக்கவேண்டும் என்று நான் இங்கு வரவில்லை. அந்த பட்டினத்தாரையே சந்திக்கவேண்டும் என்று தான் வந்தேன்.

நாம் : ரஜினி உங்களின் மிகப் பெரிய ரசிகராமே?

திரு. டி.எம்.எஸ். : பெங்களூர்ல இருக்குற கண்ணாடி மாளிகைல நான் பாடுறேன்னு கேள்விப்பட்டவுடனே, எப்படியோ ரஜினி வந்துட்டாரு. அவருக்கு அப்போ தமிழ் தெரியாது. கண்ணாடி மாளிகைல நான் பாடுறேன்னு விளம்பரம் பண்ணியிருக்காங்க. அதை பாத்தவரு, ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா அங்கே வந்தாரு. அங்கே நல்ல கூட்டம். “யார்  பாடுறாங்க? என்ன சமாச்சாரம்?” இதெல்லாம் இன்னொரு முறை அங்கே இருந்தவங்க கிட்டே விசாரிச்சிருக்காரு. அதுக்கு “டி.எம்.சௌந்தர்ராஜன் பாடுறார். எம்.எஸ்.விஸ்வநாதன் மியூசிக்” அப்படின்னு சொன்னவுடனே, ரஜினி அதுக்கு “எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பாடின  டி.எம்.சௌந்தர்ராஜன்  சாரா ? அப்போ கட்டாயம் முன்னாடி போய் உட்கார்ந்துட வேண்டியது தான்” அப்படின்னு சொல்லி எப்படியோ (மன்னன்!) முன்னால போய் உட்கார்ந்து கேட்பாராம். நெடுநேரம் கேட்பாராம். நண்பர்கள் கிட்டேயெல்லாம்… “என்ன ஒரு வாய்ஸ்… எவ்ளோ சுகமாயிருக்கு கேட்கிறதுக்கு!” அப்படின்னு சொல்லி சொல்லி ஆச்சரியப்படுவாராம்”

அதுமட்டுமா, “நான் ஒரு படத்துல ஹீரோவா ஆக்ட் பண்ணும்போது, முதல் பாட்டு இவரைத் தான் பாடவைப்பேன்” அப்படின்னு சொல்வாராம். அதே மாதிரி பின்னாளில் அமைஞ்சது.  ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அவர். கண்டக்டராக இருந்தவர். நம்மைப் போல பாடகர்கள் பாடுவதை எல்லாம் மேடைகளில் கேட்டு சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டவர் ரஜினி.

நாம் : ஆன்மீக ரீதியா உங்களுக்கும் அவருக்கு நெருங்கிய ஒற்றுமை உண்டு போல?

திரு. டி.எம்.எஸ். : நிச்சயமா. அது மட்டுமில்லாம அவர் செய்ற யோகத்திலும் எனக்கு பங்குண்டு. அங்கே இமய மலையில் இவர் பார்க்குற ரிஷிகள் எல்லாம், “டி.எம்.சௌந்தரராஜன் சித்தர் என்ன பண்றார்?”ன்னு கேட்பாங்களாம். ரஜினியே என் கிட்டே சொன்னார் இதை. “உங்க பேரையே அவங்க சொல்லிகிட்டுருக்காங்க… என்ன விஷயம் சித்தரே?” அப்படின்னு ரஜினி சிரிச்சிகிட்டே கேட்டாரு என் கிட்டே. சித்தர்களின் அருள் மட்டும் ஒருவருக்கா வாய்த்துவிட்டால்…. அதை விட சிறப்பு வேறு எதுவும் கிடையாது. ரஜினி ஐயாவை பொறுத்தவரை அவருக்கு எல்லாம் தெரியும். சௌந்தர்ராஜன் இப்போ என்ன சொல்றாருன்னு கூட அவருக்கு தெரியும். அவர் பண்ற மேடிடேஷனுக்கு அவ்ளோ பவர்.

கமலாம்மா இறந்தப்போ சிவாஜி வீட்டுக்கு போயிருந்தேன். ரஜினி என்னை பார்த்ததும் ஓடி வந்து கூட்டிகிட்டு போனாரு. வந்திருந்தவங்க எல்லாம் ரூமுக்குள்ளே உட்கார்ந்திருந்தாங்க. என்னை பார்த்ததும் ஓடி வந்து உள்ளே கூட்டிகிட்டு போனாரு ரஜினி.

நாம் : ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்துல ‘அம்மா நீ சுமந்த பிள்ளை’ பாட்டை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…?

திரு. டி.எம்.எஸ். : தேவர் பிலிம்ஸ்க்காக நான் பாட்டின் பாட்டு அது. சின்னப்பா தேவர் என் கிட்டே சொன்னாரு, “யோவ்… அம்மா நீ சுமந்த பிள்ளைனு அவருக்காக நீ பாடப் போறே. நீ பாடுற பாட்டை கேட்டு எல்லாரும் கதறிடனும்”ன்னு. அதே மாதிரி அந்த பாட்டு ரொம்ப உருக்கமா வந்துச்சு.

நாம் : “இப்போ அந்த பாட்டை கேட்டா கூட எங்களுக்கு கண்ல தண்ணி வந்துடும் சார்”

திரு. டி.எம்.எஸ். : “இந்த வாய்ஸை டி.எம்.எஸ். கிட்டே தான் கேட்க முடியும். வேற யார் கிட்டயும் கேட்க முடியாது”ன்னு ரஜினி சொல்லுவார். என் மேல பிரியப்பட்டு தானே கண்ணாடி மாளிகைக்கு வந்து பாட்டு கேட்டாரு. (மீண்டும் ஒரு கணம் பழைய நினைவுகளில் மூழுகிறார்!)

URL : http://youtu.be/a4QpoNCSXfs

…………………………………………………………………………………………

டி.எம்.எஸ். அவர்களிடம் நாம் பெற்ற ஆசி…!

திரு. டி.எம்.எஸ். அவர்களுடனான நமது சந்திப்பு குறித்த பதிவின் முதல் பாகத்தை படித்திருப்பீர்கள். அதில் நாம் குறிப்பிட்டபடி நமது நோக்கம் ஆசி பெறுவதே. ஆனால், நாம் சென்றபோது திரு. டி.எம்.எஸ். மிகவும் உற்சாகமாக எங்களுடன் பேசியபடியால், அவரிடம் சற்று எங்களால் அளவளாவ முடிந்தது.

முன்னதாக அவரிடம் நாம் ஆசிபெற எண்ணிய போது தனது மனைவி திருமதி.சுமித்ரா அவர்களையும் அழைத்து, இருவரும் சேர்ந்து என்னை ஆசீர்வதித்தனர். அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றேன். என்னுடைய தனிப்பட்ட மற்றும் பொதுவான சில வேண்டுதல்களை அவரிடம் தெரிவித்து அவை சீக்கிரம் நிறைவேற ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டேன். “ஓம் சரவணவ பவ” என்று திருமுருகனின் சடாஷர மந்திரத்தை கூறியபடி ஆசீர்வதித்தார்.

நண்பர்கள் கண்ணன் வைரமணி மற்றும் விஜய் ஆனந்த் இருவரும் அடுத்தடுத்து அவர்களிடம் ஆசிபெற்றனர். திரு. டி.எம்.எஸ். மற்றும் அவரது மனைவி, பிறகு அவரது மகன் என தனித்தனியே ஒவ்வொருவரும் புகைப்படமெடுத்துக் கொண்டோம்.

முருகன் திருவருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று கூறி வாழ்த்தினார். நமது தளத்தின் சார்பாக இதுவரை எத்தனையோ சந்திப்புக்களில் எத்தனையோ முக்கியஸ்தர்களை நான் பார்த்துவிட்டேன். ஆனால், இந்த சந்திப்பு உண்மையில் இறைவன் எனக்கு அளித்த பரிசு என்றால் மிகையாகாது.

நாம் : “சூப்பர் ஸ்டார் தனது பிறந்தநாளையொட்டி கொடுத்த விருந்துக்கு நீங்கள் சென்று வந்த அனுபவத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?”

(அவரது வீட்டு வரவேற்பறையில், சூப்பர் ஸ்டாருடன் இவர் இதர முக்கியப் பிரமுகர்களுடனும் இண்டஸ்ட்ரி சீனியர்களுடனும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து…)

திரு. டி.எம்.எஸ். : “ஆமா… பாலச்சந்தர் அவருக்கு ‘ரஜினி’னு பேர் வெச்சு 35 வருஷங்கள் நிறைவடைந்ததை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி அது. ரஜினியே கூப்பிட்டிருந்தாரு. போயிருந்தேன். அம்மா சாப்பாடு போட்டாங்க அந்த பங்க்ஷன்ல. (லதா ரஜினியை குறிப்பிடுகிறார்). அம்மாவே சமைச்சு அவங்க கையால சாப்பாடு போட்டாங்க. நான்  சாப்பிட்டுக்கிட்டுருக்கும்போது ஐயா வந்துட்டார். நான் அள்ளி அள்ளி சாப்பிட்டுக்கிட்டுருக்கேன். “சாப்பாடு எப்படியிருக்கு”ன்னு கேட்டார்.  நான்,  “சாப்பிடுறதை பார்த்தாலே தெரியலே”? அப்படின்னேன். அந்தளவு பிரமாதமான சாப்பாடு.

நாம் : நீங்க மிகப் பெரிய முருக பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்க கேட்டதெல்லாம் முருகப் பெருமான் கொடுத்திருக்கிறார் என்பதும் தெரியும். முருகனுக்கும் உங்களுக்கும் உள்ள அந்த பந்தத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். உங்களை முருகன் சந்தோஷமாக வைத்திருக்கிறார் என்று கருதுகிறீர்களா ஐயா?

திரு. டி.எம்.எஸ். : முருகன் எப்படின்னா… என் பிறவி தெய்வம் அவர். நான் பிறந்திருப்பதே அவரால் தான். என் அப்பா அம்மா தான் என்னை பெற்றார்கள் என்றாலும் அதற்க்கும் ஒரு அருள் வேண்டுமல்லவா. “நீ நல்லா பாடுவே… உலகமெல்லாம் உன்னை போற்றுவார்கள்!” என்று எனக்கு வரமளித்த தெய்வம் முருகன் தான். “சித்தர்கள் எல்லாம் உன்னை பாராட்டுவார்கள்!” என்று கூறி என்னை முருகனின் பக்தராக படைத்தார்.

முருகனுடைய பாட்டுக்களை எல்லாம் மெய்மறந்து பாடுவேன். ஆடியன்ஸ் எல்லாரும் தாங்கள் பாடுவதை போல உணர்வார்கள். அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை படைத்திருக்கிறார். இனி எல்லாருடைய இதயத்திலும்  டி.எம்.எஸ். இருப்பார். அனைவரும் என்னை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அதே போன்று தான் ரஜினிக்கும். இதெல்லாம் தெய்வத்தின் அருள். இது பற்றி நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. தெய்வம் எப்படி வந்து காப்பாற்றும் என்றால், ஏதோ ஒரு வடிவத்தில் வந்து காப்பாற்றும். நாம் அதை காண முடியாது.

நாம் : முருக பக்தரான நீங்கள் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது என்ன நினைப்பீர்கள்?

திரு. டி.எம்.எஸ். : எனக்கு உடம்பு சரியில்லாம் போகும்போதெல்லாம், முருகனை கேட்பேன்… “ஏன் சாமி எத்துனை பாட்டு உங்க மேல பாடியிருப்பேன்? என் மேல உங்களுக்கு கருணை இல்லையா? இப்படி வியாதி வந்து படுக்குறதுக்காகவா என்னை இத்துனை நல்ல  பாடல்கள் எல்லாம் பாட வெச்சீங்க?”ன்னு கேட்பேன். ஒரு வாரத்துல கம்ப்ளீட்டா குணமாகி வீட்டுக்கு வந்துடுவேன். அவனோட கருணை தான் எல்லாமே. என் மனசுல நான் அழுதா அவன்  அழுதது போல உணர்ந்தான் என் முருகன். அதே போன்று தான் ரஜினிக்கும். அவருக்கு எந்த கோளாறு வந்தாலும், கொஞ்ச நாள் இருந்து பிறகு காணமல் போய்விடும். அது தான் என்னுடைய வாக்கு. அந்த வாக்கு குணமாக்கிவிடும் கவலைப் படாதீங்க.

நாம் : ‘பட்டினத்தார்’  படத்தை பார்த்தால் எங்களுக்கு இந்த உலகத்தின் மீது உள்ள பற்று போயே போய்விடுகிறது. அதில் பட்டினத்தாராகவே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

திரு. டி.எம்.எஸ். : நான் நடிச்ச ‘பட்டினத்தார்’  & ‘அருணகிரிநாதர்’  ஆகிய படங்களில் தான் என்னுடைய ஒரிஜினல் வாய்ஸை நீங்கள் கேட்கலாம். மத்த படங்களில் பிறருக்காக நைஸ் செஞ்சு பாடுவேன். ஆனா, நான் நடிச்ச படங்களில் தான் என்னோட உண்மையான குரலில் பேசி பாடியிருப்பேன்.

(ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி …. பாடலை பாடிக் காட்டுகிறார். இன்றெல்லாம் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.)



திரு. டி.எம்.எஸ். :
இந்த படங்களிலெல்லாம் நடிக்க வாய்ப்புக்கள் என்னை தேடி வந்தன. “ஐயா… நீங்க தான் இதுக்கு பொருத்தமானவர். நீங்க தான் நடிக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்கள். நானும் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்தேன். வாய்ப்புக்களை தேடி நான் போனதில்லை. என்னை தேடி தான் அத்துனை வாய்ப்புகளும் வந்தன.

நாம் : ‘அருணகிரிநாதர்’ படம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?

திரு. டி.எம்.எஸ். : ‘அருணகிரிநாதர்’  படம் டி.ஆர்.ராமண்ணா டைரக்ட் பண்ணின படம். அவரோட மனைவியும் படத்துல நடிச்சிருந்தாங்க. என்னோட அக்காவா வருவாங்க. படத்துல நான் ஒரு காமாந்தகாரனா வருவேன். கட்டின பெண்டாட்டியும் என்னை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு தாசி வீடே கதியா கிடப்பேன். கடைசியில தொழு நோய் வரும். முருகன் வந்து என்னை தடுதாட்கொள்வான்.

முத்தைத் தரு பத்தித் திருநகை – ‘அருணகிரிநாதர்’ பாடல் – Video

(Must Watch)

Video URL : http://youtu.be/2vRkCV3symk

நாம் : இயல்பாகவே நீங்க முருக பக்தர். அந்தப் படத்தை நடிச்சதுக்கு எப்படி உணர்ந்தீங்க?

திரு. டி.எம்.எஸ். : நல்லா ஒன்றிப் போய் நடிச்சேன். அருணகிரிநாதரகவே மாறிடுவேன். படம் முழுக்க அப்படித் தான் இருப்பேன்.

“அக்கா… அக்கா…. என்னை பாருக்கா…. ”

(வேசிகளிடம் சென்று தொழு நோய் பீடிக்கப்பட்டு, பார்ப்போர் அருவருக்கும் நிலையில், தன் சகோதரியிடம் பேசும் வசனம் இது. ‘அருணகிரிநாதர்’ படத்தில் டச்சிங்கான ஒரு காட்சி இது. அதை அப்படியே எங்கள் முன் நடித்து காண்பித்தார் திரு.டி.எம்.எஸ்.)

‘அருணகிரிநாதர்’ படத்துல நடிக்கும்போது, தாசிப் பெண்கள் கிட்டே கையை பிடிச்சி ஆடிப் பாடுற மாதிரி சீன்ல எல்லாம் நடிக்கும்போது, அந்த பெண்களே ஆச்சரியப்படுவாங்க. “சாமிக்கு பாடத் தான் தெரியும்னு நினைச்சோம். இதெல்லாம் கூட தெரியுமா?” அப்படின்னு.

படத்துல எல்லாம் பின்னணி பாடும்போது இந்த டான்ஸ் பாட்டுக்கு தானே பாடுறேன். So, அதுனால எனக்கு ஈசியா  அதெல்லாம் வந்துடுச்சு. பாட்டு ஞானம் இல்லேன்னா… பாடகனாக முடியாது… ஒரு கலைஞனாக முடியாது. ஏழு வயசுல இருந்து பாடிக்கிட்டுருக்கேன். எந்தப் பாட்டு கேட்டாலும் அதை அப்படியே ரிப்பீட் பண்ணி பாடுவேன்.

நாம் : ‘அருணகிரிநாதர்’ மற்றும் ‘பட்டினத்தார்’ படங்களில் நீங்கள் நடித்தது உண்மையில் நீங்கள் செய்த மிகப் பெரிய பாக்கியம் & முருகனின் அருள். சரி… நிஜத்திலும் முருகனின் அருள் உங்களுக்கு கிட்டியது உண்டா? அது தொடர்பான சம்பவங்கள்?

திரு. டி.எம்.எஸ். :
நான் இன்னைக்கு செய்யாத வேலையெல்லாம் செஞ்சிகிட்டுருக்கேன்யா. அதுக்கு காரணம் அந்த முருகன் தான். நான் நினைக்கிறதெல்லாம் அவன் செய்வான்.

ஒரு கோவில் பூசாரி ஒருத்தர் என்னோட ரசிகர். அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. அவரோட மனைவி என் கால்ல வந்து விழுந்தாங்க. “ஐயா என்னோட புருஷனை காப்பாத்துங்க”ன்னு சொல்லி. நான் உடனே முருகன் கிட்டே சொன்னேன்…. “முருகா… இவங்க என்னை நம்பி வந்து என் கால்ல விழுந்துட்டாங்க. நான் உன்  கால்ல  விழுறேன். நீ இவங்களை காப்பாத்து.” அப்படின்னேன். என்ன ஆச்சரியம்? அவருக்கு குணமாகி இன்னைக்கும் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கார்.

(உடனே நம் தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை இவர் மூலமாக முருகப் பெருமானிடம் வைத்தோம். அதற்கு அவர்….)

திரு. டி.எம்.எஸ். : நீங்க முருகன் கிட்டே சொல்லுங்க… “உங்களை நிறைய தடவை கும்பிட வேண்டாம்… ஒரே ஒரு தடவை கும்பிட்டா போதும்… டி.எம்.எஸ். சொன்னாரு அப்படின்னு!”

‘ஓம் சரவணா பவ முருகா’ன்னு மனசு நிறைஞ்சு சொல்லுங்க. மத்தது எல்லாம் அவன் பார்த்துப்பான். அவனுக்கு சத்தியம் தான் ரொம்ப முக்கியம். அது ஒன்னுக்கு தான் முருகன் மயங்குவான். உங்களோட வில் பவர் ரொம்ப முக்கியம்.

நாம் : திருவொற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் கோவிலுக்கு போயிருக்கிறீர்களா ஐயா?

(பட்டினத்தார் தன் இறுதிக் காலத்தில் சமாதியடைந்த இடம் தான் இந்த திருக்கோவில். சுற்றுச் சுவரும் பாதுகாப்பும் இல்லாமல் இருந்த இந்த கோவில், சமீபத்தில் வடநாட்டு செல்வந்தர் ஒருவரால் நிதியளிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.)

திரு. டி.எம்.எஸ். : என்னோட ரசிகர் விஜயராஜ் என்பவர் எடுத்துகிட்டுருக்குற படத்துக்காக (டாக்குமெண்டரி) போனவருஷம் அங்கே போயிருந்தேன். அப்போ ‘பட்டினத்தார்’ திருக்கோவிலுக்கு போயிருந்தேன். கோவிலுக்கு வெளியே கருவாடும் மீனும் வித்துக்கிட்டுருந்துச்சு. எனக்கு ஒரு மாதிரி இருந்தது. “இந்த நிலையை மாற்றக்கூடாதா?”ன்னு பட்டினத்தார்கிட்டே வேண்டிகிட்டேன்.

கோவிலுக்கு நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சதும் அங்கே மீனவ குப்பம் மற்றும் குடிசைகள்ல இருக்குற பெண்கள் எல்லாம் ஓடி வந்தாங்க. ‘பட்டினத்தார் சாமி வந்திருக்காரு… பட்டினத்தார் சாமி வந்திருக்காரு’னு… வந்து என் கால்ல விழுந்து வணங்கினாங்க. “ஐயா… எங்க வீட்டுக்காரங்க எல்லாம் தினம் குடிச்சிட்டு வந்து வீட்டுல கலாட்டா பண்றாங்க. சம்பாத்தியத்தை வீட்டுக்கு கொடுக்குறதில்லே. குடிச்சே அழிக்கிறாங்க…. நீங்க தான் இதுக்கு ஒரு வழி சொல்லனும்”னு கேட்டுகிட்டாங்க.

நான் சொன்னேன், “அம்மா யார் யார் வீட்டுல புருஷன்மார்கள் குடிச்சிட்டு வர்றாங்களோ அவங்களை வீட்டுல சேர்க்காதீங்க. ‘குடிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ளே விட முடியாது’னு தைரியமா சொல்லுங்க. அவங்க தானா வழிக்கு வருவாங்க” அப்படின்னேன். நான் சொன்னது நல்லாவே வொர்க்-அவுட் ஆச்சு. பெண்டாட்டிகள் வீட்டுல சேர்க்கலைன்னதும் புருஷன்கள் குடிக்கிறதை நிறுத்தினாங்க. ஒழுங்கா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க. வீட்டுக்கு சம்பளத்தை முழுசா கொடுக்குறாங்க. இப்போ அங்கே பூவும் பழமும் தான் விக்கிறாங்க. கருவாட்டு வாசனை அடிச்ச இடத்துல இப்போ பூ வாசனை. எல்லாம் பட்டினத்தார் சுவாமிகளோட கருணை தான்.

நாம் : குடிப்பவர்களை திருத்துவது அத்துனை சுலபமில்லை. குடிப்பழக்கத்தால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உண்டு. ஆனால் உங்களின் இந்த திருவாக்கால் அப்பகுதி மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த திருப்பம்… என்ன சொல்ல உங்களுக்குள் உறைந்திருக்கும் முருகப் பெருமானின் அற்புதமேயன்றி  வேறு என்னவாக இருக்க முடியும்?

திரு.டி.எம்.எஸ். தம்பதி சமேதராக நம்மை ஆசீர்வதிக்கிறார்

(டி.எம்.எஸ் அவர்களிடம் கிடைத்த ஆசி, சுந்தர் என்கிற தனிப்பட்ட மனிதனுக்கு கிடைத்தது அல்ல. நமது தளத்திற்கும் நமது முயற்சிகளுக்கும் சற்று அட்வான்சாக முருகப் பெருமானிடமே கிடைத்த ஆசி என்று கருத வேண்டுகிறேன்.)

நாம் : இறுதியாக எங்களுக்கும் எங்கள் தள வாசகர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

(கேட்டது தான் தாமதம். கீழ்கண்ட பாடலை பாடியே காண்பித்துவிட்டார்.)

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு – ‘பட்டினத்தார்’ பாடல் VIDEO
(MUST WATCH)

URL : https://www.youtube.com/watch?v=woFXB49fvWU

———————————————————————————-

ஒன்றென்றிரு 

‘பட்டினத்தார்’ பாடல் வரிகள்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்பென்றிரு

பசித்தோர் முகம் பார்
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்கமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு

மனமே உனக்கு உபதேசம் இதே….

நாட்டமென்றே இரு சத்குரு பாதத்தை நம்பு
பொம்மாலாட்டம் என்றே இரு
பொல்லா  உடலை பொம்மாலாட்டம் என்றே இரு
சுற்றத்தை அடர்ந்த சந்தைக் கூட்டம் என்று இரு
சுற்றத்தை
வாழ்வை குடம் கவிழ் நீர் ஓட்டம் என்றே இரு

மனமே உனக்கு உபதேசம் இதே..

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு

==========================================================
சந்திப்பு நிறைவடையும் நேரம் வந்ததையொட்டி மீண்டும்
அவரது கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றுவிட்டு நன்றி கூறிவிட்டு திரும்பினோம்.
==========================================================

இன்று அவர் நம்மிடையே இல்லையென்றாலும் அவர் பாடிய காலத்தால் அழியா பாடல்கள் நம்முடன் என்றும் வாழும்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர் குடியிருந்த பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து எழுப்பியுள்ள சுவரொட்டியை பார்த்தேன்.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”

பாடிய வரிகளுக்கு ஏற்ப, வாழ்ந்த உத்தமர் அவர்!!

[END]

10 thoughts on ““ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

  1. திரு.டி.எம்.எஸ். தம்பதி சமேதராக தாங்கள் வாங்கிய ஆசீர்வதம் உரையாடல் மிகவும் அருமை …..

    பாராட்டுக்கள் …….

  2. மலரும் நினைவுகள்.

    மறக்கமுடியாத சந்திப்பு….

  3. என் வாழ்வில் அய்யாவை சந்தித்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்…அந்த வயதிலும், அவரது குரலில் இருந்த கம்பீரமும், உணர்ச்சியும் இனி யாருக்கும் அமையாது…! “அம்மா நீ சுமந்த பிள்ளை” பாடலை அவர் பாடிக்காட்டும் பொது நாங்கள் அனைவருமே உணர்ச்சி பொங்கக் கேட்டுக் கொண்டிருந்தது நெகிழ்வான நிகழ்வு…! இன்றும் அந்தப் பாடலை அவர் பாடிக்காட்டிய விதமும் குரலும் என் காதுகளில் ஒலிக்கும் போது இனம் புரியா உணர்வில் என் மனம் தவிக்கிறது….!

    அய்யாவின் ஆன்மா அந்த முருகப் பெருமானின் திருவடிகளில் சேரட்டும்…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  4. உண்மையிலேயே திரு. டி.எம்.எஸ். அவர்களின் ரசிகன் நான்.அவர்களின் கணீர் என்ற குரல் கருத்துள்ள பாடல் என சொல்லிக்கொண்டே போகலாம்,அவரைப்போன்று ஒரு மனிதர் கண்டிப்பாக இனி கிடைக்கபோவது இல்லை.ஆனால் இந்த பதிவை அவரின் மரணத்திற்குப்பின் வெளியிட்டு கண்ணீர் கலங்க வைத்துவிட்டீர்..படித்த எங்களுக்கே இப்படி என்றால் அவருடன் பேட்டி எடுத்த உங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கும் என நினைக்கின்றேன்..

  5. நீங்க அவர்கிட்ட பேசினது கிடைத்தற்கரிய வாய்ப்பு தானே சுந்தர்.. நாங்களே அவர்கிட்ட பேசினா மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு.
    அவரது ஆன்மா, அவரது முருகனின் திருவடிகளில் சாந்தி அடைய நாமும் அவரிடம் வேண்டுவோம்.

  6. மலரும் நினைவுகள் – என்றென்றும் நினைவில் பசுமையாய் இருப்பவை !!!

    சித்தரை சந்தித்து ஆசி பெற்ற நீங்களும் உங்கள் மூலமாக அறிய பல நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொண்ட நாங்களும் பாக்கியசாலிகளே !!!

    காலத்தால் அழியாத பல பாடல்கள் என்று சொல்வதை காட்டிலும் பாடங்களை நமக்கு அளித்து சென்ற சித்தர் அவர்கள் என்றென்றும் நம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார் !!!

  7. ///‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ அப்படின்னு. அதுக்கு நான் பாடின பாட்டை கேட்டு, “உனக்கு இதே வேலையா போச்சு. நீ பாட்டுக்கு பாடிட்டு போய்டுவே… அதுக்கு எத்த மாதிரி நான் நடிக்க வேண்டாமாய்யா? அப்போ தானே அது ஜனங்க மத்தியில அது எடுபடும். இந்த பாட்டுக்கு நடிக்க எனக்கு ஒரு வாரம் டயம் வேணும்”னு சொல்லிட்டு போய்டுவார்.////

    நடிகர் திலகம் அவர்களுக்கே திணறல் கொடுத்த பாடகர். பதிவை படிக்கும் போதே எழுத்துக்களை கண்ணீர் மறைத்தது.

    ////அடர்ந்த சந்தைக் கூட்டம் என்று இரு
    சுற்றத்தை
    வாழ்வை குடம் கவிழ் நீர் ஓட்டம் என்றே இரு மனமே///

    என்ற வார்த்தைகளில் பல அர்த்தங்கள் உள்ளது.

  8. சுந்தர்ஜி,
    வணக்கம்,
    உரிய நேரத்தில்
    டி.எம்.எஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம் தங்கள் உயரிய பண்பின் சிறப்பை உணர்விக்கிறது.
    1950-1980 ஒலிச்சாதனங்களின் வளர்ச்சியும் திரைப்பாடல்கள் மற்றும் இசைத்துறயின் அதீத வளர்ச்சியும் பட்டிதொட்டி முதல் உலகின் சகல பாகங்களும் அதி வேகமாக ஊடுருவிய அந்த காலகட்டமே தமிழ் உலகுக்கு டிஎம்எஸ் ஸின் கணீரென்ற குரல் அறிமுகமாகி ஆழப்பதிந்தது.அவருடைய அளவற்ற முருகன் பாமாலைகள்
    இன்றளவும் மனதில் இனிமையாகஒலிக்கிறது.
    திரைப்பாடல்கள் சொல்லவே வேண்டாம் சிவாஜி எம்ஜிஆர் போன்ற முன்னணி நாயக்ர்கள் தங்கள் குரலில் பாடியது போல் பிரமிப்பாக இருக்கும்.அவருடைய ஆற்றல் எல்லாராலும் புரிய முடியாத ஒன்று.எத்தனை பேர் வந்தாலும் அவர் அவரே.

    தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். நேரில் சந்தித்து ஆசி பெற்று உள்ளீர்கள். மொத்தத்தில் நாங்கள் நேரில் சந்தித்ததை போன்ற feel கொண்டு வந்து விட்டீர்கள்.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *