Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > “என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

print
திருமழிசை அருள்மிகு ஜெகன்னாத பெருமாள் கோவிலில் நமது தளத்தின் சார்பாக 07/04/2013 அன்று நடைபெற்ற உழவாரப்பணி வெகு சிறப்பாக கோவிந்தனின் கருணையினால் நடந்தேறியது.

முதலில் நம் பணி நடைபெறவிருந்தது மேற்கு மாம்பலத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்று. தவிர்க்க இயலாத காரணங்களினால் அங்கு முடியாமல் போக கடைசி நேரத்தில் எந்த கோவிலில் பணி செய்வது என்று சற்று குழப்பமாக இருந்தது. மேலும் அவனுக்கு பணி செய்ய அவன் இடத்தை நாம் தேர்வு செய்வதாவது? இந்த ஜென்மம் அல்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அது நம்மால் முடியுமா? அவனுக்கு பணி செய்ய அவனல்லவா நம்மை தேர்ந்தெடுக்கிறான். எனவே நான் எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. என் தாரக மந்திரமான ‘எல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்து என் கடமையில் மூழ்கிவிட்டேன்.

ஓரிரு நாட்கள் சென்றது. ஏனென்று தெரியவில்லை…. திடீரென்று சென்னை பூவிருந்தவல்லியை அடுத்துள்ள ‘திருமழிசை’ மனதில் தோன்றியது. திருமழிசையில் அருள்பாலித்துவரும் ஜெகன்னாதப் பெருமாளுக்கு கைங்கரியம்  செய்வது என்று தீர்மானித்தேன். கோவில் நிர்வாக அலுவலரிடம் பேசினேன். எதிர்பார்த்ததைவிட சுலபமாக அனுமதி கிடைத்தது. எனவே தளத்தில் அறிவித்துவிட்டேன்.


திருமழிசை சென்னை பூவிருந்தவல்லியை அடுத்து திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள எழில் கொஞ்சும் ஒரு ஊர். சென்னையின் பல இடங்களில் இருந்து நேரடி பேருந்து வசதி இருக்கிறது.

குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவிலும், திருமங்கைவல்லி தாயார் சமேத ஜெகன்னாதப் பெருமாள் கோவில் என சைவ, வைணவத் தலங்களின் சங்கமமாக விளங்குகிறது இவ்வூர். இரு கோவில்களிலும் தனித் தனியே குளம் உண்டு.

உழவாரப்பணி நடைபெறும் முன்பு எப்போதும் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று அர்ச்சகர்களிடம் பேசி செய்ய வேண்டிய பணி மற்றும் அவர்கள் தேவை என்ன என்பது குறித்து ஆலோசித்துவிட்டு வருவது என் வழக்கம். அப்போது தான் அதற்கேற்றார் போல நாம தயாராக செல்ல முடியும். எனவே உழவாரப்பணி நடைபெற்ற (07/04/2013) ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய தினம், அதாவது சனிக்கிழமை காலை கோவிலை பார்வையிட சென்றிருந்தேன்.

இந்த அதிசயம் இந்த பணியில் மட்டுமே சாத்தியம்

அர்ச்சகரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, உழவாரப்பணி செய்ய உரிய அனுமதி பெற்றிருப்பதாக கூறி செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டேன்.

“உழவாரப்பணிக்கு வந்திருக்கிறோம்” என்றதும் அவர் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். ‘உங்கள் சேவை ஜெகன்னாதனுக்கு நிச்சயம் தேவை’ என்று குறிப்பிட்டவர், கோவிலையும் முக்கிய சன்னதிகளையும் ஒட்டடை அடித்து கூட்டி பெருக்கி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முடிந்தால் தரையை தண்ணீர்விட்டு கழுவித் தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

மூலவர் உள்ள பிரதான சன்னதியில் அடிக்கடி உற்சவங்கள் நடப்பதால் அவ்விடம் ஓரளவு சுத்தமாக இருப்பதாகவும் ஆண்டாள் சன்னதி, நரசிம்மர் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி உள்ளிட்ட இடங்களில் நம் கைங்கரியம் தேவைப்படுவதாகவும் கூறினார்.

கோவில் பாத்திரங்கள், மற்றும் விளக்குகள் ஏதேனும் தேய்ப்பதற்கு இருந்தால் தரும்படியும் கேட்டுக்கொண்டேன். சில விளக்குகளும் நீண்ட நாள் துலக்கப்படாத பாத்திரங்களும் இருப்பதாகவும் அவற்றை தருவதாகவும் கூறினார்.

“ஹப்பா…. நல்ல தீனி கிடைச்சதுடா” என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டேன். இந்த பணியை பொருத்தவரை வேலை எந்தளவு கடுமையாக இருக்கிறதோ அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த அதிசயம் இந்த பணியில் மட்டுமே சாத்தியம்.

உழவாரபணியின் போது அந்த கோவிலில் ரெகுலராக கூட்டி  பெருக்கி சுத்தம் செய்பவர்களை கௌரவிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். ஆகையால் இந்த கோவிலில் அத்தகைய பணி செய்வது யார் என்ற விபரத்தை தெரிந்துகொள்ள விரும்பினேன்.

மேலும் இது சற்று விசாலமான கோவில் என்பதால் தினசரி கூட்டி பெருக்கும் கைங்கரியத்தை எத்தனை பேர் செய்கிறார்கள் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறார்கள் அவர்கள் யார் என்ற விபரத்தை கேட்டேன். அப்போது ஈஸ்வரி என்கிற ஒரே ஒரு அம்மா தான் அந்த கைங்கரியத்தை செய்துவருவதாகவும் தனக்கு தெரிந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் கோவிலில் வேலை செய்து வருவதாகவும் கூறினார்.

நாம் நாளை வரும்போது அவர்களுக்கு மரியாதை செய்யவிருப்பதாக கூறினோம். “நிச்சயம் செய்ங்க. மிக மிக சொற்ப ஊதியம் வாங்கும் அவங்களுக்கு அந்த மரியாதை செய்ய வேண்டியது அவசியம்” என்றும் கூறினார்கள்.

என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும்

அவரிடம் விடைபெற்று வெளியே வந்து நாலு கால் மண்டபத்துக்கு எதிரே உள்ள அன்னதான கூடத்தின் படியில் நின்றபடி கோவிலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் நின்று கொண்டிருந்த மண்டபத்தை நோக்கி ஒரு அம்மா வந்தார்கள். வந்தவர்கள் பூட்டை திறந்து உள்ளே ஏதோ வைப்பதற்கு சென்றார்கள்.

ஒருவேளை அர்ச்சகர் சொன்னது இந்த அம்மாவாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. அவர்களிடமே கேட்டுவிடலாமே என்று நினைத்து “நீங்க யாரும்மா? இங்கே என்ன வேலை செய்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்றேன்.

“என் பேர் ஈஸ்வரிப்பா. நான் தான் இங்கே கோவிலை கூட்டி பெருக்குற வேலையை செஞ்சிக்கிட்டுருக்கேன்….”

“உங்களைத்தாம்மா தேடிகிட்கிட்டுருந்தேன்… உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்…. இவ்வளவு குறைஞ்ச சம்பளத்துக்கு நீங்க செய்ற இந்த வேலை மிகப் பெரிய விஷயம். எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க?”

“30 வருஷமா செஞ்சிகிட்டுருக்கேன் தம்பி”

“அம்மாடியோவ்…. நாங்கல்லாம் என்னைக்கோ ஒரு நாள் – ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் – சுத்தம் செய்றதுக்கு  வர்றோம். ஆனா நீங்க தினமும் அவனை பார்த்துக்குறீங்க. பெரிய விஷயம்….”

“இப்போ தான் ஐயர் உங்களை பத்தியும் நீங்க எனக்கு ஏதோ மரியாதை பண்ணப்போறதாவும் சொன்னார்…. எனக்கு அதெல்லாம் வேணாம் தம்பி….”

“நீங்க வேற… முதல்ல என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறியபடி அவர்களின் காலை தொட்டு வணங்கினேன். பதறிப்போய் என்னை தடுத்தார்கள்.

“என் கால்ல எல்லாம் விழாதீங்க தம்பி… ஏதோ அந்த பெருமாளுக்கு செய்றேன்.. என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும். நான் வேற எதையும் எதிர்பார்க்கலை” என்றார்.

வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்த காலத்தில் கோவிலில் காலையும் மாலையும் பணி செய்யும் நேரத்தில் நாலு பெரிய மனிதர்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்தாலே ரூ.10,000/-க்கும் மேல் சுலபமாக சம்பாதிக்க முடியுமே….? ஆனால் ஈஸ்வரியம்மாவிடம் தாம் செய்யும் பணி குறித்த ஒரு பரிபூரண திருப்தி அவர்கள் முகத்தில் பிரதிபலித்ததை கவனிக்க முடிந்தது. உண்மையில் அதை ஒரு வேலையாக எண்ணாமல் அந்த கோவிந்தனுக்கு செய்யும் தொண்டாக கருதுவது புரிந்தது.

