Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > நடக்க முடியாது இருந்த குழந்தையை நடக்க வைத்த தெய்வம்!

நடக்க முடியாது இருந்த குழந்தையை நடக்க வைத்த தெய்வம்!

print
டும் அலுவல் காரணமாக கடந்த சில நாட்களாக பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை. அலுவலகத்தில் ஒரு முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளபடியால், கூடுதல் நேரம் செலவிட்டு அதை முடிக்க வேண்டியிருக்கிறது. வார இறுதியில் வெளியூர் பயணம் வேறு இருக்கிறது. அதற்குள் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் அளிக்க முயற்சிக்கிறேன்.

பதிவெழுத முடியாவிட்டாலும் உங்கள் அனைவருக்கும் சௌக்கியத்தையும் சந்தோஷத்தை தரக்கூடிய செயல் ஒன்றை கடந்த வார இறுதியில் நண்பர்களின் உதவியோடு செய்திருக்கிறோம்.

‘பிரேமவாசம்’ – ஆதரவற்ற, ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பரமாரிப்பு இல்லத்திற்கு, நம் தளம் சார்பாக பள்ளிச் சீருடைகள் (முதல் கட்டம் – First Slot) வாங்கி தந்திருக்கிறோம். அதை அவர்களிடம் ஒப்படைப்பதை ஞாயிறன்று மாலை ஒரு எளிமையான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தோம். ஞாயிறு மாலை என்பதால் அப்படியே நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையையும் அங்கேயே அக்குழுந்தந்தைகள் முன்னிலையிலேயே செய்வது என்று தீர்மானித்து, அவர்களிடம் அதற்கு அனுமதி பெற்று பிரார்த்தனை செய்தாகிவிட்டது.

(நண்பர் சந்திரசேகரன் குழந்தைகளுக்கு பேட்மிண்டன் பேட் வழங்குகிறார்.)

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று  சொல்வார்கள். எந்த வித ஆதரவும் இன்றி, நிற்கதியாய் விடப்பட்டுள்ள இக்குழந்தைகள், நம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்த அந்த வினாடிகள் என்னால் மறக்கமுடியாதது.

அதுமட்டுமல்ல இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்த திரு.சந்திரசேகரன் அவர்களும் வந்திருந்தார்கள். அவருக்கு மட்டுமல்ல, இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியிருந்தவர்களுக்கும் சேர்த்து அவர்கள் அனைவரின் பெயர்களையும் அக்குழுந்தைகள் முன்னிலையில் உரக்க படித்து பிரார்த்தனை செய்தோம். அப்போது நடைபெற்ற சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்து அடுத்து வரும் பதிவில் தெரிவிக்கிறேன். தொடர்ந்து சீருடைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளுக்கு விளையாட பேட்மிண்டன் செட் தரப்பட்டது. பேட் உயரம் கூட இல்லாத குட்டி பையன் ஒருவன் எனக்கு தான் முதலில் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக்கொண்டது கொள்ளை சுவாரஸ்யம். அவன் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம் பாருங்கள்!

சீருடைகள் முதல் தவணை மட்டுமே தற்போது வாங்கி தந்திருக்கிறோம். இதற்கே ரூ.32,000/- ஆகிவிட்டது. இன்னும் இரண்டு பள்ளிகளின் சீருடைகள் வாங்கித் தரவேண்டும் இந்த தொண்டில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் விரைந்து நம்மை தொடர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு அவகாசம் குறைவாக இருக்கிறது. RAW MATERIAL மட்டும் நாம் வாங்கித் தருகிறோம். அங்கே இல்லத்தில் இருப்பவர்களை வைத்து அவர்கள் தைத்துக்கொள்கிறார்கள்.

(சீருடை வாங்க உதவியவர்கள் விபரம் மற்றும் நிகழ்ச்சியின் படங்கள் உள்ளிட்டவைகளை அடக்கி விரைவில் பதிவளிக்கிறேன்).

இப்போதைக்கு மகா பெரியவா குறித்து திரு.சுவாமிநாதன் அவர்கள் அவர்கள் எழுதி விற்பனையில் சாதனை படைத்து வரும் ‘மகா பெரியவா’ என்ற நூலிலிருந்து ஒரு பக்தரின் அனுபவத்தை தருகிறேன்.

ஒரு விஷயம் மட்டும் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். மகா பெரியவா மனிதர் அல்ல. மனிதர் உருவில் நம்மை கடாக்ஷிக்க வந்த பரம் பொருள். அதே சமயம் மனிதனாக பிறவி எடுத்துவிட்டபடியால் யுக தர்மத்திற்கு கட்டு பட்டு அதற்குரிய நியாய தர்மங்களையும் அனுஷ்டித்து வந்த மகா புருஷர். அவரது அவதார நோக்கம் பாமரருக்கும் இறை நம்பிக்கை ஏற்பட்டு அவர்களை ஆன்மீகப் பாதையில் கொண்டு செல்ல வந்த புண்ணியர். இல்லாவிட்டால் அவர் மறைந்து 20 ஆண்டுகள் கழித்தும் அவரது மகிமைகளை படித்து உருகுவோமா? இணையத்தில் நேரத்தை வீணடிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்க, இது போன்ற பதிவுகளை பகிர்ந்து கொண்டிருப்போமா ?

குழந்தைக்கு பெரியவா அருளிய பிரசாதம்!

இரண்டரை வயது வரை நடக்காமலேயே இருந்த ஒரு குழந்தை, மகா பெரியவா ஆசி பெற்று நடக்க ஆரம்பித்த கதை இது.

பிறந்த குழந்தை வாய் திறந்து மழலை மொழி பேசாதா என்பதே தாய் உட்பட அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், குழந்தை பிறந்ததும் தத்தித் தவழ்ந்து நடக்காமலே இருந்தால் எப்படி இருக்கும்? அது எத்தனை பெரிய துயரம்! அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்?!

இரண்டரை வயது வரை நடக்காமலேயே & உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே தரையில் தத்தித் தத்தி நகர்ந்துகொண்டிருந்தது அந்தக் குழந்தை. பெயர் சுப்பிரமணியன். நடக்கவேண்டிய வயது வந்த பிறகும் குழந்தை நடக்காமலே இருந்தால் எந்தத் தாய்தான் பரிதவித்துப் போகமாட்டாள்? சுப்பிரமணியனின் நிலையைப் பார்த்த புவனேஸ்வரியும் அப்படித்தான் பரிதவித்துப் போனார்.

அரசுப் பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய மனைவியான ராஜமும் பேரனின் இந்த நிலை குறித்து ரொம்பவே கவலைப்பட்டனர். தங்கள் மகள் வயிற்றுப் பேரனான சுப்பிரமணியனுக்கு நேர்ந்த இந்த அவலம் தாத்தா மற்றும் பாட்டியைத் தடுமாற வைத்தது. ‘பேரன் சரியாக வேண்டுமே’ என்பதுதான் அவர்களின் கவலையாக இருந்தது.

‘‘பூர்வ ஜன்ம கர்மாவா இருக்கும். அதனாலதான் அவன் இப்படிப் பொறந்திருக்கான். நிறைய கோயில்களுக்கு அவனைக் கூட்டிட்டுப் போய் பிரார்த்தனை பண்ணு. பரிகாரம் செய்’’ என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார் நண்பர் ஒருவர். அதன்படி பல கோயில்களுக்கும் போய் தெய்வத்தின் சந்நிதிகளில் பிரார்த்தனையையும் வைத்தார்.

மருத்துவத் துறையில் சுப்பிரமணியனை ‘க்யூர்’ செய்ய இப்படி ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார் என்று எவராவது தகவல் சொன்னால் போதும்… அடுத்த நாளே அப்பாயின்ட்மென்ட் வாங்கி அந்த டாக்டரிடத்தில் இருப்பார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியன் எழுந்து நடக்க வேண்டும் என்பதற்காக சின்ஸியரான இந்தத் தாத்தா பார்க்காத மருத்துவர் இல்லை; செய்யாத சிகிச்சை இல்லை.

மருத்துவர்களாலேயே ‘இதுதான் பிரச்னை’ என்று ஆணித்தரமாக எதையும் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஒரு டாக்டர்… அவருக்கு அடுத்து இன்னொரு டாக்டர்… என்று நாட்கள் நகர்ந்தனவே தவிர, நல்ல சிகிச்சை இல்லை; சுப்பிரமணியனின் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இல்லை. சிகிச்சையின் பொருட்டு பொருட்செலவும் அதிகமானது.

‘‘அவன் நடக்க மாட்டேங்கிறான்னு அப்படியே விட்டுடாதே… நீ பாட்டுக்கு அவனை நிக்க வெச்சு நடக்கறதுக்கு உண்டான முயற்சிகள்ல தொடர்ந்து ஈடுபட்டுண்டே இரு. ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் உன் பேரன் இதே நிலையிலயே இருந்துட்டான்னா & அதாவது நடக்காமவே இருந்துட்டான்னா பிற்காலத்துல உம் பாடு இன்னும் சிரமமாகிப் போய்விடும்’’ என்று கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் எச்சரிக்கை என்ற பெயரில் பயமுறுத்தியது வேறு, அவரது குடும்பத்தினரை ஏகத்துக்கும் களேபரப்படுத்திவிட்டது. எனவே, அலுவலக நேரம் தவிர, தான் வீட்டில் இருக்கும் நேரங்களில் பேரன் சுப்பிரமணியனைத் தூக்கி நிற்க வைப்பார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், குழந்தையின் இளம் கால்கள் தரையில் நிற்காமல் வளைந்து, மடிந்து தடுமாறும். சட்டென்று பேலன்ஸ் சரிந்து கீழே விழும் பேரனைக் கைத்தாங்கலாக அரவணைத்துக்கொள்வார் கிருஷ்ணமூர்த்தி.

ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக நண்பர் ஒருவர், ‘‘ஏம்ப்பா கிட்டு… ஒரு நாள் காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளைப் பாரு. குழந்தைக்கு அவரோட ஆசி கிடைச்சா எல்லாம் சரியா போயிடும். கூட்டிண்டு போய்ப் பாரேன்’’ என்று அனுசரணையாகச் சொன்னார்.

மனைவி ராஜத்திடம் இந்த விஷயத்தைச் சொல்ல… ‘‘கண்டிப்பா போயிட்டு வருவோம். கண்கண்ட அந்த தெய்வத்தோட பார்வை இவன் மேல விழுந்தா, ஒருவேளை எல்லாம் சரியாயிடும்னு தோண்றது’’ என்று மனைவி ராஜமும் தன் பங்குக்குச் சொல்ல… ஒரு நாள் வாடகை காரை அமர்த்திக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார்கள்.

அது ஒரு கோடை விடுமுறைக் காலம். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு விட்டதால், குடும்பத்தோடு பலரும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தனர். தங்கள் ஊரில் இருந்து கிட்டத்தட்ட ஒரு பிக்னிக் போல் புறப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்துவிட்டு, அப்படியே ஸ்ரீமடத்துக்கும் பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார்கள்.

காஞ்சி மடமே மனிதத் தலைகளால் நிரம்பியதுபோல் காணப்பட்டது. கூட்டத்தினரிடையே ஒருவாறு ஊர்ந்து, நீந்தி மகா பெரியவா அமர்ந்து அருட்காட்சி தந்துகொண்டிருக்கும் சந்நிதானத்தை அடைந்தனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர். பேரன் சுப்பிரமணியனைத் தன் இடுப்பில் தூக்கி வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. ஏகத்துக்கும் காணப்பட்ட கூட்டம் வேறு சுப்பிரமணியனை ஹிம்சை செய்தது போலும். விடாமல் அழுதுகொண்டே இருந்தான். தாய் புவனேஸ்வரியும் பாட்டி ராஜமும், பெரியவா சந்நிதானத்தைக் காட்டி, ‘‘அங்கே பார், உம்மாச்சித் தாத்தா. அழக்கூடாது. அவரைக் கும்புட்டுக்கோ’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

அன்று மகா பெரியவா மௌனத்தில் இருந்தார். எவரிடத்திலும் எதுவும் பேசவில்லை. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் தன் அந்தரங்கக் காரியதரிசிகளிடம் சைகையின் மூலம் சில விஷயங்களைக் கேட்டறிந்தார். மற்றபடி தன் முன் வந்து செல்லும் பக்தர்களின் குறிப்பறிந்து பிரசாதத்தையும் திருக்கரங்களால் ஆசியையும் வழங்கிக்கொண்டிருந்தது அந்தப் பரப்பிரம்மம்.

கூட்டம் வேறு அதிகமாக இருந்ததால், பெரியவா தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்களை விரைவாக அங்கிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள் சீடர்கள்.

மகனை மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முன் ஆசி பெற வந்தவர்கள், கல்லூரி அட்மிஷன் கிடைக்க வேண்டுமே என்கிற பிரார்த்தனையுடன் வந்த பக்தர்கள், திருமணத்துக்கு அழைப்பிதழை அவரது சந்நிதானத்தில் வைத்து அனுக்ரஹம் வேண்டி வந்தவர்கள் என்று திரளான கூட்டம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருப்பதுபோல்தான் பட்டது கிருஷ்ணமூர்த்திக்கு. தரிசனம் முடிந்து பத்துப் பேர் வெளியேறினால், இருபது பேர் வந்து புதிதாகச் சேர்ந்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தியின் மனதுக்குப் பட்டது & கூட்டமே இல்லாமல் இருக்கும் ஒரு தினத்தில் வந்து மகா பெரியவாளிடம் இவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி, ஆசியை வேண்டிப் பெற்றிருக்கலாமே என்று! ஆனால், பெரியவாளின் அனுக்ரஹம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ நாம கோஷத்தை மனதுக்குள் முணுமுணுத்தபடியே ‘கருணை தெய்வத்தின் திருப்பார்வை பேரன் மேல் விழுந்து, அவன் நல்லபடியாக நடக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொண்டே வரிசையில் நடந்து கொண்டிருந்தார் ராஜம். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்ற புவனேஸ்வரியும் தன் தாயைப் பின்தொடர்ந்து நடந்தார்.

பெரியவாளின் அருகே வந்து நின்றபோது, பரவசப்பட்டுத்தான் போனார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியனைக் கீழே இறக்கித் தரையில் அமர வைத்தார். பிறகு, நமஸ்கரிப்பது போன்ற பாவனையில் அவனையும் குப்புறப் படுக்க வைத்து, தானும் கீழே விழுந்து நமஸ்கரித்தார். இவரைத் தொடர்ந்து ராஜமும் புவனேஸ்வரியும் பெரியவாளை நமஸ்கரித்தனர்.

சுப்பிரமணியன் மீது தீர்க்கமாகத் தன் பார்வையைச் செலுத்தினார் மகா பெரியவா. பிறகு, ‘அவனைத் தூக்கி வெச்சுக்கச் சொல்லு’ என்பதாக ஒரு சிஷ்யனுக்குப் பெரியவா சைகை காண்பிக்க… அவன் கிருஷ்ணமூர்த்தியிடம், ‘‘மாமா… குழந்தையைத் தூக்கி இடுப்புல வெச்சுக்குங்கோ’’ என்றான். அதன்படி பேரனைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் அனைவருக்கும் கல்கண்டு மற்றும் குங்குமப் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா. ஏதோ சொல்லவேண்டும் என்று சுப்பிரமணியனின் நிலையை விவரிப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவும், பெரியவாளே அவரைக் கையமர்த்தி விட்டார்.

ராஜமும் புவனேஸ்வரியும் கண்களில் நீர் பெருக அந்த மகானின் சந்நிதியில் தங்களின் பிரார்த்தனைகளை வைத்தனர். ‘குழந்தை நடக்கவேண்டும்… குழந்தை நடக்கவேண்டும்’ என்பது மட்டுமே அப்போதைய அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

‘‘தரிசனம் செஞ்சவா எல்லாம் நகருங்கோ… நகருங்கோ’’ என்று பெரியவாளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த சில சிஷ்யர்கள் குரல் கொடுக்கவும்… மெள்ள நகரலாம் என்று தீர்மானித்துக்கொண்டு ஓரடி எடுத்து வைத்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘அவாளை சித்த இருக்கச் சொல்லு’ என்பதாகத் தன் சீடன் ஒருவனுக்குப் பெரியவா சைகையால் உத்தரவு பிறப்பிக்க… சட்டென்று நகர்ந்த அவன் கிருஷ்ணமூர்த்தியின் கையைப் பிடித்து, காத்திருக்குமாறு பெரியவா சொன்னதாகச் சொன்னான்.

பெரியவாளுக்கு முன்னால் நெகிழ்ச்சியுடன் காத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. குரல் உடைய… ‘‘திருவையாறு பூர்வீகம். எம் பேரன் இவன். பொறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு… இன்னும் தரையில் கால் பாவிச்சு நடக்கலை. எத்தனையோ வைத்தியர்கிட்ட போயிட்டேன். காசு செலவானதும் கவலை அதிகமானதும்தான் மிச்சம். பெரியவா கருணை பண்ணணும்…’’ என்றார். கண்களில் இருந்து வழியும் நீரை மேல்துண்டால் துடைத்தார்.

ஒரு புன்னகை பூத்த அந்தப் பரப்பிரம்மம், தன் முன்னால் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்த பழத் தட்டை இன்னும் தன் அருகே கொண்டு வருமாறு சீடனிடம் சைகையால் சொன்னார். அவனும் அப்படியே செய்தான். அந்தத் தட்டிலிருந்து ஒரு ரஸ்தாலி வாழைப்பழத்தைத் தன் கையால் எடுத்தார். உரித்துச் சாப்பிடும் பாவனையில் அதன் மேல்தோலை உரித்தார். பாதி வாழைப்பழம் உரிக்கப்பட்ட நிலையில் அது காட்சி அளித்தது. இதை கிருஷ்ணமூர்த்தியின் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனுக்கு நேராக நீட்டினார் பெரியவா. அதற்கு ஏற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் கொஞ்சம் நெருங்கி வந்தார். இருந்தாலும், மகா பெரியவா நீட்டிய அந்தப் பழத்தைத் தான் வாங்கி, சுப்பிரமணியனுக்குக் கொடுத்துவிடலாமே என்கிற எண்ணத்துடன் ஒரு சீடன் சட்டென முன்வந்து பெரியவாளிடம் கையை நீட்டினான்.

அப்போது பெரியவாளின் முகத்தைப் பார்க்கணுமே…! ‘தள்ளிப் போ’ என்பதாக அந்தச் சீடனுக்கு உத்தரவுபோல் வலது ஆட்காட்டி விரலை மட்டும் இடமும் வலமும் வேகமாக அசைத்துக் காண்பித்தவர், சுப்பிரமணியனைத் தன் அருகே வந்து அந்த வாழைப்பழத்தை வாங்கிக்கொள்ளுமாறு முக பாவனையால் அழைத்தார். அதற்கேற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் தன் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனை இன்னும் கொஞ்சம் அருகே கொண்டுபோனார். தன் கையில் உரித்த நிலையில் இருந்த வாழைப்பழத்தைப் பெரியவா நீட்ட… தன் கையை நீட்டி அதை வாங்கிக்கொண்டான் சுப்பிரமணியன்.

அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் ருசிகரமான இந்தக் காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்தனர். வயதான ஒரு மாமி, ‘‘எத்தனையோ குழந்தைகளுக்குப் பெரியவா கல்கண்டு கொடுத்துப் பார்த்திருக்கேன். பழங்களைத் தந்தும் பார்த்திருக்கேன். ஆனா, ஒரு வாழைப்பழத்தை & அதன் தோலை உரிச்சு & பெரியவாளே அந்தக் குழந்தையோட கையில கொடுத்தார்னா… இது அந்தக் குழந்தைக்குப் பெரிய அனுக்ரஹம்’’ என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன் தன் கையிலிருந்து வாங்கிய வாழைப்பழத்தை முழுதுமாக அவன் சாப்பிடும் வரை வேறு எந்த பக்தரையும் பார்க்கவில்லை பெரியவா. அவன் சாப்பிட்டு முடித்து, அவர்களை அங்கிருந்து அனுப்பிய பின்னர்தான் மற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஆரம்பித்தார் மகா பெரியவா.

ஊருக்கு வந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் பெரிதும் சந்தோஷப்பட்டனர். ‘‘ஏதோ நம் பிரார்த்தனை அந்த மகான் காதுலயே விழுந்துடுத்து போலிருக்கு. நம்மை எல்லாம் நன்னா ஆசிர்வாதம் பண்ணிட்டார். அதுவும், நம்ம சுப்பிரமணிக்குத் தன் கைப்பட வாழைப்பழம் கொடுத்ததை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் சிலிர்ப்பா இருக்கு’’ என்றார் ராஜம் தன் கணவரிடம்.

‘‘பெரியவா ஆசிர்வாதத்துல அவன் நடக்க ஆரம்பிச்சாலே போதும். வேற எதுவும் வேண்டாம்’’ என்ற கிருஷ்ணமூர்த்தி, அந்த வேளையில் காஞ்சி மகானை நினைத்து, இருந்த இடத்தில் இருந்தே வணங்கினார்.

காஞ்சிபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சுமார் மூன்று நாட்கள் ஆகி இருக்கும். பணி புரியும் அரசு அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் ஏதோ ஒரு பேச்சுவாக்கில் தான் காஞ்சி சென்று வந்ததைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. கூடவே, பெரியவாளின் ஆசி குறித்தும் அங்கு தன் பேரனுக்கு வாழைப்பழம் தந்த அனுபவத்தையும் சொன்னார். அப்போது சென்னையில் ஓரிடத்தில் ஒரு பள்ளியைப் பற்றிச் சொல்லி, ‘‘அங்கு உன் பேரனைக் கூட்டிக்கொண்டு போய்ப் பார். எதற்கும் ஒரு வேளை வரவேண்டும். உனக்கு இப்பதான் பெரியவா உத்தரவு கொடுத்திருக்கா போலிருக்கு’’ என்றார்.

அதை அடுத்து, உயர் அதிகாரி சொன்ன அந்தப் பள்ளிக்குப் பேரனைக் கூட்டிப் போனார் கிருஷ்ணமூர்த்தி. சரியாக நான்கே மாதங்களில் சுப்பிரமணியனுக்கு நடக்கக்கூடிய பயிற்சியை அன்போடு சொல்லித் தந்தார்கள். ‘‘பெரியவாளின் பார்வை பட்ட சில மாதங்களிலேயே அவனிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பயம் குறைந்தது. தைரியமாக நடக்க ஆரம்பித்தான். இப்ப அவனுக்கு வயசு இருபத்திநாலு. அவன் நடக்கிற நடைக்கு வேற யாருமே ஈடு கொடுக்க முடியாது. அப்படி ஒரு வேகம். அவன் வேகமா நடக்கறதைப் பார்த்தா எனக்கு பெரியவா ஞாபகம்தான் வருது. அந்த தெய்வம்தானே இவனை இப்படி நடக்க வெச்சிருக்கு!’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணமூர்த்தி தம்பதியர்.

நன்றி : திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய ‘மகா பெரியவா’

[END]

9 thoughts on “நடக்க முடியாது இருந்த குழந்தையை நடக்க வைத்த தெய்வம்!

  1. \\குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். எந்த வித ஆதரவும் இன்றி, நிற்கதியாய் விடப்பட்டுள்ள இக்குழந்தைகள், நம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்த அந்த வினாடிகள் என்னால் மறக்கமுடியாதது\\

    நண்பர் சந்திரசேகரன் குழந்தைகளுக்கு பேட்மிண்டன் பேட் வழங்கி அவரும் குழந்தையக மாறியது நெகிழ்ச்சியான வினாடிகள்.

    திரு.சந்திரசேகரன் பிரார்த்தனை நிச்சயம் கடவுளின் இல்லத்தில் நடந்தது என்பதே உண்மை .

    பெரியவாவின் ஆசியுடன் நமது பிரார்த்தனை நிறைவேறும்.

  2. திரு சுந்தர் அவர்களுக்கு,

    அருமையான மற்றும் நெகிழ்ச்சியான கட்டுரை. இறை நம்பிக்கை இருந்தாலே போதும் இறைவன் நம்மோடு உடனாகியிருந்து, நம் வினைகளைக் களைவான் என்பதற்கு மற்றுமொரு சான்று, திரு பெரியவர் அவர்களின் அனுக்கிரக பார்வை!

    நன்றி,

    கனஹகுமார்

  3. பிரார்த்தனை கிளப்பில் வேண்டுகோள் விடுத்த அத்துனைப் பேர்களுடைய பெயரும்,அவர்களுக்கு ஏற்பட்டுல்ல பிரச்சினைகளையும், குறிப்பெடுத்துக்கொண்டு அதனை பிரார்தனை கிளப்பில் மனமுருக ப்ரார்த்தனை செய்த தன்னலம் அற்ற சுந்தர் சார் சேவை, பாராட்டுகுரியது…

    திரௌபதியை காப்பாற்ற கண்ணன் வந்தது பற்றிய பிரார்த்தனை பதிவில் கூறியது போல…. எந்தளவு அவனிடம் நம்மை ஒப்படைக்கிறோமோ அந்தளவு நாம் காப்பாற்றப்படுகிறோம். நம்மையும் அறியாமலே.

  4. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை; வளிவழங்கும்
    மல்லல்மா ஞாலம் கரி — திருக்குறள்

    அருளை ஆள்பவர்க்கு எக்காலத்தும் துன்பம் இல்லை. அதற்கு காற்று உலவுகின்ற வளப்பமான பெரிய உலகில் வாழ்வாரே சான்றாவார்

    என்னே காஞ்சி மகாபெரியவாளின் கருணையே கருணை.
    அன்பே சிவம்

  5. நெகிழ்ச்சியான சம்பவம் !!!
    மஹா பெரியவாளின் அருட்பார்வையின் மகிமையை என்னவென்று கூறுவது !!!
    படிக்கும் போதே மெய் சிலிர்க்கிரதென்ரால் அதை நேரில் அனுபவித்தவரின் நிலையை கூறவும் வேண்டுமோ !!!
    அந்த குழந்தை உண்மையிலேயே மஹா பாக்யசாலி!!!

    பிரேமவாசத்தில் உதவி பணிகள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைந்து நடப்பது மிக்க மகிழ்ச்சி !!!

    தொண்டுகள் தொடரட்டும்
    மகிழ்ச்சி எங்கும் பரவட்டும் !!!

  6. The best place to pray in the presence of good human beings, who only expect only love and affection.

    The happiness in the face of the small boy while receiving the gift and the true joy in the face of our friend Chandrasekaran is something beyond words.

    I am sure Chandrasekaran’s family problems will be solved with the grace of Maha Periyava

    – Baba Ram

  7. அந்த குழந்தைகள் மனதில் எவ்வளவு சந்தோசம் ,நேரில் பார்த்தால் தான் அந்த பரவசம் நமக்கு புரியும் ,மன நலம் குன்றிய குழந்தைகள் கூட எதோ நமக்கு இவர்கள் தருகிறார்கள் என்பதை புரிந்து அதோடு மட்டும் இல்லாமல் பேட் இல்லாதவர்களோடு சேர்ந்து நாங்கள் விளையாடுவோம் என்று சொன்னார்களே அது தான் மிக பெரிய விஷயம்

  8. I Could not read it without crying அனந்த கண்ணீர் நெகிழ்ச்சியான சம்பவம்

  9. என் அக்கா பிள்ளை கால் நடக்க முடியாமல் உள்ளான். எங்களுக்கு உங்களை பார்க்க அனுமதி தரவும் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *