Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!

print
ரு ஏழைப் பெண் தன் பகுதியில் இருந்த மளிகை கடை ஒன்றிற்கு சென்றார். அவள் முகத்தை பார்க்கும்போது அவர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தது.

தனது கணவர் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தானும் தனது நான்கு குழந்தைகளும் பட்டினியால் வாடுவதாகவும் சில மளிகை பொருட்களை கடனாக கொடுத்து உதவும்படியும் கடைக்காரரிடம் கேட்கிறார்.

கடைக்காரர் அந்த பெண்ணை ஏளனமாக பார்த்து, “என்னது கடனா? உடனே இடத்தை காலி பண்ணும்மா… வந்துட்டா பெரிசா…. காலங்கார்த்தாலே” …..விரட்டுகிறார்.

“ஐயா… தயவு செய்து உதவி பண்ணுங்க. பிள்ளைங்க சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு. உங்க பணத்தை எவ்ளோ சீக்கிரம் கொடுக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொடுத்துடுறேன்”

“என்னவோ கொடுத்து வெச்சிருக்குற மாதிரி கேட்க்குறே…. இங்கே யாருக்கு கணக்கு இருக்கோ அவங்களுக்கு தான் கடன் கொடுக்கிறது வழக்கம்….நீ முதல்ல இடத்தை காலி பண்ணு”

“நான் என்ன பண்ணுவேன் தெய்வமே… பிள்ளைங்க வீட்ல பட்டினியா இருக்கே…!” அழுது புலம்புகிறார் அந்த பெண். விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார் கடைக்காரர்.

அந்த நேரம் அந்த கடைக்கு வரும் கஸ்டமர் ஒருவர் நடப்பதை பார்க்கிறார். சூழலை புரிந்துகொள்கிறார்.

“சார்… இவங்களுக்கு தேவையானதை வாங்க நான் ஹெல்ப் பண்றேன். அவங்க கேக்கிறதை நீங்க கொடுங்க” என்கிறார்.

மனமிருக்கு ஆனால் மார்க்கமில்லை என்று அந்த கடைக்காரர் நினைப்பவராக இருந்தால் “சரிங்க சார்” என்று  கூறியிருப்பார். ஆனால் அவர் தான் இந்த பெண்ணுக்கு உதவுவதிலே துளி கூட விருப்பமில்லாதவராக இருக்கிறாரே….. அந்த புதிய வாடிக்கையாளர் சொன்னதை கேட்டு எரிச்சலடைகிறார்.

“உன் கிட்டே மளிகை லிஸ்ட் இருக்காமா?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.

“இருந்தா கொடு…. அந்த லிஸ்டை தராசுல வெக்கிறேன். அது எவ்ளோ வெயிட் இருக்கோ அதுக்கு ஈடா நீ கேக்குற மளிகை சாமான் தர்றேன்” என்கிறார் குசும்புடன்.

அந்த பெண்மணி ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்திக்கிறாள். பின்னர் ஒரு சிறிய காகிதம் எடுத்து ஏதோ எழுதி பின்னர் அதை தராசில் வைக்கிறார்.

அடுத்த கணம்…. அனைவரும் ஆச்சரியப்படும் விதம் காகிதம் வைக்கப்பட்ட அந்த பக்கமானது கீழே சென்றுவிடுகிறது. நடந்த அதிசயத்தை அவர்களால் நம்பமுடியவில்லை.

கடைக்காரர்… கஸ்டமரை நோக்கி வெறுப்பும், ஏமாற்றமும், ஆச்சரியமும் கலந்த ஒரு வித உணர்வோடு, “என்னால் இதை நம்பவே முடியலே…” என்கிறார்.

கஸ்டமர் மெலிதாக புன்னகைக்கிறார்.

கடைக்காரர்… அடுத்த நொடி கடையில் இருந்த மளிகை பொருட்கள் ஒவ்வொன்றாக வைக்க, காகிதம் வைக்கப்பட்ட பக்கமானது சிறிது கூட மேலே எழவில்லை. கடைசியில் அந்த கிண்ணம் நிரம்பி வழியும் அளவுக்கு மளிகை பொருட்களை வைக்கிறார். அப்போதும் அந்த கிண்ணம் இறங்கவில்லை. காகிதம் வைக்கப்பட்ட எதிர் பகுதி சிறிது கூட மேலே எழவில்லை. இதற்கு மேல் வைக்கமுடியாது என்னும் அளவிற்கு தராசு கிண்ணம் நிரம்பி வழியும் அளவிற்கு பொருட்களை அடுக்குகிறார்.

சங்கடத்தில் நெளியும் கடைக்காரர்… கடைசியில் தராசில் வைக்கப்பட்ட அந்த காகிதத்தை சட்டென்று எடுத்து பார்க்கிறார். பார்த்தால் அதில் இருப்பது மளிகை பொருகளின் லிஸ்ட் அல்ல. ஒரு சிறிய பிரார்த்தனை.

“இறைவா… என் தேவைகளை நீ அறிவாய். உன்னிடமே இதை விட்டுவிடுகிறேன்” என்று மட்டும் எழுதியிருந்தது.

கடைக்காரர் தான் ஒப்புக்கொண்ட படி மளிகை பொருட்களை அந்த பெண்ணுக்கு கொடுத்துவிடுகிறார். பிறகு மெளனமாக நிற்கிறார்.

அந்த பெண் இருவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

கஸ்டமர் தன் பர்ஸை எடுத்து அதலிருந்து ஐந்நூறு ருபாய் நோட்டை எடுத்து கடைக்காரரிடம் கொடுக்கிறார். “இதில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் மதிப்பு மிக்கது.” என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

அவர் போனபிறகு தராசை ஆராயும் கடைக்காரர் பின்னர் கண்டுபிடிக்கிறார்.. தராசின் ஒரு முக்கிய பாகம் உடைந்து போயிருந்தது. பிரார்த்தனையின் வலிமை அப்படி!

கஸ்டமராக வந்தது யார் என்று நினைக்கிறீர்கள்?

அவன் ஒருவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்….

(இந்த கதையின் ஆங்கில மூலத்தை நான் முன்னெப்போதோ படித்திருக்கிறேன். இது உண்மையிலேயே நடைபெற்றது என்றே கருதுகிறேன். இது நடந்திருக்குமா என்று யோசிக்கவேண்டாம். நடந்திருக்கும் என்று நம்புங்கள். நம்புகிறவர்களுக்கு தான் அதிசயங்களோ அற்புதங்களோ எதுவாகினும் சாத்தியமாகும்!)

இந்த வாரம் கூட்டு பிரார்த்தனைக்கான கோரிக்கையை பார்ப்போமா?

இது சற்று வித்தியாசமான உருக்கமான பிரச்னை குறித்த கோரிக்கை….

=============================================

மனநல பாதிப்பால் பரிதவிக்கும் குடும்பம்

சுந்தர் அவர்களுக்கு, வணக்கம்.

எனக்காகவும் இந்த கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.

எனது கணவரின் தங்கை வழி பெண் ஒருத்திக்கு அவள் வாழ்க்கையே பிரச்சினை ஆகி விட்டது. அவளுக்கு இரு குழந்தைகள். மகன் கல்லூரியில் படிக்கிறான். மகள் தற்போது தான் +2 எக்ஸாம் எழுதி இருக்கிறாள். அவளது கணவர் பல வருடங்களாக குடி போதைக்கு அடிமை ஆகி விட்டார். அவர்களை கவனிப்பதே இல்லை.  கடந்த 6 வருடங்களாக அவரது நிலை மிகவும் மோசமாகி விட்டது. தற்போது தனது சுயநினைவே இல்லை. குழந்தைகளை படிக்க விடாமல், இரவு முழுவதும் சத்தமாக பாட்டு வைப்பது, வீட்டில், பக்கத்தில் இருப்பவர்களை என அனைவரையும் அவர் படுத்தும் பாடு ரொம்பவே அதிகமாகி விட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன் குழந்தைகள் இருவருக்கும் பொது தேர்வு நடக்கும் போது, அவரது தொல்லை தாங்க முடியாமல் அவள் தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள். 2 வருடங்களாக அவர்கள் 3 பேரும் எங்களோடு தான் இருக்கிறார்கள்.  நாங்களும், எங்களால் முடிந்த அளவு அவர்களை நன்றாகவே பார்த்து கொள்கிறோம். ஆனால் இது நல்ல முடிவு அல்லவே. அவர் மனம் திருந்தி வருவார் என்பது நடக்குமா என தெரியவில்லை. அவரை பற்றியும் அவர் எங்களுக்குக் திடீர் திடீரென ஏற்படுத்தும் சங்கடங்கள் சொல்ல நிறைய இருக்கிறது.

“ரூபாய் நோட்டில் கையெழுத்து போடும் வேலை கிடைத்துள்ளது. 10 ருபாய் நோட்டில் எனது கையெழுத்து தான் உள்ளது” என்பது போன்று பேசி கொண்டிருக்கிறார். நாங்கள் மிகவும் சதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். வேலைக்கு போனால் தான் சாப்பிட முடியும். அவருக்காக மன நல மருத்துவரிடம் நிறைய செலவும் செய்து விட்டோம்.  அங்கு இருக்கும் வரை நன்றாக இருப்பார். திரும்பி வந்ததும் அவர் வேலையை ஆரம்பித்து விடுவார்.  நன்றாக வாழ்ந்து வந்தவர் தான். தற்போது அவரது நிலை மிகவும் மோசமாகி விட்டது.

அவர் மனம் திருந்தி நல்ல  வாழ்க்கை அமைய வேண்டும் என அவருக்காகவும், அவரது குடும்பத்தாருக்காகவும் வேண்டிக் கொள்ளுமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

மேலும் அவருக்கு, இலவசமாக மன நலம் சரியாக மருத்துவம் செய்ய ஏதேனும் வழி இருந்தால், தங்களுக்கு தெரிந்து இருந்தால் தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும்.  மிக்க நன்றி.

– தீபா, கோவை

=============================================

இப்படி ஒரு மின்னஞ்சல் நம் வாசகி தீபாவிடமிருந்து சில வாரங்களுக்கு முன்பு நமக்கு வந்தது.

நான் இதை படித்துவிட்டு அவர்களை தொடர்புகொண்டு, “அவருக்கு உடனடி தேவை பிரார்த்தனை அல்ல. நல்ல சிகிச்சை. அதாவது முதலுதவி. முதலில் அவருக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வோம். பின்னர் அவர் குணமடைய பிரார்த்தனை செய்யலாம். சென்னையில் இதற்கென எனக்கு தெரிந்த பிரபல தனியார் மருத்துவ மையம் (SCHIZOPHRENIA RESEARCH FOUNDATION – SCARF) ஒன்று உள்ளது. அங்கு இதற்கான முதல் தர சிகிச்சையை இலவசமாக அளிக்கிறார்கள். அங்கு கன்சல்டிங்கிற்கு அழைத்துச் செல்வோம். அனைத்தும் ஒரு அரை நாளில் முடிந்துவிடும். கன்சல்டிங்கின் போது நான் உடனிருக்கிறேன். எனவே தைரியமாக பேஷண்டை அழைத்து வாருங்கள். பின்னர் மற்றதை பார்த்துகொள்ளலாம்” என்று கூறினேன்.

இதையடுத்து திருமதி. தீபா மற்றும் அவரது கணவர் திரு.புருஷோத்தமன் மற்றும் அவரது சகோதரி மற்றும் அவரது கணவர் திரு.சௌந்தர்ராஜன் (பாதிக்கப்பட்டவர்) ஆகியோரை அழைத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்தார்.

இங்கு அண்ணாநகரில் உள்ள SCARF மருத்துவ மையத்தில் முன்னரே பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தேன். உடனிருக்கவேண்டும் என்பதால் அன்றைய தினம் அலுவலகத்திற்கு அரை நாள் லீவ் போட்டு விட்டேன்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயாராக இருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் தன்னை சிகிச்சைக்காகத்தான் அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதை எப்படியோ மோப்பம் பிடித்து தப்பி சென்றுவிட்டார். நானும் நம் வாசகியின் கணவர் திரு.புருஷோத்தமன் ஆகிய இருவரும் கடுமையாக முயன்று எப்பாடுப்பட்டாவது அவரை டாக்டரை சந்திக்கவைத்துவிடவேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால் அவரை மருத்துவ மையத்துக்குள் அழைத்து வரமுடியவில்லை. அந்த நேரம் அவருக்கு யானை பலம் வந்துவிட்டது. மையத்திலிருந்து சுமார் அரை கி.மீ தூரம் ஓடி போய்விட்டார். உடனே மையத்திற்குள் சென்று அங்கு எனக்கு தெரிந்த ஒரு அதிகாரியை அழைத்து வந்து, அவரை தாஜா செய்து எப்படியாவது உள்ளே அழைத்து செல்ல முயற்சித்தோம். அப்போதும் எங்கள் முயற்சி பலிக்கவில்லை. கடைசி வரை அவரை அங்கிருந்து அசைக்க கூட முடியவில்லை. நேரம் தான் ஓடிக்கொண்டிருந்தது.

விபரம் தெரியாததால் ரோட்டில் செல்ல்வர்கள் அனைவரும் எங்களை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கடைசியில் மருத்துவரிடம் நிலைமையை எடுத்துக் கூறியதில், “இப்போ நீங்க ஊருக்கு கிளம்புங்க. பரவாயில்லே.  நான் சில மெடிசின்ஸ் எழுதி தர்றேன். அவருக்கு தெரியாமல் எப்படியாவது இந்த மருந்துகளை உணவில் கலந்து கொடுங்க. ஓரளவு முன்னேற்றம் தெரியும். பின்னர் அழைத்து வாருங்கள்”‘  என்று கூறி சில மருந்து மாத்திரைகளை அவரது மனைவியிடம் எழுதி தந்தார்கள்.

வளாகத்தில் இருந்த ஃபார்மசியில் அந்த இலவச மருந்துகளை வாங்கிக்கொண்டார்கள். கிளம்பும்போது அவர்களிடம் மகா பெரியவா குஞ்சித பாதத்துடன் இருக்கும் படத்தை பரிசாக தந்தேன்.

அந்த மருந்து மாத்திரைகளை இன்று வரை அவரை சாப்பிட வைக்க முடியவில்லை என்று தெரிந்துகொண்டேன். அவருக்கு தெரியாமல் உணவில் கலந்துகொடுக்கலாம் என்றால் “முதலில் நீங்கள் சாப்பிடுங்கள். அப்புறம் நான் சாப்பிடுகிறேன்” என்று சாமர்த்தியமாக கூறிவிடுகிறாராம். (இந்த விஷயத்தில் எல்லாம் அவங்க மூளை பயங்கரமா வேலை செய்யும்!).

சம்பந்தப்பட்டவர் ஒத்துழைத்தால் தானே நோயை குணப்படுத்த இயலும்?

சென்ற வாரம் தீபா அவர்களிடம் பேசியபோது, “சார் அந்த உயர் தர மருந்துகளை வேண்டுமானால் திருப்பி அனுப்பிவிடுகிறேன். அங்கு வேறு யாராவது ஏழைகளுக்கு அவை பயன்படட்டும். இங்கு இவரை மருந்து சாப்பிட வைக்க எங்களால் முடியவே இல்லை….” என்று மிகவம் வருத்ததுடன் உடைந்த குரலில் கூறினார்.

“இப்போது தான் பிரார்த்தனை தேவை. இந்த வாரம் இவருக்காக விசேஷ பிரார்த்தனை நடைபெறும். அதற்கு பிறகு பாருங்கள். நிச்சயம் நீங்கள் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு விரைவில் அவர் பரிபூரண நலன் பெறுவார்” என்றேன்.

சகோதரி தீபா அவர்களின் மைத்துனர் திரு.சௌந்தர்ராஜன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனச்சிதைவு நோய்க்கான சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பை நல்கி, பரிபூரண குணமடையவும், அமைதியை இழந்து தவிக்கும் அந்த குடும்பம் இனி வரும் காலங்களில் மகிழ்ச்சியோடு கழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

================================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 28, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

15 thoughts on “கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!

  1. எப்பவோமே ஆண்டவன் மிக மிக மிக ……………………. பெரியவன்

    நம் தேவைகள் கண்டிப்பாக ஆண்டவன் மட்டுமே தெரியும்…

    நன்றி

  2. எப்பவோமே ஆண்டவன் மிக மிக மிக ……………………. பெரியவன்
    இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது

  3. படிக்கும் போது, உங்களது ஒவ்வொரு பதிவுகளும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. மிக்க நன்றி சுந்தர்.

  4. சுந்தர்ஜி,

    தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதும் நல்ல உள்ளம் படைத்த
    உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
    தீபா அவர்களின் உறவினர் நலமடைய சங்கட ஹர சதுர்த்தி அன்று மனதார பிரார்த்தனை செய்து அவர்களுடைய சங்கடங்கள் நீங்கி குணமடைய பிரார்த்தனை செய்து அவர்களுடைய வாழ்வில் ஒளியை ஏற்றுவோம்

    நன்றி.

  5. கடவுளை முழு மனதோடு நம்பினால் நமக்கு கடவுள் எதுவும் செய்வார் ,வார வாரம் நடக்கும் நம் பிராத்தனை கிளப் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  6. ///“இறைவா… என் தேவைகளை நீ அறிவாய். உன்னிடமே இதை விட்டுவிடுகிறேன்”///

    உயர்ந்த குறிக்கோளை நிர்ணய்த்து அதற்காக நல் வழியல் பயணிக்க தொடக்கி உள்ள சுந்தர்உடன் நாமும் பயணிப்போம் .

    ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்பில் தொடர்ந்து கலந்து கொண்டு பயன் பெறுவோம் .

  7. சுந்தர் உங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தையிலே சொன்னா, நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு மதிப்பே இல்லாம போய்டும். எங்களுக்காக, உங்க எவ்வளவோ சிரமங்களுக்கும் நடுவுல, உங்க வேலைகள் எல்லாம் விட்டு விட்டு மருத்துவமனை வந்து, மருத்துவரை பார்த்து, எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறிர்கள். அதற்கு பின்னரும், அவர் எப்படி இருக்கிறார், மருந்து சாபிடுகிறரரா என்பது போன்ற உங்களது தொடர்ந்த விசாரிப்பு, உண்மையிலேயே உங்க மனிதாபிமானம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. இந்த காலத்துல யாரு இப்படி உதவி செய்வாங்க சுந்தர். என் பிரச்சினையே எனக்கு பெரிசா இருக்கு, இதுல அடுத்தவங்க பிரச்சினை எனக்கு எதுக்குன்னு போறவங்க தான் அதிகம். பிரச்சினைக்கு வழி சொல்லி, அதில் பாதிக்கப்பட்டவர் எப்படி இருக்கிறார் என்ற தொடர்ந்த விசாரிப்பு, இது எல்லாம் விட எங்களுக்காக கூட்டு பிரார்த்தனை. இவை எல்லாம் உங்கள மாதிரி நல்ல மனசு உள்ளவங்கள தவிர யார் செய்வாங்க. “இறைவா… என் தேவைகளை நீ அறிவாய். உன்னிடமே இதை விட்டுவிடுகிறேன்” – இதை நினைச்சு தான் எங்க பிரச்சினையே ஆண்டவன் கிட்ட விட்டுட்டோம். கடவுள் தான் உங்கள் மூலமா ஒரு வழி காட்டி இருக்கிறார்னு தான் நான் நினைக்குறேன். “நம்புகிறவர்களுக்கு தான் அதிசயங்களோ அற்புதங்களோ எதுவாகினும் சாத்தியமாகும்” – நீங்க சொல்றா மாதிரி தான் கடவுளே கதின்னு அவர் கால்ல விழுந்தாச்சு. இனி அவர் பாத்துக்குவார் சுந்தர். எங்க நம்பிக்கை ஆண்டவன் காதில் விழுகுதோ இல்லையோ, நிச்சயமா உங்களோட இவ்வளவு முயற்சியும், ஆண்டவன் பாத்துட்டு தான் இருக்கார். கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கு. காத்திருப்போம். நிச்சயமா ஒரு நாள், நான் இந்த தளத்தில், உங்க முயற்சிக்கு, உங்க எல்லாரோட பிரார்த்தனைக்கும் பலன் கிடைச்சிருச்சுனு நான் எல்லோருக்கும் கூடிய விரைவில் சொல்வேன். அதற்கு அந்த ஆண்டவன், குஞ்சித பாதத்துடன் இருக்கும் மகா பெரியவா அருள் புரிவார் என்று நம்புகிறோம் சுந்தர். உங்களுக்கும், நம் தளத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எங்க எல்லார் சார்பாகவும் ரொம்ப நன்றி சொல்லிக்குறேன்.

    1. துயருற்றோருக்கு உதவுவதை விட மிகப் பெரிய ஆன்மிகம் எதுவும் இல்லை. பக்தியும் எதுவுமில்லை.

      நம்மை இன்றும் வழி நடத்தும் வள்ளுவரும், பாரதியும், விவேகானந்தரும் கூட சொன்னது இதைத் தான்.

      உங்களுக்கு உதவ சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தமைக்கு இறைவனுக்கு தான் நான் முதலில் நன்றி சொல்லவேண்டும். நான் பயனுள்ளதாக செலவழித்த தருணங்களில் அவையும் ஒன்று.

      சென்ற வாரம் பிரார்த்தனை பதிவின் போது நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் கொடுத்துவிட்டீர்கள். உங்கள் மூலம் அனைவருக்கும் பதில் கிடைத்துவிட்டது.

      http://rightmantra.com/?p=4209

      நீங்களே பாக்கியசாலி!

      – சுந்தர்

  8. சகோதரி தீபா அவர்களுக்கு ,

    உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி .

    சுந்தர் சொல்வது போல்,

    \\கடவுளே கதின்னு அவர் கால்ல விழுந்தாச்சு. இனி அவர் பாத்துக்குவார் \\

    ” உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
    என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
    எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
    காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
    உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
    வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
    யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்.”

    1. திரு மனோகரன் அவர்களுக்கு மிக்க நன்றி . நிச்சயமா நல்லதே நடக்கும். நம்புவோம்.

  9. சகோதரி தீபா அவர்களுக்கு
    வருந்த வேண்டாம்
    ஒவ்வொருவர் வாழ்விலும் கெட்ட நேரம் என்பது உண்டு
    ஆனால் அது எப்படியே இருந்து விடாது
    மனதில் உள்ள பாரத்தை அந்த இறைவனின் திருவடியில் இறக்கி வைத்துவிடுங்கள் – மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்

    மனமுருக பிரார்த்திப்போம்
    மனநலம் குணம் அடைய !!!

    1. தங்களின் பிரார்த்தனைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  10. மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கு,

    உங்கள் படைப்புகள் அற்புதம்!

    தங்களது கதைகளில் இறைவன் கண்ணனாகவே காட்டப்படுகிறான் ஏன் சிவபெருமானாக காட்டப்படுவதில்லை?

    இறைவழிபாட்டின் முதிர்நிலை பெயரற்றதுதான் இருப்பினும், அனைத்தையும் கடந்த ஆண்டவனாக சிவனையே பார்க்கவேண்டும்.

    1. அடடா… இப்படி ஒரு எண்ணம் வந்திடுச்சா? நான் சைவ – வைணவ பேதங்கள் அற்றவன். எனக்கு திருமாலும் ஒன்று தான். மகேஸ்வரனும் ஒன்று தான்.

      உங்களுக்காக அடுத்து விரைவில் ஒரு கதை அளிக்கிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *