உலகம் முழுவதும் 6 வினாடிக்கு ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஏற்பட வயது வித்தியாசம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்கலாம்.மூளையிலும், தண்டு வடத்திலும் நரம்புகள் ஆரம்பித்து தசைகளை இயக்குகின்றன. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்தாலோ ரத்தக் குழாய் வெடித்தாலோ மூளையில் பாதிப்பு ஏற்படும். அப்போது மூளையின் எந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைகிறதோ அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி செயல் இழந்து போகும்.வாய் கோணுதல், வார்த்தைகள் குளறுதல், நடக்கும் போது தள்ளாடுதல், தடுமாறுதல், கை-கால்கள் தூக்க முடியாமல் உணர்ச்சியற்று போதல் போன்றவை பக்கவாதத்திற்கான அறிகுறிகள். பாதிப்பு ஏற்பட்ட 4 1/2 மணி நேரத்திற்குள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பக்கவாதத்தை குணமாக்க முடியும்.
இந்த சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாகும். இதற்கான மருந்துகள் தனியார் ஆஸ்பத்திரிகளில்தான் கிடைத்து வந்தது. பக்க வாதம் ஏற்பட்டவுடன் 3 மணி நேரத்திற்குள் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்தினால் பக்கவாதத்தை உடனே குணப்படுத்த முடியும். இந்த ஊசி மருந்து ரத்தக்கட்டி அடைப்பை நீக்கும். இதனால் பக்கவாதம் குணமாகும்.
இந்த ஊசி மருந்து தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இலவசமாக போடப்படுகிறது. இதன் மூலம் பக்கவாத நோயால் பாதிக்கப்படும் ஏழைகள் பயன்பெறலாம்.
இது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் கனகசபை கூறியதாவது:-
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளியை 3 மணி நேரத்தில் அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனு மதிக்க வேண்டும். அங்கு உடனடியாக ‘ஸ்கேன்’ செய்யப்படும். இதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பா அல்லது ரத்தக்குழாய் வெடிப்பா என்று தெரிந்து விடும்.
ரத்தக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டால் குணமாக்குவது கடினம் ரத்தக்குழாய் அடைப்பு இருந்தால் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஊசி மருந்து செலுத்தப்படும். பின்னர் நோயாளி 3 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவர். பின்னர் நோயாளிக்கு மீண்டும் ஸ்கேன் செய்து ரத்தக்குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டு விட்டதா என்று கண்டறியப்படும். நோயாளி ஒரு வாரத்துக்குள் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு செல்லலாம்.
ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஊசி மருந்து இலவசமாக போடப்படுகிறது. இதற்கான நிதி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்த மருந்தை பயன்படுத்தி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 2 நோயாளிகள் முழுவதுமாக குணம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
(நன்றி : மாலைமலர்)
பயனுள்ள தகவல் .
நன்றி ஜி
மிக நல்ல விஷயம்
சுந்தர்ஜி,
தகவல் மிகவும் உபயோகமானது. நன்றி
விலை மதிப்பற்ற ஒரு விவரத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இந்த தகவலின் அருமை பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும். மீண்டும் நன்றி சுந்தர்.