Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, March 2, 2024
Please specify the group
Home > Featured > உலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)

உலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)

print
மது பக்தி வரலாறு, இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆகியவை ரிஷிகள் என்பவர்கள் இல்லையேல் முழுமை பெற்றிருக்காது. வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு ரிஷிகளே காரணம். இவர்கள் இன்றி வரலாறே இல்லை எனலாம்.

கடும்தவம் செய்து இறையருள் பெற்று பின்னர் தாம் பெற்ற இறையருளால் பிறருக்கு நன்மைகள் செய்தவர்கள் ரிஷிகள். வாழும் காலத்தில் எத்தனையோ தியாகங்களை செய்து பாமரரும் கடைத்தேறும் பக்தி மார்க்கத்தை உலகிற்கு சொன்னவர்கள் ரிஷிகள். பல ரிஷிகள் நினைத்த நேரத்தில் இந்திராதி தேவர்களையும் மும்மூர்த்திகளையும் சந்திக்கும் வல்லமையை பெற்றிருந்தார்கள். இவர்களின் சாபத்தால் பல சாம்ராஜ்ஜியங்கள் மண்ணோடு மண்ணாகியிருக்கின்றன. அதே சமயம் இவர்களின் ஆசியால் பல சாம்ராஜ்ஜியங்கள் தழைத்து ஓங்கி வளர்ந்திருக்கின்றன.

நம் நாட்டில் எத்தனையோ ரிஷிகள் வாழ்ந்திருக்கின்றனர். தற்போதும் சூட்சும சரீரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். (இவர்களில் பலருக்கு நம் நாட்டில் பல இடங்களில் மகாசமாதி உள்ளது!) அவர்களை பற்றிய சரியான தகவல்களை திரட்டி அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் அற்புதங்களை நினைவு கூர்வதே இந்த பகுதியின் நோக்கம்.

வசிட்டர், அத்ரி, பிருகு, புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி உள்ளிட்ட சப்த ரிஷிகள்,  விஸ்வாமித்திரர், துர்வாசர், அகத்தியர் போன்றவர்களை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்கள் தவிர நூற்றுகணக்கான ரிஷிகள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு சிறப்பு தனித்தன்மை இருக்கிறது. இவர்களை பற்றிய ஒரு பிரம்மாண்ட தொடர் தான் இந்த பகுதி.

இணையத்தில் ரிஷிகளின் வரலாறுகளுக்கிடையே பல முரணான தவறான தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் சரியான தகவல்களை நிச்சயம் இந்த பகுதியில் நீங்கள் அறியலாம். நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகே தகவல்கள் சேர்க்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு ததீசி முனிவரின் உடலை பசு நாவினால் நக்குவது போல இருக்கும் இந்த காட்சிக்கு சரியான விளக்கம் எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்த விளக்கங்களில் எனக்கு திருப்தியில்லை. நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு, ‘The Healing Power of Gem stones in Tantra, Ayurveda and Astrology’ என்னும் நூலில் தான் சரியான விளக்கம் கிடைத்தது. (ஒரு வேளை வேறு ஏதாவது நூல்களில் புராணங்களில் கூட விளக்கம் இருக்கலாம். அது எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் கூறவும்).

இந்த தொடரை படிக்கும்போது இந்த ரிஷிகள் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் அதை தயங்காமல் பகிர்ந்துகொள்ளவும். உங்கள் தகவல்களின் உறுதித் தன்மையில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதை குறிப்பிட்டு பகிர்ந்துகொள்ளவும். நாளை இது தொடர்பாக தகவல்களை திரட்டுபவர்களுக்கு பதிவை படிக்கும்போது உதவியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

இந்த தொடரின் முதல் பாகத்தை அலங்கரிப்பவர் ததீசி மகரிஷி. காரணம்? படியுங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள்

உலகின் முதல் ORGAN DONOR – தியாகமே உருவான ததீசி மகரிஷி!

ததீசி மகரிஷி வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவரது பெற்றோர் அதவர்வண வேதத்தை இயற்றிய அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி என்பவர்களாவர். இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா. பிப்பலாத மகரிஷி இவர்களின் புதல்வரே.

ததீசி முனிவர் மிகச்சிறந்த சிவபக்தர். அவர், தம் மனைவியுடன் பல்லாண்டு காலம் நைமிசாரண்யத்தில் (இன்றைய லக்னோ அருகே, உ.பி.)  காலம் தவம் புரிந்து சிவனைப் பூஜித்து வந்தார். ஒருநாள் க்ஷுவது என்ற மன்னனுடன் கருத்து வேறுபாடு காரணமாக இவர் போர் புரியும் சூழல் ஏற்பட்டது. போரில் இவர் க்ஷுவது மன்னனின் பின்னந்தலையை தாக்க அவன் மூர்ச்சித்து வீழ்ந்தான். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து முன்பை விட உக்கிரத்துடன் போரிட்டான். ததீசியின் உடலை க்ஷுவது மன்னன் பிளந்தான். ததீசி முனிவர் சுக்கிராச்சாரியாரின் உதவியை நாட அவர், இவரது காயங்களை தனது யோக சக்தியினால் குணப்படுத்தினார். பின்னர் இவருக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஆசாரியார் அருளால், பிளந்த உடல் வஜ்ர உடலாக மாறியது. இருப்பினும் செய்த தவறுக்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்.

இவரது தவத்தை கண்டு இரங்கிய சிவபெருமான் இவருக்கு காட்சி தந்து மூன்று வரங்களை இவருக்கு அருள்கிறார்.

1) இவரது எலும்புகள் வஜ்ஜிரத்தை (மின்னல்) போல உறுதியுடையதாகும்.

2) இவரை எவரும் கொல்ல முடியாது

3) இவரை எவரும் துன்புறுத்தவும் முடியாது.

இவரது தபோ வலிமை மற்றும் இவருக்கு உள்ள சக்தி பற்றி கேள்விப்பட்டிருந்த அசுரர்கள் எவருக்கும் இவரை சீண்ட தைரியம் வந்ததில்லை. எனவே இவரது பேரைக் கேட்டாலே அலறியடித்து ஓடுபவர்களாக இருந்தனர்.

பாற்கடலை கடைந்த போது, தங்களது ஆயுதங்களை வைக்க பாதுக்காப்பான இடம் தேடி அலைந்த தேவர்களுக்கு ததீசி முனிவர் தான் நினைவுக்கு வந்தார். பாற்கடலை கடைந்து அமுதத்தை உண்டுவிட்டால் அதற்க்கு பிறகு சாகாவரம் பெற்றுவிடுவோம் எனினும் ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அவரிடம் கொடுத்து விட்டனர்.

ததீசி முனிவரும் அதன் படி அவற்றை பாதுகாத்துவந்தார். இருப்பினும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாதல், ஆயுதங்கள் சக்தியிழந்துவிடும் தனக்கும் அதை பாதுகாப்பது பெரும் பாடாக இருக்கிறது என்று கருதிய ததீசி முனிவர், தனது யோகசக்தியினால் அனைத்து ஆயுதங்களையும் திரவ வடிவமாக்கிப் பருகிவிட்டார். அவை அவரது முதுகெலும்பில் சென்று ஐக்கியமாகிவிட்டன.

@ Paramarth Niketan in Rishikesh

இந்நிலையில் விருத்ராசுரன் என்ற அசுரன் பிரம்மாவைக் குறித்துத் பல ஆண்டுகள் கடுந்தவமிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார். அப்போது பிரம்மாவிடம் தான் உலோகத்தாலான எந்த ஒரு ஆயுதத்தாலும் பஞ்ச பூதங்களாலும் உலகில் தோன்றிய எந்த உயிரினத்தாலும் சாகக் கூடாது என்று வரம் கோரினான். பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார்.

பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.யாராலும் அவனை வெல்ல இயலவில்லை. ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர். எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்கினாலும்  மரணம் கிடையாது என்ற சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை. தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர்.

உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார். “ததீசி முனிவர் மனமுவந்து தனது முதுகெலும்பை  கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்” என்றார்.

பூலோகம் முழுவதும் தேடி நைமிசாரண்யம் அருகே ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ததீசி மகரிஷியை  கண்டான். நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான். வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி இந்திரனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

தான் வந்த காரணத்தையும் சிவபெருமான் கூறியதையும் கேட்டபோது, “ஓ…. இதற்காகத் தான் அப்படியெல்லாம் நடந்ததா?” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை அல்லவா…?

ததீசி முற்றும் துறந்தவர். இந்த உடல் மீது பற்றற்றவர். மேலும் உலக நன்மைக்காகவும் விருத்ராசுரன் அழிக்கப்படவும் தனது எலும்பு பயன்படுவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“தாரளமாக எடுத்துக்கொள் தேவேந்திரா…! இது நான் செய்த பாக்கியம்!!” என்கிறார் புன்முறுவலுடன்.

ததீசி முனிவர் சம்மதித்துவிட்டாலும் இவரது முதுகெலும்பை சேதமின்றி எப்படி எடுத்துக்கொள்வது என்று தேவேந்திரனுக்கு புரியவில்லை. அவனது தவிப்பை உணர்ந்த ததீசி மகரிஷி, “தேவந்திரா பசுமாடு ஒன்றை அழைத்து வா…. என் உடல் முழுதும் உப்பை தடவு. நான் யோக நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறேன். பசுவை கொண்டு என் உடல் மீது உள்ள உப்பை நாவினால் அகற்றச் செய். சதை அப்படியே தனியே வந்துவிடும். பின்னர் நீ தேவையான எலும்பை சேதமின்றி எடுத்துக்கொள்ளலாம்…” என்கிறார்.

அதன்படியே தேவேந்திரன் ஒரு பசுவைக் கொண்டு ததீசி முனிவரின் சருமத்தை ருசிக்கச் செய்து எவ்வித சேதமும் இன்றி முதுகெலும்பை எடுத்துவிடுகிறான்.

………………………………………………………………………………………………
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் 72)

மேற்படி குறளை நிச்சயம் திருவள்ளுவர் ததீசி முனிவரை மனதில் வைத்தே எழுதியிருக்கவேண்டும். ஏனெனில், திருக்குறளில் மறைபொருள் பல உள்ளன. அதாவது நேரடியாக பொருள் தருவது ஒன்று. மறைமுகமாக பொருள் தருவது ஒன்று என பல குறட்பாக்கள் உள்ளன.
………………………………………………………………………………………………

பின்னர் அதை ஆயுதம் செய்ய தேவலோக சிற்பி விஸ்வகர்மாவிடம் கொடுக்கிறான்.
விஸ்வகர்மா அந்த எலும்பை செதுக்கி வஜ்ராயுதம் செய்கிறார். அவர் அதற்காக அந்த எலும்பை செதுக்கும்போது அதன் ஒரு சில துளிகள் பூமியில் சில இடங்களில் விழுகின்றன. அந்த துளிகளின் வீரியத்தால் அங்கு வைர சுரங்கங்கள் தோன்றுகின்றன. பூமியில் வைர சுரங்கங்கள் தோன்றிய வரலாறு இது தான். வஜ்ராயுதத்தின் மற்ற துளிகள் பட்ட இடங்களில் நவரத்தினங்களில் மற்ற ரத்தினங்கள் தோன்றின.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற வஜ்ராயுதத்தை வைத்து விருத்ராசுரனை இந்திரன் வென்று விடுகிறான்.

இவ்வாறாக ததீசி முனிவரின் தியாகத்தினால் அமரர் குலம் பெரும் ஆபத்திலிருந்து தப்புகிறது.

ததீசி மகரிஷியின் மகாசமாதி, மிஸ்ரிக், சீதாப்பூர், உ.பி.

