Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, July 21, 2024
Please specify the group
Home > Featured > “நல்லவர் என்றும் கெடுவதில்லை” – பாலம் கலியாணசுந்தரம் ஐயா கூறும் அனுபவ முத்துக்கள்!

“நல்லவர் என்றும் கெடுவதில்லை” – பாலம் கலியாணசுந்தரம் ஐயா கூறும் அனுபவ முத்துக்கள்!

print
பாலம் கலியாணசுந்தரம் ஐயாவை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் எங்கள் பேச்சினூடே ஏதாவது ஒரு சிலிர்ப்பூட்டும் தகவல் அல்லது நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றை அவர் கூற கேட்பதுண்டு. கேட்கும்போது வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவேன். இப்படியெல்லாம் கூட இந்த உலகத்துல மனுஷங்க இருக்காங்களா? இப்படியெல்லாம் கூட இந்த கலியுகத்துல நடக்குதா? என்று ஆச்சரியம் தான் மேலோங்கும். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும்போது இப்படி அவரது அனுபவ முத்துக்களை கொஞ்சம் கொஞ்சம் அள்ளி வருவது நாளடைவில் வழக்கமாகிவிட்டது. நேரமிருக்கும்போது அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள குறிப்புக்கள் எடுத்து வைத்துக்கொள்வேன். அது பற்றி தொடர் கூட நம் தளத்தில் துவங்கி மூன்று பதிவுகள் அளித்திருப்பேன். அதன் பிறகு நேரமின்மையால் முடியவில்லை. இதோ அதன் தொடர்ச்சி.

நம் தளம் சார்பாக நடைபெற்ற மகா பெரியவா மகிமைகள் நிகழ்ச்சியில் திரு.சுவாமிநாதனை கௌரவிக்கும் பாலம் ஐயா

சமீபத்தில் அவரை சந்தித்தபோது அவர் நண்பர் – மிகப் பெரிய மனிதர் ஒருவர் – வாழ்வில் நடந்ததாக அவர் கூறியதை முதலில் இங்கே நம்ம ஸ்டைலில் ஒரு கதை போல தந்திருக்கிறேன். இதன் தொடர்ச்சி ஒன்று இருக்கிறது. அது இன்னும் பிரமாதமாக இருக்கும். அதை நிச்சயம் ஒரு சில நாளில் கூறுகிறேன். மற்றபடி முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி இனி அடுத்தடுத்து நிச்சயம் இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். ஆர்வம் இருந்தும் நேரமின்மையால் தான் முடியவில்லை!

பெருந்தன்மைக்கு கிடைத்த பெரும்பரிசு !

“என்ன பெருந்தன்மையா இருந்து என்ன சார் பிரயோஜனம்? என்னையும் எவனும் மதிக்கலை… என்னோட பெருந்தன்மையையும் யாரும் புரிஞ்சிக்கலே… உலகமும் மத்தவங்களும் போற போக்கை பார்க்கும்போது… ஒரு வேளை நாம பொழைக்கத் தெரியாத ஆளோன்னு எனக்கு டவுட்டு வந்துடுது சார்..!” – அப்படின்னு அடிக்கடி நினைக்கிறா ஆளா நீங்க? உங்களுக்கு தான் இந்த பதிவு.

இது ஒரு நிஜ சம்பவம்!

சென்னை…..

30 ஆண்டுகளுக்கு முன்பு….

வாழ்க்கையில் முன்னுக்கு வரத் துடிக்கும் இளைஞன் அவன். ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் கிளார்க்காக வேலைக்கு சேர்கிறார். தொழில் விரிவடைந்து இவருக்கு ஓரளவு ஒரு பொறுப்பான பதவி கிடைக்கிறது.

அந்த நேரத்தில் நகரின் ஒரு முக்கியப் பகுதியில் ஒரு மிகப் பெரிய இடம் விற்பனைக்கு வருகிறது. இடத்தை பார்வையிடும் ஒரு பெரிய கோடீஸ்வரர் அந்த இடத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் அந்த பிரம்மாண்ட இடத்தை ஒட்டி ஓரமாக இருக்கும் ஒரு சிறு வீடு அவர் கண்ணை உறுத்துகிறது. எதிர்கால விரிவாக்கத்தையும் வசதியையும் மனதில் கொண்டு அந்த வீட்டையும் இதனுடன் சேர்த்து ஒரேயடியாக வாங்கி போட விரும்புகிறார்.

அந்த வீட்டின் சொந்தக்காராரை கேட்கும்போது சினிமாவில் வருவது போல “நீ எவ்ளோ கோடி கொடுத்தாலும் என்னால வீட்டை விற்கமுடியாது…ஸாரி!” என்று கூறி மறுத்துவிடுகிறார்.

கோடீஸ்வரரோ இந்த வீட்டையும் சேர்த்து வாங்குவது என்று உறுதியாக இருக்கிறார். “இந்த இடத்தையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் நான் வாங்குகிறேன் இல்லையென்றால் எனக்கு இந்த இடம் வேண்டாம்” என்று ரியல் எஸ்டேட் கம்பெனியிடம் கூறிவிடுகிறார்.

மிகப் பெரிய டீல் ஒன்று போய்விடுமோ என்று பயந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முதலாளி அந்த இளைஞனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். “அந்த வீட்டுக்காரரை பார்த்து பேசு… எப்படியாவது இதுக்கு அவரை ஒப்புக்க வை… நமக்கு இந்த இடத்தை விக்கிறது மூலமா பல கோடி லாபம் கிடைக்கும். வெற்றிகரமா டீல் முடிஞ்சா உனக்கு நான் ஏதாவது செய்றேன்” என்கிறார்

இந்த இளைஞனும் அந்த வீட்டுக்காரரை சென்று பார்த்து, தங்களது நிறுவனத்துக்கு இதன் மூலம் கிடைக்கவிருக்கும் பயனையும் லாபத்தையும் மறைக்காமல் எடுத்து கூறுகிறார். மேலும் தன்னுடைய வாழ்க்கைக்கும் இந்த டீலிங் மிகப் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்றும் இதில் ஒருவேளை தான் வெற்றி பெற்றுவிட்டால் தன் முதலாளி தனக்கு மிகப் பெரிய அளவில் ஏதாவது செய்வதாக வாக்களித்திருக்கிறார் என்றும் தான் முன்னேறுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைப்பது மிக அரிது என்றும் எப்படியாவது உதவுமாறும் கேட்டுக்கொள்கிறார். மேலும் அப்படி இவர் விட்டுத் தரும் பட்சத்தில் இவருக்கு வேறு ஒரு பகுதியில் ஒரு நல்ல இடத்தை இலவசமாக தருவதாகவும் கூறுகிறார். வீட்டிற்கு விலையாக அவர் என்ன தொகை கேட்டாலும் தருவதற்கு தயாராக இருப்பதாக கூறுகிறார்.

இந்த இளைஞனின் தன்னம்பிக்கையையும் நேர்மையையும் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்கிற துடிப்பையும் புரிந்துகொள்ளும் அந்த வீட்டுக்காரர், கடைசீயில் வீட்டை விற்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் “கூடுதல் விலையெல்லாம் எதுவும் வேண்டாம்… மார்க்கெட்டில் என்ன ரேட் போகிறதோ அந்த ரேட் கொடுத்தால் போதும்” என்றும் கூறிவிடுகிறார்.

காலம் உருண்டோடுகிறது. பல வருடங்கள் கழிகின்றன.

வீட்டை விட்டுக்கொடுத்தவர் புது இடத்தில் எளிமையாக வீட்டை கட்டி மிச்சமிருந்த பணத்தில் பல தொழில்களில் முதலீடு செய்கிறார். வாழ்வில் ஒவ்வொரு படியாக முன்னேறுகிறார். ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தொழிலில் சற்று அகலக் கால் வைத்துவிட, ஒரே நாளில் பாதாளத்தில் வீழ்ந்துவிடுகிறார்.

“உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கிற கண்ணதாசனின் வரி அவர் வாழ்வில் உண்மையாகிறது.

ஒரு நாள் அவர் வீட்டின் கதவு தட்டப்பட, யாரென்று சென்று பார்க்கிறார்.

“உங்க கிட்டே கொஞ்சம் பேசனும்”

சற்று யோசிக்கிறார்… யாராயிருக்கும்…. “சரி முதல்ல உள்ளே வாங்க” வந்தவரை உள்ளே வரவேற்று அமரவைக்கிறார்.

“பிசினஸ்ல நீங்க ரொம்ப நஷ்டமடைஞ்சி கஷ்டத்துல இருக்கிறதா கேள்விப்பட்டேன். இந்தாங்க இதை இப்போதைக்கு வெச்சிக்கோங்க. நிலைமையை சமாளிங்க… அப்புறமா வேணும்னா இன்னும் கூட தர்றேன் ….”

வந்தவர் ஒரு பெரிய பெட்டியை திறந்து காண்பிக்க…. பெட்டி முழுதும் ரூபாய் நோட்டு கட்டுக்கள். இவர் கனவிலும் எதிர்பார்க்காத ஒரு மிகப் பெரிய தொகை அது.

“நீங்க யார்? இதை எதுக்கு எனக்கு செய்யனும்?”

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு “அன்னைக்கு நீங்க அந்த இடத்தை விட்டுக் கொடுத்ததால வாழ்க்கையில் மிகப் பெரிய பிரேக் ஒன்னு கிடைச்சு அது மூலமா ரியல் எஸ்டேட் தொழில்ல ஓஹோன்னு வந்து அதுக்கப்புறம் பெரிய ஆளாயிட்டேன். அன்னைக்கு மட்டும் நீங்க அந்த இடத்தை தரலேன்னா… என் வாழ்க்கை எந்த திசையில எப்படி போயிருக்கும்னு நினைச்சு கூட பார்க்கமுடியலே… ஒரு மிகப் பெரிய தொகையை அந்த வீட்டுக்கு தர்றோம்னு சொன்னப்போ கூட அதெல்லாம் வேண்டாம்… மார்கெட்ல என்ன ரேட்டோ அதை கொடுத்தா போதும்னு சொன்ன உங்க நல்ல மனசுக்கு என்னோட வெகுமதி இது. மறுக்காம வாங்கிக்கோங்க. என்னோட நன்றிக் கடனை தீர்க்கிறதுக்கு இதை விட பெரிய சந்தர்ப்பம் கிடைக்காது!”

இவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. ஒரு பக்கம் நெகிழ்ச்சி.

“நான் வாங்கிக்கிறேன்… ஆனால் ஒரு நிபந்தனை… இதை கடனா தான் வாங்கிக்குவேன். அதுவும் வட்டியில்லா கடனா கொடுக்குறதா இருந்தா வாங்கிக்கிறேன். மேலும் தவணை முறையில் இந்த பணத்தை திருப்பிக்கொடுப்பேன். அது ஓ.கே.ன்னா வாங்கிக்கிறேன். இல்லேன்னா எனக்கு இந்த பணம் வேண்டாம்….ஸாரி….!” என்கிறார்.

அவருக்கு இவர் எப்படியாவது பணத்தை பெற்றுக்கொண்டால் போதும் மற்றதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது.

“அப்படியே செய்ங்க… ஆனா எனக்கு திருப்பி கொடுக்கணும்னு நீங்க உங்களை வருத்திக்ககூடாது. உங்களை வருத்திக்காம கொடுக்குறதா இருந்தா அந்த தவணையை வாங்கிக்கிறேன். இல்லேன்னா வாங்கிக்கமாட்டேன்… அதுவும் தவணையை இப்போவே ஸ்டார்ட் பண்ணவேண்டாம். ஒரு அஞ்சாறு மாசம் போகட்டும்…” என்று பதில் நிபந்தனை விதிக்கிறார்.

அவரும் ஒப்புக்கொள்ள தொகையை பெற்றுக்கொள்கிறார்.

என்னடா இது அதிசயமா இருக்கு. நம்பமுடியலே… இவர் என்னடான்னா என்னைக்கோ விட்டுக்கொடுத்ததை இன்னைக்கு ஞாபகம் வெச்சிருந்து வீடு தேடி போய் பணத்தை கொடுக்குறார். அவர் என்னடான்னா அதை இனாமா வாங்கமாட்டேன்… கடனா வேணும்னா கொடுங்க அப்படிங்கிறார்…. இந்த காலத்துல இப்படியும் சிலர் இருக்காங்களா?

…..என்று தானே உங்களுக்கு தோன்றுகிறது….??

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
– (மூதுரை)

பொருள் : தென்னையானது தன் அடியால் உண்ட தண்ணீரை சுவையுள்ள இளநீராக்கித் தன் தலையாலே தருதலால், நற்குணமுடைய ஒருவனுக்கு உதவி செய்தால், அவ்வுதவியை, அவன் எப்பொழுது செய்வானோ, என ஐயுற வேண்டுவதில்லை.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல… லியோ ஹவுசிங் மற்றும் சாய்ராம் குழும கல்வி நிறுவனங்களின் அதிபர். திரு.லியோ முத்து அவர்கள். என்ஜீனியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பார்மாசூட்டிக்கல், கடல்சார் உணவுகள் தயாரிக்கும் கம்பெனி என்று ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை தற்போது நிர்வகித்து வருபவர்.

 

 

இந்த சம்பவம் உணர்த்தும் நீதி :

உங்களின் தியாகத்துக்கும் பெருந்தன்மைக்கும் உரிய பரிசு தக்க நேரத்தில் உங்களிடமே திரும்பி வரும். இது சம்பந்தமான விதிகள் இயற்பியல் விதிகள் போல மிக மிக துல்லியமானவை. சுவற்றில் அடித்த பந்து திரும்பி உங்களிடமே வருவது போல, உங்களின் நல்ல செயலின் கர்மா உங்களுக்கு அதற்குரிய பலனை வழங்காமல் போகவே போகாது.

 

11 thoughts on ““நல்லவர் என்றும் கெடுவதில்லை” – பாலம் கலியாணசுந்தரம் ஐயா கூறும் அனுபவ முத்துக்கள்!

 1. நிச்சயம் இது உண்மை……………….. நாம் சேர்ர்த்து வைக்கும் புண்ணியம் கண்டிபாக ஒரு நாள் கைகொடுக்கும்……..

 2. சுந்தர்ஜி,
  என்ன ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.

  நீங்கள் கொடுக்கும் article ஓவொன்றும் சூப்பர். முடிந்த வரை நல்லதை செய்து வர வேண்டும்.

 3. “சுவற்றில் அடித்த பந்து திரும்பி உங்களிடமே வருவது போல, உங்களின் நல்ல செயலின் கர்மா உங்களுக்கு அதற்குரிய பலனை வழங்காமல் போகவே போகாது”. —- உண்மை தான் சுந்தர். இன்னைக்கு நாம வீசுற பந்து திரும்பவும் கண்டிப்பா நம்ம கிட்டே தான் வரும். இந்த உண்மை தெரியாம தான் நம்மில் நிறைய பேர் இருக்கோம். நல்லது விதைச்சா தான் நல்லது கிடைக்கும்.

  1. “சுவற்றில் அடித்த பந்து திரும்பி நம்மிடமே வந்தால் சமாலிக்கலாம்
   சுவற்றில் அடிக்காத பந்து கூட வந்து தாக்கும்போது சமாலிக்க
   முடியல சார்..

   “உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
   உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்”100% உன்மை..

 4. \\உங்களின் நல்ல செயலின் கர்மா உங்களுக்கு அதற்குரிய பலனை வழங்காமல் போகவே போகாது\\

  ஆணித்தரமான அனுபவம் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி .

  எந்த ஒரு சோதனை வந்தாலும் எல்லாம் அவன் செயல் அன்றோ ……

 5. இந்தப்பதிவினை படிக்கும்போது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் நினைவில் வருகிறது. தினமும் நான் டூ வீலரில் பாரிமுனை நோக்கி செல்லும்போது யாராவது ஒருவரை வழியில் நிறுத்தி ஏற்றிச்செல்வது வழக்கம். ஒரு நாள் அண்ணா சாலையில் பெரியார் சிலையிலிருந்து சிவானந்தா சாலையின் திருப்புமுனையில் ஒரு நண்பரை (கை முறிவு ஆனவர்) என் வண்டியில் ஏற்றிக்கொண்டேன். அவர் அதே சாலையில் உள்ள காவல் துறை அலுவலகத்தின் அருகில் இறங்கிச்செல்லும்போது, திடீரெனெ என் வண்டி நின்று போய் புறப்பட மறுத்தது. உண்மையில் பெட்ரோல் தீர்ந்த நிலையில் அருகில் எந்த பெட்ரோல் பம்ப்பும் இல்லாத இடத்தில் அவர் திரும்பி வந்து என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அங்குள்ள வண்டிகளில் இருந்து பெட்ரோல் பெற்று உதவினார். அவரின் கருணையால் நானும் என்னுடைய அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று விட்டேன்.

  காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
  ஞாலத்தின் மாணப்பெரிது
  என்ற வள்ளுவர் வாக்கு உண்மையாக உணர்ந்தேன். இது என்றும் என்வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி. அன்பே சிவம்

 6. லியோ ஹவுசிங் , சாய்ராம் கல்வி குழுமம் அதிபர் உயர்திரு. லியோ முத்து அவர்களின் உயர்வுக்கு அவர் தர்ம குணமும், தர்ம மனமும் தான் அடிப்படைக் காரணம். இறையருளால் தொடர்ந்து வளரட்டும் அவர்கள் திருப்பணி.

  பாலம் ஐயா அவர்களின் மக்கள் தொண்டும் எண்ணில் அடங்காது. இறைவனைத் தவிர, அவர்கள் செய்யும் நற்பணிகள் யாருக்கும் தெரியாது. அவர்கள் பிறர் புகழ நற்பணி செய்ய விரும்புவதில்லை.

  ரைட் மந்திரா முலம் சுந்தர் ஐயா அவர்களும் மக்கள் பயன்பெற பல நற்பணிகள் செய்து வருகிறார்கள். தொடரட்டும் உங்கள் தொண்டு

  பாரிஸ் ஜமால் , நிறுவனத் தலைவர், பிரான்சு தமிழ் சங்கம் ,பாரிஸ் .

  1. தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்திற்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
   – சுந்தர்

 7. திரு.லியோ முத்து அவர்களின் வாழ்கை சம்பவம், எல்லோருக்கும் ஒரு முன் மாதிரியாக உள்ளது.நன்றி.

 8. சுந்தர் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. பலருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *