Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

print
ரசிம்ம ஜெயந்தி தொடர்பான இரண்டாம் பதிவு இது. இந்த பதிவை சென்ற ஆண்டே நாம் அளித்திருந்தோம். இன்று, நரசிம்ம ஜெயந்தியையொட்டி மீண்டும் அளிக்கிறோம்.

இந்த கதைக்காக இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்திருப்பவர் ரமீஸ் என்னும் இஸ்லாமிய அன்பர். ஓவியக்கல்லூரி மாணவர். நமது தளத்தின் ஓவியர் இவர் தான். அவருக்கு என் நன்றி!!

(நமது நரசிம்ம ஜெயந்தி அனுபவம் பற்றிய பதிவு விரைவில்!)

நினைத்ததை அடையவேண்டுமா? வழிகாட்டுகிறான் ஒரு வேடன்!!

பக்தியெனும் பாதையில் செம்மையாக செல்வோர் பலரை அகந்தை என்னும் அகழி குறுக்கிட்டு வீழ்த்திவிடுவது வாடிக்கை. அதை வெற்றிகரமாக தாண்டுகிறவர் மட்டுமே இறையருளுக்கு  பாத்திரமாக முடியும். புராணங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் பல சம்பவங்கள் இதை உணர்த்தியிருக்கின்றன.

“ஒரு உன்னத லட்சியத்தின் மீது நீ கவனம் வைத்து வைத்துவிட்டால், உன் உடல், பொருள, ஆவி என அனைத்தும் அதற்கு அர்பணித்துவிடு. நீ விரும்பியது ஒரு நாள் உனக்கு கிடைக்காமல் போகாது” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நம்மால் சாதிக்க முடியாதது என்று எதுவும் உண்டா? அண்டசராசரங்களையும் கிடுகிடுக்க வைத்த நரசிம்ம மூர்த்தி, இதோ ஒரு வேடனுக்கு கட்டுண்ட கதையை படியுங்கள். உங்களுக்கே புரியும்.

ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர். கங்கை ஆற்றின் ஓரம் ஒரு முறை ஆதிசங்கரர் நின்று கொண்டிருக்கையில் கரையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்பதை காண்கிறார். தனது சீடனை “உடனே வா” என்று அழைக்கிறார்.

குருநாதர் அழைக்கிறாரே என்று எதை பற்றியும் கவலைப்படாது அப்படியே ஆற்றின் மீது கால் வைத்து நீர் மேல் நடக்க ஆரம்பித்துவிட்டார் பத்மபாதர். என்ன ஆச்சரியம் அவரது குருபக்திக்கு கட்டுப்பட்டு, கங்காதேவி அவர் ஒவ்வொரு முறை பாதத்தை எடுத்துவைக்கும்போதும் ஒரு தாமரை மலரை தோன்றச் செய்தாள். அதன் மீது நடந்து வந்துவிட்டார் பத்மபாதர்.

பிறகு தான் தெரிந்தது தான் தாமரை பூக்கள் மீது நடந்து வந்தது. “எல்லாம்…. குருநாதரின் மகிமை” என்று மெய்சிலிர்த்து ஆதி சங்கரரின் கால்களில் வீழ்ந்தார். அது முதல் தான் அவருக்கு ‘பத்மபாதர்’ என்று பெயர் ஏற்பட்டது.

மிக தீவிர நரசிம்ம பக்தரான இவருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. ஆவல் கடைசியில் வைராக்கியமானது. எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு எய்து காட்டில் கடும் தவமிருந்தார்.

ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்துகொள்கிறான்.

“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.

“என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”.

“அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.

“நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்”.

“நரசிம்மமா? அப்படின்னா என்ன?” வேடன் புரியாது கேட்கிறான்.

“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்! இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். “இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிக்கொண்டார்.

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது.

“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! கந்தா… அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு + அர்பணிப்பு கண்டு அந்த ஸ்ரீ மன் நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானார்.

“ஆகா! மாட்டிகிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான். வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றது.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.

“சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”.

பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பது தான் தெரிந்தது.

“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய் சிரித்தார்.

“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” வேடன் கூறுகிறான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது.

“பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய். தவிர ஆணவமும் கொண்டாய்….உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார். அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.

ஆதிசங்கரரின் வராலற்றில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது. பல நூல்களில் வெளிவந்துள்ளது.

படித்தீர்களா?

இந்த சம்பவம் உணர்த்தும் நீதி அளப்பரியது. நீங்கள் உணர்ந்த நீதிகளை கொஞ்சம் பட்டியிலிடுங்களேன்….

நன்றி…!!

 

8 thoughts on “அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

  1. கடவுளை அடைய வேதம் மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் படித்தும் ,அதில் பண்டிதனாக இருந்தாலும் ,கடவுள் மீது கடுகளவேனும் அவநம்பிக்கை கொண்டிருந்தால் கடவுள் தரிஷனம் /அனுக்கிரஹம் கிடைக்காது .
    அதே வேளையில் படிப்பறிவே இல்லாதவனும் ,கடவுளை வணக்கும் முறை கூட தெரியாதவனுக்கும் கடவுள் அவர்களின் நாமத்தை உச்சரிக்ககூட தெரியாதவனுக்கும் கடவுள் காட்சி தந்திருக்கிறார் . மேலே சொன்னதின் விளக்கம் இதோ 1. பாஞ்சாலி ,கௌரவர் சபையில் அனைவரின் முன்னே துட்சாதனனால் துகில் உரியப்படும் பொழுது முதலில் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே வைத்தபடி துட்சாதனன் சேலை உருவவிடாமல் தடுத்தபடி ,கிருஷ்ணா ,கிருஷ்ணா யென்று கதறினாள். ஆனால் கண்ணன் வரவில்லை. ஆனால் எப்பொழுது கண்ணா சரணம் என்று கைகளை தலை மேல் தூக்கி கண்ணனை வணங்கினளோ பின்புதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது .ஆம் ,கண்ணனின் அருளால் பாஞ்சாலியின் ஒற்றை சேலை வளர ஆரம்பித்தது .கண்ணன் அதுவரை தாமதம் செய்தான். காரணம் எந்த அவநம்பிக்கையும் இன்றி சரண் அடைந்தவர்களை கடவுள் கைவிட மாட்டார் .

    2. கண்ணப்ப நாயனார் கதையில் ,அவர் தன் கால்களால் இறைவனின் கண் இருக்கும் இடம் ( அப்போது இரத்தம் வழிந்துகொண்டிருக்கும் ) வைத்து , அதை தடுக்க தன்னுடைய மற்றொரு கண்ணையும் வைக்கும் முயற்சியில் செய்ததால் இறைவன் அதனை தவறாக நினைக்கவில்லை . அவனுக்கு காட்சி தந்து நாயன்மார்கள் 64 பேரில் ஒருவராக உயர்த்தினர் இறைவன்.ஆதலால் சிவலிங்கம் மேல் கால் வைத்தது குற்றம் என இறைவன் நினைக்கவில்லை. மற்றும் சபிக்கவும் இல்லை. மாறாக இதை பக்தியில் தன்னை வணங்கும் முறையாக தான் கடவுள் எடுத்துக்கொண்டார் .
    நன்றி சுந்தர்ஜி

  2. உண்மையான பக்திக்கு அவர் கண்டிப்பாக வருவர் !!

    பிரகலாத ப்ரியன்னே போற்றி !!!

  3. அருமையான கதை !!!

    உள்ளம் உருக
    ஒரே சிந்தனையில்
    பலனை எதிர்பாராமல்
    நம் மனதின் பாரத்தை எல்லாம் அவன் திருவடிகளில் சமர்பித்து
    பரிபூரண சரணாகதி அடைந்தால் கல்லுக்கே கருணை காட்டும் அந்த பரம்பொருள் நமக்கு கருணை காட்டாமல் போய்விடுவாரா என்ன ?

  4. Amazing story and art!!
    Emphasizes again that the LORD is more concerned with character and not reputation.!!thats why HE IS THE ALMIGHTY!!
    Proves the fact that “FAITH IS GOD”..

    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  5. பக்திக்கு கடவுள் கண்டிப்பாக காட்சி கொடுப்பார்

  6. சொல்லி வருவதில்லை பக்தி.
    தாயிடம் வைப்பது பாசம்.குருவிடம் வைப்பது பக்தி.நண்பனிடம் வைப்பது நட்பு.
    இப்படி ஒவ்வொரு உறவுக்கும் இந்த உலகில் ஒரு பெயர் உண்டு.
    ஆனால் நாம் கடவுளிடம் கொண்டுள்ள பக்தியை பாசம், காதல், நேசம், நட்பு என எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அதில் உண்மையை மட்டுமே அவர் நம்மிடம் எதிர் பார்க்கிறார்.
    கடவுள் பக்தியை யாரும் வரையறை செய்ய முடியாது.

  7. நம் பக்தி உண்மையாக இருக்குமானால் இறைவனை நேரடியாக காணலாம் என்பதற்கு இந்த கதையே சாட்சி

    superb article

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *