ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது எது சரி எது தவறு என்று உணர்த்துவதற்காக இறைவன் படைத்த CODE OF CONDUCT தான் வேதங்கள்.
ஒரு கட்டத்தில் – அதாவது திரேதா யுகத்தில் – மக்களிடையே ‘வேதங்களின் படி மனிதன் வாழ்வது சாத்தியமேயில்லை…. ஏன் அந்த கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் அதுப் படி வாழ்றது சாத்தியமேயில்லை….’ என்ற பேச்சு எழ ஆரம்பித்துவிட்டது. (தவறு செய்பவர்கள், குற்றச் செயலில் ஈடுபடுகிறவர்கள், இப்போ காந்தியே இருந்தாலும் அவரால முடியாது… அவரும் இதைத் தான் செய்வார் என்று சொல்வதில்லையா? அது போல!)
‘அது தவறு… என்னால் படைக்கப்பட்ட வேதங்களின் படி மனிதன் வாழமுடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக நானே மனிதனாக அவதாரம் எடுத்து வேதங்கள் கூறுகிற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறேன்’ என்று ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரமே இராமாவதாரம்.
இராமாவதாரம் முழுதும் இறைவன் – ஒரு மனிதனாக முயற்சிகள் மேற்கொண்டு மேன்மை பெற்று அதன் பலனாக கிடைத்த சக்திகளை கொண்டு தான் அவதார நோக்கத்தை பூர்த்தி செய்தாரே தவிர – தனது இறைசக்தியை எங்கும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தவேயில்லை.
‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…. வாழும் விதத்தில் வாழ்ந்தால்’ என்பது இதன் மூலம் புரிகிறதல்லவா?
இராமயணத்தை (சிரவணம்) கேட்பதன் மூலமும் பாராயணம் செய்வதன் மூலமும் எண்ணற்ற நற்பலன்கள் உண்டு.
இராமனின் புகழை பாடுவோர் அனுமனின் அன்புக்கு பாத்திரமாகி விடுகின்றனர். அவர்கள் கோராமலே அவர்களுக்கு அனுமன் உதவி செய்ய ஆரம்பித்துவிடுவான். ஆகையால் அனுமனின் அருளை வேண்டுவோர் ஸ்ரீராமரை ஆராதிப்பது மிகவும் அவசியம்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம்||
பொருள் : எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர்ஹனுமான். ‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல்-ஆஞ்சநேயர்-கண்ணீர் மல்க நின்று கேட்பார். அரக்கர்களுக்கு எமனாக விளங்கும் ஆஞ்சநேயரை வணங்குகிறேன்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
என்னும் கம்பரின் பாடல் இரண்டெழுத்து மந்திர மாகிய இராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது.
மகா பெரியவாவின் கருணை
மகா பெரியவா ஒரு சமுத்திரம். இராம நவமியை பற்றியோ இராம நாமாவின் மகிமையை பற்றியோ அவர் கூறியது எதையேனும் இந்த நன்னாளில் உங்களிடம் பகிர்ந்துகொள்ளல்லாம் என்று இந்த பதிவை தயார் செய்யும் முன் நினைத்தேன். என்னுடைய இன்ட்ரோவை தயார் செய்துவிட்டு இணையத்தில் தேடியபோது வெகு சுலபமாக நினைத்த மாதிரியே இரண்டு அருமையான விஷயங்கள் நண்பர் பால் ஹனுமான் தளத்திலேயே கிடைத்தன.
நேற்று இரவு முழுதும் பிராட்பேண்ட் வேலை செய்யவில்லை என்பதால் காலை தான் நேரம் கிடைத்தது. எனவே முழுதும் படித்துவிட்டு பின்னர் பதிவளிக்க நேரம் வேறு இல்லை. அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் மகா பெரியவா சொன்னது என்பதால் முழுதும் படிக்காமல் பதிவை அளித்துவிட்டு கிளம்பிவிட்டேன். சற்று நேரம் கழித்து தான் பொறுமையாக படித்தேன்…. அடடா…. இராமவதாரம் பற்றியும் இராம நாமா பற்றியும் நான் எப்படியெல்லாம் சிலாகித்திருந்தேனோ இன்னும் என்னவெல்லாம் கூற நினைத்தேனோ அதை அவர் கூறியிருந்தார்… பக்தனின் மனமறிந்து அருள்வதில் அவருக்கு நிகர் எவரும் உண்டா?
இன்று நம் தள வாசகர்கள் அவசியம் ஏதாவது ராமர் கோவிலுக்கு சென்று ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வழிபட்டு ஸ்ரீ ராமரின் அருளையும் அனுமனின் அருளையும் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். (இந்த பதிவை சற்று முன்னரே அளித்திருக்கவேண்டியது… தாமதத்திற்கு மன்னிக்கவும்.)
இந்த இனிய நாளில் நீங்கள் படித்து பயன்பெற தேடித் தொகுத்த இரண்டு பதிவுகளை அடுத்தடுத்து தருகிறேன்.
முதலாவதாக நம் எல்லோருக்கும் பிரியமான மகா பெரியவா அவர்கள் கூறுவதை கேட்போமா?
=====================================================
14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம் – மகா பெரியவா சொன்ன கதை
அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள். எங்கே… மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?
‘ராமன்‘ என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.
சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.
ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.
‘ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்…
ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?
வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.
வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். ‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்.
‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.
சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’
ஆஹா… எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?
நன்றி : சக்தி விகடன் (via) balhanuman.wordpress.com
================================================
“நடமாடும் கடவுள்” மஹா பெரியவா எனக்கு ஒரு உபதேசம் செய்தருளினார். அதாவது “நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள். சதா “ராமா, ராமா” என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு. இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை. நீ இதை எப்போதும், எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்” என்றருளினார்.
இப்படி அந்தக் கருணாமூர்த்தி, எனக்குத் தாரக மந்திரோபதேசத்தைச் செய்து அருளினார். என்னே அவரது ஸௌலப்ய குணம் ! இன்று நினைத்தாலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆக, என்றுமே அவர்தம் அருளாலே அவர்தாள் வணங்கி, சதா அவரையே தியானம் செய்து, அவரது உபதேசத்திற்கிணங்க, அந்த தேஜோமயமான திவ்ய ஸ்வரூபத்தை என் ஹ்ருதய கமலத்தில் ஆரோஹணித்து இடைவிடாது பூஜிப்பதே என் வாழ்வின் லக்ஷியம் எனக் கடைப்பிடித்து வருகிறேன்.
பரம பாவனமான இந்த மந்திரத்தின் பெருமையை அவர் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ரா” என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “ம” என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணி” ராகத்திலமைந்த “எவரனி” என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு மஜீவமு” என்றும் “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமு” என்றும் பாடியருளியிருக்கிறார்.
–ஆர். சங்கரநாராயணன் (நடமாடும் கடவுள் – வானதி பதிப்பகம் வெளியீடு) | balhanuman.wordpress.com
================================================
தங்கள் பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ராமஜயம் ஸ்ரீராமஜெயம் ராமனின் கைகளில் நான் அபயம்.
அன்பே ராமன் ஆனந்தமே ராமன்.
இன்றைய ராமநவமி நன்னாளில் ராமன் பெயரை ஜெபிப்போம், அந்த ஸ்ரீராமன் அருள் பெறுவோம். சிவகுமார்
மிக அருமையான பதிவு! ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ராம் ! நமது கர்மாக்களை கழிக்க இந்த மஹா மந்திரத்தை ஜபித்தால் வழி கிடைக்கும்.
ஸ்ரீ ராமநவமி BIRTHDAY ஸ்பெஷல் சூப்பர்…
“ராமா, ராமா ராமா”
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.
ஸ்ரீ ராமா, ஜெய ராமா, ரகு ராமா, ஆனந்த ராமா, சீதா ராமா
வைதேகி ராமா, ஜானகி ராமா, பட்டாபி ராமா என்று நாமக்களை தினமும் சொல்லி அந்த ராமனின் அருள் பெறுவோம்.
14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம் – மகா பெரியவா சொன்ன கதை அருமையோ அருமை.
நன்றி
ராமாயன ஹீரோ,ராமரை,அவர் பிறந்த நாளில், அவரின் குணங்களை
நினைவு படுத்தியதுர்க்கு நன்றீ
ஜெய் ஸ்ரீ ராம் !!!