 

* குபன் என்கிற அரசனுக்கு உதவுவதற்காக விஷ்ணு ததீசி முனிவர் மீது சக்ராயுதத்தை வீச, எவரையும் அழிக்கவல்ல சக்ராயுதம் இவரை அழிக்க முடியாமல் சேதமுற்றது. அது கண்டு வருந்திய திருமால், பூவுலகில் திருமால்பூர் என்று வழங்கப்படும் தளத்திற்கு வந்து இத்தலத்தை அடைந்து, அம்பிகை பூஜித்த மணலால் ஆன மணிகண்டேஸ்வரரை தினமும் ஆயிரம் தாமரைப்பூக்களால் அர்ச்சித்து தன் சக்ராயுதத்தை மீட்டு அருள வேண்டினார். அவரின் பக்தியை சோதிக்க எண்ணிய ஈசன், ஒரு நாள் அந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைந்துபோகச் செய்தார். ஒரு மலர் குறைவதைக் கண்ட திருமால், மலர் போன்ற தன் கண்ணை அப்படியே அகழ்ந்து எடுத்து ஈசனை அர்ச்சித்தார். ஈசன் அவரை, ‘செந்தாமரைக் கண்ணா’ என்றழைத்து மகிழ்ந்து, சக்ராயுதத்தையும் மீட்டுத் தந்தார். தனக்கு அருள்புரிந்தது போல் இத்தலத்தை தரிசிப்பவர் அனைவருக்கும் அருள் புரிய ஈசனை திருமால் கேட்டுக் கொண்டார். பிறகு, ஈசன் கருவறையின் முன் நந்தியின் பின்னால் ஈசனை நோக்கி கை கூப்பிய நிலையில் நிலை கொண்டார் என காஞ்சிப்புராணம் கூறுகிறது.

* கருடன் தனது தாய் கத்ருவின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு சுவர்க்கத்திலிருந்து அமிர்தத்தை கவர்ந்துவர சென்றபோது, இடையே பலரிடம் போரிட வேண்டியிருந்தது. அவரின் பராக்கிரமத்தின் முன் இந்திரனால் ஈடுகொடுக்க முடியவில்லை. கடைசியில் வஜ்ராயுதத்தை எடுத்து வீசினான். வஜ்ஜிராயுதத்தின் மகிமையையும் ததீசி முனிவரின் தியாகத்தையும் உணர்ந்திருந்த கருடன், அவருக்கு மரியாதை அளிக்க வேண்டி தனது ஒரே ஒரு சிறகை மட்டும் உதிர்த்தான்.

* அனுமன் மிகப் பெரிய பராக்கிரமசாலி என்பது தெரியும். குழந்தையாக இருக்கும்போது லட்டு என்று நினைத்து சூரியனை விழுங்க அவன் முயற்சித்து சூரியனை நோக்கை பறக்க, இதை கண்டு பயந்த இந்திரன் வஜ்ராயுதத்தை வீச பால அனுமன் மூர்ச்சித்து வீழ்ந்துவிடுகிறார். அது கண்டு கோபமுற்ற வாயுவை சமாதானப்படுத்தவேண்டி அனைத்து தேவர்களும் அனுமனுக்கு வரமளிப்பது தனிக் கதை.

சமாதி :

* ததீசி முனிவரின் சமாதி இன்றும் உத்திரப் பிரதேசத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரிக் என்னும் இடத்தில் உள்ளது. (இங்கு தான் பல புராணங்களில் குறிப்பிடப்படும் நைமிசாரண்யம் என்னும் வனம் இருந்தது).

தற்கால சிறப்பு :

* இந்திய அரசின் உயர் விருதான பரம் வீர் சக்ராவின் மேல் இவரது முதுகெலும்பின் படமே (‘வஜ்ரா’) உள்ளதென்பது சிறப்பான செய்தியாகும். இவரது தியாகத்தை நினைவு கூறும் விதமாக இவரது முதுகெலும்பு உருவம் (வஜ்ரா) அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————–
ரிஷிகளின் இந்த புனித வரலாற்றை படிக்கும் அனைவரும் அந்த ரிஷிகளின் அருளால் எல்லா வளமும் நலமும் பெற பிரார்த்திக்கிறேன்!
—————————————————————————–

16 thoughts on “உலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)

 1. குரு வாரத்தில் (வியாழக்கிழமை) ஒரு மகா ரிஷி அவர்களை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. மகான்களும், மகா ரிஷிகளும் வாழ்ந்த பூமிதனில் நாம் பிறந்ததே பெரும் பாக்கியம். அவர்களை பற்றி நமது தளம் மூலம் அறிந்துகொள்வது நங்கள் செய்த பாக்கியமே.

  உங்களது மேலான சேவைக்கு மிக்க நன்றி ஜி.

  ப.சங்கரநாராயணன்

 2. சுந்தர்ஜி,

  அருமையோ அருமை
  என்ன தவம் செய்தனை. குருவாரத்தில் மக ரிஷி பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.இப்படி அறிய தகவல்களை தொகுத்து வழங்குவதில் தங்களுக்கு நிகர் எவரும் உண்டோ ………

  நன்றி உங்களது மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள்.

  1. இது திட்டமிட்டு நடக்கவில்லை. ஏனெனில் கடந்த மூன்று நாட்களாக இந்த பதிவை எழுதிவந்தேன். நேற்றே போஸ்ட் செய்வதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு காலை தான் போஸ்ட் செய்ய முடிந்தது. அது குருவாராமாக அமைந்ததில் உண்மையில் மகிழ்ச்சி. நண்பர் சங்கரநாராயணன் சொல்லித் தான் அதையும் உணர்ந்தேன். உண்மையில் ததீசி மகரிஷியின் ஆசி தான் காரணம் என்று கருதுகிறேன்.

   – சுந்தர்

 3. நண்பர் சங்கர நாராயணனும் சகோதரி உஷா அவர்களும் கூறியதை போல குருவாரத்தில் நம் ரிஷிகளின் வரலாறு பற்றிய பதிவு துவங்கியது வெகு பொருத்தம். அந்த சிவபெருமான் ஆசி நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது என்றே தோன்றுகிறது.

 4. ரிஷிகள் பற்றி தேறிந்து கொள்ள மீக அருமையான தொடர். நன்றி .

 5. ததீசி மகரிஷி வரலாறு…மிக அருமை. நன்றி சுந்தர்.

 6. அருமையான ஆரம்பம் …. உங்கள் முயற்ச்சிக்கும் தேடலுக்கும் hats off ..வஜ்ராயுதத்துக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது தெரியாது … மிக்க நன்றி

  திருவருள் துணை நிற்கட்டும்

 7. நல்லதோர் தகவலுக்கு நன்றி.பரம்வீர் சக்ரா விருதில் மாமுனியின் முதுகு எலும்பு படம் உள்ளதை அறிந்து மகிழ்ந்தோம்.

 8. ஐயா
  எனக்கு கண்டு மகரிஷி பற்றியும் அவரது மகள் மாரிசா 10 ஆடவர்களை மணந்ததாக கூறப்படுகிறது அதுபற்றி விரிவான விளக்கம் தேவை…அதுபற்றி கூறுங்களேன்

 9. வணக்கம்…வெரி இண்டேறேச்டிங் ஸ்டோரி ..மிக்க நன்றி. ஹரி ஓம் …ஸ்ரீனிவாசன் கே ஐயர்

 10. மகரிஷியின் பிறந்த நட்சத்திரம் என்ன .

 11. சப்த ரிஷிகளின் நட்சத்திரம் என்னென்ன . தயவு செய்து தெரிவிக்கவும் .வியாச மகரிஷியின் நட்சத்திரம் ஆவணி கேட்டை .

 12. ரிஷி சமாதிகளை நட்ச்சத்திரத்துடன் தெரிவிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *