இராமநாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான். ஆனால் மூலமந்திரத்திற்கு உரிய மூர்த்தியோ அணை கட்டி ‘சேது ராமனாக’ ஆகியே இலங்கை சென்றார்.
மூர்த்தியைவிட மூலமந்திர ஜபமே சாலச்சிறந்தது என்று கண்டு பாரத ஞானிகள் அனைவரும் அப்பாதையில் தான் சென்றார்கள்.
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் இராம பக்தி ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று.
திருமால் பக்தர்களின் எட்டெழுத்தும், சிவநேயச் செல்வர்களின் ஐந்தெழுத்தும் சேர்ந்தே ‘ராம’ என்ற இரண்டெழுத்து மந்திரம் உருவானது என்கிறார். ‘எவரநி’ என்று தொடங்கும் கீர்த்தனையில் தியாகராஜர்! ஆம்!
‘நாராயணாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ரா’ அவ்வெழுத்து இல்லையேல் ந அயனாய என்று ‘வழி காட்டாதவன்’ எனப் பொருள் மாறிவிடும்.
அவ்வாறே ‘நமசிவாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ம’ அவ்வெழுத்தை எடுத்துவிட்டால் ‘ந சிவாய’ என ‘மங்கலத்தை வழங்காதவன்’ எனப் பொருள்படும். ஆக இரு மூலமந்திரங்களிலும் உயிர் எழுத்தாக உள்ள ரா, ம என்ற இரண்டு எழுத்துகளும் இணைந்து ‘ராம’ என்ற அற்புதச் சொற்பதம் பிறந்தது. அதுவே நற்பதம் அருளும் என்கிறார் தியாகராஜர். ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் கூறி பெருமாளை வழிபட்ட பலன் ராமநாமத்தைக் கூறுவதாலேயே சித்திக்கும் என்பதை
ஸ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே |
ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||
என்ற ஸ்லோகம் உணர்த்துகிறது. ராமர் என்ற பதமே பலருக்கும் பிடித்திருக்கிறது. அதனால் தான் கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன், யக்ஞராமன், சந்தானராமன், ஜயராமன், சிவராமன் என்று அனந்தராமர் நாமங்கள்.
நமக்கு மட்டுமல்ல பெருமாளுக்கே அந்த நாமம் பிடித்திருப்பதால்தான் இது வரை எடுத்த ஒன்பது அவதாரங்களில் மூன்று அவதாரப் பெயர் பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர் என விளங்குகிறது.
‘தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான்புகுந்த…’
‘சேவகன்சீர்கேளாத செவி என்ன செவியே!’
என இளங்கோவடிகள் பாடுகிறார்.
‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’
என நம்மாழ்வார் நவில்கிறார்.
‘அந்தி காலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் ஜபங்களும் தபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் ஜபிக்கும் மந்திரமும்
எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே’
என சிறப்பாகக் கூறுகிறது தனிப்பாடல் ஒன்று.
உன்னதமான மந்திரமாக ராமநாமம் விளங்குகிறது. திருமாலின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் திருப்பிறப்பு சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் நிகழ்ந்தது.
நடுப்பகலில் கோடை வெயிலில் ஸ்ரீஇராமர் அவதாரம் அயோத்தியில் நிகழ்ந்தது. அவர் ஏற்றுக் கொண்ட வனவாசமும் (உஷ்ணத்திலேயே) பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. பரந்தாமனின் வெப்பத்தை ஆற்றும் பொருட்டே பக்தர்கள் ராமநவமி நன்னாளில் பானகமும் நீர் மோரும் படைத்து மகிழ்கிறார்கள். ஸ்ரீஇராமரின் சரித்திரமான இராமாயண விரிவுரையைக் கேட்டுப் பயன் பெறுகிறார்கள். மூலமந்திரமான ராமநாமத்தை எழுதியும், உச்சரித்தும் உருவேற்றியும் மகிழ்கிறார்கள்.
ராம நாமத்தின் பெருமையைக் கம்பர் எப்படி சொல்கிறார் தெரியுமா?
“மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரம்’
‘தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’
‘எழுமை நோய்க்கும் மருந்து’
நம் தேசப்பிதா காந்தி சொல்கிறார்
நான் உணவின்றி பலநாள்கள் இருந்தாலும் இருப்பேன் ராம நாம ஜபம் இன்றி இமைப்பொழுதும், ஒரு கணமும் இருக்க மாட்டேன்.
ஆம்!
இறைவனைவிட உயர்ந்தது இறைவனின் மூல மந்திரம்!
அம்மூலமந்திரம் கூறியே அவர் ஆவி பிரிந்தது.
நாமும் ‘அப்போதைக்கு இப்போதே’ நாமம் கூறுவோம். ஹோமம் பல செய்து நாம் பெறும் க்ஷேமத்தை அவர் இரண்டெழுத்து நாமமே தரும்.
‘உலக சகோதரத்துவம்’ என்ற வார்த்தைக்கு உயர்ந்த சரித்திரமாக விளங்குவது ராமாயணம்தான். கங்கைக் கரையில் வேடுவன் குகன், கிஷ்கிந்தையில் குரங்கினத் தலைவன் சுக்ரீவன், இலங்கையில் அரக்கரினத்தைச் சேர்ந்த விபிஷணன், அனைவரையும் தம்பியராக ராமர் ஏற்றுக் கொண்ட தனிப்பெரும் வரலாறுதானே இராமாயணம்.
நவமியில் பிறந்த நாயகரான ராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் உதாரண புருஷராக தானே வாழ்ந்து காட்டினார்.
‘ஓகமாட ஓக பாணமு ஓக பத்னி வரதுடே’ என்கிறது தியாகய்யரின் கீர்த்தனை.
ஒரு சொல், ஒருவில், ஒரு இல் என நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது.
‘பட்டாபிஷேகம்’ என்று ராமர் பரவசப்படவில்லை.
‘வனவாசம்’ என்று ராமர் வ ருத்தப்படவில்லை.
இன்பத்தையும், துன்பத்தையும் சமநோக்கில் எடுத்துக் கொண்டார். ‘இன்றுபோய் போருக்கு நாளை வா’ என பகைவனுக்கும் கருணை காட்டினார். வானரங்கள், பறவை ஜடாயு, கரடி ஜாம்பவான், அணில், என ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்ற மேலான சமத்துவம் கடைப்பிடித்து வாழ்ந்த இதிகாச நாயகரே இராமர்.
ஸ்ரீஇராமநவமி வைபவத்தைக் கொண்டாடும் நாம், ஸ்ரீஇராமரை நம் குறிக்கோள் நாயகராகக் கொண்டால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலைக்கு உயரலாம் என்பது திண்ணம்!
நன்றி : திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன் | அம்மன் தரிசனம்
மாதா ராமோ மத்பிதா ராமசந்த்ரோ ப்ராதா ராமோ மத்ஸகா ராகவேஸ:|
ஸர்வஸ்வம் மே ராமந்த்ரோ தயாளுர்னான்யம் தைவம் நைவ ஜானே ந ஜானே:||
எனக்கு ஸ்ரீராமசந்திரனே தாயார். என் பிதாவும் ஸ்ரீராமனே.என் சகோதரனும் ஸ்ரீராமனே.ஸ்ரீராகவனே எனக்கு தோழன். இப்படியே என்னுடைய சர்வ சொத்தும் தயாளுவாகிய ஸ்ரீராமசந்தரனேயாகிறான். யான் வேறோரு தெய்வத்தையும் ஒருக்காலும் அறியவே அறியேனே ஸ்ரீராமசந்திரா..
Shri ramakarnamrutham
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் அருமை
ஸ்ரீ ராமருக்கு ஜெயம்
ராம…………….ராம……பதிவிற்கு நன்றிகள்.
ஸ்ரீ ராமஜயம் .
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணே ஹரே கிருஷ்ணே
கிருஷ்ணே கிருஷ்ணே ஹரே ஹரே.
ஸ்ரீ ராமனிடம் தான் விரைவில் சேர வேண்டும் என்பதற்காக ? அன்னை சீதா ராமநாமத்தை சொல்லி கொண்டே இருந்தாளாம். ராமனும் , சீதாவை , தான் விரைவில் காண வேண்டும் என்பதற்காக ராம நாம ஜெபம் செய்தானாம்.
இது மட்டுமல்ல ராமனையும் , சீதாவையும் விரைவில் சேர்க்க வேண்டும் என்று ஆஞ்சநேய சுவாமியும் ராம நாம ஜெபம் செய்தாராம். ராமனுக்கே ராம நாமம் உதவியது என்றால், உங்களுக்கும் எனக்கும் உதவி செய்யாமலா போய்விடும் .
அனைவரும் ராமநாமம் ஜெபித்து எல்லாம்வல்ல ஸ்ரீராமரின் அருள் பெறுவோம் .
ஜெய் ராம் .ஸ்ரீராம் .ஜெயஜெயராம் …
-மனோகர்
வணக்கம் சார் .
மாதங்களில் சிறந்தது மார்கழி அதுபோல நாமங்களில் சிறந்தது ராம நாமம் .
மூர்த்தியைவிட மூலமந்திர ஜபமே சாலச்சிறந்தது
ராம என்ற நாமத்தின் அர்த்தம் வாராவாரம் நம் பிரார்த்தனை பதிவில் படித்தாலும் அதன் விரிவான விளக்கம் தற்போது கிடைத்தது மகிழ்ச்சி .
சகோதர தத்துவமும் மற்றும் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற மேலான உதாரணமும் காட்டி ராமரின் பெருமைகளை எங்களுக்கு தெரிவித்த சுந்தர் சார் அவர்களுக்கு எங்கள் நன்றி .
ராம நவமி அன்று அவர் பெருமை அறிந்து போற்றுவோம்.
அப்போதைக்கு இப்போதே அவர் நாமம் சொல்லுவோம்.
இந்த பதிவின் மூலம் ராம நாம மகிமையை அறிந்து கொண்டோம்
ஷிர்டியில் கூட ராம நவமி மிகவும் பிரலமாக கொண்டாடுவார்கள். இன்று sai satcharithra 6வது அத்யாயம் படித்தால் மிகவும் நல்லது. i have read the chapter
நன்றி
உமா
துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு
ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!
பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்… ஏன் தெரியுமா? “ஆதிமூலமே’ என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்….
“ஸ்ரீ ராம ஜெயம்” …..சிவாய நம….
கலிகாலத்தில் நாம பாராயனமே சிறந்தது ….