“உங்கள் பிள்ளை குட்டிகளை நிச்சயம் அவன் எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக்குவான்மா. தன்னை தேடி என்னைக்கோ ஒரு நாள் வந்துட்டு போறவங்களையே அவன் பார்த்துக்குறான்னு சொன்னா அவனுக்காக நீங்க எவ்ளோ பெரிய கைங்கரியம் பண்றீங்க…  உங்க குடும்பத்தை அவன் விட்டுக்கொடுப்பானா?” ….. ஏதோ அந்த நேரத்தில் மனதில் தோன்றியதை ஈஸ்வரி அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

திருவள்ளுவரும் அதைத் தானே சொல்லியிருக்கார்?

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5)

“காலைல கோவிலை சுத்தம் செய்ய வர்றோம். இடையில உங்களுக்கு மரியாதை பண்ணப்போறோம். மறக்காம வந்துடுங்க… நாளைக்கு ஒரு நாள் நீங்க எந்த வேலையும் செய்யவேண்டாம். நாங்க செய்றோம் நீங்க முழு ரெஸ்ட் எடுங்க…” என்றேன்.

“இல்லே தம்பி. நான் வேலை செய்யாம இருக்ககூடாது…. நான் வர்றேன்…நான் பாட்டுக்கு ஏதாவது செய்றேன்” என்றார்கள்.

அடுத்த நாள் நாள் காலை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு புறப்படத் தயாரானேன். எனக்கு முன்பாகவே நண்பர்கள் சிலர் கோவிலுக்கு வந்துவிட்டனர். உழவாரப்பணிக்கு தேவையான கருவிகள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால், யாராவது ஒருவர் என் வீட்டிற்கு வந்து என்னுடன் சேர்ந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நேரம் என்னை தொடர்பு கொண்ட நண்பர் மாரீஸ் கண்ணனை என் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டேன். அவர் வந்து சேர்ந்த நேரம் நண்பர் பிரேம் கண்ணனும் வந்துவிட்டார்.

மூவரும் உழவாரப்பணிக்கு தேவையான துடைப்பங்கள், பிரஷ், சுண்ணாம்பு மூட்டை, மண்வெட்டி உள்ளிட்டவற்றை ஆளுக்கு பிரித்துக்கொண்டு எங்கள் டூ-வீலர்களில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு சென்றோம்.

அங்கு நண்பர்கள் மனோகரன் தனது மகன் மோனிஷூடன்  ஏற்கனவே வந்திருந்தார். வாசகிகள் சுபாஷினி மற்றும் பரிமளம் ஆகியோரும், உஷா அவர்கள் அவரது கணவர் திரு.முரளியுடனும்  வந்திருந்தார்கள். .

நம் வருகை தாமதமாகிவிட்டதால் அர்ச்சகரிடம் பேசி, ஏற்கனவே அவர்கள் சுத்தம் செய்யும் பணியை துவக்கிவிட்டனர்.

முதலில் துவங்கியது நரசிம்மர் சன்னதி. நான் சென்ற நேரம் நரசிம்மர் சன்னதி முழுதும் ஒட்டடை அடிக்கப்பட்டு, தரையை கூட்டி பெருக்கி கொண்டிருந்தார்கள்.

பின்னர் ஆண்டாள் சன்னதி ஒட்டடை அடிக்கப்பட்டு பெருக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சற்று நேரத்தில் நண்பர்களின் கைங்கரியத்தினால் ஆண்டாள் சன்னதி பொலிவடைந்தது.

தரையில் தூண்களின் அருகே இருந்த எண்ணை கறை மற்றும் பிசுக்கு ஆகியவை அரிசி மாவை தூவி ஊறப்போட்டு பின்னர் துடைத்து அகற்றப்பட்டது.

மணவாளமாமுனிகள் சன்னதியை சுத்தம் செய்வது தான் மிகவும் சவாலாக இருந்தது. காரணாம் அதன் உயரம். எங்களால் ஒட்டடை கம்பு இருந்தும் ஒட்டடை அடிக்க முடியவில்லை. கடைசியில் உதவிக்கு வந்தவர் ‘நன்கு வளர்ந்த’ நண்பர் விவேக் ராம் அவர்கள் தான்.

மூன்று நான்கு பேர் சேர்ந்து கடைசீயில் மணவாளமாமுனிகள் சன்னதியை ஓரளவு சுத்தம் செய்து முடித்தோம். நாங்கள் ஒட்டடை அடித்த பிறகு வாசகிகள் மூன்று பேரும் அதை சுத்தமாக பெருக்கி கைங்கரியத்தை பூர்த்தி செய்தார்கள்.

கோவிலின் பிரதான ராஜ கோபுரத்தின் நுழைவாயில் கதவு நாள்பட்ட ஒட்டடை மற்றும் தூசி ஆகியவை படர்ந்து மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும், கோவிலுக்கு வருபவர்களின் பார்வை முதலில் அந்த கதவு மீது தான் விழுகிறது என்றும் எனவே அதை சுத்தம் செய்து தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

இதையடுத்து நண்பர் மனோகரனும், ஹரிஹரனும் அந்த பணியை ஏற்றுகொண்டார்கள். சற்று நேரத்தில் நண்பர் குட்டி சந்திரனும் வந்துவிட, மொத்தம் மூவர் அந்த பணியில் ஈடுபட்டனர். ஒட்டடை அடிக்கப்பட்டு, கோவில் கதவு முழுமையாக ஒரு துணி வைத்து துடைக்கப்பட்டது.

இதற்கிடையே ஈஸ்வரி அம்மா வர, முதல் வேலையாக அவர்களை கௌரவித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து, நம் நண்பர்கள் அனைவரையும் வரச் செய்தேன்.

அனைவருக்கும்  அவர்களை அறிமுகப்படுத்திவைத்து அவர்களின் கைங்கரியத்தின் மகத்துவத்தை எடுத்து கூறினேன்.

“இந்த அம்மா பேர் ஈஸ்வரி. இவங்க தான் இங்கே தினசரி கைங்கரியம் பண்றாங்க. கோவிலை காலைலயும் சாயந்திரமும் கூட்டி பெருக்கி சுத்தம் செய்றது இவங்க வேலை தான். இவங்க இல்லேன்னா… இந்த கோவிலை பராமரிக்கிறது ரொம்ப கஷ்டம். மிக மிக சொற்பமான ஒரு சம்பளத்துக்கு அவங்க இந்த வேலையை பார்க்கிறாங்க. அவங்களை கௌரவிக்கவேண்டியது நம் கடமை” என்று கூறி, அவருக்கு ஒரு சால்வை போர்த்தி, ஒரு சுவீட் பாக்ஸ் & கவரில் ஒரு சிறிய தொகையும் வைத்து கொடுத்தோம்.

நம் தளம் சார்பாக திரு.மனோகரன் அவர்கள் ஈஸ்வரியம்மாவை கௌரவிக்கிறார்கள். உடன் உழவாரப்பனிக்கு வந்திருந்த மற்ற நண்பர்கள்.
‘இறைவனின் தொண்டருக்கு ஒரு தொண்டு’ ஈஸ்வரியம்மாவுக்கு இனிப்பும் பணமும் வழங்கப்படுகிறது!

அவர்கள் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி. எத்தனை சந்தோஷம். அனைவரும் அவரிடம் ஆசி பெற்றோம்.

தன்னலம் கருதாது உழைப்பவர்களை கௌரவிக்கும்போது அங்கு கடவுளே வந்துவிடுவான் என்பது போல, அந்தக் கணம் ஜெகன்னாதன் மற்றும் திருமங்கைவல்லி தாயார் ஆகியோரின் சாந்நித்தியத்தை அங்கு உணர்ந்தோம்.

“உங்க வீட்ல உங்க பிள்ளைங்க, பேரப்பிள்ளைங்க கிட்டே இதை கொடுத்து, கோவில்ல வேலை செய்றதுக்காக இந்த கௌரவம் எனக்கு பண்ணி என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாங்க அப்படின்னு சொல்லுங்கம்மா…. உங்க பணியோட மகத்துவம் அவங்களுக்கு இன்னும் நல்லா புரியும்” என்றேன்.

தொடர்ந்து கோவில் ஊழியர்களும் அர்ச்சகர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். (இங்கு பலருக்கு மாதம் ரூ.2000/-  ஊதியமே.)

* அர்ச்சகர்களில் மிகப் பெரியவர் – வயது முதிர்ந்த ஒருவர் நம் பணி பற்றி சிலாகித்து கூறி வாழ்த்தினார். அவரிடம் நண்பர்கள் அனைவரும் ஆசிபெற்றோம்.

* இந்த முறை உழவாரப்பணியில் பெண் வாசகர்களின் பங்கு மிகப் பிரதானமாக அமைந்திருந்தது. சென்ற முறை வந்திருந்த பரிமளம் அவர்களை தவிர இம்முறை கோடம்பாக்கத்திலிருந்து திருமதி.சுபாஷினி மற்றும் குரோம்பேட்டையில் இருந்து திருமதி. உஷா தமது கணவருடன் வந்திருந்தார்.

* மூன்று பெண் வாசகியரும் பம்பரமாக சுழன்று அனைத்து வேலைகளையும் செய்தனர். அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுப்பது நமக்கு சவாலாக இருந்தது.

* தாயார் மற்றும் மூலவர் சன்னதியை சேர்ந்த விளக்குகள் மற்றும் பாத்திரங்கள் சிலவற்றை தேய்ப்பதற்கு கொடுத்தார்கள். விளக்குகள் நாள்பட்ட எண்ணை பிசுக்கும் கறையும் கொண்டிருந்தன. இருந்தால் என்ன? மூன்று பேரும் சேர்ந்து பளிச்சென்று புத்தம் புதியது போல தேய்த்துக்கொடுத்து விட்டனர். பித்தளை அண்டா மற்றும் குடங்களும் அப்படியே.


* பலி பீடம் முழுக்க காய்ந்த சோற்றுபருக்கைகள், தூசி, ஒட்டடை என அசுத்தமாக காணப்பட்டது. முதலில் துடைப்பம் வைத்து தூசி மற்றும் ஒட்டடைகளை அகற்றப்பட்டது. காய்ந்த சோற்றுப் பருக்கைகள் மட்டும் ஒட்டிக்கொண்டு அகல மறுத்தன. பின்னர் குடத்தில் நீர் கொண்டு வந்து அதன் மீது ஊற்றி அவற்றை ஊற வைத்து பின்னர் அகற்றினோம். அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பலி பீடம் பளிச் என்று சுத்தமடைந்தது.

*
* *பிரதான சன்னதியின் நுழைவாயிலுக்கு எதிரே தண்ணீர் தொட்டி இருந்த இடம் அருகே, பாசி படர்ந்து தரை வழுக்கலாக இருக்க, அவ்விடம் முழுதும் தேய்த்து அலம்பி பின்னர் சுண்ணாம்பு போடப்பட்டது.
*மூலவரின் சன்னதியின் முக்கிய கதவு (மணிகள் பொருத்தப்பட்டிருந்தது) முழுதும் துடைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஹரிஹரன் தனியாளாக இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டு அசத்தினார்.

* கோவில் சுவர்களில் வேர் விட்டு படர்ந்திருந்த செடிகளை அகற்றவேண்டி இருந்தது. மனோகரன் சற்றும் யோசிக்காமல் தனது மகன் மோனிஷை ஏணி மூலம் மேலே ஏறச் செய்து, அவற்றை அகற்றுவதில் உதவினார்.

*திரு.முரளி அவர்கள் வெகு சிறப்பாக நேர்த்தியாக தமது பணியை செய்தார்கள். பெருக்குவது முதல் ஒட்டடை அடிப்பது வரை நாம் எந்தப் பனி செய்தாலும் அவரும் உடன் சேர்ந்து அந்த பணி மேலும் சுலபாகும் வண்ணம்  கைங்கரியத்தை செய்தார்கள்.

* திருவள்ளூரிலிருந்து கோபிநாத் என்னும் வாசகர் வந்திருந்தார். ஐ.டி.கம்பெனி ஒன்றில் பணி புரியும் இவர், பங்கு இந்த முறை மிகவும் மகத்தானது.

கைங்கரியத்தில் பங்கு பெற்றோர் அனைவரின் பெயரையும் ஒருவர் விடாமல் இங்கு குறிப்பிட நினைத்தேன். ஆனால் நான் குறிப்பிட்டு என்ன இப்போது அதனால்? குறிக்க வேண்டிய அந்த ஜெகந்நாதன் நிச்சயம் குறித்துகொண்டிருப்பானே….!

(இதற்கிடையே நம் வீட்டில் பெற்றோரிடமிருந்து இருந்து ‘நண்பர்களுக்கு உணவு தயாராக இருக்கிறது’ என்று ஃபோன் வந்தது. உடனே நண்பர் மாரீஸ் கண்ணனை நம் வீட்டிற்கு அனுப்பி அவற்றை கொண்டு வரச் சொன்னேன். அவர் அங்கிருந்து சுமார் 7 கி.மீ தூரம் உள்ள நம் வீட்டிற்கு தனது தனது ஹோண்டா ஆக்டிவாவில் சென்று எடுத்து வந்தார்.)

அடுத்து உணவு இடைவேளை. வீட்டில் செய்து கொண்டு வந்த கிச்சடி மற்றும் சட்டினி.  உஷா அவர்கள் பிரதோஷத்தை முன்னிட்டு சாப்பிட மறுத்துவிட்டார்கள். மற்றவர்கள் ருசித்து சாப்பிட்டனர். நாங்கள் சாப்பிட்டவுடன் ஒரு நான்கு பேருக்கான உணவு மீதம் இருந்தது.
கோவில் வாசலில் இருக்கும் யாசகம் பெறுபவர்களிடம் சென்று சூடான டிஃபன் தந்தால் சாப்பிடுவார்களா என்று கேட்டு வரும்படி ஹரியை அனுப்பினேன். மிகவும் சந்தோஷமாக அவர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து உணவு பாத்திரத்தையும் பேப்பர் பிளேட்டுகளையும் எடுத்துக்கொண்டு அங்கு சென்றோம்.

பசி நேரத்தில் வாய்க்கு ருசியான உணவு கிடைத்ததில் அவர்களுக்கு தான் எத்தனை சந்தோஷம்…. நிமிடத்தில் அனைத்தும் பறந்துவிட்டது. அனைவரும் ஓரளவேனும் திருப்தியாக சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதி செய்துகொண்டு பின்னர் அனைவருக்கும் தலா பத்து ரூபாய் தரப்பட்டது. மிக்க மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டார்கள்.

உண்மையா கஷ்டப்படுறவங்களுக்கு திருப்தியா உதவி செய்த சந்தோஷம் இன்று எங்களுக்கு கிடைத்தது. அவர்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (குறள் 228)

…………………………………………………………….
அடுத்து நடை சாத்தும் முன்பு அனைவரும் தரிசனத்தை முடித்துவிடவேண்டும் என்று கருதி தரிசித்தோம். எங்களுக்காக சிறப்பு தரிசனம் செய்விக்கப்பட்டது.

கட்டை விரலில் இருந்த நெற்றிக்கண்

மூலவர் ஜெகன்னாதன் சூரிய மண்டலத்துடன் எழுந்தருளியிருந்தார். அருகே பிருகு மற்றும் மார்க்கண்டேய மகரிஷி ஆகியோரின் சிலாரூபங்களும் காணப்பட்டன. அர்ச்சகர் நிறுத்தி நிதானமாக அனைத்தையும் தீப ஹாரத்தியின் ஒளியில் காண்பித்தார்.பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளுக்காக சுவாமி இவ்விடத்தில் காட்சி தந்ததால், அவர்களிருவரும் கருவறையில்,தவக்கோலத்தில் சுவாமியை வணங்கியபடி உள்ளனர். பூமியிலுள்ள புண்ணிய தலங்கள் அனைத்தின் மகிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தலமென்பதால், இத்தலம் ‘மகீசாரம்’ என அழைக்கப்படுகிறது. இங்கு பிறந்தவர்களுக்கும், இத்தலத்து பெருமாளை வணங்கியவர்களுக்கும் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

ஈஸ்வரியம்மாவுக்கு அணிவித்தது போக மீதம் ஒரு சால்வை இருந்தது. “உங்களில் எவருக்கேனும் சால்வை அணிவித்து மரியாதை செய்ய விரும்புகிறோம். நீங்களே உரிய நபரை சொல்லுங்கள்” என்றேன்.

“எங்களுக்கு வேண்டாம் சார்…. ஒருத்தருக்கு விட்டு ஒருத்தர்க்கு போட்டா அது சரியா இருக்காது. பேசாம திருமழிசையாழவாருக்கு சாத்திடலாம்” என்று கூறி திருமழிசையாழ்வாருக்கு அந்த பொன்னாடையை சார்த்த, ஆழ்வார் மிக அழகாக அந்த பொன்னாடையில் காட்சி தந்தார்.

சுதர்சனரின் அவதாரம் திருமழிசையாழ்வார் என்பதால் பின்னர் சக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருந்தார். ஆழ்வாரின் கால் கட்டை விரலில் இருந்த நெற்றிக்கண்ணை காண்பித்தார் அர்ச்சகர்.

அது பற்றி அவர் கூறியபோது “ஒருமுறை பரமசிவனும், பார்வதியும் ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த தலத்தின் மீது செல்லும்போது யோகத்தில் இருந்த திருமழிசை ஆழ்வாரைக் கண்ட பார்வதி, சிவனிடம் கூறி ஆழ்வாருடன் வார்த்தை விளையாடக் கூறினார். அதன்படி சிவன் ஆழ்வாரிடம் பேச, முடிவில் அவர்களுக்கிடையேயான பேச்சு வாதத்தில் முடிந்தது. ஆழ்வாரின் சொல்வன்மையை கண்டு வியந்த சிவன் அவருக்கு, ‘பக்திசாரர்’ என சிறப்பு பெயர் சூட்டினார். சைவம் மற்றும் வைணவம் என இரு மதத்திலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றிய இவர் நான்காம் ஆழ்வார் ஆவார். கால் கட்டைவிரல் நகத்தில் ஞானக்கண்ணைப்பெற்ற இவர் அவதரித்த இத்தலத்தில் இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

ராகு கேதுவுடன் விநாயகர்

கருவறை சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர், தனது வயிற்றில் ராகுவும், கேதுவும் பின்னியுள்ளபடி காட்சி தருகிறார். இவரை வணங்கிட ராகு, கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. அன்று விநாயகரை தரிசிப்பது மிகவும் விசேஷம்.

தரிசனம் முடித்த பின்னர் கோவில் மடப்பள்ளியில் செய்து, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்பட்ட தயிரன்னம் பிரசாதம் எங்களுக்கு தந்தார்கள். ‘தேவாமிர்தம்’ என்று சொல்லுக்கு அர்த்தம் அது தான்.
………………………………………………………………………………………….


இந்த முறை வாங்கிய இனிப்புகள் + 2 சால்வைகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு செய்த மரியாதை + உணவு தயாரிப்பு என அனைத்தும் சேர்த்து ரூ.1500/- வரை செலவனாது. நண்பர்கள் அனைவரும் கேட்காமலே தங்களால் இயன்றதை தந்து பாதி சிரமத்தை குறைத்தார்கள். அனைவருக்கும் நன்றி.

கோவிந்தனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனி இந்த கைங்கரியத்தில் தங்களை இணைத்துக்கொள்ளவுள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இதை படிக்கும் நல்லுள்ளங்களுக்கும் கைங்கரியத்தில் பங்கு பெற்ற புண்ணியத்தை கருணைக் கடலாம் எங்கள் கோவிந்தன் தருவான் என்பதில் ஐயமில்லை.

அனைத்தும் முடிந்த பின்னர் அனைவரும் கோவிந்தனிடம் விடைபெற்று கிளம்பிச் சென்றோம்.

சுத்தம் செய்யப்பட்டது கோவில் மட்டுமல்ல எங்கள் கர்மவினைகளும், தீவினைகளும், செய்த பாபங்களும் தான்.

அகற்றப்பட்டது தூசி, ஒட்டடை மட்டுமல்ல எங்கள் மனதில் உள்ள அழுக்குகளும் தான்.

கோவில் விளக்கு மட்டும் சுத்தப்படுத்தப்படவில்லை எங்கள் வாழ்வெனும் விளக்கும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

அடுத்த பணியை சீக்கிரம் ஏற்பாடு செய்யும்படியும் நிச்சயம் வந்திருந்து கைங்கரியத்தில் முக்கிய பங்காற்றுவதாகவும் அனைவரும் கூறிச் சென்றுள்ளனர்.

அடுத்த பணி மே 5 அல்லது மே 12 அன்று நடைபெறும். தேதி மற்றும் பணி நடைபெறவுள்ள கோவில் இறுதியானவுடன் முன்னதாக இங்கு அறிவிக்கப்படும்.

இதற்கிடையே நட்புக்காக இம்மாத இறுதியில் நம் நண்பர் சிவகுமாரன் அவர்கள் தம் ‘ஆத்ம தர்ஷன சேவா சமிதி’ சார்பாக நடத்தும் உழவாரப்பணியில் பங்கேற்க உள்ளேன். விரும்புகிறவர்கள் அக்கைங்கரியத்தில் இணைந்துகொள்ளலாம். முன்கூட்டியே இங்கு பதிவில் தகவல் தெரிவிக்கப்படும்.

சர்வ ஜனோ சுகினோ பவந்து!

[END]

 

15 thoughts on ““என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

  1. டியர் சுந்தர் வெரி குட் வொர்க் கீப் இட் up

  2. திருத்தொண்டு புரியும் திரு உள்ளங்கள் அனைவர்க்கும் எல்லாம் வல்ல அந்த இறைவன் என்றென்றும் துணை நின்று அருள் புரிவாராக !!!

    வாழ்க வளமுடன் !!!

  3. சுந்தர்ஜி,

    பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பதற்கு இணங்க தங்களை சகோதரராக அடைந்ததின் பயனாக கடவுளுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்க பெற்றோம் .

    நன்றி

  4. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் உழவாரப்பணியில் கலந்து கொள்ள முடியுமா என்று நினைத்தேன். ஆனால் அருள்மிகு ஜெகன்னாத பெருமாலின் அருள்லால் சுந்தர்ஜி
    மூலமாக கலந்துகொண்டேன். நன்றி.

  5. உங்கல் சேவை,பொறுமை ரொம்ப அதிகம் சார். தினமும் ஒரு பதிவு போடுரீங்க,ஒரு மணீ நெரம் கம்பூட்டர் முன் உட்கார்ந்தால் போர் அடிக்குது…அந்த கடவுள் அருள் உங்கலுக்கு எப்பவுமே கிடைக்கனும் உங்கல் சேவை தொடரனும் சார்…

    கோயிலை சுத்தம் செய்யும் ஈஸ்வரியின் புகைபடத்தை போட்டிருக்கலாமே சுந்தர் சார்.நாங்கலும் பர்திருப்பொமில்ல?

    1. நாங்க வேலை செஞ்சிகிட்டு இருந்த நேரம் அவங்க மதியம் அன்னதானத்துக்கு தேவையானதை ப்ரிப்பேர் பண்றதுல மும்முரமா இருந்தாங்க.

      (அவங்களை பார்க்கணும்னா… அதான் நம்ம நண்பர்கள் அவங்களை கௌரவிக்கிற மாதிரி ஃபோட்டோ ரெண்டு இருக்கே அது தான் ஈஸ்வரியமா…!)

      – சுந்தர்

  6. by god s grace I could take part ..
    Initially I was not satisfied with cleaning the roof as i wanted to do some challenging tasks , fortunately bi his grace i got the task of cleaning the gigantic door . 🙂
    And i am actually afraid of heights , but the ALMIGHTY has removed that fear bi giving me this chance . Now atleast i wont be afraid of heights ( don know if i am confident enough ).

    Also i was fortunate enough of cleaning the entrance of the moolavar 🙂

    All credit goes to Sundar Anna .

    The day before (saturday )i had some issues . i was doubtful of making it ..then i decided to leave it to GOD and came for our work . After coming back i felt a lot better –ALL this happened because of HIS GRACE ALONE ..!!

    Regards
    R . HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL “

    1. Amazing comment Hari.

      // Now atleast i wont be afraid of heights //

      This is Hari’s touch. Superb lines.

      – Sundar

  7. வணக்கம் சார் ,

    இந்த வார பிரார்த்தனையில் நாட்டில் மழை பெய்ய வேண்டும் என தயவு செய்து வேண்டும் படி அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

  8. உழாவாரப்பணி என்பது பாழடைந்த கோயில்கலை சீரமைத்து கும்பாபிசேகம் செய்வது என்று நினைக்கிறார்கள்?

    இது போன்று சீரமைக்கும் பணிகளும் உழவாரப்பணி என்று புரிந்து கொண்டு அனைவரும் முன்வரவேண்டும்.
    உழவாரப்பணியில் கலந்து கொள்வது என்பது கடவுளை நமக்கு கடன்பட்டவனாக ஆக்குவதுபோல என்று சுந்தர் முன்பு சொல்லியிருந்தது எத்தனை உண்மை என்பதை புரிந்துகொண்டேன்.

    மனம் மிகவும் லேசாக உணர்கிறேன். என் பரம்பரைக்கே இதன் மூலம் ஒரு கவசத்தை உருவாக்கினேன் என்பது தான் உண்மை.

    நம் தளத்திற்கும் உடன் வந்த நண்பர்கலுக்கும் நன்ரியை தெரிவித்துகொள்கிரேன்.

    நம்முடைய பங்களிப்பு அதிகம் ஆகும் போது நாம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் கும்பாபிசேகம் நம் தளம் சார்பாக நடைபெற இறைவன் அருள்புரிவராக ….

    நன்றியுடன்
    -மனோகர்

  9. எனக்கும் கடைசி வரை வருவது டவுட் தான். பெருமாள் மேல் பாரத்தை போட்டேன். அவர் பார்த்து கொண்டார். பணியில் பங்கு கொண்டது மிகவும் சந்தோசம். எல்லாம் கடவுள் கையில்.

  10. வாழ்த்துக்கள்… உங்கள் நற்பணி தொடரட்டும். உங்கள் சேவை மனப்பான்மையை நினைத்து வியக்கிறேன் … சுவாமி விவேகனந்தர் இன்றைக்கு இருந்திருந்தால் உங்கள் குழுவை பார்த்து சந்தோசபட்டிருப்பார்

    1. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி….!
      எங்கள் பொறுப்பு இன்னும் அதிகரிப்பதாக உணர்கிறேன்…
      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *