Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > தேச விடுதலைக்காக திருமணத்தை துறந்த தியாகத்தின் சிகரம் தீரன் சின்னமலை!

தேச விடுதலைக்காக திருமணத்தை துறந்த தியாகத்தின் சிகரம் தீரன் சின்னமலை!

print
ந்த தளத்தை நான் துவக்கியபோது ஒரு விஷயத்தில் மட்டும் மிக மிக உறுதியாக இருந்தேன். எந்தப் பதிவு என்று வருகிறதோ இல்லையோ…. ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்கள் பற்றிய பதிவு நிச்சயம் அவர்களின் பிறந்தநாளின் பொழுதோ அல்லது நினைவு நாளின்போழுதோ கூடுமானவரை மறக்காமல் வரவேண்டும் என்பது தான். (சற்று தாமதமாக வந்தாலும் அன்றைய தினம் எப்படியாவது சம்பந்தப்பட்ட பதிவுகள் தரமுயற்சிக்கிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க.)

நாட்டைப் பற்றியோ தாம் சார்ந்த இனத்தை பற்றியோ சிறிதும் அக்கறை கொள்ளாத தகுதியற்றவர்களை தலையில் வைத்துக் கொண்டாடிக்கொண்டு அதே சமயம் நாட்டின் விடுதலைக்காக உழைத்த உத்தமர்களை இன்றைய இளைய தலைமுறையினர் மறந்து வரும் இந்த வேளையில் நாட்டுக்காக தங்கள் வாழ்வையும் வசந்தத்தையும் தியாகம் செய்த இந்த மாமனிதர்களைப் பற்றி சில நொடிகளாவது நாம் சிந்திக்கலாமே?

எனவே இந்திய விடுதலை போரில் பங்கேற்றவர்கள் பற்றிய இது போன்ற பதிவுகளை நம் வாசகர்கள் முழுமையாக படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தாற் காவாயோ?

– சுப்ரமணிய பாரதி

இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள்  போன்ற வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பல வீரர்கள் பிறந்த வீர பூமி நம் தமிழ்நாடு. அவர்களுள் மிக மிக முக்கியமானவர் தீர்த்தகிரி என்ற பெயர் கொண்ட தீரன் சின்னமலை அவர்கள். கட்டபொம்மனை போல வெள்ளையர்களுக்கு அடிபணியாது இறுதி வரை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர் சின்னமலை. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் இந்த தீரன் சின்னமலை. ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் மிக மிக வல்லவர்.

17 ஏப்ரல் தீரன் சின்னமலையின் பிறந்தநாள். (ஏப்ரல் 17, 1756). இந்நாளில் அவரின் வரலாற்றை படித்து இந்திய விடுதலை போரில் அவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

ஜெய் ஹிந்த்!

==================================================

மலைடா….. சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் நடுவுலே இருக்குற சின்னமலைடா….

கொங்குப்பகுதியில் வசூலித்த வரிகள், தானியங்கள், கல்நடைகளுடன் 1782ல் மைசூர் புலி ஹைதர் அலியின் திவான் முகமது அலி வருகின்றான். தீர்த்தகிரி என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் தலைமையில் ஒரு இளைஞர் படை வழிமறித்து நிற்கின்றது.

“யார் நீ?” திவானின் அதிகாரக் கேள்வி எழுகிறது. “சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை” என்று உரிமைக்குரல் நீள்கிறது. “இது மைசூருக்கு கட்டுப்பட்ட ஆட்சி” என்கிறார் திவான்.

இங்கு எங்களாட்சி தவிர வேறு எந்த ஆட்சியும் செல்லாது என்று தீர்த்தகிரி தீர்மானமாக பதில் தருகிறான். தொடர்ந்து வரிப்பொருட்களை பறித்து மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர் தீர்த்தகிரியின் படையினர். வரிகளையும், அதிகாரத்தையும் திவான் இழந்து அவமானத்தைச் சுமந்து சென்றான்.

வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றான். தனது படைகளை திரட்டினான். தீர்த்தகிரி பாளையத்தின் மீது படையெடுத்து வந்தான். தகவல் அறிந்த தீர்த்த கிரி தனது பயிற்சி பெற்ற இளைஞர் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் திவானின் படையை வழிமறித்து எதிர் கொண்டான். பாளையங்களை தாண்டியும் தீர்த்தகிரியின் கீர்த்தி பரவியது.

தோல்வி அடைந்த திவான் மைசூருக்கு சென்று பெரும் படையுடன் திரும்ப நினைத்தான். ஆனால், அதற்குள் 1782ல் ஹைதர் அலி மரணம் அடைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து அரியனை ஏறிய திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்க்க விரிவான அணியை உருவாக்கினான். கொங்கு நாட்டு தீர்த்த கிரிக்கும் அழைப்பு விடுத்தான். அண்டைய மன்னனின் ஆட்சியை ஏற்காத தீர்த்தகிரி அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடத்தயங்குவானா? தானும் இரு தம்பிகளுடனும், தனது நம்பிக்கைக்குரிய வீரர்கள் கருப்பன், வேலப்பருடனும், திப்புசுல்தானின் ஆங்கிலேய எதிர்ப்பு அணியில் இணைந்தான். 1000 பேர்கள் கொண்ட தீர்த்தகிரியின் படைக்கு திப்புவின் நண்பர்கள் பிரெஞ்சு தளபதிகள் பயிற்சி அளித்தனர். முறையான படைத்தளபதியாக உயர்ந்தான் தீர்த்தகிரி.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார் தீர்த்தகிரி. புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சமயங்களை சேர்ந்தவர்களும் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

தீர்த்தகிரி தனது படைபலத்தை பெருக்கினான் ஒடா நிலையில் கோட்டையை கட்டி முடித்தான். அங்கேயே ஆயுதங்களை உற்பத்தி செய்யத் துவங்கினான். பிரிட்டிஷாருக்கு, சேலமும், மலபாரும், மைசூரும் தங்கள் வசம் உள்ளபோது இடையில் உள்ள கொங்குப்பகுதி அவர்கள் வசம் இல்லாதது இடைஞ்சலாக இருந்தது. தீர்த்தகிரிக்கு தூது அனுப்பி அவர்களுடன் இணைந்து வரிசெலுத்திட கோரினர். தீர்த்தகிரி தீர்க்கமாக மறுத்தான். எதிர்விளைவுகள் என்னவாக இருந்தாலும் சந்திக்க தயாரானான்.

மண்டியிட மறுத்த தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்தான் தீர்த்தகிரி, நொய்யல் ஆற்றில் தனது படைகளுடன் காத்திருந்து வெள்ளையர் படையை எதிர்கொண்டு சிதறடித்தான் கேப்டன் மக்கீஸ் கானின் தலைதுண்டிக்கப்பட்டது. சினம் கொண்ட ஆங்கிலேயர்கள் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் தீர்த்த கிரியின் படையுடன் மோதியது. தீர்த்தகிரி என்ற அந்த தீரன்சின்னமலையின் தனிதிறமைவாய்ந்த வீரத்தை யுத்தகளத்தில் நேரில் கண்டான். தனது படைகளுடன் சமாளிக்க முடியாமல் பின்வாங்கினான்.

எப்படியும் தீரன் சின்னமலையை வென்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் வெள்ளையர்கள் பெரும் பீரங்கிபடைகளை அனுப்பினர். வேலப்பன் மூலமாக தகவல் அறிந்த தீரன் சின்னமலை பின்வாங்கி பதுங்கிடத்திட்டமிட்டான். கருப்பனையும் மற்றவர்களையும் ஒரு பகுதியில் மறைந்திருக்க உத்தரவிட்டு, தான் இரு சகோதரர்களுடன் மற்றும் நல்லப்பன் என்ற சமையல் காரனுடன் பழனி கருமலை காட்டில் பதுங்கினான். ஒடாநிலை வந்து சேர்ந்த பீரங்கிப் படை கோட்டை காலியாக இருந்ததை கண்டு ஏமாந்தது. கோட்டையில் சோதனையிட்டதில் வேலப்பன் அனுப்பிய தகவல் குறிப்புகள் கண்டெடுத்து அதிர்ந்தனர். அந்த இடத்திலேயே வேலப்பனை சுட்டு பழிதீர்த்துக் கொண்டனர்.

எப்படியும் தீரன் சின்னமலையை பிடிப்பதில் தீவிரம் காட்டினர். தேடினர். பல அறிவிப்புகளை செய்தனர். மாவீரர்கள் வாழ்வில் காட்டிக்கொடுப்பவர்களுக்கு பஞ்சம் எது? ஆங்கிலேயர்களின் ஆசைவார்த்தைகளுக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்ட சமையல் காரன் நல்லப்பன் தீரனை காட்டிக்கொடுகக் துணிந்தான். உணவிற்காக வந்த தீரன் சின்ன மலையையும், அவர்களது தம்பிகளையும் “நயமாக‘’ பேசி ஆயுதங்களை வெளியில் வைத்து, உள்ளே உணவருந்த அழைத்துச் சென்றான். காத்திருந்த கயவர்கள் இவர்களை கைது செய்தனர்.

விசாரணைகள் நடந்தது, ஆங்கில ஆட்சியை ஏற்கவேண்டும் என்றனர். மண்டியிடுவதைவிட மரணமே மேலானது என முடிவெடுத்தான். விளைவு தூக்குத் தண்டனை 1805 ஜூலை 31  சங்ககிரியில் சாலையோர புளியமரத்தில் தீரன் சின்னமலை, அவரது சகோதரர் கருப்பன் ஆகியோரை தூக்கிலிட்டனர். வெள்ளையர் காலத்தில் புளியமரங்கள் புளி கொடுப்பதைவிட விடுதலைப் போராட்ட வீரர்களின் உயிரெடுக்கவே அதிகமாக பயன்பட்டுள்ளது. தீர்த்த கிரியாக பிறந்து தனது வீரத்தால் பெரும் கீர்த்தி களைப்பெற்று தீரன்சின்னமலையாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறான்.

தனக்கென ஒரு குடும்பம் உருவானால், நாட்டுக்காக தான் மேற்கொண்டுள்ள சுதந்திரப் போராட்டங்களுக்கு இடையூறாக இருக்குமென்று கருதி, தீர்த்தகிரி கடைசி வரை திருமணத்தை துறந்தார். அதுமட்டுமின்றி, அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்ட அவரது தம்பிகள் பெரிய தம்பி, கிலேதார் ஆகியோரும் கூட திருமணம் செய்து கொள்ளவில்லை. நம் நாட்டில் பிறந்த ஆயிரமாயிரம் தியாகிகளின் தியாகம் எத்தகையது என்பதை இத்தகைய வரலாறு மூலம் அறிந்து கொள்ளலாம்.

அவரது வீரத்திற்கும், நமது நாட்டு சுகந்திரம் பெறுவதற்காகவும் பாடுபட்ட நமது தீரன் சின்னமலையை தலைவணங்குவோம். வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(நன்றி : விக்கிபீடியா & unakulnan.blogspot.in)

==================================================

7 thoughts on “தேச விடுதலைக்காக திருமணத்தை துறந்த தியாகத்தின் சிகரம் தீரன் சின்னமலை!

 1. Those are Patriots, today many are Hipocrats. They talk sweetly and live in opposite manner.Atleast they can avoid cheating others

 2. சின்னவயசுல வரலாறு பரிசைக்காக மனப்பாடமாக படித்து எழுதியது,மீண்டும் புரிந்த தெளிந்த மனதுடன் படிப்பது பிரமிப்பாக உள்ளது.

  நமது தீரன் சின்னமலைக்கு தலைவணங்குகிறேன் .

  வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

 3. நாட்டின்
  விடுதலைக்கு
  வித்திட்ட
  வீரத்திரு உள்ளங்களுக்கு – என்றென்றும் எங்களின்
  வீர வணக்கங்கள் !!!

 4. சுந்தர்ஜி,

  மனோகர் சார் சொல்கின்றார் போல் சின்ன வயசில் டப்பா அடிச்சு படிச்சது. ஆனால் இப்போது படித்தால் நம் நாட்டின் வீரர்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகின்றது.

  தீரன் சின்ன மலைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  வாழ்க உங்கள் தொண்டு.

  நன்றி

 5. வரலாற்று விஷயங்கள் பள்ளியில் படித்தது. மீண்டும் உங்கள் எழுத்தில் படிக்கும் போது விவரம் புரிந்து படிக்கும் போது பிரமிப்பாக உள்ளது. வீர செம்மல்களுக்கு வீர வண்ணக்ககள். நன்றி.

 6. வீர தமிழன் கொங்கு மண்ணிற்கு அதிகாரன். தீர்த்தகிரி சர்க்கரை மன்றாடி உத்தம காமிண்டர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *